வாசிப்புக்குறிப்புகள்


இரண்டு வாசிப்புக்குறிப்புகளும் அச்சாக இருக்கும் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெறுவதற்காக எழுதப்பெற்ற குறிப்புகள். அந்நூல்கள் வரும்போது அவற்றை வாசிக்க இக்குறிப்புகள் உதவலாம். இல்லையென்றாலும் இவ்விருவரின் சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கும்போது இக்குறிப்புகள் உள்வாங்கி நீங்கள் வாசிக்கலாம்.
புதிய மாதவி நீண்ட காலமாகத் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என எல்லாத் தளத்திலும் எழுதிவருபவர். அவரது சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கதைகளை 'முத்துக்கள் 10' என அம்ருதா பதிப்பகம் வெளியிடும் நூல் தொடரில் வெளியிட உள்ளது.

டீன் கபூர், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் எழுத்தாளர். அச்சு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் தொடர்ந்து குறுங்கதைகள், சிறுகதைகள் என எழுதிவருபவர். வரப்போகும் அவரது தொகுப்புக்காக எழுதிய வாசிப்புக்குறிப்பும் இங்கே தரப்படுகின்றன.


விவாதிக்கும் பெண்களை முன்வைக்கும் எழுத்து

ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளை அவ்வப்போது வாசிப்பதற்கும்,தொகுப்பாக வாசிப்பதற்கும் வேறுபாடுண்டு. அதையே ஒரு ‘தொகுதி’யாக வாசிக்கும் கிடைக்கும் புரிதல்கள் வேறு. அம்ருதா பதிப்பகம் முத்துக்கள் பத்து எனத் தெரிவு செய்து தரும் நூல், ஓரெழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பல்ல; அஃதொரு தொகுதி. இதனை ஒவ்வோராண்டும் தனது கடமையாகச் செய்து வருகின்றது அம்ருதா பதிப்பகம்.தமிழ்ச் சிறுகதைப் பரப்பிற்குக் காத்திரமான பங்களிப்புச் செய்துள்ள எழுத்தாளர்களின் சிறுகதைகளிலிருந்து பத்துக்கதைகளைத் தெரிவு செய்து தொகுதியாகத் தரும் இந்தப் பணி ஒருவிதத்தில் அந்த எழுத்தாளருக்குத் தரப்படும் அங்கீகாரம். அத்தோடு கவனித்து முன்வைக்கும் இலக்கியத்திறனாய்வின் பகுதியாகவும் புதிதாக வாசிப்பவர்களுக்கும் எழுத நினைப்பவர்களுக்கும் உதவும் கையேடாகவும் மாறத்தக்கது.

புதிய மாதவி சிறுகதைகளை அவ்வப்போது அச்சிதழ்களிலும் இணையப் பக்கங்களிலும் வாசித்திருக்கிறேன்; தொகுப்பாகவும் வாசித்திருக்கிறேன். சில விமரிசனக்குறிப்புகளையும் எழுதியிருக்கிறேன். அந்த வாசிப்புகளையெல்லாம் தாண்டிய ஒரு அனுபவத்தை -புரிதலை இப்போது தொகுதியாக வாசிக்கும்போது அடைகின்றேன். பொதுவாகப் புனைகதைகளை வாசிக்கும்போது முதன்மையாக வாசிப்பது அந்தக் கதைகளுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களின் முப்பரிமாண நிலைகளையே. ஆண்- பெண் என்ற உடல் அடையாளங்களோடு எழுதப்படும் பாத்திரங்களின் பிற அடையாளங்களாகக் கதைக்குள் கிடைப்பவை அவற்றின் சமூகவியல் அடையாளங்களும் மனவோட்டங்களான உளவியல் அடையாளங்களும். பாத்திரங்களை வாசிக்கும் அந்த வாசிப்பின் தொடர்ச்சியில் எழுத்தாளர் உலவவிடும் அந்தப் பாத்திரங்களைக் குறிப்பான இடங்களிலும் குறிப்பான காலத்திலும் நிறுத்திக் காட்டுவதும் நடக்கின்றன. இவையெல்லாவற்றையும் தாங்கள் எழுதும் கதைக்குள் உருவாக்குவதின் வழியாக ஒவ்வொரு எழுத்தாளர்களும் அவரவர்களுக்கான தனித்துவமான எழுத்தடையாளத்தை உருவாக்குகின்றார்கள். இந்தப் பத்துக் கதைகளில் புதியமாதவியின் எழுத்தடையாளத்தை அவர் உருவாக்கி உலவவிட்டுள்ள பாத்திரங்களே முதன்மையாக உருவாக்கித் தருகின்றன.

பெண்மையப்பாத்திரங்களை முன்வைக்கும் கதைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர் புதியமாதவி. தெரிவுசெய்து தொகுக்கப்பட்டுள்ள இந்தப் பத்துக்கதைகளிலும் பெண்களை எழுதியிருக்கிறார் என்பதைவிட நவீனத்துவத்தை உள்வாங்கிய பெண்களை முன்வைக்கிறார் என்பதே கவனத்துக்குரிய ஒன்று. அவரது கதைகளில் ஆண் தலைமையை ஏற்று வாழும் மகள், சகோதரி, மனைவி, தாய், பாட்டி என்ற பாத்திரங்களைத் தாங்கி வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய “இந்தியப்புனிதப்பெண்கள்” இடம்பெற்றிருக்கிறார்கள் என்றாலும், அவர்களை மையப் பாத்திரமாக்கி ஒரு கதையையும் எழுதியவராக வெளிப்படவில்லை.

இந்தியக் குடும்ப அமைப்பை நவீனப்படுத்துவதில் பெற்றோர்களால் தீர்மானிக்கப்படும் மரபான திருமண ஏற்பாட்டுக்கு முற்றிலும் இடமில்லை. இதனை முழுமையாக ஏற்றுக்கொண்டவர் என்பதற்கு அவர் எழுதியுள்ள கதைகள் பெரும்பாலானவற்றில் அதுவே சொல்லாடல்களாக – விவாதப்பொருளாக ஆக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். புதிய தலைமுறைப் பெண்களுக்குக் காதலும் காதல் சார்ந்த திருமண வாழ்க்கையும் அமைவதில் பெரும் சிக்கல்களும் தடைகளும் இருக்கின்றன என்பதைப் பேசும் அவரது கதைகளில் வெவ்வேறு தலைமுறைப்பெண்களும் ஆண்களும் காதலிப்பதில் காட்டும் ஆர்வத்தை விரிவாக எழுதிக் காட்டுகின்றார். திரைகளும் வெளிகளும் கதையில் வரும் பெண் நிகழ்காலத்தலைமுறைப் பெண்ணென்றால், அம்மாவின் காதல(ன்)ர், பாட்டி என்ன சொல்லிவிட்டாள், தாத்தாவின் தேவதை முதலான கதைகள் முந்திய தலைமுறையிலும் காதல் உணர்வும் பிடித்தவர்களை நேசிக்கும் ஈர்ப்பும் மனிதர்களின் இயல்பான குணங்களில் ஒன்று என்று காட்டுகின்றன. இந்த நான்கு கதைகளையும் வாசிக்கும்போது காதல் உணர்வும், காதலித்தவர்களைத் துணைவர்களாக அடைய வேண்டும் என்ற எண்ணமும் ஆங்கிலக்கல்விக்குப் பின்னால் அறிமுகமான மனநிலை அல்ல என்பதை நுட்பமாக உணர்த்துவதை உணரமுடிகின்றது. இந்திய/ தமிழர் வாழ்வியலுக்குள் இயல்பாகவே தங்கியிருக்கும் உணர்வுநிலை என்பதைச் சொல்வதைப் புதிய மாதவி அழுத்தமாகச் சொல்வது புலப்படுகிறது.

காதல் உணர்வைத் தாண்டி அவரது உகதைகளில் விவாதிக்கப்படும் முக்கியமான சொல்லாடலாகத் தோன்றுவது ஆண்களின் இரட்டை மனநிலை. காமத்தை மறைத்துக்கொண்டு காதலை முன்மொழியும் இளம்பருவத்துத் தூண்டுதல்களும், அந்த நேரத்தில் அவர்களைப் பற்றியிருக்கும் காதலும் தற்காலிகமானவை எனக் காட்டுவதோடு, குடும்பம் மற்றும் சாதியத் தடைகளைத் தாண்டி வென்றுவிட வேண்டும் என்ற லட்சியங்கள் அற்றது எனக் குற்றம் சுமத்தும் தொனியை அவரது கதைகளின் பெண்பாத்திரங்கள் செய்கின்றன. இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் அசலான கதை வட்டங்களும் சதுரமும். இந்தக் கதையில் மார்க்சியத்தை உள்வாங்கிய இளைஞனின் நழுவலைக் காட்டினாலும், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் முற்போக்குப் பாத்திரம் வகிப்பவர்களாகக் காட்டிக்கொள்ளும் திராவிட இயக்க, அம்பேத்கரிய இயக்க, பகுத்தறிவியக்க இளைஞர்களும் அந்தப்போக்கில் இருப்பவர்களே என்பதைப் பல கதைகளில் எழுதியிருக்கிறார் புதிய மாதவி.

தனது வேலை காரணமாக மும்பை நகரத்தில் வாழ்ந்து வந்த புதிய மாதவிக்குத் தாமிரப்பரணி நதி பாயும் திருநெல்வேலி மாவட்டத்துக் கிராமம் ஒன்று பூர்வீகம் என்பதையும் தென் தமிழ்நாட்டின் பாளையங்கோட்டை, மதுரை போன்ற நகரங்களில் தனது கல்விப்பட்டங்களைப் பெற்றவர் என்பதையும் இந்தக் கதைகளுக்குள் அலையும் அவரது மனம் திரும்பத்திரும்ப ஏக்கத்துடன் நினைத்துக்கொள்கின்றது. இந்த அலைவுறு வாழ்க்கை காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வரும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார். அதனால் அவரது கதைகள் இந்தியாவின் பரப்புக்குள் ஊடும் பாவுமாகப் பயணம் செய்து துயரார்ந்த இந்தியப்பெண்களின் சித்திரங்களை வாசிக்கத்தருகின்றன. ஒருவனுக்கு ஒருத்தி எனப் பேசும் ராமாயணத்தைக் கொண்டாடிக்கொண்டே திரௌபதி வாழ்க்கைக்குள் தள்ளும் ஆண்களின் ஆதிக்கம் நிரம்பிய உத்தரப்பிரதேசத்துக் கதையொன்றைப் புதிய ஆரம்பங்களில் வாசிக்கத்தருவதோடு, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழ்க்கைக்குள் இந்துசமயமும் சாதிய மனமும் தொடர்வதைப் பச்சைக்கிளி கதையிலும் எழுதிக்காட்டுகின்றார்.

பத்துக்கதைகளிலும் பத்துவிதமான பெண்களை வாசித்தாலும் அவர்களுக்குள் இருப்பது, எதையும் விவாதமின்றி ஏற்றுக்கொள்ளத் தயங்கும் குணமே தூக்கலாக வெளிப்படுகின்றன. அந்தக் குணமே ஒவ்வொரு பெண்பாத்திரத்தையும் விவாதிக்கும் தன்னிலைகளாக காட்டுகின்றன, இந்தத்தன்னிலைகள் நம் காலத்தின் பெண்ணியத்தன்னிலைகள் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

04/12/2025

******************************

புனைகதைகளின் நகர்வுகளில் டீன் கபூர்


புனைவிலக்கியம் அடிப்படையில் கதை சொல்லும் நோக்கம் கொண்டது. காப்பியத்தன்மையை உள்வாங்கித் தோன்றிய நாவலாயினும், அளவில் சுருங்கிய குறுநாவல், சிறுகதை என்ற புனைவின் வடிவங்களாயினும் மனிதர்களின் கதையைச் சொல்லவே முயல்கின்றன. இவ்வடிவங்களிலிருந்து நகர்ந்து குறுங்கதைகளாகவும் நுண்கதைகளாகவும் மாறியுள்ள புனைகதை நகர்வுகளிலும் பாத்திரங்களின் கதையை - வாழ்வின் நிகழ்வுகளைச் சொல்லிவிட வேண்டும் என்ற நோக்கம் இருக்கவே செய்கின்றது.

இந்த வடிவமாற்றத்தில் என்ன நடக்கிறது என்று சிந்தித்துப் பார்த்தபோது அந்த உண்மை புலப்பட்டது. தொடர்ச்சியான எனது வாசிப்பின் வழியாக நான் கண்டடைந்தது புதிய புனைவு வடிவங்களை நோக்கி நகர்பவர்கள் மூன்றில் ஒன்றைக் கைவிடுகின்றார்கள் என்பதைத் தான். பாத்திரங்கள், அவை உலவும் வெளியும் காலமும் என்ற மூன்று அடிப்படைகளில் ஒன்றைக் கைவிடுவது வடிவமாற்றத்தைச் சாத்தியமாக்குகின்றது. இம்மூன்றில் முதலில் கைவிடுவது காலமாக இருக்கின்றது; அடுத்து நிற்பது வெளியாக இருக்கின்றது. மூன்றாவதாகப் பாத்திரங்கள். சரியாகச் சொல்வதானால் பாத்திரங்களைப் புனைகதை ஆசிரியர்கள் கைவிடுவதே இல்லையும்தான்.

டீன் கபூரின் புனைவெழுத்துகளை அவ்வப்போது இதழ்களில் வாசித்திருந்தாலும் மொத்தமாக வாசிக்கும்போது புனைகதைகளின் வடிவமாற்றத்தின் அசலான எடுத்துக்காட்டாக டீன் கபூரைச் சொல்லத் தோன்றுகிறது. நாவல், சிறுகதை, குறுங்கதை, நுண்கதை என்ற வடிவமாற்றத்தில் டீன் கபூர் இன்னொரு சோதனையையும் செய்து பார்த்துள்ளார். மற்ற எழுத்தாளர்கள் கைவிடாத பாத்திர உருவாக்கத்திலும் அவரது சோதனைகள் செயல்பட்டுள்ளன. உடலியல், சமூகவியல், உளவியல் என்ற பாத்திர முப்பரிமாணத்தில் முதலிரண்டையும் கைவிடும் புனைவுத்தன்மை அவருடையதாக இருக்கிறது. எல்லாக் கதைகளிலும் எழுத நினைக்கும் பாத்திரங்களின் உளவியல் எண்ணவோட்டங்கள் மட்டுமே அவரால் எழுதப்படுகின்றன. அந்தப் பாத்திரங்களின் சமூகவியல் பின்னணிகளோ, உடல் சார்ந்த குறிப்புகளோ முக்கியமாகத் தரப்படவில்லை. பாத்திரங்களின் மனம் மட்டுமே வெளிப்படுகின்றன.

தனிமனிதனின் மனதை எழுதுவது கவிதை இலக்கியத்தின் முதன்மைப் பணி.டீன் கபூரின் புனைவுகளைப் படிக்கத் தொடங்கும்போதே ஒரு கவிதையை வாசிக்கும் மனநிலையை வேண்டுகின்றன. குறியீட்டுத்தன்மை கொண்ட மனிதத்தன்னிலை தன்னை முன்வைக்கும் சொற்களை ஒவ்வொன்றிலும் முன்வைக்கிறது. அந்தச் சொற்கள் குறிப்பான வெளிப் பின்னணியையும் காலநிலையும் சிதைத்துவிட்டு மனதை மட்டுமே முன்வைத்துக்கொண்டே நகர்கின்றது. கவிதையின் வடிவத்தைத் தனதாக்கியுள்ள அவரது புனைகதைகளுக்குள் கதை சொல்லியின் இடத்தில் கதை எழுதும் டீன் கபூரே தன்னை இருத்திக்கொண்டு சுற்றி இருக்கும் குடும்ப உறுப்பினர்கள், சமூகப் பாத்திரங்கள் என ஒவ்வொன்றும் தன்னைக் கேள்வி கேட்பதாக நினைக்கிறார். அவரது இருப்புநிலை- தனியனியாக -எழுத்தாளராக -கவியாக பொதுப்போக்கில் கலக்க முடியாத நிலையைப் பார்த்துக் கேட்கப்படும் அந்தக் கேள்விகளில் இரக்கமும் அங்கதமும் வெளிப்படுகின்றன. அவற்றுக்கு அவரிடம் பதில்கள் இல்லை. அதனால் அந்தத் தன்னிலையை ஏற்றுக்கொள்கின்றார்கள். பாதுகாக்கப்படவேண்டிய தன்னிலை என்பதை ஒத்துக் கொள்கின்றார்கள்; ஏற்றுக்கொள்கின்றார்கள்; கடந்து செல்கின்றார்கள். கடந்து செல்பவர்கள் தனது மனதைப் படிக்க நினைக்கிறார்கள்; ஆனால் முடியாமல் விட்டு விலக நினைக்கிறார்கள் என்றும் தோன்றுகின்றது. ஆனால் அந்த மனதும், மனதுக்குரிய மனிதனும் தனித்துவம் கொண்டவன் என்ற புரிதலும் இருக்கின்றது.

புனைகதைக்குள் தன்னை எழுதும் சோதனையைச் செய்தவர்களில் இப்போதும் கொண்டாடப்படுபவர் நகுலன். நகுலனின் புனைகதைக்குள் எப்போதும் அவரே இருந்தார்; இருக்கின்றார். ஒருவிதத்தில் டீன் கபூரின் புனைவுக்குள் நகுலனைப் போல அவரே இருக்கிறார். இந்தச் சோதனை முறை எழுத்துக்காக இவர் வாசிக்கப்படவேண்டியவர்.


25/11/2025












கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெயமோகனின் வெண்முரசு வெளியீட்டு விழா: பின் நவீனத்துவ கொண்டாட்டங்களின் வகைமாதிரி

கனவுலக நடப்பியலின் சாத்தியங்கள் : ஜீனத்தின் கொதிகலன் சிறுகதையை முன்வைத்து

தொல்.திருமாவளவன் - சில குறிப்புகள்