கவனிக்கப்பட்டதின் பின்னணிகள்



தகவல்களும் நிகழ்வுகளும் சேர்ந்துதான் வரலாற்றை உருவாக்குகின்றன.சொல்லப்படும் தகவல்களும் நடக்கின்ற நிகழ்வுகளும் நேர்மறை வரலாற்றை உருவாக்கவா..? எதிர்மறை வரலாற்றை உருவாக்கவா.? என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டியது அதில் பங்கேற்பவர்களின் தன்னுணர்வு சார்ந்த ஒன்று.இன்னும் சொல்வதானால் பங்கேற்கிறவர்களின் நோக்கம் சார்ந்தவைகளும் கூட.
தலித் இயக்கங்களின் தீவிரத்தனம் தொடங்கி முப்பது ஆண்டுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.தலித் அரசியல் அல்லது இயக்கங்களின் தீவிரமும் அதனால் உண்டான முரண்பாடுகளும் இன்று ஒட்டமுடியாத அளவிற்கு விலகி விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. ஒரு மரம் கிளைகளாகப் பரவுதல் வளர்ச்சியின் அடையாளம்; ஒருமரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு அதே மரத்தின் எண்ணிக்கை கூடுவது கூட வளர்ச்சியின் பெருக்கம் தான். ஆனால் கிளைகள் வெட்டப்பட்டு ஒட்டுமரங்களாக ஆக்கப்படுவதில் இந்த மரம் தன் அடையாளத்தை இழந்து போகும் வாய்ப்புகள் உண்டு. தக்க வைக்க வேண்டிய அடையாளத்தையும் விலக்கப்பட வேண்டிய குணத்தையும் மரம் தீர்மானிக்க முடியாது. ஒட்டு மரங்களை உருவாக்க நினைக்கும் நபர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.


அரசியல் தளத்தில் நடக்கும் முயற்சிகள் எத்தகையன என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.ஆனால் கலை இலக்கியத் தளங்களில் நடப்பவை குறித்துக் கவனத்தைச் செலுத்த முடிகிறது. அரசியல் தளம் வெளிப்படையாக இருப்பதும் பண்பாட்டுத் தளம் வெளிப்படைத் தன்மையை மறைத்துக் கொண்டு ரகசிய வழிகளைப் பின்பற்றுவதும் கூட காரணமாக இருக்கலாம். ஒன்றில் வெளிப்படைத் தன்மை அதிக ஆபத்தில்லாதது என்று கருதலாம். ஆனால் ரகசியத் தன்மை அப்படிப் பட்டது அல்ல. ஏனெனில் வெளிப்படைத் தன்மை வெற்றி அல்லது தோல்வி என்பதை உடனடிப் பலனாகக் கண்டறிந்து விடும். ஆனால் ரகசியங்களும் அதன் பின்னணியில் இருக்கும் வேலைத் திட்டங்கள் அல்லது சதித் திட்டங்கள் அவ்வளவு சுலபமாக எதையை ஒத்துக் கொள்ளாது. தோல்வியைக் கூட வெற்றி என்பது போலக் காட்ட அந்த ரகசியத்தன்மை தொடர்ந்து பயன்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படிச் சொல்லும் இந்த முடிவு, தனி நபர் சார்ந்த முடிவு மட்டுமல்ல ; பொதுத் தளத்தில் செயல்படும் இயக்கங்களுக்கும் கூடப் பொருந்தக் கூடியது தான். வரப்போகும் தேர்தல் தரப்போகும் பாடங்கள் அரசியல் தளச் செயல்பாட்டை வழி நடத்தக்கூடும்.


இங்கே சொல்லப்படும் தகவல்களும் விவரிக்கப்படும் நிகழ்வுகளும் அரசியல் தளம் சார்ந்தன அல்ல.கலை இலக்கியத் தளம் சார்ந்தன. அந்த வகையில் எல்லோருக்கும் பொதுவானவை என்று சொல்ல முடியாதவை. ஆனால் எல்லாரும் கவனிக்க வேண்டியதும் கருத்துச் சொல்ல வேண்டியதும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.அதிலும் தலித் இலக்கியம், தலித் கருத்தியல் எனச் செயல்படும் தளத்தினர் கட்டாயம் கவனிக்க வேண்டியது.


இலக்கியத்தளத்தில் , அதிலும் குறிப்பாகச் சிறுபத்திரிகைத் தளத்தில் தலித் இலக்கியமும் தலித் விமரிசனமும் கவனிக்கப்பட்ட அளவையும் வீச்சையும் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. அலையென எழுந்த அந்த வீச்சு தீவிரமாகக் கவனிக்கப் பட்டது;விவாதிக்கப்பட்டது. கலை இலக்கியத்தளத்தில் செயல்பட தலித்துகளாலும் இயலும் என்பது நிறுவப்பட்ட நிலையில் கவிதைகள், கதைகள், நாடகங்கள், நாவல்கள்,தன் வரலாறுகள் என அனைத்தும் அச்சிடப்பட்டன. முழுமையாகக் கவனிக்கப் படுவதற்கும் அதற்குரிய பங்கைப் பெறுவதற்குமான வாய்ப்பு எனக் கருதப்பட்டது. எழுதப்பட்ட அந்த எழுத்துகள் அச்சிடப்பட்டதின் விளைவாகப் பரவலாகச் சென்று போராட்டத்தின் கருவியாக ஆக்கப்படும் என்பது நேர்மறை எதிர்பார்ப்பு. .ஆனால் நடப்பது அப்படியான வளர்ச்சியாகத் தெரியவில்லை. தொகுக்கப்படுவதிலும் அச்சிடப்படுவதிலும் செயல்படும் அகக்காரணிகளும் புறக்காரணிகளும் உண்டாக்கும் ரகசியம் அவற்றை கருவியாக மாற்றுவதற்குப் பதிலாகப் பண்டமாக மாற்றும் பின்னணி கொண்டதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. பண்டம் பயன்படும் பண்டமாக இருப்பதில் தவறொன்றுமில்லை. உருவாக்கியவனிடமிருந்து வாங்கிப் பெட்டியில் அடைத்துத் தருபவனுக்கு லாபம் சேர்க்கும் என்றால் எதிர்மறை விளைவைத் தானே உண்டாக்கும்.
தலித் இலக்கியங்களும் தலித் விமரிசனங்களும் பல்வேறு பதிப்பகங்களின் விற்பனைக்குரிய சரக்காக மாறிவிட்டன. விற்பனைப் பண்டமாக ஆக்கப்படும் நிலையில் தனிநபர்கள் மட்டுமே கவனிப்பார்கள் என்பதில்லை. அதிலும் நிலவும் தாராளமயப் பொருளாதாரச் சூழலில் சந்தையில் கிடைக்கும் பொருட்களைத் தேவையானவர்கள் மட்டுமே வாங்குவார்கள் என்பதில்லை. காணத்தக்கதாகவும், புதியதாகவும் இருந்தால் வாங்கி வைத்துக் கொள்வதும், பயன்படுமா என்று பரிசோதித்துப் பார்ப்பதும், பயன்படுத்தத் தொடங்குவதன் மூலம் புதிய அடையாளத்தைப் பெறுவதும் கூட நவீனச் சந்தையின் வினைகள். பழைய வாரச்சந்தையில் வாங்கப்படும் பொருட்கள் அந்த வாரப் பயன்பாட்டுக்குரியன. ஆனால் இன்றைய நவீனச் சந்தையோ அப்படிப் பட்டன அல்ல. பயன்படுத்தி விட்டுத் தூக்கிப் போடும் பொருட்களாலும் [use and throw] ஆவணத்தன்மைப் [Antigue] பொருட்களாலும் நிரம்பியுள்ளன. தலித் இலக்கியங்கள் இதில் எந்த வகையான பண்டகமாக இருக்கப் போகிறது என்பது இப்பொழுது அதன் படைப்பாளிகள் கையில் இல்லை. சந்தையைக் கட்டுப்படுத்தும் வியாபாரிகள் கைக்கு இடம் மாறிவிட்டது என்பது தனியாகச் சொல்ல வேண்டிய ஒன்றல்ல.


கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் பெறுவதற்குத் தலித் படைப்புகள் கவனிக்கப்படுவதும் அவை குறித்த கட்டுரைகள் எழுதப் படுவதும் அதிகரித்துள்ளன. ஒருவிதத்தில் வரவேற்கத்தக்க நிகழ்வு. ஒதுக்கப்பட்ட மனிதர்களின் பிரதிகள் என்று ஒதுக்காமல் ஆய்வுக் குரியனவாகவும் விவாதித்துக்குரியனவாகவும் ஏற்கப்படும் மனநிலை நேர்மறைக்கூறுகள் கொண்டவை.இன்று பல கல்லூரிகளின் தமிழ்த் துறைகள் தேசிய கருத்தரங்குகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி நடத்தப்படும் கருத்தரங்க அமர்வுகளில் தலித் இலக்கியம் சார்ந்த தலைப்புகளில் கணிசமாகக் கட்டுரைகள் வாசிக்கப்படுகின்றன. கவனம் பெற்றுள்ளது என்ற வகையில், ஏற்கப்படுகின்ற என்ற வகையில் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய நிகழ்வுகள் தான் அவை எல்லாம். அதே நேரத்தில் நடக்கும் விவாதங்கள் ஒற்றை மையத்தை நோக்கியே நிகழ்கின்றன என்பதும் சொல்லப்பட வேண்டிய ஒன்று.


தலித் விமரிசனத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்து கொள்ளாத நிலையில் படைப்பாளிகளின் படைப்புகளுக்குள் கிடைக்கும் சாதி அடையாளத்தைத் தேடுவதே தலித் விமரிசனத்தின் தலையாய பணியெனக் கருதிக் கொள்வது நடக்கிறது. சாதி ஆதிக்கக் கருத்தியலை ஆதரிப்பவனும், தக்க வைக்க நினைப்பவனும் சாதி அடையாளத்தோடு பாத்திரங்களை எழுதலாம். அக்கருத்தியலைத் தகர்க்க நினைக்கிறவனும் சாதி அடையாளத்தோடு தான் எழுதுவான். அதனால் படைப்பாளியின் நோக்கம் என்ன என்ற பார்வையைத் தவிர்த்துவிட்டு, கிடைக்கும் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு படைப்பாளிகளை சாதி அடையாளப்படுத்தி விடுவது சில நேரங்களில் தவறான வாசிப்பாகக் கூட முடிந்து விடும். இலக்கிய இதழ்கள் அல்லது தலித் ஆதரவு இதழ்கள் எனக் கருதும் இதழ்களிலேயே இத்தகைய வாசிப்புகள் மேற்கொள்ளப்பட்டு விமரிசனங்கள் முன் வைக்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாகக் கல்வித்துறை ஆய்வுகளில் அது ஒன்றுதான் தலித் ஆய்வின் நோக்கம் என்பதாக உணரப்பட்டு விவாதிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.


படைப்புக்குள் கிடைக்கும் சாதி அடையாளங்களைப் பார்ப்பது அப்படைப்பை இன்ன சாதிப் படைப்பு என அடையாளப் படுத்துவதற்கல்ல என்பது உணரப்பட வேண்டும். அதற்கு மாறாக கிடைக்கும் சாதி அடையாளங்களின் வழி படைப்பாளி சாதி ஆதிக்கக் கருத்தியலை ஆதரிப்பவனா? எதிர்ப்பவனா? என்பதைச் சுட்டிக் காட்டத்தான் என்பது நிலைநாட்டப்பட வேண்டும். இல்லையென்றால் தலித் விமரிசனத்தின் பலதளப் பரிமாணம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒற்றையடையாளத்தைத் தந்து ஒதுக்கப்படும் நிலை திரும்பவும் வந்து விடும் ஆபத்து உண்டு.


இத்தகைய காரணங்கங்களால் தான் தலித் தொடர்பான அனைத்துத் தளங்களும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன என்று சொல்லத்தோன்றுகிறது. மைய நீரோட்ட அரசியல் தலித் இயக்கத்தை வெறும் சாதிக்கட்சி என முத்திரை குத்துவதிலிருந்து, தலித் இலக்கியம் சாதி இலக்கியம், தலித் விமரிசனம் சாதியைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் விமரிசனம் என நீள்வது வரை இதனைச் சொல்லலாம். ஆகக் கவனிக்கப்படுகிறது என்பதற்காக ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று கருதி விட வேண்டியதில்லை. நிராகரிப்பதற்காகக் கூடக் கவனிக்கப்படலாம். தொடர்ந்து கொள்ள வேண்டியன ஐயங்களும் விசாரணைகளும் மட்டுமே என்பதனை மறந்து விடக்கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்