சுஜாதாவின் அரங்கியல் பார்வை: எழுத்துப் பிரதிகளின் ஊடாக
எழுத்தாளர் சுஜாதாவை அதற்கு முன்பும் சந்தித்திருக்கிறேன் என்றாலும் அன்றைய சந்திப்பு- அவர் இருந்த பெங்களூரிலேயே நடந்த சந்திப்பு நாடகம் சார்ந்த சந்திப்பு. அத்துடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த சந்திப்பும் கூட.
அந்த நாளை இந்திய அரங்கவரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நாள் என்று சொன்னால் மிகை அல்ல. உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு அரங்கவியலாளர் பீட்டர் புருக் தனது வாழ்நாள் சாதனைப் படைப்பான மகாபாரதத்தின் காட்சிகளை இந்தியாவில் நடத்திக்காட்ட அவரது நாடகக்குழுவினருடன் இந்தியா வந்திருந்தார். புரூக்கின் மகாபாரதத்தில் பங்கேற்ற கலைஞர்களை நேரடியாகப் பார்த்ததோடு, அவர்களின் மேடைக்காட்சிகளின் துணுக்குகள் சிலவற்றையும் பார்த்தோம். மேடை நிகழ்வாகவும், தனித்தனியாகவும் பேசிக் கொண்டிருந்தோம். பத்து மணி நேரம் மகாபாரத்தின் 200 நிமிடப் படக்காட்சி வடிவமும் அவரோடு கொண்டுவரப் பட்டிருந்தது. அதையும் பார்த்து அசந்துபோன நாடகக்காரர்களின் ஒருவனாக நான் இருந்தேன்.
1991-ல், இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றான பெங்களூரின் ஒதுக்குப்புறம் ஒன்றில் நடந்த அந்தப் பங்கேற்புப் பட்டறைக்குப் பெங்களூரில் வசித்து வந்த சுஜாதாவும் வந்தார். அவர் வருவதற்கு நானும் ஒரு காரணம். இந்திரா பார்த்தசாரதியின் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியின் மாணாக்கர்களோடு அதன் ஆசிரியராகிய நானும் சென்றிருந்தேன். அந்நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான தமிழர்களைத் தேர்வுசெய்யும் பொறுப்பு புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைப் பள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன் இயக்குநரான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியோடு சேர்ந்து நான் தயாரித்த பட்டியலில் சுந்தர ராமசாமியும் சுஜாதாவும் இருந்தார்கள்.
எனக்கு இவ்விருவரையும் நாடகாசிரியர்களாக அல்லாமல், புனைகதை எழுத்தாளர்களாக நல்ல அறிமுகம் இருந்ததால் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிட்டியது. சுஜாதாவின் சலவைக் குறிப்புகளையும் வெளியிடத் தயாராக இருந்தன அப்போதைய அச்சு ஊடகங்கள் என்பதை எழுபதுகளில் மாணவனாகவும் வாசகனாகவும் இருந்தபோது அறிவேன். வெகுமக்கள் ரசனையை நாடிபிடித்துப் பார்த்து, அவர்களுக்குத் தர வேண்டியதைத் தரும் எழுத்தாளர் என்று பத்திரிகைகள் பட்டியல் இட்டுக் கொண்ட வரிசையில் சுஜாதாவின் பெயர் எழுபதுகளில் தொடங்கி அவரது மரணம் நிகழ்ந்த பிப்ரவரி, 2008 வரை ஏறுமுகத்தில் தான் இருந்தது. அவரது பெயரோடு சேர்த்து எதையாவது அச்சிட்டுக் கொண்டு தான் இருந்தன அச்சு ஊடகங்கள். அவரது மரணத்திற்குப் பின்னும் வெளியிடும் பத்திரிகைகள் இருக்கின்றன என்பதும் கூட சுஜாதாவின் எழுத்துக் கவர்ச்சியின் அடையாளங்கள்தான். உரைநடையின் சாத்தியப் பாடுகளை-அதிலும் குறிப்பாகப் புனைகதையின் பரிமாணங்களைத் தமிழுக்குப் பல நிலை களில் அறிமுகம் செய்தவர் அவர். இதை அவரது தீவிரமான வாசகர்கள் மட்டுமல்ல; விமரிசகர்களும் ஒத்துக் கொள்வார்கள். இந்தக் கட்டுரை சுஜாதாவின் நாடகப்பிரதிகளின் வழியாக அவரது அரங்கியல் பார்வையை மதிப்பிட்டுக் கூற முயல்கிறது.
நாடகப் பிரதிகளின் கூறுகள்
முதல் நாடகம்- இது சுஜாதா எழுதிய முதல் நாடகத்தின் தலைப்பு. இந்நாடகத்திற்கு இன்னொரு பெயராகக் கொலை என்ற பெயரையும் சூட்டியுள்ளார் சுஜாதா. இந்நாடகம் எழுதப்பட்ட ஆண்டு 1978. புனைகதை, கட்டுரை,வினாவிடை, விமரிசனக் குறிப்புகள், பழந்தமிழ் இலக்கியங்களுக்கான எளிய உரை என மரணத்தை எதிர் கொள்ளும் வரை எதையாவது எழுதிக் கொண்டே இருந்த சுஜாதா நாடகம் எழுதுவதை கடைசிக் காலம்வரை தொடர்ந்து கொண்டிருக்கவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாடகம் எழுதுவதை நிறுத்திவிட்டார். அவரது கடைசி நாடகத்தின் பெயர் முயல். அந்நாடகம் எழுதப்பட்ட ஆண்டு 1996. 18 ஆண்டுகளில் 22 நாடகங்களை எழுதியுள்ளார் சுஜாதா. பல பத்திரிகைகளிலும் வந்த அவரது நாடகங்கள் ஒரே தொகுப்பாக 2005 இல் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
இவ்வெளியீட்டில் ஏழு நாடகங்கள் நீண்ட நாடகங்கள் எனவும், 15 நாடகங்கள் குறுநாடகங்கள் எனவும் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. இப்படிப் பிரித்துக் காட்டப்பட்டதற்கு நாடகவியல் கூறுகள் எதுவும் காரணமாக இருக்கவில்லை என்றே தோன்றுகிறது.50 பக்கங்களுக்கு மேல் கூடுதலாக இருந்த நாடகங்களை நீண்ட நாடகங்கள் எனவும் அதற்குக் குறைவான அளவில் அச்சிடப்பட்ட நாடகங்களைக் குறு நாடகங்கள் எனவும் பிரித்துக் காட்டியுள்ளனர் எனத் தோன்றுகிறது. இப்படிப் பிரிப்பது நாடகவியல் அடிப்படைகள் சார்ந்த பகுப்பு அல்ல.
நாடகப் பிரதியின் பகுதிகளை அல்லது கூறுகளைப் பற்றிப் பேசும் விமரிசகர்கள், பின்னல், பாத்திரங்கள், சிந்தனை, மொழிநடை, இசைக் கூறு , காட்சி ரூபம், என்பனவற்றை ஒரு தொகுதியாகவும், உரையாடல், காட்சி, அங்கம் என்ற மூன்றையும் இன்னொரு தொகுதியாகவும் கூறுவர். இவ்விரு வகையான தொகுதிகளில் முதல் வகையைப் படைப்பாக்கக் கூறுகள் (Creative Parts) எனவும் இரண்டாவது வகையை இயந்திரவியல் கூறுகள் எனவும் கூறுவர். ஒரு நாடகப்பிரதியின் இயந்திரவியல் கூறுகளைக் கண்டறிய நாடகப் பிரதியை முழுமையாக வாசிக்கக் கூடத் தேவையில்லை. நாடகாசிரியன் எழுதிக் காட்டியுள்ள அல்லது அச்சிட்டுத் தந்துள்ள பக்கங்களைத் திறந்து பார்த்தாலே போதும். அதனால் தான் இக்கூறுகள் இயந்திரவியல் கூறுகள்(Mechanical Parts) எனச் சொல்லப்படுகிறது.
உரையாடல் (Dialogue) என்பது நாடகப்பிரதியின் மிகச்சிறிய அலகு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க நேரிடும் ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் அல்லது பாத்திரங்களுக்கிடையே நடைபெறும் பேச்சே உரையாடல். அந்தக் குறிப்பிட்ட இடத்தில் தொடரும் உரையாடல் பொருள் தொடர்ச்சி கொண்டதாக அமையும் நிலை காட்சி (Scene)ஆகும். பாத்திரங்களில் மாற்றமின்மை, வெளியில் மாற்றமின்மை, பேச்சுப் பொருளில் மாற்றமின்மை காலத் தொடர்ச்சி என்ற நான்கும் இணைந்து தொடரும் நிலையில் ஒரு முழுமையான காட்சி உருவாகுகிறது. பேச்சுப்பொருள் தொடர்ச்சியில் இடையீடு ஏற்படும் விதமாகச் பாத்திரங்களின் நுழைவு அல்லது வெளியேற்றம் நிகழும் போது அக்காட்சி இன்னொரு காட்சியாக மாறுகிறது. என்றாலும் அவ்விரு காட்சிகளும் தொடர் காட்சிகளே. ஆனால் வெளிசார்ந்து ஏற்படும் மாற்றம் தொடர்பற்ற காட்சிகளாகவே மாறும் வாய்ப்புண்டு. வெளிசார்ந்து ஏற்பட்ட மாற்றம் பேச்சுப் பொருளில் மாற்றத்தை ஏற்படுத்தாத நிலையில் அதுவும் காட்சி மாற்றமே. இப்படி உருவாகும் காட்சிகளின் தொகுதியே அங்கம் என்பதாகும்.
ஐரோப்பிய நாடகங்களுக்கு இலக்கணம் வகுத்த அரிஸ்டாடிலின் கவிதை இயல் நாடகத்தின் கூறுகளான அங்கம் (Act), காட்சி (Scene) உரையாடல் (Dialogue) ஆகியன பற்றிய விளக்கங்களையும் தந்துள்ளது. இவற்றோடு தொடர்புடைய தனிமொழி (Monologue) யைப் பற்றியும் கூட அரிஸ்டாடில் பேசியுள்ளார். கண்ணுக்குப் புலப்படாது இன்னொரு பாத்திரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு பேசும் ஒரு பாத்திரத்தின் நீண்ட சொற்பொழிவுப் பாணி உரையையே தனிமொழி. இவையே நாடகப் பிரதியின் இயந்திரவியல் கூறுகள். இக்கூறுகள் அனைத்தும் ஒரு நாடகப்பிரதியில் வெளிப்படுதல் சிறப்பெனக் கருதப்படுகிறது. இவற்றில் ஒன்று குறைவது அதனை நாடகப்பிரதி அல்ல என்று ஆக்கிவிடாது.
நாடகப் பிரதியின் படைப்பாக்கக் கூறுகளான கதைப்பின்னல், பாத்திரங்கள், சிந்தனை, மொழிநடை, இசைக் கூறு, காட்சிரூபம் ஆகியனவற்றைப் பற்றிப் பேசும்போதே அவற்றோடு தொடர்புடைய படைப்பு நுட்பம் சார்ந்த பனுவலின் கட்டமைப்பு வடிவத்தை உருவாக்கும் கலைச்சொற்களையும் விளங்கிக் கொள்ளவேண்டும் என்பது நாடகவியலின் அரிச்சுவடி . ஆரம்பம் (Introduction ), முரண்(Contradiction), சிக்கல்கள்(Crisis) , உச்சம் (Climax), தொடர்நிலை அல்லது வீழ்ச்சி (denouement ), முடிவு(End ) என்பதான வடிவம் ஒரு நாடகப் பிரதிக்குள் இருக்கவேண்டும் எனவும், அவ்வாறு இருக்கும் நாடகமே நல்திறக் கட்டமைப்பு நாடகம் (Well made Play) என அழைக்கப்படுகிறது எனவும் நாடக இலக்கணத்தை வரையறை செய்யும் நாடக வியலாளர்களின் கருத்து.
நாடகவியல் நூலான அரிஸ்டாடிலின் கவிதையியல் கூறும் இந்தச் சொற்களின் பொருளில் பரதரின் நாட்டிய சாஸ்திரமும் நாடக வடிவத்தைக் கூறுகிறது. ஒரு விதை மண்ணில் விழுந்து கருவாகி, வளர்ந்து கிளைகளாகப் பிரிந்து காய்த்துக் கனியாகப் பலன் தருவது போல ஒரு செய்தி அல்லது பொருள் பாத்திரங்கள் சார்ந்து முரண் தோன்ற சிக்கல்களால் வளர்ச்சி பெற்று உச்சநிலையை அடைந்து, கிளைக்கதைகளாகவும் நிகழ்வுகளாகவும் விரிந்து முடிவை நோக்கி நகரும் தன்மையே நாடக வடிவம் என்பதில் பரதரும் அரிஸ்டாடிலும் ஒன்று பட்டே உள்ளனர்.
அர்த்தப்ரக்ரிதீஸ், (ஆரம்பம்,) பிஜம், (விதை அல்லது கரு) பிந்து,(உந்துசக்தியின் சிந்தனை அல்லது வளர்நிலை) பாடகம், (கிளை அல்லது கதை) ப்ரகரி, (நிகழ்வுகள் விரிப்பு) கார்யம் ( கனி அல்லது முடிவு) என்பன பரதர் தரும் கலைச்சொற்கள். உரையாடலின் தொகுதி காட்சியாக மாறுவதும், காட்சிகளின் தொகுதி அங்கமாக மாறுவதும், அங்கங்களின் தொகுதி நாடக வடிவமாக உருக்கொள்வதும்தான் பரத முனியும் அரிஸ்டாடிலும் சொல்லும் நாடக வடிவம். நாடகப்பொருள் அறிமுகமாகி முரண் தோன்றுவதோடு முதல் அங்கம் நிறைவு பெற, இரண்டாவது அங்கத்தில் அம்முரண், சிக்கல்கள் சிலவற்றைச் சந்தித்து உச்சநிலையை அடைவது நிகழும். இம்முரணுக்கான முடிவு மூன்றாவது அங்கத்தின் முடிவில் கிடைக்கும் வகையில் எழுதப்பட்ட நாடகங்கள் நல்திறக் கட்டமைப்பு நாடகங்களாக அறியப்படுகின்றன.
நல்திறக் கட்டமைப்புக்கு மூன்றங்க நாடக வடிவம் சிறந்தன என்றாலும் அவற்றினும் சிறந்தன ஐந்தங்க நாடகங்கள் என்பது பலரது கருத்து. நாடக முரண் முதல் அங்க முடிவில் வெளிப்பட அதனைத் தொடரும் சிக்கலின் பயணம் கிளைபிரியும் நிகழ்வுகளாக இரண்டாவது அங்கத்தில் நீளும் போதும், அதன் பயணம் மூன்றாவது அங்கத்தில் உச்சநிலையை அடையும் போதும் பார்வையாளர்களின் ஆர்வம் முனைப்புடையதாக ஆக்கப்படும். அதனைத் தொடர்ந்து விரியும் நிகழ்வுகளை நான்காவது அங்கமாக விரித்து, நாடகத்தின் முடிவை ஐந்தாவது அங்கத்தில் விடுவிக்கும் போது ஆர்வநிலையின் முனைப்பு முடிவை நோக்கி நகர்த்தப்படும் வாய்ப்பு கூடுதலாக ஆகிறது என்பது ஐந்தங்க நாடகங்களை ஆதரிப்போரின் கருத்து. உலக அளவிலும் இந்திய அளவிலும் தேர்ந்த நாடகாசிரியர்களாக அறியப்பட்டுள்ள பலரும் -சேக்ஸ்பியர் தொடங்கி இப்சன், செகாவ் வரை, காளிதாசன் தொடங்கி கிரிஷ்கர்னாடு வரை மூவங்க, ஐந்தங்க நாடகங்களை எழுதிப் புகழ் பெற்றவர்கள். நாடகப்பிரதி குறித்த இவ்வகையான புரிதல் தமிழில் நாடகம் எழுதியுள்ள பலருக்கும் உள்ளதா என்று கேள்வியைக் கேட்டு ஆய்வு செய்தால்,தமிழில் நாடகாசிரியராக அறியப் பட்டுள்ள பலர் காணாமல் போய்விடுவர் என்பதையும் கூறி அதனை விரிக்காமல் சுஜாதாவின் நாடகப்பனுவல்களுக்குள் நுழையலாம்.
ஓரங்க நாடகங்கள்
சுஜாதாவின் 22 நாடகங்களையும் ஒரு சேர வாசித்த நிலையில் நாடகப் பிரதியில் இருக்க வேண்டிய இயந்திரவியல் கூறுகள் அனைத்தையும் அதன் இலக்கணத்தோடு அறிந்தவராக சுஜாதாவைச் சொல்ல முடிகிறது. அவர் எழுதியுள்ள எட்டு ஓரங்க நாடகங்களும் ‘வெளியில் மாற்றமின்மை’ என்னும் ஓரங்க நாடகத்தின் அடிப்படை இலக்கணத்தைப் பின்பற்றியனவாக உள்ளன. முதல் நாடகம் (ஒரு கொலை) , பிரயாணம், வந்தவன், மாறுதல் , கதை கேளு பெண்ணே, கதை கேளு! சரளா,பெட்டி,மறுமணம் காட்டுகின்றன. முதல் நாடகமான கொலையில் காந்தாமணியின் வீட்டிற்குள் நுழைந்த அவரது அலுவலகத்தைச் சேர்ந்த சீதாராமின் அசடு வழிதலில் தொடங்கும் நாடக விறுவிறுப்பு அவளது அண்ணணின் கொலையில் உச்சத்தை அடைகிறது. அக்கொலையை விசாரிக்கும் விசாரணையின் வழியாக உச்சநிலையின் ரகசியம் மேலும் மேலும் உயர்ந்து கடைசியில் ‘நடந்தது கொலை அல்ல;நாடகம்’ என்பதாக விடுவிப்பு நடக்கும் போது மர்ம நாடகத்தின் காட்சியைப் பார்த்த உணர்வு தணிக்கப்பட்டு ஒரு பாத்திரத்தின் - எதற்கும் லாயக்கற்றவன் எனச் சபித்த தந்தையிடம் தனது புத்திசாலித் தனத்தைக் காட்டிய மகனின் (ஸ்ரீகாந்த்) -சாதுரியத்தைச் சொன்ன கதையாக மாறிப் போகிறது. ஓரங்க நாடகத்தின் தொடக்கத்தில் ஒரு ரகசிய முடிச்சைப் போட்டு விட்டு, அம்முடிச்சைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திச் சென்று அதன் இறுதியில் அவிழ்த்துக் காட்டுவது சுவாரசியத்தைக் கூட்டும் எனச் சுஜாதா கருதியுள்ளார். இந்தக் கருத்தோட்டம் அவரது ஓரங்க நாடகங்கள் அனைத்திலும் வெளிப் பட்டுள்ளது.
ரயில் பயணத்தில் வரும் சக பயணிகளிடம் திருடித் தனது காதலியின் தகப்பனுக்குத் தர வேண்டிய பணத்தை ஏற்பாடு செய்து விடலாம் என ரயில் பெட்டியில் ஏறிய பாலா என்ற திருடன், அந்தப் பெட்டியில் ஏறிய அனைத்துப் பயணிகளும் பாராட்டுபவனாக இறங்கிச் செல்பவனாகப் பிரயாணம் நாடகம் கதை சொல்கிறது.உணவு கொடுத்து உபசரித்தவரிடமே திருடிச் செல்ல வந்தவனை வந்தவன் நாடகம் காட்டுகிறது. மாறுதலை ஏற்க மறுக்கும் பெரியவர் சுந்தரமூர்த்தியையே மாறுதலுக்குத் தகவமைக்கும் நாடகத்தின் பாத்திரமாக மாற்றிய விசுவநாதனை மாறுதல் நாடகத்தில் பார்க்கிறோம்.
நடிகையிடம் கதை சொல்ல வந்து கோபித்துக் கொண்டு செல்லும் கதாசிரியன் இளமாறனின் கோபத்துக்காக அவனைக் கதாசிரியனாக ஏற்றுக் கொண்டதாகக் கதை கேளு பெண்ணே கதை கேளு நாடகம் சொல்கிறது. தன் கணவனின் சந்தேகப் புத்தியைத் தனது அக்கா சாவித்திரியிடம் சொல்லி ஆறுதல் தேட வந்த சரளா, சாவித்திரியின் கணவன் தன் மீது கொண்ட காம இச்சையைச் சொல்லி விட்டுச் சென்றதாக முடிகிறது சரளா நாடகம்.
தன் கணவன் இன்னொரு திருமணம் செய்து கொள்வதைத் தடுக்கும் முயற்சியில் தான் உண்டாகி இருப்பதாகப் பொய் சொல்லி உதவும்படி டாக்டரிடம் கேட்ட ஜெயந்திக்கு, ஏன் நீங்களே மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற யோசனையைச் சொல்லும் டாக்டர், அவளை ஏற்றுக் கொள்ளக்கூடிய இளைஞனையும் அடையாளம் காட்டுகிறார். புருசனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பி அவளுக்கு நல்லது செய்ய நினைத்த டாக்டரையே சரியில்லாத டாக்டர் எனச் சொல்லி விட்டுக் கிளம்புகிறாள் மறுமணம் நாடகத்தில் வரும் ஜெயந்தி.
தன் கணவன் இன்னொரு திருமணம் செய்து கொள்வதைத் தடுக்கும் முயற்சியில் தான் உண்டாகி இருப்பதாகப் பொய் சொல்லி உதவும்படி டாக்டரிடம் கேட்ட ஜெயந்திக்கு, ஏன் நீங்களே மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற யோசனையைச் சொல்லும் டாக்டர், அவளை ஏற்றுக் கொள்ளக்கூடிய இளைஞனையும் அடையாளம் காட்டுகிறார். புருசனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பி அவளுக்கு நல்லது செய்ய நினைத்த டாக்டரையே சரியில்லாத டாக்டர் எனச் சொல்லி விட்டுக் கிளம்புகிறாள் மறுமணம் நாடகத்தில் வரும் ஜெயந்தி.
துப்பறியும் கதைகளில் இருக்கும் ஆர்வத்தூண்டல் உத்தியைப் பயன்படுத்தினால் நாடக நிகழ்வின் போது பார்வையாளர்களின் கவனம் ஓர்மையுடன் இருக்கும் என்பது உண்மை தான். நாடகத்தின் தொடக்கத்தில் போடும் முடிச்சை அல்லது ரகசியத்தைத் திடீர்த் திருப்பங்களின் வழி நகர்த்திச் சென்று எதிர்பாராத முடிவைத் தருவது பார்வையாளர்களுக்குச் சுவாரசியத்தைக் கூட்டும் உத்தி எனக் கருதும் சுஜாதா அதனை எல்லா ஓரங்க நாடகங்களிலும் பயன்படுத்தியுள்ளார். எதிர்பாராத முடிவைத் தருவது துப்பறியும் நாடகங்களின் இயல்பு மட்டும் அல்ல; வெகுமக்கள் ரசனையைக் கட்டமைக்கும் வாராந்திரப் பத்திரிகைகளின் வியாபார உத்தியும் கூட. இந்த உத்தியைத் தவறாது தனது ஓரங்க நாடகங்களில் பயன்படுத்தியுள்ளார் சுஜாதா. எனவே அவரது ஓரங்க நாடகங்களின் நோக்கம், ஒரு பக்கக் கதைகளை வாசித்து முடித்தவுடன் ஏற்படும் உணர்வை உண்டாக்குவதே என்ற விமரிசனத்தைச் சொல்லி விடலாம். அப்படிச் சொல்லி ஒதுங்கிக் கொள்வது, அவரது நாடகங்களின் நோக்கத்தை முழுமையாகப் புரிந்து கொண்டதாக ஆகாது. ஏனென்றால் ஒரு நாடகப் பிரதி வாசிக்கும் போது கிடைக்கும் உணர்வையும் தாண்டி மேடை ஏற்றத்தின் போது வேறுவகை உணர்வை உண்டாக்கும் சாத்தியங்கள் கொண்டது. அதனைக் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டியது பொறுப்புள்ள இயக்குநரின் பணி. அப்பணியைத் தேர்ந்த நடிகரின் உதவியோடு வெளிக்கொண்டு வரும் இயக்குநர் நாடகாசிரியரின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துபவனாக ஆகி விடுவான். வாசிப்பின் போது ரகசிய அவிழ்ப்பு என்ற உத்தியைக் கொண்டதாகத் தோன்றும் சுஜாதாவின் ஓரங்க நாடகங்கள் அனைத்துக்குமே அதனைத் தாண்டிய நோக்கங்கள் இருந்துள்ளன.
மேடையேற்றத்தை மனதில் கொண்டு வாசிக்கும்போது அதனைச் சுலபமாக உணர முடியும். படிப்பு சரியில்லை என்றால் அவனிடம் எந்தத்திறமையும் இருக்காது என நம்பும் பெற்றோர்களின் மனநிலைக்குக் குட்டு வைக்கும் விதமாக கொலை நாடகம் எழுதப்பட்டுள்ளது என்பதை மேடை ஏற்று வதன் மூலம் ஓர் இயக்குநர் பார்வையாளர்களுக்குக் காட்ட முடியும்.பிரயாணம் நாடகத்தை மேடை ஏற்றும் போது, திருடன் பாலாவின் அம்மா ஹார்ட் அட்டாக்கில் ஆஸ்பத்திரியில் இருப்பதாக அவனது நண்பன் முத்து சொல்ல, அதற்கான பணத்தைத் தான் தருவதாகச் சொல்லிக் கணபதி அய்யர் பையைத் திறந்து எடுத்துத் தர முயலும் செயலே அவனது மனத்தை மாற்றி நல்லவனாக ஆக்கியது எனக் காட்ட முடியும்.
அப்பாவியைத் தான் தன்னால் ஏமாற்ற முடியும் என்ற நிலையில் மணி அய்யர்- லட்சுமி தம்பதியின் ஒரு நாள் வருமானத்தை மிரட்டி வாங்கிப் போகும் இளைஞனின் நியாயத்தைச் சொல்லும் வந்தவன் நாடகத்தின் மேடை ஏற்றத்தின் வழியே,ஒருநாள் வருமானத்தையும் வாட்சையும் மிரட்டி வாங்கிச் செல்லும் இளைஞனிடமும் கரிசனம் காட்டும் மணி அய்யரின் அப்பாவித்தனத்தையும் ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு இன்னொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டும் சகிப்புத்தன்மையும் சொல்லி அந்தப் பாத்திரத்தை உயர்த்திக் காட்ட முடியும். மாறுதல் நாடகத்தை மேடை ஏற்றும் போது விட்டுக் கொடுக்க மறுக்கும் மனநிலை யோடு பிடிவாதம் செய்யும் சுந்தரமூர்த்தியைப் போன்ற உயர் நடுத்தர வர்க்கத்து முந்தைய தலைமுறை மனிதர்களைக் கேள்விக்குள்ளாக்க முடியும்.
எழுத்தாளன் என்ற அடையாளத்தோடும் மரியாதையை விட்டுத் தராமலேயே தமிழ் சினிமாவில் எழுத்தாளன் செயல்பட முடியும்; நான் அப்படித் தான் செயல் பட்டேன் என்ற தன்னிலை விளக்கத்தைத் தரவே சுஜாதா கதை கேளு பெண்ணே கதை கேளு நாடகத்தை எழுதினார் என உணர்த்த முடியும். வெளிப்படையாக இருத்தல் X அறியாமையில் இருத்தல் என்ற முரணில் தான் இந்தியப் பெண்களின் வாழ்க்கை நகரும் விதத்தைச் சொல்லவே சரளா நாடகம் எழுதப்பட்டுள்ளது என்பதைச் சரியான ஒரு இயக்குநர் மேடை ஏற்றத்தின் போது காட்ட முடியும்.
கோயிலில் கிடக்கும் பெட்டி உண்டாக்கும் மர்மம் சார்ந்த முடிச்சை மையப்படுத்தும் நாடக நிகழ்வின் வழியே சாமிநாத குருக்களின் இயலாமையை- அவரைச் சூழ உள்ள மனிதர்களிடம் படும்பாட்டை - சாஸ்திரங்களைத் தவற விட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தை சொல்ல முடியும். இந்திய ஆண்கள் வாரிசு வேண்டும் என மறுமணம் செய்யத் தயங்காத போதும், இந்தியப் பெண்கள் எந்தக் கணத்திலும் புருசன் இருக்க இன்னொரு ஆணைத் திருமணம் செய்வது பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை எனக் காட்டுவதன் மூலம் இந்தியக் குடும்ப அமைப்பின் பெருமையையும்,அதைக் காப்பதில் பெண்களின் பங்கு மாற்றமில்லாமல் இருக்கிறது என்பதைச் சொல்ல முடியும்; சொல்லுவதோடு இந்த உயர்வான குணம் காப்பாற்றப்பட வேண்டும் எனப் பார்வையாளர் களிடம் வலியுறுத்த முடியும்.
எடுத்துரைப்பு நாடகங்கள்
சுஜாதா எழுதியுள்ள 15 குறுநாடகங்களில் எட்டுக் குறுநாடகங்கள் ஓரங்க நாடகங்களாக அமைந்திருக்க, கிருஷ்ணா! கிருஷ்ணா!,இடையன் மகள் ஆகிய இரண்டும் எடுத்துரைப்புக் கதை சொல்லல் வடிவத்தை நாடகத்தின் உத்தியாகக் கொண்டுள்ளன.இந்தியச் செவ்வியல் வடிவிலும், நாட்டுப்புற அரங்கியல் தொடர்ச்சியிலும் நிகழ்வுகளை எடுத்துரைத்து நிகழ்த்து வதற்குக் விதூஷகன் அல்லது கட்டியக்காரன் என்றொரு பாத்திரத்தை உருவாக்கியிருந்தனர் என்பதை நாம் அறிவோம். கதா காலட்சேபத்தில் பகவான் கிருஷ்ணனின் கதையைச் சொல்லும் பாகவதரும், சிஷ்யனும் ஒரு மாறுதலுக்காக கிருஷ்ணாராவ் என்னும் கிருஷ்ணர் பொம்மை செய்யும் கைவினைக் கலைஞனின் கதையை எடுத்துச் சொல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது கிருஷ்ணா! கிருஷ்ணா!, நாடகம் .
காலட்சேப மேடை, கிருஷ்ணாராவ் வேலை செய்யும் இடம், மேடை,அவரது வீடு, யூனியன் அலுவலகம்,மேடை என மாறி மாறிச் செல்லும் காட்சிகளைக் கொண்ட அந்நாடகம் நான்கு பகுதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் விதமாக அறிவொளிக் குழுக்கள் முச்சந்திகளிலும் தெருமுனைக ளிலும் நடத்துவதற்கேற்ற வகையில் எழுதப்பட்ட இடையன் மகள் நாடகம், அரண்மனை, இடையன் மகளின் வீடு, திருடர்கள் அரசகுமாரனைப் பிடித்து வைத்திருக்கும் இடம் ஆகியனவற்றை எடுத்துரைப்பின் வழியாகவே சொல்வதாக எழுதப்பட்டுள்ளது.
எடுத்துரைப்பு வடிவம் என்பது காலம், இடம், பாத்திர நுழைவு ஆகியனவற்றைக் கதை கூற்றுப் பாத்திரத்தின் வழி நிகழ்த்திக் கொள்ளும் எளிய வடிவம். இந்த எளிய வடிவம் நாடகக் காட்சிகளை நேர்கோட்டில் நகர்த்திச் சென்று பார்வையாளனுக்கு நாடகக் காட்சிகள் மூலம் சொல்ல விரும்பிய செய்தியைச் சுருக்கமாகச் சொல்லி நிறைவு செய்யும்.
கிருஷ்ணாராவ் என்னும் கலை நுட்பம் சார்ந்த மனிதன், இயந்திரமயத்தின் வரவால் இயந்திரத்தின் பகுதியாக மாறிப் போனான் என்பதையும், இடையன் மகள் போட்ட நிபந்தனை காரணமாகவே ராஜகுமாரன் பாய் பின்னக் கற்றுக் கொண்டான், அந்த ஞானமே அவனைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றியது என்பதால், ஒவ்வொருவரும் எதாவது ஒரு தொழிலையும் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வார்த்தையாகவே சொல்லி முடிக்கின்றன அவ்விரு நாடகங்களும். நேர்கோட்டில் நிகழ்வுகளை நகர்த்திச் செல்லும் எளிய வடிவத்தைக் காட்சி மாற்றம் என்ற உத்தியைப் பயன்படுத்தி இரண்டு குறுநாடகங்களை எழுதியுள்ளார் சுஜாதா.
கிருஷ்ணாராவ் என்னும் கலை நுட்பம் சார்ந்த மனிதன், இயந்திரமயத்தின் வரவால் இயந்திரத்தின் பகுதியாக மாறிப் போனான் என்பதையும், இடையன் மகள் போட்ட நிபந்தனை காரணமாகவே ராஜகுமாரன் பாய் பின்னக் கற்றுக் கொண்டான், அந்த ஞானமே அவனைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றியது என்பதால், ஒவ்வொருவரும் எதாவது ஒரு தொழிலையும் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வார்த்தையாகவே சொல்லி முடிக்கின்றன அவ்விரு நாடகங்களும். நேர்கோட்டில் நிகழ்வுகளை நகர்த்திச் செல்லும் எளிய வடிவத்தைக் காட்சி மாற்றம் என்ற உத்தியைப் பயன்படுத்தி இரண்டு குறுநாடகங்களை எழுதியுள்ளார் சுஜாதா.
ஆகாயம் என்ற வானொலி நாடகத்திலும், முயல் என்ற சிறுவர் நாடகத்திலும் அவ்வுத்தியைக் காணலாம். காட்சி மாற்றம் என்ற குறிப்பு இல்லை என்றால் இவ்விரண்டும் சிறுகதை வடிவத்தைப் பெற்று விடும் வாய்ப்புகள் கொண்டவை. நெருக்கடியான தருணங்களில் மனிதர்கள் எடுக்கும் முடிவு தர்க்கங்கள் சார்ந்ததல்ல; தீர்மானமற்ற முடிவுகள் தான் மனிதர் களை வழி நடத்துகின்றன எனச் சொல்லும் இந்த நாடகம் அதற்கு மாறான தன்மையை வாசிப்பிலும் மேடை ஏற்றத்திலும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்று. அறிவியல் புனைவு போலத் தோற்றம் தரும் ஆகாயம் அறிவியல் பார்வை அற்ற மனவியல் தர்க்கத்தை முன் மொழியும் நாடகம்.முயல் நாடகமும் கூட மனிதர்களின் மனவியலின் முடிவை முக்கியப்படுத்தும் நாடகம் தான்.
பணம் சார்ந்த உலகம் வேலைக்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்பட்ட வாழ்க்கைக்கு மனிதர்களைத் தள்ளி விடும் நிலையைச் சொல்லும் முயல், அதிலிருந்து விலகி, இந்த உலகம் பிற உயிரினங்களுக்கும் உரியதாக இருக்கிறது என்பதை உணரும் போதே மனித வாழ்வின் இருப்பு அர்த்தம் உடையதாக ஆகும் என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது. தாமோதரனின் வீடு, தாமோதரனின் பூங்காடு கிராமம், தாமோதரனின் அலுவலகம் எனக் காட்சிகளை மாற்றி மாற்றி நிகழ்த்திக் காட்டும் முயல் நாடகத்தின் நிகழ்வின் கால அளவு இரண்டு நாள்கள் மட்டுமே. முயல் நாடகத்தில் தூக்கலாக இருக்கும் சிறுகதை அம்சம் மந்திரவாதி, சேகர் என்ற இரு குறுநாடகங்களில் வெளிப்பட வாசல் நாடகத்தில் ஒரு குறுநாவலின் அம்சம் வெளிப்பட்டுள்ளது.
ஆண் - பெண் உறவில் இருக்கும் ஆதிக்க மனநிலை , வக்கிர உணர்வு, சந்தேக வெளிப்பாடு என்பனவற்றைச் சிறுகதையாக எழுதியுள்ள சுஜாதா, காட்சி வழி நகரும் நாடகத்திலும் மையப்படுத்திக் காட்டியுள்ளார். மந்திரவாதம் என்ற தொழில் மேல் கொண்ட பிடிப்புக்குப் பின்னால்,மந்திரவாதி என்னும் ஆணின் அந்தரங்க ஆசையாகத் தன்னால் வளர்க்கப்பட்ட தங்கை மகளை அடைய விரும்பும் குரூரம் இருந்தது என்பதை மந்திரவாதி நாடகத்தில் காட்டியுள்ளார்.தனது தங்கை மகள் மரகதத்தை விரும்பும் இளைஞன் சந்திரசூடனின் விருப்பத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் மந்திரவாதி ராஜாவின் அந்தரங்க ஆசையின் குரூரத்தை உடைத்துக் காட்டுவதன் மூலம் மந்திரவாதம் என்பது தந்திரங்களின் தொகுதி எனக் காட்டியுள்ளார் சுஜாதா.
காட்சிகளாக இந்த நாடகம் பிரிக்கப்படவில்லை என்றாலும் காட்சிக் கூடம், பேருந்து நிறுத்தம், மந்திரவாதியின் வீடு என வேறு வேறு இடங்களில் நடைபெறுவதால் காட்சிகளாகப் பிரித்துக் காட்ட காட்சி மாறுகிறது என்ற குறிப்புகளைத் தந்துள்ளார்.சுஜாதா என்னும் அறிவியல் ஆதரவாளர் இந்தியாவில் சில துறைகளில் எந்திரமயம் மற்றும் கணினி மயம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தார் என்பதை நாம் அறிவோம். அந்த ஆதரவு மனிதனின் புறவெளிகளான தொழிற்கூடங்கள், வியாபார வெளிகள் போன்ற பணியிடங்களில் உண்டாக மட்டுமே உண்டு. மனிதனின் அந்தரங்க வெளியான குடும்பத்திற்குள் நுழையும் போது கடுமையான எதிர்ப்பைக் காட்டுவேன் என்பதைச் சொல்ல சேகர் என்ற நாடகத்தை எழுதிக் காட்டியுள்ளார். சேகர் என்ற மனித ரோபாவை உருவாக்கிய ஆத்மராவ் என்ற கணினிப் பொறியாளரின் ஒருவார வாழ்க்கையை நாடகமாக்கிக் காட்டுவதன் மூலம் அந்த எதிர்ப்பைப் பதிவு செய்கிறார். மனிதனின் அன்றாட வாழ்க்கை சிறியதும் பெரியதுமான பொய்களால் ஆனது. ஆனால் எந்திரத்திற்குப் பொய் சொல்லக் கத்துத் தர முடியாது . சூழலுக்கேற்பப் பொய் சொல்ல முடியாத ரோபாக்களால் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை அந்த நாடகம் நகைச்சுவையாகக் காட்டுகிறது. இரண்டு அங்கங்கள் இருப்பதாகக் காட்டப்பட்டிருந்தாலும் அங்கத்திற்குள் காட்சிப் பிரிவுகள் இல்லை.
மனிதர்களின் சின்னச் சின்னச் செயல்களால் தான் வாழ்க்கை அர்த்தமும் சுவாரசியமும் கொள்கிறது என்பதை உணர்த்தும் நாடகம் வாசல். மாமாவின் ஒவ்வொரு வருகையின் போதும் உற்சாகத்தைக் கொண்டு வருவதாக இருந்த வாசல் இனி அந்த உற்சாகத்தைத் தராது என்ற கழிவிரக்க வெளிப்பாடாக எழுதப் பட்டுள்ளது. ஈயைச் சாகடித்துப் பிழைக்க வைத்து நாணாவைக் குஷிப்படுத்தும் மாமா, சுவர்க் கடிகாரத்தின் ஸ்பிரிங்கை வெளியில் வைத்து விட்டு, மாட்டி ஓடச் செய்யும் மாமா, பவானியின் எதிர் வீட்டுக் காதலுக்கு வழி சொல்லும் மாமா, எல்லாச் செயல்பாடுகளின் மூலமும் அப்பாவிற்கு எரிச்சல் மூட்டும் மாமா என ஒவ்வொரு வருகையின் போதும் அந்த வீட்டுக் குழந்தைகளுக்கும் மனிதர்களுக்கும் நினைவில் இருக்கும்படி செய்து விட்டுச் செல்லும் மாமா, இனி வரமாட்டார் என்பதாக முடிகிறது. மாமாவின் மீதான இரக்க உணர்வை அதிகப் படுத்த அவரது நடவடிக்கைகளில் இருந்த நகைச்சுவை மற்றும் உற்சாகத்தை உரையாடல்கள் வழி கொண்டு வருகிறது. மூன்று பாகங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அந்த வீடு என்ற ஒரே வெளியில் நடக்கும் நிகழ்வுகளே நாடகத்தின் காட்சிகள் என்பதால் இதனையும் ஓரங்க நாடகம் என்றே கூறலாம்.
நீண்ட நாடகங்கள்
ஓரங்க நாடகப் பிரதிகளில் பார்வையாளர்களை மேடை நிகழ்வோடு ஒன்றி¬ணையச் செய்யும் நோக்கத் தோடு சுஜாதா பொதிந்து வைத்த பொதுக் குணங்கள் இரண்டு. தொடக்கத்தில் வெளிப்படை யாகத் தெரியும் செய்தியை ரகசியமாக ஆக்குவது முதல் பொதுக் குணம். அந்த ரகசியத்தை விடுவிக்கும் போது அந்நாடகத்தின் மையக்கதாபாத்திரம் ஒன்றின் மீது கவனத்தைக் குவியச் செய்வது இரண்டாவது பொதுக் குணம். இவ்விரு பொதுக் குணங்களும் அவரது நீண்ட நாடகங்கள் சிலவற்றிலும் ஆர்வத்தைத் தூண்டும் ஆதார சக்தியாகவே உள்ளன. ஓரிடம், ஒரு நாள், இவற்றோடு பிணைக்கப்பட்ட குறைவான பாத்திரங்கள் என்ற எல்லைகளைத் தாண்டி ஈரங்கம் மற்றும் மூவங்க வடிவங்களில் எழுதப்பட்ட நீண்ட நாடகங்களிலும் முதலில் திறக்கப்படும் செய்தியாக ஒன்றைச் சொல்லிப் பின்னர் அதுசார்ந்த ரகசிய முடிச்சு ஒன்றை உருவாக்கி, அதனை வளர்த்துச் சென்று தரும் எதிர்பாராத முடிவின் மூலம் - மூவங்க அமைப்பின் மூலம் - மையக் கதாபாத்திரத்தின் மேல் பார்வையாளர்களின் கவனத்தைக் குவிக்கும் தன்மையை அவரது புகழ்பெற்ற நாடகங்களான சிங்கமைய்யங்கார் பேரன்,பாரதி இருந்த வீடு, நரேந்திரனின் விநோத வழக்கு என்ற மூன்றிலும் காணமுடிகிறது.
மொழி கடந்த, மதம் கடந்த, சாதி கடந்த காதலை ஆதரிப்பது போல அதன் வலியைச் சொல்லும் நாடகம் சிங்கமைய்யங்கார் பேரன். ராகவன் - சுஷ்மா இருவரும் காதலித்துப் பதிவு திருமணம் செய்து கொண்ட நாளில் தொடங்கும் நாடகம் , இருவருக்கும் பிறந்த பையனுக்கு சிங்கமய்யங்கார் எனப் பெயரிடுவதில் நிறைவு பெறுகிறது. பஞ்சாபிப் பெண்ணான சுஷ்மாவின் பெயரை அலமேலு என மாற்றி வீட்டிற்குள் அழைத்து வருகிறான் வரும் என்பதில் தொடங்கும் ரகசியம் நாடகத்தின் மத்தியில் வெளிப்பட்டு விடுகிறது. ராகவன் தந்தையால் விரட்டி அடிக்கப்பட்டுத் தனிக்குடித்தனம் சென்று சிரமப்பட்டு வாழ்ந்த போது இருவரின் பெற்றோரும் வரவில்லை.சாதித்திமிரும் விட்டுக்கொடுக்காத தன்மையும் போலிக் கௌரவமும் சேர்ந்து தடுத்தாலும் பேரன் பிறந்தபின் வருகிறார்கள். பெயர் வைப்பதில் இருவரும் மோதுகிறார்கள். ஆனால் நரசிம்மாச்சாரியின் நண்பர் இருவரையும் சமாதானப் படுத்தி இருவருடைய பெயரும் வருமாறு குழந்தைக்குப் பெயர் வைத்து சேர்த்து வைக்கிறார். நகைச்சுவையோடு கலப்புத் திருமணத்தின் வலியைச் சொல்லும் நாடகம்.
ராகவன், சுஷ்மா தவிர முக்கிய பாத்திரங்கள்;நரசிம்மாச்சாரி - ராகவனின் தந்தை, வசதியான வடகலை அய்யங்கார். சொந்த சாதியில் மட்டுமே தனது மகன் திருமணம் செய்ய வேண்டும் என்ற பிடிவாதம் கொண்டவர்.கோவிந்த்சிங் - சுஷ்மாவின் தந்தை ,பீட்டர்ஸ் ரோடில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார்- இவரது விருப்பமும் தனது மகளின் திருமணம் பஞ்சாபி சிங்காக இருக்க வேண்டும் என்பது தான்.வாத்தியார் ரங்கபாஷ்யம்- ராகவன் , சுஷ்மாவின் திருமணத்திற்கு உதவும் நரசிம்மாச்சாரியின் நண்பர்.சிங்கமைய்யங்கார் பேரன் நாடகத்தில் வெளிப்படுத்திய அளவுக்கு நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் உரையாடலை சுஜாதாவின் நீண்ட நாடகங்கள் ஆறிலும் காண முடியவில்லை. சிங்கமைய்யங்கார் பேரன் நாடகம் இன்பியல் முடிவுடன் அமைய, மற்ற ஆறு நாடகங்களும் துன்பியல் உணர்வுகளின் கலவையாக எழுதப் பட்டுள்ளன.
சுஜாதாவின் துன்பியல் நாடகங்களில் உச்சமான நாடகமாகப் பாரதி இருந்த வீடு என்ற நாடகத்தைச் சொல்லலாம். திருவல்லிக்கேணியில் இருந்த முப்பட்டக வீட்டை அடமானம் வைத்துக் கடன் வாங்கி, அடைக்க முடியாமல், தனது பென்சன் பணத்தில் காலம் தள்ளும் சுப்ரமணிய அய்யரின் முதுமைக் கால சிரமங்களைச் சொல்லும் நாடகம் பாரதி இருந்த வீடு. ஒரு குறுநாவலாக எழுதப்பட்டிருந்தால் அய்யரின் மீதும்-அவரது வாழ்க்கை மீதும் ஏற்படக் கூடிய பச்சாதாப உணர்வு கூடுதலாக ஆகி இருக்கும். மூன்று அங்க நாடகமாக எழுதப்பட்டதால் அந்த உணர்வு காணாமல் போயிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முதல் அங்கத்தில் ஐந்து காட்சிகள்; இரண்டாவது அங்கத்தில் இரண்டு காட்சிகள்; மூன்றாவது அங்கத்தில் இரண்டு காட்சிகள் வீதம் அமைந்துள்ள நாடகத்தின் முதல் ஐந்து காட்சிகளின் முடிவில் பாரதியார் இருந்த வீட்டின் சொந்தக்காரரான சுப்பிரமணிய அய்யரின் முதுமையும், தங்களது வருமானத்தில் தந்தையைச் சரியாகவே பார்த்துக் கொள்ள முடியும் என்றாலும் மனைவிமார்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தந்தையை அலைக்கழிக்கும் பிள்ளைகளின் இயலாமையும் காட்டப்பட்டுள்ளது. அதனால் பாரதியார் இருந்த அந்த வீட்டை விற்று விடலாமா என்று தவிக்கும் மனநிலையுடன் முதல் அங்கம் முடிய இரண்டாவது அங்கம்,
பாரதியார் இருந்த வீடு இப்போது அய்யரின் வசம் இருப்பதால் அதனை நினைவுச் சின்னமாக்கப் போகும் அரசாங்கம் அய்யருக்கு முப்பத்தேழு லட்சம் தரப் போகிறது என்ற திருப்பத்தின் மூலம் சுவாரசியம் கூட்டப்படுகிறது. இந்தத் தகவல் அய்யரின் நண்பர் மணி சொல்லும் ஒரே பொய் என்ற தகவலோடு மூன்றாவது அங்கம் விரியும் போது மகன்களும், மருமகள்களும் சொந்த பந்தமும் என எல்லா உறவுகளும் பணத்திற்காக அவரைக் கவனிக்கும் காட்சிகள் பார்வையாளர்களிடம் உண்டாக்குவது ஆழமான உணர்வு அல்ல; நகைச்சுவை உணர்வு என்பதைக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் அவரது பேரனும் பேத்தியும் அன்புக்காக மதிக்கின்றனர். பார்வையாளர்களுக்குத் தெரிந்த அந்த ரகசியம் பாத்திரங்களுக்குத் தெரியாது என்பதால், நாடகத்தின் சுவாரசியம் அதிகரிக்கிறது. தாத்தாவின் தேவையை விரும்பும் மூன்றாம் தலை முறையின் பார்வையில் நாடகம் நிகழ்கிறது.
பொதுவாக ஒரு நாடகத்தின் வடிவம் பார்வையாளருக்கான கோணத்தில் சொல்லப் படுவதில் தான் சிறப்புடையதாக அமையும். பாத்திரத்தின் கோணத்தில் சொல்லப்படும் போது நாடகத்தின் முடிவில் ரகசியத்தை அறிந்த மனத்திருப்தியோடு மட்டுமே பார்வையாளர்கள் வெளியேறுவர். பாரதியிருந்த வீடு நாடகத்தின் மேடை ஏற்றத்தின் போது இதுதான் நிகழ்ந்திருக்கும் எனக் கூறலாம்.
சுஜாதா எழுதிய நாடகங்களில் சுவாரசியம் கூடியதும், பெரியதுமான நாடகம் நரேந்திரனின் விநோத வழக்கு. அந்த நாடகத்திலும் இந்த உத்தியையே முழுமையாகப் பின்பற்றியுள்ளார். சுஜாதாவின் பொது அடையாளமான துப்பறியும் கதாசிரியர் என்ற அடையாளத்தை வெளிப் படையாகக் கொண்ட நாடகமும் கூட. அவரது கற்பனைப் பாத்திரங்களான கணேஷ், வசந்த் என்ற பாத்திரங்களைப் பயன்படுத்தியுள்ள இந்த நாடகம் இந்திய/ தமிழ்ச் சமூகத்தின் புரையோடிப் போன ஒன்றைப் பற்றிய அரசியல் விமரிசன நாடகமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
லஞ்சம், அரசதிகாரம், அதனைத் தீர்மானிக்கும் தேர்தல் , தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சிகளின் தன்னகங்கார நிலை, தனிமனித நேர்மைகளையும், பொது நலனையும் குழி தோண்டிப் புதைப்பதில் இந்திய சமூகத்தைக் காப்பதாகப் பாவனை பண்ணும் அமைப்புகளின் கூட்டுச் சதி, அவற்றில் செயல்படும் நேர்மையான சில தனிமனிதர்களின் இயலாமை ஆகியவற்றை அம்பலப்படுத்தும் நாடகம் இது. பதினைந்துக்கும் மேற்பட்ட பாத்திரங்கள், நீதிமன்றக் காட்சி, கணேஷின் அலுவலகம், முன் நிகழ்வுகள் நடந்த மருத்துவமனை, எனக் காட்சிகளுக்கான இடங்களுடன் மூன்று பகுதிகளைக் கொண்ட டாக்டர் நரேந்திரன் மீது சுமத்தப்பட்ட மூன்ற குற்றங்களுடம் உண்மையில் குற்றங்களே அல்ல என்ற ரகசியம், பார்வையாளர்களுக்கு முன்பே வெளிப்படும் விதமாகவே நாடகக் காட்சிகள் அமைந்துள்ளன. குற்றமற்ற டாக்டருக்கு விடுதலை கிடைத்ததா? தண்டனை கிடைத்ததா ? என்ற ரகசிய விடுவிப்பை நோக்கிப் பார்வையாளர்களை அழைத்துச் சென்று முடிவின் அருகில் நிறுத்துகிறது.
இப்போதுள்ள அரசதிகார அமைப்பு பொறுக்கிகளின் நியாயத்தையே அரசியல் நியாயமாகக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பில் நீதியும் தீர்ப்புகளும் கூட முன்பே திட்டமிடப்பட்ட நாடக ஒத்திகைகளாகவே இருக்கின்றன என்பதைச் சொல்லி முடித்து வைக்கின்றது. பாரதி இருந்த வீட்டில் முதுமையின் ஒரு பரிமாணத்தைக் காட்டிய சுஜாதா, அன்புள்ள அப்பா, கடவுள் வந்திருந்தார், ஊஞ்சல் ஆகிய நாடகங்களில் வேறு சில பரிமாணங்களைக் காட்டுகிறார். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்த மகனும் மருமகளும் அப்பாவிற்குத் தரும் வாய்ப்புகள் இரண்டு - ஒன்று ஒரு வேலைக்காரனையோ வேலைக்காரி யையோ ஏற்பாடு பண்ணிக்கிட்டு வீட்டிலேயே இருப்பது. இரண்டாவது அட்சயா மாதிரி எதாவதொரு முதியோர் ஹோமில் இருப்பது. அவருடைய விருப்பமோ இவ்விரண்டுமல்ல; வேறொன்று. அதாவது அவர்கள் கனடாவுக்குப் போகாமல் இருப்பது. அவரது விருப்பம் மறுக்கப்பட்ட சூழலில் அவரது உடனடி மரணம் தரும் அதிர்ச்சி துடைக்கப்பட்டு அயல்நாட்டுப் பயண ஏற்பாடுகளில் தீவிரம் காட்டுகின்றனர்.
தாத்தா இல்லாத வெறுமையை உணரும் பேத்தி தன் தந்தையின் கன்னத்தில் அறையும் அறையுடன் முடியும் முதல் பாகம். இதன் பாத்திரங்கள்; அப்பா, அவரது மகன் ரவி,மருமகள் உஷா, ஆறு வயதுப் பேத்தி ப்ரியா. இரண்டாவது பாகத்தின் பாத்திரங்கள்; பெரியவர், ஜனார்த்தனன், பரிமளம், பரிமளத்தை மணக்க இருந்த திருமணம் முடிக்காமல் இறந்து போன சேகர். பணக்காரத்தனத்தை வெறுத்து ஏழை ஜனார்த்தனத்தைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட பரிமளம். சேகரின் பணக்காரத்தனத்தின் மீது பரிமளத்திற்கு இன்னும் மோகம் இருக்கிறது எனத் தவறாகப் புரிந்து கொண்டு பணத்தைத் தேடிய ஜனார்த்தனத்தின் இப்போதைய நிலை மீது பரிமளத்தின் வெறுப்பு. ஒருவர் மாற்றி ஒருவர் வாழ்க்கையையின் சந்தேகப் பக்கங்களை வளர்த்து அமைதியை கெடுத்துக் கொள்கின்றனர். நடுக்காட்டில் இருக்கும் அந்தக் கடையில் எல்லாம் கிடைக்கும் என்ற போர்டிற்கேற்ப மனத்தின் கசடுகள் எல்லாம் கழுவப்பட்டுச் சுத்தமான பின்பு பெட்ரோலை வாங்கிக் கொண்டு அன்பான அப்பாவைத் தேடியவர்களாகச் செல்லும் ஜனார்த்தனன் - பரிமளம் தம்பதிகளின் புதிய நிலைப்பாட்டுடன் அன்புள்ள அப்பா நாடகம் நிறைவுபெறுகிறது.
அன்புள்ள அப்பா நாடகத்தை இரண்டு பாகங்கள் கொண்ட நாடகம் என்று சொல்வதை விட வெவ்வேறு இரு நாடகங்களின் இணைப்பு என்று தான் சொல்ல வேண்டும். முதிய அப்பாவைத் தனிமையில் விட்டு விட்டு வெளிநாடு செல்லத் தயாராகும் மகன் - மருமகள் ஆகியோரின் நியாயங்கள். தனிமையில் இருக்க முடியாத முதுமையின் நியாயம் என்பது முதல் நாடகம். இரண்டாவது பாகம் தவறாகப் புரிந்து கொண்ட கணவன் மனைவி இருவரையும் புரிய வைக்கும் பெரியவரை அல்லது அப்பாவைக்காட்டும் நாடகம் . இது முதல்பாகத்தின் தொடர்ச்சி என்பது அந்த அப்பா பாத்திரத்தை ஒருவரே நடிப்பதன் மூலம் மட்டுமே உணர்த்த முடியும். வேறொரு நடிகர் நடிக்கும் நிலையில் இவை இரண்டுமே இரு வேறு நாடகங்கள் தான்.
முதுமையின் இன்னொரு பரிமாணமாகத் தொடர்ந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவரின் ஓய்வுக்கால மனநிலையைப் பேசுவதாகக் கடவுள் வந்திருந்தார் நாடகத்தைத் தொடங்குகிறார் சுஜாதா. ஓய்வு பெற்றபின் ஒருவர் அவரது குடும்பத்தினராலும் , உறவினர் களாலும் மதிக்கப்படாத நிலையில் மையம் கொள்வது போலத் தொடங்கி விட்டு அறிவியல் புனைவு அல்லது எதிர்காலவியலின் சாத்தியங்கள் பற்றியதாக நகர்ந்து விடுகிறது இந்நாடகம். பைத்திய நிலை அல்லது கடவுள் நிலை என்ற விவாதமும் எழுப்பப்பட்டு, ஒருவன் மனிதனாக இருப்பதில் தான் வாழ்க்கையின் இருப்பு உள்ளது என்பதாக நாடகம் முடிகிறது.
ஓய்வு பெறும் வயதை அடைந்த பின்பும் அதனை ஒத்துக் கொள்ளாது பிடிவாதம் பிடிக்கும் முதியவர் ஒருவரைக் காட்டும் நாடகமாக ஊஞ்சல் என்ற நாடகத்தைச் சொல்லலாம். அங்கம் - காட்சி என்ற நாடகத்தின் உள்கட்டமைப்பு சார்ந்து பிரித்துக் காட்டாமல் ஒன்று முதல் 10 காட்சிகளில் விரியும் ஊஞ்சல் வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியைச் சொல்லும் துன்பியல் நாடகம். வரதராஜன் என்ற உயர் மத்திய தர மனிதனின் பிடிவாதமும் , காலத்தைப் புரிந்து கொள்ளாத தன்மையும் அவரது வீழ்ச்சியை உறுதி செய்தன என்பதை ஒரு நேர்கோட்டில் நகர்த்திப் போகிறது நாடகம்.சுஜாதாவின் அடையாளமான சுவாரசியப்படுத்துதல், நகைச்சுவைத் தொனியை வெளிப்படுத்துதல், எதிர்பாராத முடிவைத் தருதல் என்ற குணங்கள் இல்லாத முழு நீள நாடகம் ஊஞ்சல். சாதாரண மனிதன் சந்திக்கும் துன்பியல் முடிவைச் சொல்லும் யதார்த்த வகை நாடகமாக எழுதப்பட்டுள்ள ஊஞ்சல், ஆர்தர் மில்லரின் டெத் ஆப் எ சேல்ஸ்மேன் நாடகத்தைப் படித்ததின் தாக்கம் எனச் சுஜாதாவே சொல்லியுள்ளார்.
ஊஞ்சல் நாடகத்தைப் போலவே இன்னொரு யதார்த்த நாடகமாக அவரது அடிமைகள் நாடகத்தைச் சொல்ல வேண்டும். முதல் அங்கத்தில் மூன்று காட்சிகளும் இரண்டாவது அங்கத்தில் நான்கு காட்சிகளும் உள்ள ஈரங்க நாடகம் அது. தனது சொத்துக்களை அடைய வேண்டும் என்றால் தனது தம்பி பிள்ளைகளான சுந்தரம் , சாமிநாதன் -சாவித்திரி, சேகர், ரவி ஆகியோர் தனது ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் திருமணமாகாத- பிள்ளையில்லாத - ராமநாதனின் அதிகாரத்துவத்தை- ஆதிக்கத்தை வெளிச்சமிடும் நாடகம். சேகருடன் வரும் வசந்தியைத் தன் வசப்படுத்தித் தன் செக்ரட்டரியாக்கி, மனைவியாக்கிடத் திட்டமிடும் ராமநாதனின் சுயநலமும் அதிகாரமும் தெரிய வரும் போது, தனது மனைவி கோமதியின் மரணத்திற்குக் காரணமான பெரியப்பா ராமநாதனைக் கொல்கிறான் சுந்தரம். இப்போது ராமநாதனின் இடத்தில் சுந்தரம், கடைசித் தம்பி ரவி இப்போது வசந்தியுடன் சேகர் வந்தது போல பாமா என்ற பெண்ணுடன் வருகின்றான். நாடகம் முடியும் இடத்தில் திரும்பவும் தொடர்கிறது. பணம் வேண்டும்; சொத்து வேண்டும் என்ற நிலையில் மனிதர்கள் அடிமைகளாக இருக்கச் சம்மதிக்கும் நிலையைச் சொல்லும் நாடகம். கறாரான கட்டமைப்புக் கொண்டது. தந்தை ஆதிக்கம் அல்லது ஆணாதிக்கத்தின் இருப்பைச் சரியான தர்க்கங்களோடு முரண்படுத்துகிறது. நடப்பியலுக்கு மாறான திருப்பங்கள், ரகசியம்,அதன் விடுவிப்பு என எதுவும் இல்லாத அடிமைகள் நாடகமும் ஊஞ்சல் நாடகமும் அவரது நாடகப் பிரதிகளில் முக்கிய மானவை.
சுஜாதாவின் நாடகப் பிரதிகளும் தமிழ் அரங்கியல் போக்கும்.
சுஜாதாவின் முதல் நாடகம் எழுதப்பட்ட 1978, தமிழ்நாட்டில் அரங்கியல் பிரக்ஞை - குறிப்பாக நவீன நாடகம் என்னும் கருத்தியல் சார்ந்த தன்னுணர்வு எழத் தொடங்கிய ஆண்டு என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். காந்திகிராமத்தில் பேராசிரியர் இராமானுஜத்தின் முன் முயற்சியில் பன்ஸி கௌலை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு நடந்த 70 நாள் நாடகப் பட்டறையைத் தொடர்ந்தே சென்னையில் பரீக்ஷா, வீதி ஆகிய நவீன நாடகக் குழுக்களும், மதுரையில் நிஜநாடக இயக்கமும் தோற்றுவிக்கப் பட்டன. அந்த நாடகப் பட்டறை நடந்த ஆண்டு அதே 1978 தான் (சி.அண்ணாமலை- பதி., சே.இராமானுஜம் நாடகக் கட்டுரைகள், ப.8). இந்த நாடகக்குழுக்களும் சரி அதற்கு முன்பே தோன்றி (1977) சென்னையில் இயங்கத் தொடங்கிய கூத்துப் பட்டறை என்னும் நாடகக் குழுவும் சரி சுஜாதாவின் பிரதிகளில் ஒன்றைக் கூட மேடையேற்ற வில்லை. நானறிய அவரது சரளா என்ற நாடகம் மட்டுமே பூமிகா என்ற நவீன நாடகக் குழுவால் 1993 மேடை ஏற்றப்பட்டது. [கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா நாடகவிழாவில்(மதுரை) மேடை ஏறிய சரளாவை இயக்கியவர் பத்மாவதி. பரிக்ஷா நாடகக்குழுவின் துணை அமைப்பாக - பெண்ணிய நாடகங்களை மேடையேற்றும் நோக்கத் தோடு தொடங்கப்பட்டது பூமிகா] நிகழ்கால வாழ்வின் நெருக்கடிகளையும், அர்த்தமின்மை யையும் சொல்வதற்கு உரையாடல், காட்சி, அங்கம் என்ற மரபான கட்டமைப்போடு கூடிய நல்திறக் கட்டமைப்புத்தன்மை கொண்ட யதார்த்த நாடகங்கள் உதவாது என்பதை உணர்ந்து,அதைக் கைவிடும் மனநிலையோடு செயல்பட்டன நவீன நாடகக் குழுக்கள்.
வடிவ ரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் சோதனைகளை முன் வைத்துச் செயல்பட்ட அவை நேர்கோட்டுக் கதை சொல்லல் உத்தியோடு, நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என மனிதர்களை அடையாளப்படுத்தும் நாடகப் பிரதிகளை மேடையேற்றுவதைத் தவிர்த்து வந்தன. அப்படிக் கைவிட்டதற்குக் காரணம், எந்த மனிதனையும் நல்லவன் / கெட்டவன் என அடையாளப்படுத்திக் காட்டும் கறுப்பு X வெள்ளைப் பார்வைக்கு நமது சமகால வாழ்வில் இடமில்லை என்று கண்டு கொண்டதுதான். நல்லது எது? கெட்டது எது? என்ற கேள்விக்கே விடை தெரியாத நிலையில் மரபான முரண்களை அடையாளப்படுத்தும் நாடகப்பிரதிகளை மேடை ஏற்றும் வேலையைத் தவிர்த்துவிட்டு சிக்கலான வடிவமும், தீர்மானமான முடிவுகள் அற்ற உள்ளடக்கங்களைக் கொண்ட நாடகங்களையே நவீன நாடகக்குழுக்கள் தேடிக் கொண்டிருந்தன. அப்படிப் பட்ட பிரதி எதையும் எழுதாத நிலையில் சுஜாதாவின் பிரதிகள் மீது நவீன நாடகக் குழுக்களின் கவனம் விழவே இல்லை.
நவீன நாடகக் குழுக்கள் தன் நாடகத்தை மேடை ஏற்றும் முயற்சியை மேற்கொள்ளவில்லை என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. நவீன நாடகங்கள் என இங்கே மேடையேறுபவை வெறும் பம்மாத்துகளும் பாவனைகளும் தான் என்று பல தடவை பத்திரிகைப் பேட்டிகளிலும், தான் எழுதும் குறிப்புகளிலும் சொல்லியுள்ளார் சுஜாதா. அத்துடன் அவரது எழுதிய எல்லா நாடகங்களையும் தொடர்ச்சி யாக மேடை ஏற்ற ஒரு நாடகக்குழு தயாராக இருந்தது . அவரது பெரும்பாலான நாடகப்பிரதிகளைப் பூர்ணம் விசுவநாதன் இயக்கி நடித்துள்ளார். இன்னும் சொல்லப் போனால் அவர் நடித்து இயக்க வேண்டும் என்பதற்காகவே சுஜாதா நாடகங்களை எழுதினார் என்று கூடச் சொல்லலாம்.#
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் சென்னை சபாக்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நகைச்சுவைத் துணுக்குத் தோரண நாடகங்களுக்கிடையில் வலுவான கதை அம்சம் கொண்ட நாடகங்களை மேடை ஏற்றும் நோக்கம் கொண்டவர்களாக இருவர் இருந்தனர். ஒருவர் கோமல் சுவாமிநாதன்; இன்னொருவர் பூர்ணம் விசுவநாதன். கோமலின் மேடையேற்றங்கள் சமூக மாற்றத்தை முன்மொழியும் நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் மையப்படுத்திய நாடகங் களைப் பார்வையாளர்களுக்குத் தர முயற்சி செய்தன. அதற்காக அவரது நாடகப் பிரதிகள், குடிநீருக்காக அலையும் அத்திபட்டி (தண்ணீர் தண்ணீர்), மனிதர்களாக மதிக்கப்படாதவர்கள் வாழும் கொல்லிமலை ( ஓர் இந்தியக் கனவு), ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படும் நகரங்களின் இரவுகள் (நள்ளிரவில் பெற்றோம்) கூலிக்காக மட்டுமே வாழ்வதாக நம்பும் விவசாயக் கூலிகள் (செக்குமாடுகள்) முதலானவற்றைக் கவனித்துப் பேசின. அப்படிப்பட்ட நாடகங்களை கோமலே எழுதி மேடை ஏற்றினார்.
பூர்ணம் விசுவநாதன் தனது மேடை ஏற்றத்திற்காக அத்தகைய தேடல்கள் எதனையும் மேற்கொண்டவர் அல்ல. தனக்கு மேடை நடிப்பின் மேல் இருந்த தீராத மோகத்தின் காரணமாக தனது வயது, தனது உடல் மொழி, தனது கருத்தியல் ஆகியவற்றை வெளிப்படுத்த உதவும் நாடகப்பிரதிகளைக் கண்டுபிடித்து மேடை ஏற்றும் விருப்பம் கொண்டவராக இருந்தார். பூர்ணத்தின் மேடையேற்றங்கள் நிகழ்கால ஜனநாயக சமூகத்தில் ஏற்பட்ட நேர்மறை , எதிர்மறை மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் பாத்திரங்களை முன் வைக்க முயன்றன. அத்தகைய பாத்திரங்களைத் தேர்வு செய்யும் போது நகரம் சார்ந்த நடுத்தர வர்க்க , ஆதிக்க சாதி மனநிலை கொண்ட மனிதர்களின் குறியீடுகளையே அவை தேடிக் கொண்டிருந்தன.
சென்னை நகரத்தைத் தாண்டாத பின்னணியோடு அவரது நாடகங்கள் மைலாப்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர் போன்ற சென்னையின் நடுத்தர வர்க்க மனிதர்களின் -குறிப்பாக பிராமணர்களின் நிகழ்காலத் தவிப்பை இலை மறை காயாகச் சொல்லும் நோக்கத்தோடு இருந்தன. இந்த நோக்கம் பூர்ணத்திற்கு மட்டும் அல்ல; அக்கால கட்டத்தில் நாடகத்துறையில் செயல்பட்ட கே. பாலச்சந்தர், சோ.ராமசாமி போன்றவர்களிடம் வெவ்வேறு விதமாக வெளிப்பட்ட ஒன்றுதான். பூர்ணம் விசுவநாதனுக்கு இருந்த அந்தத் தவிப்பு அவரது நண்பரும், ரசிகருமான சுஜாதாவுக்கும் உண்டு. இந்தக் கருத்தியல் இணைப்புத் தான் பூர்ணம் விசுவநாதன் ஏற்று நடிப்பதற்கான - அவரையே பாத்திரமாக ஆக்கிக் காட்டும் மேடை நிகழ்வுக்கான பிரதிகளை எழுதித் தரக் காரணமாக இருந்தது எனலாம்.
முடிவுரை
குறைவான எண்ணிக்கையில் நடப்பியல் நாடகங்களையும்(2) மர்மங்களைக் களைத்துக் காட்டும் ரகசிய விடுவிப்பு மற்றும் துப்பறியும் பாணிகள் கொண்ட பிரதிகளை அதிகமாகவும் எழுதியுள்ள சுஜாதாவின் அரங்கியல் நோக்கம் வெளிப்படையானது. எளிமையான நேர்கோட்டுப் பாணியில் நாடகத்தின் நிகழ்வுகளை அடுக்கிப் போவது என்பதே அவரது பிரதிகளின் வடிவம். இந்த எளிய -நேர்கோட்டு வடிவம்- மையக் கதாபாத்திரத்தின் மேல் கவனம் குவிக்கும் தன்மை கொண்டது. தனது நாடகப்பிரதிகளின் வழியே மையக் கதாபாத்திரத்தின் இயலாமைக் குணத்தை அதிகம் காட்ட விரும்பிய சுஜாதா அதற்கேற்ற வடிவமாக இந்த நேர்கோட்டு வடிவத்தைக் கையாண்டது ஆச்சரியமான ஒன்றல்ல. அந்த மையப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகராகத் தனது நண்பர் பூர்ணம் விசுவநாதன் தான் இருக்கப் போகிறார் என்பதால், அந்தப் பிரக்ஞை யோடு தான் தனது நாடகப் பிரதிகளை உருவாக்கி யுள்ளார்.
அவரது ஏழு நீண்ட நாடகங்களின் மையப் பாத்திரங்களான நரேந்திரன் (நரேந்திரனின் விநோதவழக்கு ), ராமநாதன் (அடிமைகள்), வரதராஜன் (ஊஞ்சல்), அப்பா, ஜனார்த்தன் ( அன்புள்ள அப்பா) சீனிவாசன் ( கடவுள் வந்திருந்தார்) , சுப்பிரமணிய அய்யர் ( பாரதி இருந்த வீடு) நரசிம்மாச்சாரி (சிங்கமய்யங்கார் வீடு ) ஆகியவற்றை ஏற்று நடித்தவர் பூர்ணம் விசுவநாதன். இந்த ஏழு பாத்திரங்களில் அடிமைகள் நாடகத்தின் ராமநாதன் என்ற பாத்திரத்தைத் தவிர அனைத்துமே வெளிப்படையான பிராமணப் பாத்திரங்கள். அந்நாடகங்களின் முடிவில் அப்பாத்திரங்களின் மேல் - அவற்றின் இயலாமையின் மேல், நியாயங்களின் பக்கமும் தார்மீக மான மனித வாழ்வின் மீதும் அவை கொண்டிருக்கும் நம்பிக்கையின் மேல் அனுதாபம் ஏற்படுவதை எளிதில் உணர முடியும்.இதற்கு மாறாக அடிமைகள் நாடகத்தின் மையப் பாத்திரமான ராமநாதன் பாத்திரம் வயதுக்கு மீறிய குரூரமான பாலியல் எண்ணங்களும் ஆதிக்க மனநிலையும் கொண்டதாகப் படைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆதிக்க மனநிலை வெளிப்பாடு ராமநாதனிடமிருந்து அவனது வாரிசாக மாறும் சுந்தரத்தின் வழியாகத் தொடர்கிறது எனவும் காட்டப்படுகிறது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. இந்நாடகம் மட்டுமே மையக் கதாபாத்திரத்தின் மேல் விமரிசனத்தைக் கொண்டுள்ளது. மையக் கதாபாத்திரத்தின் மேல் விமரிசனத்தை வைக்கும் இந்த நாடகத்தில் மட்டுமே பிராமண அடையாளம் தவிர்க்கப்பட்டு உயர்குடி நிலப்பிரபுவின் - எஸ்டேட் உரிமையாளர் அடையாளம் கொண்டதாக மையப்பாத்திரம் காட்டப்படுகிறது. இப்படிக் காட்டுவதைத் தற்செயல் நிகழ்வு எனத் தள்ள முடியாது.
ஏழு நீண்ட நாடகங்களில் மட்டும் அல்ல ஓரங்க நாடகங்களிலும் கூட அனுதாபத்தைப் பெறும் பிராமணப் பாத்திரங்களைப் பூர்ணம் விசுவநாதன் நடிப்பதற்காக எழுதித் தந்துள்ளார். பிரயாணம் நாடகத்தில் வரும் கணபதி அய்யர், கிருஷ்ணா! கிருஷ்ணாவில் வரும் கிருஷ்ணாராவ், வந்தவனில் ஏமாறும் மணி அய்யர், வாசலில் வரும் மாமா, பெட்டி நாடகத்தின் சாமிநாத குருக்கள் முதலான பாத்திரங்கள் பூர்ணம் விசுவநாதனுக்காகவும், அவருடைய நாடகங்களைப் பார்க்க வரும் சென்னை நகரத்துச் சபா உறுப்பினர்களுக்கும் எழுதப்பட்ட நாடகங்களே.
பார்வையாளர்களிடம் அனுதாபத்தைப் பெறாமல் எதிர்மறைத் தளத்திற்குத் தள்ளப்படும் பாத்திரங்களாக மாறுதலில் மாற மறுக்கும் சுந்தரமூர்த்தி, ஒரு கொலையில் இடம் பெறும் அப்பா சீதாராம், மந்திரவாதியில் இடம் பெறும் மந்திரவாதி ஆகியோரைக் குறிப்பிடலாம். பூர்ணம் விசுவநாதனின் நாடகக்குழுவால் பல தடவை வெற்றிகரமாக மேடை ஏற்றப்பட்ட இந்நாடகங்கள் தவிர அதிகம் மேடை ஏறாத நாடகங்களாக கதை கேளு பெண்ணே, கதை கேளு! ,சேகர், இடையன் மகள்,சரளா ,மறுமணம்,ஆகாயம், முயல் முதலான நாடகங்கள் உள்ளன. இவையெல்லாம் பூரணத்திற்காக அல்லாமல், வேறு சிலரின் தேவைக்காக எழுதப்பட்டவை. முன்னர் குறிப்பிட்டதைத் தாண்டிச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல அவற்றில் எதுவும் இல்லை.
-------------------------------------------------------------------காந்திகிராமம், கிராமியப் பல்கலைக்கழகத்தமிழியல் துறையில் 2008 ஆகஸ்டு 20.21 தேதிகளில் நடத்தும் சுஜாதாவின் படைப்புகள் கருத்தரங்கில் வாசிப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை ======= ========= ======== ======== ====== ======= ======= ======= =========
சுஜாதாவின் நாடகங்கள் ,(முழுத் தொகுப்பு), முதல் பதிப்பு, 2005 , பக்கங்கள் - 832 /விலை.ரூ.500/- உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -600 018
=========================
# ஓரிரு எண்ணங்கள் -அம்பலம் இணையதளத்தில் சுஜாதா.
திரு. பூர்ணம் விசுவநாதனின் 80-வது பிறந்த நாள் விழா ஆராவாரமில்லாமல், போஸ்டரில்லாமல், பொய்யில்லாமல் இந்த வாரம் நடைபெற்றது. அவருடைய குடும்பத்தினரும் நாடக நண்பர்களும் கூடியிருக்க அவருடன் 30 ஆண்டுக் காலமாக தொடர்ந்த என் நட்பை நினைத்துப் பார்த்தேன். 1970-க்கு முன் மெரினாவின் மேடை நாடகத்துக்கு சென்றிருந்தேன். 'ஊர் வம்பு' அல்லது 'கால்கட்டு' என்று ஞாபகம். அதன் இறுதியில் மேடைக்குப் பின் சென்று அவரை சந்தித்து நான் நாடகம் எழுதிக் கொடுத்தால் எடுத்துக் கொள்வீர்களா என்று கேட்டேன். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். அன்று துவங்கிய எங்கள் கூட்டணியில் ஒருகொலை ஒரு பிரயாணம், அடிமைகள், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, கடவுள் வந்திருந்தார், அப்பா அன்புள்ள அப்பா, ஊஞ்சல், சிங்கமையங்கார் பேரன், பாரதி இருந்த வீடு போன்ற நாடகங்கள் நூற்றுக்கணக்கான முறைகள் போடப்பட்டன. குறிப்பாக 'கடவுள் வந்திருந்தார்' முன்னூறு முறை மேடையேறியது. முரண்பாடு, ஊஞ்சல் நாடகங்கள் தொலைக்காட்சியிலும் வந்தன. இப்போது கூட அவருக்காக ஒரு நாடகம் எழுதித் தந்தால் நடிக்கிறேன் என்கிறார் இந்த எண்பது வயது இளைஞர்.
உண்மைத்தமிழன் - வலைப்பூவில் பூர்ணம் விசுவநாதன் என்ற நடிகருக்காகவும் அவரது நியூ தியேட்டர்ஸ் என்ற நாடகக் குழுவினருக்காகவும் எழுதப்பட்டவை என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இதைச் சுஜாதாவும் சொல்லியுள்ளார்; பூர்ணமும் ஒப்புக்கொண்டுள்ளார்.
டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, கடவுள் வந்திருந்தார், அடிமைகள், ஊஞ்சல், அன்புள்ள அப்பா என்று பூரணம் நியூ தியேட்டர்ஸ் மேடையேற்றிய நாடகங்கள் ஒரு எழுச்சியை உண்டாக்கின. அவைகளில் விஞ்சி நிற்பது சுஜாதாவின் எழுத்தாற்றலா, பூர்ணத்தின் நடிப்பாற்றலா, என்று பட்டிமன்றமே நிகழ்த்தலாம். அதெப்படி சுஜாதா உங்களுக்கு எழுதிய நாடகங்கள் உங்களுக்காகவே எழுதப்பட்டது மாதிரி இருக்கிறது என்று கேட்ட போது; ‘‘ சுஜாதா பூர்ணம் நியூ தியேட்டர்ஸுக்காக நாடகம் எழுத யோசிக்கும் போதே என்னை மனதில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கலாம். அவருக்கும் அவர் அப்பாவுக்கும் உள்ள அன்யோன்யம் என் மூலமாக வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன்.
டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, கடவுள் வந்திருந்தார், அடிமைகள், ஊஞ்சல், அன்புள்ள அப்பா என்று பூரணம் நியூ தியேட்டர்ஸ் மேடையேற்றிய நாடகங்கள் ஒரு எழுச்சியை உண்டாக்கின. அவைகளில் விஞ்சி நிற்பது சுஜாதாவின் எழுத்தாற்றலா, பூர்ணத்தின் நடிப்பாற்றலா, என்று பட்டிமன்றமே நிகழ்த்தலாம். அதெப்படி சுஜாதா உங்களுக்கு எழுதிய நாடகங்கள் உங்களுக்காகவே எழுதப்பட்டது மாதிரி இருக்கிறது என்று கேட்ட போது; ‘‘ சுஜாதா பூர்ணம் நியூ தியேட்டர்ஸுக்காக நாடகம் எழுத யோசிக்கும் போதே என்னை மனதில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கலாம். அவருக்கும் அவர் அப்பாவுக்கும் உள்ள அன்யோன்யம் என் மூலமாக வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன்.
தவிர, அவரோடு கலந்து பேசி சில மாற்றங்களைக் கொண்டு வருவோம். அது இன்னும் மெருகு சேர்க்கும். அந்த மாதிரி பாரதி இருந்த வீடு என்ற நாடகத்தில் என் பேத்தி, ‘நீங்க பாட்டியை பெண் பார்க்க போன போது என்ன பேசினீர்கள்’ என்று கேட்பாள். அதற்கு நான் சொல்லும் டயலாக் ஸ்கிரிப்டில் உள்ளதை விட கொஞ்சம் கூடுதலாகவும், ஸ்வாரஸ்யமாகவும் இருக்கும். அந்த சீன் வரும்போது சுஜாதா சீட்டின் நுனிக்கே வந்து மிக ஆர்வமாக கவனித்து ரசித்திருக்கிறார்’’ என்றார் பூர்ணம்.
எழுதப்பட்ட ஆண்டு வரிசைப்படி சுஜாதாவின் நாடகங்கள்
1. 1978 - முதல் நாடகம் (ஒரு கொலை) /44 பக்கங்கள் கொண்ட நாடகம்.
[ ஓரங்க நாடகம்/ காந்தாமணியின் வீடு] ஒரு நாடகக்குழு ஆரம்பிக்கப் பணம் கேட்டுத் தர மறுத்த அப்பாவைக் கதாபாத்திரமாக்கி மகன் அரங்கேற்றும் நாடகம் இது.படிப்பு சரியில்லை என்றால் அவனிடம் எந்தத்திறமையும் இருக்காது என நம்பும் பெற்றோர்களின் மனநிலைக்குக் குட்டு வைக்கும் விதமாக இந்நாடகத்தை எழுதியுள்ளார் சுஜாதா. மனைவியை இழந்த தன் தந்தைக்கு இள வயதுப் பெண்களிடம் அசடு வழியும் குணம் இருக்கிறது என்பதை கணித்து அவரோடு வேலை பார்க்கும் காந்தாமணியையும் நடிக்க வைத்து நாடகத்தை அரங்கேற்றுகிறான் இளைஞன். டாக்ஸி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தின் போது காந்தாமணியை அலுவலகத்திலிருந்து வீட்டில் இறக்கி விடுவதாகச் சொல்லி உடன் வந்த சீதாராம், குடி போதையில் வந்த அவளது அண்ணன் ராஜூவைக் கொலை செய்ததாக நம்ப வைத்துப் போடும் நாடகத்தை ஸ்ரீகாந்த் வந்து உண்மையைச் சொல்லி கொலையல்ல; எல்லாம் நாடகத்தின் காட்சிகள் என முடித்து வைக்கிறான். சுவாரசியத்தைத் தக்க வைக்கும் திருப்பங்கள் கொண்ட நாடகம்; மேடை ஏற்றத்தில் இந்த நாடகம் ரசிக்கும்படியாக அமையக்கூடியதுஸ்ரீகாந்த - 18 வயது / சீதாராம் - 55 வயது ; ஸ்ரீகாந்தின் அப்பா / காந்தாமணி - சீதாராமின் அலுவலகத்தின் வேலை பார்க்கும் பெண் ; வயது 20 / ராஜூ - காந்தாமணியின் அண்ணனாக நடிப்பவன்; வயது 24 / சர்க்கிள் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் , வசந்த் - வக்கீல் கணேசின் உதவியாளன்; வயது 30
2. 1978 - பிராயணம்/ 39 பக்கங்கள் கொண்ட நாடகம்/
[ ஓரங்க நாடகம்/ ரயில் பெட்டி]சென்னையிலிருந்து சேலம்,ஈரோடு, கோயம்புத்தூர் வழியாகப் பெங்களூர் செல்லும் ரயில் பயணத்தில் ஒரு பெட்டியில் நடக்கும் காட்சிகளே நாடகம். பாலா என்ற பிக்பாட் திருடன், பயணத்தின் முடிவில் திருட்டைக் கைவிட்டு நல்லவனாக மாறுவதே நிகழ்வுகள்.பாலா -பெர்னார்டு என்ற இரண்டு திருடர்களின் திருட்டுக் காட்சியுடன் தொடங்கும் நாடகம் பாலாவின் மாமன் மகள் ராணியைக் கல்யாணம் செய்யத் தேவையான முந்நூறு ரூபாயைப் பிக்பாக்கெட் அடிக்க முயன்று 3ரூபாய் 15 பைசா இருந்த பர்சைத் திருடத் தவித்துப் பயணத்தின் போது பார்த்துக் கொள்ளலாம் எனத் தொடங்குகிறான் பாலா.முன்பதிவு இல்லாத அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் முதலில் முருகபக்தரான ஒரு பெரியவர், அப்புறம் கணபதி அய்யர், அவரது மனைவி கல்யாணி, மகன் என மூவரும் ஏறி அமர்கிறார்கள். அடுத்து அம்மா இல்லாத - சித்தி கொடுமையைத் தவிர்க்கப் பெங்களூரில் படிக்கும் லதா ஏறுகிறாள், அடுத்ததாக அவளைக் காதலிப்பதாகச் சொல்லி அவளையே பின் தொடரும் இளைஞன் என ஒவ்வொருவராக ஏறப் பெட்டி நிரம்புகிறது. மசால் வடை, பல்பொடி, லாட்டரி டிக்கெட் விற்பவர்கள் வந்து போகிறார்கள்.வண்டி கிளம்ப இருக்கும் நேரத்தில் கணபதி அய்யர் பணம் வைத்திருக்கும் கறுப்புப் பையை வைத்து விட்டு வந்ததை நினைவு கூர்ந்து ஓடிப் போய் எடுத்து வருகிறார்.லதாவோடு வம்பு பண்ணும் இளைஞனைக் கண்டித்துப் பின்னர் சமாதானமாகி அவனது பையிலிருந்து பயண டிக்கெட்டை எடுத்து விட்டுத் தன்னிடம் இருக்கும் பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்து விடுகிறான் பாலா. டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிக் கொண்டு அடுத்த ஸ்டேஷன் இறக்கப் படுகிறான் இளைஞன்.பெரியவர் எல்லாம் முருகன் செயல் என்கிறார். உழைத்துச் சம்பாதித்த கணபதி அய்யரின் பணம் பத்திரமாக அவரிடமே வந்ததும், லதாவிடம் வம்பு செய்த இளைஞன் தண்டனை பெறுவதும் முருகனின் இருப்பை உறுதி செய்கிறது என்ற பெரியவரிடம் வாதாடாமல் ஒதுங்கி விடுகிறான் பாலா. இரவில் எல்லாரும் தூங்கிய பின் கணபதி அய்யரின் கறுப்புப் பையிலிருந்து பணத்தைத் திருடிய பாலாவின் அம்மா ஹார்ட் அட்டாக்கில் ஆஸ்பத்திரியில் இருப்பதாக அவனது நண்பன் முத்து சொல்ல, அதற்கான பணத்தைத் தான் தருவதாகச் சொல்லிக் கணபதி அய்யர் பையைத் திறக்கிறார். பாலா தொடர்ந்து மறுக்கின்றான். கடனாகத் தான் தருவதாகச் சொல்ல திரும்பவும் மறுக்கின்றான். எல்லோரும் வலியுறுத்துகின்றனர். கணபதி அய்யரின் பையில் பணம் காணாமல் போனதில் அதிர்ச்சி அடைகிறார். பாலா தேடிப் பார்த்துக் கீழே படுக்கைக்கு அடியில் கிடந்ததாக எடுத்துத் தருகிறான்.கணபதி அய்யர் தந்த பணத்தை மறுத்துத் தானே புரட்டி விடுவேன் எனக் கிளம்புகிறான். இந்த மாதிரி மனிதர்கள் நம் நாட்டில் நிறையப் பேர் வேணும் எனப் பாலாவைப் பாராட்டுகின்றார்கள் மற்றவர்கள்.
3. 1979 - அடிமைகள்/ 68 பக்கங்கள் கொண்ட ஈரங்க நாடகம்.
[ அங்கம் I/ கா.3// அங்.II/4]முதல் அங்கத்தில் மூன்று காட்சிகளும் இரண்டாவது அங்கத்தில் நான்கு காட்சிகளும் உள்ளன. தனது சொத்துக்காகவே தனது தம்பி பிள்ளைகளான சுந்தரம் , சாமிநாதன் -சாவித்திரி, சேகர், ரவி ஆகியோர் தனது ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் திருமணமாகாத பிள்ளையில்லாத ராமநாதனின் அதிகாரத்துவத்தை - ஆதிக்கத்தை வெளிச்சமிடும் நாடகம். சேகருடன் வரும் வசந்தியைத் தன் வசப்படுத்தித் தன் செக்ரட்டரியாக்கி, மனைவியாக்கிடத் திட்டமிடும் ராமநாதனின் சுயநலமும் அதிகாரமும் தெரிய வரும் போது, தனது மனைவி கோமதியின் மரணத்திற்குக் காரணமான பெரியப்பா ராமநாதனைக் கொல்கிறான் சுந்தரம். இப்போது ராமநாதனின் இடத்தில் சுந்தரம், கடைசித் தம்பி ரவி இப்போது வசந்தியுடன் சேகர் வந்தது போல பாமா என்ற பெண்ணுடன் வருகின்றான். நாடகம் முடியும் இடத்தில் திரும்பவும் தொடர்கிறது.பணம் வேண்டும் ; சொத்து வேண்டும் என்ற நிலையில் மனிதர்கள் அடிமைகளாக இருக்கச் சம்மதிக்கும் நிலையைச் சொல்லும் கறாரான கட்டமைப்புக் கொண்ட நாடகம். தந்தை ஆதிக்கம் அல்லது ஆணாதிக்கத்தின் இருப்பைச் சரியான தர்க்கங்களோடு முரண்படுத்துகிறது. பாத்திரங்கள் ; ராமநாதன், ராமநாதனின் தம்பி பிள்ளைகள், சுந்தரம் ( சுந்தரத்தின் மனைவி கோமதி இறந்து விட்டாள்/ சாவுக்குக் காரணம் பெரியப்பா என்பது நாடக ரகசியம், சாமிநாதன் -சாவித்திரி எஸ்டேட்டின் வேலைகளைக் கவனித்துக் கொள்பவன், சேகர், படித்து முடித்து விட்டு தனது தோழி வசந்தியுடன் வந்து நாடகத்தைத் தொடங்குபவன், வசந்தி பின்னர், ராமநாதனை வசப்படுத்தி அவளது அம்மா ராஜத்துடன் சேர்ந்து ராமநாதனை மணமுடித்து சொத்தை அபகரிக்கப் பார்ப்பவள். நான்காவது தம்பி ரவி கோயம்புத்தூரில் டாக்டருக்குப் படிப்பவன். எஸ்டேட் மருத்துவர்; பக்கத்து எஸ்டே முதலாளி, அவளது ஊமை மகள் தோன்றாக் கதாப்பாத்திரங்கள்.
4. 1979 - கடவுள் வந்திருந்தார்/79 பக்கங்கள் கொண்ட நாடகம்
[ 8 காட்சிகள் நீதிமன்றம், கணேஷின் அலுவலகம் என இரண்டு இடங்களில் நேர் நிகழ்வாகவும் ஆஸ்பத்திரிக் காட்சிகள் பின்னோக்கிய காட்சிகளாகவும் உள்ளன.]பாத்திரங்கள்சீனிவாசன்- ஓய்வு பெற்ற தனியார் கம்பெனிப் பணியாளர் / லட்சுமி - சீனிவாசனின் மனைவி / வசுமதி - மகள் / சுந்தர் - வீட்டு மாடியில் குடியிருக்கும் இளைஞன், வசுவைத் திருமணம் முடிக்க விரும்புபவன்/ ஜோ - காலத்தைத் தாண்டியவன் ; வேற்றுக்கிரக வாசி/ ராமமூர்த்தி, அவனது அப்பா, அம்பி - வசுமதியைப் பெண் கேட்டு வரும் குடும்பம்.சேஷகிரிராவ் - சீனிவாசனின் பக்கத்து வீட்டுக் காரர் / பூசாரி - சீனிவாசனுக்குப் பேய் விரட்டுபவர்டாக்டர் - பைத்தியத்துக்கு மருத்துவம் பார்ப்பவர்/ இன்ஸ்பெக்டர், காவலர் - சேஷகிரிராவின் புகாரின் பேரில் விசாரணைக்கு வருபவர்கள் தொடர்ந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவரின் ஓய்வுக்கால மனநிலையைப் பேசுவதாகத் தொடங்கும் நாடகம் அறிவியல் புனைவு அல்லது எதிர்காலவியலின் சாத்தியங்கள் பற்றியதாக நகர்கிறது. பைத்திய நிலை அல்லது கடவுள் நிலை என்ற விவாதமும் எழுப்பப்பட்டு, ஒருவன் மனிதனாக இருப்பதில் தான் வாழ்க்கையின் இருப்பு உள்ளது என்பதாக நாடகம் முடிகிறது.
[ 8 காட்சிகள் நீதிமன்றம், கணேஷின் அலுவலகம் என இரண்டு இடங்களில் நேர் நிகழ்வாகவும் ஆஸ்பத்திரிக் காட்சிகள் பின்னோக்கிய காட்சிகளாகவும் உள்ளன.]பாத்திரங்கள்சீனிவாசன்- ஓய்வு பெற்ற தனியார் கம்பெனிப் பணியாளர் / லட்சுமி - சீனிவாசனின் மனைவி / வசுமதி - மகள் / சுந்தர் - வீட்டு மாடியில் குடியிருக்கும் இளைஞன், வசுவைத் திருமணம் முடிக்க விரும்புபவன்/ ஜோ - காலத்தைத் தாண்டியவன் ; வேற்றுக்கிரக வாசி/ ராமமூர்த்தி, அவனது அப்பா, அம்பி - வசுமதியைப் பெண் கேட்டு வரும் குடும்பம்.சேஷகிரிராவ் - சீனிவாசனின் பக்கத்து வீட்டுக் காரர் / பூசாரி - சீனிவாசனுக்குப் பேய் விரட்டுபவர்டாக்டர் - பைத்தியத்துக்கு மருத்துவம் பார்ப்பவர்/ இன்ஸ்பெக்டர், காவலர் - சேஷகிரிராவின் புகாரின் பேரில் விசாரணைக்கு வருபவர்கள் தொடர்ந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவரின் ஓய்வுக்கால மனநிலையைப் பேசுவதாகத் தொடங்கும் நாடகம் அறிவியல் புனைவு அல்லது எதிர்காலவியலின் சாத்தியங்கள் பற்றியதாக நகர்கிறது. பைத்திய நிலை அல்லது கடவுள் நிலை என்ற விவாதமும் எழுப்பப்பட்டு, ஒருவன் மனிதனாக இருப்பதில் தான் வாழ்க்கையின் இருப்பு உள்ளது என்பதாக நாடகம் முடிகிறது.
5. 1982 - டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு/ 93பக்கங்கள் கொண்ட நாடகம்/
[ 3 காட்சிகளாக உள்ளது. இந்நாடகத்தை மூன்று அங்கங்களாகவும் உள்ளே இருக்கும் காட்சி மாற்றங்களைக் காட்சிகளாகவும் அமைக்கலாம்.சுஜாதா எழுதிய நாடகங்களில் சுவாரசியம் கூடியதும், பெரியதுமான நாடகம் நரேந்திரனின் விநோத வழக்கு தான் .சுஜாதாவின் பொது அடையாளமான துப்பறியும் தொடர் கதை ஆசிரியர் என்ற அடையாளத்தை வெளிப்படையாகக் கொண்ட ஒரே நாடகம் இது. அவரது கற்பனைக் கதாபாத்திரங் களான கணேஷ், வசந்த் என்ற பாத்திரங்களைப் பயன்படுத்தியுள்ள இந்த நாடகம் இந்திய/ தமிழ்ச் சமூகத்தின் புரையோடிப் போன ஒன்றைப் பற்றிய அரசியல் விமரிசனம் நாடகமும் கூட. லஞ்சம், அரசதிகாரம், அதனைத் தீர்மானிக்கும் தேர்தல் , தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சிகளின் தன்னகங்கார நிலை, தனிமனித நேர்மைகளையும், பொது நலனையும் குழுதோண்டிப் புதைப்பதில் இந்திய சமூகத்தைக் காப்பதாகப் பாவனை பண்ணும் அமைப்புகளின் இயலாமை ஆகியவற்றை அம்பலப்படுத்தும் நாடகம் இது.பொறுக்கிகளின் நியாயத்தையே அரசியல் நியாயமாகக் கொண்டிருக்கிறது நமது அமைப்பு என்பதை விவாதிக்கும் இந்த நாடகம் நீதியும் தீர்ப்புகளும் கூட முன்பே திட்டமிடப்பட்ட நாடக ஒத்திகைகளாகவே இருக்கின்றன என்பதைச் சொல்கின்றது நரேந்திரனின் விநோத வழக்கு.பாத்திரங்கள் டாக்டர் நரேந்திரன் - சரவணன் என்ற பெரியவரை மருத்துவத்தை நிறுத்துக் கொலை, ரவி என்ற சிறுவனை புதிய மருந்தைப் பரிசோதனை செய்ததன் மூலம் கொன்ற குற்றம், மஞ்சுளா என்ற பெண்ணுக்கு விதிகளை மீறிக் கருக்கலைப்புக்கு ஏற்பாடு செய்தது என்ற குற்றச்சாட்டுகள் மூலம் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்நீதிபதி - சட்டம் தரும் அனைத்து உரிமைகளையும் அனைவரும் அடையும்படி செய்ய நினைப்பவர்.நாகராஜன் - அரசுத்தரப்பு வக்கீல் / கணேஷ் - நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட வக்கீல்வசந்த் - கணேஷின் உதவியாளன்/சரவணனின் மனைவி- படுக்கையில் கோமாவில் இருக்கும் பெரியவர்; தனது உயிலை வளர்ப்பு மகளின் பெயரில் எழுதி வைத்தவர். அவரது கையெழுத்துக்காக அவர் பிழைக்க வேண்டும் என குடும்பத்தார் விரும்புகின்றனர். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விடுதலை தருவதற்காக அவருக்கு மருத்துவ சேவையை நிறுத்தியதாக நரேந்திரன் நம்புகிறார்.மது - சரவணனின் மகன் / சாரதா- நரேந்திரனுடன் வேலை பார்க்கும் டாக்டர், மஞ்சுளாவிற்கு / நர்ஸ்-அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பவள் / மஞ்சுளா - நரேந்திரனின் கிளார்க்; கேங் ரேப் செய்யப்பட்டவள் ; மருத்துவ விதிகளை மீறி அவளது கர்ப்பம் கலைக்கப்பட்டது. ஏற்பாடு செய்தவர் நரேந்திரன். நரேந்திரனே கெடுத்ததாகச் சாட்சி சொல்கிறாள்ரவி - அதிபுத்திசாலிச் சிறுவன் / அவனது தந்தை - பணத்தைப் பெற்றுக் கொண்டு மாற்றிச் சொன்னவர்; அவனது தாயும் உண்டு / இளவழகன்- அரசியல்வாதியும் அடியாளுமானவன்; கோர்ட் நடவடிக்கைகள் அனைத்தையும் எச். எம். மிற்காக முடிவு செய்பவன் / எச். எம். - அதிகாரத்தில் இருக்கும் அரசியல் வாதி. பொய்யாக ஆஸ்பத்திரியில் படுத்த போது டாக்டர் நரேந்திரனால் வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்.
6. 1983 - கிருஷ்ணா! கிருஷ்ணா /39 பக்கங்கள் கொண்ட நாடகம்.
நான்கு பகுதிகள் உள்ளன.பாத்திரங்கள்; பாகவதர்-சிஷ்யன்./கிருஷ்ணாராவ், ஃபோர்மேன் முத்து, முதலாளி பிரகாஷ், மதனகோபால், ரத்தினம்யூனியன் தலைவர் ராஜசேகரன்,உதவியாளர் யந்திர நிபுணர், கிருஷ்ணாராவின் மனைவி, முதல் மகள்துளசி,இரண்டாவது மகள் மஞ்சுளா,மூன்றாவது காவேரி, மகன் ரகோத்தமன்.ஹரிகதையின் எடுத்துரைப்பில் தொடங்கி கிருஷ்ணன் கதைக்குப் பதிலாக கிருஷ்ணாராவின் கதைக்கு நகர்கிறது நாடகம்.கிருஷ்ணன் பொம்மையைக் கைவினைப் பொருளாகச் செய்யும் கிருஷ்ணாராவின் வேலை பறிபோக எந்திரமயமும் ஏற்றுமதி ஆர்டரும் காரணமாகிறது. அதன் காரணமாக யூனியன் தலையீடு, வேலைக்குச் சேர்ந்த கிருஷ்ணாராவ் எந்திரத்தின் பகுதியாக ஆகி விடுவதைச் சொல்கிறது நாடகம். அனைத்தையும் எந்திரமயமாக்குவதை எதிர்க்கும் பாவனை கொண்ட இந்த நாடகத்தில், தொழிற்சங்க ஆட்களை- பெண்கள் மீது மோகம் கொண்டவர்களாகவும், பிடிவாதக் காரர் களாகவும் , வளர்ச்சியின் போக்கைப் புரிந்து கொள்ளாத நபர்களாகக் காட்டுவதன் மூலம் அதன் எதிர்ப்பாளராகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார். தெளிவற்ற முன் வைப்பைக் கொண்டுள்ள நாடகம்.
7. 1983 - வந்தவன் /7 பக்கங்கள் கொண்ட ஓரங்க நாடகம்
சிற்றுண்டிச் சாலை ] நாணயமாச் சம்பாதிக்க முயன்று தோற்ற படித்த இளைஞனின் விரக்தியும், அப்பாவியைத் தான் தன்னால் ஏமாற்ற முடியும் என்ற நிலையில் மணி அய்யர்- லட்சுமி தம்பதியின் ஒரு நாள் வருமானத்தை மிரட்டி வாங்கிப் போகும் இளைஞனின் நியாயத்தைச் சொல்லும் நாடகம். பாத்திரங்கள் ; வந்தவன் , மணி அய்யர், மணி அய்யரின் மனைவி லட்சுமி
8. 1983 - மாறுதல் 11 பக்கங்கள் கொண்ட நாடகம்
[ ஓரங்க நாடகம் / நாடக அரங்கம்] பாத்திரங்கள் - சுந்தரமூர்த்தி வயது 60க்கும் மேல், சபாவின் ஆயுள் உறுப்பினர், நாடகாசிரியர் விசுவநாதன், இளைஞன், அவனது தங்கை ராதா, நாடக நடிகை; சபா செக்டரி ராமன். ஆயுள் உறுப்பினரான சுந்தரமூர்த்தி தான் வழக்கமாக உட்காரும் ஏழாம் எண்ணை விட்டுக் கொடுக்க மறுக்கும் மனநிலையைக் கொண்டு மாறுதலை விரும்பாத உயர் நடுத்தர வர்க்கத்து முந்தைய தலைமுறையைக் கேள்விக்குள்ளாக்கும் நாடகம்.
9. 1983 -வாசல் /25 பக்கங்கள் கொண்ட ஓரங்க நாடகம்
மூன்று பகுதிகளைக் கொண்ட நாடகம் பாத்திரங்கள்;ஸ்மார்த்த பிராமணக் குடும்பத்து அப்பா(50) அம்மா(45) பிள்ளைகள் பவானி (18) ரவி (20) நாணா(12) கிட்டு (7) மாமா (60) வேலைக்காரர் தங்கசாமி (45), ஆட்டோ டிரைவர் , எதிர் வீட்டு முதலியார் பையன் செல்வராஜ் 23. தனது செயல்களால் வாழ்க்கையைச் சுவாரசியமாக்கும் மாமாவின் வருகையைச் சொல்லும் வாசல் . ஈயைச் சாகடித்துப் பிழைக்கு வைத்து நாணாவைக் குஷிப்படுத்தும் மாமா, சுவர்க் கடிகாரத்தின் ஸ்பிரிங்கை வெளியில் வைத்துவிட்டு, மாட்டி ஓடச் செய்யும் மாமா, பவானியின் எதிர் வீட்டுக் காதலுக்கு வழி சொல்லும் மாமா, எல்லாச் செயல்பாடுகளின் மூலமும் அப்பாவிற்கு எரிச்சல் மூட்டும் மாமாவின் ஒவ்வொரு வருகையின் போதும் அந்த வீட்டுக் குழந்தைகளுக்கும் மனிதர்களுக்கும் நினைவில் இருக்கும்படி செய்து விட்டுச் செல்லும் மாமா இனி வரமாட்டார் என்பதாக முடியும் நாடகம். சிறுகதைத் தன்மை அதிகம்.
10. 1983 - மந்திரவாதி / 27 பக்கங்கள் கொண்ட ஓரங்க நாடகம்
நாடகத்தில் பிரிப்பே இல்லை. ஆனால் பிரிக்கலாம்.‘ அது அப்படி; இது இப்படி ‘ என்ற வாசகத்தைப் பேசும் மந்திரவாதி புரொபசர் ராஜாவும் அவளது தங்கை மகள் மரகதமும் ( மேஜிக் ஷோவின் போது ரோஸி) வெவ்வேறு சூழலில் வேறு வேறு மனிதர்களாக இல்லை; எல்லா மனிதர்களையும் போல ஆதிக்கமனநிலையும் அடிமை மனநிலையும் கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற விவாதத்தை முன்னெடுத்துள்ள நாடகம். மைய விவாதமும் எழுதப்பட்டுள்ள முறையும் ஒரு சிறுகதையைப் போலவே உள்ளது. மரகதத்தை விரும்பும் இளைஞன் சந்திரசூடனின் விருப்பத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் மந்திரவாதி ராஜாவின் அந்தரங்க ஆசையின் குரூரத்தை உடைத்துக் காட்டுவதன் மூலம் மந்திரவாதம் என்பது தந்திரங்களின் தொகுதி எனக் காட்டியுள்ளார் சுஜாதா. இம்மூன்று முக்கியப் பாத்திரங்களோடு சூழலை உருவாக்கத் தேவையான கூட்டத்தினரும் பாத்திரமாக உள்ளனர்.
11. அன்புள்ள அப்பா /51 பக்கங்கள் கொண்ட நாடகம்.
[இரண்டு பாகங்களில் முதல் பாகத்தில் 4 காட்சிகள் உள்ளன. இரண்டாம் பாகத்தில் காட்சிகளே இல்லை ]இரண்டு பாகங்கள் கொண்ட நாடகங்கள். முதிய அப்பாவைத் தனிமையில் விட்டு விட்டு வெளிநாடு செல்லத் தயாராகும் மகன் - மருமகள் ஆகியோரின் நியாயங்கள். தனிமையில் இருக்க முடியாத முதுமையின் நியாயம் என்பது முதல் நாடகம். புருசனின் விருப்பங்கள் வேறாக இருக்க,மாமிசம் சாப்பிட்டு,சிகரெட் பிடிச்சு, ஆபிசில் ஒரு.. இதற்கு மாற்றாகத் தனது விருப்பமான நடனம், அரங்கேற்றம்,லேடிஸ் கிளப் எனத் திரியும் உஷா. இதையெல்லாம் சகஜமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் அப்பா.மகனும் மருமகளும் அப்பாவிற்குத் தரும் இரண்டு சாய்ஸ்- ஒன்று ஒரு வேலைக்காரனையோ வேலைக்காரியையோ ஏற்பாடு பண்ணிக்கிட்டு வீட்டிலேயே இருக்கிறது. இரண்டாவது அட்சயா மாதிரி எதாவதொரு ஹோம்ல இருக்கிறது. அவருடைய விருப்பம் மூணாவது ; அதாவது அவர்கள் கனடாவுக்குப் போகாம இருக்கிறது. அவரது விருப்பம் மறுக்கப்பட்ட சூழலில் அவரது உடனடி மரணம் தரும் அதிர்ச்சி துடைக்கப்பட்டு அயல்நாட்டுப் பயண ஏற்பாடுகளில் தீவிரம். தாத்தா இல்லாத வெறுமையை உணரும் பேத்தி தன் தந்தையின் கன்னத்தில் அறையும் அறையுடன் முடியும் முதல் பாகம். இந்த நாடகத்தின் பாத்திரங்கள்; அப்பா, அவரது மகன் ரவி,மருமகள் உஷா, ஆறு வயதுப் பேத்தி ப்ரியா.இரண்டாவது பாகம் தவறாகப் புரிந்து கொண்ட கணவன் மனைவி இருவரையும் புரிய வைக்கும் பெரியவர் அல்லது அப்பாவைக்காட்டும் பாகம். இது முதல்பாகத்தின் தொடர்ச்சி என்பது அந்த அப்பா பாத்திரத்தை ஒருவரே நடிப்பதன் மூலம் மட்டுமே உணர்த்த முடியும். வேறொருவரு நடிக்கும் நிலையில் இரு வேறு நாட்கங்கள் தான். இதன் பாத்திரங்கள்; பெரியவர், ஜனார்த்தனன், பரிமளம், பரிமளத்தை மணக்க இருந்த திருமணம் முடிக்காமல் இறந்து போன சேகர்.பணக்காரத்தனத்தை வெறுத்து ஏழை ஜனார்த்தனத்தைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட பரிமளம். சேகரின் பணக்காரத்தனத்தின் மீது பரிமளத்திற்கு இன்னும் மோகம் இருக்கிறது எனத் தவறாகப் புரிந்து கொண்டு பணத்தைத் தேடிய ஜனார்த்தனத்தின் இப்போதைய நிலை மீது பரிமளத்தின் வெறுப்பு. ஒருவர் மாற்றி ஒருவர் வாழ்க்கையையின் சந்தேகப் பக்கங்களை வளர்த்து அமைதியை கெடுத்துக் கொள்கின்றனர்.நடுக்காட்டில் இருக்கும் அந்தக் கடையில் எல்லாம் கிடைக்கும் என்ற போர்டிற்கேற்ப மனத்தின் கசடுகள் எல்லாம் கழுவப்பட்டுச் சுத்தமான பின்பு பெட்ரோலை வாங்கிக் கொண்டு அன்பான அப்பாவைத் தேடியவர்களாகச் செல்லும் ஜனார்த்தனன் - பரிமளம் தம்பதிகளின் புதிய நிலைப்பாட்டுடன் நாடகம் நிறைவுபெறுகிறது.
12. 1988 - ஊஞ்சல் /84 பக்கங்கள் கொண்ட முழு நீள நாடகம்.
அங்கம் - காட்சி என்ற நாடகத்தின் உள்கட்டமைப்பு சார்ந்து பிரித்துக் காட்டாமல் ஒன்று முதல் 10 காட்சிகளில் விரியும் நாடகம். ஊஞ்சல் வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியைச் சொல்லும் துன்பியல் நாடகம். வரதராஜன் என்ற உயர் மத்தியதர மனிதனின் பிடிவாதமும் , காலத்தைப் புரிந்து கொள்ளாத தன்மையும் அவரது வீழ்ச்சியை உறுதி செய்தன என்பதை ஒரு நேர்கோட்டில் நகர்த்திப் போகிறது நாடகம்.பாத்திரங்கள் வரதராஜன் - 58 வயதிருக்கும் -மனைவி உண்டு /கல்யாணி - அவரது மகள்/ கோபாலன் - வரதராஜனின் நண்பர்.கிரிதரன் - கல்யாணியின் தோழன், மணம் முடிக்க விரும்புபவன்.மதிவதனம் - வரதராஜனிடம் தொழில் கற்றுக் கொண்டு இப்போது தொழில் அதிபராக இருப்பவர்¢. அவருக்கு வேலை தருபவன், பின்னர் அவரது ஊஞ்சல் கட்டிய வீட்டை விலை கொடுத்து வாங்குபவர்.நீனா- மதியின் அலுவலகச் சிப்பந்தி /ரமேஷ்- மதியின் அலுவலகச் சிப்பந்தி /டாக்டர் - வரதராஜனின் நோய்க்கு மருத்துவம் பார்ப்பவர் / டிரைவர்,பீட்டர் - மதியின் டிராவல்ஸில் வேலை பார்ப்பவர்கள்,
13. 1993 - கதை கேளு பெண்ணே, கதை கேளு! /23 பக்கங்கள் கொண்ட ஓரங்க நாடகம்.
Pitching to the Star என்ற சிறு நாடகம் 1992-93 இல் எழுதப்பட்ட நாடகங்களுள் சிறந்ததாகத் தேர்வு செய்யப் பட்ட நாடகம். அதன் ஆசிரியர் டொனால்டு பார்குவில். இந்த நாடகத்தை அப்படியே தமிழ் சினிமாவின் வெளியான கோடம்பாக்கத்தில் நடப்பதாக மாற்றியுள்ளார் சுஜாதா. பாத்திரங்கள் இளமாறன் (32) - திரை எழுத்தாளர் / தர்மராஜன் (45)- படத்தயாரிப்பாளர்/ தேவதேவி (40)-பிரபல நடிகைலலிதா (25) - தர்மராஜனின் காரியதரிசி /ரீடாவின் (30) - குரல் / டிக்னு(10) - தர்மராஜன் மகள் குரல். காலம், களன், பாத்திரங்கள் என்பதான இலக்கியத்தின் -கதையின் நுட்பங்கள் புரிந்த இலக்கியவாதிக்குத் தமிழ் சினிமாவில் இடம் இல்லை என்பதைக் காட்டும் நாடகம். தமிழ் சினிமாவில் நடிகைக்கு அல்லது நடிகனுக்கு ஏற்றாற்போல, கதையும் காட்சியும் உருவாக்கத் தெரிந்தவர்கள் வெற்றி பெற்றவர்களாக வலம் வருகிறார்கள் என்பதைச் சொன்னாலும், மூர்க்கமான பிடிவாதமும் தார்மீகக் கோபமும் கொண்ட எழுத்தாளனை விட்டு விட முடியாத நிலையும் அந்தப் பட உலகத்திற்குத் தேவை என்பதையும் சொல்கிறது.
14. 1994 - சேகர் /23 பக்கங்கள் கொண்ட நாடகம்
இரண்டு அங்கங்கள் உண்டு. ஆனால் அங்கத்திற்குள் காட்சிகள் பிரிக்கப்படவில்லை. ஆனால் காட்சி மாறுகிறது என்ற குறிப்புகள் உள்ளன.பாத்திரங்கள்ஆத்மாராவ் -கம்யூட்டர் என்ஜீனியர் - தனியார் நிறுவனமொன்றில் வேலை / நித்யா - ஆத்மாவின் மனைவி / சேகர் - ஆத்மா உண்டாக்கிய ரோபாவின் பெயர் / மாதவராவ் தம்பதிகள்- பக்கத்து வீட்டுக்காரர், ஆபிசில் பக்கத்து சீட்டு ஆள்எந்திரத்திற்குப் பொய் சொல்லக் கத்துத் தர முடியாது என்பதால், சொந்த வாழ்க்கைக்கான ரோபாக்களை உருவாக்கினால் உண்டாகும் சிக்கல்களை நகைச்சுவையாகச் சொல்லும் நாடகம். எந்திரமயத்தை ஆதரிக்காத தொனி கொண்ட நாடகம். எந்திரமயம், கணினி மயம் போன்றவற்றில் சுஜாதாவின் நடவடிக்கைக்கு மாறான கருத்தை முன் வைக்கும் நாடகம்.
15. 1994 - சிங்கமைய்யங்கார் பேரன்/ 50 பக்கங்கள் கொண்ட நாடகம்.
[4 காட்சிகள் உள்ளன]மொழி கடந்த, மதம் கடந்த, சாதி கடந்த காதலை ஆதரிப்பது போல அதன் வலையைச் சொல்லும் நாடகம். ராகவன் - சுஷ்மா இருவரும் காதலித்துப் பதிவு திருமணம் செய்து கொண்ட நாளில் தொடங்கும் நாடகம் , இருவருக்கும் பிறந்த பையனுக்கு சிங்கமய்யங்கார் எனப் பெயரிடுவதில் நிறைவு பெறுகிறது. சுஷ்மாவின் பெயரை அலமேலு என மாற்றி வீட்டிற்கு அழைத்து வரும் ராகவன் தந்தையால் விரட்டி அடிக்கப்பட்டுத் தனிக்குடித்தனம் சென்று சிரமப்பட்டு வாழ்ந்த போது இருவரின் பெற்றோரும் வரவில்லை. சாதித்திமிரும் விட்டுக்கொடுக்காத தன்மையும் போலிக் கௌரவமும் சேர்ந்து தடுத்தாலும் பேரன் பிறந்தபின் வருகிறார்கள். பெயர் வைப்பதில் இருவரும் மோதுகிறார்கள். ஆனால் நரசிம்மாச்சாரியின் நண்பர் இருவரையும் சமாதானப் படுத்தி இருவருடைய பெயரும் வருமாறு குழந்தைக்குப் பெயர் வைத்து சேர்த்து வைக்கிறார். நகைச்சுவையோடு கலப்புத் திருமணத்தின் வலியைச் சொல்லும் நாடகம். ராகவன், சுஷ்மா தவிர முக்கிய பாத்திரங்கள்; நரசிம்மாச்சாரி - ராகவனின் தந்தை, வசதியான வடகலை அய்யங்கார். சொந்த சாதியில் மட்டுமே தனது மகன் திருமணம் செய்ய வேண்டும் என்ற பிடிவாதம் கொண்டவர்.கோவிந்த்சிங் - சுஷ்மாவின் தந்தை ,பீட்டர்ஸ் ரோடில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார்- இவரது விருப்பமும் தனது மகளின் திருமணம் பஞ்சாபி சிங்காக இருக்க வேண்டும் என்பது தான்.வாத்தியார் ரங்கபாஷ்யம்- ராகவன், சுஷ்மாவின் திருமணத்திற்கு உதவும் நரசிம்மாச்சாரியின் நண்பர்.
16. 1995 -இடையன் மகள் / 17 பக்கங்கள் கொண்ட ஓரங்க நாடகம்.
கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி அறிவொளிக்காக எழுதப்பட்ட நாடகம். எடுத்துரைப்பு வடிவம். வில்லியம் சராயனின் The Shepherd’s Daughter என்ற சிறுகதைத் தழுவி எழுதப் பட்ட நாடகம். ஆடு மேய்க்கும் பெண்ணை மணக்க விரும்பிய இளவரசனைத் தனது சாதுரியத்தால் பாய் பின்னும் கலைஞனாக ஆக்கிய இடையன் மகளின் புத்திசாலித்தின் பின்னால் இருந்த கல்வி அறிவு பற்றிய கதை. தொன்மக்கதை போன்ற ஒன்றை தெருக்கூத்து பாணியில் எழுதிக் காட்டிய நாடகம்.
17. 1995 - சரளா /17பக்கங்கள் கொண்ட ஓரங்க நாடகம்
சரளாவின் அக்கா சாவித்திரியில் வீட்டில் நடக்கிற காட்சி மட்டும் தான்.சிந்திக்கின்ற புத்திசாலியான சரளா காதலித்தவனைக் கலப்புத் திருமணம் செய்து ஓடிப்போனவள். ஆனால் அவனது சந்தேகத்தால், சொந்தம் கொண்டாடும் உரிமையால் கணவனின் சித்திரவதையை ஒவ்வொரு நாளும் விதம் விதமாகச் சந்தித்து வருபவள். மனைவியைச் சந்தேகம் கொள்ளும் கணவனின் சித்திரவதையால் படும் துயரம்.தன்னைக் காதலித்தவனைக் கைப்பிடிக்காமல் அம்மா சொன்னவனைக் கல்யாணம் செய்து கொண்டு சமையலறையே வாழ்க்கையாக வாழும் சாவித்திரி. சாவித்திரியை மட்டுமே சொந்தமாகக் கருதித் தனது கணவன் அன்பு செலுத்து வதா க நம்பிக் கொண்டிருக்க, தனது மச்சினிச்சியை ஆசைக்கு இணங்கும்படி கேட்ட கணவனின் உண்மை முகத்தைத் தெரிந்த பின்னும் வேறு வழியின்றி வாழும் அக்கா. இருவரிடமும் புதிதாகத் தோன்றும் ஆதரவும் அன்புமாக நாடகம் நிறைவுறும்.வெளிப்படையாக இருத்தல் X அறியாமையில் இருத்தல் என்ற முரணில் வாழ்க்கை நகரும் விதத்தைச் சொல்லும் இந்நாடகத்தில் சாவித்திரி , சரளா என்ற இரு சகோதரிகளின் கடந்த காலமும் நிகழ்காலமும் தான் நிகழ்வுகள். அவர்கள் இருவர் மட்டுமே பாத்திரங்கள்.
18. 1995 - பெட்டி /13 பக்கங்கள் கொண்ட நாடகம்
[ஓரங்க நாடகம் /புதிதாக உருவாக்கப் பட்ட கோயில்]சாமிநாத குருக்கள்,பழனி,ஜெயா, சிவா (வீட்டுக்குத் தெரியாமல் திருமணத்திற்குத் தயாராகின்றவன்), காஷியர்,இன்ஸ்பெக்டர்,சிதம்பரம் என உறவற்ற பாத்திரங்களால் உருவாக்கப்பட்ட நிகழ்வு. புதிதாக உருவாக்கப்பட்ட கோயிலில் குருக்களாக ஆகிவிட்ட சாமிநாத குருக்களின் பாட்டைச் சொல்லும் நாடகம். இதை நாடகம் என்பதை விடக் கதை என்பதே பொருந்தும்.நாடகம் சார்ந்த முரண் இல்லாமல் கோயிலில் கிடக்கும் பெட்டி உண்டாக்கும் மர்மம் சார்ந்த முடிச்சை மையப்படுத்தி சாமிநாத குருக்களின் இயலாமையை- அவரைச் சூழ உள்ள மனிதர்களிடம் அவர் படும் பாட்டைச் சொல்லும் நோக்கத்தை நிறுவேற்றுகிறார் சுஜாதா.
19. 1995 - பாரதி இருந்த வீடு /47 பக்கங்கள் கொண்டது.
[ அங்கம் I/ 5 காட்சிகள்,அங்கம் II/ 2 காட்சிகள், அங்கம் III/ 2 காட்சிகள்]சுப்பிரமண்ய அய்யர் - தாத்தா / ஸ்ரீராம் - பேரன் , வயது 18 / சுவேதா- பேத்தி, வயது 19நாராயணன் - கிருத்திகா - சுப்பிரமணியனின் முதல் மகனும் மருமகளும் /மூர்த்தி - சித்ரா - இரண்டாவது மகன், மருமகள், டெல்லியில் இருக்கிறார்கள் / மணி - அய்யரின் நண்பர், ரியல் எஸ்டேட் தரகர்.தங்களது வருமானத்தில் தந்தையைச் சரியாகவே பார்த்துக் கொள்ள முடியும் என்றாலும் மனைவிமார்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தந்தையை அலைக்கழிக்கும் பிள்ளைகளின் இயலாமை வெளிப்பட்டுள்ளது. அய்யரின் நண்பர் மணி சொல்லும் ஒரே பொய். பிள்ளைகளின் பணத்தாசை வெளிச்சம் போட்டுக் காட்டவும் உதவுகிறது.பாரதியார் இருந்த வீடு இப்போது அய்யரின் வசம் இருப்பதால் அவருக்கு முப்பத்தேழு லட்சம் கிடைக்கப் போகிறது என்ற பொய் மூலம் மகன்களும், மருமகன்களும் சொந்த பந்தமும் என எல்லா உறவுகளும் பணத்திற்காக அவரைக் கவனிக்கின்றனர். ஆனால் பேரனும் பேத்தியும் அவரது அன்புக்காக மதிக்கின்றனர். தாத்தாவின் தேவையை விரும்பும் மூன்றாம் தலை முறையின் பார்வையில் நாடகம் நிகழ்கிறது.நாடகத்தின் வடிவம் பார்வையாளருக்கான கோணத்தில் சொல்லப்படுவதில் தான் சிறப்புடையது. பாத்திரத்தின் கோணத்தில் அல்ல.திருவல்லிக்கேணியில் முப்பட்டக வீட்டை அடமானம் வைத்துக் கடன் வாங்கி, அடைக்க முடியாமல், தனது பென்சன் பணத்தில் காலம் தள்ளும் சுப்ரமணிய அய்யரின் முதுமைக் கால சிரமங்களைச் சொல்லும் நாடகம். ஒரு குறுநாவலாக எழுதும் போது அய்யரின் மீது - அவர் வாழ்க்கை மீது ஏற்படக்கூடிய பச்சாதாப உணர்வு நாடகம் சார்ந்த ரகசியத்தால் தோன்றாமல் போய் விடுகிறது.
20. 1996 - மறுமணம் 12 / பக்கங்கள் கொண்ட ஓரங்க நாடகம்.
[ஆஸ்பத்திரியில் நடக்கிற காட்சி]ஜெயந்தி, அவளது கணவன் தாமோதர், குழந்தைப் பேறு தொடர்பான டாக்டர் ஜானகி ஆகிய மூன்று பாத்திரங்கள் கொண்ட நாடகம். குழந்தை இல்லை என்பதால் சொந்தத்தில் மறுமணம் செய்ய விரும்புகிறான் கணவன். ஆனால் அதைத் தள்ளிப் போட விரும்பும் மனைவி தான் உண்டாகி இருக்கிறேன் என டாக்டரைப் போய் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறாள். ஏன் பொய் சொல்லித் தள்ளிப் போட வேண்டும்; டாக்டர் நீயும் மறுமணம் செய்து கொள் ; அதை உன் கணவனிடம் சொல் என யோசனை சொல்லும்போது, ஜெயந்தி இந்த டாக்டர் சரியில்லை எனக் கணவனை அழைத்துக் கொண்டு வெளியேறுகிறாள். இந்திய ஆண்கள் வாரிசு வேண்டும் என மறுமணம் செய்கிறார்கள். ஆனால் இந்தியப் பெண்கள் எந்தக் கணத்திலும் புருசன் இருக்க இன்னொரு ஆணை திருமணம் செய்வதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை எனச் சுட்டும் நாடகம்.
21. 1996 - ஆகாயம் 39 / பக்கங்கள் கொண்ட ரேடியோ நாடகம்.
ஆனந்த, காஞ்சனா, யந்திரம் ஆகிய மூன்றின் கூட்டான ஆகாயம் என்னும் விண்வெளி ஓடத்தில் பயணம் செய்யும் இரண்டு மனிதர்கள், ஒரு ரோபோவை வைத்து மனித மனத்தைச் சோதனை செய்யும் நிலை நாடக உரையாடலாக ஆக்கப்பட்டுள்ளது. மனிதன் தனக்குப் போட்டியாக எந்திரத்தைக் கருதுவதும், அவனைப் போலவே எந்திரம் சதி செய்யும் எனக் கருதுவதும், தனது கணவன் இன்னொரு பெண்ணுடன் தனித்து இருந்தால்,உடல் உறவு வைத்துக் கொள்ளும் வாய்ப்புக்களே அதிகம் எனச் சந்தேகம் கொள்ளும் மனைவி முதலான மனிதாய மனங்கள் சுவாரசியமானப் போக்கு. விண்வெளி சார்ந்த பரிசோதனைக்குப் பின்னால், நெருக்கடியான தருணங்களில் மனிதர்கள் எடுக்கும் முடிவு தர்க்கங்கள் சார்ந்ததல்ல; தீர்மானமற்ற முடிவுகள் தான் எனச் சொல்லும் நாடகம். இம்மூன்று பாத்திரங்களோடு ஆனந்தின் மனைவி மித்ர, மகன் நரேன், விண்வெளிக் கூட இயக்குநர் என மேலும் சில பாத்திரங்கள் உண்டு.
22. 1996 - முயல் 29 / பக்கங்கள் கொண்ட ஓரங்க நாடகம்.
Rabbit Trap என்ற ஜே.பி . மில்லரின் நாடகத்தை ஒட்டி எழுதப்பட்டது. பணம் சார்ந்த உலகம் வேலைக்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்பட்ட வாழ்க்கைக்கு மனிதர்களைத் தள்ளி விடும் நிலையைச் சொல்லும் நாடகம். அதிலிருந்து விலகி, இந்த உலகம் பிற உயிரினங்களுக்கும் உரியதாக இருக்கிறது என்பதை உணரும் போதே மனித வாழ்வின் இருப்பு அர்த்தம் உடையதாக இருக்கிறது என்பதைத் தாமோதரனின் வீடு, தாமோதரனின் பூங்காடு கிராமம், தாமோதரனின் அலுவலகம் எனக் காட்சிகளை மாற்றி மாற்றி நிகழ்த்திக் காட்டும் ஓரங்க நாடகம். காலம் இரண்டு நாள் / பாத்திரங்கள் தாமோதரன் , அவனது மனைவிரேவதி, மகன் சைலேஷ் ஆகியவர்களோடு தாமோதரனின் அலுவலக நிர்வாகி சந்திரசேகரன், மற்றும் பிற பணியாளர்களைக் கொண்டு காட்சிகளை நகர்த்துகிறது. மகன் சைலேஷின் விருப்பத்திற்கிணங்க முயலை மீட்பதற்காக வேலையை விட்டு விடவும் தயாராகும் தாமோதரனின் விடுதலை மனம் தான் இந்நாடகத்தின் வெளிப்பாடு.
கருத்துகள்