இயல்பு தொலைக்கும் தமிழர்கள்

நான் நின்றிருந்த அந்த அங்காடி வளாகத்தில் மூன்று வங்கிகள் செயல்படுகின்றன . இரண்டு வங்கிகள் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள். இந்த வங்கி பன்னாட்டு வங்கி. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியைப் போல மாநில மொழிக்கோ அல்லது தேசியமொழி என நம்பப்படும் இந்திக்கோ இங்கு வேலை இல்லை. எல்லாமே ஆங்கிலத்தில். அங்கே வேலை பார்க்கும் இளைஞர்களும் யுவதிகளும் பரிமாறிக் கொள்ளும் மொழி கூட ஆங்கிலமாகத்தான் இருக்கிறது. பேச்சு மொழி ஆங்கிலமாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அவர்களின் உடல் மொழியே ஆங்கில நளினத்துக்குரியதாக ஆகி இருப்பதை நீங்கள் நேரில் பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
அந்த வங்கியில் கணக்குத் தொடங்கும் நோக்கத்தோடு மனுவை வாங்கி நிரப்பிக் கொண்டிருந்த அந்த நடுத்தர வயதுப் பெண் நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தார். கையில் விலை உயர்ந்த பேனா இருந்தது. ஆங்கிலத்தில் இருந்த அந்த மனுவைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு உதவலாம் என்று கருதி அவரருகில் சென்றேன். தயங்கித் தயங்கி என்னிடம் மனுவைக் கொடுத்த அவருக்கு ஆங்கிலம் தெரிந்து தான் இருந்தது. இடது புறம் சாய்த்து சாய்த்து எழுதிய எழுத்து வாசிப்பதற்கேற்ற வகையில் தெளிவாக இருந்தது. அழகாகவும் இருந்தது. எல்லாக் கட்டங்களுக்கும் உரிய தகவல்களை நிரப்பியவர் ’பெயர்’ என்று இருக்கும் முதல் கட்டத்தை மட்டும் நிரப்பாமல் இருந்தார். கையெழுத்துப் போட வேண்டிய இடத்தில் கூடக் கையெழுத்தைப் போட்டு முடித்து விட்டார். வாசித்து விட முடியாத தன்மையில் எழுத்தின் மேல் எழுத்தாகக் கையெழுத்தைப் போட்டிருந்தார்.
கையெழுத்தைக் கொண்டு அவர் பெயரை வாசித்து எழுதி விடலாம் என்று நினைத்த எனக்கு அவர் பெயரை வாசிக்க முடியவில்லை. தனது பெயரை எழுதுவதில் அவருக்கு என்ன தயக்கம் என்னும் என்பது முதலில் எனக்குப் புரியவில்லை. பிரச்சினை அவரது பெயரை எழுதுவதில் இல்லை. பெயர் என்பதற்கு நேராக மூன்று கட்டங்கள் இருந்தது தான் அவரது குழப்பத்திற்குக் காரணம் என்பது பிறகு புரிந்தது. அவருக்கு இருந்தது ஒரே ஒரு பெயர் தான். ஆனால் மனுவில் கேட்கப் பட்டிருந்ததோ முதல் பெயர், இரண்டாம் பெயர், மூன்றாம் பெயர் என மூன்று பெயர்கள்.
கல்லூரியில் படித்தது வரை தனது ஒரே பெயரை மட்டும் பயன்படுத்தி வந்த அந்த மங்கை திருமணம் ஆன பின்பு தனது பெயருக்குப் பின்னால் கணவன் பெயரையும் சேர்த்து எழுதத் தொடங்கி யிருக்கிறார். இப்படி எழுதும் போது அவரது முதல் பெயர் அவரது பெயரா? அல்லது கணவன் பெயரா? என்ற குழப்பத்திற்கு விடை தேட வேண்டிய தேவை இதற்கு முன்பு எழவில்லை. இப்போது அந்தக் கேள்வி எழுந்ததோடு நிற்கவில்லை. இந்த மனுவில் மூன்றாவது பெயர் என்று வேறு கேட்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் எந்தப் பெயரை எழுதுவது என்ற புதுக் குழப்பமும் ஏற்பட்டு விட்டது. எல்லாக் கட்டங்களையும் நிரப்பி விட்டு கடைசியாகத் தன் பெயரை எப்படி எழுதுவது என விசாரித்து எழுதிக் கொள்ளலாம் என்று விட்டு வைத்திருக்கிறார்.
மனுவில் இருக்கும் மூன்று கட்டத்தில் தனது ஒரே பெயரை, எந்தக் கட்டத்தில் எழுதுவது எனக் குழம்பி நின்ற அந்தப் பெண்ணுக்கும் அப்படியானதொரு நிர்ப்பந்தம் இருந்தது. டெல்லிக்கருகில் இருக்கும் நொய்டாவில் வேலை பார்க்கும் மகளின் சம்பளம் அந்த வங்கியின் இணையவழிக் கணக்கில் இவளது கைக்கு வந்து சேர அவளுக்கும் ஒரு கணக்கு தொடங்கப் பட வேண்டும். கணக்கு தொடங்க வந்திருக்கிறாள். பன்னாட்டு வங்கிக் கணக்குக்குப் பழக்கப்படுத்துதலின் தொடர்ச்சியாக அவை தரும் அட்டைகளைச் செருகிப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தயாராக வேண்டும். அடுத்ததாகக் கடன் அட்டையைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும். கடன்அட்டை என்பது ஒருவரை நுகர்வோராக மாற்றுவதன் மிகப் பெரிய நகர்வு என்பதை விரிவாக விளக்க வேண்டியதில்லை.ஒருவன் விரும்பி னாலும் விரும்பாவிட்டாலும் உலகமயத்தின் கண்ணிக்குள் அவனைக் கொண்டு வரும் வித்தைகள் அதன் சித்தாந்திகளுக்குச் சரியாகவே தெரிந்து இருக்கிறது.
கையில் இருக்கும் மனுவில் தனது பெயரை எழுத முடியாமல் தவிக்கும் அந்தப் பெண்ணுக்கு ஆங்கில மொழி பிரச்சினை அல்ல; ஆங்கில மரபு தான் பிரச்சினை. ஐரோப்பியர்கள் தங்கள் பெயரை எழுதும் போது மூன்று அலகுகள் இருக்கும் விதமாக எழுதுகிறார்கள். மூன்று அலகுகளில் கடைசியாக இருப்பது அந்த நபரின் பெயராக இருக்கும். முதலில் இருப்பது குடும்பப் பெயராகவும், நடுவில் இருப்பது தந்தையின் பெயராகவும் இருக்கும். குடும்பப் பெயர், தகப்பன் பெயர், இயற்பெயர் என்பது ஐரோப்பிய மரபு. தமிழ் மரபு அப்படிப் பட்டதில்லை. இங்கே வம்சப் பெயர்களின் இடத்தைச் சாதிகளின் பெயர்கள் பிடித்துக் கொண்டுள்ளன. சாதிப் பெயர்களையும் கூட பெயர்களுக்கு முன்னால் போடும் பழக்கம் இல்லை. இயற்பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போடும் பழக்கம் எப்போது வந்தது என்பதை ஆய்வு செய்து கண்டறிய வேண்டும்.
தொல்தமிழகத்தில் இன்றைய அர்த்தத்தில் சாதிகள் இருந்தனவா? சாதிகளைப் பெயரோடு சேர்த்து எழுதினார்களா? என்றால் சங்க இலக்கியத்தில் ஆதாரங்கள் இல்லை. அதிலும் பெண்களுக்குச் சாதிப் பெயர்களும் கிடையாது. அதற்குப் பதிலாக ஊர்ப் பெயரையும் தொழிலையும் இணைத்துச் சொந்தப் பெயரைச் சொல்லும் வழக்கம் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தன் என்பது மணிமேகலையை எழுதிய கவிஞனின் பெயர். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரன் என்பது இன்னொரு கவிஞனின் பெயர். கூலவாணிகம், கணக்காய்தல் என்பன தொழில் பெயர்கள். ஊர்ப்பெயர், தொழிற்பெயர், இயற்பெயர் என்ற மூன்று அலகுகள் இருந்துள்ளன. பெண்கவிகள் அள்ளூர் நன்முல்லை; மாறோக்கத்து நப்பசலை என ஊர்ப் பெயரோடு சேர்த்துக் குறிப்பிடப் படுகின்றனர். பெண்களுக்குக் குறிப்பான தொழில் அந்தக் காலத்தில் இல்லை போலும்.

ஒரு மனிதன் தனது பெயரை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதற்கான விதியை எழுதும் போது தொல்காப்பியம் சிறப்பினால் வரும் பெயர்களை முதலில் சொல்லலாம்; அதனைத் தொடர்ந்து இயற் பெயரை எழுத வேண்டும் எனக் கூறுகிறது. சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் என்பது தொல்காப்பியரது இலக்கண விதி. சங்ககாலத்து உதாரணங்களை விட்டு விடுவோம். நிகழ்காலத்துக்கு வருவோம். 

கலைஞர் மு. கருணாநிதி என்ற பெயர் எல்லோருக்கும் தெரிந்த பெயர். கருணாநிதி இயற்பெயர். முத்துவேல் கருணாநிதி என்பது பழம் மரபு. கலைஞர் என்ற சேர்க்கை சிறப்புப் பெயர்ச் சேர்க்கை. மூன்று அலகு கொண்ட இந்த வரிசை கூடத் தமிழ் மரபு சார்ந்த மரபு தான். இப்படியான தமிழ் மரபை உருவாக்க நமது அரசியல்வாதிகளும் பண்பாட்டு ஆளுமைகளும் படும் பாட்டை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. உருவாக்கிய மரபை அவர்களே அழித்துக் காட்டும் அற்புதத்தையும் கூடச் செய்து விடுகிறார்கள் என்பது வருத்தமானதல்ல;ஆச்சரியமானது.
இயற்பெயர் தொலைத்து கலைஞராக மட்டுமே அவரது இருப்பு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு மனிதன் கலைஞராகவே வாழும்படியான நிர்ப்பந்தம் சுகமானதா? சுமையானதா? என்பதை மற்றவர்கள் சொல்ல முடியாது. அவர்தான் சொல்ல வேண்டும். கலைஞர் என்பது மட்டும் அல்ல. தங்கள் தொண்டர் கூட்டம் மொத்தத்திற்கும் அம்மாவாக இருப்பதும், தளபதியாக வாழ்வதும், கேப்டனாக வசனம் பேசுவதும், அய்யாவாகவும், சின்ன அய்யாவாகவும் வாழ நேர்வதும் கூட சுமையா? சுகமா? என்று ஒவ்வொரு வரையும் தான் கேட்க வேண்டும் . எழுச்சிக்கலைஞர், இளைய தளபதி, கனவுக்கன்னி, சூப்பர் ஸ்டார், வைகைப்புயல், மக்கள் கலைஞன், கவிப்பேரரசு, எனச் சிறப்புப் பெயராகவே அலைய நேர்வதில் தனிமனித இருப்பும் சுதந்திரமும் காணாமல் போகிறது என்று நானும் நீங்களும் சொல்லலாம்.
இயல்பு தொலைத்தல் எல்லோருக்கும் சாத்தியமில்லை. இயல்பு தொலைத்துப் பாரம் சுமைக்கிறவர்களுக்கு அது தரும் சுகம் ஆனந்தமானதாக இருக்கக் கூடும். அந்த ஆனந்த ரகசியம் அவர்களுக்கு மட்டும் தெரியும் ரகசியம். ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும்.

கருத்துகள்

Karthikeyan G இவ்வாறு கூறியுள்ளார்…
Hello Sir..
//ஒரு மனிதன் கலைஞராகவே வாழும்படியான நிர்ப்பந்தம் சுகமானதா? சுமையானதா? //
Too good..

உயிர்மை, காலச்சுவடுவில் உங்கள் கட்டுரைகளை படித்துவிட்டு உங்களை இளைஞர் என்று நினைத்திருந்தேன். :)

உங்கள் ப்ளாக்கில் உள்ள பல கட்டுரைகளை படித்து விட்டேன் அனைத்தும் ஆழமாகவும் ரசிக்கும்படியும் உள்ளன.

Thank you.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்