மக்கள் நலக்கூட்டணி என்ற கானல் நீர்

எப்போதும் தேர்தல்களைத் தொடங்கிவைக்கும் வேலையை ஊடகங்கள் தான் செய்கின்றன. 24x7 செய்தி அலைவரிசைகளுக்கு நீண்ட நாள் தீனியாக இருக்கக்கூடியவை விபத்துகளோ, கலவரங்களோ, சாதனைகளோ, கொண்டாட்டங்களோ அல்ல. அவையெல்லாம் ஒரு நாள் பசிக்கான தீனிதான். தேர்தல் களியாட்டங்கள் நீண்ட நாளைக்கான உணவுச் சேகரிப்பு. எடுத்து எடுத்துப் பரிமாறலாம். முதல் தந்ததையே அடுத்தநாள் புதிதுபோலப் பரிமாறலாம். முதன்மை உணவை மாற்றாமல், கூட்டு, பொரியல் மாற்றம், ஊறுகாய், அப்பளம் மாற்றம், சாம்பார், சட்னி மாற்றம் என மாற்றங்களைச் செய்துகொண்டே இருக்கலாம்.

சொம்பில் நீரை வைத்து இலை போடுவதில் தொடங்கி உப்பு, ஊறுகாய், அவியல், பொரியல், கூட்டு, அப்பளம், பாயசம் எனப் பரிமாறியபின் சோற்றைப் பரிமாறும் விருந்துச் சாப்பாடுபோல. கடந்த ஐந்து மாதங்களாகப் பரிமாறிக் கொண்டிருக்கும் செய்தி அலைவரிசைகளுக்குத் தொடர்ந்து தீனிபோட முடியாமல் தவிப்பவை அரசியல் கட்சிகள். கூட்டணிக்குக் கணக்குகள், கட்சிமாற்றங்கள், ரகசிய சந்திப்புகள், வெளிப்படையான சவால்கள், புதுப்புது கட்சிகளை உருவாக்குதல் என ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் விருந்துகளும் பரிமாற்றங்களும் நடக்கின்றன.

கூட்டணி உருவாக்கத்தோடு, எதிர்க்கூட்டணிக்குள் தங்கள் சார்புக் கட்சிகளை அனுப்பும் வேலையையும் செய்கின்றன. இருமுனைப் போட்டியாக இல்லாமல் பலமுனைப்போட்டிகளாக மாற்றுவதின் கணக்குகளும் நடக்கின்றன. எல்லாவிதமான பின்னணி வேலையைப் பார்த்துக் கொண்டே எல்லாத் தொகுதிகளுக்கும் விருப்பமனு விற்கும் வியாபாரத்தையும் செய்கின்றன. கட்சிகள். அதையும் வரிசையில் நின்று வாங்கும் பணியைச் செவ்வனே செய்யும் தொண்டர்களும் பிரமுகர்களும், தங்கள் தலைமையின் குரூரத்தை ரசித்தபடியே கட்சி உண்டியலில் காணிக்கையைச் செலுத்தித் தங்கள் பெயரெழுதிய சீட்டையும் இணைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் கட்சிகள் தான் ஆட்சிக்குவந்து இணையவழி நிர்வாகத்தைக் கொண்டுவரும் - இ கவர்ன்ஸ் -பற்றியும் பேசுகின்றன. இவற்றை முரண் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

இந்த அபத்தத்தைச் செய்யக்கூடாது என்ற தெளிவோடு ஒரு கட்சி முன்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பே முதல்வர் யார் என்று முடிவு செய்வது ஜனநாயக விதிகளுக்கு மாறானது. ஆனால் இங்கே எல்லாக் கூட்டணிகளும் கட்சிகளும் 'இவர்தான் முதல்வர் ' என்று சொல்லிவிட்டே வாக்குக்கேட்க வருகின்றார்கள்.

இந்தப் போக்கைத் தவறானது எனப் பேசிய தேர்தல் 2016 சட்டமன்றத்தேர்தல். நல்வாய்ப்பாக அமைந்திருக்க வேண்டிய மக்கள் நலக்கூட்டணி தான் அதனைச் சொன்னது. மக்கள் நலக்கூட்டமைப்பு என்ற அமைப்பைத் தொடங்கிய கம்யூனிஸ்டு கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலைச் சந்திக்கலாம் என்றே சொன்னார்கள். ஆனால் அடுத்து வந்து சேர்ந்த வைகோவும் விஜயகாந்தும் அதனை மறுத்து 'யார் முதல்வர்' என்று சொல்ல வேண்டும் என்று வலியுறுத்திக் குழப்பினார்கள். தன்னை முன்னிறுத்துவதில் தயக்கம் காட்டிய வைகோ நடிகர் விஜயகாந்தை முன்மொழிந்து பின்வாங்கினார்.

புதிய கட்சி அல்லது கூட்டணி தங்களை மாற்று என முன்வைக்கும்போது ஆட்சிமுறை மாற்றத்தை பேசுவதற்கு முன்னால், கொண்டுவரப்போகும் மாற்று என்பதைத் தேர்தல் காலத்தில் பின்பற்றும் நடைமுறைகளிலேயே காட்ட முடியும். வேட்பாளர்களை முடிவு செய்யவேண்டியது தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் செய்யவேண்டியது. மக்களைச் சந்திப்பதே தேர்தலுக்குத் தயாராவதின் முதல்பணி. அதையெல்லாம் செய்யாமல் யார் தலைமையில் கூட்டணி என்பதைத் தீர்மானிப்பதில் காலத்தையும் சக்தியையும் வீணடித்தார்கள்.


மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களுக்கு மக்களிடம் சொல்லவும் அவர்களைத் தேர்தலுக்குத் தயார்படுத்தவும் நிறைய விசயங்கள் இருந்தன. தமிழகத்தில் சமூகப் பொருளாதார அரசியல் நடவடிக்கைகளில் தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும் நிரூபிக்கவும் வாய்ப்புகள் இருந்தன. தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்தால் அந்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற நிலையைத் தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தியிருந்தால் வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். மக்கள் தங்களை நம்புவதன் மூலம்தான் வாக்களிப்பார்கள் என்பதை நம்பாமல் செயல்பட்ட மக்கள் நலக்கூட்டணி கானல் நீராக மாறிப்போனது. சரியாகத் திட்டமிட்டுத் தாக்குப் பிடித்திருந்தால் அந்தத்தேர்தலுக்குப் பின் நின்று வளர்ந்து மூன்றாவது அணியாக வளர்ந்திருக்கும். ஆனால் அந்த அணியைப் பின்னின்று இயக்கியது அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா என்ற குற்றச்சாட்டை ஏற்று மொத்தமாகப் பாவமன்னிப்புக் கேட்டுத் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் சரணாகதி அடைந்துவிட்டார்கள்.

இந்தத்தேர்தலில் தேமுதிகவும் ஐக்கியமானபின் மொத்த மநகூவும் தி.மு.க.வுக்குள் ஜீரணிக்கப்பட்ட கூழாக மாறிவிட்டது. தி.மு.க.வும் தன்னை இரட்சிக்கும் தேவமைந்தனாகப் பாவனை செய்து கொண்டிருக்கின்றது. பலம்பொருந்திய இந்துத்துவக் கோலியாத்தை வெல்லும் சக்தி கொண்ட தாவீதாக நினைக்கின்றது.


இந்தத் தேர்தலில் வெல்லப்போவது கோலியாத்தா? தாவீதா என்பது உறுதியில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்குப் புதியதொரு அமைப்பு உருவாகும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. நடிகர் விஜயின் கட்சி அந்த இடத்தை உருவாக்கும் எண்ணத்தைக் கருவிலேயே அழித்துவிட்டது. ஒருவிதத்தில் இந்தப் பதிவு கழிவிரக்கப்பதிவுதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெயமோகனின் வெண்முரசு வெளியீட்டு விழா: பின் நவீனத்துவ கொண்டாட்டங்களின் வகைமாதிரி

கனவுலக நடப்பியலின் சாத்தியங்கள் : ஜீனத்தின் கொதிகலன் சிறுகதையை முன்வைத்து

ஞானபீடத்துக்கான பாதை