தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளைத் தகர்த்த ஒன்றாகத் தோற்றம் கொண்டிருக்கின்றது. அந்த முடிவுகளின் அடிப்படையில் உருவான அரசை பொது உளவியலின் அரசு என வரையறை செய்யலாம்.
கற்ற கல்வி, வழிகாட்டும் இயக்கம் அல்லது தலைமை , கிடைத்த போதனை போன்றனவற்றால் கிடைத்த உந்துதலால் அல்லாமல், தனித்தனியான மனிதர்களின் நடத்தைகள் ஒரு புள்ளியில் இணையும்போது உருவாகும் திரட்சி மனநிலையைப் பொதுப்புத்தி எனச் சொல்வதுண்டு. பொதுப்புத்தி ஒரு கட்டத்தில் பொது உளவியலாக மாறிக் கட்டமைப்பாக மாறிவிடும். அக்கட்டமைப்பு இயக்கமாகவும் திரண்டு ஒன்றை நோக்கி நகரும் வாய்ப்புகளும் உண்டு.
திரு. ச.ஜோசப் விஜய் தலைமையில் உருவாகியுள்ள புதிய அரசு முந்தைய அரசுகளிலிருந்து பெரிதளவு விலகிவிடப்போவதில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் உணர்ச்சிகரத் தூண்டல்களைச் செய்யும் உரைகளை நம்புவார்கள்; ஏற்பார்கள் என்பது நீண்டகால நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலிருந்து விலகி விடவில்லை புதிய முதல்வர். அதற்குத் தனது நடிப்பு சார்ந்த தொழில்துறை உத்தியையும் சேர்த்துக் கொண்டு கூடுதல் உணர்ச்சிகளை உருவாக்க நினைக்கின்றார்.
இந்தத் தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச் செய்த புதிய வாக்காளர்கள் இப்போது ஏற்பார்கள். ஆனால் இதனைத் தொடர்ந்து ஏற்பார்களா? என்பது கேள்விக்குறி. ஏனென்றால் அவருக்கு வாக்களித்தவர்கள் இதே பாணியைப் பின்பற்றிய அரசியல் மீதுதான் வெறுப்பைக் காட்டியிருக்கின்றார்கள்.
*
திரைப்பட நாயகத்தனத்தின் மீது உருவான கவர்ச்சித்தன்மை சாதியை மையமிட்டு வாக்களிக்கும் போக்கில் அசைவை உண்டாக்கியிருக்கின்றது. வரவேற்க வேண்டிய ஒன்று. அதனை வளர்த்தெடுக்கும் விதமாக வேட்பாளர் தேர்வில் பெரும்பான்மை சாதிகளை நோக்கி நகராத அரசியலைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதே நேரம் தமிழ்நாட்டின் மொத்தப்பரப்பும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உருவான ஆதரவு அலையால் தாக்கம் பெற்றுவிடவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.
*
பெரும்பான்மைச் சமயத்தினர் ஆதிக்கம் செலுத்தும் அரசியலுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை. தமிழ்நாட்டின் பெரும்பான்மை ஆதரவில்லாத கட்சியையும் தலைவர்களையும் ஆளுமைகளையும் தமிழ்நாட்டிற்குள் திணித்துவிடும் முயற்சிகளைச் செய்யும் ஒன்றிய அரசும் / ஆளுங்கட்சியும் தமிழ்நாட்டுப் பொது உளவியலில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. அதே நேரம் அதனோடு கூட்டுச்சேர்ந்த கட்சிகள் முற்றிலும் ஒதுக்கப்படவுமில்லை.
*
சீரான வளர்ச்சியும் மக்கள் வாழ்வில் மேம்பாடும் ஏற்படுத்தாத கொள்கைகள் ஏற்கப்படும் வாய்ப்புகள் குறைவு. நடைமுறைப்படுத்த முடியாத கொள்கைப்பேச்சுகள் பொருட்படுத்தப்படாமல் போகலாம். தோற்றுப்போன அரசியலில் விளம்பரப்படுத்தப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றும் கவர்ச்சிவாதத்தோடும் பரப்புரை நோக்கத்தோடும் இருந்தன. அவற்றை நடைமுறைப்படுத்தும்போது கட்சிக்கும் அதிகாரத்திற்கும் பணப்பயன் கிடைக்கும் விதமாக வெளியாள் பங்கேற்பு (Out -Source ) முறை பின்பற்றப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை, மருத்துவத்துறை,பொதுச்சுகாதாரம் போன்றவற்றில் மேம்பாடுகள் காட்டப்பட்டாலும் பின்னணியில் அரசுத்துறைகளின் தோல்வியும் இருந்தன என்பதும் கவனிக்க வேண்டியன. உயர்கல்வித்துறையில் எதுவுமே நடக்கவில்லை. கலை, இலக்கியத்துறையில் நடந்த இலக்கியத்திருவிழாக்கள், புத்தகக் கண்காட்சிகள் தமிழ்நாட்டின் அறிவுத்தரப்பினரின் ஏற்பின்றி வெறுக்கத்தக்க வகையிலேயே நடந்தன. ஆனால் கட்சி ஆதரவாளர்களின் பரப்புரைகள் மூலம் பாராட்டுப் பத்திரங்கள் பெறப்பட்டு வாசிக்கப்பட்டன.
*
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பரப்புரைகள் பகுத்தறிவோடு தொடர்புபட்டனவாக இருந்தாலும் கட்சி அமைப்பும் செயல்பாடுகளும் நிலவுடைமைக் கால மனநிலை கொண்டிருந்தன. பண்ணையார்களின் மனநிலையில் மேலிருந்து கீழ்வரை வாரிசுகளை அதிகாரத்திற்குத் தயார்படுத்தி மக்களிடம் திணித்தது.
*
மக்களுக்கு நலத்திட்டங்களையும் இலவசங்களையும் வழங்கினால் போதும் என நினைத்த அரசு தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. அரசாக நலத்திட்டங்களை வழங்குவதைப் பின்பற்றியது போலவே கட்சியாக வாக்களிப்பிற்கு லஞ்சமாகப் பணம், பொருள் வழங்குவதை நிறுவனமயமாக்கியது. பெற்றுக்கொண்டால் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையைப் பொய்யாக்கியிருக்கின்றார்கள். இரண்டு கட்சிகளிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு பணம் தராத கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள். அரசியல்வாதிகளுக்குக் குற்றவுணர்வு இல்லாத நிலை வாக்காளர்களுக்கும் வந்து சேர்ந்திருக்கின்றது.
*
புதிய அரசை உருவாக்கியுள்ள கட்சியிடம் கருத்தியல் அரசியல் இல்லை என்றபோதிலும் பயன்பாட்டு நோக்கத்தில் ஓர் தெளிவு இருக்கவேண்டும். அதுவே அக்கட்சி. அமைக்கப்போகும் ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கும் என்று காட்டும். வாக்களித்தவர்கள் அதற்காகக் காத்திருக்க வேண்டும். பதவியேற்பு விழாவில் எதுவும் வெளிப்பட்டுவிடவில்லை
கருத்துகள்