தொடரும் உருட்டல்கள் (Trolls )
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடங்கியதிலிருந்து நெருக்கமாகக் கவனித்து வருபவன் என்ற நிலையில் இதனைச் சொல்ல நினைக்கிறேன். அவரது அரசியல் கருத்துகளையும் நிலைபாடுகளையும் ஊடகங்களில் சொல்வதில் தயக்கம் காட்டாத தலைவர் தொல்.திருமாவளவன். ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பது அவர் நீண்ட காலமாகச் சொல்லும் முழக்கம்.அவரது விருப்பங்களும் சார்புநிலைகளும் முடிவுகளும் ஒளிவுமறைவற்றவை. தனது தலைமையை ஏற்றுத் தனக்குப் பின்னால் திரண்டு நிற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எல்லாவிதமான வாய்ப்புகளையும் பயன்படுத்திப் பங்கைப் பெற்றுப் பகிர்ந்தளிக்க வேண்டும் என நினைப்பவர். வாய்ப்புகள் என்பதில் அரசியல் அதிகாரமும் அதன் வழியாகக் கிடைக்கும் பொருளியல் நலன்களும் அடங்கும். அவற்றையெல்லாம் தாண்டி இந்திய சமூகத்தின் அழிக்க முடியாத கறையாக இருக்கும் தீண்டாமைக் கருத்தியலையும் சாதியப்படிநிலைகளையும் கேள்விக்குள்ளாக்கித் தகர்ப்பது. இதெல்லாம் உடனே நடந்துவிடும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்ததில்லை. ஆனால் அதை நோக்கிய பயணத்தை நிறுத்தாமல் செய்ய வேண்டும் என்பதில் பின் தங்க மாட்டார்.
சாதிய அடுக்கில் மேலே இருப்பவர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கும் பெரும்பான்மைச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு உருவாக்கப்படும் அமைச்சரவையின் தலைவராகத் தன்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை முற்ற முழுதாகத் தற்காலிகத் தன்மை கொண்டது என்பதைப் புரிந்துகொள்ள முடியாதவர் அல்ல. அப்படியொரு சூழலில் தான் பலியாடாக ஆக்கப்படும் வாய்ப்பே அதிகம் என்பதும் அவருக்கே தெரிந்தே இருக்கும். ஆனாலும் ஆடப்படும் பந்துகளில் எல்லைக்கோட்டைத் தாண்டும் ஆறு ஓட்டங்களை எடுக்காவிட்டாலும் விக்கெட்டுகளுக்கிடையில் ஓடி ஒன்றிரண்டு ஓட்டங்களையாவது எடுத்துவிட வேண்டும் என்றே நினைப்பார். கள நடுவர்களைத் தாண்டி தொலைக்காட்சித் திரையில் நிறுத்திப் பார்த்து முடிவு சொல்லும் காலத்தில் இருக்கிறோம். விக்கெட்டுகளுக்கிடையில் ஓடி எல்லைக்கோட்டைத் தொட்டாரா? ரன் அவுட் ஆனாரா? என்ற முடிவைச் சொல்ல ஊடகங்கள் தொடர்ந்து முயல்கின்றன.
ஒரு குற்றவுணர்வுச் சமூக உளவியலே நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்து மனிதர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும். அப்படியில்லாமல் சிக்கலான சூழ்நிலையில் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துப் பலிகடாவாக்க நினைப்பது சூழ்ச்சியான அதிகாரத்தின் நிலைப்பாடு. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவர்களுக்கு உரிய அங்கீகாரமும் பொறுப்பும் வழங்கப்படாத நிலையில் பழிவாங்கும் ஆபத்து உருவாகிவிடும் என்ற மனநிலையில் ஏற்படும் -அச்சத்தில் அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படலாம். ஒன்றிய அரசாங்கத்தில் அதிகாரமற்ற குடியரசுத்தலைவர் போன்ற பதவிகள் வழங்கப்படுவது அத்தகையது. இந்த வேறுபாடுகள் புரியாதவரல்ல முனைவர் தொல்.திருமாவளவன்.
**************
நிகழ்காலத்து ஊடகங்கள் - அச்சு, காணொளி, சமூக ஊடகங்கள் எல்லாம் எதையாவது உருட்டிக்கொண்டே இருக்கின்றன. உருட்டிப் பார்க்க ஒதுக்கப்பட்ட சமூகத்து ஆளுமைகளைத் தேர்வு செய்வது எளிதான ஒன்றாகக் கருதப்படுகின்றது. தொடர்ச்சியாக அவர்களுக்கு மட்டுமே ஆலோசனைகள் தொகுதிதொகுதியாக வழங்கப்படுகின்றன. அதே நேரம் அதிகாரம் மிக்க அமைப்புகளை- சாதீய மனிதர்களைக் கண்டு அச்சம் கொள்கின்றன. அதனால் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிப் போகின்றன.
அண்மையில் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில் ஒவ்வொருவரும் அவரவர் துறைக்கு 100 சதவீதம் பொருத்தமானவர்கள் தானா? என்று கேள்வி கேட்டு உருட்டிப் பார்க்கவில்லை. ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.ராஜ்மோகனின் பொருத்தத்தையும் தகுதியையும் மட்டும் உரசிப்பார்த்து உரசிப்பார்த்து உருட்டுகின்றார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படைத் தகுதியே அமைச்சராவதற்குப் போதுமானது. எழும்பூர் தொகுதி மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவரைத் தேர்தலில் நிறுத்திய கட்சியின் தலைமை அவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியுள்ளது. பதவியேற்றபின் அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கேற்ப அவரது அமைச்சுப்பணியைச் செய்யப்போகின்றார். அவருக்கு ஆலோசனை சொல்லவும் உதவவும் குடிமைப்பணி அதிகாரிகளும் செயலர்களும் இருக்கின்றார்கள். எல்லா அமைச்சர்களும் இந்தக் கட்டமைப்புக்குள் தான் செயல்படுவார்கள்.
அதற்குள் ஏன் இவ்வளவு உருட்டல்கள்?
இவ்வளவு வன்மங்கள்?


கருத்துகள்