நீதிமன்றமும் சட்டமன்றமும் - இரண்டு குறிப்புகள்

இரண்டு நாட்களாக முகநூலில் வலம் வரும் இவ்விரண்டின் மீது எனது கருத்தை எழுத நினைத்தேன். ஆனால் ஏனோ எழுதியெழுதி அழித்துவிட்டேன். இப்போது  சொல்லாமல் விட்டால் தூக்கம் வராது என்பதுபோலத் திரும்பத்திரும்ப நினைவில் வந்துகொண்டே இருக்கின்றன. இரண்டில் ஒன்று பேரறிவாளன் தொடர்பானது; இன்னொன்று கருத்துக்கணிப்புகளை முன்வைத்தல் தொடர்பானது. இவ்விரண்டின் தொடர்பில் நான் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பணிக்காலம்  சில புரிதல்களைத் தந்துள்ளது. அந்த் அடிப்படையிலேயே இதனைச் சொல்கின்றேன்

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனை பெற்றுத் திரும்பியவர் பேரறிவாளன். அவர் மீது கொலைக்குற்றம் தொடர்பில் வழங்கப்பட்ட மரணதண்டனையும், பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டதும் குறித்தெல்லாம் எனக்குக் கருத்துக்கள் இருந்தாலும் அதனை இப்போது விவாதிப்பதில் பொருள் எதுவும் இல்லை. நீதிமன்றம் வழங்கிய தண்டனைக் காலத்தை முடித்து வெளியே வந்துவிட்டார். சிறையில் இருந்தபோதும், சிறையிலிருந்து வெளியே வந்தபின்னும் தனது கல்வி ஆர்வத்தைத் தக்கவைத்துத் தொடர்ந்து கற்றுத் தேர்வு எழுதி வழக்குரைஞராகத் தன்னைத் தகுதிப்படுத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியில் வழக்குரைஞராகப் பணியாற்றும் பொருட்டுப் பதிவு செய்துள்ளார். ஆனால் அதனைத் தடுக்கும் நோக்கில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா என்பவர் குடியரசுத்தலைவருக்கு மனுச் செய்துள்ளார். ஒருவிதத்தில் இச்செயல் கவன ஈர்ப்புத் தொடர்பானது. அவர் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் தனது இருப்பைக் காட்டும் நோக்கம் கொண்டது. அப்படிச் செய்வது அவரது விருப்பம்.  

இந்திய நீதிமன்றங்கள், தண்டனைச்சட்டங்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர் தனது முயற்சியில் கல்வி கற்கக்கூடாது; பணி வாய்ப்பைப்பெறக்கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை. குற்றம் இழைத்தவரே ஆயினும் தண்டனைக்குப் பின்பு திருந்தி வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்பதே தண்டிப்பதின் நோக்கம். இந்த நோக்கத்தை எமது பல்கலைக்கழகம் பருண்மையான எடுத்துக்காட்டு மூலம் நிகழ்த்திக்காட்டியது. ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்த ஒருவர் (பெயர் இங்கு தேவையில்லை) தண்டனைக்குப் பின்னர் தனது முனைவர் பட்டத்தை முடித்துப் பட்டம் பெற்றார். அவரது தகுதியின் பேரில் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளர் பணியும் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் தமிழ்ப்பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்கள். விரிவுரையாளர் பதவியோடு சிறைப்பட்டோர் கல்விக்கான ஒருங்கிணைப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பல்கலைக்கழகத்தின் தொலைநெறிக்கல்வியகத்தில் அத்தனிப்பிரிவு சிறைக்குள்ளேயே கைதிகளுக்கெனத் தனிச்சிறப்பு வகுப்புகளை நடத்தியது. விருப்பமானவர்களுக்கு அடிப்படைக் கல்வியையும், உயர்கல்வி கற்கத்தகுதியானவர்களுக்குப் பட்ட, பட்டமேல் வகுப்புகளையும் நடத்தியது. தனியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டது; சிறைக்குள்ளேயே பட்டமளிப்பு விழாக்களும் நடத்தப்பட்டன.

****


தேர்தல் காலக் கருத்துக்கணிப்புகளில் முன்னோடியாக இருந்த கல்வி நிறுவனம் சென்னை, லயோலா கல்லூரி. அக்கல்லூரியின் கருத்துக்கணிப்புகள் நம்பகத்தகுந்த கணிப்புகளாக இருந்தன. அந்த மாதிரியைப் பின்பற்றி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 1998 நாடாளுமன்றத்தேர்தலின்போது தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதியிலும் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தும் திட்டத்தைத் துணைவேந்தர் முனைவர் வே.வசந்திதேவி அனுமதித்தார். திருநெல்வேலி தினமலருடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பேரில் செய்யப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் அதற்கு வழங்கப்பட்டது. அப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்தது பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறை. ஒப்பந்தத்திற்குப் பின்னர் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறையும் இணைந்துகொண்டது.இரண்டு துறை மாணாக்கர்களுக்கும் படிப்பு சார்ந்த பயிற்சியாக மாற்றப்பட்டது.

அரசியல் போக்குகள், வாக்களிப்பதில் இருக்கக்கூடிய மாநிலம் தழுவிய பார்வைகள், உள்ளூர் கணக்குகள் பற்றியெல்லாம் எழுதிக் கொண்டிருந்தவன் என்பதால் என்னையும் ஆசிரிய வல்லுநர் குழுவில் இணைத்துக் கொண்டார்கள். தமிழ்த்துறை மாணாக்கர்களை இணைக்கவில்லை. நான் மட்டுமே இணைந்துகொண்டேன். கருத்துக்கணிப்பைத் தொடங்குவதற்கு முன்பாகத் தயாரிக்கப்பட்ட வினாநிரல் விரிவான விவாதத்திற்குப் பின் உருவாக்கப்பட்டது. களத்தில் இருந்த கூட்டணிக்கணக்குகள் முக்கியமாகக் கணக்கில் கொள்ளப்பட்டன. அந்தத்தேர்தலில் அ இ அதிமுக தலைமையில் ( தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, மதிமுக, பாமக, தமிழக ராஜீவ் காங்கிரஸ், சுப்ரமணியசாமியின் ஜனதா கட்சி) ஓரணியும், திமுக தலைமையில் தமாகாவும் வலது கம்யூனிஸ்டும் சிபிஐ ஆகிய கட்சிகள் இன்னொரு அணியும், மூன்றாவது அணியில் இந்திய தேசிய காங்கிரஸ், திருநாவுகரசரின் எம்.ஜி.ஆர்.அதிமுக, தா.பாண்டியனின் ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. சிபிஎம் தனியாகச் சில தொகுதியில் போட்டியிட்டது.

இரண்டு தொகுதிகளுக்கு ஒரு குழு. ஒரு குழுவில் 14 மாணாக்கர்கள் வழிநடத்த ஓர் ஆசிரியர் என்று கிளம்பினோம். நான் சிவகாசி (இப்போது விருதுநகராக மாறியுள்ளது), மதுரை நாடாளுமன்றத்தொகுதிகளில் கருத்துச் சேகரித்த குழுவின் பொறுப்பில் இருந்தேன்.கருத்துக்கணிப்புக்காகக் களத்தில் இருந்த நாட்கள் 5. குழுவில் இருந்தவர்கள் ஐந்து துணைக்குழுக்களாகப் பிரித்து அனுப்பப்பட்டனர். மதியம் வரை கிராமப்புறத்தில் சேகரிப்பவர்கள் பிற்பகலில் நகர்ப்பகுதியில் சேகரிக்க வேண்டும். அடுத்த நாள் அது மாறும். இரவில் சேகரித்த படிவங்களை ஆசிரியரிடம் தந்துவிடவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுவும் குறைந்தது 100 படிவங்களை முடிக்கவேண்டும். பெரும்பாலும் வாக்காளர்கள் சொல்ல இவர்களே எழுதிக்கொள்வார்கள். எழுதித்தரவிரும்புபவர்களுக்கு படிவம் தரப்பட்டது.

களப்பணிகள் முடிந்து கணக்கீடுகள் நடந்தபோது புள்ளியியல் ஆசிரியர்களே முன்னிலை வகித்தார்கள். அத்துறை சார்ந்த வெவ்வேறு விதிகளைப் பின்பற்றினார்கள். மாறும் விதிகள்; மாறா விதிகள் என முடிந்த பின் ஆசிரியர்கள் அமர்ந்து அறிக்கை தயார் செய்தபோது, சதவீதக் கணக்குகளும், அதன் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கையும் சொல்லப்பட்டன. அந்த ஆலோசனையில் குறிப்பிட்ட தொகுதிகளில் இவர் இவர் வெற்றிபெறுவார் என்று சொல்லலாம் என்று சொன்னேன். ஆனால் புள்ளியியல் துறையினரும் தொடர்பியல் துறையினரும் அது தேவையில்லை என்றார்கள். நான் வலியுறுத்திச் சொன்னேன். ஆனால் ஏற்கவில்லை

நான் வழி நடத்திச் சென்ற சிவகாசி தொகுதியில் முதலிடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் நல்ல வித்தியாசம் இருந்ததால் அங்கு வைகோ வெற்றிபெறுவார் என்று சொல்லலாம் என்பது எனது வாதம். அதேபோல் மதுரை தொகுதியில் நகர்ப்புறத்தில் சுப்பிரமணிய சுவாமி அதிகம் வாக்காளர்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தார். ஆனால் கிராமப்புறத்தில் அந்தளவுக்கு இல்லை. மூன்றாவது இடத்தில் தான் இருந்தார். ஆனாலும் அவரும் வெல்வார் என்பதே எனது தனிப்பட்ட கணிப்பாக இருந்தது. அந்தத்தேர்தலில் அவர்கள் இருவரும் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார்கள். கணக்கீட்டுப் படிவங்கள் தரும் புள்ளிவிவரங்களைத் தாண்டி பரவலான பேச்சும் வேட்பாளர்களின் ஆளுமையும் தேர்தல் வெற்றியில் பங்காற்றவே செய்கின்றன.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத் தமிழ் எழுத்து என்னும் வரையறை

சமகாலத்தமிழ்ச் சினிமாப் பண்பாடு - ஓர் அலசல்

தொல்காப்பியம்; இலக்கணத்தைத் தாண்டி...