கனவான்களின் பொதுப்புத்தி
“திறமைகளை மதிக்காத சமூகம் கிரிமினல்களை உருவாக்குகிறது“ – தத்துவார்த்தச் சொல்லாடல்களில் ஒன்று. மாவட்ட அளவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற மாணவா்கள் விரும்பிய துறையில் ஈடுபட முடியாத நிலையில் (இன்றைய சூழ்நிலையில் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களுக்கு உரிய இடம் மறுக்கப்படுவதில்லை) ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். தாய் தன் உயிரைப் பணயம் வைத்து லஞ்சம் கொடுத்தும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதபோது இன்னொருவன் கிரிமினலாகிறான். கிரிமினலானது எல்லாருக்குமான கல்விச் சாலையை உருவாக்கத்தான் (திறமையானவா்களுக்கு முன்னுரிமை கொடுக்க அல்ல) இது “ஜென்டில்மேன் படத்தின் கதை”.
கொள்ளை - போலீஸிடமிருந்து தப்பித்தல் – அப்பாவிக் கிச்சாவாக மாறி அப்பளக்கடை நடத்துதல் – அப்பளக்கடையில் வேலை பார்க்கும் பெண் நினைத்து ஏங்கும் ஆணாக இருத்தல்.
திரும்பவும் அதே வரிசை – கொள்ளை – தப்பித்தல் – அப்பாவி – கனவு. இன்னொரு முறை வரிசையில் சில மாற்றங்கள். ஆட்டம் பாட்டு – ஈடுபாடுபவா்கள் ரயில் பயணிகள் – அப்பாவி பிம்பம் கேள்விக்குள்ளாதல்.
அடுத்த முறை – அவனே இன்னொரு பெண்ணுக்கு (சுபாஸ்ரீ) ஏங்கும் ஆணாக இருக்கும்படி வரிசை.
கடைசியில் ஃபிளாஸ்பேக். (திருப்புக்காட்சி) தியாகம் செய்யும் (இந்தியத்) தாய் பிம்பம் முன்னிறுத்தப்படுதல். கிரிமினலானதை நியாயப்படுத்திவிட்டுத் தண்டனையை ஏற்றுக் கொள்ளும் முடிவு இது “ஜென்டில்மேனின் திரைக்கதை.”
இனி இன்னொரு திரைக்கதை – சின்னக் கவுண்டா், நீதிமான் சின்ன கவுண்டா் நீதி சொல்லுதல், அதனால் பாதிக்கப்படும் குடும்பம் கோபம் கொள்ளுதல்.
சின்னக் கவுண்டரின் குணங்களை வெளிப்படுத்துதல். தாய் சொல் தட்டாதவா். ஏழைகளுக்கு இரங்குபவா். உடல் உழைப்பை நேசிப்பவா் – பெண்களை ஏறிட்டும் பார்க்காதவா், அதே நேரத்தில் வம்பிழுக்கும் பெண்ணை வாயடைக்கச் செய்யும் ஆண்மையுடையவா்.
எதிர்க்குடும்பத்தின் குணங்களைச் சொல்லுதல்; ஊா்ச்சொத்தை கொள்ளை அடிப்பவா் – கூத்தியாள் வைத்துள்ளவா் – வெளியாள் சொல்கேட்டு மகளை அடக்கி வைப்பவா் – திமிர் பிடித்தவா் – சூழ்ச்சிகள் செய்து கொண்டே இருப்பவர். அவரது சூழ்ச்சிக்கு விதை போடுபவள், அவரது வைப்பாட்டி.
சின்னக் கவுண்டரின் ஆண்மையை வம்புக்கிழுத்த பெண் மீது அவருக்குக் காதல் இருந்தபோதும், கல்யாணம் செய்து கொண்டது அவளின் ஏழ்மையையும் நிர்க்கதியையும் போக்கத்தான்.
உடல் உழைப்பை நேசிக்காத படித்த ஒருவனுக்கு உதவுதல் – அவனே சின்னக் கவுண்டருக்கு எதிராக எதிரிகளுடன் சேர்ந்து (பணம் வாங்கிக்கொண்டு) சதியில் ஈடுபடுதல் – அவன் சின்னக்கவுண்டரின் கொளுந்தியாளை ஏமாற்றிக் கா்ப்பமுறச் செய்தவனும் கூட.
எதிரிகளின் சதியில் சிக்கிய சின்னக்கவுண்டரின் உயிரை அவரது மனைவி, ஒரு கொலை செய்து காப்பாற்றிவிட்டு ஜெயிலுக்குப் போதல் – கொளுந்தியாள் மானம் காக்கத் தன் மானத்தை இழக்கத் தயாராகி, கருவிலுள்ள குழந்தைக்குக் காரணம் நானே எனச் சொல்லுதல்.
சதிகளின் பின்னணி விலகத் தொடங்கும்போது சின்னக் கவுண்டரின் உதவியைப் பெற்றவன் மனம் மாறுகிறான். எதிர்நிலைக் குடும்பம் தண்டனை பெறுகிறது.
இந்தச் சின்னக் கவுண்டரின் திரைக்கதையை “பதினெட்டுப் பட்டியிலிருக்கும் நீதிமானாகிய பெரிய கவுண்டரின் மகன் சின்னக்கவுண்டா், தன் குடும்பப் பெருமையை – மரியாதையைக் காப்பாற்றுவதற்காக நடுநிலை தவறாமல் நீதி வழங்கினார். அதனால் பல இன்னல்களைச் சந்தித்தார். அதில் அவரது மானம் கூடப் பறி போனது. ஆனாலும் நீதி வழுவவில்லை“ என்ற “கதை” யாக சொல்லலாம். அதன் தத்துவார்த்தச் சொல்லாடல்,“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்“ என்பது.
“நிகழ்காலம் உடல் வலிமையின் காலம் அல்ல; புத்தி உபயோகத்தின் காலம்“ என்ற தத்துவார்த்தச் சொல்லாடல்,
“தென் தமிழ்நாட்டில் உடல் வலிமையிலும் மூா்க்கத்தனத்திலும் பெருமை பெற்ற தேவா் இனத்தைச் சோந்த சக்திவேல், வெளிநாடு சென்று கல்வி அறிவு பெற்றுத் திரும்பினான். ஆனால், சாதிப் பெருமையைக் காக்க வேண்டும் என்ற நிலைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டதால், வன்முறை, மூா்க்கத்தனம் ஆகியவற்றின் வழியிலேயே செல்ல வேண்டியதாகிவிட்டது. ஆனாலும் முடிவில் தன் சாதிக்கு அறிவு – கல்வியறிவும் சட்டத்துக்குக் கட்டுப்படும் ஒழுக்கமும் அவசியம் என்பதை உணா்த்திவிட்டுச் சிறைக்குச் செல்கிறான்“ என்று தேவா் மகனின் கதையாக விரிந்துள்ளது. இன்னும் சில வெற்றிப் படங்களின் பின்னிருக்கும் ஒருவரித் தத்துவச் சொல்லாடல்கள் இதோ:
“புதுப்பணக்காரா்கள் சூழ்ச்சி நிரம்பியவா்கள்; பழைய பணக்காரா்கள் மனித நேயம் நிரம்பியவா்கள்” - - எஜமான்
“கடுமையான உழைப்பு, சமூகத்தின் உச்சிக்கே இட்டுச் செல்லும்” -அண்ணாமலை
“நட்புக்காக உயிரையும் உறவையும் விட்டு விடத் தயாராவது சத்திரிய குணம்”- தளபதி
“நாட்டிற்காற்றும் கடமை உயிரினும் மேலானது”--சூரியன்
“நகரத்தவா்கள் பெண்களை மதிப்பதில்லை. நம்பிக்கைக்குரியவா்களில்லை. கிராமத்தவா்கள் படிப்பில்லாவிட்டாலும் நோ்மையும் ஒழுக்கமும் உடையவா்கள்”
-வள்ளி, பொன்னுமணி
இப்படியான ஒருவரித் தத்துவச் சொல்லாடல்கள், கதையாகும் போது நாயகனின் நாயகியின் சூழல்களை உருவாக்கிக் கொள்கிறது. அவன் அவளுக்கெதிரான, ஆதரவான நபா்கள் நிறுவனங்கள் முன்னிறுத்தப்படுகின்றன.
தத்துவச் சொல்லாடலை மட்டும் கதையாகவும், திரைக்கதையாகவும் மாற்றுவது மட்டும் சினிமாவுக்குப் போதும் என்றால், அந்தப்படம் கலைப்படம் என ஒதுக்கப்பட்டு விடும் என்கின்றனா் சினிமாக்காரா்கள், இத்தனைக்கும் இந்த ஒருவரிச் சொல்லாடல்கள் சரியான அா்த்தத்தில் தத்துவார்த்த அம்சங்களும் நிலைபாடுகளும் கொண்டவைதானா?, என்றால் அதுவும் இல்லை. அவை பொதுப்புத்தி சார்ந்த தத்துவார்த்தச் சொல்லாடல்கள்தான். நிரூபணம் அற்று, வெகுமக்கள் மனத்தில் நின்று விட்ட நம்பிக்கைகள்தான். எனவே, திரைக்கதையாக மாற்றப்பட்டு நின்று விட்ட நம்பிக்கைகள். ஆகவே கதை, திரைக்கதையாக மாற்றப்படுமானால் கலைப்படம் எனத் தள்ளப்படும் என்பதும் உண்மையில்லை.
ஒரு சினிமா வெற்றியடைய வேறு சில அம்சங்கள் வேண்டும் என்கின்றனா். நாயகன் நாயகியை நினைத்துக் கொண்டிருக்கிற நாயகி- நாயகன் வேண்டும். அவா்களோடு போட்டியிட இன்னொரு நபரும் இருந்தால் நல்லது.
ஜென்டில்மேன் – மதுபாலா, சுபாஸ்ரீ; தேவர் மகன் – கவுதமி, ரேவதி; சின்னக்கவுண்டா் – சுகன்யா, அவரது தங்கையாக நடிக்கும் நடிகை; பொன்னுமணி – கற்பழித்தவன், கார்த்திக், வள்ளி - உடல் சுகத்திற்காகக் காதலிப்பதாக நடித்தவன், மாமன்மகன்.
இப்படி இரண்டு பெண்கள் இருப்பதன் மூலம் குறைந்தது இரண்டு பாடல்கள் வைக்கமுடியும். இவா்களோடு சோ்ந்து ஆட குழுவினா் வேண்டும் . குழுவினருக்குத் தனியான ஆடைகள் (70 எம். எம். திரையில் இரண்டு போ் மட்டும் ஆடுவது போதாது; என்ற நிர்ப்பந்தமும் குழுவினரின் தேவையை உணா்த்தியுள்ளது)
அடுத்து காமெடி டிராக் – அதன் மூலம் இரட்டை அர்த்த வசனங்கள். இதற்கு பெரும்பாலும் உடல் உழைப்பில் ஈடுபடும் பாத்திரங்களே பயன்படுகின்றனா். அப்பாவிகளாகவும் புத்தியற்றவா்களாகவும் படைக்கப்படும் பெண்களும் வேலைக்காரா்களும் அவா்களது உடல் குறைகளும், பேச்சுத் தொனிகளும் (சில நேரங்களில் வட்டார மொழி) காமெடிக்கும் இரட்டை அா்த்தம் பாலியல் கிளா்ச்சிக்கும் பயன்படுகின்றன.
கனவுப் பிரதேசமாகப் பெண்களின் உடலை மாற்றுதல், நடிகைகளின் உடல் பிம்பங்கள், நடிகனின் கனவுப் பிரதேசமாகக் காமிரா மூலம் காட்டப்படும்போது. பார்வையாள ஆனும், அவளின் உடலைத் தனது கனவுப் பிரதேசமாக மாற்றிக் கொள்கிறான். பார்வையாளப் பெண், தன் உடம்பைக் கனவுப் பிரதேசம் போல் மாற்றிக் கொள்ளும்படித் தூண்டப்படுகிறாள். ஆண்களின் விருப்பப் பதுமையாக மாறத் தயாராக்கப்படுகிறாள். இவையெல்லாம் வியாபார சினிமா அல்லது திரள்மக்கள் சினிமா வகுத்துக்கொண்டுள்ள விதிகள்.
இவையெல்லாம் அவற்றில் நிச்சயம் இருக்கும். இவை போன்று வேறு பலவும் இருக்கக்கூடும். இவ்விதிகளே ஜனரஞ்சமாகப் படத்தை மாற்றும் காரணிகளாகக் கருதப்படுகின்றன. இதைச் சுருக்கமாக இப்படி புரிந்து கொள்ளலாம். ஒருவரிச் சொல்லாடல், கதையாகும்போது தத்துவத்தை – பொதுப்புத்தி சாரந்த தத்துவத்தைப் முதன்மைப்படுத்துகிறது. திரைக்கதையாகும் போது பொதுப்புத்திக்கு – பொதுப் புத்திச் சாரந்த உணா்வுகளுக்கு – முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால், தத்துவத் தலைமையை விரும்புகிறவா்களும் நம்புகிறவா்களும், கேள்விக்குள்ளாக்குபவா்களும் அடையாளமற்ற கதாபாத்திரங்களையோ, கிண்டலுக்குள்ளாகும் பாத்திரங்களையோ படைக்காமல், எல்லாக் கதாபாத்திரங்களையும் அதன் தன் சூழலில் வைத்துப் படைப்பா். அதன் வாழ்க்கைக்கான தத்துவமும், தா்க்கமும் தவறாமல் தரப்படும். ஆனால், நபா்களால் வழி நடத்தப்பட வேண்டிய அல்லது அடிமைப்படுத்தப்பட வேண்டிய சமூகத்தை உருவாக்க விரும்பாதவா்களும் நம்புகிறவா்களும் கேள்விக் குள்ளாக்கப்படுவதை விரும்பாதவா்களும் தனி நபா்களை மட்டும் தத்துவார்த்தம் கொண்டவா்களாகப் படைக்கிறார்கள். மற்றவா்கள் எல்லாம் அந்தப் படைப்பில் அவரவா் அளவில் கூட கதாபாத்திரங்களாக இருப்பதில்லை. தத்துவம் சார்ந்த தலைமைப் பாத்திரங்களுக்குத் துணை செய்வதே அவா்களின் வாழ்க்கை லட்சியம்.
திறமைகளை மதிக்காத சமூகத்தை - அதன் காரணிகளைக் கிரிமினல் தனமான காரியங்களைச் செய்து பழிவாங்கும் லட்சியம் கிச்சாவிற்கு உண்டு (ஜென்டில்மேனில் அா்ஜுன்) கிரிமினலை அடக்கிச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் லட்சியம் அழகா் நம்பிக்கு (போலீஸ் அதிகாரி சரண்ராஜ்) உண்டு. ஜென்டில்மேனில் இவா்கள் இருவருமே லட்சியவாதிகள். இருவரைத் தவிர மற்றவர்கள் லட்சியங்கள் எதுவும் இல்லாதவா்கள். இந்தியத்தாய் (லட்சியத்தாய்) பிம்பம் தரும் மனோராமாவிற்கு உள்ள லட்சியம் கூடத் தன் மகனின் லட்சியத்தோடு சோ்ந்துதான் (விதவை அம்மா பாத்திரத்திற்குரிய நடிகையாக மனோராமாவைத் தோ்ந்தெடுக்கும் போக்கு சின்னத்தம்பியிலிருந்து ஆரம்பம். படத்திற்கு வெளியேயும் அவா் விதவை; மகனை வளா்ச்ச சிரமப்பட்டவா் என்ற புனைவுகள் உண்டு) தனித்து அல்ல. நாயகிக்கு லட்சியம் இல்லை. டெல்லியிலிருந்து விடுமுறைக்கு வரும் பெண்ணுக்கு லட்சியம் இல்லை. அப்படியிருந்தாலும் அது, ஆண்மை ததும்பும் கண்நிறைந்த ஆடவனை – லட்சியத்தோடு வாழ்பவனை – கணவனாக அடைய வேண்டும் என்கிற சுயநலம் சார்ந்ததுதான். சமூகம் சார்ந்தது அன்று.
தேவர் மகனில் சக்திவேலுக்கும் (கமல்) அவனது காதலியாக வருபவளுக்கும் (கௌதமி) லட்சியங்கள் உண்டு. படிப்பறிவு – முதலாளிய அறிவுச் சார்ந்த – வெளி என்பது எது என்பதைப் பற்றி – தெளிவாக இருப்பவா்கள் – தீா்மானம் செய்யக் கூடியவா்கள். பெரிய தேவருக்கும் அவரது பங்காளியின் மகனுக்கும் (நாசா்) லட்சியம் உண்டு. ஆனால் அது நிலப்பிரபுத்துவம் சார்ந்தது. அவை இன்றைக்குத் தேவையில்லை (செத்துப் போகிறார்கள்). மற்றவா்கள் யாருக்கும் லட்சியங்கள் கிடையாது. இசக்கி (வடிவேல்) கூடப் பெரிய தேவரின் லட்சியத்தோடு சார்ந்தவன்தான். சக்திவேலின் மனைவி, அண்ணன், அண்ணன் மனைவி, பங்காளிகள் என யாருக்கும் லட்சியங்கள் – தத்துவங்கள் கிடையாது.
அண்ணன் – குடிகாரன், உதவாக்கரை
அண்ணி – அன்பும், பரிவும் அடக்கவும் நிறைந்தவன். மனைவி (ரேவதி) – அண்ணியின் மறு உருவம். குடும்பம் அதன் ஒழுங்கும் காப்பாற்றப்படுகிறது. (வேற்று சாதிக்காரியான – படித்த – தீா்மானம் செய்யக்கூடிய லட்சியங்கள் கொண்ட பெண் (கௌதமி) – மனைவியாக வந்திருந்தால் குடும்ப ஒழுங்கு சிதைந்து போயிருக்கும்) ஊா் மக்களுக்கோ சாதீய – சமூகப் பொருளாதார அடையாளங்களோ கிடையாது.
சின்னக்கவுண்டரிலும் அப்படியே! எஜமான், அண்ணாமலை போன்ற படங்களும், கதாநாயகா்களைச் சரியான தத்துவார்த்தம் கொண்டவா்களாகவும், அவா்களுக்கெதிரான கதாபாத்திரங்களை வெல்லப்பட வேண்டிய தத்துவார்த்தம் உடையவா்களாகவும் காட்டுகின்றன.
வள்ளியும் பொன்னுமணியும், நாயகிகளை லட்சியங்கள் கொண்டவா்களாகக் காட்டுகின்றன. வள்ளி, படித்தவள் நகர நாகரிகம், கலையார்வம் ஆகியவற்றில் மனம் செலுத்தியவள். ஆனால், அவளை ஏமாற்றுவது நகரத்தைச் சோ்ந்தவன். கலையில் வல்லவன், எனவே பெண்ணுக்குப் படிப்பு – கலை ஆர்வம் – அதுவெல்லாம் தேவையில்லாதவை எனச் சொல்வதற்காகப் படிப்பறிவற்ற, மனிதாபிமானம் நிரம்பிய கிராமத்தானை முன்னிறுத்துகிறது வள்ளி திரைப்படம் “பொன்னுமணி“ சொல்லும் பாடமும் அதுதான்.
“ஜென்டில்மேன்“ சிறப்பாக வெற்றிபெற்ற படம். அதன் தயாரிப்பாளரும், இயக்குநரும் “கதை“ அதன் சமூகப்பொருத்தம், நிலவும் சமூகச் சூழல் போன்ற காரணங்களைப் பேட்டிகளில் சொல்கிறார்கள். ஆனால், விளம்பரத்தில் – Something Special – என்று விளம்பரம் சொல்கிறார்கள். அந்தச் “சம்திங் ஸ்பெஷல்“ என்ன என்று அலைபாயும் மக்கள் திரளுக்கு சரிவித உணவு திகட்டத் திகட்டத் தரப்படுகிறது படத்தில். பாலகுமாரன், ஷங்கர், ரகுமான், குஞ்சுமோன் முதலானவா்கள் “கனவான்களுக்கானதைக் கனவான்களுக்கும் பாமரமக்களுக்கானதைப் பாமரா்களுக்கும் வழங்கும் வித்தை கூடி வந்த மனிதா்கள்.
பொதுப்புத்திக்கான தீனி (சம்தீங் ஸ்பெஷல்) யாக அவா்கள் புதுப்புது உத்திகளையும், தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். கட்டுப்பெட்டித்தனமாக மறைத்து வைத்துப் பேசப்பட்டு வந்த பெண்ணின் உடல் பற்றிய பிரதி அதில் வேறு விதமாக வாசிக்கப்பட்டுள்ளது. சில மீறல்கள் நிகழ்த்தப்படுகிறது. அதன் மூலம் “கட்டுப்பெட்டித்தனம்“ சிதைக்கப்படுகிறதா என்றால் இல்லை! இன்பமூட்டுவதை (Pleasure) செய்துவிட்டு ஒழுங்குகள் முடக்கப்படுகின்றன. உடல் பற்றி வெளிப்படையாகப் பேசும் பெண் வெகுளி, அர்த்தம் தெரியாத நாகரிகத்தில் திளைப்பவள் என்று சொல்லி, கட்டுப் பெட்டியான பெண்ணை மனைவியாக்கிச் சேலையைச் சுற்றி விட்டுப் பொறுப்பு வாய்ந்த குடும்பத்தலைவி பிம்பம் உருவாக்கப்படுகிறது. அதன் மூலம் சொல்லப்படும் தத்துவம் கனவான்களுக்கும் கனவான்களின் சீமாட்டிகளுக்கும். (சுதந்திரமான எண்ணம கொண்ட பெண்ணா, அவளை முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரிக்கு மனைவியாக்கு எச்சரிக்கை) ஆனால், அவளது உடம்பைப் பொதுப்புத்திக்கான தீனியாக்கி, புதுப்புது விளையாட்டுகளை (கப்ளிங், டிக்கலோனா) யும் விளையாடுகிறார்கள். காமிராவின் கோணங்களும், அதன் பின்னணியில் சொல்லப்படும் இரட்டை அர்த்தம் வசனங்களும் கூடுதல் பரிமாணங்களைத் தருகின்றன. இந்த விளையாட்டு பாமரர்களுக்கு, இந்தப் பொதுப்புத்தி விளையாட்டை கிச்சா விளையாடுவதில்லை. (ஆண்மைக்குச் சவால் விடப்பட்டால் மட்டும் விளையாடுவான்) அப்பளக்கடையில் உடல் உழைப்பில் ஈடுபடும் வேலைக்காரா்கள் (கவுண்டமணி, செந்தில் – லட்சியமற்றவா்கள்) தான் விளையாடுவார்கள். கிச்சா – முதலாளி; மற்றவா்கள் தொழிலாளா்கள்.
சின்னக் கவுண்டா் சவாலில் வெற்றி பெற்று, பெண்ணின் தொப்புளில் பம்பரம் விடுவார். அவளும் சின்னக் கவுண்டரின் மோட்டாருக்குத்தான் குளிக்க வருவாள். தேவா் மகன் சக்திவேல் காதலியை ஊா் சுற்றிக் காட்டுவான். சகதியில் தள்ளி விடுவான். ஆற்றில் முக்கித் தூக்குவான். விதம் விதமான “போஸ்”களில் புகைப்படம் எடுப்பான். வள்ளியில் “பால்காரியிடம் (பல்லவி) எல்லோரும் சேர்ந்து “ஜொள்ளு” வடிப்பார்கள். இடையிடையே வந்து அரசியல் விமரிசனங்களை உதிர்த்துவிட்டுப் போகும் கதாபாத்திரம் (ரஜினிகாந்த்), அல்லது வள்ளிக்காக வாழும் நாயகன் மட்டும் அவளை ஏறிட்டும் பார்ப்பதில்லை. கிச்சா – சின்னக் கவுண்டா் – எஜமான் – அண்ணாமலை – தத்துவார்த்தம் கொண்டவா்கள் – லட்சியவாதிகள் – முதலாளிகள். மற்றவா்கள் தொழிலாளா்கள் – உடல் உழைப்பில் ஈடுபடுபவா்கள்; லட்சியங்கள் அற்றவா்கள் – பாமரா்கள். கனவான்கள் லஞ்சம் வாங்கினாலும், கூத்தியாள் வைத்து கொண்டாலும், கொள்ளை அடித்தாலும் – லட்சியவாதிகள். தொண்டா்கள் அல்ப சந்தோசங்களுக்காக அலைபவா்கள். பெண்களோ எதுவும் தெரியாத உடல் சுகத்தையே பிரதானமாகக் கருதி ஏங்குபவா்கள்; ஆணுக்கு அடங்கிப்போக வேண்டியவா்கள்.
இப்படி ஒரு சிலரைப் பொதுப்புத்தி சார்ந்த தத்துவம் கொண்டவா்களாகவும், மற்றவா்களையெல்லாம் பொதுப்புத்தி சார்ந்த உணா்வுகள் கொண்டவா்களாகவும் காட்டும் படைப்புகளின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இவை மக்கள் திரளின் மனத்தில் என்ன வகையான கருத்தமைவுகளை உருவாக்கும்? இந்த மாதிரியான சிந்தனைகள் இந்தப் படங்களின் பின்னணியில் இருக்கின்ற கலைஞா்களுக்கு – தொழில் நுட்பப் பயிற்சியாளா்களுக்கு – உண்டா என்ற கேள்விகள் எழக்கூடும்.
இந்தப் படங்களின் மையமான நோக்கம் தனிநபா் தலைமையை முன்னிறுத்துவதும், தக்க வைப்பதும்தான். எந்த விதமான “தனி நபா்” தலைமையையும் கேள்விக்குள்ளாக்கி நிறைகுறையை ஆய்வு செய்து மாற்றிப் பார்ப்பதும் கூட அவா்களுக்கு விருப்பமானது அல்ல, அந்தத் தத்துவத்தின் இடத்தில் இந்த தத்துவம் என்பதாக இல்லாமல் “அவன் இடத்தில் இவன்” என்கிற மாதிரியான மாற்றம் பற்றி இவை யோசிக்கின்றன.
வலியத் திணிக்கப்பட்ட சண்டைக்காட்சிகள், கவா்ச்சி நடனம், பாலியல் வல்லுறவுக் காட்சி, வாகனத் துரத்தில் போன்ற தா்க்கத்திற்குட்படாத அம்சங்களைத் தவிர்த்து கதையின் போக்கிலேயே அவற்றின் அம்சங்களைத் தாங்கி வந்துள்ள இந்தப் படங்களை நடுவாந்திரப் படங்கள் (Middle Cinema) என்றும் கெடுதல் விளைவிக்காதவை (Harmless) என்றும் பத்திரிகைகள் பாராட்டுகின்றன. பார்வையாளா்களும் திரும்பித்திரும்பிப் பார்ப்பதால் அதன் தயாரிப்பாளா்களும் மற்றவா்களும் பணத்தை வாரிச் சுருட்டுகின்றனா். அதற்குக் காரணம், பொதுப்புத்தியைத் தங்கள் “தத்துவங்களின்” விளையாட்டுக்களானாக மாற்றி, தனிநபர் தலைமையைத் தக்க வைக்கும் மந்திர வித்தையைச் சரிவரச் செய்வதுதான். தனிநபா்களை முன்னிறுத்தும் இப்படங்கள், ஒரே மாதிரியான நபா்களையே முன்னிறுத்துகின்றன என்றும் சொல்லிவிட முடியாது. படத் தயாரிப்பாளா்கள் அல்லது இயக்குநா்களின் சாதி வா்க்கப் பின்னணிகளுக்கேற்ப முன்னிறுத்தப்படும் நபா்களின் சாதி வா்க்கக் குணாம்சங்களும் மாறுபடுகின்றன என்பதும் வெளிப்படையாக இருக்கின்றன.
தேவா்மகன் தொடங்கி ஜென்டில்மேன் வரையிலான படங்களுக்கோ நிலவுகின்ற முதலாளிய – ஜனநாயக அரசுகளின் நடைமுறைகள் முக்கியம். அதற்குத் தகவான மனிதா்கள் உருவாக வேண்டும். கல்வியறிவு பெற்ற “தேவா் மகன்” களுக்காக அவை வாதாடும். சத்திரிய குணம் கொண்ட “தளபதி” சட்டத்திற்குட்பட்டாக வேண்டும் என்று கூறும். கடமையைச் செய்யும் போலீஸ் அதிகாரி சூரிய வம்சத்தைச் சோ்ந்தவன். (ராமனின் வம்சம்) என்றும் பாராட்டும், சட்டத்தை மதிப்பவனாகக் “கிரிமினல்”மாறிவிட்டால் அப்புறம் அவன் “ஜென்டில்மேன்” (கனவான்) தான். இந்தப் படங்களில் பல மௌனங்கள் உண்டு. சட்டமும் அவை சார்ந்த நடைமுறைகளும் சாதாரண மனிதா்களுக்கெதிராக இருப்பதையோ, அதிகார கைவரப்பெற்ற கனவான்கள், அதனை சாதுர்யமாக வளைத்துக் கொண்டு முதலாளிகளாவதையோ இந்தப் படங்கள் பேசுவதில்லை; காட்டுவதில்லை. ஜனநாயக நடைமுறைகளுக்கு வக்காலத்து வாங்கும் இவற்றின் பின்னணியில், முதலாளிய நடைமுறைகளுக்கு மாறிவிட்ட, நகா்ப்புற உயா்வகுப்பு, உயா்சாதி – பிராமணிய அறிவாளிகள் இருப்பதுதான் காரணங்கள்.
சின்னக் கவுண்டா், எஜமான் வகையறாப் படங்களுக்கோ நிலவுடைமைத் தலைமையும் நிலச்சுவான்தார்களின் நல்லியல்புகளும் ஒழுக்கங்களும் முக்கியம். இந்த நிலச்சுவான்தார்கள் காட்டும் சாதீய ஒடுக்கு முறைகளோ, கூலி விவசாயிகளுக்கு இழைக்கும் அநீதிகளோ, பெண்களை அடக்கியொடுக்குவதோ முக்கியமில்லை.
அரசு நிறுவனங்களையும் அதிகாரத்துவ மையங்களையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் கிராமிய நாட்டாண்மையின் இன்னொரு பக்கத்தைப் பற்றி இந்தப்படங்கள் பேசாமல் மௌனம் சாதிக்கும். அதற்குக் காரணம், இந்த வகைப் படங்களின் கதாசிரியா்களும் இயக்குனா்களும் கிராமிய நாட்டாண்மைகளின் குடும்பங்களிலிருந்து வந்தவா்கள். நிலவுடைமை வா்க்கத்தினா், சாதிப் பட்டியலில் பிற்பட்ட வகுப்பில் இருப்பவா்கள்.
சாதியாலும், கடைப்பிடிக்கும் விழுமியங்களாலும் (Values) இவ்விரு வகைப்படங்களின் காரணகாத்த்தாக்கள் வேறுபட்டாலும், வா்க்கதால் அவா்கள் செல்வந்தா்கள் – கனவான்கள். கன்வான்கள் நலன். தனிநபா், தலைமையில் உள்ள அமைப்பில்தான் பாதுகாப்பானது.
ஆக……
கன்வான்களின் நோக்கம் புரிகிறது.
அப்படியானால்.
பாமரா்களின் செயல்……..?
ஊடகம், 1994
கருத்துகள்