சந்திக்கும் கணங்களின் அதிர்ச்சிகள் : புலப்பெயர்வு எழுத்துகளின் ஒரு நகர்வு

இரண்டு மாத இடைவெளிக்குள் இந்த ஆறு சிறுகதைகளும் வாசிக்கக் கிடைத்தன.புலம்பெயர்ந்த எழுத்து அல்லது அலைவுறு மனங்களின் வெளிப்பாடு என்னும் அடையாளத்துக்குள் நிறுத்தத்தக்க இந்த ஆறுகதைகளில் ஆகச்சிறந்த கதை எது எனத் தேர்வு செய்யும் நோக்கம் கொண்டதல்ல இந்தக் கட்டுரை. அதேநேரத்தில் அப்படியொரு தொனி வெளிப்படுவதைத் தவிர்க்கமுடியாது என்பதையும் முதலிலேயே சொல்லி விடலாம்.

ஆறுகதைகளில் மூன்று கதைகள், காலம் இதழின் 51 -வது இதழில் வாசிக்கக் கிடைத்த கதைகள். அடுத்த மூன்று. அம்ருதா இதழில் வாசிக்கக்கிடைத்த கதைகள். அவை:

1] அந்திக்கிறிஸ்து- ஷோபாசக்தி (காலம் இதழ் 51/ 54-66)

2] ஊபர்-அ.முத்துலிங்கம் (காலம் இதழ் 51/ 77-80)

3] சோபிதாவுக்குப் பெர்லின் காட்டுதல்- பொ.கருணாகரமூர்த்தி (காலம் இதழ் 51/ 67-76)

4] சாய்வு-அனோஜன் பாலகிருஷ்ணன் (அம்ருதா மார்ச், 2018/14-21)
5] உறைந்த நதி-இளங்கோ (அம்ருதா - ஏப்ரல் 2018 / 26-32)
6] உமையாள்- தெய்வீகன் ( அம்ருதா – ஏப்ரல், 2018 /60-66)

முதல் மூன்று கதைகளையும் எழுதியவர்களின் எழுத்துகளைக் கடந்த கால் நூற்றாண்டு காலப்பரப்பில் வாசிக்க்கிடைத்த எழுத்துகள் எனலாம். முதன்மையாகப் புனைகதை எழுத்தாளர்களாகவே அறியப்படும் இம்மூவரின் எழுத்துகளும் கடந்த 40 ஆண்டுகால இலங்கைத் தமிழர்களின் இருப்பை, நகர்வை, அலைக்கழிப்பை அதனதன் சூழலில் பதிவுசெய்து செய்துள்ளன. இப்போது பிரான்சில் வசிக்கும் ஷோபா சக்தி, ஜெர்மனியில் வசிக்கும் பொ.கருணாகரமூர்த்தி, கனடாவில் வசிக்கும் அ.முத்துலிங்கம் ஆகிய மூவரும் எழுத்தில் நீண்ட அனுபவங்கள் கொண்டவர்கள் என்ற வகையில் மூத்த எழுத்தாளர்கள். இலங்கைத் தமிழினச் சிக்கல்கள், அதனால் எழுந்த ஈழத் தனிநாட்டுக்கோரிக்கை, அதனை அடைவதற்காக நடத்தப்பெற்ற போராட்டங்கள், போர்கள், அதனால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகள், 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னான காலகட்ட த்தைப்பற்றிய பார்வைகள் போன்றவற்றைத் தங்களது புனைகதைகளில் பதிவுசெய்வதில் இம்மூவருக்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு. வெளிப்பாட்டு வடிவத்திலும் மொழிப்பயன்பாட்டிலும் துலக்கமாக வெளிப்படும் இந்த வேறுபாடுகளுக்கான காரணங்கள் பலவாறு இருக்கக்கூடும் என்றாலும் முதன்மையான காரணமாக இருப்பது அவர்களின் அரசியல் புரிதலும் பார்வையுமாகவே இருக்கும்.

காலம் 51 இதழில் வாசிக்கக்கிடைத்த மூன்று கதைகளோடு தொடர்புபடுத்திப் பேசப்போகும் மற்ற மூன்று கதைகளும் அம்ருதாவின் ஒரே இதழில் அச்சிடப்படவில்லை. அடுத்தடுத்த மாதங்களில் சிறுகதைப் பிரிவில் வாசிக்கக் கிடைக்கின்றன. இம்மூன்று கதைகளையும் எழுதியுள்ள இளங்கோ, தெய்வீகன், அனோஜன் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களே என்றாலும், வயது, எழுத்து அனுபவம், எழுதியுள்ள பரப்பு ஆகியவற்றில் முன்னர்க் குறிப்பிட்ட மூவரோடு நிற்கும்படியானவர்கள் அல்ல; இளையோர்கள். இம்மூவரில் இளங்கோ, டிசே தமிழன் என்ற பெயரில் எழுதும் புனைவல்லாத எழுத்துகளைப் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே வாசித்திருக்கிறேன். ஆனால் சிறுகதைகள் இப்போதுதான் வாசிக்கக் கிடைக்கின்றன. தெய்வீகனின் கதைகளும் அனோஜன் பாலகிருஷ்ணனின் கதைகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாசிக்கக்கிடைக்கின்றன.

பழக்கப்பட்ட பாதையில் பயணித்தல்

வாசிக்கக் கிடைத்த இந்தக் கதைகள் ஈழத்தமிழ் புலம்பெயர் எழுத்துகள் என்ற வகைப்பாட்டிற்கான அடையாளத்தோடு வெளிப்படுகின்றன என்றாலும் முக்கியமான நகர்வொன்றைக் கவனப்படுத்துகின்றன. அந்நகர்வு புலம்பெயர்த் தமிழ் எழுத்துகளின் புதிய அடையாளமாகவும் கவனிக்கத்தக்க நகர்வாகவும் இருக்கக்கூடுமா? என்ற விவாதப்புள்ளியை எழுப்புவதுமே இங்கு நோக்கம். புலம்பெயர்வு எழுத்து, பல கட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறது. இன்னொரு தேசத்திற்குள் நுழைவதற்குத் தேவையான ஆவணங்கள் இன்மையின் விளைவாக ஏற்பட்ட இன்னல்கள், துயரங்களில் தொடங்கி, நிரந்தர அகதியாக மாறி, குடியேற்ற உரிமைகள், அந்த நாட்டின் நிரந்தரக் குடிமக்களாக ஆதல் என்பது வரையிலான அரசியல்சார் எழுத்துக்களைத் தாண்டித் தனிமனிதர்களின் மனம், புதிய தேசங்களின் சட்ட நெருக்கடிகள், அதன்வழி கிடைக்கும் உரிமைகள், சலுகைகள், நிம்மதியான வாழ்க்கைக்குள் நுழைதல் என்பதையெல்லாம் எழுதத் தொடங்கியுள்ளன. என்றாலும் அவர்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சொந்த ஊர் நினைவுகள் ஏற்படுத்தும் நெருக்கடிகளும் பதிவாவதின் வழியாக பூர்வீக வெளிக்கும் புகலிட வெளிக்குமான அலைவுகளில் நிலைகொள்கின்றன.

தமிழ்மொழியையும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையும் ஏற்றுக்கொண்ட மனிதர்கள் அந்நிய மொழி மனிதர்களை, அந்நிய மண்ணில் சந்திக்க நேரும்போது ஏற்படக்கூடிய சுவாரசியங்களைத் தொட்டுச் செல்லும் ஏராளமான கதைகளை எழுதியவராக அ,முத்துலிங்கம் தனது கதைகளின் வழி பதிவாகியுள்ளார். அந்த மனப்பதிவுகள் அவரது எழுத்துகளை பிற புலம்பெயர் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் தன்மைகொண்டவை. பெரும்பாலும் அவர் வாழ நேர்ந்த- பயணம் செய்த நாடுகளின் பின்னணியில் மனிதர்களை நிறுத்தி அவர்களை வாசிக்கும்படி தூண்டுபவை. இந்தத் தன்மைக்கே முதன்மையளிக்கும் அவரது கதைகளில் புலம்பெயர்வினால் அல்லது இடப்பெயர்வுகளால் ஏற்படும் வலியையோ, ஆற்றாமையையோ வாசிக்கமுடியாது. புலம்பெயர நேர்ந்த போர்ச்சூழலின் அனுபவங்களைக் கூட அறிந்துகொள்ள முடியாது. அதற்கு மாறாக அக்கதைகளில் வெளிப்படுவனவற்றைப் பண்பாட்டு நெருக்கடிகளின் அடுக்குகள் என்பதாகப் புரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் சந்திப்புகளை மையமிட்டுத் தொடங்கும் கதைகளாக அவரது கதைகளை வாசித்திருக்கிறேன். அந்தச் சந்திப்புகள் தற்செயல் சந்திப்புகளாகவும் திட்டமிட்ட சந்திப்புகளாகவும் கதைகளில் இடம்பெறுகின்றன. சந்திப்பவர்களிடம் வேறு தேசத்தவர் என்ற என்ற மனவோட்டம் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பதோடு பாலின வேறுபாடும், தலைமுறை வேறுபாடும் கதை நிகழ்வுகளை வடிமைப்பதில் முதன்மை இடம்பிடிப்பனவாக இருக்கும். ஏற்கெனவே உருவாக்கப்பெற்ற இந்த அடையாளம் “ ஊபர்” கதையிலும் முழுமையாக வெளிப்படுகிறது.

“ சிலருக்கு எங்கே போனாலும் ஒரு பிரச்சினை வரும். சிலர் பிரச்சினையை தங்களுடன் எடுத்துக்கொண்டு செல்வார்கள். நான் இரண்டாவது வகை. எங்கே போனாலும் என் கைப்பைபோல பிரச்சினையும் வந்துவிடுகிறது. இப்பொழுது பொஸ்டனுக்குப் போன போதும் இப்படி நடந்தது” எனத்தொடங்கி,

‘ஐயா, நான் எப்படித் திரும்பிபோவது?’. நான் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ சாரதிகளிடம் வழி கேட்டிருக்கிறேன்.முதன் முதலாக என்னிடம் ஒரு வாகன ஓட்டி வழி கேட்கிறார். ‘வந்தமாதிரிதான். ஏசு உங்களுடன் வருகிறார்’ என்றேன்.

சொல்லப்படும் கதைக்குள் பயணி கதைசொல்லியாக இருக்கிறார். அவர் ஊபரின் உதவியோடு செய்த பயணத்தின் கதையைச் சொல்வதாக நினைத்துக்கொண்டு அந்த வாகனத்தை ஓட்டும் பொறுப்பிலிருக்கும் சாரதியின் கதையையே சொல்கிறார். பல்வேறு நிலைகளில் பயணங்களை ஏற்பாடு தரும் குழுமங்களின் துல்லியமான நடைமுறைக்கு மாறாகத் தனது மனம்போன போக்கில் செயல்படும் ஒரு சாரதிக்குள் இருக்கும் / செயல்படும் நிச்சயமின்மையை வாசிக்கத் தருகிறது கதை. நவீனவாகனங்களின் சாரதிகளுக்குத் தேவையான கருவிகள் குறித்தோ, அதனைக் கையாளத் தெரியாத நிலையில் தன்னை நம்பிவரும் பயணியின் மனநிலை குறித்தோ அலட்டிக்கொள்ளாத ஒரு மனிதனோடு செய்யும் பயணம் தரும் அச்சத்தைவிடவும் அந்த மனநிலைக்குரியவனை வாசிக்கும் மனப்பாங்குதான் கதையின் முதன்மையான பங்களிப்பு. ஒரு கதையில், நிகழ்வுகளையும் நிகழ்வுகளுக்குத் தங்கள் வினைகளால் அர்த்தங்களை உருவாக்கும் பாத்திரங்களையும் வாசிக்கிறோம் என்ற என்ற நிலையிலிருந்து வாசிப்பவர்களை விலக்கிவிடும் அ.முத்துலிங்கம், தனது கவனமான சித்திரிப்புகளின் வழிக் கூர்மைப்படுத்துவதோடு, உரையாடல்களில் ஒருவித அங்கதத் தொனியை உருவாக்கி வாசகர்களைக் கதைக்குள் இழுத்துக் கொள்ளும் திறனை இந்தக் கதையிலும் முழுமையாகச் செய்துள்ளார். 

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களிடம் கடந்த காலத்தை – அகதி வாழ்க்கைக்குள் நுழைய நேர்ந்த நெருக்கடியை முழுமையாக மறந்து புலம்பெயர்ந்து வாழும் நாட்டிற்குள் ஐக்கியமாகிவிட்டார்கள் என்பதைச் சொல்வதோடு, போருக்கு முந்திய யாழ்ப்பாண மேட்டுக்குடி மனநிலையோடும் அலைகிறார்கள் எனப் பேசுகிறார். யாழ்ப்பாண மனநிலையைத் தக்கவைக்க இயலாது என்ற போதிலும், போலியான ஆடம்பரங்களைக் கைவிடுவதாக இல்லை என்பதை விமரிசனப்பூர்வமாகச் சொல்ல நினைத்த பொ.கருணாகரமூர்த்தி, தமிழ்நாட்டுச் சினிமாக்காரர்களின் மேல் கொண்ட ரசிக மனோபாவம் அங்கும் தொடர்வதைக் கதை நிகழ்வாக்குவதின் வழியாகப் பேசுகிறார். சொந்த நாட்டில் திருமணத்திற்குரிய வயதிலிருக்கும் சகோதரிக்காகச் சேமித்து வைத்த பணத்தை ஜெகன் என்னும் இளைஞன், தமிழ்ச் சினிமா நடிகை தந்த தற்காலிக சுகத்தில் இழந்துபோன நிகழ்வைக் காட்டுகிறார். ஜெகனின் வீழ்ச்சி தொடங்கிய இடத்தைச் சுட்டிக்காட்டினால் பொ.கருணாகரமூர்த்தியின் கதை எழுப்ப விரும்பிய பரிகாசத்தொனி எளிதாகவே புரிந்துவிடும். வீழ்ச்சியின் அடையாளமாக அவனது கழுத்திலிருந்த தங்கச்சங்கிலி இடம் மாறியதில் தொடங்குகிறது. அதனை இப்படி எழுதுகிறார்:

“பெர்லின் பிள்ளையார் பால்குடித்த விந்தைக்கு அடுத்தபடியாக.. ஒரு 500 இயூரோ கைமாத்துக் கேட்டாலே ஏதோ கிட்னியைக் கேட்டமாதிரி திகைச்சு மூஞ்சூறுமாதிரி மாமாங்கம் யோசிக்கிற பயல் ஐந்து சவரன் தங்கச்சங்கிலியைத் தூக்கிக் கடாசின அற்புத த்தைப் பெர்லினில் பறையாத வாய்களே இல்லை அவனது நல்ல நண்பர்களும் ஆற்றாமையில் தமக்குள் ‘ஒருநாளைக்கு இளித்துவிட்டுப் போகிறவளுக்கு தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தானே லூஸுப் பான்னாடை என்று புறுபுறுத்தனரே தவிர, ‘தற்கால இளைஞர்களுக்கு அறிவுரைகள் பிடிக்காது என்பதால் ஜெகனிடம் நேரடியாகக்கருத்து சொல்லத் தயங்கினர்.

சங்கிலியை மேடையில் தந்தவன், கைவசமிருந்த மொத்தப் பணத்தையும் ஸோபிதா என்னும் தமிழ்நாட்டுச் சினிமா நடிகையை இரண்டுநாள் தன்னோடு இருக்கச் செய்து பெர்லின் நகரைச் சுற்றிக்காட்டிவிட்டு, அவள் வாங்கிய பொருட்களுக்கெல்லாம் தானே பணம் தந்து தீர்த்தான் என்பதே கதையின் மொத்த விவரிப்பும். தமிழ்நாட்டுச் சினிமாக்காரர்களின் மீதான ஈர்ப்பு என்பது போர்க்கால ஈழவாழ்வில் தவிர்க்கமுடியாமல் ஒட்டிக்கொண்ட அசட்டுத்தனம். அந்த அசட்டுத்தனத்தை 30 ஆண்டுக்காலப் போர்நிலை வாழ்வும், அதனால் நேர்ந்த புலம்பெயர் துயரங்களும் போக்கவில்லை என்பதை எள்ளலுடன் சொல்லி முடிக்கிறது.

பட்டாபிஷேகத்திற்கு முன்பு சீதையைத் தீக்குளிக்கும்படி ராமரே சொன்னார் என்ற அதிர்ச்சியில், “அவன் சொன்னானா?” என அகல்யா மரியாதையற்ற ஒருமையில் கேட்டதாக இந்தியத் தொன்மங்களை மறு உருவாக்கம் செய்தவர் புதுமைப்பித்தன். அதற்கிணையாகச் சொல்லத்தக்க தொன்ம மறு ஆக்கக் கதை அந்திக்கிறிஸ்து. பைபிளில் இடம்பெற்றுள்ள தொன்மக் குறிப்புகளை மறு ஆக்கம் செய்ய பைபிளின் வெளிப்பாட்டு வடிவத்தையே கையாண்டுள்ளார். அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்ட பைபிளின் வெளிப்பாட்டு உத்தியைக் கைக்கொண்டு புனைகதை வடிவத்தில் ஏற்கெனவே வெளிப்பட்டவர், இந்தக் கதையிலும் அதே பாணியைப் பின்பற்றியுள்ளார். 30 அதிகாரங்களில் விரிக்கப்பட்டுள்ள அந்தக் கதையின் முதல் 3 அதிகாரங்கள் இப்படித்தொடங்குகின்றன.

1.1கவர்னர் தூக்கத்தில் இருந்தபோது இரவோடு இரவாக அவருடைய பதவி நாட்டின் அதிபரால் பற்றிக்கப்பட்டிருந்தது.

2.1. கவர்னர் பதவி பறிக்கப்பட்டு, கடுமையான இருபத்திநான்கு மணிநேர இராணுவக் காவலோடு பிலாத்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு ஒருவாரம் ஆகிப்போயிற்று.

3,1. எட்டாம் நாள் பிலாத்து நண்பகலிற்கு மேலேதான் படுக்கையிலிருந்து எழுந்தார். பல்கூட துலக்காமல் நேரே சமையலறையிக்குச் சென்று, தென்ன ஞ் சாராயப் போத்தலைத் திறந்து ஒரு பெரிய கண்ணாடிக்கோப்பையை அவர் நிறைத்துக்கொண்டிருக்கும்போது சமையலறை வாசலில் ஓர் இராணுவ வீரன் தோன்றினான்.

கடைசி அதிகாரத்தின் கடைசி இரண்டு வசனங்கள் இப்படி முடிகின்றன:

· பிலாத்து பாற்சோறால் நிறைந்த வெள்ளித் தட்டோடு சமையலறையிலிருந்து வெளியே வந்தபோது அந்த வீட்டில் யாரும் இருக்கவில்லை

· எல்லா வாசல்களும் திறந்து கிடந்தன.

நெடுங்காலப் போரில் மகன்களை இழந்தவர்களின் குரலாகவும், காணாமல் ஆக்கப்பட்ட மகன்களைத் தேடும் அம்மாக்களின் குறியீடாகவும் மரியாவைக் கதைக்குள் உலவ விட்டுள்ளார். எந்த நேரமும் கைவசம் தூக்கிக்கொண்டே அலையும் தட்டச்சு மிஷினில் புகார் மனுக்களையும் காதல் கடிதத்தையும் தட்டச்சிக்கொண்டே அலைபவளாக வரும் மரியாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் அரசதிகாரத்தின் கண்ணிகளையும் அடையாளங் காட்டுகிறார். ஆணவமாகத் திரியும் கண்ணிகளும், ஆற்றாமையோடு அலையும் கண்ணிகளுமெனப் போருக்குப் பிந்திய இலங்கை அரசியல் ஷோபாசக்தியின் எழுத்து முறையில் தீவிரமாக வெளிப்பட்டுள்ளது. கவனமாகப் பயன்படுத்தப்படும் மொழி, சொல்முறை, எழுப்பும் உணர்வுகளின் சுழற்சி, உருவாக்கும் குற்ற மனங்களின் அடுக்குகள் என்பனவற்றின் வழியாக ஷோபா சக்தி அசலான அரசியல் கதையாக எழுதியுள்ளார். ஈழப்போராட்டத்தையும், ஈழத் தமிழர்களின் விடுதலையையும் முழுமையாகத் தனது எழுத்துப்பரப்பிலிருந்து நீக்க முடியாது என்பதை வெளிப்படுத்தும் கதை. அவருக்குப் பழக்கப்பட்ட பாதையும் கூட.

புதிய நகர்வு

இம்மூன்று கதைகளிலிருந்து விலகி வேறுவிதமான நகர்வாக இளங்கோ, தெய்வீகன், அனோஜன் ஆகிய மூவரின் கதைகளும் வெளிப்பட்டுள்ளன. இந்தக் கதைகள் விவாதிக்க விரும்பும் மையங்களை - உரிப்பொருளைக் காமம் அல்லது காதல் என்பதாகச் சொல்லலாம்.

மதுபான விடுதியொன்றில் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த சூஸன், எந்தக் காரணமுமில்லாமல் இன்னொருவனைச் சந்தித்து, அந்த இன்னொருவனோடு தனது உரையாடலையும், தனது உடலின் நெருக்கத்தையும் காட்டித் தொடர்கிறபோது உண்டாகும் வன்மத்தில் கொலைகாரனாக மாறிவிடுவதைச் சொல்லும் இளங்கோவின் கதையில் வரும் இந்த வரிகளே கதையெழுப்பும் உரிப்பொருளான காமத்தின் சாயைகளைக் காட்டுவன.

· மொழியாலும் கலாசாரத்தாலும், மேற்கு -கிழக்கு என்று வெவ்வேறு பின்புலங்களாலும் இருவரும் தூரத் தூரவாகவே இருந்தனர். ஒவ்வா முனைகள் அதிகம் கவர்வதில்லையா, அதுபோல் எதுவோ அவர்களை இணைத்துவைத்தது போலும்

· நான் சொல்வதை மவுனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தவன் கொஞ்சநேர அமைதியைக் குலைத்து , “என்னதான் இருந்தாலும் ஒரு தமிழ்ப்பெட்டையை நான் லவ் பண்ணியிருந்தால் இப்படியெல்லாம் செய்திருக்க மாட்டாள்தானே” என்றான்.

· “தமிழ்ப் பெட்டை என்றில்லை, மனிதமனங்ககளே விசித்திரமானதுதான். கணந்தோறும் மாறிக்கொண்டிருப்பவை.

சந்தித்துக்கொண்ட ஆணும் பெண்ணும் உடல் ரீதியான தொடுகைக்கும் தனித்திருத்தலுக்கும் வாய்ப்பளிக்காத சமூகக் கட்டுகள் கொண்டது கீழைத்தேய வாழ்வியல். இதிலிருந்து மாறுபட்ட பெண்களை – அதுவரை சந்தித்திராத ஆடவனோடு ஒரே மேசையில் அமர்ந்து மதுவருந்தவும், அவளது அடுத்த நாள் வேலைத்திட்ட நெருக்கடியைப் பகிர்ந்துகொள்ளவும், அதில் திருப்தி அடையும்போது முதல் நாள் சந்தித்தவனைத் திரும்பவும் அழைத்து நட்பாகி, உடலைத் திறந்து காட்டவும் தயாராகும் பெண் என்பவள் மேற்குலகின் பிரதிநிதி. அதே நேரத்தில் அவனைப் பிரிந்துவிடவும் அதே மனநிலையை உருவாக்கிக் கொள்பவள். இந்த மனநிலை என்பது ஒருவிதத்தில் தற்காலிகமாகவே எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் மனநிலை. இதனைத் தயக்கமின்றி ஏற்கத்தயங்கும் கீழைத்தேய ஆணை -இளைஞனின் தன்னிலையை இளங்கோவின் கதை முன்வைத்துள்ளது. இந்த தயக்கத்தை உணர்ந்த நிலையில் தான் நேர்கோடற்ற – தொடர்புகள் இல்லாத -சம்பவங்களையும் மனிதர்களையும் உள்ளடக்கிய கதைசொல் முறையைக் கையாண்டுள்ளார். கதை முடிந்தபின் ஒரு குறிப்பையும் தருகிறார்.

இதேபோன்றதொரு தவிப்பாகவே அனோஜனின் கதைக்குள் வருபவனின் தவிப்புகளும் இருக்கின்றன. தன்மைக்கூற்றில் சொல்லப்படும் அந்தக் கதையின் ஆண் இலங்கையிலிருந்து படிக்கச் சென்ற மாணவனாகவும், அவனோடு பொதுக்குளியலறையைப் பகிர்ந்துகொள்ளும் வசதி மட்டும் கொண்ட வீட்டில் தங்கிக் கொள்ள வந்தவளின் உடல் மீதான விழைச்சும், இருவரும் இணைந்து கஞ்சா, மது எனக் கட்டுப்பாடுகளற்று இருந்த விடுதலை மனநிலையும் திடீரென்று ஒருநாள் இல்லாமல் போவதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையுமாக விரிந்துள்ளது அந்தக் கதை.

இருவருக்கும் ஒரே பொதுக்குளியலறை. அதைப்பற்றி உனக்கு எந்தவித கவலையும் இல்லை. குறைந்தவிலையில் வாடகைவீடு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றுதான் சொல்லியிருந்தாய்.

என ஆரம்ப அறிமுகங்களிலிருந்து நகர்ந்து கடைசியில்

“குற்றவுணர்வை கடப்பது என்பது எத்தனை கடினம்” என்றாய் ஒரு பெருமூச்சு வெளிப்பட

“அதை யார் மீதாவது சாய்த்துவிட்டு கடப்பதுதான் இருக்கும் வழி” என்றேன்.

என்னைப்பார்த்துப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே அன்றைய தின வகுப்புக்கு நீ புறப்பட்டுச் சென்றாய். உன் அண்ணாவின் பெயரை இதுவரை நான் கேட்டதில்லை, நீயும் சொன்னதில்லை. என் பெயரை எனக்குள் நானே சொல்லிப் பார்த்தேன்.

தன்னிடம் அவள் உடல்ரீதியாக கொண்ட உறவின் காரணங்களைத் தேடும் பதின் மூன்று வயதில் அவளோடு உறவுகொண்ட அவளது அண்ணனின் இடத்தை நிரப்பிய இன்னொரு ஆடவனாக நிறுத்திப் பார்த்து முடிக்கிறது. தனது சகோதரனின் ஆசைக்கு இணங்கியதின் விளைவாக ஏற்பட்ட குற்றவுணர்வை நீக்கிக்கொள்ளும் பொருட்டே அவள், இவளுடன் உறவுகொண்டான் என்பது தொனிக்கும் இந்தக் கதைத் தன்மைக் கூற்றுக்குப் பதிலாக நேர்கோடாகச் செல்லாமல் படர்க்கை நிலையில் எழுதப்பெற்றிருந்தால் உண்டாக்கியிருக்கக் கூடிய வாசிப்பு அனுபவம் வேறாக இருந்திருக்கலாம். அனோஜன் பாலகிருஷ்ணன் இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்குச் சென்று படித்துக்கொண்டிருக்கிறார் என்ற தகவலோடு இணைத்து வாசிக்கும்போது கதையின் விரிவு தன் வெளிப்பாடாகச் சுருங்கிவிட அந்த த்தன்மைக்கூற்றுச் சொல்முறை காரணமாகியிருக்கிறது.

குடியேற்ற சிக்கலால் துரத்தப்படும் ஒருவனின் காதல் உணர்வு மட்டுப்படுத்தப்படும் சூழல்களைச் சொல்லும் தெய்வீகனின் உமையாள் கதையில் வரும் ஆணும் பெண்ணும் மொழியால் வேறுபட்டவர்கள் அல்ல. இருவரும் புலம்பெயர்ந்து வாழ்பவர்களே. அவர்களிடம் ஏற்படுவது உடல் சார்ந்த காமத்தின் நீட்சியல்ல; மனம் சார்ந்த காதலின் தொடர்ச்சி. பண்பாட்டு முரண்களை எதிர்கொள்வதையோ, மீறத் துடிப்பதையோ கதைப்பொருளாக ஆக்காமல், பழைய தடத்திலேயே பயணிக்கிறது. காதலின் அடுத்த கட்டமான காமத்தைப் புலம்பெயர் வாழ்விலும் பேணிப்பாதுகாக்கும் இலங்கைப் பெண்ணையும் ஆணையும் நிறுத்துவதின் வழியாக காதல் என்ற எல்லைக்குள்ளேயே நின்றிருக்கிறது. அகதி வாழ்வில் தனிமனிதர்களின் காதல் சார்ந்த மனவுணர்வுகளின் அல்லாட்டத்தைப் பேசும் முயற்சி என்ற வகையில் கவனிக்கத்தக்க கதை.அதில் வரும் கடைசிப் பத்திகள் இதனை உறுதி செய்கின்றன.

o சயந்தன் முழுதாக ஒன்பது மாதங்கள் அந்த வீட்டிலிருந்தான். இதே வெட்கம், இதே விசுவாசம், எல்லாம் இதே இதே இதேதான்.

o அப்போது மாத்திரமல்ல பிறகு எப்போதும் சயந்தனின் மீதான காதலை வேணியால் அவனது அண்ணனிடம் சொல்ல முடியவில்லை. வீட்டிலிருந்தபோது இதுதான் நடந்த தா என்ற கெட்ட பெயர் சயந்தன் மீது அண்ணனுக்கு வந்துவிடுமோ என்ற அச்ச உணர்வும், அதே வேளை, விஸா கிடைக்கும்வரை தனது காதலை அண்ணனின் ஊடாக சொல்வதற்கு காத்திருந்தவளாக சயந்தனிடம் தன்னை காண்பிக்க வேண்டுமா என்ற குற்ற உணர்வும், வேணியை அவளது காதலை முற்றாகவே துறைக்க செய்தது.

ஆறுகதைகளில் இளங்கோவும், அனோஜனும் புதிய நகர்வைச் செய்திருக்கிறார்கள். இந்த நகர்வுக்குப் பின்னால், ஆண்– பெண் உறவை இரு மனங்களின் வெளிப்பாடாகவும் அலைக்கழிப்பாகவும் கருதும்போது காதல் என்ற சொல்லாலும் எதிர்பால் உடல்களின் தேடலாகக் கருதும்போது காமமென்ற சொல்லாலும் விவாதிக்கும் மனப்போக்கின் எண்ணங்கள் செயல்பட்டிருக்கின்றன. கீழைத்தேயங்களின் (இந்திய/ இலங்கை) முதன்மையான மனநிலைகளில் ஒன்று இது. அம்மனநிலை காதலையும் காமத்தையும் நிரந்தரமான ஒன்றாகவும் ஒருதடவை வெளிப்பட்டால், வேறுபக்கம் திரும்பாமல் கடைசிவரை தொடரவேண்டும் எனக் கட்டுக்குள் வைக்கும் நிலைப்பாடாகவும் கணிக்கிறது; நம்புகிறது; தொடர்கிறது. அதனாலேயே அதனைச் சுற்றிப் புனிதம் கற்பிக்கப்படுகிறது. அப்புனிதக் காரணங்கள் தொடர்ச்சியாகவே ‘ஒருவன் ஒருத்தி’ என்பதான நிலைபாட்டைப் பரப்புரை செய்கிறது. ஆனால் காதல் அல்லது காமம் குறித்த மேற்குலகின் எண்ணங்கள் வேறானவை. உடல் மீதான ஈர்ப்பாகக் கணித்து அதன் இருப்பு தற்காலிகமானது என்ற முடிவில் நகர்பவை. அதன் காரணமாகத் தனது உடலை – உடலின் இச்சையைத் தீர்த்த இன்னொருவனை/ இன்னொருவளைப் பிரிந்துவிடுவதைப் பெரிதாக நினைத்து அல்லாடுவதில்லை. எளிதாகக் கடந்துசென்றுவிடும்.

பேசப்பட்ட ஆறு கதைகளிலும் உலவும் பாத்திரங்களின் தன்னிலைகள் இலங்கை அகதிகள் என்ற அடித்தளத்தின் மேல் உருவான தன்னிலைகளே என்றாலும், அதன் பரிமாணங்கள் வேறானவையாக இருக்கின்றன. பூர்வீக வெளியை மறந்து வாழிடத்தின் நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பவர்களாக மாறாமல், நினைவில் தங்களை ஈழத்தவர்களாக நிறுத்திக்கொண்டு அல்லாடும் நபர்களை எழுதவேண்டுமா? புதிய நகர்வுகளுக்குள் நுழைவார்களா என்பதை இனியும் எழுதப்பட இருக்கின்ற கதைகளின் வழி விவாதிக்க வேண்டும்.

இரண்டு குறிப்புகள்.

1. இதுவரை 51 இதழ்கள் இலங்கையிலிருந்து ப்ரான்சிற்குப் புலம்பெயர்ந்து கிடைத்த கணதியான ஐரோப்பிய அனுபவங்களோடு கனடாவில் குடியேறியிருப்பவர் செல்வம் அருளானந்தம். அவரது ஆசிரியப்பொறுப்பில் வரும் காலம் இலக்கியக்குழுக்கள், அரசியல் அடையாளங்கள் போன்றவற்றோடு தன்னை இணைத்துக்கொள்வதைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். காலம் இதழில் வந்துள்ள கவிதைகள், கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள். நேர்காணல்கள், திறனாய்வுகள் போன்றவற்றை வாசிக்கும் ஒருவர், முழுமையும் தனது வாசிப்பு, தனது புரிதல், தனது ஈடுபாடு என்பதை மட்டுமே உறுதியாக நம்பித் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்துவருகிறார் செல்வம் என உணரமுடியும். இதனை நடுநிலையான போக்கு என்பதைவிடச் சார்பின்மையைக் காட்டும் மனநிலை எனச் சொல்லத்தோன்றுகிறது. உலகத்தமிழ் இலக்கிய வரைபடம் ஒன்றை உருவாக்கும் நிலையில் காலத்தின் பங்களிப்பு முதன்மையான அடர்த்தியான வண்ணத்தால் குறிக்கப்படும் வாய்ப்புண்டு

2. காலத்தில் வெளியிடுதல் என்பதில் கறாரான கொள்கையைக் காட்டாத சிறுபத்திரிகைகள் என்னும் அடையாளம் பின்னுக்குத் தள்ளப்பட்டதின் முதன்மையான அடையாளம் இடைநிலை இதழ்கள். அவை இந்திய அரசின் தபால் துறையின் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும்பொருட்டு மாத இதழ்களாக வெளிவந்த காலம் இந்த நூற்றாண்டின் தொடக்க காலம். மாத இதழ்களாக வரும் இவ்விடைநிலை இதழ்கள் பெரும்பாலும் அதே பெயரில் பதிப்பகங்களையும் தொடங்கி நடத்துகின்றன. இவ்விரு அடையாளத்தோடும் பொருந்திப் போகும் இதழாக வந்துகொண்டிருப்பது அம்ருதா. தமிழின் குறிப்பிடத்தக்க பெண்ணெழுத்தாளரான திலகவதியின் ஆசிரியத்துவத்தில் வரும் அம்ருதா, மற்ற இதழ்களிலிருந்து மாறுபடும் ஓரம்சம் உண்டு. காலம் இதழில் செல்வம் கடைப்பிடிக்கும் சார்பின்மையைக் கடைப்பிடிப்பதோடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பிற தமிழ் நிலங்களின் எழுத்தாளர்களுக்கும் தொடர்ச்சியாக வாய்ப்புகளைத் தந்து எழுதத்தூண்டுகிறது. தொடர்ச்சியாகப் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகளையும் படைப்புகள் குறித்த பதிவுகளையும் வெளியிடுகிறது. இந்த நகர்வின் மூலம் அம்ருதாவும் தன்னை உலகத்தமிழ் இலக்கியத்தின் பகுதியாக மாற்றிக்கொண்டு வருகிறது.

சில கடிதங்கள்

தமிழ் இதழ்களில், தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பற்றிச் சில நூறு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அதனை வாசித்தபின் எழுத்தாளர்கள் வாசித்ததாகக் காட்டிக் கொள்வதில்லை. அந்தக் கட்டுரை மூலம் சிலபல நன்மைகள் ஏற்பட்டாலும்கூடச் சொல்லிக்கொள்வதில்லை. அதற்குமாறாக இலங்கைத் தமிழ்/ ஈழத்தமிழ்/ புலம்பெயர்த்தமிழ் எழுத்துகள் குறித்த கட்டுரைகளுக்கு உடனடியான எதிர்வினைகள் கிடைத்துவிடும். எதிர்மறை விமரிசனம் என்றாலும் பார்த்தேன்; படித்தேன் எனச் சொல்லும் பக்குவத்தைக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் அம்ருதாவில் எழுதிய கட்டுரையொன்றிற்கு வந்த கடிதங்கள் இவை:

'சந்திக்கும் கணங்களின் அதிர்ச்சிகள் புலம்பெயர்வு எழுத்துக்களின் ஒரு நகர்வு' கட்டுரை அம்ருதாவில் வாசித்தேன். 

நல்ல கட்டுரை.

ஈழத்தமிழர்கள் புதிய வெளிக்குள் நுழையும் கதைகளை எழுதவேண்டி இருப்பது பற்றிய கேள்வி முக்கியமானது. இனிவரும் காலங்களில் புலம்பெயர் இலக்கியம் பெரும்பாலும் அதைநோக்கிச் சென்று சேரும் என்று எதிர்பார்கிறேன்.

என் கதையையும் என்னையும் குறிப்பிட்டு எழுதியதில் மகிழ்ச்சி. உங்கள் ஊக்கம் தொடர்ந்தும் எழுத வைக்கின்றது. சமகால கதைகள் பற்றி எழுதுவதற்கு யாரும் இல்லாத சமயத்தில் கூர்மையான அவதானிப்புகளோடு இயங்கிவரும் உங்களது தொடர்ச்சியான செயற்பாடு உலகதமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய இருப்பு என்பதில் எனக்கு கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை.

அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்.

=====================================

அன்பின் பேராசிரியர் ஐயாவுக்கு,

அம்ருதாவில் நீங்கள் அளித்த அதிர்ச்சி நான் எதிர்பாராதது. ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் - முக்கியாமானவர்களாக - முன் வரிசையில் - நிற்பவர்களுடன் எனது உமையாள் கதையையும் இணைத்து விதந்திருப்பதும் வியந்திருப்பதும் உங்களைவிட எனக்கு மிகவும் நெருடலான தருணம். ஒரு தேர்ந்த விமர்சகராக - அதேவேளை உயரிய இடமொன்றிலிருந்துகொண்டு இப்போதெல்லாம் - உங்களின் வழி வருகின்ற ஏனைய படைப்பாளிகளை இனங்காட்டுவதும் அவர்களை கை பிடித்து அழைத்து வந்து சபை டுநவெ நிறுத்துவதுமாக தொடர்ச்சியாக நீங்கள் ஆற்றிவருகின்ற பணி எளிதில் யாரும் செய்ய விரும்பாததும். செய்யாததும் ஆகும். அந்த வகையில் நீங்கள் எமக்காக நீட்டிக்கொண்ருக்கும் கை, விரல்களால் மாத்திரம் நிறைந்தது அல்ல, எமக்கான உயர்ந்த குரல்களால் நிறைந்தது.

உங்களது பரந்த உள்ளமும் படைப்புகளுக்கு நீங்கள் அளிக்கும் தொடர்ச்சியான மதிப்பும் தொடரவேண்டும்.

எனது தடம் சிறுகதை முதல் இன்றுவரை அத்தனை கதைகளையும் ஆழமாக வாசித்து கருத்தெழுதிவரும் உங்கள் கைகளுக்கு ஆயிரம் முத்தங்கள்

நன்றி ஐயா

தெய்வீகன்.

=======================================

கவி.கருணாகரன்,கிளிநொச்சி

=======================

மே மாத அம்ருதா இதழில் அ.முத்துலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி, சோபாசக்தி, இளங்கோ டிஸே, ப.தெய்வீகன், அனோஜன் பாலகிருஸ்ணன் ஆகியோருடைய ஆறு சிறுகதைகளை முன்வைத்து பேராசிரியர் அ.ராமசாமி எழுதிய விமர்சனம் இது. மொழி, இலக்கியம், விமர்சனக்கலை போன்றவற்றை மேலும் செழுமைப்படுத்த வேண்டும் என்றால் இந்த மாதிரியான செயற்பாடுகள் அவசியம். அ.ராமசாமி மொழி, கலை, இலக்கியம், சமூகவியல், அரசியல் போன்ற பெரும் பரப்பில் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பவர். தமிழக எல்லைக்கு அப்பால் அவருடைய கரிசனையும் கவனப்புலமும் விரிந்தது. அதற்கு இந்த விமர்சனக்கட்டுரையும் ஒரு சான்று. தமிழகத்திலிருந்து ஈழ இலக்கியம் குறித்து எழுதிக் கொண்டிருப்பவர்களில் அ.ராமசாமி முக்கியமானவர். தொடர்ச்சியான வாசிப்பும், தொடர்பாடலும் அவதானிப்பும் இருந்தால்தான் இதைச் செய்ய முடியும். இந்த விமர்சனத்தில் மூத்த எழுத்தாளர்களான அ. முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி தொடக்கம் பிரபலமான சோபாசக்தி வரை ஒரு அவதானிப்பைச் செய்திருக்கிறார் அ.ரா. அதேவேளை இப்போது தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் டிஸே, அனோஜன், ப.தெய்வீகன் மீதும் கவனிப்பைச் செலுத்தியிருக்கிறார். முதல் மூவரும் நன்றாக அறியப்பட்டவர்கள். அவர்களைத் தேடி வாசிப்பதற்கான வாசகப் பரப்புண்டு. இளையவர்களில் டிஸே ஓரளவுக்கு அறிமுகமுள்ளவர். என்றபோதும் இந்த விமர்சனத்தின் மூலம் கூடுதல் கவனம் இளையவர்களின் மீது ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன. இது இந்தத் துறையில் செயற்படுவோருக்குத் தேவையானது. தமிழ்மொழிச் சமூகத்தினரின் இலக்கியம், அரசியல், சமூகவியல், பண்பாடு, கலை போன்றவை இன்று புதிய திணைகளில், புதிய தேசங்களில் நிகழத் தொடங்கியுள்ளது. இந்தத் திணைகளில் நிகழும் மாற்றங்கள், அதனால் ஏற்படும் வளர்ச்சி, பொதுவாகவே எங்கும் உருவாகியுள்ள போக்கு, அதன் இன்றைய நிலை போன்றவற்றை அறிவதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் இத்தகைய பரந்த பார்வையுடனான செயற்பாடுகள் தேவை. இதை இங்கே அ.ரா கவனத்திற் கொண்டுள்ளார். ஒரு துறையில் சரியாகச் செயற்படுவதற்கான அடையாளம் இது. இதன் மூலம் தலைமுறைகளுக்கிடையிலான வெளிகளை அவதானிக்கலாம். புதியவர்களுடைய புரிதற் தளம், சிந்தனை முறை, அனுபவப் பிராந்தியம், எழுத்து முறைமை, வேறுபாடுகள் என பல விடயங்களை இது உணர்த்தும். எல்லாவற்றுக்கும் அப்பால், இந்த மாதிரியான விமர்சனச் செயற்பாடும் அவதானிப்பும் இன்று மிக அவசியமானது. ஈழத்தில் விமர்சனம் இல்லை என்ற நிலையே தற்போதுள்ளது. நடந்த போரும் நிகழ்ந்த அரசியல் போக்கும் விமர்சனத்தை ஒழித்து விட்டன. மீண்டும் விமர்சன மரபொன்றை உருவாக்க வேண்டியதேவையும் அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால் தேக்கமும் வீழ்ச்சியுமே ஏற்படும். ஆகவே விமர்சத்துக்கான முயற்சிகள் அவசியம். அந்த வகையில் அ.ராமசாமி அவர்களுடைய இந்தப் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

===================================================

வணக்கம்,

அம்ருதா இதழில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஆறு கதைகளும் இன்னொரு முறை வாசிக்க இருக்கிறேன். அத்துடன் நீங்கள் சுட்டிக்காட்டும ஆறு எழுத்தாளர்களும் தமிழக எழுத்தாளர்களால் அவ்வளவாகக் கண்டுக்கொள்ளப்படாத எழுத்தாளர்கள். அம்ருதாமட்டுமே அவர்களை உயரத்தூக்கிப்பிடிக்கிறது.

அதே போன்று மே இதழில் பிரசுரமாகியிருக்கும் பச்சைப் பாழ்வெளி சிறுகதை அப்பட்டியலில் சேர்க்கக்கூடிய ஒன்று.

பச்சைப் பாழ்வெளி ( சிறுகதை ) - ராம் முரளி - அம்ருதா இதழ்

தனுஷ்கோடி தீவில் தனியே வாழும் ஒரு குடும்பத்தின் ஒருவனை , அவனது நிர்கதியை கதைப் பேசியிருந்தது. குழந்தை பருவம் முதலே பழகிய சகுந்தலா என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு பிறகு அவளையும் மகளையும் கடல் சீற்றத்திற்கு பறிக்கொடுத்துவிட்டு கடலுக்கு மறுபுறம் பள்ளியில் படிக்கும் மகனின் நினைவுடன் , தீவை விட்டு போய்விடலாம் என்கிற அழைப்பிற்கு மறுப்பு தெரிவிக்கும் தாயின் அரவணைப்பிலிருந்து விலகி தனித்த உருவமாய் பொழுதைக் கழிக்கும் பெருமாள் , தீவிற்குள் தீவாக வாழ்ந்து கரைவதை இரத்தமும் தசையுமாக கதைப் பேசியிருந்தது. 

கதையின் ஓரிடத்தில் ' உயிர்கள் வாழ்ந்த கதைகளை நினைவுகளிலிருந்து அழித்துவிட்டு, உயிர்கள் அழிந்த கதையினையே அத்தீவு தனக்குரிய அடையாளமாய் தருவித்துக் கொண்டிருந்தது' என்கிற வரி கதையின் போக்கில் குற்றுயிர வைத்தது. 

சட்டகப்பார்வை மேலும் குவிய எதிர்நோக்குகிறேன்..நன்றி...

அண்டனூர் சுரா

=================================================


அன்பின் ராமசாமி, 'அம்ருதா'வில் எனது கதையும் சேர்த்து எழுதிய உங்கள் விமர்சனக்குறிப்புக்கு நன்றி. இத்துடன் எனது சிறுகதைத் தொகுப்பான 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவரை' அனுப்பிவிடுகின்றேன். அன்புடன், இளங்கோ





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்