காண்டாமிருகமென்னும் அபத்த நாடக நிகழ்வெளி


சில பனுவல்கள் வாசிக்கும் போது புரியாமல் போய்விடும். ஆனால் அதன் அர்த்தம் விளங்கும்படியான நிகழ்வொன்றை நாம் சந்தித்து விட்டால் அந்தப் படைப்பு புரியத்தொடங்கி விடும். அரசியல் அதிகாரம் குறித்த விமரிசனத்திற்கு அபத்த நாடக வகையைத் திறமையாகப் பயன்படுத்திய அயனெஸ்கோவின் காண்டாமிருகம் (RHINOCEROS) அப்படிப் பட்ட நாடகம்
என்பது எனது சொந்த அனுபவம். முதல் வாசிப்பில் கடைசி வரை காண்டாமிருகம் வரவே இல்லையே எனக் கேட்டுப் பதில் தெரியாமல் மூடி வைத்து விட்டு மறந்திருந்தேன். ஆனால் அந்தப் பிரதி வெவ்வேறு நிகழ்வுகள் நடக்கும் போது ஒவ்வொரு விதமாக அர்த்தம் தரும் பிரதியாக இருந்திருக்கிறது. 

ஒரு நிகழ்வு நடந்த போது கிடைத்த அர்த்தத்தைச் சொல்வதற்கு முன்னால், முதல் தடவை அதன் அர்த்தத்தைப் புரிய வைத்த நிகழ்வைப் பார்க்கலாம்.
அப்போது நான் பாண்டிச்சேரியில் நாடகப்பள்ளியில் பணியாற்றினேன். முக்கியமான நாடகப் பிரதிகளைப் படிப்பதைக் கடமையாகவும் விருப்பமாகவும் செய்து கொண்டிருந்த நேரம். அயனெஸ்கோவின் காண்டாமிருகம் நாடகத்தை வாசித்து ஒரு வாரம் இருக்கும். நாங்கள் வசித்த புறநகரின் நலச்சங்கம் ஏற்பாடு செய்த ஒருநாள் சுற்றுலாவில் நானும் எனது குடும்பத்தினரும் கலந்து கொண்டு சென்னைக்குப் பயணம் தொடங்கினோம். பத்துமணி அளவில் வண்டலூர் விலங்குகள் பூங்காவிற்குச் சென்று சேர்வதும், மதியம் வரை அங்கே நேரத்தைக் கழித்துவிட்டு நண்பகல் உணவுக்குப் பின் பிற இடங்களுக்குச் செல்வதும் எங்கள் திட்டம். பிற இடங்களாக நாங்கள் திட்டமிட்டிருந்ததில் வி.ஜி.பி.யின் தங்கக் கடற்கரையும், மகாபலிபுரமும் தான் முக்கியமானவை. திட்டப்படி காலை எட்டு மணிக்கு நாங்கள் அமர்த்தியிருந்த வாடகைப் பேருந்து திண்டிவனம் தாண்டி சென்னையை நோக்கித் திரும்பியது.
 
சென்னை- கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். சென்னையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் வழக்கம் போலச் சென்று கொண்டிருந்தன. ஆனால் சென்னையிலிருந்து தெற்கு நோக்கி வரும் வாகனங்கள் ஒன்றும் வரவில்லை. வாகன ஓட்டிகள் என்ன பிரச்சினை என்று கேட்ட போது போலீஸ்காரர்கள் ஒருவருக்கும் ஏன் சாலையில் நிறுத்தப் பட்டிருக்கிறோம் என்று காரணம் சொல்லத் தெரியவில்லை.
 
ஆணைக்குக் கீழ்ப்படிந்து பழகிவிட்ட அவர்களிடம் கூடுதல் தகவல்களை எதிர்பார்ப்பது சரியல்ல தான். உத்தரவுப்படி எந்த இடத்தில் காவலோ அங்கே நின்றுவிட்டுப் போவது அவர்களுக்கு வழக்கம். ஆணைப்படி வரும் வண்டிகள் ஒவ்வொன்றையும் நிறுத்தி “வேகமாகச் செல்ல வேண்டாம்; நிறுத்தச் சொல்லும் இடத்தில் நிறுத்த வேண்டியதிருக்கும்; அதற்குத் தயாராக இருந்தால் தொடர்ந்து போகலாம்” என்று எச்சரித்து அனுப்பினார்கள்.
அரைமணி நேரப் பயணத்திற்குப் பிறகு எதிரேயிருந்து பத்து வண்டிகள் மொத்தமாக வந்தன. வழக்கமான வேகத்தில் வரவில்லை. அவர்களே நிறுத்தி, “சென்னைக்கு இந்தச் சாலையில் சென்று சேர்வது சந்தேகம்; வேறு பாதை வழியாகச் செல்ல முடிந்தால் செல்லுங்கள்” என்றார்கள். என்ன காரணம் என்று கேட்ட போது அவர்களுக்கும் காரணம் தெரிந்திருக்கவில்லை. எங்கள் பேருந்தில் இருந்த ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை யூகித்துச் சொன்னார்கள். எங்காவது விபத்து நடந்திருக்கும் என்று சிலர் சொன்னார்கள். திடீர்ச் சாலை மறியல் அல்லது போராட்டம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியினர் முன்பு மரங்களை வெட்டிப் போட்டுச் சாலை மறியல் செய்தது நினைவில் இருந்ததால், அதே போல் எதாவது நடக்கலாம் என்று சொன்னார்கள். பேருந்து நிறுத்தப்பட்டு இதே பாதையில் பயணம் செய்யலாமா? அல்லது திரும்பி விடலாமா? என்று விவாதிக்கப்பட்டது. ஆனால் ஆசையோடு கிளம்பிய குழந்தைகளை ஏமாற்ற வேண்டாம் என்றே பெரியவர்கள் நினைத்தார்கள். அந்த ஒருநாள் சுற்றுலாவே குழந்தைகளுக்காகத் திட்டமிட்டதுதான்

ஏதாவது மாற்றுப் பாதையில் சென்னைக்குப் போவது பற்றி யோசிக்கப்பட்டது. கிழக்குத் திசையில் செல்லும் சாலை ஒன்றில் திரும்பினால் மகாபலிபுரம் சாலைக்குச் சென்று விடலாம். திட்டத்தில் கடைசியாக இருப்பதை முதலிடத்திற்குக் கொண்டு வந்து புதிய அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவுப்படி பேருந்து திசைமாறியது. ஆனால் ஒரு மணிநேரப் பயணம் முடிந்த பின்னும் மரக்காணம்- மகாபலிபுரம் சாலை வரவில்லை. ஓட்டுநருக்குப் பாதை அவ்வளவு பழக்கமில்லை. அதோடு தொடர்ந்து அந்தப் பாதையில் செல்வது சரியல்ல என்றும் தோன்றியது. ஒத்தையடிப் பாதையைப் போலச் செல்லும் தார்ச்சாலை மண்சாலையாக மாறிவிட்டால் பயணம் சிக்கலாகி விடும் என்று தோன்றியது.
 
பேருந்தில் இருப்பவர்கள் எல்லோரும் சுற்றுலா நினைவைத் தொலைத்து விட்டு ஏன் தான் இன்று கிளம்பினோம் என்ற உணர்விற்குள் நுழைந்தார்கள். ஒரு சிலர் கிளம்பும்போது அபசகுனங்கள் தென் பட்டதாகச் சொன்னார்கள். பேருந்து திரும்பவும் வந்த பாதையிலேயே திருப்பப்பட்டது. ஆனால் வேறு ஒரு இடத்தில் தேசிய நெடுஞ்சாலையைத் தொட்டது. சாலையில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை. வாகனப் போக்கு வரத்து ஏறத்தாழ இல்லை என்பது போலக் கண்ணுக்கெட்டிய தூரம் வாகனங்கள் முன்னும் தெரியவில்லை; பின்னும் தெரியவில்லை.
 
பத்து நிமிடப் பயணத்திற்குப் பிறகு அருகில் இருந்த கிராமம் ஒன்றில் நிறுத்திவிட்டு விசாரித்த போது வாகனங்கள் நிறுத்தப் பட்ட காரணம் தெரிந்தது. அன்று இரவு மதுரையில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் முதல்வர் தனது வழக்கமான ஹெலிகாப்டர் பயணத்தை மாற்றி விட்டார் எனவும், சாலை வழியாகச் செல்லத் திட்டமிட்டுள்ளார் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் எத்தனை மணிக்குக் கிளம்புவார் என்பது தெரியாது எனவும் சொன்னார்கள். எந்த நேரத்திலும் அவர் கிளம்பி இந்தச் சாலை வழியாக வரலாம் என்பதால் எல்லா வாகனங்களுக்கும் பயணிகளுக்கும் அது உணர்த்தப்பட்டது. எங்கள் பயணம் மேலும் தொடர்வது சாத்தியமில்லை என்பதாகத் தோன்றியது.
 
திரும்பி விடலாம் என்றால் பலரும் அதற்குச் சம்மதிக்கவில்லை. அரைமணி நேரம் பயணம் செய்தால் மேல்மருவத்தூர் போய்விடலாம்; கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தால் முதல்வரின் வாகனம் நம்மைக் கடந்து விடும்; பிறகு நாம் சென்னையை நோக்கிப் பயணம் செய்யலாம் என ஒருவர் சொன்ன யோசனை ஏற்கப்பட்டது. விலங்குப் பூங்கா, தங்கக் கடற்கரை, மாமல்லபுரம் எனப் போடப்பட்ட திட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குள் நுழைந்தது.
 
காலையில் கிளம்பிய போது எல்லாம் சரியான திட்டமிடலாகவும், அர்த்தம் உடையதாகவும் தோன்றியவையெல்லாம் இப்போது அர்த்தமில்லாமல் ஆகிக் கொண்டிருந்தது. மனதிற்குள் இருந்த உற்சாக மனநிலை காணாமல் போய்ப் பதற்றமும் எரிச்சலும் நிரம்பி வழிந்தது. சாலை ஓரத்தில் நின்று சிகரெட் பற்ற வைத்த போது பதற்றத்துடன் வந்த போலீஸ்காரர் அதை அணைக்கச் சொன்னார். ஏன் அணைக்க வேண்டும் என அவரோடு சண்டை போடலாம் என நினைத்த போது சாலையில் சரசரவென வாகனங்கள் பறந்தன.
சிகரெட்டை அணைக்கச் சொன்ன போலீஸ்காரர் வாகனங்களுக்கு மரியாதை செய்யும் விதமாக விரைத்து நின்று கைகளை நெற்றிக்குக் கொண்டுபோய் வார்த்தைகளை உதிர்த்தார். காவல் துறை வாகனங்களைத் தொடர்ந்து ஒரே மாதிரியான ஆறு வாகனங்கள் என் கண் முன்னால் நழுவி விட்டன. எந்த வாகனத்தில் முதல்வர் இருப்பார் என்று நினைக்கும் போது எல்லா வாகனங்களிலும் காண்டாமிருகம் பயணம் செய்கிறது என்று உள்ளுணர்வு சொன்னது. தேவையும் அர்த்தமுமில்லாமல் அச்சத்தையும் பீதியையையும் உண்டாக்கும் ஒன்றுதான் காண்டாமிருகம் என அயனெஸ்கோ உணர்த்துவதாக நான் புரிந்து கொண்டேன்.
 
காண்டாமிருகம் நாடகத்தைப் படித்தவர்களுக்கும் பார்த்தவர்களுக்கும் இது புரியும். அதில் இடம் பெற்றுள்ள காட்சிகளில் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் காண்டாமிருகம் தென்பட்டதாகச் சொல்வார்கள். பள்ளிக் கூடத்தில், மருத்துவ மனையில், நகரத்தின் நாற்சந்தியில் பார்த்ததாகப் பலரும் சொல்வார்கள். நாளை எங்கே வரும் எனச் சிலர் சொல்வது போலவே அந்த இடத்தில் காண்டாமிருகம் தோன்றுவதாகவும் வதந்தி கிளம்பிப் பரவும்.
அப்படிச் சொல்கிறவர்கள் ஒவ்வொரிடமும் கேட்டால் அதன் வடிவம், செயல்பாடு, குணம் போன்றவற்றை விளக்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விளக்குவார்கள். காண்டாமிருகத்தைக் கண்டுபிடித்து ஒழிக்கலாம் எனத் திட்டமிடும் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நிற்பார்கள். ஏனென்றால் பார்த்ததாகச் சொல்பவர்களின் விவரிப்பு ஒருவரும் பார்க்கவில்லையோ! என்ற சந்தேகத்தை உண்டாக்கிக் கொண்டே இருக்கும். ஒருத்தர் விவரித்த மாதிரி இன்னொருத்தர் விவரிக்க மாட்டார்.

 விவரிப்புகளிலிருந்து சிலர் அதன் நிறத்தைக் கண்டு பயந்ததாகத் தோன்றும்; சிலருக்கு அதன் கொம்புகளும், சிலருக்கு அதன் காதுகளும், சிலருக்கு அதன் கால்களும், சிலருக்கு அதன் அசைவும் அச்சமூட்டியதாகத் தோன்றும்.
காண்டாமிருகம் நம் நகரத்திற்குள் வந்தது எனச் சொன்னதும், நகரத்திற்கு அருகில் இருப்பதாகச் சொல்லப்படும் செய்தியும் உன்மையா? பொய்யா? என்ற கேள்வி தவிர்க்கப்பட்டு எந்த நேரத்திலும் காண்டாமிருகம் வரலாம் என்ற உணர்வு உண்டாக்கப்படுதல் தான் ஆபத்தானது. இதைச் சொல்வதுதான் அயனெஸ்கோவின் நோக்கம். ஒவ்வொருத்தருக்குள்ளும் அச்ச உணர்வை உண்டாக்கி, அடிமைத் தனத்தை ஏற்கச் செய்யவும், அச்சத்தின் விளைவிகளை விவரிக்கவும் அரசதிகாரமும், நிறுவனங்களும் முயல்கின்றன எனச் சொல்ல வந்த அயனெஸ்கோ காண்டாமிருகம் என்ற விலங்கைக் குறியீடாக ஆக்கியிருப்பார்.
 
காண்டாமிருகத்தைக் கண்டு பயப்படும் உணர்வை உண்டாக்குவதே அமைப்புகளின் நோக்கம் என அர்த்தம் தந்த அதே நாடகம், வெவ்வேறு நிகழ்வுகளால் வெவ்வேறு அர்த்தங்களை உண்டாக்கவல்லது என்பது எனது அனுபவம். நல்ல இலக்கியம் அப்படி அர்த்தம் தருவதில் தான் சிறப்படைகிறது. எனக்கு எந்தெந்த நேரத்தில் எந்தெந்த அர்த்தத்தைத் தந்தது என்பதை இங்கே விளக்கிக் கொண்டிருக்கப் போவதில்லை. நேரம் கிடைத்தால் அந்த நாடகத்தை நீங்களே படித்துப் பாருங்கள். படிப்பதற்கு முன்னால் கடைசியாக எனக்குக் கிடைத்த அர்த்தத்தையும், அதற்குக் காரணமான நிகழ்வையும் மட்டும் சொல்லி விடுகிறேன்.
++++ +++ +++ ++++ ++++
மாலையில் நடக்கும் பழக்கம் உள்ள அந்தப் பெரியவர் காலையில் நடப்பது என மாற்றிக் கொண்டதன் காரணங்கள் என்ன எனக் கேட்டபோது தான் காண்டாமிருகத்தின் புதிய அர்த்தம் வெளிப்பட்டது. அந்தப் பெரியவர் பணியில் இருந்த காலத்திலும் ஓய்வுக் காலத்திலும் ஒரு மணி நேரம் நடப்பதை நிறுத்தாமல் செய்து வருபவர். நடப்பதற்கு ஒரு மணிநேரம் செலவழித்தால் மருத்துவரிடம் போய்ப் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. தினசரி ஒரு மணி நேரம் நடப்பது என்பதில் அக்கறை காட்டும் அவரிடம் வேறு சில பிடிவாதங்களும் உண்டு. அதை அவரோடு பேசியபோது அறிய முடிந்தது.
 
“கல்லூரிக் காலத்தில் இருந்தே அந்தத் தினசரியை வாசித்துப் பழக்கப் பட்டவராம். வேலைக்குச் சேர்ந்த பின்பு அந்தத் தினசரித்தாள் அலுவலகத்தில் படிக்கக் கிடைத்தது என்றாலும், அதை வீட்டில் வாங்குவதை நிறுத்தியதில்லையாம். காலையில் காபி குடிக்கும்போது அந்தச் செய்தித்தாள் தரும் செய்திகளையும் சேர்த்தே பருகிப் பழகிப் போய்விட்டதாம். இரண்டு மாதத்திற்கு முன்பு வரை இந்தப் பழக்கத்திற்குப் பங்கம் எதுவும் வரவில்லையாம். இப்போது அந்த பழக்கமே பெரும் சிக்கலாக ஆகி விட்டதாம் அவருக்கு.

தான் வாசிக்கும் தெருவிற்குக் காலைப் பத்திரிகை ஒரு மணிநேரம் தாமதமாகப் போடப்படுவதைத் தாங்க முடியாமல்தான் மாலை நடையைக் காலை நடையாக மாற்றிக் கொண்டு கடைக்குப் போய் வருவதாகச் சொன்னார். முன்பெல்லாம் காலை ஆறரை மணிக்குள் எல்லா வீட்டிற்கும் செய்தித்தாள் வந்து சேர்ந்து விடும். ஆனால் இப்போது ஏழரை மணிக்குத் தான் பேப்பர் வருகிறது. காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு நாள் காத்திருந்து பேப்பர் போடும் பையனை நிறுத்திக் கேட்டிருக்கிறார்.
“உங்களுக்குப் பேப்பர் போடும் பையன் வரமாட்டான்; அதோட அந்தப் பேப்பரோட ஏஜென்சியையையும் எங்க முதலாளி வாங்கிட்டாரு. அதானால நான் வரிசையாப் போட்டுக்கிட்டே வர்ரதுக்கு நேரமாகுமில்ல” என்று தன்னிலை விளக்கம் தந்திருக்கிறான். அவன் சொன்ன காரணம் அவருக்குப் புரியவில்லை. “உன்னுடைய முதலாளி யார்?” என்ற அடுத்த கேள்விக்கு அவன் சொன்ன பதில் மேலும் அவரைப் பேச விடாமல் ஆக்கி விட்டது. ஏனென்றால் அந்தப் பெயர் இந்தப் பகுதியில் செல்வாக்கோடு இருக்கும் ஒரு அரசியல் பிரமுகரோடு அலையும் ஒருவரின் பெயர்.
 
தொடர்ந்து அந்தப் பத்திரிகையை நாற்பதாண்டுகளாகப் படித்ததன் விளைவு அவருக்குள் வேலை செய்திருக்கிறது. “நான் சொல்லாமல் எனக்கு ஒருவர் எப்படிப் பேப்பர் போட முடியும்?” என்றொரு கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக் கொண்ட அவர், “நாளையிலிருந்து நீ பேப்பர் போட வேண்டாம்” எனச் சொல்லி விட்டார். அதன் தொடர்ச்சியாக அவரே கடையில் போய்ச் செய்தித்தாளை வாங்குவது என முடிவும் செய்து கொண்டார்.
தம்முடைய விருப்பங்களைப் புறச்சூழலின் அதிகாரத்துக்கும் கட்டுப்பாட்டிற்கும் காவு கொடுக்க விரும்பாத மனிதர்கள் இந்தப் பெரியவரைப் போலத் தங்களை வருத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அவர் விவரித்த நிகழ்வு எனக்குச் சட்டென்று அயனெஸ்கோவின் காண்டாமிருகம் நாடகத்தைப் புதிய அர்த்தங்களுடன் நினைவுக்கு கொண்டு வந்தது.
 
நிகழ்காலத்தில் காண்டாமிருகம் மாறிக் கொண்டிருக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட வணிகத்தின் குறியீடாக மாறி விட்டது என நினைத்துக் கொண்டேன். அத்தோடு, இத்தகைய வணிகத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் அந்தந்த வட்டாரத்தின் அரசியல்வாதிகளின் ஆசி பெற்ற தாதாக்களாக இருக்கிறார்கள் என்ற உள் அர்த்தமும் கூடவே புரிந்தது.
மாறிவரும் தாராளமயச் சூழலில் தரகு வணிகம் புதுவடிவம் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு தெருவில் படிக்கப்படும் எல்லாச் செய்தித்தாள்களையும் ஒருவரே போடும் விதமாக ஏஜெண்டுகளுக்குள் ஒருங்கிணைப்பு நடத்தி முடித்துக் கொள்கிறார்கள். ஒத்துப் போகிறவர்களுக்கு ஏதாவது ஒரு பகுதி பிரித்துக் கொடுக்கப்படுகிறது. ஒத்து வராத ஏஜெண்டுகள் மிரட்டப்படுகிறார்கள். தொடர்ச்சியாக வணிக எல்லைக்குள் இடமில்லையென விரட்டப்படுகிறார்கள். அதனால் நமக்கு வழக்கமாகச் செய்தித்தாள் போட்டவர்கள் இனி வரமாட்டார்கள். விரட்டியவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் நேரத்தில் தான் நுகர்வோராகிய வாசகர்கள் செய்தித்தாளை வாசிக்க வேண்டும்.
 
செய்தித்தாள் என்பது மிகச் சிறிய உதாரணம். அதற்குப் பதிலாகத் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திரைப்படத் தயாரிப்புகளும், தயாரிக்கப்பட்ட படங்களின் விநியோகமும் எவ்வாறு நடக்கின்றன எனக் கவனித்தால் காண்டாமிருகத்தின் குறியீட்டுப் பரிமாணம் இன்னும் கூடுதலாக விளங்கக் கூடும். தொலைக்காட்சி அலைவரிசைகள் என்னும் மென்மையான காண்டாமிருகங்கள் நம் படுக்கையறைக்குள் வந்து பயமுறுத்துவதை நாம் உணராமல் இருக்கலாம். ஆனால் சிபாரிசுமும், லஞ்சமும் நாம் போகும் இடங்களில் எல்லாம் கூடவே வரும் காண்டாமிருகங்கள் என்பதையும், ’தேவைப்பட்டால் கொடுத்துக் காரியத்தை முடித்துக் கொள்’ எனவும், ‘ வாய்ப்பு கிடைத்தால் வாங்கி மறைத்துக் கொள்’ எனவும் கிசுகிசுக்கும் அவற்றின் குரல்களுமா நமக்குக் கேட்பதில்லை, கன்னங்கரேர் காண்டாமிருகங்கள் காணாமல் போய்விட்டன; நீங்களும் நானும் தொட்டுப் பார்க்க ஆசைப்படும் வண்ணங்களுடன் புதிய புதிய காண்டாமிருகங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் உணர வேண்டுமென்றால் ஒரு முறை அயனெஸ்கோவின் நாடகத்தை படித்துப் பாருங்கள்; இல்லையென்றால் மேடையேற்றிப் பாருங்கள்.

கருத்துகள்

குட்டி மணி இவ்வாறு கூறியுள்ளார்…
ARASIYALWAATHI ENUM KAANDAAMIRUKAM ALIWATHU EPOTHU?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்