முகுந்த் நாகராஜனின் K – அலைவரிசை: நவீனக் கவிதைகளின் ஒரு முகம்

இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகள் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ள. இந்தப் பத்தாண்டுகளைத் தீவிரமான இலக்கிய விவாதங்களின் காலம் என்பதை விடத் தீவிரமாக இயங்குவதாகப் பாவனை செய்யும் இடைநிலைப் பத்திரிகைகளின் காலம் எனச் சொல்லலாம்.
தீவிரமான நிலைப்பாடுகள் கொண்ட தலையங்கங்கள்மந்தையாக மனிதர்களை மதிக்கும் ஊடகங்களின் பொறுப்பின்மை, ஆதிசேசனின் தலைகளாய் விரியும் புதுவகைப் பொருளாதாரம், அந்நியக் கலாசாரம், பண்பாட்டு வீழ்ச்சி, கடந்து போன படைப்பாளுமைகளின் படைப்பு நுட்பங்கள், சிக்கலான படைப்புத் தளங்கள் பற்றிய கட்டுரைகள், இருப்பின் வலிகளையும் அனுமதிக்கப்படாத பாலியல் உறவுகளையும் விவரிக்கும் கதைகள், அவை சார்ந்த எதிர்வினைகள் என உரைநடையால் நிரப்பப்பட்ட இடைநிலைப் பத்திரிகைகள் அதுவரை இருந்து வந்த இலக்கியச் சிறுபத்திரிகைகள் என்னும் அடையாளத்தைத் தனதாக்கி அழித்துள்ளன.
அழிந்து போன அந்தப் பக்கங்களில் ஆதிக்கம் செலுத்திய  கதைகளின் பரப்பும் வரத்தும் குறைந்துள்ள நிலையிலும், கவிதைகள் அப்படி ஆகிவிடவில்லை. சிலவகை இலக்கியவடிவங்களுக்கு சிலவகையான தத்துவ நிலைபாடுகளையும் வாழ்க்கை நிலைபாடுகளையும் வெளிப்படுத்துவதில் சிக்கல் இருப்பதைத் தமிழின் நீண்ட இலக்கிய வரலாறு நமக்கு உணர்த்துகிறது. ஆனால் எந்த நேரத்திலும் அத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ளாமல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டதாகக் கவிதை இருக்கிறது என்பதையும் தமிழ்க் கவிதையின்  நீண்ட பாரம்பரியம் தான் சொல்கிறது.

இரண்டாயிரத்துக்குப் பிந்திய நமது காலத்தைக் கவிதை வடிவம் கொண்டு விளக்க முயன்ற பலரின் கவிதை முயற்சிகள் அந்தக் காலகட்டத்திற்குள் நுழைய முடியாமல் கடந்த காலத்திற்குள்ளேயே தங்கிப் போனதைக் காண முடிகின்றது. அதில் ஆச்சரியமான நிலை என்னவென்றால், அப்படித் தங்கிப் போன பலரின் நடப்பு வாழ்க்கை நிகழ்காலத்தின் அனைத்துப் பரிமாணங்களோடும் ஒத்துப் போவன இருக்கின்றன . இப்படி இருக்க நேர்வது தான் கவிதை உருவாக்கத்தைச் சாத்தியமாக்கியுள்ளனவோ என்னவோ? அப்படிப் பட்டவர்கள் எழுதும் கவிதைகள் எண்பதுகளின் இருத்தலியல் நிலைபாட்டை இன்னும் பேசிக் கொண்டே இருக்கின்றன. இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் அப்படித் தொடரும் கவிதைகளை எழுதுபவர்களில் முக்கியமானவராக நான் முகுந்த் நாகராஜனைக் காண்கிறேன்.
பொதுவெளி சார்ந்த நிகழ்வுகளையோ, அதனால் உளையும் மன உணர்வுகளையோ வாசிக்கத் தரும் நோக்கங்கள் எதுவும் இல்லாமல் தனக்கேயான எளிய அனுபவங்களின் சித்திரங்களை எழுதிக்காட்டும் மன அமைதி அவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த மன அமைதி சொந்த இருப்பிலும் சாத்தியமாகி இருக்கிறதா? என அந்தரங்க வெளிக்குள் நுழையும் வேலையை வாசகனோ, விமரிசகனோ செய்ய வேண்டியதில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் மனநிலையைக் கொண்டவர்கள் அவர்கள், தங்களைச் சுற்றி நடக்கும் சின்னச்சின்ன நிகழ்வுகளில் ஏற்படும் ஆச்சரியம், வியப்பு, தவிப்பு, இயலாமை, ஏக்கம், புன்னகைப்பு போன்றவற்றை அலுக்காமல் பதிவு செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற வடிவமாக நவீனக் கவிதையின் ஒரு பரிமாணம் கடந்த கால் நூற்றாண்டாக இருக்கவே செய்கிறது.
மனிதர்களின் பொதுக் கவனத்தை ஈர்க்கும் எவைபற்றியும் முகுந்த் நாகராஜனின் கவிதைப்பரப்பு கவனம் கொள்ளவில்லை. தன்னால் கவனிக்கப்பட்ட பிரத்யேகமான கணங்களைக் கவிதைச் சித்திரங்களாக ஆக்கித் தருவதில் தனது கவித்துவ அடையாளம் இருப்பதாக நம்பும் அவர் அதன் வழியே வாசிப்பவர்களின் மனதிலும் புன்னகைகளையும் ஆச்சரியங்களையும் இயலாமைகளையும் ஏக்கங்களையும் உண்டாக்க முடியும் என நம்பிச் செயல்படுகின்றார். எழுதுபவனுக்கு இத்தகைய நம்பிக்கைகள் இல்லையென்றால் எதையும் எழுதுதல் சாத்தியமில்லைதான். அவரது நம்பிக்கைகளை நிறைவேற்றும் சாத்தியங்கள் அவரது பல கவிதைகளுக்கு இருக்கின்றன என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். போக்குவரத்தின் திசை..(34) என்றொரு கவிதை,
எதிர்பாராமல் / சாலையில் கடந்து போன/ சித்தியைப் பார்த்த குழந்தை
ஆட்டோ உள்ளே இருந்து கூவுகிறாள்.
வண்டி நிற்குமுன் / ஆட்டோ பின்னால் இருக்கும் / சின்ன ஜன்னல் வழியாக /
தன் குட்டிக்கையை நீட்டி / சித்தியை அழைக்கிறாள்.
பரபரப்பான போக்குவரத்து /அவள் கைநீட்டும் திசையில்
சென்று மீள்கிறது ஒரு கணம்,
என ஒரு சித்திரத்தை முன் வைக்கும் போது, பெருநகரம் ஒன்றின் மொத்தப் போக்குவரத்து நெரிசலும் அந்தச் சிறுபெண்ணின் கைகாட்டலில் நகர்வதாக உணர்த்துவதில் தோன்றும் பிரமை கொஞ்ச நேரம் வாசிப்பவர்களிடமும் தோன்றிக் கலையாமல் இருக்கவே கூடும். கவிதையின் அதியற்புதமே நமது அன்றாட நடப்புகளின் சில பொழுதுகளை- கணங்களை- ஏதோ சில காரணங்களை முன் வைத்து உறைய வைத்துக் காட்டுவதில் தானே இருக்கிறது. முகுந்த் நாகராஜன், குழந்தைகளைக் காரணம் காட்டியும், காதலியைக் காரணம் காட்டியும், அம்மாவைக் காரணம் காட்டியும், இடமாற்றங்களைச் சுட்டிக் காட்டியும், குடியிருந்த வீடுகளைக் காரணமாகச் சொல்லியும், தான் கடந்து வந்த காலங்களைக் கவிதைகளில் உறைய வைத்துள்ளார்.
கைத்தொலைபேசியில்/ அவள் அழைப்பு/ மௌனமாக அதிரும்போதெல்லாம்
மின்விசிறியின் காற்றில்/ அசைந்து ஒலி எழுப்புகிறது.
ஓயாமல் பேசும் அவள் பரிசளித்த மணிக்கொத்து
(காற்றின்.. ப.28) காதலியைக் காரணமாகக் கொண்டு அசையும் மணிக்கொத்து எல்லாருக்கும் உரிய ஒன்றாக இருப்பதில் வியப்பெதுவுமில்லை. குடும்பம், வீடு,மனைவி, காதலி, நண்பன் என அந்யோன்யமான மனிதர்களின் அனுபவங்கள், உணர்வுகள் வழியாகத் தனக்கேயான நினைப்புகளைப் பேசும் கவிதைகளே இத்தொகுப்பில் அதிகம் என்றாலும் அவற்றுள் சில கவிதைகள் வழியாகப் புறச்சூழல் பற்றிய விமரிசனத்தையும் சொல்லிப் பார்த்துள்ளார். அலகிலா விளையாட்டு என்னும் தலைப்பில் அமைந்துள்ள அந்தக் கவிதை,
போன வாரமும் ரஜினி படம்/ இந்த வாரமும் ரஜினி படம்.
அதில் ரஜினி திருடன்/ இதில் ரஜினி போலீஸ்/  குட்டிப் பையன் குழம்பிப் போனான்.
அந்த ரஜினி கதைக்கும்/ இந்த ரஜினி கதைக்கும் / நடுவில் உள்ள கதையை/
அவன் அம்மா அவனுக்கு உருவாக்கி / அவனுக்குச் சொன்னாள்.
அது/ அவன் தன் மகனுக்கு / இரண்டு விஜய் படங்களுக்கு இடையிலான கதையை/
உருவாக்கிச் சொல்ல /உதவியாக இருந்தது. காணொளி ஊடகங்களின் அசைவின்மையை இந்தக் கவிதைப் புன்முறுவலோடு வாசித்துக் காட்டியுள்ளது.
நீண்ட பழைமை கொண்ட தமிழ்க் கவிதைப் பரப்பில் சில சொற்களும், சொற்றொடர்களும் தொன்மக் குறியீடுகளாக மாறிப் பல அர்த்தத் தளங்களாக விரியத் தக்கன.  இதனை ஓரளவு புரிந்து வைத்துள்ள முகுந்த் நாகராஜன், தனது கவிதைகளின் தலைப்புகளாக ஆக்குவதன் மூலம் அவை தரும் அர்த்தக் குறியீடுகளைத் தனது கவிதைகளின் அருகில் கொண்டு வந்து நிறுத்திக் காட்டுகின்றார். அவர் பயன் படுத்தியுள்ள அற்றைத்திங்கள், அணியுமாம் தன்னை வியந்து, நெய்தல், மரத்தில் மறைந்தது, மயக்குறு மக்கள், வழுவமைதி, போன்றன மிகத்தொன்மையானவை என்றால், மழைநிலா, தனிமையின் விளிம்பு, கைப்பிடி கனவு, அடையாளம், ஒரேநாளில் போன்றன அண்மையத் தொன்மங்கள். தொன்ம உருவாக்கம் முழுமையான அர்த்தங்களை உருவாக்கியுள்ளனவா என்று கேள்வி எழுப்பி விடை தேட இங்கே இடமில்லை.
2003 இல் முதல் தொகுதியை வெளியிட்ட முகுந்த நாகராஜன் ஏறத்தாழ இரண்டு ஆண்டு இடைவெளிகளில் அடுத்தடுத்த தொகுதிகளை வெளியிட்டு வருகிறார். 51 கவிதைகள் கொண்ட கே அலைவரிசை அவரது நான்காவது தொகுதி. இந்தக் கவிதைகளும் சரி, இதற்கு முந்திய தொகுப்புகளில் இருக்கும் கவிதைகளும் அவருக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கித் தந்துள்ளன.
மனிதர்கள் ஒவ்வொருவரும் நிகழ்கால சமூகத்தில் என்னவாக இருக்க நேர்கிறதோ அதைப் பெரும்பாலும் சாபமாகவோ வரமாகவோ கருதிக் கொள்ளும் மனநிலையோடு இருக்கிறார்கள். வரமாக நினைக்கும்போது புன்னகைகளையும், சாபமாகக் கருதிக் கொள்ளும்போது இயலாமையையும் வெளிப்படுத்தும் பொது இயல்பு கொண்ட படைப்பு மனநிலை அது. அதில் முகுந்த் நாகராஜன் அதிகமும் புன்னகைகளையும், வியப்புகளையும், ஆச்சரியங்களையும் பதிவு செய்கிறார். முகுந்த் நாகராஜனின் இந்த அடையாளம் கால் நூற்றாண்டுக்கு முன்னால் தமிழ் இலக்கியப் பத்திரிகைகளில் தீவிரமான இடம் பிடித்த போக்கு என்றாலும், இன்றைய நீரோட்டத்தில் கைநழுவிப் போய்க் கொண்டிருக்கும் பழந்துணியின் பாத்திரம் தான் அதற்கு உண்டு. இதனைச் சுகமான சுமை எனக் கருதினால் தூக்கிச் சுமந்து கொண்டே திரியலாம்; அழுத்தும் பாரமெனக் கருதினால் எங்காவது இறக்கி வைத்துவிட்டு, அந்த இடத்தை மறந்து விடலாம். இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை இந்த நேரத்தில் தேர்ந்தெடுக்க அவருக்குத்தான் உரிமை உண்டு.
* முகுந்த் நாகராஜனின் இந்தத் தொகுப்பு, உயிர்மையின் 2010 வெளியீடுகளில் ஒன்று, 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்