மனுஷ்யபுத்திரன்: அவசரப்பட்டு எடுத்த முடிவு


சென்னை மாவட்ட நூலகக்குழுவின் தலைவராக இருந்த கவி. மனுஷ்யபுத்திரன் அந்தப் பதவியிலிருந்து விலகிக் கொண்டதாக அறிவித் துவிட்டுச் சில நாட்களுக்கு முன்பு வெளியேறியிருக்கின்றார். இந்த வெளியேற்றம் அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பது எனது கருத்து. அவரை நியமனம் செய்த அரசின் பதவிக்காலம் இன்னும் முடியவில்லை. அடுத்த அரசு இன்னும் உருவாகவும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து செயல்படுவது தார்மீக அடிப்படையில் தவறானது அல்ல. பல்கலைக்கழக அளவில் இதுபோன்ற நியமனப் பதவிகளில் இருந்து பணியாற்றிய அனுபவத்தில் இதனைச் சொல்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் செயல்பாடுகளோடு தன்னை இணைத்துக்கொண்டு பங்களித்ததின் தொடர்ச்சியில் தான் இந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டது என்பதை உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்தப் பணிக்கான அனுபவமும் பொறுப்புணர்வும் அவரிடம் வெளிப்பட்டது என்பதும் மறுக்க முடியாதது. கடந்த 3 ஆண்டுகளில் அவர் செயல்பட்ட விதத்தைத் தூரத்திலிருந்து அறிந்த நிலையில் இதனைச் சொல்கின்றேன். தமிழ்நாடு நூலகத்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் தலைவராக கவி.மனுஷ்யபுத்திரன் நியமிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் (2023 ஜனவரி) கடந்துள்ளன. அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது தொடங்கி அந்தப் பதவிக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டதோடு, ஒரு கவியாக – படைப்பிலக்கியத்துறையில் இயங்கிய அனுபவத்தோடு அந்தப் பதவியின் பரப்பை விரிவுபடுத்திச் செயல்பட்டார். நூலகத்துறைச் செயல்பாட்டில் என்னென்ன மாற்றங்களைச் செய்தார் என்பதை விடவும் படைப்பிலக்கியம் சார்ந்து இளையோர்களை வாசிப்பின் பக்கமும் கருத்தியல் உரையாடல்களின் பக்கமும் திருப்பும் பணியைச் செய்தார் என்பதற்கான நிகழ்வுகள் பல நடந்தேறின.

ஆணைக்குழு இயங்கும் தேவநேயப்பாவாணர் கட்டிடத்திலிருந்த அரங்குகளைப் புதுப்பித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், பெருநகரின் கல்லூரிகளோடு ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் மூலமாகப் பலவிதமான செயல்பாடுகளை முன்னெடுத்தார். அவரோடு தொடர்பில் இருந்த எழுத்தாளர்களின் உதவியோடு எழுத்துப் பயிற்சிகளுக்கான படைப்பரங்குகள், கருத்தரங்குகள், ஊடகப்பங்கேற்புகள் என மாணவர்களின் ஆர்வங்களைத் திருப்பி விட்டார். இவை தொடர்பில் என்னைத் தொடர்பு கொண்ட போதெல்லாம் தூரத்தில் – மதுரையிலும் நெல்லையிலும் இருந்து வரமுடியாமல் போயிருக்கின்றது. ஆனாலும் ஒருவரின் இடத்தை இன்னொருவரால் நிரப்பி நிகழ்வுகளைச் செய்துவிடும் திறனும் தொடர்புகளும் அவருக்கு உண்டு என்பதால் செவ்வனே செயல்பட்டார். அவர் கற்ற இதழியல் மற்றும் ஊடகக் கல்வியின் முறையியல் வழியாகப் பெற்ற அனுபவமும் நட்புகளும் நீண்ட காலமாக அவருக்கு உதவும் இடத்தில் இருந்தார்கள் என்பதும் மறுக்க முடியாதது. அவரது உயிர்மை இதழ், பதிப்பக அனுபவம் வழியாகப் பெற்ற புரிதல்களால் அரசு தந்த இந்தப் பணி வாய்ப்பை அவரளவுக்கு இன்னொருவர் செய்வது இயலாமல் போகலாம்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோடு அவருக்கிருந்த தொடர்பு மட்டுமல்லாமல், முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினின் அவர்களின் அன்புக்கும் உரியவராக இருந்ததால் பெற்ற பதவியை அவசரப்பட்டுக் கையளித்துவிட்டார் எனச் சொல்ல எனது அனுபவங்களின் வழி பெற்ற காரணங்களும் உண்டு.

தமிழக அரசின் நூலகத்துறை இரண்டு பகுதிகள் கொண்டது. மாநில நூலகக்குழு, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு என்ற இரண்டின் பரப்பும் நோக்கங்களும் வேறானவை. இத்துறைக்கான நிதி வருவாய் கல்வித்துறை மானியத்திலிருந்து கிடைக்கின்றது. அதற்கான வரி வருவாய் ஊரகத்துறையின் கீழ் வீட்டுவரி, நிலவரி போன்றவற்றின் மேல்வரி மூலம் தமிழக அரசு திரட்டுகின்றது. அந்த வகையில் தமிழ்க்குடும்பம் ஒவ்வொன்றும் பங்களிப்பு செய்யும் அந்தத்துறையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் சென்று சேர வேண்டும். இந்தப்புரிதலோடு அண்மைக்காலமாக நூலகச் செயல்பாடுகள் நடந்துவருகின்றன. மாவட்ட அளவில் பெருநூலகங்களும் மாவட்ட மைய நூலகங்களும் புதிய கட்டிடங்களில் இயங்கத்தொடங்கியுள்ளன. அதேபோல் வேலை வாய்ப்புக் கல்வியோடு தொடர்புடைய போட்டித்தேர்வு மையங்களாகச் செயல்படும் அறிவுசார் மையங்களும் நூலகத்துறையின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த ஐந்தாண்டுகளில் அதன் செயல்பாடுகள் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன என்பதைப் பார்த்திருக்கிறேன். அதே நேரம் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், பள்ளிகள் போன்றனவற்றில் இயங்கிய நூலகங்கள் தேக்கம் அடைந்துவிட்டன. அதனையெல்லாம் மறு உயிர்ப்புச் செய்யும் விதமாக மாநில ஆணைக்குழுவின் கண்காணிப்புகளும் ஆலோசனைகளும் அமையவில்லை, அதற்கான நிதியாதாரமும் உருவாக்கப்படவில்லை. இவையெல்லாம் கவி. மனுஷ்யபுத்திரனின் பணி எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. மாநில நூலக ஆணைக்குழுவைப் போல அல்லாமல் கூடுதல் சிறப்புடன் செயல்படும் வாய்ப்பைக் கொண்டது சென்னை மாவட்ட ஆணைக்குழு. அதனை உள்வாங்கிச் செயல்பட்ட மனுஷ்யபுத்திரன் பணிகள் பாராட்டுக்குரியவை.

துணைவேந்தர்களும் நானும் கூடுதல் பொறுப்புகளும்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப்பள்ளியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய ஏழரை ஆண்டுகளில் ஆசிரியப்பணியைத் தாண்டி வேறெந்தப் பணியையும் செய்ததில்லை. ஆனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியேற்ற பின் எப்போதும் ஆசிரியப்பணியோடு ஏதாவதொரு நிர்வாகப்பணியையும் கூடுதல் பணியாகச் செய்து கொண்டே இருந்தேன். இரண்டு ஆண்டுகள் வார்சா பல்கலைக்கழகத்திற்குச் சென்ற காலத்தைத் தவிர மற்றக் காலங்கள் ஒவ்வொன்றிலும் இந்தக் கூடுதல் பணிகளை அந்தந்த நேரத்துத் துணைவேந்தர்கள் அவர்களது அதிகாரத்தின் வழியாகவே என்னை நியமித்தார்கள். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  துணைவேந்தர் இல்லாத காலத்தில் ஆட்சிமன்றக்குழுவின் அதிகாரத்தில்  இருந்தவர்களால் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளராகக் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகப் பணியாற்றினேன். அடுத்த துணைவேந்தராக வந்த முனைவர் க.ப.அறவாணன் (தமிழியல் துறை, புதுச்சேரி பல்கலைக்கழகம்) முழு நேர ஒருங்கிணைப்பாளரை நியமனம் செய்தபோது என்னை அதிலிருந்து விடுவித்தார். ஆனால் சில மாதங்களிலேயே என்னிடம் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வழங்கினார். அவரது பதவிக்காலம் முடிந்து கிளம்ப இருந்த நிலையில் அவர் எனக்களித்த கூடுதல் பொறுப்பைத் திரும்பத் தரும் விதமாக விடுவிப்பைக் கோரும் கடிதத்தை வழங்கினேன். அதனைப் பெற்றுக் கொண்டு அந்த யோசனையைக் கூறினார். தார்மீக நிலையில் விடுவிப்புக் கடிதத்தை அளிப்பது சரியானது. ஆனால் அடுத்த துணைவேந்தர் வரும் வரை இந்தப் பணியை நீ செய்யவேண்டும். ஏனென்றால் அடுத்த துணைவேந்தர் வரத்தாமதமாகலாம். அந்தக் காலத்தில் இந்தத்துறையில் செய்ய வேண்டிய பணிகள் நின்றுபோகும் வாய்ப்பு ஏற்படக்கூடாது. எனவே இந்தக் கடிதத்தைத் திரும்பப்பெற்றுக் கொண்டு பதிப்புத்துறைப் பணியையும் தொடரலாம். அடுத்து வரும் துணைவேந்தர் வந்தவுடன், இந்தக் கடிதத்தை அவரிடம் தந்து விடுவித்துக் கொள்ளலாம் என்று சொல்லித் திருப்பித் தந்துவிட்டார். அதனை ஏற்றுத் திரும்பப்பெற்றுக் கொண்டேன்.

பேரா. க.ப. அறவாணன் அவர்கள் சொன்னபடிதான் நடந்தது. அவர் வெளியேறியவுடன் உடனே அடுத்தத் துணைவேந்தர் வரவில்லை. அப்போது முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடனடியாகத் துணைவேந்தர்களை நியமிப்பதில்லை. ஆறுமுதல் ஒருவருடம் வரை துணைவேந்தர்கள் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் இருந்ததுண்டு. பல மாதங்களுக்குப் பின்னரே பேரா.கு.சொக்கலிங்கம் ( குற்றவியல் துறை, சென்னைப்பல்கலைக்கழகம்) அவர்கள் துணைவேந்தராக வந்தார். வந்த முதல் வாரத்திலேயே அவரைப் பார்த்து பதிப்புத்துறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் உங்கள் விருப்பம் போல ஒருவரை நியமித்துக் கொள்ளும் விதமாக எனது விடுவிப்புக் கடிதத்தை அளிக்கிறேன் எனச் சொல்லிவிட்டுக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவர், ‘கடிதம் இங்கே இருக்கட்டும்; இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பவும் வந்து பாருங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். அவர் சொன்னபடி இரண்டு நாட்கள் கழித்துப் போனபோது எனது கடிதத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, “இந்தப் பொறுப்பில் நீங்களே தொடரலாம். நீங்கள் சரியாகப் பணியாற்றுவீர்கள் என்று உறுதியான – நம்பிக்கையான நபர்கள் சொல்லிவிட்டார்கள்; உங்களை மாற்றாமல் இருக்கலாம் என முடிவு செய்துவிட்டேன்” என்றார். அவர் பதவியில் இருந்த மூன்று ஆண்டுகளும் அந்தப் பொறுப்பில்  நானே தொடர்ந்து இருந்தேன். பதிப்புத்துறை வழியாக பல்கலைக்கழகத்தின் செய்தி மடலையும் வெளியிடச் சொன்னார். நானும் கவிஞர் பாலாவும் அதன் ஆசிரியராக இருந்து கொண்டுவந்தோம். இந்த அனுபவத்தில் தான் மனுஷ்யபுத்திரன் அவசரப்பட்டிருக்க வேண்டியதில்லை எனச் சொன்னேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் காலம். இயல் . 5 தமிழுணர்வு

சுஜாதாவின் அரங்கியல் பார்வை: எழுத்துப் பிரதிகளின் ஊடாக

திறந்தநிலைப் பொருளாதாரம்: தேசிய,திராவிட இயக்கங்கள்