தமிழகக்கல்வித்துறை: முன்னிற்கும் சவால்கள்
தமிழக வெற்றிக்கழகத்தின் அரசு, ஒன்றிய அரசின் நோக்கங்களோடு எந்தெந்த நிலையில் ஒத்துப்போகும், எந்தெந்த நிலையில் தனது தனித்துவத்தைப் பேணும் என்பதற்குச் சாட்சியாக இருக்கப்போவது தமிழ்நாட்டு அரசின் கல்வித்துறை. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள த.வெ.க. அரசின் பள்ளிக்கல்வித்துறையும் , உயர்கல்வித்துறையும் பெரும் சவால்களை எதிர்கொள்ள இருக்கின்றன.
அதற்குப் பொறுப்பேற்றுள்ள துறை அமைச்சர்கள் இதனை உள்வாங்கிக் கொண்டு எப்படி நகர்த்துவார்கள் என்பதைக் காணக் கல்வித்துறை சார்ந்த பணியைச் செய்தவன் என்ற வகையில் ஆவலோடு இருக்கின்றேன்.ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற நான் ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கத்தின் போது பங்கேற்றுள்ளேன். உயர்கல்விக்குழுக்களில் மட்டுமல்லாது, பத்தாண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசு உருவாக்கிய புதிய பாடநூல்கள் குழுக்களிலும் இருந்துள்ளேன். பல்கலைக்கழகங்களின் அஞ்சல்வழிக்கல்வி, சமுதாயக்கல்வி, தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் முறைசாராக்கல்விப் பாடத்திட்டம் எனப் பலவற்றில் இருந்து பெற்ற அனுபவத்தோடு சேர்ந்தது என்னுடைய எதிர்பார்ப்பு. கடந்த தி.மு.க.ஆட்சியில் ஒன்றிய அரசோடு வெளிப்படையான முரண்பாடுகளைக் கொண்டிருந்த துறையாக இருந்தது கல்வித்துறை. இந்துத்துவ நோக்கில் எதிர்கால இந்தியாவை எப்படி மாற்ற வேண்டும் என்ற திட்டத்தைக் கல்வித்துறை வழியாக நிறைவேற்றும் நீண்ட கால நோக்கம் ஒன்றிய அரசுக்கு இருந்தது. அதற்கான கருத்தியல் தளத்தை உருவாக்கித் தந்துள்ளது சிந்தனைக்குழு. பா.ஜ.க.வின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்த நினைத்த புதிய கல்விக்கொள்கையின் வரைவுத் திட்டமும், அடுத்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முதன்மை அமைச்சரின் உதிக்கும் இந்தியாவிற்கான பள்ளிகள் (PMSRI) திட்டத்தின் வரைவுகளையும் நடைமுறைகளையும் கவனித்தவர்களுக்கு இது புரியும்.
இரண்டையும் முழுவதும் ஏற்காத நிலையைக் கொண்டிருந்தது முந்திய தி.மு.க. அரசு. அதே நேரம் அத்திட்டங்களில் இருந்த சில கூறுகளை நடைமுறைப்படுத்தவும் செய்தது. அனைவருக்கும் பரவலான கல்வியை வழங்கும் தமிழ்நாட்டுக் கல்விமுறையைத் தக்க வைத்துக்கொண்டே இல்லம் தேடிக்கல்வி, நான் முதல்வன் திட்டம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தியது. அதன் பின்னணியில் பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெளியாள்/ நிறுவனங்கள் பங்கேற்புகள் இருந்தன. அதன் விளைவுகள் இருபக்கத்தன்மை கொண்டவை. ஆசிரியர்களுக்குப் பணிச்சுமையும், செய்த பணிக்கான மதிப்பின்மையும் உருவானது. அதனைக் கல்வித்துறை அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை என்பதைத் தாண்டி, அதற்கென ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாமல் தவித்தது என்பதும் உண்மை. அதனால் மாநிலை அரசின் நிதியிலிருந்தே எல்லாவற்றையும் செய்தது. தமிழ்நாட்டரசுக்குப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டது. பள்ளிக்கல்வியில் நடந்த சீர்திருத்தங்களும் திட்டங்களும் ஏற்படுத்திய விளைவுகள் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டியவை.
பள்ளிக்கல்வித்துறையை விடவும் தீங்கான பெரும் விளைவுகளைச் சந்தித்துள்ளது உயர்கல்வித்துறை. தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரகள் நியமனங்கள் இல்லை. அதனால் துறைகளின் ஆசிரியர்கள் நியமனங்களும் இல்லை. புதிய ஆய்வுகளை நோக்கிய நகர்வுகள் இல்லை. பத்தாண்டுகளுக்கு முன்னர் நடந்த நியமனங்களும் பெருந்தொகை பெற்றுக்கொண்டு போடப்பட்டன. பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி போன்ற பதவிகள் எல்லாம் பொறுப்புப் பதவிகளாக மாறிவிட்டன. தனியார் கல்லூரிகளின் இடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டன. ஆனால் அரசுக் கல்லூரிகளில் தற்காலிக/ கௌரவப் பேராசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டனர். சுயநிதிக் கல்லூரிகள் புதியபுதிய பாடங்களைக் காட்டிப் பணம் சேர்க்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அரசுக்கல்லூரி மாணவர்களுக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்தப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமனம் இல்லை. இவற்றைத் தாண்டி தொழில்துறைக் கல்வியை வழங்கும் மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பம், கால்நடை, வேளாண்மை போன்ற கல்வி நிறுவனங்களும் மறு சீரமைப்பை நோக்கி நிற்கின்றன. தனித்தனி துறைகளுக்கான உயராய்வு நிறுவனங்களின் இயக்கம் பற்றித் தமிழ்நாட்டின் அறிவுலகமும் பொதுப்பரப்பும் எப்போதும் நினைத்துக் கூடப்பார்த்ததில்லை. அவற்றையும் புதிய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
இருமொழிக்கொள்கைX மும்மொழிக்கொள்கை எனச் சுருக்கிப் புரிந்து கொண்டுள்ள நிலையைத் தாண்டி தமிழ்நாட்டின் இளையோர் கல்வி, வேலைவாய்ப்பு என்பதோடு தொடர்புடையது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதே நேரம் தமிழ்நாட்டின் சமூகநீதி அடிப்படைகளுக்கும் பின்னடைவும் ஏற்படக்கூடாது. இத்தைகைய புரிதலோடு கல்வித்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் - திரு.ராஜ்மோகன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திரு.சி.வி.விஸ்வநாதன், உயர்கல்வித்துறை அமைச்சரும் செயல்படப்போவதை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். இரண்டு நிலையிலும் எதிர்வரும் ஜூன் மாதம் மாணாக்கர்கள் அவரவர் கல்வி வளாகங்களுக்கு வரப்போகின்றார்கள். அவர்களுக்குப் புதிய ஆட்சி என்ன மாற்றத்தைத் தரப்போகின்றது என்பதைக் காண ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்ப்போடு இருப்பார்கள் என்ற உணர்வோடு இதனைச் சொல்கின்றேன்.
இருமொழிக்கொள்கைX மும்மொழிக்கொள்கை எனச் சுருக்கிப் புரிந்து கொண்டுள்ள நிலையைத் தாண்டி தமிழ்நாட்டின் இளையோர் கல்வி, வேலைவாய்ப்பு என்பதோடு தொடர்புடையது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதே நேரம் தமிழ்நாட்டின் சமூகநீதி அடிப்படைகளுக்கும் பின்னடைவும் ஏற்படக்கூடாது. இத்தைகைய புரிதலோடு கல்வித்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் - திரு.ராஜ்மோகன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திரு.சி.வி.விஸ்வநாதன், உயர்கல்வித்துறை அமைச்சரும் செயல்படப்போவதை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். இரண்டு நிலையிலும் எதிர்வரும் ஜூன் மாதம் மாணாக்கர்கள் அவரவர் கல்வி வளாகங்களுக்கு வரப்போகின்றார்கள். அவர்களுக்குப் புதிய ஆட்சி என்ன மாற்றத்தைத் தரப்போகின்றது என்பதைக் காண ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்ப்போடு இருப்பார்கள் என்ற உணர்வோடு இதனைச் சொல்கின்றேன்.
.jpeg)
.jpeg)
கருத்துகள்