மாடத்தி: மாற்று சினிமாத்திசையிலொரு பயணம்


இந்தியாவின்/தமிழ்நாட்டின் தென் மாவட்டக்கிராமம் ஒன்றின் காவல் தெய்வமாக விளங்குவது மாடத்தி. புதிரை வண்ணார் சாதியைச் சேர்ந்த யோசனா என்னும் பதின் வயதுப் பெண், மாடத்தி என்னும் தெய்வமாக – காவு வாங்கிய துடியான தெய்வமாக ஆன கதை, வாய்மொழி மரபில் சொல்கதையாக இருக்கிறது. அக்கதைக்குப் பின்னால் இருந்த சாதி ஒதுக்கலையும், ஒதுக்கப்பட்ட சாதிப் பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் பாலியல் வன்முறையையும் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறது லீனா மணிமேகலையின் மாடத்தி.

துணிகளைச் சலவை செய்து தருவதற்கெனச் சாதிய இந்(து)தியா உருவாக்கியிருக்கும் சாதியின் பெயர் வண்ணார். அவ்வண்ணார்களுக்குள் புதிரை வண்ணார்கள் தீண்டாமைக்குள்ளான சாதியினருக்குத் துணி வெளுப்பவர்களாகவும், சாவுத் துணி மற்றும் தீட்டுத்துணி துவைப்பவர்களாகவும் மேலும் ஒதுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள். அவர்களுக்கான வாழிட வெளி பெரும்பாலும் நீர்ச்சுரப்புள்ள காட்டுப்பகுதி. அவர்களைக் கண்ணால் கண்டாலே தீட்டு என ஒதுக்கி வைக்கும் சமூகம் இந்தியப் பொதுச்சமூகம். இந்தப் பின்னணியிலிருந்து உருவான தெய்வமான மாடத்தியின் கதையை லீனாவின் புதிய சினிமா பொறுப்போடு விரித்துக்காட்டியுள்ளது.

இணையடுக்குதல் கொண்ட திரை மொழி

பரந்து விரிந்த காட்டுக்குள் தாவித்திரியும் காட்டுயிர்கள் ஒவ்வொன்றின் பகுதியாக மாறித்திரியும் இன்னொரு காட்டுயிர் யோசனா என்னும் பதின்பருவப்பெண். யோசனாவைப் பற்றிய படிமங்களை லீனாவின் சினிமா இப்படித்தான் அடுக்கிக் காட்டுகிறது. காட்டுப் பாதையில் சிறகெனத் தனது கைகளை விரித்துப் பறக்கும் பறவை அவள்; தாவித்திரியும்முயல் குட்டிகளுக்குத் தனது உணவைப் பங்கிட்டுப் பாதுகாக்கும் தோழி, வழிபாட்டுச் சடங்கில் இருக்கும் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களைக் குரங்குகளோடு பகிர்ந்துண்ணும் பங்காளி, நீருக்குள் வாலசைத்து நீந்தித்திரியும் மீன்களோடு மீனாய் நீந்தித்திரியும் மீனாக இருப்பவள். இலவம் பஞ்சு மரத்தில் தொங்கும் இலவம் பஞ்சுக்காயாய்த் தொங்கும் இன்னொரு காய். அதே நேரத்தில் அவளது பருவ வயதுக்கான ரகசியங்களிலும் ஈடுபடுகிறாள்.

ஆண்களின் உடலைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவள். ஆண் உடல் உண்டாக்கக்கூடிய கிளர்ச்சியை உணரும் பருவத்தினள். ஆண்களின் குரல்களைக் கேட்கச் செவியைத் தருபவள். காட்டுயிர் போல் திரியும் யோசனாவுக்குள் ஒரு பதின்பருவப் பெண்ணின் உணர்வுகளும் வளர்ந்துகொண்டே இருந்தன என்பதையும் காட்சிகள் இணைநிலையாகக் காட்டிக்கொண்டே இருக்கின்றன. முழுநிர்வாணமாக நீருக்குள் குதிக்கும் ஆடவனின் உடலைப் பார்த்துக் கிறங்கிப் போகும் காட்சியின் ஆழம் இதனை உணர்த்துகிறது. யோசனாவின் கானுயிர் நேசிப்பும், ஆணுடல் ஈர்ப்பும் படிம அடுக்குகளாக நகரும் அழகியலில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது.

பதின் வயதில் இருக்கும் அவளுக்கு, அவளது அம்மையும் அப்பனும் பாட்டியும் ஊர்க்காரர்களுக்கு அடிமைப்பட்டவர்களாக இருப்பது பற்றியோ, ஒதுக்கப்பட்டு இருட்டு வாழ்க்கை வாழ்வது பற்றியோ பெரிதாக ஒன்றும் தெரியாது.அவர்களைப் போல அல்லாமல், ‘தனது சித்து வேலைகளையும் மாய மந்திரங்களையும் ஊருக்குக் காட்டுவதற்காக இருட்டு வாழ்க்கையைத் துறந்து துறவியாகத் திரியும் தாத்தாவின் மீது ஒரு பிரமிப்பும், வாஞ்சையும் இருக்கிறது. அவருக்கும் இந்தப் பெண் யோசனா, “ சாதாரணப் பெண்ணாக முடிந்துவிடப் போகிறவளல்ல; தெய்வமாகப் போகிறவள்” என்ற முன்னறிவு இருக்கிறது.


கானுயிர்களாய்க் காட்டுக்குள் அலைந்து திரியும் யோசனாவின் அலைவைப் படிமங்களால் சொல்லும் லீனா, ஊர் மக்களின் நடப்பும் இருப்பும் சாதிய ஆதிக்கத்தாலும், குயுக்தியான தந்திரங்களாலும் ஆனது எனக் காட்டுவதற்குப் பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார். ஊரின் தலையாரி அல்லது நாட்டாமை, அவர் சொல் கேட்டு நடக்கும் சாதிஜனம், அவரது செயல்பாடுகள் மீதும் கேள்விகள் கொண்ட அடுத்த தலைமுறை இளைஞர்கள் என உருவாக்கப்பட்ட பாத்திரங்களுக்குள் சாதித்திமிரும், காமத்தைத் தீர்க்க ஒழுங்கற்ற வழிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் என்பதையும் முன்வைக்கிறது.

முதல் ஓவியத்தையும் கடைசி ஓவியத்தையும் இணைத்து ஊரின் சாதி ஆதிக்கத்தின் கதையாகவும் தங்களின் சாவுத்துணிகளையும் தீட்டுத்துணிகளையும் வெள்ளாவியில் வைத்து வெளுத்துக் கொடுத்த புதிரை வண்ணார் குடும்பத்தின் மீது செலுத்தும் உழைப்புச் சுரண்டலையும் பாலியல் அத்துமீறல்களையும் சொல்லிக் கொண்டே போகும் ஓவியச் சிறுவன் எல்லாவற்றையும் ஆறும் மழையுமான நீர்நிலைகள் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே இருந்தன என்று அந்தப் பெண்ணிடம் சொல்கிறான். ஆனால் பொறுமையைக் கைவிட்ட மழை தொடர்ச்சியாகப் பெய்து ஊர் மக்களை அச்சத்திற்குள் தள்ளியது. அதன் தொடர்ச்சியாக ஆற்றங்கரை அம்மனுக்குக் கோயில் கட்டிக் கண் திறக்கும் நாளாக அடுத்த பௌர்ணமி தீர்மானிக்கப்படுகிறது. தெய்வத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஊர்மக்கள் ஒருபுறம்; இன்னொரு பக்கம் அம்மனாகப் போகும் யோசனாவைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் போதையேறிய இளையோர் கூட்டம் ஒருபுறம் எனக் காட்சிப்படுத்தும் படம், ஒட்டுமொத்தக் கிராமும் – ஆண், பெண் என அனைவரும் இதற்கு உடந்தை என்பதைக் காட்ட கடைசிக்காட்சியை விரித்துள்ளது. எந்த நிலையிலும் ஊருக்குள் வராத – இருட்டில் வாழ்ந்த வண்ணாத்தியின் குடும்பம் தன் மகளுக்கு நியாயம் கேட்டு வந்தபோது ஒட்டு மொத்த ஊரும் அவர்களுக்கு எதிராக இருந்த து எனக் காட்டுகிறார் இயக்குநர். தொடர்ச்சியாகப் பெண்கள் இருவரும் அள்ளித்தூத்திய மண் மழையாகவும் காற்றாகவும் மாறிக் கோயிலை இடித்துக் கண்களை அவித்துக் குருடாக்கியது என முடிக்கிறார்.

கடந்த காலத்துக் கதையை, நிகழ்காலத்து மனுசி ஒருத்திக்கு – புதுதாய்க் கல்யாணமாகித் தனது கணவனின் காவல் தெய்வமான மாடத்தி கோயிலுக்கு வந்தவளுக்கு- ஓவியங்கள் வழியாக் கடத்தும் சொல்முறையைப் படத்தின் சொல்முறையாகக் கையாண்டுள்ளார். அழுக்கு மூட்டையோடு விடியாத இரவுப் பொழுதில் துணி வெளுக்கும் ஆற்றுத்துறையை நோக்கிச் செல்லும் புதிரை வண்ணாத்தியும் அவள் கணவனும் நடக்கும் ஓவியத்தை முதல் ஓவியமாக்கி, கண்ணவிந்த ஊர்க்காரர்களின் கூட்டத்தைக் கடைசி ஓவியமாக்கிக் கதையை நிகழ்த்திக் காட்டும் சினிமா, அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவனின் வாரிசே அந்தப் பெண்ணின் கணவனும் என்பதாகக் காட்டுகிறது. தனது காவல் தெய்வமான மாடத்தி கோயிலுக்குப் புதுமனைவியை அழைத்துப் போகும் கணவனின் வெள்ளைச் சட்டையில் அவள் நெற்றியிலிருந்த குங்குமத்தின் தீற்றுகள் பதிந்து கிடப்பதின் வழியாக அது உணர்த்தப்படுகிறது.சாதி ஆதிக்கத்திமிரால் வன்கொலைக்கு ஆளான பெண்ணின் கோபத்துக்கு ஆளாகிக் கண் கெட்டுப்போன முன்னோர்களைப் போலத் தங்களுக்கும் அழிவு வந்து சேர்வதைத் தடுப்பதற்காகவே அவளைத் தெய்வமாக்கி வழிபடுகிறார்கள் என முடிகிறது


தன்னைச் சாலையில் இறக்கிவிட்டுப் போன கணவன் திரும்பாத நிலையில் குடிசைக்குள் நுழைந்து, யோசனா மாடத்தியான கதையை ஓவியங்களின் வழி அறியும் பெண், தனது கணவன் அந்த ஊர்க்காரப் பரம்பரையில் ஒருவன் என உணர்ந்துகொண்ட தாக க்காட்டுவதன் மூலம் கடந்த காலக்கதையை நிகழ்காலத்தோடு இணைக்கிறார் இயக்குநர். படம் அவளது கோபம் அல்லது ஆற்றாமையில் கவிந்து முடிக்கப்பட்டிருக்கலாம். .

லீனாவின் விமரிசனம்

இந்தியக் கிராமத்து மனிதர்களால் வழிபடப்படும் நாட்டார் தெய்வங்களில் பலவும் கொலைசெய்யப்பட்ட மனிதர்களின் வாழ்க்கைக் கதையோடு தொடர்புடையன. தனிமனிதர்கள் தங்களின் தனிமனித மனச்சாட்சியைத் தூர விலக்கிவிட்டு, ஊர், சாதி, சமயச்சடங்கு போன்றவற்றால் உருவாகும் கூட்டு மனச்சாட்சியால் நிகழ்த்தப்பெற்ற கொலைகளோடு தொடர்புடையன. கொலையை நிகழ்த்திய கூட்டத்தின் கூட்டு மனச்சாட்சிக்கு ஏற்படும் அச்சவுணர்வே பின்னர் கொலைசெய்த பெண்ணை அல்லது ஆணைத் தங்களின் காவல் தெய்வமாகவோ, குலதெய்வமாகவோ ஆக்கிக் கொண்டனர் என்பதை மானுடவியல் ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. தெய்வ உருவாக்கத்திலும் அவற்றின் மீதான நம்பிக்கையிலும் கிழக்கும் மேற்குக்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு.

மேற்குலகப் பண்பாட்டையும் கீழ்த்திசைப் பண்பாட்டையும் பாரதூரமாகப் பிரித்துக் காட்டும் அடையாளங்களில் ஒன்று தெய்வங்கள் பற்றிய பார்வை. பேரமைப்பாக விளங்கும் தேவாலயம் அல்லது புனிதத்தலம் என்ற ஈடுபாட்டிற்குப் பதிலாகச் சின்னச் சின்ன எல்லைகளையும் பரப்பையும் கொண்ட தெய்வங்களை வாழ்க்கையின் பகுதியாக/ வழிகாட்டியாக ஆக்கிக்கொண்ட மனிதர்களால் நிரம்பியது கீழ்த்திசைப் பண்பாடு. மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் பகுதியாக இல்லாமல் அவ்வப்போது வந்து மனதை நிரப்பி, எச்சரிக்கை செய்யும் தெய்வங்களைக் கொண்டவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல; கீழ்த்திசை நாடுகள் பெரும்பாலானவற்றிலும் இவ்வகை மனிதர்களே நிரம்பியிருக்கிறார்கள். அந்த வகையில் லீனாவின் மாடத்தி கீழ்த்திசைப் பண்பாட்டின் மீது கவனத்தைத் திருப்பிய படம். அந்தக் கவனம், அதனைப் பாராட்டிப் போற்றிக் கொண்டாடும் கவனம் அல்ல. அதன் மீதான கடும் விமரிசனத்தை முன்வைத்துள்ள படம்.

********

தேர்வுசெய்த கதைக்களன், படிமங்களாலும் காட்சிகளாலும் அடுக்கும் சொல்முறை, நிகழ்வுகள் நடந்திருக்கக் கூடிய இடங்கள் என்று நம்பக்கூடிய இடங்களிலேயே படமாக்கியுள்ள தனித்தன்மை, அங்கிருக்கும் மனிதர்களையே நடிகர்களாக்கிக் கொண்டு குறைவான பாத்திரங்களுக்கு மட்டும் நடிகர்களின் உதவியை நாடியிருக்கும் முயற்சி போன்றவற்றின் மூலம் தனது சினிமாவை இப்போதுள்ள வணிக சினிமாவுக்கு மாற்று என முன்வைக்க முயன்றுள்ளார் லீனா மணிமேகலை.

நடைமுறையில் செல்வாக்குடன் இருக்கும் வணிக சினிமாவுக்கு மாற்றை முன்வைக்கும் இயக்கநிலை முயற்சிகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. நவீனத்துவ அரசியலோடு தொடர்புடைய அதன் வரலாறு கடந்த 30 ஆண்டுகளில் துண்டு துண்டாக உடைந்து ஏறத்தாழ முடிந்துவிட்டது. அதன் தொடர்ச்சியில் அந்த முயற்சிகளைத் தனிநபர்கள் தங்களுக்குரியதாக ஆக்கிக் கொண்டு வருகிறார்கள். கைக்கடக்கமான படப்பதிவுக்கருவி, கணினிவழி இசைக்கோர்ப்பும் படத்தொகுப்பும் எனப் புதிய தொழில் நுட்பம் வழங்கியுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்துவதின் மூலம் அது சாத்தியமாகிறது. அத்தோடு, அமைப்புகளோடு ஒத்துப் போகமுடியாத மனநிலையைப் பின் நவீனத்துவ வாழ்தல் முறை வழங்கியதின் தொடர்ச்சியாகவும் இந்தத் தனிநபர் முயற்சிகளைக் கணிக்க முடியும். அதனால் தான் இத்தகைய முயற்சிகளுக்குத் தொடர்ச்சிகள் இருப்பதில்லை.

பங்களிப்புகள் வழியாக மாற்றை உருவாக்குதல்
தமிழின் பெண்ணியக்கவியாக அறியப்பெற்ற லீனா மணிமேகலையால் தயாரித்து இயக்கப்பெற்றுள்ள இச்சினிமாவில் இன்னும் சில கவிகளும் வேலை செய்திருக்கிறார்கள். திரைக்கதை மற்றும் வசனச்சேர்க்கையில் யவனிகா ஸ்ரீராமும், பாடல்களின் குரலில் என்.டி.ராஜ்குமாரின் பங்களிப்பு இருந்துள்ளது. ஊர்ப் பெரியவராக நடித்துள்ள ஓவியர் புருசோத்தமனும், தனது நடிப்பு மூலம் புதிரை வண்ணாரப் பெண்ணின் துயரத்தை முழுமையாக்கியிருக்கும் செம்மலர் அன்னமும் மாற்று நாடக முயற்சிகளில் பங்கெடுத்து வருபவர்கள். பாத்திரங்களாக நடித்தவர்களுக்கும் கிராமத்து மனிதர்களுக்கும் நடிப்புப்பயிற்சி அளித்துப் பங்களிப்புச் செய்தவர் புதுவை நாடகப்பள்ளி மாணவர் கோபி. தொழில் நுட்ப அளவில் பங்களிப்பு செய்தவர்களும் நேரடியாக வணிக சினிமாவுக்குள் இயங்காமல் மாற்று முயற்சிகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவே அறியப்படுகிறவர்கள். இவர்கள் அனைவரையும் இணைத்துப் படமாக்கிப் புதிய வெளிப்பாட்டுத் தளமான இணையம் வழியாகப் பார்வையாளர்களுக்குத் தந்துள்ள இயக்குநரின் இந்த முயற்சி முழுமையான மாற்றுச் சினிமாவை நோக்கிய முக்கிய திருப்பம் எனச் சொல்ல வேண்டிய ஒன்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்