தமிழ்க்குடிதாங்கி: ஆய்வுக்கட்டுரையான ஆவணப்படம்

 


2011 - இல் மருத்துவர் .ராமதாஸ் அவர்களுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கும் ஆண்டுவிருதுகளில் ஒன்றான அம்பேத்கர் சுடர் விருதை வழங்கியது. அதற்கும் முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அவரைத் தமிழ்க்குடிதாங்கி என்று பட்டம் வழங்கிப்பாராட்டினார்.

இவ்விரு பட்டங்களுக்கும் பா.ம.க.வின் நிறுவனத்தலைவர் பொருத்தமானவர் தானா? என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு முடிவை நோக்கி நகர்ந்துள்ளது ஒரு ஆவணப்படம். முறையாகச் சென்னைத் திரைப்படக்கல்லூரியில் இயக்குநர் பிரிவில் பட்டயப்படிப்பை முடித்துள்ள திருக்குமரன் கணேசனின் இயக்கத்தில் வந்துள்ள ’தமிழ்க்குடிதாங்கி’ (2019) ஆவணப்படத்தைத் தீட்சா படைப்பகம் வெளியிட்டுள்ளது. இவ்விரு பட்டங்களில் தமிழ்க்குடிதாங்கி பட்டத்திற்குக் காரணமான கிராமத்திற்கு - கும்பகோணத்திற்கருகில் உள்ள குடிதாங்கி கிராமத்திற்குப் பார்வையாளர்களை அழைத்துச் சென்று அங்கிருக்கும் பலரது பேச்சையும் கேட்கச் செய்கிறது படம்.

இறந்தபின்னும் சாதிப்பிரிவுகளைப் பேணும் இந்திய சமூகம், பிணங்களை எரிப்பதற்கும் புதைக்கும் தனித்தனிப் பகுதிகளைப் பேணுகிறது. அந்தப் பகுதிகளில் பிணங்களைப் புதைப்பதற்கும் எரிப்பதற்கும் எடுத்துச் செல்லும் பாதையில் கூட பொதுவான ஒன்று இருக்கக் கூடாது; அதனால் தீட்டுவந்து சேரும் என்ற நம்பிக்கை கொண்டது. அந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கிய விழிப்புணர்வு, ’பாதை பொதுவானது; அனைவராலும் வாக்களித்துத் தேர்வு செய்த அரசாங்கம் போட்ட பாதை; அதனால் எங்கள் பக்கத்துப் பிணங்களையும் இந்தப் பாதை வழியாக எடுத்துச் செல்வோம்’ என வாதங்கள் செய்யும்போது, ‘அதெல்லாம் வழக்கம் இல்லை’ எனக் கூறி மறுக்கும் முரட்டுத்தனம் இன்றும் தொடர்கிறது.

மருத்துவர் ச.ராமதாஸுக்குத் தமிழ்க்குடிதாங்கி என்ற பட்டம் பெறக்காரணமான நிகழ்வின் தொடக்கம் 1988.  கும்பகோணத்திற்கருகில் உள்ள குடிதாங்கியும் ஊரென்றும் சேரியென்றும் பிரிக்கப்பெற்ற இந்தியக்கிராமம்தான். பொதுச்சுடுகாடு மறுக்கப்பட்ட சேரிமக்களுக்குத் தனிச்சுடுகாட்டுக்குப் போகப் பாதை மறுக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளக்கூடாது; அரசாங்கம் போட்ட பாதையில் சென்றே பிணத்தைப் புதைக்க வேண்டும் என்ற உரிமைக்கான அரசியல் விழிப்புணர்வூட்டிய தலைவர் டி.எம். மணி. நான்கு ஆண்டுகளாக அவர் பணியாற்றியதின் தொடர்ச்சியாகவே குடிதாங்கிச் சேரி மக்கள் தங்கள் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தனர். அரசின் நடவடிக்கையால் அவர்களது உரிமை நிலைநாட்டப்படும்; அதனை எதிர்க்கும் வன்னிய சாதியினர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற நிலையிலேயே ராமதாஸ் அவர்கள் 1992 இல் குடிதாங்கிக்குச் சென்று சமரச முடிவை எடுத்தார். அந்நிகழ்வின் முழுப்பலனும் ஏற்கெனவே முன்னெடுப்புச் செய்த தலைவர் டி.எம். மணிக்குப் போகவேண்டியது. ஆனால் மருத்துவர் ராமதாஸுக்குப் போய்விட்டது. அவரோடு தேர்தல் அரசியலில் இணக்கம் காட்ட முடியும் என்று நம்பிய தொல். திருமாவளன் அவரைத் தமிழ்க் குடிதாங்கி எனப் பட்டம் வழங்கிப் பாராட்டினார். பிழையான கணிப்பொன்றில் மூலம்  அப்படிப் போகச் செய்ததில் தொல்.திருமாவளவனின் அரசியல் நோக்கமும் இருந்தது என்பதாகப் பேச்சுகளையும் காட்சிகளையும் நகர்த்திச் செல்கிறது படம்.   

வன்னியர் சங்கத்தைப் பாட்டாளி மக்கள் கட்சியாகப் பெயர் மாற்றி அதன் இருப்பை வடமாவட்டத்தைத் தாண்டி, தமிழகப்பரப்பிற்குள் கொண்டுசெல்ல மருத்துவர் மேற்கொண்ட முயற்சி பலவிதமானவை. தொடக்கநிலையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் அடுத்தடுத்த பட்டியலிலும் அரசுப் பதவிகளிலும் அதிகாரத்திலும் இணையாகவும் இருக்கும் சாதிகள் ஒன்றிணைந்து உரிமைகளைக் கோரவேண்டும்; போராட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டார். அதற்காகத் தென்மாவட்டங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த திரு ஜான் பாண்டியனோடு கூட்டணி சேர்ந்தார். தனது கட்சியில் ஒடுக்கப்பட்டோர் பிரதிநிதித்துவத்தைக் கவனிக்கத்தக்க ஒன்றாக மாற்றினார். தலித் எழில்மலையை ஒன்றிய அரசின் அமைச்சராக ஆக்கியது பாட்டாளிமக்கள் கட்சி. அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமா வளவனோடு இணக்க அரசியலிலும் ஈடுபட்டார். இந்தப் பின்னணியில் தான் தமிழ்க்குடிதாங்கி பட்டம் முதலிலும், அம்பேத்கர் சுடர்விருது பின்னரும் வழங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் வடமாவட்டங்களில் இரு கட்சிகளும் தேர்தல் அரசியலில் ஓரணியில் இருக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டது. அந்த நிலையில் இரண்டு கட்சிகளும் பிரிந்து வெவ்வேறு அணிகளில் இடம்பெறவேண்டிய நெருக்கடிகளைச் சந்தித்தன. அத்தோடு வன்னியர்களும், வடமாவட்டத்துப் பறையர்களும் மோதல்களிலும் ஈடுபட்டனர்; குடிசைகள் கொளுத்தப்பட்டன; ஆணவக்கொலைகள் நடந்தேறின. இப்போதும் மாறுபட்ட கருத்தோட்டங்கள் பொதுத்தள விவாதங்களாகவும், தீவிரமான முரண்நிலைகள்  கிராமங்களின் வெக்கையாகவும் இருக்கின்றன.

சாதிய முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதின் வழியாகவே பாட்டாளி மக்கள் கட்சியின் இருப்பை உறுதி செய்யும் மருத்துவர் ச.ராமதாஸுக்கு வழங்கப்பட்ட ‘தமிழ்க்குடிதாங்கி’ என்ற பட்டத்திற்குப் பொருத்தமற்றவர் அவர்  என்பதை முன்வைக்கும் திருக்குமரனின்  ஆவணப்படம் முழுமையும் உள்ளூர்க்காரர்களில் சிலரையும் அப்பிரச்சினையில் செயல்பட்ட களப்பணியாளர்களையும் குறிப்பிட்ட ஊரில் நிறுத்திப் பேச வைத்திருக்கிறது. அதன் மூலம் மட்டுமே ஒரு ஆவணப்படத்திற்கு நம்பகத்தன்மையை உண்டாக்க முடியும் என நம்பியிருக்கிறார்.

ஆவணப்படம் என்பது நேரடியாகப் படமாக்குவதை முதன்மைத் தேவையாக க்கொண்ட து. ஆனால் எல்லாப்படங்களையும் அப்படி எடுத்துவிட முடியாது. நடந்த நிகழ்வை மறு உயிர்ப்புச் செய்ய வேண்டும் என நினைக்கும் ஒரு ஆவணப்பட இயக்குநர்,  கள ஆய்வையும் தரவு சேகரிப்பையும் முறையாகச் செய்ய வேண்டும். திரட்டிக்கொண்டு, படமாக ஆக்குவதற்கு ஒரு பார்வைக்கோணத்தைத் தெரிவுசெய்ய வேண்டும். இந்தப் படம் அதனைத் தவறவிட்டிருக்கிறது; யாரை நோக்கிய முன்வைப்பு என்பதில் தெளிவு இல்லை. யாரைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிறது என்பதிலும் திசைவிலகல்கள் இருக்கின்றன.  பொதுப்பாதையைப் பயன்படுத்துவதற்கான சூழல் உருவான நேரத்தில் அங்கு வந்து அதனைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ராமதாஸ் மீதா? அவருக்குப் பட்டம் தந்த தொல்.திருமாவளவன் மீதா? என்ற தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். இரண்டு பேர் மீதும் தான் குற்றம் சுமத்த நினைக்கிறது என்றால் அதற்கு வலுவான காரணங்களையும் அதற்கான காட்சிகளையும் வைத்திருக்கவேண்டும்.

தரவு சேகரிப்பில் - கள ஆய்வில் திசைவிலகல்கள் இருந்தாலும், நூலகம் சார்ந்த தரவு சேகரிப்பில் பிழைகள் வந்துவிடக் கூடாது. சாதியின் தோற்றம் பற்றிய அம்பேத்கரின் பார்வையைச் சரியாக உள்வாங்கியதாகத் தெரியவில்லை. குடிதாங்கி என்ற கிராமத்தின் நிலவியல் பரப்பையும், அதில் சேரியின் இருப்பையும் காட்சி ரூபமாகவும், காமிராவின் அசைவுகள் வழியாகவும் காட்ட நினைக்கவில்லை. ஆவணப்படுத்த நினைத்த வெளியைக் கூட முழுமையாகப் பதிவுசெய்யாமல், அந்நிகழ்வில் பங்கெடுத்தவர்களையும். பங்கெடுத்தவர்களுக்கு உதவியவர்களையும் பேசச் செய்வதிலேயே முழுக்கவனம் செலுத்தியிருக்கிறது.  பதிவுசெய்திருக்கிறது.   காமிராவின் பயணங்கள் தான் சினிமாவின் மொழி. அதில் காட்டும் கோணங்களும் விவரிப்புகளுமே பார்வையாளர்களைப் பட த்தின் பக்கம் இழுக்கும். அதனை நோக்கி அடுத்த படத்தில் இயக்குநர் நகரவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்