புலம்பெயர் எழுத்துகள்: வரலாறாக்கப்படும் புனைவுகள்

இலங்கையின் தமிழ்ப் பகுதியில் நடந்த போர்க்காலம் தொடர்ந்து புனைகதைகளாக எழுதப்படுகின்றன. போர் நிகழ்ந்த காலத்தில் வந்த எழுத்துகளைவிட, போருக்குப் பின் அந்தக் காலங்களை நினைவில் கொண்டு எழுதப்படும் புனைவு எழுத்துகள் - நாவல்களும் சிறுகதைகளும் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கின்றன. அதனை எழுதுபவர்களில் பெரும்பாலோர் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களாக இருக்கின்றனர்.

போரின் காலம்

“போர்க்காலம்” என்ற பரப்பிற்குள் சிங்களப் பெரும்பான்மைப் பேரினவாத ஆதிக்கத்திற் கெதிராக நடந்த மக்கள் திரள் போராட்டங்களைவிடவும், ஆயுதம் ஏந்தவேண்டிய நெருக்கடிகள் தொடங்கிய காலத்தைத் தொடக்கப் புள்ளிகளாகக் கொண்டே அதிகம் புனைவுகள் எழுதப்பெற்றுள்ளன. ஆயுதப்போருக்கான காரணங்களில் தொடங்கி, பல்வேறு இயக்கங்களின் தோற்றம், அவற்றிற்கிடையே எழுந்த உள்முரண்பாடுகள், மாறிமாறிக் கொன்றொழித்துக்கொண்ட இயக்கங்களுக்கிடையேயான சண்டைகள் எழுதப்பெற்றுள்ளன. அதிலிருந்து மேலெழும்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் பேரினவாத அரசோடும், அதற்கு உதவிய இந்திய அமைதிகாக்கும் படையெனத் தமிழ்ப்பகுதிக்குள் இறங்கிய இந்திய ராணுவம் நடத்திய அத்துமீறல்கள், அது வெளியேறிய பின்னர் சிங்களப்படையின் அறமற்ற போர்முறைகள், சொந்த நாட்டு மக்கள் என்ற உணர்வின்றிக் கொன்றொழித்த – சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தும் போர்முறைகளைப் பின்பற்றாத அழித்தொழிப்பு யுத்தங்கள் என போர்க்காலத்தை நினைவில் கொண்டுவந்து பதிவுசெய்த நாவல்கள் எனத்தேடித் தொகுத்தால் அரைநூறு என்ற எண்ணிக்கையில் கிடைக்கக்கூடும். அதே பின்னணிகளையும் உள்ளடக்கங்களையும் கொண்ட சிறுகதைகளும் பலநூறு கதைகள் கிடைக்கும்.

புலம்பெயர்ந்து தூரதேசங்களில் வாழ்பவர்கள் இவற்றை எழுதிக்கடக்கும் ஒன்றாக நினைத்து எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இப்போதும் இலங்கைத் தமிழ்ப் பகுதியில் வாழ்பவர்களுக்கு அந்த நினைவுகள் எழுதியும் கடக்க முடியாத ஒன்றாக இருக்கக்கூடும். அதனால் குறைவாகவே எழுதுகிறார்கள். அதிகமாக எழுதப்படும் புலம்பெயர் எழுத்துகளுக்கும் குறைவாக எழுதும் புலத்துவாழ் எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கும் ஒற்றுமைகள் காணப்பட்டாலும் அடிப்படையான வேறுபாடுகளும் இருக்கவே செய்கின்றன. நடந்த நிகழ்வுகளை வரலாற்றின் பகுதிகளாகக்காட்ட நினைப்பதை ஒற்றுமைக்கூறுகள் எனவும், அதற்குக் கையாளும் உத்திகளையும் சொல்முறைகளையும் வேறுபாடுகள் எனவும் அடையாளப்படுத்தலாம்.

அரசியல் புனைவுகள்

போர்க்காலப்பேச்சுகளை உள்ளடக்கிய புனைவுகள் என்பது அடிப்படையில் அரசியல் சொல்லாடல்களை முன்வைப்பதே. அரசியல் சொல்லாடலைப் புனைவாக்கும் எழுத்தாளர், நடந்து முடிந்த நிகழ்வுகளின் மீதான தன் பார்வையை – தனது நிலைபாட்டை – தனது விமரிசனத்தை வைப்பதின் மூலமாக தனது அரசியல் நிலைபாட்டை உருவாக்க முடியும். அதே நேரம் தனது புனைவு முன்வைக்கும் விமரிசனம் காரணமாகத் தனது எழுத்துக்குத் தடைகளும், தனது இருப்புக்கு ஆபத்தும் ஏற்படக்கூடும் என நினைக்கும்போது எழுத்து முறைமைசார்ந்த உத்திகளுக்குள் நுழைந்துகொள்வார்கள். உண்மை நிகழ்வின் சாயல் சிறிதும் வெளிப்பட்டுவிடக் கூடாது; அப்படி வெளிப்பட்டால் அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்களின் வாரிசுகளால் தண்டிக்கப்படும் வாய்ப்புண்டு என்பதால், முழுவதும் புனைவாக எழுதுவார்கள்.

காலம், வெளி, பாத்திரங்கள் என்ற புனைவின் மூன்று கூறுகளிலும் குறிப்பான தன்மையை நீக்கும் புனைவுகள் ஒருவிதக் கற்பனாவாதப் புனைவாக ஆகிவிடும் . அப்போது எழுத்தாளர் உருவாக்க நினைத்த அரசியல் சொல்லாடல்கள் உருவாகாமல் போய்விடும். அதற்கு மாறாக மனிதர்களின் உலகத்தை விலங்குகளின் உலகமாக மாற்றிக் காட்டலாம். அதன் மூலம் ஒருவிதமான குறியீட்டுப் புனைவின் வழி அரசியல் விமரிசனத்தை முன்னெடுக்க முடியும். இன்னும் சில எழுத்தாளர்கள் காலத்தை முன் -பின்னாகவோ கொண்டு போய்ப் பகடிவகைப் புனைவுகளை எழுதுவண்டு. ஜார்ஜ் ஆர்வெல்லின் குறியீட்டுப் புனைவுகளான விலங்குப்பண்ணை, 1984 அதற்கான எடுத்துக்காட்டுகள். இன்னும்சிலர், காலத்திற்குப் பதிலாக புனைவின் வெளியை மாற்றி, தேவலோகத்தில் நடக்கும் கதை என்பதாக எழுதி, அங்கதப்புனைவாகவும் எழுதுவதுண்டு. சமகால அரசியல் தலைவர்களை நேரடியாக விமரிசிக்கப் பயந்து அல்லது தவிர்த்துவிட்டு அவர்களின் செயல்பாடுகளை, வரலாற்றில் வாழ்ந்த அரசர்களின் செயல்பாடுகளின் ஏற்றி எழுதியதும் உண்டு. கன்னட நாடகாசிரியர் கிரிஷ் கர்நாடின் துக்ளக்கும், தமிழ் நாடகாசிரியர் இந்தியா பார்த்தசாரதியின் ஔரங்கசீப்பும் அப்படி எழுதப் பெற்ற நாடகங்களே.

பிரிந்துழல்வதின் துயரங்கள்

பிரிந்துழல்வதைப் பேசுவது இலக்கியத்தின் முதன்மையான உரிப்பொருள். பிரிவின் காரணங்களும், பிரிவும் பிரிவின் நிமித்தங்களும் இலக்கியமாக்கலில் முதன்மையான ஒன்றாக இருந்ததைத் தமிழ்ச்செவ்வியல் கவிதைகள் விரிவாகப் பதிவுசெய்துள்ளன. கிடைத்துள்ள அகக்கவிதைகளில் பிரிவையும் பிரிவின் நிமித்தங்களையும் எழுதிய பாலைத் திணைக்கவிதைகளே மொத்த எண்ணிக்கையில் பிற திணைகளின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கின்றன. ஓதல் தூது பகை என்ற மூன்றும் பிரிவுக்கான முதன்மைக் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், ‘பொருள்வயின் பிரிவும்’ இன்னொரு காரணம் எனச் சொல்லும் தொல்காப்பியம், முல்லையின் உரிப்பொருளான இருத்தலைக் கூடப் பிரிவின் பகுதியாகவே கணித்து ’ஆற்றியிருத்தலும் ஆற்றாதிருத்தலும்’ அவ்வுரிப்பொருளின் விரிவாகப் பேசும். ஆற்றியிருத்தலும் ஆற்றாதிருத்தலும் காதலின் சிக்கல் மட்டுமே அல்ல. குடும்ப வாழ்வின் அகச்சிக்கலும் சமூகவெளியின் புறச்சிக்கலும் கூடத்தான். காதல் மற்றும் காம ம் சார்ந்த பிரிவுகள் மட்டுமல்லாமல், நாடு, வீடு, செல்வம் எனத் தனது சொந்தமென நினைத்த பலவற்றையும் பிரிந்து வாழ நேரும் நிலையையும் விளைவுகளையும் உலக இலக்கியங்கள் முதன்மையான பொருண்மையாகக் கையாண்டுள்ளன

ஈழப்போருக்குப் பிந்திய நிகழ்காலத்துப் புலம்பெயர்வுக்கும் பகையும் போரும் ஒரு காரணம். சரியாகச் சொல்வதனால், அதுவே முதன்மைக்காரணம். ஆனால் செவ்வியல் காலப் பொருண்மையில் பகையும் போரும் இப்போது இல்லை. செவ்வியல் காலப் போர்வயின் பிரிவு, எதிரியின் மீது படையெடுத்துச் சென்ற சொந்த நாட்டுப் படையின் பகுதியாக இருப்பது. நிகழ்காலப் பகைகள் உட்பகையாலும் புறப்பகையாலும் ஏற்பட்டவை. இவ்வகைப்பகைகளால் ஏற்பட்ட போரில் பங்கெடுக்கத் தயாராக இல்லாத நிலையில் வெளியேறிய புலப்பெயர்வுகளே புனைவுகளில் அதிகமும் இடம்பெறுகின்றன. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின் , போர் நிறுத்தம் நிகழ்ந்துவிட்ட நிலையில் தண்டிக்கப்படும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காகவும், போர்க்களப்பகுதியில் வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது என்ற நிலையிலும், புதுவாழ்க்கைக்கான பொருள் தேடிப்போன புலப்பெயர்வுகளும் அதற்குள் அடக்கம் . இந்தப் புலப்பெயர்வுகள் குறித்த எழுத்துகள், போருக்குப் பிந்திய தொடர்ச்சியில் குற்றமனத்தின் வெளிப்பாடுகளாகவும் கருதப்படலாம். அதனால், புலத்திற்கு/நாட்டிற்குத் திரும்பாமல் இருப்பதற்குத் தேடும் காரணங்களாக வெளிப்படவும் வாய்ப்புண்டு.

இணையம் உருவாக்கும் புனைவுப்பரப்பு

இலங்கைத் தமிழ்ப்பகுதியில் நடந்த போர்க்காலத்தை எழுதும் புலம்பெயர் எழுத்துகள் வாசகர்களை வந்தடைவதில் இருந்த கால இடைவெளிகள் இப்போது முற்றிலும் இல்லை. இணைய இதழ்களின் வரவுக்குப் பின் புலம்பெயர் தமிழ் எழுத்து உடனுக்குடன் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் வாசகர்களுக்குப் படிக்கக் கிடைக்கின்றன. கிடைக்கும் பனுவல்களில் அதிகமும் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கால நிகழ்வுகளைத் தொடர்ந்து நினைவுபடுத்தப்படுகின்றன. அத்தகைய பனுவல்கள் ஒற்றைப்பரிமாணமாக இல்லாமல் பலதளங்களுக்குள் செல்கின்றன என்பதையும் கவனித்துப் பேசவேண்டியுள்ளது.

புதுவகை விமரிசனச் சொல்லாடல்கள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குச் சிங்களப் படைகள் மட்டுமே காரணம் என்று சுட்டும் முந்தைய போக்குக்குப் பதிலாக வேறு காரணங்களையும் முன்வைக்கின்றன. நீண்டகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் புதிய உலகமய வணிக நோக்கங்களுக்குத் தொடரும் போர்ச்சூழல் பெரும் தடையென உலகப் பெருநாடுகள் நினைத்தன. பன்னாட்டு வணிகக் குழுமங்கள் அரசுகளுக்கு நெருக்கடிகளை உருவாக்கின. அவற்றின் நலனை முழுமையாகப் பாதுகாக்க நினைக்கும் அந்நாட்டு அரசுகள் ஈழப்போரை முடிவுக்குக் கொண்டுவர நினைத்தன என்ற பின்னணியை இவ்வகைப் புனைவுகள் கோடிட்டுக்காட்டுகின்றன. தமிழர்களுக்கெனத் தனிநிலமும் தனி அரசும் உருவாவதைத் தடுக்க நினைத்த எதிர்தரப்பைச் சுட்டுவதைத் தாண்டி, நிலவியல் மற்றும் புதிய உலகமயச் சூழலையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் பிடிவாதமாகப் போரை நடத்தியே தீரவேண்டும் என்று முடிவெடுத்த போராளிகளும் -குறிப்பாக விடுதலைப்புலிகளும் அதன் தலைமையும்கூடப் படுகொலைகளின் பங்காளிகள் எனப் பேசத் தொடங்கியுள்ளன. இப்படிப் பேசத் தொடங்கும் புலம்பெயர் எழுத்துகள் புனைவாக்கத்தில் புதுவகைச் சொல்முறையாகப் புனைவுப்பாத்திரங்களை முன்வைப்பதோடு அறியப்பட்ட வரலாற்றுப் பாத்திரங்களையும் புனைவின் பகுதிகளாக மாற்றுகின்றன.

புனைவை வரலாறாக்குதல்

புனைவை வரலாறாக மாற்ற நினைக்கும் புனைகதை ஆசிரியர்கள் தங்களின் புனைவுக்கு ஒருவித நம்பகத்தன்மையை உண்டாக்க நினைப்பார்கள். புனைவுக்குள் இடம்பெறும் காலத்தையும் வெளிகளையும் குறிப்பானவைகளாக மாற்றுவதன் மூலம் அதனைச் சாத்தியமாக்கலாம். போர்க்கால எழுத்துகளில் எதிரெதிர்ப் படையணிகள் பற்றிய தகவல்களை இடம்பெறச் செய்வதின் மூலம் குறிப்பான காலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் தாக்குதல் நடந்த இடங்களின் பெயர்கள், தமிழர்கள் வாழும் இடங்களின் உண்மைப் பெயர்களாகவே தரப்பட்டுள்ளன. இவ்விரண்டும் உண்டாக்கும் நம்பகத் தன்மை வழியாகப் புனைவுக்குள் விவரிக்கப்படும் ஆயுதப்பொழிவுகள், கெரில்லாத் தாக்குதல்கள் முதலான போர்க் காட்சிகளும், வீடுகளையும் காணிகளையும், உடைமைகளையும் கைவிட்டு உயிர்பிழைத்தால் போதுமென ஊர்விட்டுப் பெயர்ந்த இடப்பெயர்வுகளும் உண்மை நிகழ்வுகள் என நிறுவ முயன்றுள்ளன. இதற்கு அந்தந்த வட்டாரம் சார்ந்த பண்பாட்டு நிகழ்வுச் சித்திரிப்புகளும் மொழிப் பயன்பாடும் கூடுதல் பங்களிப்பு செய்துள்ளன. அதே நேரம், புனைவுகளில் இடம்பெற்ற பாத்திரங்களில், பாதிக்கப்படும் மனிதர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் புனைவுக்கதாபாத்திரங்களாக இருக்க, போராளிகளும், சிங்கள ராணுவமும் படைப்பிரிவுப் பெயர்களாலும், அவற்றில் இருக்கும் பதவிப்பெயர்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவ்வகையான நம்பகத்தன்மை கொண்ட சித்திரிப்புகள், நாவல் இலக்கியத்தின் பொதுப்போக்காக இருக்க, சிறுகதைகள் இன்னும் குறிப்பான பின்னணிக்குள் நகரத் தொடங்கியுள்ளன. அதற்கு எடுத்துக் காட்டாக அண்மையில் லண்டனிலிருந்து பதிவேற்றம் பெற்றுள்ள அகழ் இணைய இதழில் இடம்பெற்றுள்ள இரண்டு கதைகளைச் சொல்லத் தோன்றுகிறது. அவ்விதழில் இடம் பெற்றுள்ள ஏழு சிறுகதைகளில் மூன்று கதைகள் புலம்பெயர் எழுத்தாளர்களின் கதைகள்.

முள்ளும் மலரும் என்ற கதையை நட்சத்திரன் செவ்விந்தியனும், வெப்பச் சூத்திரம் என்ற கதையைச் சக்ரவர்த்தியும், புத்தரின் மௌனம் என்ற கதையை நெற்கொழுதாசனும் எழுதியுள்ளனர்.இவர்கள் மூவருமே இதற்கு முன்பே கவிகளாகவும் கட்டுரை ஆசிரியர்களாகவும் அறியப்பெற்ற புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களே. நெற்கொழுதாசனின் கதை, புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் தனியனாக வாழும் இளைஞன் ஒருவனின் காமம் சார்ந்த நகர்வை முன்வைக்கும் கதையாக எழுதப்பெற்றுள்ளது. அத்துடன், முழுவதும் புலம்பெயர் வாழ்வை- புலம்பெயர் தேசத்து வெளியின் பின்னணியில் பேசுவதால் முழுமையான புனைவை வாசிக்கும் தோற்றத்தைத் தருகிறது. ஆனால் நட்சத்திரன் செவ்விந்தியனின் கதையும், சக்ரவர்த்தியின் கதையும் ஈழநாடு கோரிக்கை சார்ந்த போரில் அறியப்பெற்ற பெயர்களை இடம்பெறச் செய்கின்றன. இரண்டு கதைகளின் தொடக்கமுமே வெளிப்படையாக அதனை முன்வைத்துவிட்டே கதைக்குள் வாசிப்பவர்களை அழைத்துச் செல்கின்றன:

“ஒற்றன் பிரிகேடியர் கரும்புலி மொஹமட்.

ஒரு 19 வயதுக் கரும்புலி ஒற்றன் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் பொட்டம்மானின் தொடர்பறுபட்டுக் கொழும்பில் மாட்டிக்கொண்டான்.

இது முள்ளும் மலரின் (நட்சத்திரன் செவ்விந்தியன்) தொடக்கம்.

எனது பெயர் ஷாரிகா. எனது அம்மாவின் பெயரைச் சொன்னால் என்னைத் தெரிந்து கொள்ள இன்னும் உங்களுக்கு இலகு. விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் மருத்துவர் ராஜினி திரணகமவின் மகள். ஷாரிகா திரணகம.”

இது வெப்பச்சூத்திரம் (சக்கரவர்த்தி) கதையின் தொடக்கம். அறியப்பெற்ற உண்மைப்பெயர்களோடு தொடங்கும் இவ்விரு கதைகளும் புனைவுத்தன்மை கொண்ட நிகழ்வுகளை முற்றிலும் ஒதுக்கியிருக்கின்றன என்றும் சொல்லமுடியவில்லை.

கரும்புலி மொஹமத், தனது பெயரையும் பிறப்பிடத்தையும் மாற்றிக் கொழும்பில் கல்வி கற்கும் காலத்து வாழ்க்கையையும் சிங்களத் தேரரின் நட்புக் காலத்தையும் புனைவை அதிகப்படுத்திய மொழிப் பயன்பாட்டோடும் காட்சிகளோடும் விரித்துள்ளார் நட்சத்திரன் செவ்விந்தியன். அதேபோல நேர்காணலைப் பதிவுசெய்யும் ஷாரிகா திரணகமவிடம், பேசுபவன், தன் கதையைச் சொல்வது போல ஒரு கதையை விவரிக்கிறான். அந்த விவரிப்பில் இடம் பெறும் இடமாற்றங்களைக் கொண்டு, ‘சொல்லப்படும் கதை – கதையில் வரும் ‘ யூட்’ என்பவன் நீ அல்லதானே என்று அவள் கேட்கும் போது, உண்மைப் பதிவு என்பது மாறி, புனைவின் பகுதியாக மாற்றம் அடைகிறது. யூட் என்னும் இளைஞனின் குழந்தைமைப் பருவம் தொடங்கி, சிங்கள ராணுவத்தின் மீதிருக்கும் கோபத்திற்கிணையாகவே, அவனைக் கடை வேலைக்கு அழைத்துவந்து, பாலியல் அத்துமீறல் செய்த முதலாளியின் மீதும் கோபம் இருந்தது என்பதை விவரிப்பதும், புனைவாக்கத்தோடு கூடியனவாக தோன்றக்கூடிய பகுதிகள்

இருவரது புனைவாக்கத்திற்குள்ளும் புனைவெழுத்துகள் வழியாக அல்லாமல் வரலாற்று நூல்கள் வழியாகவும், அரசு அறிக்கைகள் வழியாகவும் அறியப்பெற்ற பெயர்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பான இப்பெயர்கள் புனைகதை எழுத்தைக் கட்டுரை எழுத்து என்னும் நிலைக்கு நகர்த்தக்கூடியன. இப்பெயர்கள் மட்டுமல்லாமல், இவ்விரு கதைக்குள்ளும் இடம் பெறும் நிகழ்வுகளும் வெளிகளும் முரண்களும் கூடப் புனைவல்லாத எழுத்துகளின் வழியாக வாசிக்கப்பட்ட தகவல்களை முன்வைக்கின்றனவாக இருக்கின்றன. தமிழ் பேசும் மக்களுக்கிடையே இருக்கும் – கிழக்கு மாகாணம், மலையகம், யாழ்ப்பாணம் என்ற வட்டார வேறுபாடுகளும் அவ்வட்டாரத்து மனிதர்களுக்கு இருந்த மனக்குறைகள் போன்றனவற்றையும் தருகின்றன.

இவ்விரண்டு கதைகளுமே சிறுகதை இலக்கணத்தை வலியுறுத்தும் திறனாய்வு எதிர்பார்க்கும் ஓர்மைகளையும் எல்லைகளை தாண்டியனவாக இருக்கின்றன. எழுத நினைக்கும் உரிப்பொருள் மற்றும் நோக்கங்களுக்கேற்பச் சிறுகதை வடிவ ஓர்மைகள் மாறும் என்பதை ஒத்துக்கொள்வதையும் நவீனத் திறனாய்வு மறுப்பதில்லை. ஒரு புனைவெழுத்தை வரலாற்றின் பகுதியாக – நம்பகத்தன்மை கொண்ட உண்மை நிகழ்வுகளைப் பேசும் புனைவெழுத்தாக ஆக்குவதின் மூலம் அப்புனைகதை உருவாக்கும் அரசியல் சொல்லாடல் காத்திறமானதாக வலுவடைய வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில் அப்புனைவுகள் வரவேற்கப்படவேண்டியனவே. அதே நேரத்தில் அக்கதைக்குள் இடம்பெறும் புனைவுப் பகுதிகள் நம்பகத் தன்மையைக் குறைத்து புனைவையே – சாகசமும் இயலாமையும் கொண்ட பாத்திரங்களை முன்வைக்கும் புனைவையே வாசித்து முடித்த மனநிலையை உருவாக்கவும் வாய்ப்புண்டு. இவ்வகையான எழுத்துகள் உருவாக்கும் மனநிலைகளும் வாசிப்பனுபவங்களும் அரசியல் நிலைபாட்டு நகர்வுகளும் இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை.

==================================

கதைகளை வாசிப்பதற்கான இணைப்புகள்

முள்ளும் மலரும்  https://akazhonline.com/?p=3450

வெப்பச்சூத்திரம் https://akazhonline.com/?p=3447

புத்தரின் மௌனம் https://akazhonline.com/?p=3443

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்