விரித்தலின் அழகியல்: கருணாகரனின் கவிதை மையங்கள்

இலக்கியத்தின் இயக்கமும் வாசிப்பும்

எழுத்தின் இயக்கம் எல்லாவகையான பனுவல்களிலும் ஒன்றுபோல் நிகழ்வதில்லை. நாடகம், புனைகதை, கவிதை என அதனதன் வடிவ வேறுபாடுகளுக்கேற்பவே நிகழ்கிறது. வடிவ வேறுபாட்டிற்குள்ளும் ஒவ்வொரு எழுத்தாளரும் கைக்கொள்ளும் முன்வைப்பு முறைகளுக்கேற்பவும் இயக்கம் நிகழும். பனுவல்களுக்குள் நிகழ்த்தப்படும் இயங்குமுறையை, அதன் வடிவப்புரிதலோடு வாசிக்கும் வாசிப்பே முழுமையான வாசிப்பாக அமையும்.
இலக்கியப்பனுவல்களை எப்படி வாசிக்கவேண்டும் என்பதற்கான அடிப்படைகளைச் சொல்லும் அரிஸ்டாடிலின் கவிதையியல் நாடகத்தை வாசிக்கும் முறையை விரிவாகப் பேசியுள்ளது. அதன்படி நாடகப்பனுவல்களுக்குள் உருவாக்கப்படும் முரணைக் கண்டறிந்து வாசிக்கவேண்டும். உச்சநிலைக்குப்பின்னான விடுவிப்பின் விளைவில் அந்த வாசிப்பு நிறைவடையும். பெருங்காவியங்களை வாசிக்கும் முறையிலிருந்து புனைகதைகளுக்கான வாசிப்பை நவீனத்திறனாய்வு உருவாக்கிக் கொண்டுள்ளது. அதன்படி, பனுவல்களுக்குள் உருவாக்கப்படும் காலம் அல்லது வெளியின் விவரிப்பில் விரிந்து பாத்திரங்கள் அதற்குள் இருக்க நேரும் இருப்பின் பாடுகளை விளங்கிக்கொள்ளுதலில் நிறைவுபெறும். கவிதை வாசிப்புக்கான அடிப்படைகளைத் தொல்காப்பியச் செய்யுளியலின் அடிப்படைகளிலிருந்து உருவாக்கிக் கொள்ளமுடியும். அதன்படி, முன்வைக்கப்பட்ட உணர்வுகளில்/ மெய்ப்பாடுகளில் நின்று, சுற்றிச்சுழலும் மனிதர்கள், சூழலின் காரணிகள், அதனால் விளைந்த விளைவுகள் எனக் காட்சிகளுக்குள் பயணம் செய்யலாம். முடிவில் கிடைக்கும் உணர்தலிலும் அறிதலிலும் கவிதை வாசிப்பு நிறைவுபெறும். இதன் காரணமாகவே கவிதை வாசிப்பென்பது மற்ற இரண்டு வடிவங்களையும் வாசிப்பதைவிடக் கூடுதல் நுட்பம் கொண்டதாக அமைகின்றது.

கவிதை வாசிப்பின் மாதிரி

ஒரு கவிதையின் முன்வைப்பு கவிதைக்குள், கவியால் உருவாக்கப்படும் சொல்லி (Narrator) அல்லது கூற்றுநிலைப் பாத்திரத்தால் நிகழ்த்தப்படுகிறது. அதன் வழிகாட்டலில் வாசிப்பவர்கள் காட்சிகளை உள்வாங்கிறார்கள்; அலையும் பாத்திரங்களின் உணர்வுகளைப் புலனுணர்வாக அடைகிறார்கள். தொடர்ச்சியாக வினாக்களும் விவாதங்களும் வாசிப்பவர்களின் மனதிற்குள் எழுகின்றன. அதற்கான விடைகளும் விளக்கங்களும் கவிதைக்குள்ளேயே கவியால் முன்வைக்கப்படலாம்; முன்வைக்கப்படாமலும் போகலாம். முன்வைத்தால், அதன் மீது விவாதங்களைக் கோரும் தொனியை உருவாக்குவது கவியின் வேலையாகிறது. முன்வைக்க வேண்டும் என்று நினைக்காத நிலையில் விடைகளையும் விளக்கங்களையும் கவிதைக்கு வெளியே வாசிப்பவர்களின் அனுபவங்களிலிருந்து தேடிக்கொள்ளும்படி கவி தூண்ட வேண்டியது அதன் எதிர்நிலையாகிறது.

இப்போது எட்டுப் பத்திகளாகப் பிரித்து அடுக்கப்பட்டுள்ள கவிஞர் கருணாகரனின் இந்தக் கவிதையை படித்துக்கொண்டே வாருங்கள்:

 மின்னற் பொழுதில்

உடைந்தது ஒரு எலும்புதான்

வலியோ உடல் முழுவதும்.



உயிரே பாரமாகிக் கனக்க

உபாதையின் மொழி

ஆஸ்பத்திரி வளாகமெங்கும்

பரவித் தொற்றியது எல்லோரிடத்திலும்.



தூக்கமும் பசியும் தொலைந்து

வலியும் வேதனையும் எழுந்த காட்டில்

சுருண்ட புலியாகி

கண்களில் துயரப் பீழை சாற

வழியற்றவன் போலாகிக் கிடந்தேன்

இரவு முழுதும்.



அருகில்

வழித்துணைவராக

மரத்திலிருந்து விழுந்தவர்

மரம் விழுந்தவர்

மாடு மோதியவர்

மாட்டில் மோதியவர்

சறுக்கியும் தடக்கியும் விழுந்தவர்

பாய்ந்து முறிந்தவர்

வண்டி சாய்ந்து வயிறு கிழிந்தவர்

வழுக்கி வீழ்ந்தவர் எல்லோரும்

பாரம் பொறிந்தவராகிச் சிதறிக் கிடந்தனர்.



எல்லோரிலும் எழுந்தாடியது வலி

பெருங் கூத்தொன்று

நிகழ்ந்து கொண்டிருந்தது அங்கே.



இரவையும் பகலையும்

தின்ற வலியின் கீழே

படுத்திருந்தோம் துடித்திருந்தோம் எல்லோரும்



அத்தனை பேரும்

அன்று தொழுத தெய்வம்

வலி நீக்கிய தாதியரே



அன்று கண்ட அற்புதம்

வலி நீக்க ஊசியே.

00

உடைந்த எலும்போடு கூடிய ஓர் உடல் வலியால் துடிப்பதைத் ‘தன்னிலை முன்வைப்பாக’ தொடங்குகிறது முதல் பத்தி. இரண்டாவது பத்தி அந்த உடல் இப்போது கிடக்கும் இடம் மருத்துவமனை என வெளியை விரிக்கிறது. திரும்பவும் தனது உடலைப் பிற உடல்களோடு சேர்த்துக் காட்டுவதன் மூலம், விபத்தொன்று நடந்தது என்பதை முன் காட்சியாக- நினைக்கப்பட வேண்டிய காட்சியாகப் பரப்பிவிட்டு, நேரடிக்காட்சியாக மருத்துவமனை ஒன்றின் விபத்துச் சிகிச்சைப்பிரிவுக்குள் அழைத்துச்செல்கிறது. அடுத்த மூன்று பத்திகளும் மருத்துவமனையில் கிடக்கும் உடல்களும், குரல்களும் அடையும் வேதனைகளை வாசிப்பவர்களுக்குக் கடத்துகின்றன. கடத்தப்பட்ட உணர்வுகளுக்கு வடிகாலாக அங்கு கிடைத்த மருத்துவச் சேவையையும் கவிதைசொல்லியே -கூற்றுப்பாத்திரமே – முன்வைத்து விடும் நிலையில் மொத்த நிகழ்வும் முடிந்துவிட்ட மனநிலை உருவாகிறது. இந்த வாசிப்பு வகைமாதிரியை நாம் வாசிக்கும் ஒவ்வொரு கவிதைக்கும் அதன் இயங்குநிலைக்கேற்ப நகர்த்திக்கொள்ளலாம். அதற்கு மாறாக ஒன்றைப் பலவாக விரிக்கும் கவிதையின் அழகியல் செயல்படுகிறது. கூற்றுப்பாத்திரமும் நிகழ்வெளியும் காலமும் மாறாத நிலையில் உருவாக்கப்படும் உணர்வுகளின் வேறுபாட்டால் புதியபுதிய தளங்களுக்குள் விரிவடையும்.

நிதானமாக வாசிக்கப்பட்ட ஒற்றைக்கவிதைக்குள் விவரிக்கப்படும் விபத்தும் வேதனையும், கவி கருணாகரனுக்கு நேர்ந்த நேரடி அனுபவம். அதனைப் பகிர்வதற்கான முன்மொழிவை அடுக்கிக் காட்டுவது அவர் மேற்கொள்ளும் உத்தி. அவ்வுத்தி மூலம் வாசிப்பவர்களுக்குக் கடத்த நினைப்பது மருத்துவர்களும் தாதியர்களும் செய்யும் சேவையையும் தொண்டையும்.

‘அத்தனை பேரும்

அன்று தொழுத தெய்வம்

வலி நீக்கிய தாதியரே.

அன்று கண்ட அற்புதம்

வலி நீக்க ஊசியே.’

என உணர்த்திவிட்டு முடிகிறது.

ஒன்றைப் பலவாக விரித்தல்

தனக்கு ஏற்பட்ட விபத்தொன்றை அடுத்துக் கவிஞர் கருணாகரன் அனுமதிக்கப்பெற்ற மருத்துவமனை இருப்பைக் குறித்த 20 கவிதைகளில் 14 வது கவிதை இது. விபத்தில் தனக்கு நேர்ந்த உடல் நோவையும் மருத்துவமனை இருப்பையும் வலியின் தொடர்ச்சியையும் இந்த ஒற்றைக்கவிதையில் வாசித்துவிட முடிகிறது. அதே நேரம், அதற்கு முன்னும்பின்னுமாகக் கவி எழுதித் தந்துள்ள 19 கவிதைகளும் சேர்ந்து சாதாரண மனிதர்களின் அனுபவத்திலிருந்து, ஒரு கவியின் அனுபவங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை விவரிக்கும் தளத்திற்குள் நகர்கின்றன;நகர்த்துகின்றன. அந்த நகர்வின் வழியாகவே கவிகள் அல்லது எழுத்தாளர்கள் தங்களை எழுதும் எழுத்திலும் கூட தங்களைக் காணாமல் / இல்லாமல் ஆக்கிக்கொண்டு சுற்றியிருப்பவர்களின் – சமூகத்தின் – உலகத்தின் பாடுகளை எழுதும் படைப்பாளிகளாக மாறுகின்றார்கள் என்பதை உணர முடிகின்றது. இருபது கவிதைகளில் இன்னொரு கவிதை; இரண்டாவது கவிதை:

சத்தம் கேட்டுத் திரும்பினால்

பக்கத்தில்

ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார் பெரியவர்.

பாதி புரிந்தும் பாதி புரியாதததுமாக

தலையாட்டிக் கொண்டிருந்தான் அவன்.



அநேகமாக அது அவர் வீட்டுக்குச் செல்லும்

வழியாக இருக்கலாம்.

மறுநாள்

தன் வீட்டைப் பற்றிச் சொன்னான் அவன்.



ஏதோ புரிந்த மாதிரியும்

புரியாத மாதிரியுமாக தலையசைத்தார் அவர்.

எப்படியோ

மூன்று நாட்களுக்கிடையில்

மிகப் பிரமாண்டமானதொரு உறவுப் பாலம்

நிர்மாணிக்கப்பட்டது.



தன் மகளொரு போராளி என்ற அவரை

உற்று நோக்கியவன்

மெல்லச் சிரித்தான்.



தன்னிடமிருந்த பழங்களிலிரண்டை

அவன் கையில் வைத்தார்.



“உங்களைப் போலத்தான்

எங்கள் அப்பாவும்

எப்போதும் வயலைப் பற்றியும்

மாடுகளைப் பற்றியுமே பேசுவார்

யாருக்கும் தன் கைப் பொருளெல்லாம் அருளுவார் என்றவன்,

தான் படையில் சேர்ந்ததை விரும்பவேயில்லை அவர்” என்றான்.



கண்கள் விரிய கட்டியணைத்தவரை

தாத்தே என்று தழுவியணைத்தான்.

வரவேணும் எங்க வீட்டுக்கு

வந்து நீங்க

சோறு திங்கணும்

வயலைப் பார்க்கணும் என்றான்.



வரலாம் என் அருமை மகனே

முதலில் உன் காலைக் குணமாக்கு

பிறகு வா என் வீட்டுக்கு என்றவர்

வழி வரைபடத்தைக் கொடுத்தார் அவனிடம்.



ஆஸ்பத்திரிக் கட்டிலில்



யாரும் யாருமில்லை

யாவரும் சிகிச்சைக் குழந்தைகளே!

என்று சிரித்தபடி தூங்கினேன்.

********

இவ்விரண்டு கவிதைகள் விரிக்கும் களங்கள் தொடர்ச்சியற்றவை; மனிதர்களும் வேறுபாடுகள் கொண்டவர்கள். விபத்து என்ற ஒற்றை நிகழ்வை விரித்துப் பரப்பியுள்ள மொத்தக் கவிதைகளையும் வரிசையாகவோ, வரிசையில்லாமலோ வாசிப்பவர்கள் அதன் களன்களும் தளங்களும் விரிவதை நுட்பமாக உணரலாம்.

விரித்தலின் வரலாறும் கருணாகரனின் வெளிப்பாடுகளும்

ஒன்றைப் பலவாக விரிப்பதற்குத் தமிழ்க் கவிதை மரபில் பல முன்னுதாரணங்களுண்டு. செவ்வியக் கவிதைகளில் ஐங்குறுநூறு அப்படியான ஒரு விரிப்புநிலைத் தொகைநூலே. ஒவ்வொரு திணைக்கும் ஒரு கவி என அன்பின் ஐந்திணைகளை நூறுநூறு பாடல்களாகப் பாடித் தொகுத்த தொகை நூல். ஒவ்வொரு திணையின் உரிப்பொருளையும் கருப்பொருளையும் விரிவாகத் தங்களின் அகம் மற்றும் புறக்கவிதைகளில் தந்துள்ள கபிலன் குறிஞ்சித்திணைக் கவிதைகளையும் ஓரம்போகி மருதத்திணைக் கவிதைகளையும், நெய்தல் திணைக்கவிதைகளை அம்மூவனும், முல்லைத் திணைக்கவிதைகளைப் பேயனும், பாலைத்திணைக் கவிதைகளை ஓதலாந்தையும் பாடித் தொகுத்துத் தந்துள்ளனர். திருக்குறள் தொடங்கி பெரும்பாலான அற நூல்கள் ஒரு அதிகாரத்தில் குறிப்பிட்ட ஒரு பொருண்மையைப் பல செய்யுள்களாக விரித்துரைப்பனவே. ஆண்டாளின் பாவைப்பாடல் அதியற்புதமான விரிப்பு அழகியல் கவிதை. வைணவப் பாவைப் பாடலைப்போலவே மாணிக்கவாசகரின் திருவெம்பாவையின் பாடல்களும் ஒன்றை விரிக்கும் பல பாடல்கள் தான்.

செவ்வியல் தொடங்கிப் பக்திக்கவிதை வரையிலான கவிதைகளை வாசித்திருக்காவிட்டாலும் கூடப் பாரதியின் பாரதியாரின் கண்ணன் பாட்டை நிச்சயம் ஒவ்வொருவரும் வாசித்திருப்போம். பாரதக்கதையோடு தொடர்புடைய கண்ணன் என்னும் தொன்மப் பாத்திரத்தை ஆண்பாலாகவும், பெண்பாலாகவும் உருவகித்துக்கொண்டு வெவ்வேறு பாத்திரங்களாகத் தனது கவிதைக்குள் உலவச் செய்திருப்பார். ஆண் பாலில் தோழன், தாய், தந்தை, சேவகன், அரசன், சீடன், சற்குரு, விளையாட்டுப்பிள்ளை எனத் தனித்தனியாக எழுதிக்காட்டியதோடு காதலனாகக்கொண்டு ஐந்து கவிதைகளையும் தந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கண்ணம்மாவாக மாறிக் கண்ணம்மா -என் காதலி என விரிப்பார். இந்தத் தொடர்ச்சி விடுபட்டுப் போனது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் கருணாகரன் அதனை மறு உயிர்ப்பு செய்து வருகிறார்.

அண்மையில் வெளிவந்த கடவுள் என்பது துரோகியாயிருத்தல் என்ற தொகுப்பில் அம்மரபின் தொடர்ச்சியை முழுமையாக்கித் தந்திருந்தார். பைபிளின் பாத்திரங்களில் ஒன்றான மத்தேயுவை நிகழ்காலப் புனைவுப் பாத்திரமாக்கி கவிதைக்குள் தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவிடங்களிலும் நிறுத்தி, ஈழத்துப் போர்க்காலத்தையும் போருக்குப் பின்னான மனநிலைகளையும் விரிவாக விசாரணைக்குட்படுத்தியிருந்தார். அதிலிருந்து முற்றிலும் விலகிய தன்னனுபவக்கவிதைகளாக ‘மருத்துவமனை நாட்கள்’ இருக்கின்றன. நோயின் பிடிக்குள் இருக்கும் நோயாளிகளின் மனவோட்டத்தையும், உயிர் வாழ்தலின் மீதான வேட்கையையும் அதற்குத் தடையேற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அதுவரையிலான மனப்போக்கில் ஏற்படும் மாற்றங்களையும் அந்தக் கவிதைகள் விரிவாகப் பேசுகின்றன. துயரத்தின் சாயல்களை அதிகம் வெளிப்படுத்தினாலும் மெல்லிதான நகையும் மருட்கையும் வெளிப்படும் இடங்களும் பதிவாகியுள்ளன.

அவரைக் கொண்டு வந்து

விடுதியில் சேர்த்தபோது

அறுபத்து மூவரானோம்.



அந்த நேரத்தில்

அருகிருந்த நாவுக்கரசர்

பதிகமொன்று பாடினார்.



அது வாழ்த்துப் பாவா

வரவேற்புப் பாவா

மீட்புப் பாவா

என்று தெரியவில்லை யாருக்கும்.



ஆஸ்பத்திரித் தோத்திரம்

என்று கண்ணயர்ந்தேன்.



சூலை நோயில் வெந்து

வாடியதில்லை நாவுக்கரசர்

விபத்தொன்று காலை உடைக்க

கதறியபடி

கட்டிலில் வீழ்ந்தவர்

ஊன்று கோலுடன்

தோத்திரம் பாடுகிறார்

முப்பொழுதும்.



நள்ளிரவில் கண்விழிக்க

'யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாவரும் இங்கே நோயினில் படுத்தவர்

யாவருமிங்கே மீளும் வழி காணத் துடிப்பவர்

யாவரும் யாவருமிங்கே

ஒன்றாகி நின்றோம்...'



நாவுக்கரசர் பாடிக்கொண்டேயிருக்கிறார்.



இரண்டாம் யாமத்தில்

கண்ணயரப் பாடும் நாவுக்கரசருக்கு

நன்றி கோடி..

இதனை வாசிக்கும்போது மெல்லிய புன்னகையை உதிர்க்காமல் வாசிப்பவர்கள் நகரமுடியாது.

மத்தேயு என்ற பாத்திரத்தை விரித்தல், மருத்துவமனை நிகழ்வை விரித்தல் என்ற சோதனைக்குப் பின் ஒரு கருத்துநிலை விரிப்பாக ‘ தூக்கம் வராத இரவுகள்’ என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதித் தந்துள்ளார். மொத்தத்தையும் முடிக்கும்போது,



தூங்காத இரவில்

எல்லாப்பாதையும் அடைக்கப்பட்ட

பொது முடக்கத்தில்

போக்க முடியாப் பசியோடு கிடந்தெரியும்

மனிதர்களைக் காணும்போதென்

உடலும் ஆன்மாவும் உருகுகின்றன.



இந்தப் பூமியின்

உயிர் முளைகள்

நீரின்றி வாடி மடிகின்றன



உள்ளே பட்டினித் தீ

வெளியே

கொவிட் 19 நாகத்தின் படமெடுப்பு

திசையெட்டும்

ஆயிரமாயிரம் பேர் செத்தும் பிழைத்தும்

பிழைத்தும் செத்தும் போகிறார்.



அரசுண்டு

ஆணைகள் பலவுண்டு

அறம் பற்றிய விளக்கப் போதனைகள்

ஆயிரமுண்டு

நாமும் உண்டு, களித்துப் படம் போட்டு

மிகிழ்ந்திருக்கும் போதுதான்

இந்த மனிதர்கள்

காய்ந்த நிலமாக நீளக் கிடக்கிறார்கள்.



பாலை எங்கிருந்து நீள்கிறது

யாரிலிருந்து

எதனிலிருந்து கொதிக்கிறது.



இந்தப் பூமியின்

ஈரம் இத்தனை கெதியாக வற்றிப் போவதேன்?

உலக மனிதர்கள் அனைவரையும் தூங்கவிடாமல் செய்துகொண்டிருக்கும் கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்துக் கவிதைகளாக அவற்றை வாசிக்கலாம் என்றாலும், அதன் ஒவ்வொரு முன்வைப்பும் மனித வாழ்வின் எல்லாக்களங்களுக்குள்ளும் சென்று திரும்புகின்றன.

கடந்த கால வாழ்க்கையையும் நிகழ்கால இருப்பையும் நேர்க்காட்சி வாதமாக எழுதுவதைத் தாண்டி, இலக்கியம், தத்துவம், குடும்பம், பண்பாட்டு நடவடிக்கைகள் எனக் கருத்தியல் அமைப்புகளையும், நட்பு, காதல், அன்பு எனப் பண்பு நிலைகளையும் தூக்கம் வராத இரவுகளின் அலைவுகளாக ஆக்கியிருக்கும் கவிதைகளாக விரிந்துள்ளன. தமிழ்மொழிக்குள் செயல்படும் நண்பர்களை நினைவுக்குக் கொண்டுவரும் ஒரு கவிதையை வாசிப்பதோடு அதனை முடிக்கலாம்:

தூக்கமற்ற இரவை

பேச்சுகளால் நிரப்புகிறார்கள்

ஜெமோவும் நண்பர்களும்



நிறங்களால் நிரப்புகிறான் றஸ்மி



கஜானி ஒளிப்படங்களால்

கவின் பாடல்களால்

இசை கவிதைகளால்

சுகு அன்பினால்

சிராஜ் புத்தகங்களினால்

எஸ்.ரா. கதைகளினால்

தேவகி அழுகையினால்

நிலா போதனைகளினால்

வாசு மதுவினால்

கோணங்கி பயணங்களால்

அம்ரிதா விதைகளால்

அரசு கண்காணிப்பினால்

ஞானச்செல்வம் சூதாட்டத்தினால்

ஜி.என் கலவியினால்

கரீம் காக்கா விருந்தினால்

வசந்தி முத்தங்களால்

மனோகரன் நீரினாலும் நெல் மணிகளாலும்

இளையராஜா பாடல்களால்

அன்ரன் அரசியல் பாடங்களால்

வோச்சர் சின்னத்துரை விழித்திருப்பதால்

ராகவன் விவாதங்களால்

கலை முடிவேயில்லாத கேள்விகளால்

யோசுவா பகிர்தலால்

சாரு புதிதளித்தலினால்

தயாளன் தன்னையே தருவதினால்

மகிழ் அலங்கரிப்பினால்

மௌனன் (யாத்திரிகா) வேட்டையினால்

ப்ரஸன்னா ஒத்திகைகளினாலும் அளிக்கையினாலும்

அ.ரா விமர்சனங்களால்



காடு தன்னுடைய பச்சைக் கனவுகளால்

வானம் விரிவினால்

கடல் ஓயாத அலைகளினால்

மலைகள் ஆழ்ந்த அமைதியினால்



இப்படியே இரவு நிரம்பிக் கொண்டிருக்கிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்