மேதகு: புனைவும் வரலாறும்



பார்வையாளத்திரளுக்குத் தேவையான நல்திறக்கட்டமைப்பு, அதில் இருக்க வேண்டிய திருப்பங்களைக் கொண்ட நாடகீயத் தன்மையுமான கதைப்பின்னல், உருவாக்கப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களின் உடல் மொழியின் நம்பகத்தன்மை ஆகியன படத்தைத் தொடர்ச்சியாகப் பார்க்கத் தூண்டுன்றன. பின்னணிக்காட்சிகளை உருவாக்கித்தரும் கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கூட அதிகமும் விலகலைச் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்து யாழ்நகரம் மற்றும் கிராமப்புறக் காட்சிகளைப் பார்வையாளர்களுக்குத் தர முயன்றிருக்கிறார்கள். நகர்வுகளாலும் சுற்றிச்சுழல்வதாலும் ஏற்படக்கூடிய அனுபவத்தைத் தரும் காமிராக் கோணங்களுக்குப் பதிலாக அண்மைக்காட்சிகள் மற்றும் சேய்மைக் காட்சிகளால் நபர்களும் வெளிகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாவற்றிற்கும் மேலாக நீண்ட போரின் துயரங்களைச் சொல்லும் கதையொன்றின் நாயகனின் வரலாற்றைப் பார்க்கப்போகிறோம் என்ற முன்னோட்டத்தின் வழியாகப் பார்வையாளர்களின் கண்களும் மனமும் ஒருநிலைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்குத் துணைபுரியும் விதத்தில் பின்னணி இசையும் பாடல்களும் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தியுள்ள பாங்கு சினிமாக்கலையின் கச்சாப் பொருள்களைப் பயன்படுத்துவதில் இயக்குநருக்கும் அவரோடு துணைநின்ற சினிமாக்கலைஞர்களுக்கும் ஓரளவு தேர்ச்சி இருக்கிறது என்பது  வெளிப்பட்டிருக்கிறது. அதனைக்கொண்டு பார்க்கத்தக்க சினிமாவாக மேதகுவை உருவாக்கியிருக்கிறார்கள்.

**************

‘சொந்த வாழ்க்கையில் எந்தவித நெருக்கடிகளையும் சந்திக்காத குடும்பம் ஒன்றிலிருந்து வந்த இளைஞன் ஒருவனைப் பொதுவெளி நெருக்கடிகளே ஆயுதப் போராட்டத்தைத் தேர்வுசெய்யும்படி தூண்டின’ என்பதற்கான காட்சிக்கோர்வைகள் அடுக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தீவுக்குள் மொழி மற்றும் சமய அடிப்படையிலான இனப் பகைமையில் சட்டம் வழங்கிய உரிமைப்போராட்டங்கள், ஊர்வலங்கள், கோரிக்கைகள் போன்றவற்றைக் கைக்கொண்ட தமிழ் அரசியலுக்குக் கிடைத்தவை தோல்விகள் மட்டுமே. சட்டத்தைக் கையாளவேண்டியவர்களின் கையாலாகாத நிலையும், சட்டத்தை மீறிய அதிகாரம் கொண்டிருந்தவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்ட புத்த பிக்குகள் அரசுக்குத் தந்த நெருக்கடிகளும், அவர்களின் தூண்டுதலின்படி சட்டத்தைக் கையிலெடுத்தவர்களின் தாக்குதல்களும், அவற்றை அடக்கவேண்டிய அரசப்படைகளின் தமிழின விரோதப் போக்கும் தலைவிரித்தாடிய காலகட்டம்தான் ஆயுதப்போராட்டத்தின் காரணிகள். அந்தக் காரணிகளிலிருந்து முகிழ்த்து எழுந்த தனியொரு இளைஞனாக – தலைவனாக ‘தம்பி பிரபாகரனை’ முன்வைப்பதற்கான அடித்தளத்தை மேதகுவின் திரைக்கதை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள இனவாதிகளும் அரசப்படைகளும் கட்டவிழ்த்து விட்ட வன்முறையான சூழலில், ‘ஏன் நாம் திருப்பி அடிக்கும் தாக்குதல் வழிமுறையைக் கைக்கொள்ளக்கூடாது’ என்றொரு இளைஞன் திசைமாறினான் என்பதை முன்வைக்கும் பகுதியோடு இப்போது வந்துள்ள மேதகு படம் முடிந்துள்ளது.

தனித்துவமிக்க போராளியாகவும், தனியீழப் போரின் தலைவராகவும், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப்பின் ‘மேதகு’வாகவும் அறியப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் ‘ தம்பி’ யாக அறியப்பெற்ற காலகட்டத்து வரலாறு மட்டுமே இப்போது படமாகியுள்ளது. இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட கல்வியில் தரப்படுத்தல் சட்டம்; உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு அனுமதி அளிக்காது தள்ளிப்போட்டது; அதனை மீறி மாநாடு நடந்தபோது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வன்முறை போன்ற பொதுநிலை அரசியல் சூழலை ஓரளவு சரியாகவே காட்டியுள்ள படம், குறிப்பான நிகழ்வுகளுக்குள்ளும், குறிப்பான நபர்களுக்குள்ளும் நுழையும்போது அனைத்துத் தரப்புகளையும் உள்ளடக்கிய பார்வைக்குப் பதிலாக ஒற்றை நோக்கில் நகரத்தொடங்கியிருக்கிறது .

அறியப்பட்ட ஆளுமையின் வாழ்க்கையைச் சொல்லும் வரலாற்றுப்புனைவான ஒரு சினிமாவில் மையப் பாத்திரத்தின் அசைவுகளும் எண்ணங்களும், அதனோடு தொடர்புடைய மற்ற பாத்திரங்களின் பெயர்களும் இடங்களின் பெயர்களும் இது உண்மை வரலாறு எனச் சொல்ல முனையும். ஆனால் அந்தப் பாத்திரத்தோடு மட்டுமல்லாமல் தொடர்புடைய பாத்திரங்களோடு கூடிய நிகழ்வுகளின் உருவாக்கத்தில் வெளிப்படும் கற்பனைகள். “படம் உண்மையான நிகழ்வுகளைக் கொண்ட வரலாறல்ல; புனைவு” எனக்காட்டி நிற்கும். ஆனால் அத்தகைய புனைவுக்கூறுகளால் தான் இயக்குநரின் நோக்கம் நிறைவேறும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. தனியொரு தலைவனாக ஈழப்போரை முன்னின்று நடத்தியவர் மேதகு பிரபாகரன். அவரது சாகச வரலாறைச் சொல்வது எனது சினிமா எனத் திட்டமிட்டுக் கதைப்பின்னலை உருவாக்கித் தந்துள்ளார் இயக்குநர். அதற்கேற்ப நிகழ்ந்த நிகழ்வுகளின் மீது புனைவுத்தன்மையைக் கூட்டித் தருகிறார். அது மட்டுமல்லாமல், சொல்முறைமைக்காக அவர் தேர்வுசெய்துள்ள தெருக்கூத்து வடிவமும் கூட இத்தகைய முன்வைப்புகளுக்கு உதவும் நிகழ்த்துவடிவம் என்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

**************

ஆயுதம் தாங்கிய போராளியான பகத்சிங்கை அறிதல், ஆயுதங்கள் உருவாக்கப்படும் முறையைக் கற்றல், அழித்தொழிப்புக்குத் திட்டமிடல் என ஒவ்வொன்றிலும் பிரபாகரனின் ஈடுபாட்டைக் குவிமையப்படுத்தியுள்ள சினிமா, அவருக்கு முன்பும் அவர் இயக்கம் கட்டிய காலத்திலும் அதே வழிமுறையோடு இயங்கிய முன்னோடிகளையும் குழுக்களையும் மௌனமாகக் கடந்து செல்கிறது. ‘வன்முறைப் போராட்டத்தை ஏற்று ஆயுதம் தாங்கிப் போராடுவதே தமிழர்கள் உரிமை பெறுவதற்கான வழி என்ற நிலை தங்கதுரை, குட்டிமணி காலத்து நிலைப்பாடு. அவர்களின் தொடர்ச்சிதான் பிரபாகரன் என்பதை அழுத்தமாகச் சொல்லவில்லை. இலங்கையில் நடந்த தரப்படுத்துதல், இன அடிப்படையில் மட்டுமே நடக்கவில்லை; வட்டார அடிப்படையிலும் நடந்த து. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக உயர்கல்வி வாய்ப்புப் பெற்ற தமிழ் மேட்டுக்குடியினரும் சிங்கள மேட்டுக் குடியினரும் என்பதும் அறியப்பட வேண்டிய உண்மைகள். இத்தரப்படுத்துதல் மூலம் உயர்கல்வி வாய்ப்பைப் பெறாத வட்டாரங்களிலிருந்தும், சமூகங்களிலிருந்தும் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்பு கிடைத்தன என்பதைப் பலரும் எழுதியுள்ளனர். யாழ்நகர மேயராக இருந்து கொலைசெய்யப்பட்ட – துரோகியாக முன்னிறுத்தப்படும் துரையப்பாவைப் பற்றியும் கூட வேறுவிதமான பார்வைகள் அன்றிருந்தன என்பதும் பலரால் விவாதிக்கப்பட்டுள்ளது. அவரைச் சிங்கள அரசின் சொற்கேட்டு நடக்கும் நபராகச் சித்திரிப்பது ஏற்கத்தக்கதல்ல; அவர் எப்போதும் சாதாரண மக்களின் ஆதரவுபெற்ற அரசியல்வாதியாக இருந்தார் என்பதையும் எழுதியுள்ளனர்.

பொதுவாக, ஆளுமைகளின் வரலாறுகள் எழுத்துப்பனுவல்கள் வழியாக மட்டுமே அறியப்படுவன அல்ல. அதிலும் அரசியல் தலைமைகளின் வரலாறுகள் எழுத்துப்பனுவல்களின் ஆதாரங்களைத் தாண்டி வாய்மொழிப் பரவல்களையும் தனதாக்கிக்கொள்ளும் இயல்புடையன. காலம் செல்லச்செல்ல வெவ்வேறு வாய்மொழிக்கூற்றுகளையும் உள்வாங்கிக் கொள்ளும் இவ்வகை வரலாறுகள் தொன்மக்கதைகளாகவும் மாறிவிடும். அத்தகையதொரு தொன்மக் கதையாக – வீரவரலாறாகப் பிரபாகரனின் கதையைச் சொல்லும் நோக்கம் இயக்குநர் கிட்டுவுக்கு இருக்கிறது என்பதைத் தெருக்கூத்தின் சொல்முறையைக் கையாண்டதின் மூலமும் உணர்த்துகிறார். தெருக்கூத்தின் மொத்த வடிவத்தையும் எடுத்துக் கொள்ளாமல் அவரது படத்தின் நோக்கத்திற்கேற்ற கூறுகளை மட்டுமே படத்தின் பகுதியாக மாற்றியுள்ளார். அத்தோடு மதுரையிலிருந்து இயங்கும் தெருக்கூத்துக் கலைக்குழு அதனை நிகழ்த்துவதாகவும் காட்டப்படுகிறது. அதற்குக் குறிப்பான காரணம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் பாரதக் கதையின் எதிர்நிலைப் பாத்திரங்களான துரியோதனன், துச்சாதனன், கீசகன், கர்ணன், சகுனி போன்ற பாத்திரங்களை மையப்பாத்திரங்களாக்கி, பெரும் அடவுகளாலும் உணர்ச்சிகரமான பாடல்களாலும், கேள்விகளை முன்வைக்கும் வசனங்களாலும் கிராமப்புறப் பார்வையாளர்களை வசப்படுத்திய வடிவம் அது. நிகழ்த்துமுறையில் மையப்பாத்திரத்தின் சாகசங்களை முன்வைத்தாலும், நிகழ்த்துப்பிரதியின் கட்டமைப்பு, மையப்பாத்திரங்களின் வெற்றியைச் சொல்வதற்குப் பதிலாக அவர்களின் வீழ்ச்சியைச் சொல்லும் நோக்கம் கொண்டது. அந்தக் கட்டமைப்பை அப்படியே ஏற்றுப் பிரபாகரனின் பெரும் வீழ்ச்சியை – அவல வீரனாக முடிந்துபோன கதையை இப்போது வந்துள்ள படத்தின் இயக்குநர் கிட்டு சொல்வார் என நினைக்கத் தோன்றவில்லை. ஏனென்றால் அப்படி நினைப்பதற்கான குறிப்புகள் எதுவும் இப்போது வந்துள்ள படத்தில் இல்லை.

ஆயுதப்போராட்டத்தைக் கொண்டாடும் மனநிலையே படத்தின் வெளிப்பாடாக இருக்கிறது, அதன் காரணகர்த்தாவாகப் பிரபாகரனை முன்வைக்கும் சொல்முறையைக் கட்டமைத்துள்ள இயக்குநர். அதனைக் கச்சிதமாக வெளிப்படுத்தும் தெருக்கூத்தின் விவாதக் காட்சிகளை மட்டுமே படத்தின் சொல்முறை உத்தியாகப் பயன்படுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக ஈழப்போராட்டத்தின் நிகழ்தகவுகளின் மீது விமரிசனப் பார்வையைப் பார்வையாளர்களுக்கு எழுப்பும் எண்ணம் இருந்தால், தெருக்கூத்தின் கட்டியங்காரன் பாத்திரத்தை முழுமையாக ஏற்று உள்வாங்கியிருக்க வேண்டும். அதன் மூலம் ஒவ்வொரு பாத்திரத்தின் அறிமுகத்தின் போதும், நிகழ்வுகளின் முடிவின்போதும் விவாதப்புள்ளிகளை முன்வைக்க முடியும். ஆனால் கவனமாக அதற்குள் செல்லவில்லை இயக்குநர். 

1970-களின் பின்பாதி தொடங்கி 2009 வரையில் நடந்துமுடிந்த போராட்டம் மற்றும் போர்க்காலங்களுக்குள் இருந்த உள்முரண்பாடுகளையோ, புறக்காரணிகளையோ கவனத்தில் கொள்ளாமல், போர்க்களத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கான காரணங்களைப் பகுப்பாய்வு செய்து விவாதிக்கும் விமரிசனப் பார்வையையும் முன்வைக்காமல் மேதகு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் கிட்டு. இயக்குநரின் இந்த மனநிலை அப்படியே தொடரும் நிலையில் அடுத்தடுத்து எடுக்கப்படும் பகுதிகள் வழியாக இன்னொரு போருக்கான நியாயங்களை முன்வைக்கும் நோக்கங்களே வெளிப்படும். எல்லாவற்றையும் வணிக நோக்கில் பார்க்கும் உலகமயத்தின் வருகைக்குப் பின்னால் ஆயுத உற்பத்தியும் வணிகத்தின் ஒரு பகுதிதான். இனம், மொழி, சமயம் எனச் சிறுபான்மை மனிதர்களை ஒடுக்குவது தொடர்ச்சியாக இக்காலகட்டத்தில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் விடுதலைக்கான குழுக்களாக இல்லாமல், ஆயுதங்களைக் கொள்வனவு செய்து பயன்படுத்தித் தோல்வியைத் தழுவும் குழுக்களாக ஆக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ஈழத்தமிழர்களையும் அதன் பகுதியாக ஆக்கும் ஒரு முன்வைப்பை இன்னொரு அரசியல் தலைவர் முன்வைப்பார் எனத் தோன்றவில்லை. அப்படியொரு நம்பிக்கையை உருவாக்கும் சினிமா, ஈழத்தமிழ்த் திரளுக்கு எதிரான சினிமாவாகவே அமையும். மேதகு அப்படியொரு சினிமாவுக்கான முற்பகுதியாகவே வந்துள்ளது.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்