பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை: தலித் சினிமாவிலிருந்து விளிம்புநிலை நோக்கி…

இயக்குநர் பா. இரஞ்சித்தின் ஐந்தாவது படமாக வந்துள்ள சார்பட்டா பரம்பரை உலகத்தமிழ் பார்வையாளர்களையும் தாண்டிப் பலராலும் கவனிக்கப்பட்ட சினிமாவாக மாறியிருக்கிறது. அப்படி மாற்றியதின் பின்னணியில் இயக்குநரின் முதன்மையான நகர்வொன்றிருக்கிறது. உலக அளவில் சினிமாப் பார்வையாளர்களுக்கு நன்கு அறிமுகமான குத்துச்சண்டை சினிமா என்ற வகைப்பாட்டை, உள்ளூர் வரலாற்றோடு இணைத்துப் பேசியதே அந்த நகர்வு. அதன் மூலம் தனது சினிமாவை, விளையாட்டு சினிமா என்ற வகைப்பாட்டிலிருந்து அரசியல் சினிமாவாகவும், விளிம்புநிலைச் சினிமாவாகவும் மாற்றியிருக்கிறார். அந்த மாற்றம், அவரைத் தலித் சினிமா இயக்குநர் என்ற முத்திரையிலிருந்து, பொதுத்தள சினிமா இயக்குநர் என்ற அடையாளத்திற்குள் நகர்த்தியிருக்கிறது.
ருசியும் ருசித்தல் நிமித்தங்களும்

‘முதன்முதலாக’ என்ற சொல்லாட்சியோடு பொருட்களை முன்வைக்கக் கூடியன வெகுமக்கள் ஊடக விளம்பரங்கள். அதே விளம்பரங்கள் பலவற்றில் ‘இதுவரை நீங்கள் ருசித்தறியாத ஒன்று’ என்பதுபோன்ற தொனிகொண்ட விளம்பரங்களையும் பார்த்திருக்கலாம்; கேட்டிருக்கலாம். மனிதர்களின் ஐம்புலன்களோடு தொடர்பில்லாத பண்டங்கள் என்றால், ‘முதன்முதலாக’ என்பதும், மனிதர்களின் ஐம்புலன்களோடு தொடர்புடைய பொருட்களென்றால், ருசித்தலோடு தொடர்புடைய சொற்களும் ஊடகங்களால் பயன்படுத்தப்படுகின்றன.

ருசித்தல் – என்ற தொழிற்பெயர் நேரடியாக உணவோடும் உணவு சார்ந்த பண்டங்களோடும் மட்டும் தொடர்புபடுத்தப்பட்டால் ஐம்புலன்களில் ஒன்றான நாக்கின் நுண்ணுணர்வோடு முடிந்துவிடும். ருசித்தலின் வேர்ச்சொல்லான ‘ருசி’ நேரடிப்பொருள் தாண்டிய கலைச்சொல்லாகப் பயன்பாட்டில் இருக்கின்றது. அதன் மூலம் ருசி, நாக்கைத் தாண்டிக் கண், காது, மூக்கு, மெய் ஆகிய புலன்களின் நுட்பங்களைக் குறித்த சொல்லாடல்களுக்கும் உரியதாக மாறியிருக்கிறது. கலைகளில் உச்சமாக வந்துள்ள சினிமாக்கலையில் வெளிவரும் ஒரு நல்ல சினிமாவும்சரி, திறமான வணிக சினிமாவும்சரி, ஐம்புலன்களுக்குமான ருசிக்குத் தீனிபோடுவதோடு, ஆறாவது புலனான அறிவுத் தோற்றவியலுக்கும் காரணமாகிறது.

கோவிட் பெருந்தொற்று காரணமாக, இணையவெளியில் வெளியான சார்பட்டா பரம்பரை, அதே இணையவெளியின் துணைப்பரப்பான சமூக ஊடகங்களில் பலவிதமாக விவாதிக்கப்படுகிறது. விவாதிப்பவர்கள் சினிமா என்னும் கலைப்பொருளாக முதலில் விவாதிக்கத் தொடங்கினார்கள். அந்த விவாதங்களில் புனைவின் சொல்முறை, சின்னச்சின்னப் பாத்திரங்களையும் முழுமைப்பாத்திரங்களாக வடிவமைத்துள்ள பாத்திர உருவாக்கச் சிறப்புகள், அப்பாத்திரங்களின் உணர்வுருவாக்கம், வெளிப்பாட்டின் அளவு, காட்சியுருவாக்கத்தில் இயக்கமில்லா மனிதர்களைத் தவிர்த்த பாங்கு, வண்ணச் சேர்க்கை மூலம் கால அடையாளப் பின்னணியைக் கொண்டுவந்த நேர்த்தி எனப் பலகாரணங்களால், சார்பட்டா பரம்பரை நடைமுறை வாழ்க்கையின் பிரதிபலிப்பு என விவாதிக்கப்பட்டது. அந்த விவாதங்கள் ஒருசில நாட்களிலேயே, சினிமாவைத் தாண்டிய விவாதங்களாக நகர்ந்தன.

விவாதங்களின் நகர்வில் நேர்மறைக் குறிப்புகளும் முன்வைக்கப்பட்டன; எதிர்மறைக் கோணங்களும் முன்வைக்கப்பட்டன. ஆதரவாகப் பேசியவர்கள், படத்தின் காட்சிகளை சமூகவியலின் தரவாக, வரலாற்று நிகழ்வுகளாக, சமகால அரசியல் குறியீடுகளின் அலைவுகளாக என விதம்விதமாக முன்வைத்தனர். எதிர்மறைக் கோணங்கள் கொண்டவர்கள் சார்பட்டா என்ற பெயரையும் அது குறிக்கும் பல்வேறு குழுக்களையும், படத்தில் காட்டப்படும் காலப் பின்னணியில் இருக்கக் கூடிய குழப்பங்களையும் எடுத்துக்காட்டி விவாதித்தனர். பெண் பாத்திரங்களின் அதீத உணர்வு வெளிப்பாடுகளும் கூடச் சுட்டிக்காட்டப்பட்டன. இந்த விவாதங்களும் நகர்வுகளும் ஒரு வெகுமக்கள் சினிமா, வெகுமக்கள் உளவியலின் பரப்பாகவும் வெடித்துக் கிளம்பும் கண்ணிகளாகவும் மாறும் வித்தையின் இயல்புகள். அந்த வித்தையின் அண்மைக்கால உச்சமான வெளிப்பாடே சார்பட்டா பரம்பரை. இதற்கு முன் இப்படியான விவாதங்களை உருவாக்கி நகர்ந்த படங்களாக இரண்டைக்குறிப்பிடலாம். அவைகளுள் ஒன்று கமல்ஹாசன் நடித்த தேவர் மகன்; இன்னொன்று ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா. அதற்கும் முன்பாகச் சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை, பராசக்தி போன்ற சினிமாக்களும் எம் ஜி ராமச்சந்திரன் நடித்த உலகம் சுற்றும் வாலிபனும் எங்க வீட்டுப்பிள்ளை, நாடோடி மன்னன் போன்ற படங்களும் அப்படிக் கவனித்துப் பேசப்பட்ட படங்கள். இவையெல்லாம் நடிகர் மைய சினிமாக்கள்; சார்பட்டா பரம்பரை இயக்குநர் மைய சினிமா என்பது தனித்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்று

நடிக மையமும் இயக்குநர் மையமும்

வெகுமக்கள் சினிமாவின் தயாரிப்பாளரும் இயக்குநரும் கண்ணுக்கும் காதுக்குமுரியதாகத் தனது படங்களை உருவாக்கவே பெரும்பாலும் நினைக்கிறார்கள். அந்த நினைப்பு ஏற்கெனவே வந்த வெற்றிப்படச் சூத்திரங்களில் ஒன்றில் அவர்களது படத்தை உருவாக்கத்தூண்டுகிறது. வெற்றிப்படச் சூத்திரங்களில் முதன்மையாக இருப்பது எப்போதும் நாயக மையத்தை வளர்த்தெடுக்கும் சாகச சினிமாக்களாக இருக்கின்றன. இவ்வகைச்சினிமாக்களைத் தயாரிக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள், அச்சூத்திரத்தை வெற்றிகரமாகக் கையாள்வதில் திறமைபெற்ற இயக்குநர்களை நாடுகிறார்கள். ஆனால் தனது நுழைவைக் காட்ட நினைக்கும் ஒரு புது இயக்குநர் ஏற்கெனவே அறிமுகமான வெற்றிச் சூத்திரங்களில் ஏதாவது சில வித்தியாசங்களோடு நுழைகிறார். அவ்வித்தியாசம் வணிக வெற்றியை உறுதிசெய்யும் நிலையில் அதன் வழியாகத் தனது இயக்குநர் அடையாளத்தை நிறுவிக்கொள்கிறார்.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் சினிமா நுழைவும் அப்படியொரு வித்தியாசத்தில் தான் தொடங்கியது. முதல் படம் அட்டக்கத்தி தமிழில் அறிமுகமாகியிருந்த வட்டார சினிமா என்னும் வகைப்பாட்டின் புதிய வகையினமாகத் தன்னைக் காட்டிக்கொண்ட படம். மதுரை வட்டார சினிமா இயக்குநராகப் பாரதிராஜாவும், கொங்குவட்டார சினிமா இயக்குநராக ஆர்.வி.உதயகுமார்வும் அடையாளப்படுத்தப்பட்ட பின்னணியில் சின்னச்சின்ன வேறுபாடுகளுடன் பல இயக்குநர்கள் பல்வேறு வட்டார சினிமாக்களை உருவாக்கித் தங்கள் இடம்சார் அடையாளங்களில் வெளிப்பட்டார்கள். தங்கர் பச்சான் நாஞ்சில் நாடனின் குமரிமாவட்டப் பின்னணி நாவலை நடுநாட்டு முந்திரி விவசாயப்பின்னணியாக்கினார். இவையெல்லாம் தமிழ்நாட்டின் நிலவுடைமைச் சாதிகளில் ஒன்றைக் குறிப்பிட்ட வட்டாரத்தின் முழு அடையாளமாக மாற்றிக் கட்டமைத்தன. அதன் தொடர்ச்சியாகப் பா. இரஞ்சித்தின் முதலிரண்டு படங்களான அட்டைக்கத்தியும் மெட்ராஸும் சென்னைப் புறநகர் சினிமாக்கள் என்ற வெளிசார் அடையாளத்தோடு/ நிலவியல் வட்டாரத்தோடு வெளிவந்தன. இந்நிலவியல் பின்னணிக்குக் குறிப்பான நிலவுடைமைச்சாதி அடையாளம் கிடையாது. அதற்குப் பதிலாகச் சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், தூரத்து மாவட்டங்களிலிருந்தும் சென்னைக்குக் குடிபெயர்ந்த உதிரித் தொழிலாளிகளின் கலவையான அடையாளம் உண்டு. உதிரித் தொழிலாளர்களின் கலவையான அடையாளத்தை – தலித் அடையாளத் திரட்சியாக்கியது தமிழகத் தேர்தல் அரசியல்.

சாதியப்படிநிலைகள் மற்றும் ஒடுக்குதலை விவாதப்பொருளாக்கிய தலித் அரசியல் பின்னணியைப் பொதுப்பரப்பாகவும், அதிலிருந்து விடுபட நினைக்கும் புதிய தலைமுறை இளைஞர்களைக் குறிப்பான பாத்திரங்களாக்கியும் அவரின் முதலிரண்டு படங்களும் வெளிப்பட்டபோது இன்னொரு அரசியலை முன்வைக்கும் சாயலும் பண்பாட்டு அடையாளங்களும் பதிவாக்கம் பெற்றன. புறநகர்ச் சென்னையின் – குறிப்பாக வடசென்னை,விளிம்புநிலை மக்களின் திருமணச் சடங்குகள், உணவு முறைகள், மதுபான விருப்பங்கள், உதிரியான தொழில்கள், பொழுதுபோக்கிற்கான கால்பந்து போன்ற விளையாட்டுகள், விழிப்புணர்விற்கான வாசகசாலை முயற்சிகள் போன்ற வெளிசார் அடையாளங்களின் மீது ஈர்ப்புகளும், சாதிசார்ந்த ஒடுக்குமுறைக்கெதிரான மனக்குமுறல்களும் இருந்தன.

திரும்பத்திரும்ப அந்தப் புறநகர் தெருக்களிலும் சிறுசிறு குடியிருப்புகளிலும் சுற்றிச்சுழல வேண்டியதின் மீது அதிருப்தியும் இருப்பதாக அவை காட்டின. தங்களின் இரட்சகர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்ட உள்ளூர்த் தலைமைகளின் மீது அதிருப்தி இருப்பதையும் அவை சொல்லத் தவறவில்லை. இந்த வித்தியாசமான கவனப்படுத்துதல்கள் வழியாகவே இயக்குநரின் அடையாளம் உருவாகியது. இருபடங்கள் வழியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின் அவர் வழக்கமான சூத்திரத்தை இயக்கும் இயக்குநராக மாறினார்;மாற்றப்பட்டார்.நட்சத்திர நடிகர் ரஜினிகாந்தை மையமாக்கி, அநீதிகளை எதிர்க்கும் வழக்கமான வணிகவெற்றிச் சூத்திரத்தின் வெளிப்பாடுகளாகக் கபாலியையும் காலாவையும் தந்தார். இவ்விரண்டிலும்கூட ‘புதிய வெளிகள், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு நாயகன்’ என்ற அவரது அடையாளங்கள் தொடரவே செய்தன. ஏற்கெனவே இங்கு அறிமுகமான அமைப்புசார் தலித் தலைமைகளுக்கு மாற்றான தலித் அரசியலைப் பேசும் ஆளுமையாகவும் இயக்குநரும் அவரது நீலம் அமைப்பும் அறியப்பட்டன.

கவனிக்கத்தக்க திருப்பம்


பா.இரஞ்சித்தின் இயக்குநர் பயணத்தில், இப்போது வந்துள்ள சார்பட்டா பரம்பரை இன்னொரு திருப்பம். இத்திருப்பத்தில் அவர் முழுமையான இயக்குநர் சினிமாவைத் தருபவராக மாறியிருக்கிறார். சார்பட்டா பரம்பரை, இடியாப்ப நாயகர் பரம்பரை என்ற இரண்டு குத்துச்சண்டைக் குழுக்களின் போட்டி, வெல்வதின் மூலம் ஒரு நிலைப்படுத்திக்கொள்ளல் என்ற முரண் உருவாக்கப்பட்டாலும், முழுமையாக இருநிலை எதிர்வுக் கதைப்பின்னல் இந்தப்படத்தில் இல்லை. இது முதன்மையான வித்தியாசம். அதேபோல் ஆரம்பம், முரண், சிக்கல்கள், உச்சநிலை என்ற நாடகக் கட்டமைப்புக்குப் பதிலாக, இரட்டை உச்சநிலை கொண்ட கதைப்பின்னலை முன்வைத்து இன்னொரு வேறுபாட்டைக் காட்டியுள்ளார்.

ரங்கன் வாத்தியாரின் சார்பட்டா பரம்பரையின் சார்பாகக் களமிறங்க ஒருவனைத் தேர்வுசெய்யப்படும் விதம் தொடங்கி, அவரது தொழில்சார் அறிவும், அவரது அரசியல் ஈடுபாட்டுணர்வும் இணையாக வைக்கப்பட்டுள்ளது. தனது மகனைக் கூட ஒதுக்கிவிட்டுப் பொருத்தமான ஒருவனாகக் கபிலனை அடையாளப்படுத்தும் பாங்கு குத்துச்சண்டையின் மீதும் சார்பட்டா பரம்பரையின் வெற்றி மீதும் அவருக்கு இருக்கும் புரிதலின் வெளிப்பாடு. கபிலனின் முதல் வெற்றி ரோஸை (டான்சிங்) வீழ்த்துவதில் வெளிப்படுகிறது. அதன் தொடர்ச்சியில் திரும்பவும் ரங்கன் வாத்தியார் அரசியல் சார்பு காரணமாகச் சிறைக்குப் போகும்போது சார்பட்டா பரம்பரை திரும்பவும் வீழ்ச்சியைச் சந்திக்கிறது. அந்த வீழ்ச்சியின் எழுச்சியின் உச்சமாக வேம்புலியை வீழ்த்துவதற்குத் தயாராவது அமைக்கப்பட்டுள்ளது. நாயகனின் எழுச்சி, எழுச்சி என நகரும் வணிக சினிமாவில் ‘வீழ்ச்சியும் எழுச்சியும்’ என்பது இன்னொரு புதுமை.

மையப் பாத்திரத்தின் வீழ்ச்சியின் பின்னணியில் இருப்பது சார்பட்டா பரம்பரையின் வீழ்ச்சி மட்டுமல்ல; தமிழ்நாட்டு அரசியல் மாற்றமும் என்பதாகப் பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது. தந்தையால் குத்துச்சண்டை வாய்ப்புக் கிடைக்காத நிலையில் அரசியல் ஈடுபாட்டால் தந்தையின் எதிர்தரப்பு அரசியல்வாதியாகிறான் மகன் வெற்றிச்செல்வன் (கலைச்செல்வன்). அந்த அரசியல் அவனையும் அவன் சார்ந்த திரளையும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களாக மாற்றுகிறது. இந்தியாவில் திருமதி இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசரநிலை, அதனை எதிர்த்த கலைஞர் மு.கருணாநிதி; அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சிக்கலைப்பு, தொடர்கைதுகள், வாக்காளர்கள் மொத்தமாக மாறுதல், திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து புதிய கட்சியாக எம்.ஜி.ராமச்சந்திரனின் அதிமுக உருவாக்கம் என அனைத்தும் சின்னச்சின்னக் காட்சிப்படுத்தலின் வழி விரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிப் படுத்தல்கள் ஒவ்வொன்றும் இயக்குநர் பா. இரஞ்சித்தின் சினிமா மொழியின் தேர்ச்சியைக் காட்டக் கூடியனவாக இருக்கின்றன. அத்தோடு எப்போதும் நாயகன் x வில்லன் என்ற இரட்டை எதிர்வுக் கட்டமைப்புகொண்ட கதைப்பின்னலுக்குப் பதிலாக தனித்தனிப் பாத்திரங்களையும் முழுமையான பாத்திரங்களாக உருவாக்கியிருப்பதும் பொருத்தமான நடிப்பைக் கொண்டுவருவதில் காட்டியுள்ள அக்கறையும் இயக்குநரின் சவாலான பணிகள். அதனையும் பிசிறில்லாமல் செய்திருக்கிறார் இயக்குநர்.

நடிப்பின் ருசியறிந்த பசுபதி, ஜி.எம்.குமார், ஜான் விஜய், சபீர், கலையரசன் போன்றவர்களின் நடிப்பும் உடல் மொழியும் பொருந்திப் போவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. இதுவரை உடல்மொழியை அதிகம் பயன்படுத்தாத ஆர்யாவின் உடல்மொழியையும் குரலையும் மாற்றிக் காட்டியிருப்பதும், பெண் கதாபாத்திரங்களுக்கு அதிகம் வாய்ப்பில்லாத சினிமாவில் இரண்டு இளம் மனைவிகள், ஒரு தாய் என மூன்று பாத்திரங்களின் வார்ப்பும் அதனை ஏற்று நடிக்க அதிகமும் அறியப்படாத நடிகைகளையும் தேர்வுசெய்ததும் இயக்குநரின் தொழில்சார் நம்பிக்கை சார்ந்த ஒன்று. நடிக முகங்களுக்காகப் படம் பார்க்க வரும் ரசிகர்களின் ரசனையை மாற்றிக் காட்ட முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டுள்ள இயக்குநர் பா. இரஞ்சித், தனது கதைத்தேர்வு, திரைக்கதையாக்கம், நடிப்புக்கலையின் ஆழம், அதன் வழியாக கடத்தப்படும் உணர்வுகள் ஆகியவற்றை முழுமையாக நம்பிச் செயல்பட்டுள்ளார். பாராட்ட வேண்டிய திசைமாற்றம் இது.

பெரிதும் காட்சிக்கலையாகவும் கேட்புக்கலையாகவும் மட்டும் கருதப்படும் சினிமாவை மற்றைய புலன்களுக்கும் உரிய நுண் உணர்வுகளைத் தூண்டி, விளிம்புநிலை மனிதர்களின் இருப்பு, குடும்பவெளியில் உறவுகளிடையே வெளிப்படும் இயல்பான அன்பு, உடைமை மனநிலை போன்றவற்றோடு பொதுவெளியில் ஏற்படக்கூடிய நட்பு, நெருக்கம், போட்டி, வெல்லவேண்டிய தேவை எனக் கலவையான உணர்வுகளைக் கச்சிதமாக உருவாக்கிப் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளார். அதன் வழியாகவே சார்பட்டா பரம்பரை பார்வையாளர்களாலும் விமரிசனப் பார்வைகொண்ட வாசிப்பாளர்களாலும் விவாதிக்கப்படுகிறது. அதன் இயக்குநர் பா.இரஞ்சித் கொண்டாடத்தக்க இயக்குநராக மாறியிருக்கிறார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்