மேற்கின் திறப்புகள்: தேடிப்படித்த நூல்கள்

எனது மாணவப்பருவத்தில் ஐரோப்பிய இலக்கியப் பரப்பையும் கருத்தியல் போக்குகளையும் அறிமுகம் செய்த நூல்களில் இந்த மூன்று நூல்களுக்கும் முக்கியப்பங்குண்டு. இந்த அறிமுகங்களுக்குப் பின்னரே முழு நூல்களைத்தேடிப் படித்திருக்கிறேன். 2000 -க்குப்பின்னர் ஐரோப்பிய இலக்கியத்தில் நடந்த சோதனை முயற்சிகள், ஆக்க இலக்கியங்கள் போன்றவற்றை  அறிமுகம் செய்யும் நூல்கள் தமிழில் வரவில்லை

ஜெர்மானிய இலக்கியம்
இப்போது அந்த நிலை இல்லை. எனது மாணவப் பருவத்தில் நேரடி நூல்களைவிட மொழிபெயர்ப்புகள் விலை குறைவாகக் கிடைத்தன. மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பக மொழிபெயர்ப்பு நூல்கள் மிகக்குறைந்த விலையில் கிடைத்துக் கொண்டிருந்தது.டவுன்ஹால் ரோட்டில் புதிய புத்தகங்கள் கிடைக்கும். என்.சி.பி.ஹெச்., மீனாட்சி புத்தக நிலையம் எல்லாம் டவுன்ஹால் சாலையில். பழைய புத்தகங்கள் அதற்கிணையான திண்டுக்கல் சாலையில்.

மதுரையிலொரு திண்டுக்கல் ரோடு உண்டு. செண்ட்ரல் சினிமா தியேட்டர் சந்துக்குள் நுழைந்து திண்டுக்கல் ரோட்டில் வந்தால் வரிசையாகப் பழைய புத்தகக் கடைகள். மீனாட்சி அம்மன் கோயில் தெற்குக் கோபுரவாசல்வரை விரித்துப் பரப்பிவைத்திருப்பார்கள். திருப்பத்தில் இருந்த மூலைக்கடை பெரியது. அங்குதான் இந்த நூலை வாங்கினேன். வெளியான ஓராண்டுக்குள்  அங்கு வந்திருந்தது. 1982 இல் வாங்கி வாசித்தேன்.

1981-ல் தென்மொழிகள் புத்தக நிறுவனத்திற்காக ஜெர்மன் மொழியின் எழுத்துகளைத் தொகுத்து மொழிபெயர்ப்பு செய்து தந்தவர் கா.திரவியம். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, தன்னோடு தெசிணி என்னும் கவியை இணைத்துக்கொண்டு உருவாக்கிய நூல். பனைகதைகள்,கவிதைகள், கட்டுரைகள், விவாதங்கள் என வகை பிரித்து தரப்பட்ட நூல்.

ஜெர்மானிய இலக்கியம் பற்றிய முன்னுரை வழியாகவே ப்ரக்டும் சீக்பிரிட் லென்ஸ் என்னும் நாடகக்காரரும் அறிமுகம்.இப்படியான மொழிபெயர்ப்புகள் வழியாகவும்தான் நவீனத்துவம்தமிழில் வந்து சேர்ந்தது. இந்தியாவை இந்துத்துவ நாடாக ஆக்கிவிட நினைப்பவர்களும் அவர்களது பின்னோடிகளும் இவற்றையும் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள்

உலகத்துச் சிறந்த நாவல்கள்

2017, ஜனவரி, சென்னை புத்தகச் சந்தையில் வாங்கிவந்த நூல்களில் ஒன்று க.நா.சு.வின் ” உலகத்துச் சிறந்த நாவல்கள்”. நான் பிறந்த 1959 ஆம் ஆண்டில் வெளியான இந்நூலை டிஸ்கவரி புக்பேலஸ் இப்போது (மே,2016)வெளியிட்டுள்ளது. டிஸ்கவரி புக்பேலஸின் முதல் பதிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இடையில் வேறு பதிப்புகள் வந்திருக்கும் என்றே நினைக்கிறேன். இந்நூலில் 15 பிறமொழி நாவல்களைத் தமிழில் அறிமுகம் செய்துள்ளார் க.நா.சுப்பிரமண்யம்.
உலக இலக்கியமென ஒன்று தனியாக இருக்க வாய்ப்புகள் குறைவு என்னும் கருத்துகள் வலுப்பெற்றுவரும் காலமிது. அப்படியிருந்தால் எந்தமொழியில் இருக்கும் இலக்கியத்தை உலக இலக்கியமாக வரையறை செய்வது என்ற கேள்விக்கு விடைசொல்ல இயலாது. அதேநேரத்தில் உலகமொழிகள் ஒவ்வொன்றிலும் எழுதப்படும் பொதுமையான உரிப்பொருள்கள் (CONTENT) சிலவற்றை அடையாளப் படுத்த முடியும்; அவ்வுரிப்பொருள்களை மையப்படுத்தி எழுதப்படும் எழுத்துகளில் வெளிப்படும் கலையியல் நோக்கும் அழகியல் கூறுகளும் வளர்ச்சியடைந்த மொழிகளின் இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றை உலக இலக்கியக் கூறுகள் என வரையறை செய்வதில் சிக்கல்கள் இருக்க வாய்ப்பில்லை.

தான் வாசித்த நாவல்களில் வெளிப்படும் உரிப்பொருள்களையும் அவற்றின் வெளிப்பாட்டு முறைகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழில் இயங்கியவர் க.நா. சு. என்பதைத் திரும்பச் சொல்ல வேண்டியதில்லை. தொடர்ச்சியாகத் தான் தொடர்புகொண்டிருந்த இதழ்களின் தேவைக்காக இந்தக் கட்டுரைகளை எழுதினார் என்றாலும், அவரது தேர்வும் அறிமுகப்படுத்திய முறையும் விவாதத்திற்கப்பாற்பட்டது எனப் பலரும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அறிமுகம் செய்ய விரும்பும் நாவல்களின் பாத்திரங்களுக்கிடையேயுள்ள உறவுகளை முதலில் தருவது அவரது பாணி. தொடர்ந்து அந்நாவலை எழுதியவரின் இடம் - அவர் எழுதிய மொழியிலும் உலக அளவிலும் எத்தகையது எனச் சொல்வார். பிறகு நாவலின் கதைச் சுருக்கத்தை கதையாகச் சொல்லாமல், நாவல் முன்வைக்கும் விவாதத்தோடு இணைத்துச் சொல்வார். இம்மூன்று கூறுகளையும் தந்துவிட்டு முழுமையாகப் படிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துள்ளார். க.நா.சு.வேகூட இந்த நாவல்களை வேறு ஒரு ரூபத்திலும் தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளார். பாவை சந்திரனின் ஆசிரியத்துவத்தில் குங்குமக் குழுவின் இதழ்களில் ஒன்றான முத்தாரத்தில் 33 நாவல்களைச் சுருக்கமாகக் கதைசொல்லி அறிமுகப்படுத்தினார். அந்தக் கட்டுரைகளை 1988 இல் ஸ்டார் பிரசுரம் நூலாக வெளியிட்டது. டிஸ்கவரி புக்பேலஸின் வெளியீட்டில் விரிவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெரும்பாலான நூல்கள் பற்றிய சுருக்கமான அறிமுகங்கள் அந்நூலிலும் உள்ளன. அந்நூல் இப்போது கிடைக்கவாய்ப்பில்லை. நூல்கங்களில் இருக்கக்கூடும். உலக இலக்கியத்தோடு - நாவல்களோடு அறிமுகம் வேண்டுமென நினைப்பவர்கள் டிஸ்கவரி வெளியீட்டையே வாங்கிப் படிக்கலாம்.
இந்த நூலை எனது முதுகலைப் படிப்புக்காலத்தில் ஒருமுறை வாசித்திருக்கிறேன். இந்நூலைப் படிப்பதற்கும் முன்பு அவரது மொழிபெயர்ப்பில் நான் வாசித்த குறுநாவல் தேவமலர்.தேவமலர் தனியாக இல்லாமல் வேறொரு குறுநாவலோடு இணைத்தே வந்திருந்தது. அட்டையில் அன்புவழி என்று இருந்ததாக ஞாபகம். சுவீடிஷ் பெண்ணெழுத்தாளரான ஸெல்மா லாகர்லெவ்வின் தேவமலரை வாசித்தபோது மொழிபெயர்ப்பை வாசிக்கும் உணர்வு எதுவும் தோன்றவில்லை. அதற்கு முன்பு மாஸ்கோவின் முன்னேற்றப்பதிப்பக வெளியீடுகளில் இத்தகைய உணர்வு ஏற்பட்ட மொழிபெயர்ப்பு நாவல்கள் இரண்டு: வஸிலெவ்யெவின் அதிகாலையின் அமைதியில், கார்க்கியின் தாய்.

 உலக நாடக இலக்கியம்

உலக இலக்கியம் பற்றிய சொல்லாடல்களைத் தொடங்கினால் ஒவ்வொருவரும் அவரவர்களின் வளமான பகுதியை இலக்கியவடிவத்தை முன்வைத்தே தொடங்குவார்கள். பெரும்பாலான உலகமொழிகளில் நிகழ்கால இலக்கியவகையாகப் புனைகதைகள் மாறியிருக்கிறது. இதற்குக்காரணம் புனைகதை மரபிலிருந்து தங்கள் இலக்கியவரலாற்றைக் கட்டியெழுப்பும் அமெரிக்கர்களின் ஆதிக்கப்பரவல்தான். ஆனால் ஐரோப்பியர்கள் - குறிப்பாகக் கல்விப்புல ஐரோப்பியர்கள் நாடக இலக்கியங்களை (Dramatic literature) முன்வைத்தே பேசுவார்கள். இந்திய அளவில் இத்தகைய சொல்லாடல்களை முன்வைப்பதிலும்கூட இருவேறு போக்கைச் சுட்டிக்காட்டவேண்டும். சம்ஸ்க்ருதத்தை மூலமொழியாகக் கொண்ட வட இந்தியமொழிகளுக்கு அடிப்படையான கலையியல் அல்லது அழகியல் அரங்கியலிலிருந்து முன்வைக்கப்படும். ஆனால் தென்னிந்திய மொழிகள் - குறிப்பாகத் தமிழ்மொழியின் கலையியல் அல்லது அழகியல் கவிதையிலிருந்தே முன்வைக்கப்படும்.

பிரிட்டானிய காலத்துக் கல்விமுறை ஐரோப்பிய மையத்தைக் கொண்டிருந்தது. அதன்வழியாக உருவான புலமையாளர்கள் நாடக இலக்கியத்தில் வல்லவர்களாக இருந்துள்ளதை ஐம்பதுகள் வரை ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும் எழுத்தாளர்களாகவும் இருந்தவர்களின் வரலாறும் வாழ்க்கையும் சொல்கின்றன. அதன் வெளிப்பாடான ஒரு சிறுநூல் “உலக நாடக இலக்கியம்” எம்.கே. மணி சாஸ்திரி எழுதிய இந்நூலில் மறுமலர்ச்சிக்கால ஐரோப்பியர்கள் கொண்டாடிய 10 நாடக எழுத்தாளர்களின் நாடக எழுத்துகள் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த அறிமுகத்தில் கவனிக்கத்தக்க முறையியலும் பின்பற்றப்பட்டுள்ளது. அறிமுகம் செய்ய நினைக்கும் ஒருவரின் முதன்மையான நாடகத்தின் கதையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, அவரது ஒட்டுமொத்த நாடக இலக்கிய அடையாளத்தை எழுதுகிறார. கடைசியில் கதைசொல்லி அறிமுகம் செய்த நாடகத்தில் வெளிப்படும் நாடக நயங்களை விளக்கியுள்ளார். 
என்னிடமிருக்கும் இந்நூல் 1993 இல் வெளிவந்த என் சி பி எச். வெளியிட்ட இரண்டாவது பதிப்பு. முதல் பதிப்பு 1969வந்ததாகக் குறிப்பு உள்ளது. மூன்றாவது பதிப்பாகவும் என் சி பி எச். வெளியிட்டுள்ளது. நாடகத்துறை சார்ந்தவர்கள் அறிந்திருக்கவேண்டிய நூல் என்பதாகப் பார்க்காமல், இலக்கிய அறிவு, இலக்கியக் கலை, உலக இலக்கிய வரையறைப் புரிந்துகொள்வதற்கான ஒருநூலாகவே இந்நூலை வாசிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்