விரும்பித் தொலையும் இயக்குநர்கள்
நாயக நடிகர் உருவாக்கம்

ரஜினிகாந்தின் நட்சத்திர நடிகர் இடத்தை அடைய விரும்பிய போட்டியில் உடல் ஒற்றுமையை வைத்தும் பெயர் உச்சரிப்பை வைத்தும் விஜய்காந்த் முயற்சி செய்தார். அவருக்கு இணைநிலைப் போட்டியில்லாத நிலையில் குறிப்பிட்ட அளவு வெற்றியும் பெற்று அரசியல் கட்சியைக் கூட ஆரம்பித்தார். திரைப்பட உலகத்திற்குள் அடுத்து உருவான போட்டி இணையாக நடிகர்கள் விஜயையும் அஜித்தையும் குறிப்பிடலாம். நடிகர் சூர்யாவும் கூட அவர்களோடு போட்டியிட்டார். சிங்கம் வரிசைப் படங்களில் நடித்தாலும் அவரால் அந்த இடத்திற்கு நகரமுடியவில்லை. ஆனால் நடிகர் விஜய், ஆண்டிற்கு இரண்டு படங்கள் எனத் திட்டமிட்டு நடித்து, முன்னேறிக் கொண்டே இருக்கிறார். அவரது முன்னேற்றத்திற்கும் ரஜினிகாந்திற்கு உதவிய இயக்குநர்களைப் போலப் பலர் இயக்குநர்கள் உதவுகிறார்கள். அவரை நடிகராக உருவாக்கித் தக்கவைத்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்றாலும், நட்சத்திர நடிகராக மாற்றியவர் அவரல்ல. ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா, பரதன், அட்லி போன்ற வணிக வெற்றிப் படங்களைச் சூத்திரமாக்கித் தரும் இயக்குநர்கள் தான். இவர்கள் மட்டுமல்ல; இன்னும் புதுப்புது இயக்குநர்கள் வருகிறார்கள். அவரது நாயகத்தன்மையைக் கட்டமைப்பற்கேற்பக் கதைகள் செய்கிறார்கள்; காட்சி அமைக்கிறார்கள்; பாடல்கள் எழுதப்படுகின்றன.
அந்த வரிசையில் இன்னொரு போட்டியில்
இருப்பார்கள் எனச் சொல்லப்பட்டவர்கள் நடிகர்கள் சிம்புவும் தனுஷும்.
இருவருமே விஜய், சூர்யா போன்று திரைப்படக்குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் தான். ஆனால் சிம்புவின் தந்தையின் சினிமா பாணி ஒற்றைத்தன்மை
கொண்டது. அத்தோடு நட்சத்திர நடிகரை உருவாக்கும்
இயக்குநர்களைக் கண்டுபிடித்துத் தன்னை ஒப்புக்கொடுக்கும் திறமையை வெளிப்படுத்தாததால்
கொஞ்சம் பின்தங்கியே இருக்கிறார். ஆனால் தனுஷுக்குப் பல பின்னணிகளில்- பலதளங்களில்
படங்களை இயக்கும் அப்பாவும் அண்ணனும் இருந்தார்கள். அவர்களைத்தாண்டி பலவிதமான சமூகப்
பின்னணிகளில், பலவிதமான வெளிகள் சார்ந்து படங்களை உருவாக்கும் இயக்குநர்களிடம் தன்னை
ஒப்படைத்து பலபடி முன்னேறிக்
கொண்டிருக்கிறார்.
வெகுமக்கள் ரசனையை
உருவாக்குதல்
போட்டி, போட்டியில்
எதிரிணை நாயகர்கள், அவர்களில் ஒருவரை முதலிடத்திற்கு நகர்த்தி உச்சநடிகராக அடையாளம்
காட்டுதல் வணிக சினிமாவின் உத்திகளில் முதன்மையான உத்தி. இம்முதன்மை உத்தியின் வழியாக
உச்சநட்சத்திரமாக முதலிடத்திற்கு வரும் நாயக நடிகர்கள் படத்திற்கு வெளியே பொதுத்தளத்தில்
தங்களின் பிம்பங்களை வேறுவிதமாகக் கட்டமைக்கிறார்கள். சமூகப்பொறுப்புடையவர்கள் என்பதாக க்காட்டி, அரசியல்
நுழைவைக் கனவு காண்கிறார்கள். அதற்கப்பால், திரைப்படத் தொழிலில் அவர்களின் முதன்மை
இடம் உறுதியாக்கப்படுகிறது. அதன் மூலம் அவர்களது
சம்பளம் ஒவ்வொரு படத்திற்கும் பலப்பல மடங்காக உயர்கிறது. அவர்களே படத்தின் கூறுகள்
எல்லாவற்றையும் முடிவுசெய்யும் வல்லமையுடையவர்களாக ஆகிறார்கள். உடன் நடிக்கும் நடிகை,
நகைச்சுவை நடிகர் என்னும் துணைப்பாத்திரத்தேர்வு, பாடல் காட்சிகள் படமாக்கும் சூழல்
பின்னணி போன்றனவற்றை முன்வைக்கிறார்கள்.
சினிமா என்னும் காட்சிக்கலை,
இயக்குநரின் வெளிப்பாட்டு வடிவம் என்பதைத் தொலைத்து, மையப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும்
நடிகரின் பிம்ப உருவாக்கக் கருவி என்பதாக மாறுகிறது. இதுவே தமிழ்ச் சினிமாவின் மைய
நீரோட்டமாக இருக்கிறது. இதிலிருந்து விலகிய இயக்குநர்களாகத் தமிழ்ச் சினிமாவில் ஒரு
தொடர்ச்சியை க்காட்ட முடியும். அவர்கள் தங்களின் அடையாளத்தை – இயக்குநர் என்னும் கலைத்துவ
அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பியவர்கள். ஸ்ரீதர், பீம்சிங், பாலச்சந்தர்,
மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலா என நீளும் வரிசை அது. இவர்களது படத்தில் நட்சத்திர
நடிகர்களாக ஆசைப்படும் நடிகர்களும்கூட இயக்குநரின் நடிகர்களாகவே வெளிப்பட்டார்கள்.
இந்த வரிசையில் வரக்கூடியவர்களாக அண்மையில் அடையாளப்படுத்திக்கொண்ட இயக்குநர்களாக வெற்றிமாறன்,
மாரிசெல்வராஜ், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். ஆனால் அவர்களின்
அண்மைக்காலப் படங்களின் உருவாக்கமுறைமையும் மையப் பாத்திரத்தைத் தாங்கும் நடிகருக்காக
உருவாக்கும் காட்சி அமைப்புகளும் இயக்குநர் அடையாளத்தை அவர்கள் தக்க வைப்பார்களா? என்ற
சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. அந்தச் சந்தேகத்திற்கான
காரணியாக நடிகர் தனுஷ் இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
*******
ஒரு
காலத்தில் பெரும் சாகசங்கள் செய்தவன், இப்போது ஒடுங்கி நல்லவனாக இருக்கிறான் எனக்காட்டிய
முன்னோடி சினிமாக்களாக காட்பாதர், பாட்ஷா போன்றன இருக்கின்றன. அத்தகைய ஒடுக்கமும் அடக்கமும் தேவைப்பட்டால் திரும்பவும்
பீறிட்டெழும் எனக் காட்டும் உத்தி, வணிக சினிமா எப்போதும் கையாளும் ஒன்றுதான். அதையே அசுரனில் தனுஷிற்காக
வெற்றிமாறன் செய்திருந்தார். அப்படிச் செய்ததின்
மூலம் அசுரனை வெற்றிமாறன் என்ற இயக்குநரின் சினிமா என்ற நிலையிலிருந்து இடம் மாற்றி
நடிகர் தனுஷின் அசுரன் என்பதாகத் தந்தார்.
ஆனால் இதே வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம், வடசென்னை போன்ற
படங்கள் இயக்குநரின் படங்களாக அறியப்பட்டு, சிறந்த திரைப்படங்கள் என்ற விருதைப் பெற்றன
என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். நட்சத்திர நடிகரை நம்பாமல் கதையை மற்றும்
நம்பி எடுத்த விசாரணையும் விருதுபெற்ற – மாற்றுச் சினிமாத்தன்மை கொண்ட படம் என்பதையும்
கவனத்தில் கொள்ளலாம்.
அசுரனை அடுத்துத் தனுஷ் நடித்து வணிக வெற்றிபெற்ற படம் கர்ணன்(2021). அதன் இயக்குநர் மாரி செல்வராஜ். கால்நூற்றாண்டுக்கு முன்னால் தென் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தில் நடந்த சாதியொடுக்குதல் நிகழ்வுகளை நினைவூட்டிய காட்சிகளைக் கொண்ட படம் . தங்கள் கிராமத்திற்குப் பேருந்து நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற நடந்த உரிமைப் போராட்டங்களையும் அதில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும், கிடைத்த சலுகைகளையும் தனியொருவனின் சாகசங்களாக முன்வைத்த படம். அதற்கு இயக்குநரின் மாற்றுத் தொன்ம உருவாக்க உத்தி பயன்படுத்தப்பட்டது. அதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டப்பட்டார்.
சாதியொடுக்குதலில்
தனியொருவனின் சாகசங்களால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை; முரண்பட்டுக்கொள்ளும் இரண்டு
சாதிக்குழுக்களும் தங்களின் பிடிவாதங்களைக் கைவிட்டுவிட்டு எதிரெதிரே அமர்ந்து பேசுவதின்
வழியாக இணக்கமான வாழ்க்கையை முன்னெடுக்க முடியும் எனப் புதிய பரியனை – நடைமுறையைப்
புரிந்துகொண்ட பரியேறும்பெருமாளை முன்வைத்த மாரி செல்வராஜ், கர்ணன் என்னும்
சாகசக்காரனை முன்வைக்க நினைத்தது ஏனென்ற கேள்வி எழுப்பினால், கிடைக்கும் பதில் வணிக
வெற்றி தான் நோக்கம் என்பதும், அதற்கு நட்சத்திர நடிகரின் தேர்வும், அவருக்கேற்பப்
பாத்திர வடிவமைப்பும் என்பது பதிலாக அமையும்.
மாரி செல்வராஜ், தனது
முதல் படத்தில் நட்சத்திரச் செல்வாக்குள்ள நடிக, நடிகையர்களை எதிர்பார்க்காமல், கதை,
காட்சி அமைப்புகள், நம்பகத்தன்மைகொண்ட நிகழ்வுக்களம் எனப் படத்தை உருவாக்கினார். இரண்டாவது படத்தில் தலைகீழான மாற்றத்தைச் செய்துகொண்டு
ஒரு வெற்றிப்படத்தைத் தந்தார். சின்னச் சின்ன நிகழ்வுகளால் மனக்கொதிப்படைந்த திரட்சியின்
வெளிப்பாடான உரிமைப் போராட்டத்தைத் தனியொருவனின்
அடிதடிச் செயலாக -சாகசத்தின் விளைவாக ஏன் மாற்ற வேண்டும். அந்த மாற்றத்தின் பின்னால் இருப்பதும் நாயக பிம்ப
உருவாக்கமே. அது நடக்கும்போது இயக்குநரின் இடம் காணாமல் போவதைப் பற்றி இயக்குநர்கள்
கவலைப்படுவது இல்லை. வணிக வெற்றியையே முதன்மையாக நினைக்கிறார்கள்.
தனுஷ் நடித்துக்
கடைசியாக வந்த படம் ஜகமே தந்திரம் (2021). ஈழப்போராட்டம், அகதிகளாக ஐரோப்பிய
நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்ற பின்னணியைக் கொண்ட படம். ஈழத்தமிழர்கள்
அங்கிருக்கும் குற்றக்குழுக்களுக்குப் போட்டியாக - இணையாக இயங்கும் குற்றக்குழுவாகச்
செயல்படுகிறார்கள் எனவும், குற்றச்செயல்களின் மூலம் சம்பாதிக்கும் பணம் மற்றும் தொடர்புகள்
வழியாக அகதிகளுக்கு உதவிசெய்தல் – தாய்நாட்டு போராட்டக் குழுக்களுக்கும் உதவிசெய்தல்
எனக் காட்சிகள் அமைக்கப்பட்ட படம்.
கார்த்திக் சுப்புராஜின்
முதல் படம் பீட்சா 2012 இல் வெளிவந்தது. நிகழ்கால வாழ்க்கையோடு தொடர்புடைய கதைக்களன்,
வித்தியாசமான கதைசொல்லல், இயக்குநரின் நோக்கமறிந்து நடித்த நடிகர் விஜய் சேதுபதியின்
ஈடுபாட்டுடன் கூடிய நடிப்பு ஆகியவற்றிற்காகப் பலரது விருப்பங்களைத் தனதாக்கிக் கொண்ட
படம். வெளிவந்த ஆண்டுக்கான விகடன் குழும விருது, விஜய் தொலைக்காட்சிக்குழும விருது,
சிறந்த புதுமுக இயக்குநர் விருது என மூன்று விருதுகளைப் பெற்றதின் மூலம் முதல் படத்திலேயே
கவனிக்கப்பட்ட இயக்குநர் ஆனார் கார்த்திக் சுப்புராஜ். அதனைத் தொடர்ந்து அவரது இரண்டாவது
படமான ஜிகிர்தண்டாவும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில்லாமலேயே காட்சி அமைப்புகள்,
கதைசொல்லல் முறை போன்றவற்றினாலேயே கவனத்தைப் பெற்றது. அவ்விரண்டு படங்களும் இயக்குநரின் படங்களாக அறியப்பெற்றவை.
ஆனால் கடைசியாக வந்த ரஜினிகாந்த் நடித்த பேட்டவும், ஜகமே தந்திரமும் நடிகர்களின்
படங்களாக அறியப்பெற்றன. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது இயக்குநர் இடம் இல்லாமல்
போனது பற்றிக் கவலைப்படப் போவதில்லை. அவர் முன்னால் வணிகவெற்றிப் பட இயக்குநர் என்ற
கவர்ச்சியான பிம்பம் இருக்கிறது. இதுதான் இலக்கென்றால் இயக்குநர் மையம் காணாமல் போய்விடும்.
தங்களின் தொடக்கநிலைப்படங்களில்
சினிமாவின் அழகியல் மற்றும் தொழில் நுட்ப உத்திகளில் தேர்ச்சி காட்டி, இயக்குநர் அடையாளங்களை
உருவாக்கிக் கொண்ட வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் என்ற
திறமையானவர்கள், தனி மனித சாகசங்களைக் கொண்ட மையப்பாத்திரத்தை உருவாக்கி, அதற்கு வணிக
சினிமாவின் சூத்திரங்களை உண்டாக்குவதின் மூலம் தங்களின் அடையாளத்தை விரும்பியே தொலைத்திருக்கிறார்கள்.
அவர்களால் நிகழ்கால அரசியல் தளச்சொல்லாடல்களை உருவாக்கி விமரிசனப் பார்வையைப் படங்களுக்குத்
தரமுடிகிறது என்பது கூடுதல் தகுதியாக இருக்கிறது. அசுரனும், கர்ணனும் தலித் அரசியல்
பின்னணியில் விவாதங்களைத் தனதாக்கிக் கொண்டன. ஜகமே தந்திரம், ஈழப்போராட்டம் மற்றும்
புலம்பெயர் அகதி என்ற பின்னணியில் கவன ஈர்ப்பைப் பெற்றுக்கொண்ட து.

கருத்துகள்