தனித்திருத்தலின் உளச்சிக்கல்களை எழுதும் தீபு ஹரியின் இரண்டு கதைகள்


மகளிர் நிலை, பெண்கள் பங்களிப்பு எனப் பேசிக்கொண்டிருந்த காலகட்டம் தாண்டிப் பெண் இருப்பு, பெண் தன்னிலை உணர்தல், பெண் சமத்துவம் கோருதல், பெண்களின் தனித்துவமான உரிமைகள், பெண் தலைமை தாங்குதல் போன்ற கலைச்சொற்கள் விவாதச் சொல்லாடல்களாக நுழைந்ததுடன் பெண்ணியத்தின் வருகையின் அடையாளங்கள் உருவாகின. அந்தச் சொல்லாடல்கள் அதிகமும் வரலாற்றுக் காரணங்களையும் சமூகவியல் காரணங்களையும், பொருளியல் உறவுகளையுமே முதன்மைப்படுத்தி விவாதித்தன; விவாதிக்கின்றன. அவ்விவாதங்கள் ஒவ்வொன்றும் சமூக நகர்வின் காரணங்களைத் தர்க்கரீதியாக முன்வைக்கின்றன. அப்படி முன்வைக்கும்போது இயல்பாகவே பாலின எதிர்வுகளும் வந்துவிடும்.

அளவியல் மற்றும் புள்ளியல் அடிப்படையிலான காரண காரியங்களைப் பேசும்போது பால் அடையாளம், பாலினப்பாகுபாடு போன்ற கலைச்சொற்கள் அதிகமும் உதவியாக இருக்கும். பால் அடையாளத்தை முன்வைத்துப் பேசுபவர்கள் பெண்ணுடல், ஆணுடலைவிட வலிமை குறைந்தது என்ற கருதுகோளின் பேரில் விவாதங்களை முன்வைத்தனர். உடல் வலிமை குறைவு காரணமாக ஆணோடு போட்டியிட முடியாதவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள் என்ற வாதம் முதன்மை வாதமாக அமையும். ஒருவேலையைப் பெண்கள் செய்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் சக்தி வெளிப்பாடு கூடுதல் என்பது அதன் பின்னிருந்த காரணங்கள்.

மைய நீரோட்ட விவாதங்களில் தொடர்ச்சியாகவும் முதன்மையாகவும் இருந்த சமூகவியல் காரணங்களின் மீது இடையீடு செய்த அறிதம் முறை உளப்பகுப்பாய்வு முறைகளாகும். வரலாற்றாய்வும் சமூகவியல் ஆய்வும் செய்வதுபோலக் கூட்டத்தை – அதன் செயல்பாடுகளைத் தரவாக எடுத்துக்கொள்ளாமல், ஒவ்வொன்றையும் விவாதிப்பதற்குத் தனிமனிதர்களைத் தனித்தனி அலகுகளாகக் கருத வேண்டும் என்ற அடிப்படையில் முடிவுகளை உருவாக்குவது உளவியல் என்னும் அறிவுத்துறை கடைப்பிடிக்கும் ஆய்வுமுறையியல்.

ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களின் ஒவ்வொரு நடத்தைகளின் பின்னணியிலும் எதிர்ப்பால் மீதான ஈர்ப்பு காரணமான பாலியல் விழைவுகளும், அதன் தொடர்ச்சியான பாலியல் நடவடிக்கைகளுமே மனிதர்களை இயக்குகிறது என்பது உளவியல் அடிப்படைப் பாடம்.அவ்வியக்கம் எப்போதும் பொதுத்தளக் கருத்தியல் கட்டமைப்புகளை மீறுவதை மறைமுக நடவடிக்கையாகச் செய்கிறது. செய்துவிட்டுப் பின்னர் அதனைக் குற்றநடவடிக்கையாக நினைத்துக் குழம்புகிறது. அக்குழப்பத்தின் வெளிப்பாடுகளே குற்றமனம் சார்ந்த தனிமனிதச் சிக்கல்களாக மாறுகின்றன என நீட்டிப்பதும் உளவியல் புரிதல்களே.

இவ்வெளிப்பாடுகள் நேரடியாக வெளிப்படுவதற்கும் மாறாகக் குழப்பங்களாகவும் செயலின்மையாகவும் வெளிப்படக்கூடும். அதனால் அவற்றை உடனிருப்போர் மனச்சிதறலாகவும், மனநோயின் ஒரு பகுதியாகவும் கருத நேரிடுகிறது. அம்மனநோயின் அறிகுறிகள் கனவுகளாகவும் உடன் இருப்பவர்களை மறந்துவிடக் கூடியவர்களாகவும் வெளிப்படும். அதனை அவர்களே உணரவும் செய்வார்கள்; மறக்கவும் செய்வார்கள். தனக்கு மற்றவர்களைவிடக் கூடுதல் சக்தி இருப்பதாகச் சில நேரங்களில் நினைப்பதுண்டு; சில நேரங்களில் மற்றவர்களுக்கு இருக்கும் பொதுவான விருப்பங்களும் ஆசைகளும் தனக்கு இல்லை என்பதான தாழ்வுமனப்பான்மையில் தவிப்பதும் உண்டு. பொதுவாகத் தனது உடல் மீதான கேள்விகளால் அலைவுறும் மனம் கொண்ட இவ்வகை மனிதர்களைக் குறித்து உளவியல் மருத்துவ அறிவியல் விரிவாகப் பேசுகின்றது.

தனிமனிதர்களின் இவ்வகையான நடவடிக்கைகளை மருத்துவத்தின் பகுதியாகக் கருதி நோய்த்தடுப்பு முறைகளையும் மருந்துகளையும் பரிந்துரைத்துச் சரி செய்ய முடியும் எனவும் நம்புகிறது. மருந்துகள் மற்றும் உரையாடல்கள் வழியாக உடலையும் மனத்தையும் அதன் இருப்பிலிருந்து விலக்கி இப்போதிருக்கும் நிலைக்கு முந்திய நிலைக்கோ, அல்லது வேறு வெளியில் இருக்கும் நிலைக்கோ நகர்த்திக் கொண்டு போவதின் மூலம் இன்னொரு திசைக்குத் திருப்பிக் கொண்டுவந்துவிடலாம் என்றும் நம்புகிறது. ஆலோசனைகளை வழங்குகிறது.

உளவியல் அறிவின் ஆரம்பநிலைக் கருத்துகளைச்சொன்னசிக்மண்ட் ப்ராய்டின் கண்டுபிடிப்புகள் மீது பெண்ணியவாதிகள் உரையாடல்கள் செய்துள்ளார்கள். உளப் பகுப்பாய்வு என்பது எப்போதும் ஒரு மயக்கமான கோட்பாட்டை முன்வைக்கிறது. ஒருவரது பாலியல் மற்றும் அகநிலைத்தன்மையை தவிர்க்க முடியாமல் ஒன்றாக இணைக்கிறது. அவ்வாறு செய்யும்போது, அவரது தன்னுணர்வும், சமூக அமைப்புகளின் மீதான பற்றும் இணைந்துகொள்ளும். இதனை உள்வாங்கித் தன் கருத்துகளை முன்மொழிந்த சிக்மண்ட் ப்ராய்ட், ‘பெண் புதிர்’ (riddle of feminity)என்ற சொல்லைப் பயன்படுத்தி விவாதிக்கிறார் பெண்களின்

பிரச்சினை (Problem) யைத் தனித்துவமான விழைவு மற்றும் ஆசைகளின் கூட்டிணைவாகவும், ஹிஸ்டீரியா நோயின் வெளிப்பாடுகளாகவும் கருதி முன்வைத்த கருத்துகள் பெண்ணிய விவாதங்களின் பகுதிகளாக மாறிய காலகட்டத்தில் ஐரோப்பாவில் பிரெஞ்சுப் பெண்ணிய அலை வீசிக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் பெண்ணியம் மற்றும் உளப் பகுப்பாய்வு ஆகியவற்றுக்கு இடையேயான எந்தவொரு கூட்டணியும் ஒருவிதத் துரோகத்தனத்தோடு இணைக்கப்பட வேண்டும் என முன்வைத்த கருத்துகளைப் பிரெஞ்சுப் பெண்ணியலாளர்கள் ஏற்றுக்கொண்டு கருத்துகளை முன்வைத்துள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் ஜூலியா கிறிஸ்தா
பெண்களைத் தனியான அலகாக வைத்துப் பரிசீலனை செய்ய வேண்டும் எனப் பேசிய உளவியல் அறிவின் நிலைபாடுகளை உள்வாங்கித் தமிழில் புனைகதைகள் எழுதப்பெற்றுள்ளன. அப்படி எழுதப்பெற்றுள்ளனவை பெரும்பாலும் ஆண்களால் எழுதப்பெற்றவைகளாக இருக்க, ஒன்றிரண்டு புனைகதைகளைப் பெண்களும் எழுதியிருக்கிறார்கள். ஆர்.சூடாமணி, காவேரி போன்றவர்களின் கதைகளில் உளவியல் விவாதங்களை முன்னெடுக்கும் பெண் பாத்திரங்களைப் படிக்க முடிகிறது. அதே போல் அவர்களின் நடவடிக்கைகளை விளக்க உளவியல் முன்மொழிவுகளைப் பயன்படுத்தவும் முடியும். இவர்களல்லாமல், அண்மையில் வாசித்த ஒரு எழுத்தாளர் – புதிதாக எழுத வந்துள்ள ஒருவரின் கதை முழுமையும் உளவியல் விவாதங்களைப் பேசுவதற்கான கதையாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழினி(ஆகஸ்டு, 17, 2019) என்னும் இணைய இதழில் வாசிக்கக் கிடைத்த மித்ரா என்னும் கதையை எழுதியவரின் பெயர் தீபுஹரி. கதையின் தொடக்கப் பத்தியே உளவியல் சிக்கலை விவாதிக்கப் போகும் கதை என்பதை உறுதிசெய்யும் வரிகளைக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கிறது. று அளவில் ஒவ்வொரு நிலைபாட்டின் மீதும் வேறுபாடுகள் கொண்டவர்களாக இருந்தபோதிலும் ஒவ்வொரு நிலைகளிலும் முக்கியமான விவாதங்களை உருவாக்கியுள்ளனர் .

மித்ரா இறந்து போயிருந்தாள். ஆனால் அது கனவிலா, நிஜத்திலா என்று தெரியவில்லை. அவளுக்குச் சமீப காலமாக, பல நேரங்களில் தன்னுடைய இருப்பு குறித்து நிறைய சந்தேகங்கள் வருகின்றன. தன்னுடைய இருப்பு என்பது நிஜ உலகத்தில் இருக்கிறதா, இல்லை தான் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் உயிரினமா என்ற கடுமையான சந்தேகம் அவளுடைய மூளையை அரித்துக் கொண்டிருந்தது. பெரும்பாலான நேரங்களில் அவளால் கனவுக்கும் உண்மைக்குமான வேறுபாட்டை இனம் பிரித்துக் காண முடியவில்லை.

வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கும் இந்தத் தொடக்கத்தைக் கொண்டு தொடங்கிய கதை,

அதன் பின் நெடுநேரம் உரையாடி முடித்து அவளை மீண்டும் உள்ளே அழைத்துச் செல்ல நிர்மலன் வெளியே வந்த போது, மித்ரா அந்தப் பெரிய அமைதியான வரவேற்பறையில் தன்னுடைய பெயர் திரும்ப அழைக்கப்படுவதற்காக, அவள் அம்மாவின் தோளில் தலை சாய்ந்தபடி காத்திருந்தாள்.

என நோயாளியாக மருத்துவமனையில் காத்திருந்தாள் என முடிகிறது. இந்த த்தொடக்கத்திற்கும் முடிவுக்கும் இடையில் அவள் தன்னை – தனது இருப்பைக் கனவாகவும் நிஜமாகவும் மாறிமாறி நினைத்துக்கொள்வதற்கான காரணங்களை முன்னும் பின்னுமாக நகர்த்திச் சொல்கிறது.

ஆரம்பத்திற்குப் பிறகு, தொடர்ந்து எழுதப்பட்டுள்ள பத்திகளின் விவரணைகள் மித்ராவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் விவரித்து சிதறல் மனங் கொண்டவளின் நினைப்புகளாக விவரித்து விடுகிறது. மொத்தத்தில் கதையின் மையப்பாத்திரமான மித்ராவின் எண்ணங்களும் அதன் விளைவுகளுமே கதையின் விவாதங்கள் என்ற குறிப்பைத் தரும் விவரிப்புகள் அவை. மித்ராவே தன்னையொரு சிதறல் மனநிலையில் இருக்கும் நபராக நினைத்துக்கொண்டு மருத்துவரை நாடவேண்டும் என நினைக்கிறாள். தன்னைத் தனது கணவன் நிர்மலன் கண்காணிக்கிறான்; கொலைசெய்துவிடுவானோ என்ற ஐயம் தோன்றிக்கொண்டே இருக்கிறது; இது வெறும் ஐயம் தான். அந்த ஐயத்திலிருந்து விடுபட உதவ வேண்டும் உடன் பணியாற்றும் மதியிடம் உதவி கேட்கிறாள். அவர்களிடையே நடக்கும் அந்த உரையாடல் இது:

அலுவலக இடைவேளையில், மித்ரா, மதியிடம் இதைப் பற்றிக் குறிப்பிட்ட போது, அவன் இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் குழம்பினான். “சும்மா கண்டதையும் யோசிக்காதே, உன்னைக் கொல்ல என்ன மோட்டிவ் இருக்கு நிர்மலனுக்கு?” என்று சமாதானம் கூறினான். மேலும் ஒரு பிரபலமான மனநல மருத்துவர் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு, தன்னால் இந்த வார இறுதியில் அவரிடம் அப்பாய்ன்மெண்ட் வாங்க முடியும் என்றும், மித்ரா விரும்பினால் அவளை அங்கே அழைத்துப் போவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறினான். மித்ரா ஒரு புன்னகையோடு அதை மறுத்துத் தலையசைத்தபடி தன்னுடைய கேபினுக்குத் திரும்பினாள். அவளுடைய படுக்கையறையில் சிறிய சிறிய காமெராக்களைப் பொருத்தி நிர்மலன் அவளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதையும் அவளுடைய முகநூலையும் வாட்ஸப் செயலியையும் அவன் உளவு பார்த்துக் கொண்டிருப்பதையும் பற்றி அவனிடம் சொல்லாதது குறித்து அவளுக்கு ஓர் ஆறுதல் உண்டாயிற்று. யார் கண்டது? இப்போது இவன் கூட அவனுடைய ஆளாக மாறியிருக்கலாம். தான் அலுவலகத்தில் என்ன செய்கிறோம், யார் யாரிடம் பேசுகிறோம், எங்கே போகிறோம் என்பதை எல்லாம் இப்போது நிர்மலனுக்குச் சொல்வது இவனாகக் கூட இருக்கலாம். மித்ராவுக்கு திடீரென்று தன்னைச் சுற்றி இருக்கிற எல்லோர் மேலும் சந்தேகம் வந்தது. தன்னை இவர்கள் எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருப்பது போலவும், தனக்கு எதிராக ஏதோ செய்ய அனைவரும் திட்டமிடுவது போலவும் உணர்ந்தாள். அது அன்றைய நாள் முழுவதும் அவளுடைய அமைதியைக் குலைத்தபடி இருந்தது.

தன்னுடைய இருப்பை எப்போதும் உண்மையல்ல என்று நினைத்துக்கொள்வதின் காரணங்களைத் தேடும் மித்ரா, தொடர்ச்சியாக மனநல மருத்துவத்தின் துணையை நாடுபவளாக இருப்பதாகக் கதை நகர்த்தப்பட்டுள்ளது. இணையம் வழியாகத் தனது பிரச்சினைகளையொத்த சிக்கல்களில் இருப்பவர்கள் எவ்வாறு அன்றாட வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என்று தேடுகிறாள். முடிவில் தானே ஒரு மருத்துவரை நாடிச் சென்று விநோதமாக எதுவும் பேசாமல் திரும்பும் சூழலை விவரிக்கும் கதை, ஒரு உச்சநிலையைக் காட்டுகிறது.

“நீங்கள் உள்ளே வந்து அரைமணி நேரமாகி விட்டது. நீங்கள் உங்களுடைய பிரச்னையைச் சொன்னால் தான், உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்று என்னால் யோசிக்க முடியும்” என்று மறுபடியும் கூறி மித்ராவை நோக்கிப் புன்னகைத்தார் மருத்துவர்.


மித்ரா மீண்டுமொருமுறை உதட்டை ஈரப்படுத்திக் கொண்டாள்.


சிறிது நேரத்திற்குப் பிறகு, “எனக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. எதுவும் பேசாமல் இங்கேயே இப்படியே உட்கார்ந்து இருக்க வேண்டும் போல இருக்கிறது” என்றாள்.


மித்ரா, தனது பிரச்சினைகளுக்கான காரணங்கள் தூக்கமின்மையில் இருப்பதாக நினைக்கிறாள். அதற்கான மருத்துவ ஆலோசனைகளும் மருந்துகளுமே அவளது எதிர்பார்ப்பு. ஆனால் உளவியல் மருத்துவம் அவ்வாறு எல்லையைச் சுருக்கிக் கொள்வதில்லை. இதுபோன்ற சிக்கல்களின் பின்னணியில் நிறைவேறாத பாலியல் விருப்பங்கள் இருக்கக்கூடும் என்பது அதன் கணக்கு. அதனை அறியும் பொருட்டு மித்ராவின் கணவனும் அவளது அம்மாவும் விசாரிக்கப்படுவதாகக் கதை நகர்த்தப்படும்போது, விவாதம் என்பதைத் தாண்டி கதைக்கான இன்னொரு திசை உருவாகிறது. தங்கள் குடும்ப வழியிலும் மித்ராவின் கணவன் நிர்மலனின் குடும்ப வழியிலும் இதுபோன்ற மனச்சிக்கல்கள் கொண்ட எவரும் இருந்ததில்லை என்று தெரிகிறது. இருவருமே அதை உறுதிசெய்கிறார்கள். அதேபோல் நிர்மலனும் செக்ஸ் விசயத்தில் அவளிடம் அதீதமான விருப்பமோ, வெறுப்போ இல்லை. பொதுவான ஈடுபாடு கொண்டவளாகவே இருக்கிறாள் என்பதை உறுதி செய்கிறான். அப்படியானால் இவளைப் பாடாய்ப்படுத்தும் மனச்சிக்கலுக்கான காரணம் எதுவாக இருக்கும் எனக் கேள்வி எழும்போது, மித்ராவின் அம்மா தரும் ஒரு நிகழ்ச்சி – அவளது படிப்புக் காலத்தில் விடுதியில் நிகழ்ந்த நிகழ்ச்சி அவளைக் குற்ற உணர்வுகொண்டவளாக மாற்றியிருக்கலாம் என்று ஊகிக்கிறார். மித்ராவின் தோழி கார்த்திகா கூறியதாக விவரிக்கப்படும் அந்நிகழ்வு:


யாரோ வரும் அரவத்தைத் தொடர்ந்து செருப்பைக் கழற்றி விடும் ஒலி. மித்ரா ஒரு சிறிய எதிர்பார்ப்புடன் எழுந்து அமர்ந்த போது, கார்த்திகா தடாலெனக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். மித்ரா சந்தோசமாகக் கூச்சலிட்டபடியே எழுந்து ஓடி அவளைக் கட்டிக்கொண்டு “கிடைச்சுதா? கொண்டு வந்தியா?” என சந்தோசம் கலந்த பதட்டத்தோடு அவளிடம் கேட்ட போது, அவள் சிரித்துக் கொண்டே அவள் கைப்பையை திறந்து, இரண்டு முழு அட்டை மாத்திரைகளை எடுத்து அவள் முகத்துக்கெதிரே ஆட்டிவிட்டுப் படுக்கையில் விசிறினாள். “இன்னிக்கு சீக்கிரம் சாப்டுட்டு ரூமுக்கு வந்துடலாம்” என அவள் சிரித்துக் கொண்டே சொன்ன போது , மித்ரா அவளை இழுத்து தன் மொத்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும்படியாக முத்தமிட்டு விட்டு, படுக்கையில் கிடந்த மாத்திரைகள் மீது ஆசையாக விழுந்தாள்.


அந்த மாத்திரைகள் – கலவிக்கிணையாக குதூகலத்தைத் தரும் போதை மாத்திரைகள் நினைவில் இருக்கிறதா? திரும்பவும் பயன்படுத்திக் குதூகலம் கொண்டதால் ஏற்பட்ட குழப்பமா? என்பதைக் கதையின் இறுதிப்பகுதியில் தருகிறார் கதாசிரியர்.


தனது திருமணத்திற்குப் பின் தனது கணவன் பிரிந்திருந்த நாட்களில் தான் இதுபோன்ற மனக்குழப்பங்கள் உருவானதாக காட்ட நினைக்கும் மித்ராவின் நோக்கம் என்ன? உண்மையில் அவனது பிரிவே அவளை இப்படியாக்கியதா என்பதாக முதலில் நினைக்க வைக்கிறது. ஆனால் அவளது பழைய விருப்பங்களை – போதை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் விருப்பங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதின் விளைவுகளே இந்த மனக்குழப்பத்திற்கான காரணம் என்பதோடு, அதனைத் தனது கணவனிடம் மறைக்க விரும்பும் குற்ற மனமே அதனைச் செய்கிறது என்பதைக் கதையின் திருப்பமாக வைத்துள்ளார். போதை மாத்திரையை அவளுக்கு இப்போது அறிமுகப்படுத்தியது அவளுடன் பணியாற்றும் மதி என்பதும், திருமணத்திற்குப் பின்னான சில வேலைகளில் நடந்துள்ளது என்பதும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே அவளது இருப்பும் நடப்பும் கனவா? நிஜமா? என்ற எண்ணம் தோன்றுகிறது. அதைக் கணவன் அறிந்துவிட்டால் ஏற்படும் விளைவுகளைக் கருதியே அதனை மறைக்க முயல்கிறாள். தனக்கு இருக்கும் போதைப் பழக்கத்தை- மாத்திரைகளை எடுத்துக்கொண்டு தனது உடலை இன்மையாக ஆக்கிக் கொள்ளும் உச்சநிலையைக் கணவனிடம் மறைக்க முயலும் தவிப்பே மொத்தச் சிக்கலும் என்பதாகக் கதை எழுதப்பட்டுள்ளது. அதற்காக முதலில் கணவன் நிர்மலனின் தவிப்பை முன்வைக்கிறார். அதன் பின்பு அலுவலக நண்பன் மதியோடும் சில தோழிகளோடும் களித்திருந்த காட்சிகளையும் எழுதிக் கதையை முடிக்கிறார்:


ஊர் திரும்ப வெறும் மூன்று நாட்களே இருந்த நிலையில், ஒரு நாள் நள்ளிரவில் மித்ரா தொலைபேசியில் அழைத்து, “நிர்மலன் நீ ரொம்ப நல்லவன் தான். ஆனாலும் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. நாம் ரொம்பத் தவறான முடிவை எடுத்து விட்டோம். நீ நான் நினைக்கிற மாதிரியான ஆள் இல்லை. இதோ இப்போது கூட ஒரு பறவையாக மாறி இந்த மொட்டை மாடிச் சுவரில் இருந்து விர்ரென்று பறந்து போய் விட நினைக்கிறேன். நீ இப்படியெல்லாம் எப்போதாவது நினைத்திருக்கிறாயா? இல்லையென்றால் நாம் கண்டு முடித்த பிறகு கனவுகள் எல்லாம் எங்கே போகின்றன என்றாவது யோசித்திருக்கிறாயா?” என்று ஏதேதோ கேட்டாள். எனக்கு ரொம்ப பயமாகி விட்டது. இத்தனை நாட்களில் அவள் ஒருமுறை கூட இப்படிப் பேசியதில்லை.


நான் பதறிப் போய் அவளிடம், “இப்போது நீ எங்கே இருக்கிறாய்? உன் பக்கத்தில் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டதை எல்லாம் அவள் பொருட்படுத்தவே இல்லை. “ஆனால் உனக்குத் தெரியுமா? இப்படியெல்லாம் மௌனி யோசித்திருக்கிறார், பிராய்ட் யோசித்திருக்கிறார். ஆனால் என் விதி நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டேன்” என்று சொல்லிச் சிரிக்கிறாள். யோசித்துப் பாருங்கள் நான் குர்கானில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன்.


அடுத்த நாள் காலையில் அழைத்தால் எதுவுமே நடக்காத மாதிரி, “ஏன் இப்போவே வர, அதான் இன்னும் மூணு நாள் இருக்கில்லே” என்கிறாள். இரவு பேசிய ஒரு வார்த்தை கூட அவளுக்கு நினைவில்லை. இப்படி ஒன்று நடந்தது என்பதை அறியாதவள் போலவே என்னிடம் பேசினாள்.


இது நிர்மலனின் தவிப்பு.

லெனோரா இந்த முறை எந்த மாத்திரையையும் ஆல்ஹகாலில் கலந்து முயற்சிக்க வேண்டாம் என்று உறுதியாகக் கூறிவிட்டாள். அவளுக்கு போனமுறை வினோத் சுய நினைவு தப்பி ஆறு மணிநேரங்கள் விழிக்காமல் கிடந்தது பயத்தை ஏற்படுத்தி விட்டது. மித்ராவுக்கும் வினோத்துக்கும் இதில் பெரிய விருப்பம். என்ன மாத்திரையை எவ்வளவு டோஸ் எடுத்தால் யூஃபாரிக் மனநிலை (Euphoric) வரும், எந்தெந்த ஜெனிரிக் மருந்துகளில் எவ்வளவு சதவிகிதம் ஓப்பியாய்ட் வகை மருந்துகள் சேர்த்தப்பட்டு இருக்கிறது என்பது போன்றவற்றைத் தெரிந்து கொள்வதில் ஒரு பெரிய சுவாரஸ்யம். இருமல் மருந்துகள், மன அழுத்தத்தைக் குறைக்கத் தயாரிக்கப்படும் மாத்திரைகள், வலி நிவாரணிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இல்லிஸிட் ட்ரக்ஸ் (llicit Drugs) எனப்படும் பல நாடுகளில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் இந்தியாவில் எந்தெந்த நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளில் எவ்வளவு சதவிகிதம் பயன்படுத்தப்படுகிறது என்பதெல்லாம் இருவருக்கும் புள்ளிவிவரமாகத் தெரிந்திருந்தது. சென்னையில் மருத்துவரின் பரிந்துரைகள் எதுவும் இல்லாமல் கேட்கும் மருந்துகளைக் கொஞ்சம் அதிக விலைக்குக் கொடுக்கும் சில கடைகளையும் இவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். ஒரு முறை சிகரெட் பழக்கத்தை விடுவதற்காக கொடுக்கப்படும் மாத்திரைகளை உபயோகித்த போது, அது கொடுத்த மனக்கிளர்ச்சியில் மித்ரா கலவிக்கு நிகரான போதையை இது தனக்கு அளிப்பதாக டீபாய் மீது ஏறி நின்று அறிவித்தாள்.

இது மித்ரா மறைக்க நினைத்த நினைப்பு.

கணவனால் கண்காணிக்கப்படுகிறோம் என்ற நினைப்பில் இருக்கும் அவள், அவளை ஒவ்வொரு ஆணும் கண்காணிக்கிறார்கள் என்றே நம்புகிறாள் என்று நினைக்கிறாள் என்பதை உறுதி செய்வதற்காக திருமணத்திற்குப் பின்னான மருத்துவ ஆலோசனை வழங்கிய மருத்துவரைச் சந்தித்த நிகழ்ச்சியையும் இந்த மருத்துவரிடம் கூறுகிறான். அவர் அவளைப் புரிந்துகொள்ளவில்லை என்றும், அதிக மாத்திரைகளைக் கொடுத்து என்னைக் குற்றமனத்திற்குள் தள்ள நினைக்கும் அவர் ஒரு ஆணாதிக்கம் நிரம்பியவர் எனக் குற்றம் சுமத்தியவர் என்பதையும் மருத்துவரிடம் கூறித் தன் மனைவி மித்ராவைத் திரும்பக் கிடைக்கச் செய்யும் முயற்சியில் இருந்தான் என்பதையும் கதையின் முடிவாக வைக்கிறார்.

புனைகதைகளின் பொதுத்தன்மைகளாக நிகழ்வுருவாக்கம், பாத்திர முன்வைப்பு, வெளி வருணனை போன்றன அமையும். மையப்பாத்திரமோ அதனோடு தொடர்புகொள்ளும் மற்ற பாத்திரங்களோ ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளால் இணைக்கப்பட்டுக் கதை வடிவம் கொள்ளும் விதமாக எழுதப்படுவது தமிழ்ச்சிறுகதைப்பரப்பில் அதிகம் கிடைக்கும் வடிவங்கள். ஆனால் உளவியல் விவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டுள்ள மித்ரா கதை அந்த வடிவங்களை உதறிவிட்டுச் சில வகையான சந்திப்புகள் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் நகர்கிறது. அவளுக்கு இருக்கும் சந்தேகம் அவள் கணவன் மீதுதான். அவனைக் கணவனாக நினைக்காமல் தன்னைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பவனாக நினைக்கிறாள். அப்படி நினைப்பது அவளே உருவாக்கிக் கொண்ட மனப்பிரம்மை. அப்பிரம்மைக்குக் காரணம் அவளது அலுவலக நண்பன் அறிமுகப்படுத்திய போதை உலகம். அந்த உலகம் புதியதுகூட அல்ல. அவளின் பதின் வயதுக்காலத்தில் அறிமுகமான ஒன்றுதான். பாலியல் சார்ந்தோ, அல்லது அதனையொத்த வேறுவிதமான குற்றநிகழ்வுகளிலோ ஈடுபட்ட மனம் எப்போதும் திரும்பவும் அதை நினைவுபடுத்திக் கொண்டு அதனை நாடிச் செல்லும்; அதே நேரத்தில் அதிலிருந்து விலகிவிடுவும் நினைக்கும். அந்த இரட்டை நிலையே ஒவ்வொருவருடைய இருப்பையும் கனவா? நிஜமா? என்ற கேள்விக்குள் தள்ளிவிடும். இந்த உளவியல் சிக்கலை எழுதிய இந்தக் கதையில் இடையிடையே உளவியலாளர்களின் மேற்கோள்கள் ஆங்கிலத்திலேயே தரப்பட்டுள்ளதின் காரணங்கள் ஏனென்று தெரியவில்லை. அம்மேற்கோள் கதையின் முதல் வரியாகவும் இடையிடையேயும் இடம் பெற்றுள்ள வரிசையிலேயே கீழே தரப்பட்டுள்ளது.


“People don’t have ideas, ideas have people.” – Carl Jung

“All are lunatics, but he who can analyze his delusion is called a philosopher.” – Ambrose Bierce

Reality is just a crutch for people who can’t handle drugs.” – Robin Williams

Where does a thought go when it’s forgotten?” – Sigmund Freud


இம்மேற்கோள்கள் இடையிடையே தோன்றி வாசிப்பது புனைகதையல்ல; ஒரு விவாதக் கட்டுரை என்பதின் அருகில் நகர்த்துகின்றன. உளவியல் சிந்தனைகளை முன்வைத்து அதனை விளக்குவதற்கான நிகழ்வுகளும் காட்சிகளும் கோர்க்கப்பட்டுள்ளன என்பதை உருவாக்காமலேயே இந்தக் கதை வாசிக்கத் தக்க கதையாக எழுதப்பட்டிருக்கலாம். அத்தோடு பெண் மனச்சிக்கலுக்கு ஆணைக்காரணமாக்காமல், அவளுக்குள்ளேயே மறைக்கப்பட்ட உண்மை இருந்தது என உளவியலின் அடிப்படைப் பார்வையை முன்வைத்த கதையாகவும் கவனிக்கப்படும் கதையாக இருக்கிறது.


தேன்கூடு


இதுபோன்ற கதைகளை வாசிக்கும்போது வாசிப்பவர்களின் அனுபவங்களில் ஏதாவதொன்று நினைவுக்கு வந்துவிடும். அப்போது அந்தக் கதை வாசிப்பவர்களின் கதையாக ஆகிவிடும். கதைசொல்லியோடு சேர்ந்து, அவரின் நியாயங்கள் எல்லாவற்றையும் வாசிப்பவர்களின் நியாயங்களாக ஆக்கி, இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொன்றும் நமக்கு மட்டும் எதிராக இருக்கின்றன என்று நினைக்கத் தோன்றிவிடும். நான், எனது, எனது மனநிலை, எனது இருப்பு என்ற எல்லைக்குள் யாரும், எதுவும் நுழைந்துவிடக் கூடாது; அனுமதிக்க முடியாது என்று பிடிவாதமான மனிதர்களின் பாடுகளாக விரிந்துவிடும். பூச்சிகள், விலங்குகள், தூசிகள் போன்றவற்றின் மீது உண்டாகும் அசூயையும் வெறுப்பும், அந்நியர்கள் மீதும் திரும்பிவிடக்கூடும். அப்படித் திரும்பும்போது கதை, தனிமனித வாதத்தின் உச்சமான வெளிப்பாட்டுக் கதையாக முடிந்துவிடும்.

“என்ன ரஞ்சனி இது அபசகுணம், சுபசகுணம்னு பேசிகிட்டு. எங்க வீடு கட்டினாலும் ஏதோ ஒரு பிரச்சினை வந்துட்டுத்தான் இருக்கும். நீ எல்லாத்தையும் அதிகமா யோசிச்சு, யோசிச்சு சிக்கலாக்கிக்கறே. நான், பாப்பா எல்லோரும் இதே வீட்ல உன் கூடவேதான் இருக்கோம். நாங்க இப்பவும் ஹால்ல உட்கார்ந்து டிவி பார்க்கலையா? எங்களுக்கு மட்டும் பயமோ, கவலையோ இல்லையா? அதுங்க எந்த வழிலேயும் வீட்டுக்குள்ள வராதபடி நல்லா அடைச்சாச்சு. ”

என ஆறுதல் சொல்ல ஆட்கள் இருந்தபோதும், வீட்டுப் பால்கனியில் தேனீக்கள் கட்டிய தேன்கூட்டைப் பார்த்து அச்சமும் பதற்றமும் அடைந்த ரஞ்சனியைக் கதைசொல்லியாக்கி, தேன்கூடு கதையை எழுதியுள்ள தீபுஹரி, மனித மையவாதத்தை முன்வைக்கும் கதையை எழுதுபவர் என்ற விமரிசனம் வரும் என்ற ஆபத்தை உணர்ந்து, அதனை விவாதப்பொருளாக்கவும் செய்கிறார். இந்த இயற்கையும் அதன் உருவாக்கங்களும் மனிதர்களுக்கு மட்டுமல்ல; மற்ற உயிரினங்களுக்கும் - விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்துக்கும் உரியன என்ற பார்வையும் வாதங்களும் இருக்கின்றன என்பதை அறிந்த/உணர்ந்து, கதை சொல்லியின் நிலைபாடு இது என்பதாகக் கதைக்குள்ளேயே விவாதிக்கிறார். கதைக்குள் இடம்பெற்றுள்ள பின்வரும் உரையாடல் அதனை முன்வைக்கிறது.

”அன்னிக்கு கேரளாவில ஒரு ஆள் வயத்தில குட்டியோட இருந்த யானையை சுட்டுக் கொன்னப்போ நான் இதைத்தான சொன்னேன். ஒருவேளை சுட்டவனுக்கு அதோட வயித்தில் குட்டி இருந்தது தெரியாம இருந்திருக்கலாம். இல்லேன்னா அவன் வாழ்வாதரமான பயிர்களை அழிச்சிடுச்சேன்னு ஒரு ஆவேசத்துல யோசிக்காம சுட்டு இருக்கலாம். அப்போ எப்படி என்கிட்ட சண்டை போட்ட நீ!”

“டேய் அதுவும் இதுவும் ஒன்னா? இப்போ எதுக்குடா நீ எனக்கு கால் பண்ணினே? நான் என்னென்ன தப்பு எப்பெப்போ செஞ்சேன்னு சொல்லிக்காட்டவா? நா கெட்டவளாவே இருந்துட்டுப் போறேன் விடு. என் நிம்மதி எனக்கு முக்கியம். போயும் போயும் உன்கிட்டே சொன்னேன் பாரு. I’m tired both mentally and physically. நா இன்னொரு சமயம் பேசறேன். பை”

தேன்கூட்டை அப்புறப்படுத்தாமல் வீட்டில் தங்கமுடியாது என்று பிடிவாதம் பிடிக்கும் ரஞ்சனியின் நியாயங்களை முன்வைக்கு கட்டுக்கோப்பான கதையை வாசித்துப் பாருங்கள். இணைப்பு முதல் பின்னூட்டத்தில்.

இந்தக் கதையை வாசித்தபோது சில ஆண்டுகளுக்கு முன்பு உமாமகேஸ்வரி காலச்சுவடு இதழில் எழுதிய ‘ குளவி’ கதை நினைவுக்கு வந்தது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்