சர்தார் உத்தம்: எதிரியின்மனச்சாட்சியைத் தட்டியெழுப்புதல்
எழுத்தும் காட்சியும்
16-ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் குழுமம் என்ற பெயரில் இந்தியாவிற்குள் நுழைந்து, சிற்றரசர்களின் அனுமதியோடு இந்தியாவுக்குள் வணிக அனுமதி பெற்றவர்கள் ஐரோப்பியர்கள். இந்தியாவில் அப்போதிருந்த வணிகர்களையும் சிற்றரசர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் பிரிட்டானிய அரச நிர்வாகத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சுரண்டல் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்.
விக்டோரியா மகாராணியின் நேரடி ஆளுகைக்குரியதாக விரிவுபட்டபோது, இன்றைய இந்தியா மட்டுமல்லாமல், தனித்தனி நாடுகளாக இருக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளும் அடங்கிய ஒரு மாபெரும் பரப்பைக் கொண்டிருந்தது. அந்தப் பரப்பிலிருந்த மக்கள் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை உணர்ந்து போராடத் தொடங்கிய காலகட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதி.அடிமைப்பட்ட வரலாறும் விடுதலைப்போராட்ட வரலாறும் காலனியாதிக்க
வரலாற்றாசிரியர்களாலும், காலனியாதிக்கக்கல்வியைப் பெற்ற வரலாற்றாசிரியர்களாலும் எழுத்துகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவையெல்லாம் படித்த மக்களுக்கானவை.
ஆனால் திரள் மக்களுக்கானவைகளாக இருப்பவை கலை, இலக்கிய வெளிப்பாடுகளே. கலை இலக்கியங்களில்
புனைகதைகளும் கூட ஒருவிதத்தில் படித்தவர்களுக்கானவையே. ஆனால் நிகழ்த்துக்கலை வடிவங்களான
நாடகங்களும் கூத்துகளும், காட்சிக்கலைவடிவமான திரைப்படங்களும் திரள் மக்களுக்கானவை.
அவை ஒரே நேரத்தில் ஆயிரக்கான மக்களைச் சென்றடையும் தன்மை கொண்டவை. இதனைப் புரிந்துகொண்ட
நிலையில் தான் விடுதலைப் போராட்ட நிகழ்வுகளும் வரலாறும் நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும்
தொடர்ந்து எடுக்கப்பட்டன; எடுக்கப்படுகின்றன. விடுதலைப் போராட்டம் முடிந்து போன நிலையிலும்
அவற்றை மையமிட்ட சினிமாக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதன் வழியாக அடிமைப்பட்ட
காலத்தில் பட்ட துயரங்களும், போராடிய முறைகளும் திரும்பவும் காட்டப்படுகின்றன. கடந்த
காலத்தின் நினைவுகள் நிகழ்காலத்திற்கான பாதைகளாக மாறும் என்ற நம்பிக்கை அதன் பின்னே
இருக்கின்றன.
முதல் இந்திய விடுதலைப்போர் எனச் சொல்லப்படும் சிப்பாய்க்கலகம்
(1857) தொடங்கி, இந்திய விடுதலை நாளான 1947 ஆகஸ்டு 15 வரையிலான தொண்ணூறாண்டுக்கால இந்திய
விடுதலைப் போராட்டம் பல்வேறுவிதமான நாடகங்களாகவும் சினிமாக்களாகவும் வந்துள்ளன. போராட்டக்காலத்தில்
எடுக்கப்பட்ட ஆவணப்படங்களாக மட்டுமல்லாமல் பல்வேறு வகையான புனைவுப் படங்களும் வந்துள்ளன. தமிழில் வீரபாண்டியகட்டபொம்மன்,
சிவகங்கைச் சீமை, கப்பலோட்டிய தமிழன், கொடிகாத்த குமரன், பாரதி போன்றன சில புனைவுப்படங்கள்.
அவை குறிப்பான ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைப் புனைவாக்கிச் சொன்னவை. அவற்றிலிருந்து
மாறுபட்ட ஒரு சினிமா கமல்ஹாசனின் ஹேராம். காந்தியின் கொலைக்கான காரணங்களைத்
தேடிச்சென்ற அப்படம் அதன் சொல்முறையிலிருந்த சிக்கல்களால் அதிகம் கவனிக்கப்படாத சினிமாவாகவும் பேசப்படாத படமாகவும் நின்று போனது. இவையல்லாமல்
இந்திய மொழிகள் பலவற்றில் விடுதலைப்போராட்ட நிகழ்வுகளை மையப்படுத்திய படங்களும் வந்துள்ளன.
அண்மையில் வந்துள்ள இந்தி சினிமா சர்தார்
உத்தம் (இணையவெளி வெளியீடு: 2021 அக்டோபர் 2). இந்தப் படம் இந்திய விடுதலைப் போராட்டப்
பின்னணியில் பலவகையிலும் விவாதிக்க வேண்டிய
படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
வெட்டியெடுக்கப்பட்ட வாழ்க்கை
சர்தார் உத்தம்,
ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம் போலத்தோன்றினாலும், முழுமையான வாழ்க்கையை முன்வைக்கும்
நோக்கம் கொண்ட படமல்ல. இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் அடங்கமறுத்து ஆயுதம் தாங்கிப்
போராடியவர்களின் பங்களிப்பு எப்படியிருந்த து என்பதைச் சொல்லும் நோக்கத்தைக் கொண்டு
எடுக்கப்பட்ட படம். சினிமாவின் மையப்பாத்திரமான சர்தார் உத்தம், இந்தியப் போராட்டத்தலைவர்களில்
ஒருவரல்ல. அவரது வாழ்க்கை வரலாற்றை முழுமையாகச் சொல்லும் படமாகவும் இந்தச் சினிமா எடுக்கப்படவில்லை.
உத்தம்சிங்கின் கடைசி இருபதாண்டுக்கால வாழ்க்கையில் நிகழ்ந்த சில
நிகழ்வுகளால் பின்னப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம், ஜாலியன் வாலா பாக் நிகழ்விற்குக்
காரணமான அதிகாரியைக் கொல்வதை நோக்கமாகக் கொண்டவர்
என்பதைக் குறிப்பாகக் காட்டுகிறது. உத்தம்
சிங் போன்றவர்களின் வரலாறு அறியப்படாமல் போனதற்கு, அவர் தேர்ந்தெடுத்த பழிக்குப்பழி
என்ற நோக்கமும் ஆயுதப்போராட்ட வழிமுறையும் காரணமாக இருக்கலாம். அகிம்சை வழியால் – காந்தியின்
ஒத்துழையாமை இயக்கப் போராட்ட முறைகளால் மட்டுமே இந்தியா விடுதலை பெற்றது என்று சொல்லப்பட்டுள்ள
வரலாற்றிற்குப் பின்னால் பகத்சிங், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் போன்ற ஆயுதப்போராட்ட வீரர்கள்
பங்களிப்புகள் முழுமையாகச் சொல்லப்படும் வாய்ப்புகள் குறைவுதான்.
உத்தம்சிங், பகத்சிங்கின் வழியைப் பின்பற்றியவர். பஞ்சாபில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நடத்திய வன்முறையான ஒடுக்குமுறையை எதிர்கொள்ள வன்முறையே வழி என நம்பியவர். அதனைச் செயல்படுத்தும் நோக்கத்தோடு வேறு பெயர்களில் ஐரோப்பாவுக்குச் சென்று, சோவியத் ரஷ்யாவில் செயல்பட்ட புரட்சியாளர்களோடு நட்பு ஏற்படுத்திக் கொண்டு ஆயுதப் பயிற்சி பெற்றவர். உத்தம்சிங்கின் வாழ்க்கை வரலாற்றில் உள்ள இந்தத்தகவல்களை மையமிட்டே திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜாலியன் வாலாபாக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான பொறுப்பை ஜெனரல் டயர் என்ற ராணுவத்தளபதியிடம் ஒப்படைத்த பஞ்சாப் ஆளுநர் ஓ பிரையனைச் சுட்டுக்கொல்வதில் தொடங்கும் படம், விசாரணையின் போது சொல்லப்படும் பதில்களைக் காட்சிப்படுத்துவதின் வழியாக விரிகிறது.
சர்தார் உத்தமின் வாழ்க்கையைச் சொல்வதை விடவும் ஜாலியன் வாலாபாக்
நிகழ்வின் பெருந்துயரத்தைப் பார்வையாளர்களிடம் கடத்துவதை தீவிரமாகச் செய்துள்ளது. இந்த
நிலையில் அந்தப் படம் இரண்டு விதமான நோக்கங்களைக்
கொண்டிருக்கிறது. இந்திய விடுதலை என்பது அகிம்சை வழியில் மட்டுமே பெறப்பட்டதல்ல என்பதைச்
சொல்வதை முதன்மையாகக் காட்டி, அதன் பின்னால்
பகத்சிங் போன்ற சோசலிஸ்டுகளின் சிந்தனைகளின் வழி தூண்டப்பட்ட மக்கள் திரளின் அடங்காத
போராட்டங்களும், உயிர்த்தியாகங்களும் இருந்தன என்பதைப் பேசுகிறது. இரண்டாவதாகக் கொலைகாரத்
திட்டங்கள் மூலம் மக்கள் திரளின் கோபம் அடக்கப்பட்டாலும் உக்கம்சந்த் போன்ற இளைஞர்களின்
கோபம் அடங்காமல் கனன்று கொண்டிருந்தது. அந்தக் கோபத்தின் நீட்சி பழிவாங்கும் நோக்கமல்ல;
தீவிரவாதமும் அல்ல என்பதை விவரித்து, ஒருவிதத்தில் அதுவும் விடுதலை வேட்கையின் வெளிப்பாடே
என்பதையும் சொல்கிறது. இதனை உணர்த்தும் காட்சிகளாக உத்தம்சிங்கின் ஐரோப்பிய வாழ்க்கையில்
நடக்கும் காட்சிகளும் நீதிமன்றக் காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
துன்பியல் காட்சியின் இலக்குகள்
படத்தில் நீண்ட நிகழ்வாக விரிக்கப்பட்டுள்ள காட்சி ஜாலியான்வாலிபாக் நிகழ்வு. இந்திய விடுதலைப்போரில் 1919, ஏப்ரல் 13 அன்று நடந்த உண்மை நிகழ்வு. அதனைப் படமாக்கும்போது, தனிக்காட்சி என்ற நிலையைத் தாண்டி அதற்குள்ளேயே ஓரங்க நாடகம் ஒன்றிற்கான தொடக்கம், உச்சம், முடிவு என்ற கட்டமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது. அக்கட்டமைப்பின் மூலம் அப்பயங்கர நிகழ்வு தற்செயலாக நடந்த நிகழ்வல்ல; திட்டமிட்ட அரச பயங்கரவாதச் செயல் என்பதைக் காட்டுவதோடு, பார்வையாளர்களின் மனதில் அழிக்கமுடியாத உணர்வலைகளை எழுப்பித் தக்க வைக்கிறது. இந்தக் காட்சியைத் திட்டமிட்டதும், படமாக்கியதும் தொகுத்ததும், பின்னணி இசைக்கோர்வைகளைச் சேர்த்ததும் இயக்குநரின் திரைப்படக்கலை மீதான நம்பிக்கையையும் தேர்ச்சியையும் காட்டியுள்ளது.
பிரிட்டானிய ஆளுகைக்குட்பட்ட இந்திய மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபின்
அமிர்தசரஸில் கூடித் தங்களுக்கு விடுதலை வேண்டும்; சமத்துவம் வேண்டும்; தங்கள் கருத்துகளை
எடுத்துரைக்கும் பேச்சுச் சுதந்திரம் வேண்டும் என்று கேட்ட கூட்டத்தினரை(20000)இருபதினாயிரத்திற்கும்
மேற்பட்ட மக்களை ஈவிரக்கமில்லாமல் சுட்டுக்கொன்ற நிகழ்வு நீண்டநேரக்காட்சியாக விரிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் ஆளுநர் ஓ பிரையனின் அழைப்பை ஏற்று வந்த ராணுவ அதிகாரி ஜெனரல் டயர் போட்டுத்தரும்
திட்டம் ஓரங்க நாடகத்தின் ஆரம்பம். போராட்டக்காரர்கள்
சுற்றிவளைக்கப்படுவதும். மைதானத்தை நோக்கி நகர்த்தப்பட்டு ஒருவரையும் தப்பிக்கவிடாமல்
சுட்டுக்கொள்வதும் நாடகத்தின் உச்சம். மொத்தக் கொலைகளும் முடிந்தபின் உத்தம்சிங் வந்து
உயிரோடு இருப்பவர்களைத் தனது காதலியைத் தேடுவதும், துன்பியல் நாடகத்தின் வீழ்ச்சியை
நோக்கிய பயணம். அத்துன்பியல் காட்சிகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதற்குப் பெரும்
துணையாக இருப்பன படத்தில் உருவாக்கப்பட்டுள்ள மௌனங்களும் மெல்லோசைகளுமே.
இடைவிடாத துப்பாக்கி ஓசைக்குப்பின் பிணக்காடாகக் காட்சி அளிக்கும்
மைதானத்தில் நிலவுவது முழுமையான மௌனம். பிறகு கேட்கும் விசும்பல்களும் மூச்சொலிகளும்
முணகல்களும் அசையும் சில உருவங்களின் உடல்களும் சேர்ந்து துயரத்தின் உச்சநிலைக்குப்
பார்வையாளர்களைக் கொண்டு செல்கின்றன. உயிர்பிரியும்
வேலையில் தண்ணீர் குடிக்க நினைத்துத் தாகத்தை வெளிப்படுத்தும் உடல்களும், அவற்றை இரும்புவண்டியில்
வைத்துத் தள்ளிக்கொண்டுபோய்ச் சேர்க்கும் மருத்துவமனைக் காட்சிகளும் கணவனைத் தேடிவரும்
மனைவியின் நிலையும் மனதை உருக்கும் காட்சிகள். இந்தப் புனைவுக்காட்சிக்குள் ஜாலியன்வாலா
பாக் தொடர்பில் இப்போதும் ஆவணமாக இருக்கும் கோட்டைச்சுவரையொட்டிய அணிவகுப்பு, ரத்தக்கறை
படிந்த சுவர், காயங்களோடு உயர்தப்பியவர்களைக் காப்பாற்றப் பயன்படுத்திய வண்டி, தப்பியோடியவர்கள்
குதித்த கிணறு போன்ற உண்மைத் தகவல்களும் இணைந்து அவலத்தைப் பார்வையாளர்களிடம் கடத்துகின்றன.
ஒரு நபரின் வாழ்க்கைக் கதையை விடுதலைப் போரின் பகுதியாக மாற்றுவதற்காக
உருவாக்கப்பட்ட திரைக்கதை உருவாக்கமும், அவற்றை அடுக்கி உருவாக்கியிருக்கும் சொல்முறையும், படப்பிடிப்பில் காட்டியிருக்கும்
காட்சிப்படுத்தலும் பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் நடிகர்களின் ஈடுபாடும், இசைக்கலவைகளும்
சேர்ந்து சர்தாம் உத்தம் படத்தைப் புகழ்பெற்ற விடுதலைப் போராட்டப் படமான ஒமர் முக்தாரின்
காட்சிகளோடு இணைவைக்கத் தூண்டுகின்றன. பாலைவனச் சிங்கம் ஒமர் முக்தாரின் தீரத்தைக்
காட்டியதைப் போலவே உத்தமின் நீதிமன்றக்காட்சிகள் வெளிப்பட்டுள்ளன. விடுதலைப் போராட்ட
சினிமாக்கள் என்ற வகைப்பாட்டில் ஒரு செவ்வியல் படத்தை உருவாக்கியுள்ள இயக்குநர் சுபேந்து
பட்டாச்சார்யாவின் திரைப்படக்குழு இந்தப் படத்தின் மூலம் சில முன்மாதிரிகளை உருவாக்கியிருக்கிறது.
பின் குறிப்பாக ஒரு எண்ணவோட்டம்
பட த்தில் காட்டப்பட்ட ஜாலியன் வாலாபாக் நிகழ்வை -20000 பேரை ஒரே
இடத்தில் திரட்டிக் கொலை செய்த ஜெனரல் டயரின் திட்டமிட்ட ராணுவ நடவடிக்கைகளைப் பார்த்து
முடித்தபோது ஈழப்போரின் கடைசி நிகழ்வாக முடிந்துபோன முள்ளிவாய்க்கால் காட்சிகளை
எழுதிய பல புனைவுகள் நினைவுக்கு வந்தன. ஈழப்போருக்குப் பின் கவிதை வரிகளாகவும் சிறுகதைகளாகவும்
நாவல்களாகவும் விவரிக்கப்பட்ட காட்சிகளில் உருவாக்கப்பட்ட உணர்வுகள் பெரும்பாலும் ஒருவிதக்
கையறுநிலை வெளிப்பாடுகளே. பெரும்பாலும் ஈழத்தமிழ் வாசகர்களையும் இந்தியத்தமிழர்களையும்
நோக்கிப் பேசிய சொல்முறைமைகளைக் கொண்டவை. அதன் மூலம் பேரழிவின் துயரத்தை முன்வைத்துக்
கழிவிரக்கத்தை உண்டாக்கும் நோக்கம் கொண்டவைகளாக எழுதப்பெற்றவை. அப்பிரதிகளின் ஏதாவதொன்றின்
அடிப்படையில் ஒரு சினிமா உருவாக்கப்படும் நிலையில் சர்தார் உத்தம் படம் கையாண்டுள்ள மாதிரியைப் பின்பற்றலாம் என்று
பரிந்துரைக்கத் தோன்றுகிறது. அதன் மூலம் பார்வையாளர்களிடம் அழிக்க முடியாத உணர்வுகளைக்
கொண்டுபோய்ச் சேர்க்க முடியும். அத்தோடு அப்பெருந்துயரங்களை ஏற்படுத்திய எதிரிகளின்
மனதில் குற்றவுணர்வை உண்டாக்கி மன்னிப்புக் கோரலைச் செய்யமுடியும். சிங்களப் பெருஞ்சமூகமும்
அவற்றின் அடையாளமாக இருக்கும் அதிகாரத்துவ மனிதர்களும் பேரழிவுகளை உணர்ந்து மன்னிப்புக்கோரும்
நிலையில் புதிய நம்பிக்கைகளும் விடியல்களும் கண்ணுக்குத் தெரியவாய்ப்புண்டு.
கருத்துகள்