நாடகப்பிரதியாக்கப்பட்டறை: நினைவுக்கு வந்த ஒரு வரலாறு
நாடகப்பிரதியாக்கப்பட்டறையொன்று அண்மையில் (செப்.24 முதல் அக்.4 வரை) நடத்தப்பெற்றது. கரோனா காலச் செயல்பாடு என்ற வகையில் இணையவழியில் நடந்த பட்டறையில் 40 பேர்வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்தனர். அந்தப் பயிலரங்கு முடிந்தபோது எனது முகநூல் பக்கத்தில் ‘நாடகங்கள் எழுதப்போகிறார்கள்’ என்றொரு குறிப்பினை எழுதினேன்.(பின் குறிப்புக்குப் பின்னர் அந்தக்குறிப்பு உள்ளது) குறிப்பு எழுதி மறந்துவிட்ட நிலையில், கால்நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த பிரதியாக்கப் பயிலிரங்கு ஒன்று பற்றி எழுத நினைத்து தொடங்கி முடிக்காமல் விட்ட குறிப்புநிலைக் கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. தலைப்பெல்லாம் வைத்துச் சில பக்கங்களும் எழுதி வைத்திருந்தேன். அதனை முடித்து அச்சிதழ்கள் எதற்கும் அப்போது அனுப்பவில்லை. அனுப்பியிருந்தாலும் வந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது நான் எழுதியதைப் போடும் அளவுக்கு அறியப்பட்டவன் இல்லை. இப்போது வரலாற்றைப் பதிவுசெய்துவைக்க வலைப்பூ இருக்கிறது. இணைப்புத்தர முகநூல் இருக்கிறது. மறந்துபோன வரலாற்றை நிறைவுசெய்து பதிவுசெய்து வைக்கலாம்:
இயக்குநரைத்
தேடிய நாடகாசிரியர்கள் -
கால் நூற்றாண்டுக்குப்
பிந்திய நினைவுக்குறிப்பு
ஒரு பத்தாண்டுக்காலம் (1984-1994) நவீன
இந்திய நாடகக்காரர்களின் லட்சியமாக இருந்துவந்த சங்கீத நாடக அகாடமியின் ‘இளம் இயக்குநர்கள்
திட்டம்’ (Young directors Scheme) நிறுத்தப்பட்டுவிட்டது. ஒவ்வொரு மொழியிலும் புதிய
நாடகமொன்றைத் தயாரிப்பதற்கு ஏதாவதொரு இளம் இயக்குநருக்குப் பண உதவி செய்து வந்தது அகாடமி.
அகாடமியின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற நாடகாசிரியர்களின் நாடகங்களை இயக்க முன்வந்த
இளைஞர்களும், முதியவர்களின் பினாமிகளாகச் செயல்பட ஒத்துக்கொண்ட இளைஞர்களும், ‘இளம் இயக்குநர்களாக’
முன் நிறுத்தப்படக்காரணமான அந்தத்திட்டம் நிறுத்தப்பட்டதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை.
1995 முதல் அகாடமி புதிய திட்டம் ஒன்றை
அறிமுகம் செய்ய நினைத்து இதனைத் தொடங்கியிருப்பதாகவும், முதல் வாய்ப்புத் தமிழுக்கு வழங்கப்படுவதாகவும் அறிவித்தார் அகாடமியின் துணைச்செயலர் திரு.பார்கவா.
(முதன் முதலுக்காகத் தமிழர்கள் மகிழ்ச்சி அடைவார்களாக).
‘நாடக ஆசிரியர்கள் பயிற்சிப்பட்டறை’ (Dramatic writers’ workshop) என அழைக்கப்பட்ட
அந்தத் திட்டத்தின் முதல் பகுதி, பாண்டிச்சேரி நாடகப் பள்ளியில் நடந்தது. ஐந்து நாட்கள்
(1995, ஜனவரி 21-25) நடந்த பட்டறையின் அழைப்பிதழ்
நாடகப்பிரதியாக்கப்பட்டறை என்று இருந்ததேயொழிய நடத்தப் பெற்ற விதமும், தொடர்ந்த நிகழ்வுகளும்
குழப்பமானவைகளாக இருந்தன.
இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, சே.ராமானுஜம், பூரணம் விசுவநாதன், மு.ராமசுவாமி ஆகியோரிடம் (அகாடமியின் வல்லுநர்கள் ) முகவரிகளைப் பெற்று ‘நாடகங்கள்’ எழுதி அனுப்பும்படி அகாடமி கேட்டுக் கொண்டது. அவர்கள் தமிழில் செயல்பட்ட நவீன நாடகக்குழுக்களோடு தொடர்புடையவர்களின் முகவரிகளை அகாடமிக்கு அனுப்பித்தந்ததாகத் தெரிவித்தனர். (இந்த வல்லுநர்களுக்குத் தெரியவராமல், ஏதாவது ஒரு ஊரில் இருக்கும் எழுத்தாளர்கள் பாவம்தான்) அந்த நிலையிலும் இருபத்திநான்கு பேர் தமிழில் நாடகங்களை எழுதி அனுப்பி இருந்தனர். (தமிழில் நாடகம் எழுத ஆள் இல்லை நினைப்பதெல்லாம் பொய். ஒரு சிறுகதைக்கு இந்தியாடுடே தருவதுபோல் சில ஆயிரங்களோ, தொடர்கதைக்கு வருவதுபோல் வாரம் ரூ.500/- வருவதாயிருந்தால் தமிழ் எழுத்தாளர்கள் எல்லா வகையான நாடகங்களையும் எழுதித் தள்ளிவிடத்தயார் தான் என்பது இந்த எண்ணிக்கை வழியாகப் புரிந்தது).
நானும் ஒரு நாடகப்பிரதியை அனுப்பியிருந்தேன். யாரோ ஒருவரின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பிரதியாக வாசித்துப் பயிற்சிகள் செய்து, ஒத்திகைகள் வழியாகப் போலச்செய்து மேடையில் நடிக்க முடியும். அதே நேரம் அவரது சொந்த வாழ்க்கையின் நடப்புகளை வாழத்தான் முடியும்; ஒத்திகைசெய்து நடித்துக் காட்ட முடியாது என்ற உரிப்பொருளைக் கொண்டு எழுதப்பெற்ற அந்தப் பிரதியின் பெயர் ஒத்திகை. அந்த முடிவை எடுத்து ஒத்திகைக்கு வர மறுத்த பாத்திரம் பெண் என்பதால் அது ஒரு பெண்ணிய வாசிப்பிற்கான நாடகம் என்று நம்பி எழுதி அனுப்பினேன். ஆனால் வாசிப்பிற்கான பட்டியலில் இடம்பெறவில்லை. (கணையாழியில் அச்சிடப்பெற்ற அந்நாடகம், பாரிஸில் நடந்த பெண்கள் சந்திப்பில் மேடையேற்றப்பட்டது. பல்கலைக்கழகத்திலும் தன்னாட்சிக்கல்லூரிகளிலும் பாடமாக்கப்பட்டன. அந்த நாடகத்தை உள்ளடக்கிய இன்னொரு பிரதியாக ஒத்திகைகள் தொடர்கின்றன என்ற நாடகத்தை இப்போது எழுதி வெளியிட்டுள்ளேன். இது நிற்க)
நாடகப்பிரதியாக்கப் பட்டறைக்கு வந்து சேர்ந்த இருபத்துநான்கு பிரதிகளில் ஐந்து நாடகங்கள் பட்டறையில் வாசிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அத்தேர்வுக்காக ஒவ்வொரு நாடகத்திற்கும் மூவாயிரம் ரூபாயும் (ரூ.3000/-) முதல்வகுப்புப் பயணப்படியும், தங்குமிட வசதிகளும் செய்து தரப்பட்டு ஐந்துபேர் அழைக்கப்பட்டனர். அழைக்கப்பட்டவர்களும் நாடகப்பிரதிகளும் வருமாறு:
1] வேலு.சரவணன் -இலைவீடு
2] ந.முருகேச பாண்டியன் - ராஜபார்ட்
3] மலைச்சாமி -முனி
4] தேவி பாரதி - மூன்றாவது விலா எலும்பும்
விழுதுகளற்ற ஆலமரமும் (மாந்த்ரீக நான் லீனியர் சிறுகதைத் தலைப்பு போல இருக்கிறது)
5] கணேசன் -அரங்கப்பொருட்களின் வீடு
.
ஐந்துபேரும் நவீன நாடகக்குழுக்களோடு தொடர்பில் இருந்தவர்களே. வேலு.சரவணன் புதுவை சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளி மாணவர்; குழந்தைகள் நாடகங்களில் ஈடுபாடு கொண்டவராக அறியப்பட்டுக்கொண்டிருந்தார். ந.முருகேசபாண்டியன் மதுரை நிஜநாடக இயக்கத்தின் முன்னாள் நடிகர். 1983 வரை அதன் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார். மலைச்சாமி, மதுரை சுதேசிகள் நாடகக்குழுவோடு தொடர்புடையவர்; கவிஞர்.தேவிபாரதி கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் அறியப்பட்டவர். நவீன நாடகங்கள் பலவற்றைப் பார்த்து விமரிசனக் குறிப்புகளை எழுதியவர்; சினிமாவில் நுழைவதற்கான முயற்சியில் இருந்தார்.
கணேசன் வ.ஆறுமுகத்தின் கருஞ்சுழி நாடகத்தில் நடிகராக நடிக்கத்தொடங்கிப் பின்னர் அரங்கியலைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டவர். ஐவரும் வந்திருந்தனர். அவர்களோடு எங்கள் நாடகப்பள்ளி மாணவர்களும் புதுவையில் நாடகங்கள் செய்தவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுக் கிழக்குக்கடற்கரையோரம் உள்ள விடுதி ஒன்றில் பயிலரங்கு நடந்தது. ஐந்து நாடகங்களிலும் சிறந்ததாக ஒன்று தேர்வு செய்யப்பட்டு அதற்குப் பதினைந்தாயிரம்(ரூ.15000/-) வழங்குவதோடு, ஒருமாதம் ஓரிடத்தில் தங்கிக்கொள்ளும் வசதியும் பயணப்படியும் தரப்படும் என்றும் முதலில் சொல்லப்பட்டது.
முதல் நாடகமாக வேலு.சரவணன் ‘இலைவீடு’ வாசிக்கப்பட்டது. வேலு.சரவணனின் நாடகங்கள், ‘குழந்தைகள் நாடகங்கள்’ என்பதால் பெரியவர்கள் (வல்லுநர்கள் உள்பட) ஒன்றும் சொல்வதற்கில்லையென ஒதுங்கிக்கொண்டார்கள். மிருகங்களும் குழந்தைகளும் மேடையில் நின்று, மனிதர்களுக்குப் புத்திமதி சொன்னபிறகு பெரியவர்களாகட்டும்… குழந்தைகளாகட்டும்… பார்த்து, கேட்டுக் குதூகலித்துக் கொள்ள வேண்டியது தான். சொல்வதற்கென்ன இருக்கிறது? வாசித்துக்காட்டியதோடு முதல் நாள் மதியம் அவரது குழுவினரை வைத்து நாடகத்தின் சிலபகுதிகளை நடித்தும் காட்டினார்.
நாடக ஆசிரியர்கள் பயிற்சிப்பட்டறை என்று
சங்கீத நாடக அகாடமி எழுதியிருந்ததால், ‘நாடகங்கள் செம்மையாக்கப்பட, எழுதப்பட்ட பிரதியில்
என்னென்ன மாற்றங்கள் செய்யமுடியும்’ என வல்லுநர்குழு ஆலோசனை கூறும் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட
நாடக ஆசிரியர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்கள்
நாடகம் சிறந்த நாடகமாகத் தேர்வு செய்யப்பட்டால் யாரை இயக்குநராகப் பரிந்துரை செய்யலாம்
அல்லது தாங்களே இயக்குநராகிவிடலாமா என்றெல்லாம் கூட நினைத்துக் கொண்டார்கள். என்னோடு
உரையாடிய முருகேசபாண்டியன், தேவிபாரதி, மலைச்சாமி ஆகியோரின் உரையாடல்கள் வழி எனக்குப்
புலப்பட்டது இது. அவர்கள் நினைப்புகளுக்கெல்லாம்
இடமில்லாமல் செய்துவிட்டது அகாடமி. தேர்ந்தெடுக்கப்படும் நாடகத்தை இயக்கப்போவது மு.ராமசுவாமிதான்
என்று சொல்லி விட்டார் அகாடமியின் துணைச்செயலர்
பார்கவா. ஒவ்வொரு நாடக ஆசிரியரும் காலையில் வாசிப்பை முடித்துவிட்டு மதிய உணவிற்குப்
பிறகு மு.ராமசுவாமியோடு கலந்துரையாடி, அவர்களது நாடகத்தில் ஒன்றிரண்டு துண்டுப்பகுதிகளை
நிகழ்த்திக் காட்டவேண்டும் என்று வல்லுநர்குழு கேட்டுக்கொண்டது.
முதல்நாள் வேலு.சரவணனே நாடக ஆசிரியராகவும்
இயக்குநராகவும் இருந்து கொண்ட தால் மு.ராமசுவாமிக்கு வேலை எதுவுமில்லை. கடைசி நாள் கணேசன் நாடகத்தின் போதும் இதுதான் நிலைமை.
மற்ற மூன்று பேரின் நாடகங்களை வாசித்த நாட்களில்
நடப்பது நாடகப்பிரதியாக்கப்பட்டறையா? நாடக ஆசிரியர் இயக்குநரைத் திருப்திப்படுத்தும்
பட்டறையா என்று குழப்பம் நிலவியது. தேர்வு செய்யப்படாத மற்ற நாடகங்களும் இந்த ஐந்து
நாடகங்கள் போல்தான் இருந்திருக்குமா? எந்த ஒன்றையும் மையப்படுத்தாமல் இது கொஞ்சம்,
அது கொஞ்சம் என்று எல்லாவற்றையும் நினைவூட்டுவதுபோல இருந்தன. ஒரு வாசகன், தலித் நாடகமாக
வாசிக்க விரும்பினால் அதற்கும் இடமுண்டு; பெண்ணிய வாசிப்புக்கும் இடமுண்டு. இருத்தலியக்
கேள்விகளுக்கும் இடமுண்டு. அபத்தநாடகக் கூறுகளும் உண்டு. நாடக ஆசிரியர்கள் பேசும்போதுகூட
வாசிக்கின்றவர்களின் சுதந்திரத்திற்குப் படைப்பு இடம் தருவதாக உள்ளன எனச் சொன்னார்கள்.
நீங்கள் விரும்பினால் இந்தப் பிரதிகளை எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம். இயக்கி மேடையேற்றலாம்
என்பதான பாவனையில் இந்தப் பிரதிகள் இருந்தன.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்துபேரும், எங்கே
தன் நாடகம் தேர்ந்தெடுக்கப்படாமல் போய்விடுமோ? என்ற பதற்றத்தில், அடுத்தவரின் நாடகத்தை,
‘நாடகமே அல்ல; கவிதைத்தொகுப்புதான்’ என்று மோதி வீழ்த்தும் ஆக்ரோஷங்களும் (சாகித்திய
அகாடமி பரிசு தெரிந்தவுடன் பத்திரிகைகளில் போடும் சண்டையைப் போல) சிவன் கோயில் இடிக்கப்படுவதாக
எழுதிவிட்டு, ‘பாப்ரி மஜ்ஜித்’ இடிக்கப்பட்டதோடு பொருத்திப் பார்க்கலாம்’ என்ற நகைச்சுவைத்
துணுக்கும் பட்டறையில் கிடைத்த போனஸ் சமாச்சாரங்கள். சங்கீத நாடக அகாடமியின் வரவால்தான்
‘பறை’ என ஒன்று இருப்பதாகத் தமிழகம் அறிந்துகொண்டது என ந.முத்துசாமி சொன்னார். இது
ஆக்ரோஷத்திற்கிற்குள் அடங்குமா? நகைச்சுவைக்குள் வருமா? என்று தெரியவில்லை. ‘பறை’,
‘தப்பு’ முதலியவற்றை எடுத்துக் கொண்டு கூத்துப்பட்டறை, சிங்கப்பூர், மலேசியா, எட்டாவது
உலகத்தமிழ்நாடு என நீண்ட பயணத்தையும் அங்கீகாரத்தையும் அடைந்திருக்கிறார்கள் என்பது
மட்டும் தெரியவந்தது.
பட்டறையின் போது வல்லுநர்களின் பேச்சில் பிரதியாக்கம் பற்றிய அனுபவங்கள் ஒன்று கூடச் சொல்லப்படவில்லை. இந்திரா பார்த்தசாரதியோ, ந.முத்துசாமியோ தங்கள் நாடகப் பிரதிகளின் ஆக்க முறைமையை விவரித்திருந்தால் கூடப் பார்வையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் கொஞ்சம் பலன் உண்டாகியிருக்கும். பூர்ணம் விசுவநாதனோ, சே.ராமானுஜமோ, மு.ராமசுவாமியோ ஒரு இயக்குநராகத் தங்களின் பிரதித் தேர்வும் ஆற்றுகைப்பிரதியாக்கமும் எவ்வாறு நடக்கிறது என்பதையாவது சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் எதிர்காலத்தில் நாடகம் எழுத நினைத்தவர்களுக்கு அது வழிகாட்டிக் கையேடாக மாறியிருக்கலாம். இது எதுவும் நடக்காமலேயே அந்தப் பட்டறை நிறைவுபெற்றது.
ஐந்து நாடகங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து
வல்லுநர்குழு மு.ராமசுவாமியிடம் கொடுத்தது. அதன்படி மலைச்சாமியின் முனி முதல் நாடகமாக
தரப்படுத்தப்பட்டது. மு.ராமசுவாமி அதை இயக்கி மேடையேற்றுவார். அதற்கான செலவு முழுவதும் சங்கீத நாடக அகாடமியினுடையது.
அந்த ஒத்திகைகளின் போது மலைச்சாமி தஞ்சையில் தங்கித் தனது பிரதியில் செய்துகொள்ள வேண்டிய
மாற்றங்களைச் செய்துகொள்ளலாம் என்பதாக முதல் அறிவிப்பு வந்தது. பின்னர் மு.ராமசுவாமியைப்போலவே,
ரா.ராஜுவிடமும் ஒரு நாடகத்தை இயக்கும்படி கேட்டுக்கொள்ளலாம் என வல்லுநர்குழு விவாதித்து
இரண்டாவது
நாடகத்தைத் தெரிவுசெய்தனர். அந்த நாடகம் தேவிபாரதியின் மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற
ஆலமரமும். இரண்டு நாடக ஆசிரியர்களுக்கும் கிடைத்த தொகை பதினைந்தாயிரம்.
பின்குறிப்பு:
தேர்வுசெய்யப்பட்ட இரண்டு நாடகங்களும்
ஒரு மாதத்திற்குப் பின்னர் புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையிலும் தஞ்சைப்பல்கலைக்கழக
நாடகத்துறையில் மேடையேற்றப்பட்டன. இரண்டு மேடையேற்றங்களுக்கும் நான் பார்வையாளனாக இருந்தேன்
என்று மட்டுமே சொல்லமுடியும். முழுமை பெறாத பிரதியை முழுமையாக்க நாடக இயக்குநர்களால்
உதவமுடியாது என்பதற்குச் சான்றாக அந்த நாடகங்களின் ஒத்திகைகள் நடந்தன. ஒத்திகைகள் தொடங்கிப்
பாதியில் வீட்டிற்குக் கிளம்பிய தேவி பாரதியை இருக்கச் செய்தவை எனது சொற்கள் மட்டுமே.
எழுதிக் கொடுத்த பிரதியைத் தூர வைத்துவிட்டுத் தனது விருப்பம்போலக் காட்சிகளை உருவாக்கிக்
கொண்டிருக்கிறார் இயக்குநர் இரா.ராஜு என்று கோபப்பட்டுக் கிளம்பினார் தேவிபாரதி. இதேமாதிரியான
நிகழ்வுகள் தஞ்சையில் மலைச்சாமிக்கும் இயக்குநருக்கும் இடையேயும் நடந்ததாக அங்கு போனபோது
மலைச்சாமி சொன்னார். நாடக ஆசிரியரின் கற்பனையையும் படிமங்களையும் உள்வாங்கும் பக்குவமும்
திறனும் இயக்குநர்களிடம் இல்லை என்பதாக அவர்களது குற்றச்சாட்டுகள் இருந்தன. இயக்குநர்கள்
இருவரும் நாடகாசிரியர்களோடு ஏற்பட்ட சிக்கல்களையும் விவாதங்களையும் வெளியே சொல்லவே
விரும்பவில்லை. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதாக சங்கீத நாடக அகாடமியின் நாடகப்பிரதியாக்கப்பட்டறை
தோல்வியில் முடிந்தது. தரமான நாடகப்பிரதிகளை எழுதியவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட மலைச்சாமியும்
தேவிபாரதியும் அடுத்தொரு நாடகப்பிரதியை முயற்சி செய்யாமலேயே நின்றுபோனார்கள்.
நாடகங்கள்
எழுதப்போகிறார்கள்
---------------------------------------------
கலை, இலக்கியச் செயல்பாடுகளில் மற்ற
வடிவங்களைக் கூட இணையவழிக் கற்கையாக - நிகழ்வுகளாகத் தரலாம். அரங்கச் செயல்பாட்டை
அப்படித் தரக்கூடாது என்ற பிடிவாதத்தையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு ஏராளமான
அரங்கியல் நிகழ்வுகள் சூம் வழியாகவும் கூகுள் மீட்டிலும் கிளவுட் சந்திப்பிலும்
நடந்துகொண்டிருக்கின்றன. நேரமும் இணையவேகமும் வாய்ப்பளித்தால்
எல்லாவற்றிற்குள்ளும் போய்வருவேன். கடந்த வாரம் மட்டும் நாடகக்காரர்கள் ஒரே
நேரத்தில் மூன்று நான்கு இணைய நிகழ்வுகளுக்குள் நுழைந்து வெளியேற வேண்டிய
நெருக்கடி. ’எங்கள் நிகழ்வுக்கு வரவில்லை; உங்கள் நிகழ்வுக்கு வரமாட்டேன்’ என்ற பிடிவாதமெல்லாம் நாடகக்காரர்களுக்கு
இருப்பதில்லை என்பது வரவேற்கத்தக்க ஒன்று. அரங்கியலாளர்கள் தொடர்ந்து
இயங்குகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.
மதுரை
கலைடாஸ்கோப்பின் வழியாக இரா.பிரபாகரும் சுவிட்சர்லாந்திலிருந்து பாரதி மாயாண்டி
இணைந்து ஒருங்கிணைத்த 11 நாள் ‘ நாடகப்பிரதியாக்கப் பயிற்சிப் பட்டறை நேற்று அக்.4 இல் நிறைவுற்றது. அதன் தொடக்கநாள் செப்.24. முதல்
நாள் 100 - க்கும் அதிகமானவர்கள் வந்தார்கள். ஆனால்
தொடர்ச்சியாகப் பதினோரு நாளும் 35 பேருக்குக் குறையாமல்
பங்கேற்றார்கள்; விவாதித்தார்கள் எழுதினார்கள்; அடுத்து என்ன செய்யலாம் என்று கேட்டுக் கலைந்திருக்கிறார்கள்.ஆஸ்திரேலியா,
நியுஜிலாந்து எனக் கிழக்கே தொடங்கி மலேசியா, இலங்கை,
இந்தியா, அரபு நாடுகள், சுவிட்சர்லாந்து,
ஜெர்மனி, இலங்கை, கனடா
எனப் பன்னாட்டுப் பங்கேற்பாளர்களின் பங்கேற்பு உற்சாகமாக இருந்தது. முதல் நாள்
எனது வலைப்பக்கத்தில் நாடகவியல் குறித்த 100 கட்டுரைகளுக்கும்
மேல் இருக்கிறது என்ற தகவலுக்குப் பிறகு அந்தக் கட்டுரைகளுக்கான வாசகர்களும்
கூடியிருக்கிறார்கள். அரங்கச் செயல்பாட்டாளர்கள் வாசிப்புவிரோதிகள் என்ற எனது
நம்பிக்கை இப்போது பொய்யாகிக் கொண்டிருக்கிறது.
விரைவில் அடுத்த
கட்ட நகர்வு இருக்கும். அது நேரடிப் பயிற்சியாக - உண்டு உறைவிடப் பயிலரங்காக
இருந்தால் சில நாடகாசிரியர்கள் கிடைத்து விடுவார்கள். இணையவழியிலும் அதற்குச்
சாத்தியங்கள் உண்டு. அப்பயிலரங்கின் பதினொரு அமர்வுகளின் வரிசை இப்படி இருந்தது:
1] நாடகப்பிரதிகளின் கட்டமைப்பும் அடிப்படைகளும் -அ.ராமசாமி
2] பிரதியாக்கம் ஆகஸ்ட் ட்ரங்பெர்கினின் மிஸ் ஜூலியை முன்வைத்து - பாரதி
மாயாண்டி
3] யூஜின் அயனெஸ்கோவின் லெஸன் நாடகத்தை முன்வைத்து - அரிய நாச்சி
4] சுஜாதாவின் ஓரங்க நாடகங்களை முன்வைத்து - இரா.பிரபாகர்
5] ஹெரால்ட் பிண்டரின் நியுவேர்ல்டு ஆர்டர் - பாரதி மாயாண்டி
6] கார்ல் சர்ச்சிலின் ஃபார் அவேவை முன்வைத்து -பாலகிருஷ்ணன்
7] கிளிப்போர்ட் ஓடட்ஸின் வெயிட்டிங் ஃபார் லெப்டியை முன்வைத்து - பிரளயன்
8 ] காட்சி அமைப்பும் உரையாடல்களும் - இரா.பிரபாகர்
9] தழுவல் உத்திகள்: புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகத்தை முன்வைத்து -
அ.ராமசாமி
10] தழுவல்: கதையிலிருந்து நாடகப்பிரதி - இளங்கோ நடேசன்
11] குழந்தைகள் நாடகம்: வெளியும் பிரதியும் - அனீஸ் அழநாடன்
கருத்துகள்