ஜெய்பீம்: உண்மையை அறிதலும் எடுத்துரைத்தலும்
தகவல்கள் என்னும் உண்மை
ஜெய்பீம் திரைப்படம், 1995 என ஒரு வருடத்தைக் குறிப்பிட்டுக் கதையை விரிக்கிறது. கடலூர் மாவட்டச் சிறைச்சாலை, சென்னை உச்சநீதி மன்றம், விழுப்புரம் மாவட்டக் காவல் நிலையங்கள், பாண்டிச்சேரி எல்லை ஆரம்பம் எனக் குறிப்பான இடங்களும் எழுத்தில் காட்டப்படுகின்றன. காவல் துறையினரின் சட்டமீறலை விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணைய அதிகாரியின் பெயர் பெருமாள்சாமி (பிரகாஷ்ராஜ் ஏற்றுள்ள பாத்திரம்) என்பதும் சொல்லப்படுகிறது. படத்தின் கதை சொல்லியாகவும் நிகழ்த்துபவராகவும் வரும் மையக்கதாபாத்திரத்தின் பெயர் வழக்குரைஞர் சந்துரு (சூர்யா எற்று நடித்துள்ள புனைவுப்பாத்திரம்) எனச் சொல்லப்படுகிறது. இவ்விரு பெயர்களும் கூட உண்மைப்பெயர்கள் தான்.
படம் முடியும்போது மனித உரிமைகளுக்காக வழக்காடிய சந்துருவின் படங்கள் காட்டப்பட்டுச் சமூகநீதி, மனித உரிமை வழக்குகளை நடத்திய புள்ளிவிவரங்கள் தகவல்களாகக் காட்டப்படுகின்றன. விளிம்புநிலையில் வாழ்ந்தவர்களின் – ஒடுக்கப்பட்ட மக்களின் நண்பராக இருந்து பணம் பெற்றுக் கொள்ளாமல் வழக்காடினார். அவரே பின்னர் நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் குறைந்த காலத்தில் பல ஆயிரக்கணக்கான வழக்குகளை முடித்து நீதி வழங்கிய விவரங்களும் சொல்லப்படுகின்றன. இவற்றையெல்லாம் சொல்லவேண்டும் என நினைத்துத் திரைக்கதை- வடிவத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் த.செ. ஞானவேல். இதன் மூலம் சூர்யா ஏற்று நடித்துள்ள சந்துரு பாத்திரம் ஒரு வாழும் பாத்திரம்; பலருக்கும் தெரிந்த ஆளுமையின் சாயலில் உருவான பாத்திரம் எனச் சொல்ல விரும்பியிருக்கிறார். இவையெல்லாம் நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் இணைந்து 2 டி- எண்டர்டெயின்மெண்ட என்ற படத் தயாரிப்பு நிறுவனத்திற்காகத் தயாரித்துள்ள ஜெய்பீம் (அமேசான்பிரைம் இணையவெளி/ வெளியீடு நவம்பர்-2) என்ற சினிமாவைப் பார்ப்பவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள்; நடந்த நிகழ்வுகள் சார்ந்து, உண்மையின் பக்கத்தில் இருக்கும் தகவல்கள்
புனைவுகளாகத் தகவல்கள்
நேரடியாகத் திரையில் தெரிவிக்கப்பட்டுள்ள இத்தகவல்களைத் தாண்டித் திண்டிவனம் அரசுக்கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேரா.கல்யாணி (பிரபா.கல்விமணி) யின் செயல்பாடுகளை அறிந்திருந்தால் இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள் மேலும் உண்மைத் தகவல்களாகத் தோன்றலாம். அவரும், அவர் தலைமையில் செயல்பட்ட பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கமும், அவருக்குத் துணையாக இருந்த சகோதரி லூசியானாவும் படத்தில் நேரடிப்பெயர்களாக இல்லாமல் மாற்றுப் பெயர்களில் புனைவாக்கப்பட்டுள்ளனர். 1996 இல் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது என்பதும், அதற்குத் தூண்டுகோலாக இருந்த முதல் விதை 1993 இல் அந்தியூர் விஜயா என்ற இருளர் பெண்ணைக் காவல் நிலையத்தில் வைத்துப் பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வும் என்பதும் வரலாற்று நிகழ்வுகள். அந்தியூர் விஜயாவின் வழக்கே பேராசிரியர் கல்யாணியை இருளர் பழங்குடிகள் பக்கம் நகர்த்தியது. அவர் வழியாக பழங்குடிகள் போராட்டம்/உரிமைகள் என்ற சிற்றடையாள அரசியல் தன்மைகொண்ட இயக்க உருவாக்கம் வலுப்பட்டது. பேரா.கல்யாணியின் தொடர்பினாலும், தொடர்பில்லாமலும் இருளர் பழங்குடியினரின் உரிமைகளுக்காகவும் காவல்துறையின் அத்துமீறலை எதிர்த்துப் போராட்டங்களும் பேரணிகளும் நடத்திய கம்யூனிஸ்டுகளும் படத்தின் பின்னணிக்கான நம்பகத் தன்மையை உருவாக்கியவர்கள் (அந்தக் காலகட்டத்தில் நான் புதுவைப் பல்கலைக் கழக நாடகத்துறையில் இருந்தேன்).
ஜெய்பீம் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு இந்த உண்மைத் தகவல்களோடு திரையில் ஒரு புனைவுக்கதை இணை கதையாகச் சொல்லப்படுகிறது. அப்புனைவுக் கதை ஆக்கத்தில் இந்தியச் சட்டங்களின் பாவனைகளும், அவற்றை நடைமுறைப்படுத்தும் காவல்துறை,நீதித்துறை போன்றவை நேரடி மற்றும் மறைமுகமாகச் சந்திக்கும் நெருக்கடிகளும், அவ்வமைப்புகளுக்கு இருப்பதாக நம்பும் அதிகாரத்தின் குருட்டுத் தனமும் இருக்கின்றன. இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள அரசியல் சட்டமும் அதனை ஏற்று நடைமுறைப்படுத்தும் அரசமைப்புகளும் இரட்டைத்தன்மை கொண்டவை. நடப்பில் இருக்கும் எல்லாவகை வேறுபாடுகளையும் கேள்விக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டு நகரும் அதே நேரத்தில், பாதிக்கப்பட்டோரின் பக்கம் இருப்பதாகப் பாவனை செய்துகொண்டும் இருக்கிறது என்பது இயக்குநரின் கருத்தியல். இந்தக் கருத்தியலில் இயங்கும் அமைப்பைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும்; அம்பலப்படுத்த வேண்டும். அதுவே பொறுப்புள்ள கலைஞனின் பணி என்ற புரிதலோடு கதையின் வரிசையையும், கதை நிகழ்வுகளில் பேசப்படும் வசனங்களையும் வெளிப்படவேண்டிய உடல்மொழியையும் எழுதித் தீர்மானித்துக்கொண்டு படத்தை உருவாக்கியுள்ளார். இயக்குநரின் இந்தப்புரிதலிலும் வசனங்களின் மொழிப்பயன்பாட்டிலும் குறைகள் சொல்ல முடியாது; கூடுதல் குறைவுகள் உள்ளன என்று விமரிசிகலாம்.ஓரளவுகச்சிதமாகவும் ஏற்கத் தக்கனவாகவும் உள்ளன. [பல படங்களில் இதுபோன்ற காட்சிகளில் எழுதிச் சேர்க்கப்படும் சுட்டுத் தொடர்களும் சொற்களும் -பஞ்ச் டயலாக்ஸ்- இப்படத்தில் தவிர்க்கப்பட்டுள்ளன. அப்படிப் பயன்படுத்தப்பட்ட சுட்டுமொழிகள் பாத்திர உருவாக்கத்திற்குப் பயன்படாமல் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர்களின் பிம்ப உருவாக்கத்திற்கே பயன்பட்டன என்பதை எம்ஜி ராமச்சந்திரனின் படங்கள் தொடங்கி ரஜினிகாந்த், விஜய்காந்த், கமல்ஹாசன் வழியாக விஜய், தனுஷ் வரை பார்த்திருக்கிறோம்]
நடப்பும் புனைவும்
படம் எளிய மனிதர்களின் நெகிழ்ச்சியான கதையொன்றைச் சொல்லத் தொடங்குகிறது. இருளர் பழங்குடித் தம்பதிகளான ராஜாகண்ணு -செங்கேணி இணைக்குள் இருக்கும் காதலும் அன்பும் வெளிப்படும் சின்னச்சின்ன நிகழ்வுகள் கொண்ட புனைவு. ஓலைக் குடிசையைக் கல்கட்டடமாகக் கட்டிவிடும் விருப்பம் ஆகக்கூடிய ஆசையாக இருக்கிறது. ஆசை வெளிப்படும் அந்த இரவு பெய்த மழையிலேயே குட்டிச்சுவர் இடிந்து நீரில் போவதும், அந்தக் குடிசை போடப்பட்டிருக்கும் இடம்கூட அவர்களின் சொந்த இடம் அல்ல என்பது நடைமுறை உண்மை.
இருளர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வேட்டைகள்தான். புகைமூட்டும்போட்டு எலி வேட்டையாடுவது தொடங்கி,தோட்டக்காடுகளில் அழிவை ஏற்படுத்தும் பன்றிகளை வேட்டையாடுவது வரை தயக்கமில்லாமல் செய்பவர்கள் இருளர் ஆண்கள். பயப்படுபவர்களின் வாழ்விடங்களுக்குள் நுழைந்து அச்சமூட்டும் பாம்புகளைப் பிடிப்பது அவர்களின் திறன்சார்ந்த தொழில் மட்டுமல்ல; சாதிசார்ந்த அடையாளமும்கூட. அவர்களுக்கு நிலையான இடம் மட்டுமல்ல; தொழிலும் கிடையாது. தங்கியிருக்கும் இடத்தைச் சுற்றியிருக்கும் ஊரார் சொல்லும் வேலைகளைச் செய்து அன்றாடப் பொழுதைக் கழிப்பவர்கள் இருளர் பழங்குடிகள். ராஜாகண்ணு- செங்கேணி குடும்பத்தோடு தொடர்புடைய முசுப்பாண்டி, குட்டப்பன் குடும்பங்களின் உறுப்பினர்களும் அவர்களின் வாழ்விட வெளியும் சடங்குகளும் ஆடல் பாடல்களும் கதைக்கு லயத்தை உருவாக்கியுள்ளன.
ராஜாகண்ணு -செங்கேணி மற்றும் இருளர் குடியிருப்பினர் வாழ்க்கைக்குள் இந்தியக் காவல் துறையின் வழக்கமொன்று இடையீடு செய்கிறது. அந்த இடையீடு தீடீரென்று நடக்கும் இடையீடல்ல. காவல்துறையின் செயல்பாட்டைக் காட்டுவதற்காகப் பொய்வழக்கு அல்லது சந்தேக வழக்குப் போடும் நடைமுறை அது. அத்தகைய வழக்குக்குத் தெரிவுசெய்யும் மனிதர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்களே. எப்போதும் கடைப்பிடிக்கும் வழக்கத்தின் தொடர்ச்சி. வழக்கமான நடைமுறையோடு, பாம்புபிடிப்பதற்காக ஊர்த்தனக்காரரின் வீட்டுக்குள் நுழைந்த ராஜாகண்ணுவின் கைரேகைப் பதிவையும் சேர்த்துப் பொய்வழக்குப் போடும் காவல் துறையின் செயல், அக்குடும்பத்தின்/ கூட்டத்தின் வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிக் குடும்பத்தலைவனான ராஜாகண்ணுவை இல்லாமல் ஆக்குகிறது. மற்ற இருவரும் தொடர்ந்து சிறைக்குள் இருக்கிறார்கள்.
பொய்வழக்கால் குடும்ப லயத்தைத் தொலைத்துவிட்டுக் கணவன் இருக்கிறானா? இல்லையா? என்ற கேள்வியோடு காவல் நிலையம், நீதிமன்றம், மனித உரிமை அமைப்பு, போராடும் கட்சி அமைப்பு என அலையத் தொடங்குகிறாள் சேங்கேணி. அவள் அலையத்தொடங்கியபின் கதை இந்தியச் சட்ட நடைமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கும் திசைக்குள் நகர்கிறது. பேராசிரியரின் வழிகாட்டல் மூலம் வழக்குரைஞர் சந்துருவைச் சந்திக்கிறாள் செங்கேணி. அவளுக்காகக் களம் இறங்கும் சந்துரு, பாதிக்கப்பட்டோர் பக்கம் நிற்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்பும், சாட்சியங்களைத் தேடித் தரவுகளத் திரட்டி வாதாடும் திறமையும் கொண்ட வழக்குரைஞர். அங்கிருந்து அரசுத்தரப்புக்கும் வழக்கறிஞர் சந்துருவுக்குமான சட்டமோதல் களமாக மாறுகிறது படம்.
தமிழ்நாட்டுக்காவல் துறை பொய்வழக்குப் போடுவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறது. அதனால் பாதிக்கப்படுபவர்கள் ஒடுக்கப்பட்ட – விளிம்புநிலை மக்களே என்பதை முதல் காட்சியாக்கிக் கவனம் ஈர்க்கும் படம், சந்துருவின் அயராத முயற்சியாலும் ஈடுபாட்டாலும் அப்பாவிக்குடும்பம் ஒன்றின் வாழ்க்கையைச் சிதைத்த காவலர்கள் மூவருக்கும் தண்டனை கிடைத்தது என்பதோடு முடிவடைகிறது. அத்தோடு உண்மையாகவும் மனவலிமையோடும் அதிகாரம், பணம் போன்றவற்றிற்காக விட்டுக் கொடுக்காத நெஞ்சுரத்தோடும் போராடும் பெண்ணின் மூலம் இந்திய நீதிமன்றம் தனது இருப்பை உறுதி செய்துகொண்டது என்பதாகவும் காட்டி முடிக்கிறது.
ஜெய்பீம் சினிமாவில் வரும் வழக்குரைஞர் சந்துருவின் செயல்களில் ஒருவிதச் சாகசத் தன்மை வெளிப்படுகிறது என்றாலும், அவரது வாதத்திறமைகளில் வெளிப்படுவது புத்திசாலித்தனம். அந்தப் புத்திசாலித்தனமும் மனித நேயமும் சட்டத்தின் வழியான உரிமைகளை நிலைநாட்டவேண்டும் என்ற பிடிவாதமும் கொண்ட வழக்குரைஞர் சந்துருவின் அடையாளம் என்பதைத் தள்ளிவிட முடியாது. அந்த அடையாளத்தோடு தான் அவர் பின்பு நீதிபதியாகிப் பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க உதவினார். அதே அடையாளத்தோடு இப்போதும் வாழும் நபராக இருந்து கொண்டிருக்கிறார்.
கலையாக்கமும் நோக்கங்களும்
எல்லாவகையான கலையாக்கங்களுக்கும் கொஞ்சம் நடந்த நிகழ்வுகள் தேவை. நடந்த நிகழ்வுகள் என்றவுடன் நேரடியாகப் பொருள் கொள்ளவேண்டியதில்லை. நடந்த நிகழ்வுகளின் சாயல்களே போதும். அதன் மேல் கட்டப்படும் புனைவுக்கூறுகளே கலை, இலக்கியத்தின் ஆதாரமான பொருண்மை. அதிலும் சினிமா, நாடகம் போன்ற வெகுமக்கள் கலைகளில் இவையே நம்பகத்தன்மையை உண்டாக்குகின்றன. நம்பகத் தன்மையே பார்வையாளர் பரப்பை விரிவாக்கும்; ரசிக்கச்செய்யும்; கொண்டாடத் தூண்டும். அதனைத்தாண்டி அவர்களின் வாழ்க்கையைக் கலையின் பகுதிகளோடும் சூழலோடும் பொருந்த வைத்துப் புரிந்துகொள்ளத்தூண்டும்; மாற்றங்களையும் முன்னெடுக்கும். இதனைப் புரிந்துகொண்டு தங்களின் கலையாக்க முயற்சிகளைத் தொடர்பவர்கள் எப்போதும் கவனம் பெறுகிறார்கள்; வெற்றியடைந்தவர்களாக மாறுகிறார்கள்; மக்கள் கலைஞர்கள் என்ற அங்கீகாரம்கூடக் கிடைக்கிறது.
ஜெய்பீம் படத்தின் இயக்குநர் தனது படத்தில் உண்மைத்தகவல்களையும் உண்மை நிகழ்வுகளின் சாயல்கொண்ட புனைவுக்காட்சிகளையும் சரிவிகிதத்தில் கலந்து தந்துள்ளார். அப்புனைவுக்காட்சிகளும் கூடக் கடந்த கால் நூற்றாண்டில் மனித உரிமைப் போராட்டக்காரர்களும், அமைப்புகளும் வெளிக்கொண்டுவந்த உண்மைச் சம்பவங்களின் சாயலிலேயே இருக்கின்றன. காவல் துறையினர் குற்றவாளிகளாக முடிவுசெய்து கொண்டு தேடிச்சென்று குடும்பத்தினரையும் சுற்றியிருப்பவர்களையும் படுத்தும்பாடும் அவர்கள் மீது செலுத்தும் வன்முறையும் வீரப்பனைத் தேடிச்சென்ற காவல்துறையினர் செய்த செயல்களாகத் திரட்டப்பட்ட செய்திக்கோவைகளை நினைவூட்டுகின்றன. அதேபோல் காவல்நிலைய விசாரணை அறைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்கிறோம் என்ற பெயரில் நடத்தும் குரூரங்களும், (உடலைக் கட்டித்தூக்குவதும், விரல்களில் வலியேற்படுத்தி ரத்தக்காயங்கள் ஏற்படுத்துவதும், பெண்களின் ஆடைகளைக் களைவதும், பாலியல் அத்துமீறல்களுமாக வரும் காட்சிகள் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் இதேபோன்ற துன்பங்களை அனுபவித்த பத்மினியின் வாக்குமூலங்களை நினைவூட்டு கின்றன.. பத்மினியின் வாக்குமூலத்தைச் சேகரித்து ஒலிநாடாகவும் சிறுநூலாகவும் வெளியிட்டது புதுவை மக்கள் உரிமைக்கழகம். அதனை அடிப்படையாகக் கொண்டு வார்த்தை மிருகம் என்றொரு நாடகத்தை எழுதித்தந்தார் ரவிக்குமார். நான் இயக்கி மேடையேற்றியுள்ளேன்.
பார்வையாளர்களிடம் – பொதுச்சமூகத்திடம் குற்றவுணர்வை உண்டாக்கும் நோக்கத்தோடு படமாக்கிய விதத்திற்காக படத்தின் இயக்குநர் ஞானவேல் பாராட்டப்பட வேண்டியவர். மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவர அந்த அமைப்பு கடைப்பிடிக்கும் முறை உண்மை அறியும் குழுவை அனுப்புவது. உண்மை அறியும் குழுவினர் முன்வைக்கும் அறிக்கையின் விவரிப்பு முறையை படத்தின் சொல்முறையாகக் கையாண்டுள்ளார் இயக்குநர். உண்மை அறியும் குழுவினர் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் விவரிக்கத் தொடங்குவதுபோலத் தொடங்கி, வார்த்தைகளுக்குப் பதிலாகக் காட்சிகள் விரிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தியை அவர் தேர்வுசெய்தார் என்று சொல்வதை விட, ஒரு பத்திரிகையாளராகத் தனக்குக் கிடைத்த அனுபவத்தை உத்தியாக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். அந்த உத்தி அவரது கலையாக்கத்தையும் அதன் நோக்கத்தையும் முழுமையாக்கியிருக்கிறது.
தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், நடிகராகவும் இந்தப் படத்தைத் தேர்வு செய்ததின் மூலம் சூர்யா சிவக்குமார் தனது திரைப்பயணத்தில் பொறுப்பான மனிதராக வெளிப்பட்டுள்ளார். இயக்குநரோடு இணைந்து பணியாற்றியுள்ள ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர், படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், கலை இயக்குநர், ஆகியோரும் வித்தியாசமான சினிமா ஒன்றில் பணியாற்றுகிறோம் என்ற உணர்வோடு செயல்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் குறிப்பிட்ட வட்டாரத்தைக் களமாகக் கொண்டு, தமிழில் யோசித்து உருவாக்கப்பட்டுள்ள படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் வழியாகவும் ஆங்கிலத் துணைத்தலைப்புகள் வழியாகவும் உலகப் பார்வையாளர்களுக்குப் போய்ச்சேர உள்ளது.
திரையில் வரும் பாத்திரங்களை ஏற்றுள்ள நடிகர் மணிகண்டன் (ராஜகண்ணு) லிஜோமால் ஜோஸ் (செங்கேணி) பிரகாஷ்ராஜ் (பெருமாள்சாமி) ஆகியோர் மட்டுமல்லாமல் எதிர்மறை பாத்திரங்களான இன்ஸ்பெக்டர், காவலர்கள், அரசாங்க வழக்குரைஞர்கள் என அனைவரும் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர். இருளர் பழங்குடியினரைத் தாழ்வான நிலையில் வைத்துப் பார்க்கும் ஊர்க்காரர்களாக வருபவர்களும், பொய்ச்சாட்சி சொல்லும் நபர்களும் கூட நடிக்கிறார்கள் என்பது வெளிப்படாமல் நடித்துள்ளனர். பல இடங்களில் வசனங்கள் மூலமாகவும் சில இடங்களில் குறியீட்டுக் காட்சிகள் மூலமாகவும் அழுத்தம் பெற வைத்துள்ளார் இயக்குநர். கல்வி அறிவே அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பதைக் காட்ட, செங்கேணியின் குழந்தை கால்மேல் கால்போட்டுச் செய்தித்தாள் படிக்கத் தொடங்கும் காட்சி அப்படியொரு குறியீடே. நீதிமன்றக்காட்சிகள் இயல்பாக நகர்கின்றன. பிரச்சினையைப் பேசும் வகைமையில் எடுக்கப்பட்ட படம் என்ற வகையில் முழுமையான ஒரு படமாக ஜெய்பீம் வந்திருக்கிறது.
“ஜெய்பீம் என்றால் ஒளி; ஜெய்பீம் என்றால் அன்பு
ஜெய்பீம் என்றால் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம்
ஜெய்பீம் என்றால் பலகோடி மக்களின் கண்ணீர்த்துளி”
என்ற மராத்திய கவிதை வரிகள் கடைசியில் காட்டப்படுகிறது. உண்மையில் இந்தியாவில், ஜெய்பீம் என்ற சொல் ‘உண்மை அறிவும் அதனை ஓயாது எடுத்துரைத்தலும் வேறுபாடுகளைக் களைதலுக்குமான போராட்ட வாழ்க்கையும்’ என்பதோடு பொருந்தக் கூடியது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று எழுதிய அறிஞர் பி.ஆர். அம்பேத்கர் தனது வாழ்க்கை முழுக்க அதைத்தான் செய்து கொண்டிருந்தார். அதனை முன்மொழிந்துள்ள ஜெய்பீம், சாதிய இந்தியாவின் நீண்ட வரலாற்றையும் நிகழ்கால இருப்பையும் விமரிசனப்பார்வையோடு உரக்க முன்வைக்கிறது. தக்க ஆதாரங்களோடு உருவாக்கிய புனைவுமொழியைக் கொண்டிருக்கிறது. எப்போதும் நாயகர்களின் போலிப் பிம்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்த தமிழ்த்திரை உலகத்தில் ஆச்சரியமான பெரும்பாய்ச்சல் இந்தப்படம்.
கருத்துகள்