கவிதாசரண்: நினைவுகள்

கவிதாசரண் என்னும் பெயருக்குரிய உடலின் இயக்கம் நின்றுவிட்டது எனச்சொல்லும் அஞ்சலிக்குறிப்புகளைப் பார்க்கிறேன். அந்தப் பெயர்கொண்ட மனிதரைச் சந்தித்த இடத்தையும் நாளையும் நினைத்துக் கொள்கிறது மனம்.

அந்தக் கூட்டத்திற்குத் தற்செயலாகவே சென்றேன். முதல் நாள் மாலை தி.நகர் முன்றில் புத்தகக் கடையில் சந்தித்த சிறுகதை எழுத்தாளர்/ நாடகாசியர் ஜெயந்தன் அடுத்த நாள் கூட்டம் பற்றிச் சொல்லிவிட்டு நடக்கும் இடத்திற்கு வரும் வழிகளையும் சொல்லியிருந்தார். சென்னை மந்தைவெளியில் ஒரு பள்ளிக்கட்டிடத்தில் நடந்த அந்தக் கூட்டத்தை இலக்கியக்கூட்டம் என வரையறுத்துச் சொல்ல முடியாது. அந்தக் காலகட்டத்தின் எந்தக் கூட்டமாயினும் இலக்கியம் பற்றி மட்டுமே விவாதிப்பதில்லை. நமது காலகட்டத்தின் முதன்மையான முரண்பாடு எது என்ற கேள்விக்கான பதிலைத் தேடும் விவாதங்கள் எல்லாத் தளங்களிலும் நடந்துகொண்டிருந்த காலகட்டம். கூட்டம் முடிந்து வெளியேறியபோது அவரும் வந்தார். அதுவரை அவரது முகத்தைப் படமாகக் கூடப் பார்த்ததில்லை. ஜெயந்தன் என்னை அவருக்கும் அவரை எனக்கும் அறிமுகம் செய்துவைத்தார். இருவருக்கும் பெயர்கள் அ.ராமசாமி, கவிதாசரண் எனப்பெயர்கள் தெரிந்திருந்தது; முகங்கள் அறிமுகம் இல்லை.
அவரது பெயரிலேயே - கவிதாசரண் என ஓர் இதழை நடத்துகிறார் என்பது தெரியும். அதேபோல் எனது முகவரியிலிருந்து ஊடகம் என்றொரு இதழ் வருகிறது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதனை அச்சிடுவதற்காகச் சென்னைக்குப் போயிருந்த போதுதான் அவரைச் சந்தித்தேன். பெரியார் உருவாக்கி உருட்டிவிட்ட பிராமணர்X பிராமணர் அல்லாதார் என்ற இரட்டை எதிர்வில் பிராமணரல்லாதாரின் பக்கம் நின்று தீவிரமாக இயங்கிய இதழாகக் கவிதாசரணை நடத்திக் கொண்டிருந்தார் அவர். அந்த இரட்டை எதிர்வை தலித் X தலித்தல்லாதார் என்ற எதிரிணையாக மாற்றியது நிறப்பிரிகையின் வரவு. அதன் பிறகு விவாதங்கள் தமிழ்ச் சிந்தனைப் பரப்பு தலித் - தலித்தல்லாதார் - பிராமணர் என மும்முனை மையங்களாக மாறின. நிறப்பிரிகை தொடங்கிவைத்த அந்த அலையை எல்லாச் சிற்றிதழ்களும் எடுத்துக்கொண்டன. கவிதாசரணும் இந்த விவாதத்தில் இறங்கியதோடு காத்திறமான கட்டுரைகளை வெளியிட்டது. எனது முகவரியிலிருந்து வெளிவந்த ஊடகம் இதழில் வெகுமக்கள் ஊடகங்கள், வெகுமக்கள் பண்பாடு, அதன் பின்னணியில் இயங்கும் நுண் அரசியலை மையமிட்ட கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தோம். நான்கு இதழ்களோடு ஊடகம் நின்றுபோன நிலையில் அப்போது வந்த சிற்றிதழ்களான கோடு, தீம்தரிகிட, புதிய கோடாங்கி, புதிய நம்பிக்கை போன்றவற்றில் மட்டுமல்லாமல் மாத இதழ்களாக வந்த சுபமங்களா, காலச்சுவடு, உயிர்மை, தீராநதி முதலான இடைநிலை இதழ்களிலும் எழுதத்தொடங்கினேன். அப்போது கவிதாசரணிலும் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உங்கள் கிராமங்களும் உங்கள் நகரங்களும் என்ற முதல் கட்டுரையை 2002/ஜூன் -ஜூலை/ இதழில் எழுதினேன். இரண்டு மாதத்திற்கொரு இதழ் என அச்சிடப் பெற்றாலும் ஆண்டுக்கு நான்கு இதழ்களையே அச்சிட்டார் கவிதாசரண். கவிதாசரணில் எழுதிய ஆறு கட்டுரைகள் 2005 இல் வெளிவந்த பிம்பங்கள் அடையாளங்கள்( உயிர்மை வெளியீடு) என்ற எனது நூலில் இடம்பெற்றன. என்னைப் போலவே புதியபுதிய இளைஞர்களைத் தேடி எழுதவைத்தார். பிராமணிய அடையாளங்களோடு உருவாக்கப்படும் நிகழ்வுகளையும் எழுதும் எழுத்தாளர்களையும் நேரடியாக விமரிசித்துக் கட்டுரைகள் வெளியிடத் தயங்காதவர் அவர். தனது வாழ்நாள் பங்களிப்பாகச் சில நூல்களைக் கொண்டுவரவேண்டுமென நினைத்துக் கால்டுவெல்லின் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" (A comparative Grammer of the Dravidian or South Indian Languages) என்ற நூலை 2008 இல் கவிதாசரண் பதிப்பக வெளியீடாகக் கொண்டுவந்தார்.
இந்திய விடுதலைக்கு முன்னால் நிலவிய சுதேசியம்X காலனியம் என்ற நாடுதழுவிய முரண்பாட்டை மறுத்து, தமிழ்நாட்டை வேறுவிதமாகச் சிந்திக்க வைத்தவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி. அவரால் உருவாக்கி உருட்டி விடப்பட்ட பிராமணர் X பிராமணரல்லாதார் என்ற முரண்பாடு இன்றளவும் நீள்கிறது. அப்படி நீளும் வரலாற்றில் ஒரு காலகட்டத்துத் தொடர்ச்சியைக் கவிதாசரண் என்ற இதழ் இயக்கமாக நின்று நகர்த்தியது. தனது பெயரை ஒரு இயக்கத்தின் பகுதியாக மாற்றிவிட்ட கவிதாசரணின் உடல் இல்லாமல் போகலாம். ஆனால் அந்தச் சிந்தனையாகக் கவிதாசரண் இருந்துகொண்டிருக்கும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்