புதுமுகங்கள்; புதிய பாதைகள் - புல்புல் இஸபெல்லா, ஈழவாணி

 


திறக்கும் வெளிகளுக்குள் நுழைவது மட்டுமல்ல; புதியபுதிய வெளிகளையே திறக்கிறார்கள் பெண்கள். பெண்களின் நுழைவுகள் ஆச்சரியப்பட வேண்டியனவல்ல. அடையாளப்படுத்தப்பட வேண்டியன


புல்புல் இஸபெல்லாவின் ஐஸ்பழம்

பாலியல் வேறுப்பாடுகளை விவாதிக்கும் பெண்ணியச் சொல்லாடல்கள் முன்வைக்கும் கருத்தியலில் ஒன்று உடலைப் பேசுவது. ஆண் நோக்கில் பெண்ணுடல் பேசப்பட்ட வரலாறும் இலக்கியத்தின் வரலாறும் ஒன்றுதான். தமிழில் கவிதையே முதலில் தோன்றிய வடிவம் என்பதால் கவிதையின் வரலாற்றோடு பெண் உடல் எழுதப்பட்ட வரலாற்றை இணையாகச் சொல்லலாம். பெண் உடல் எழுதப்பட்ட முறைமைக்கும் ஆணுடல் எழுதப்பட்ட முறைமைக்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு. ஆண்கள் ஆணுடலை வீரம், செழுமை, மூர்க்கம் சார்ந்து எழுதிவிட்டுப் பெண்ணுடலைக் காமம், மென்மை, புனிதம் ஆகியவற்றின் வெளிப்பாடாக எழுதியிருக்கிறார்கள். இந்தக் கட்டமைக்கப்பட்ட ஆண்நோக்குப் பார்வையை சித்தர்கள் எதிர்நிலையில் மறுத்துக் குரோதத்தோடு வெறுப்புக் காட்டியுள்ளனர். பக்தியின் எல்லைக்குள் நின்று பெண்ணுடலைப் பேசிய காரைக்காலம்மையாரும் ஆண்டாளும் கூட ஒன்றுபோலப் பெண்ணுடலைப் பேசவில்லை. உடலை இன்மையாக்கிக் கொள்வதை முன்மொழிந்த காரைக்காலம்மை யிடமிருந்து ஆண்டாள் உடலின் குதூகலத்தை முன்வைப்பதில் வேறுபடுகிறார்.
நவீனத்துவப் புனைவுக்காலத்தில் கதைகள் எழுதவைந்த லட்சுமி, சூடாமணி, அம்பை போன்றோர் உடலைப் பேசுவதைத் தவிர்த்து மனதைப்பேசினார்கள். ஆனால் சிவசங்கரி, இந்துமதி போன்றவர்கள் ஆண் நோக்கிலேயே பெண்ணுடலைக் கதைகளில் எழுதினார்கள். இந்தப் பார்வையை மாற்றியவர்கள் 1990 களில் எழுதவந்த நவீனத்துவப் பெண்கவிகளே. ஆண் நோக்கில் பெண்ணுடலைப் பேசுவதற்கு மாறாகப் பெண் நோக்கில் பெண்ணுடலைப் பேசுவதைக் குட்டிரேவதி, லீனா மணிமேகலை, சல்மா, சுகிர்தராணி போன்றவர்களின் கவிதைப்பனுவல்கள் முன்வைத்தன. கவிதைகள் முன்வைத்த அந்தப் பார்வையை முன்னெடுத்துப் புனைகதைப் பனுவல்கள் எழுதும் பெண்களைத் தேடவேண்டியுள்ளது.
பெண்ணுடலைப் பெண்நோக்கில் எழுதுவதன் மூலம் அதன் மீதான கவர்ச்சியையும் புனிதங்களையும் இல்லாமல் ஆக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு தனது சினிமா குறித்த பார்வையையும் தேடல்களையும் முன்வைக்கும் புல்புல் இஸபெல்லா, புனைகதை களாகச் சில புனைவுகளையே இதுவரை அச்சிட்டுள்ளார். காலச்சுவடுவிலும் நீலத்திலும் அவர் எழுதிய கதையை அடுத்து இப்போது வந்துள்ள (டிசம்பர்21)உயிர்மையில் ஐஸ் பழம் என்ற கதையை வாசித்தேன்.
இசுலாமியக் குடும்பத்தில் பள்ளிக்குச் செல்லும் சிறுமிக்கு உள்ள கட்டுப்பாடுகளை முன்வைப்பதோடு, அவளது இயக்கத்தைத் தடுத்துவிட நினைக்கும் ஆணின் உடல் சார்ந்த அச்சமூட்டலை விவரிக்கிறது கதை. இந்த முதன்மை நோக்கத்தோடு இன்னொரு நோக்கத்தையும் இஸபெல்லாவின் கதை கொண்டிருக்கிறது. பள்ளிப்பருவத்துச் சிறுமியான சவுதா, அந்த நேரத்தில் காட்டப்பட்ட ஆண் குறியால் ஏற்பட்ட அருவருப்பும் அச்சமும் வேறுவேறு ரூபங்களில் தொடர்வதைக் காட்ட நினைக்கிறது. பள்ளிக்கூடம் தரும் பெண்ணுக்கான வெளியைத் தடுக்க நினைக்கும் ஆணுடலின் நீட்சியினை - தொந்தரவை-சமூக ஊடகங்களில் இயங்கும் ஆண்களின் மனவக்கிரத்தோடு இணைவைக்க முயன்றுள்ளது. கதையின் அமைப்பில் இடம் பெறும் கடைசிக் காட்சியின் வழியாக அதைச் செய்கிறார். இதன் மூலம் இதுவரை கட்டியெழுப்பப்பட்ட ஆணுடலைப் பற்றிய பார்வையை மாற்றிக் கட்டமைக்க முயலும் நோக்கத்தை முன்வைக்கிறார். ஆனால் இதனைச் செய்யக் கதையின் அமைப்பில் ஒரு மாற்றத்தைச் செய்திருக்கலாம் என்று கூறத்தோன்றுகிறது. பழைய நிகழ்வை நேர்க்காட்சியாகத் தொடங்கி, தூக்கம் கலைக்கும் சமூக ஊடகத்தோடு தொடர்பு படுத்தியுள்ளார். இதற்குப் பதிலாகக் கதையின் கடைசியில் வரும் மன அவஸ்தையை -தூங்கவிடாமல் செய்த காட்சியை விவரித்துவிட்டுப் பழைய நிகழ்வை நினைவாக்கியிருந்தால் கதையின் சொல்முறை சரியாக இருந்திருக்கும்.

நந்திக் குவேனி- தொல்கதையின் நிகழ்கால வடிவம்
----------------------------------------------------------------------
இலங்கைத் தீவுக்குள் நிலவும் தமிழர்x சிங்களர் கலப்பும் முரண்பாடும் நீண்ட கால வரலாறு கொண்டது. இதற்கு ஆதாரமாக இருக்கும் தொல்கதையின் நாயகியின் பெயர் குவேனி. அரச குடும்பத்துக்கு வெளியே இருந்த பேரழகியான குவேனியின் சாபச் சொற்களே இலங்கைத் தீவின் துயரங்களுக்குக் காரணம் என்ற நம்பிக்கை பொதுப்புத்தியில் இப்போதும் இருக்கிறது. புயல், மழை, நில அதிர்வுகள் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு மட்டுமல்லாமல், வரலாறு முழுவதும் வெவ்வேறு காலகட்டத்தில் ஏற்பட்ட போர்கள், மத, மொழி, இனமோதல்கள் என எல்லாவற்றிற்கும் காரணம் அவளது சாபமே என்ற நம்பிக்கையின் நீட்சியாகக் குவேனி என்னும் தொல்கதை மாற்று வடிவங்களை எடுத்துக்கொண்டே இருக்கிறது.
குவேனியின் கதையைப் போர்க்காலத்திற்குப் பிந்திய சூழலில் நிறுத்தியுள்ளது இப்படம். இலங்கைக்குள் நடக்கும் சீனாவின் நுழைவை விவாதப்படுத்த நினைத்துக் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சொந்த மக்களின் நலனைக் கவனத்தில் கொள்ளாமல் தனது நலனை மட்டுமே முதன்மையாக நினைக்கும் குவெனியைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் பார்வையின் தாக்கம் நேர்மறையானதாக அமையுமா? என்பது விவாதத்திற்குரியது.
குவேனியின் கதையைச் சொல்வதிலும் நிகழ்காலத்தோடு தொடர்பு படுத்துவதிலும் சிக்கல் இல்லாமல் காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஈழவாணி. ஆனால் சினிமாவின் அசைவுமொழிகள் அதிகம் பயன்படுத்தப்படவில்லை. கடற்கரை வெளியைப் பயன்படுத்தி அசைவுகளையும் ஓசையையும் தீவிரமான சினிமா மொழியாக மாற்றியிருக்க வாய்ப்புண்டு. அதற்குப் பதிலாக மேடை நாடகத்தின் உயிர்ப்பான நடிகர்களின் குரல்சார்ந்த நடிப்புத் திறன்மீது கூடுதல் அழுத்தம் கொண்டிருக்கிறது இப்படம். நடிப்புக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் காமிராவுக்கான நடிப்பை வெளிப்படுத்தாமல் மேடைக்கான நடிப்பைத் தரும் கலைஞர்களாக வெளிப்பட்டுள்ளனர்.
பதிப்பு, இதழியல் என ஏற்கெனவே தனது வெளிப்பாடுகளைக் கவனப்படுத்திய புவரசி மீடியாவின் நந்திக்குவேனியை நடிகர்களின் நடிப்புக்காகப் பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்