வாழ்த்துகள் அம்பைக்கு.....


இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. பெண்மையச் சொல்லாடல்களை வெளிப்படுத்தும் வடிவமாகத் தனது சிறுகதைகளைத் தொடர்ந்து தந்துகொண்டிருந்தவர். இதுவரை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களின் பங்களிப்புகளோடு ஒப்புநோக்க, இந்த விருது அவருக்குத் தாமதமாகவே தரப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். கட்டுரைகள், சிறுகதைகள் என்ற இரு வடிவங்களில் அவரது வெளிப்பாடுகள் இருந்தபோதிலும் சிறுகதையே அம்பையின் அடையாளம்.
எனது வாசிப்பின் தொடக்கக் காலத்திலிருந்தே அவரது கதைகள் எனது கவனத்திற்குரியனவாக இருந்துள்ளன. தொடக்ககாலக் கதைகளில் நவீனத்துவத்தையும் இந்தியமரபையும் முரணிலையில் நிறுத்தி, மரபை விமரிசனப்பார்வையோடு விவாதித்து நவீனத்துவ வாழ்க்கைக்குள் நகர வேண்டிய தேவையை வலியுறுத்திய பல கதைகளை எழுதியவர் அம்பை. இந்தப்பார்வை எனக்கு உடன்பாடு என்ற நிலையில் எனது விருப்பத்திற்குரிய எழுத்தாளராக இருந்து வந்தார். இந்தியக் குடும்ப அமைப்பு, திருமண உறவுகள், சடங்குகளாலும் வழிபாடுகளாலும் பெண்ணுலகம் குறுக்கப்படுதலின் கேடுகள், தாய்மை, மனைவி, மகள் போன்ற பாத்திரங்களின் மீது கட்டமைக்கப்படும் புனிதங்களால் பெண்கள் சந்திக்கும் அவல வாழ்க்கை, தனித்திருப்பதில் கிடைக்கும் விடுதலை உணர்வு, பயணங்களில் ஆர்வம் கொண்ட பெண்கள், பணியிடங்களில் தன்னடையாளத்தோடு வாழ்பவர்களை ஆண்மையச் சமூகம் பார்க்கும் பார்வை, உடலின் இயல்பான வெளிப்பாடுகளான காதலையும் காமத்தையும் அடக்கப்படவேண்டிய உணர்வுகளாக உருவகப்படுத்துவதன் மூலம் பெண்களிடம் ஏற்படும் உளச்சிக்கல்கள் என அவரது கதைகளின் சொல்லாடல்கள் பெரும்பாலும் பெண்மையச் சிந்தனைகளால் நிரம்பியவை. அந்த வகையில் பெண்ணியம் என்னும் மேற்குலகக் கருத்தியலைச் சிறுகதைகள் வழியாகத் தமிழ்ப் புனைவுக்குள் வீச்சாகக் கொண்டுவந்த முன்னோடி.
இந்தப் பார்வையும் கருத்தியலும் அம்பையின் எழுத்துகளில் அப்படியே தொடர்கின்றன்ன என்று சொல்ல முடியாது. பெரும் திசைவிலகலைக் கண்டிருக்கிறது. குறிப்பாக இந்திய மரபு, இந்தியக் குடும்ப அமைப்பு, அதன் உறுப்பினர்களிடையே இருக்கும் உறவுநிலை, பிணைப்புகள் போன்றவற்றை விமரிசிக்காமல் ஏற்கும் மனநிலைக்கு மாறியிருக்கிறார்.
இந்தத் திசைவிலகல் அண்மையில் அவர் எழுதிய இந்தக் கதையில் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. கதையின் தலைப்பு: இரு பைகளில் ஒரு வாழ்க்கை. கோவிட் தடைக்காலத்திற்குப் பிறகு திரும்பவும் வரத்தொடங்கிய உயிர்மையின் (அக்டோபர், 2021) முதல் இதழில் வந்துள்ளது.
மும்பை நகரப்பின்னணியில் மழைக்கால வாழ்க்கைப்பாடுகளைப் பேசுகிறது கதை. அடுக்கு மாடிக் குடியிருப்பு வாசியான கதைசொல்லியின் எண்ணவோட்டங்களுக்குள் நிகழ்கால இருப்பாக அவரது தீர்மானமும் முடிவுகளும், கடலோரக் குடிசைப்பகுதி மனிதர்களின் எண்ணவோட்டங்களோடு இணைவைத்துக் காட்டப்பட்டுள்ளன. அரசமைப்புகளின் பொறுப்பின்மையையும் இயற்கை உருவாக்கும் அச்சவுணர்வையும் ஏற்றுக்கொள்வதில் இருவேறு வர்க்கப்பெண்களுக்கும் வேறுபாடுகள் இல்லை என்பதாகக் காட்டும் இணைவைப்பு அது.
அதே கதைக்குள் கடந்தகாலப் பயணம் ஒன்றிருக்கிறது. நினைவுப் பாதையில் வந்துபோகும் அந்த நினைவோட்டத்தில் கதைசொல்லியின் அமெரிக்கக் கணவனும் பிள்ளையும் வருகிறார்கள். அவர்களின் தொடர்ச்சியான நிராகரிப்பைத் தாங்கமுடியாமல் விவாகரத்து வாங்கிக் கொண்டு இந்தியா திரும்பியதை நினைத்துப் பார்த்துக்கொள்ளும் பகுதியாக அந்த நினைவோட்டம் அமைக்கப்பட்டிருந்தது. விமானத்தில் இரண்டு பெட்டிகளில் கொண்டுவரும் அளவுக்குப் பொருட்கள் இருந்தபோதும், இரண்டு பைகளில் அடங்கக்கூடிய பொருள்களோடு இந்தியா திரும்பியதை நினைத்துப் பார்க்கிறது.
அமெரிக்க மனத்தோடு - தன்னிலையோடு- அமெரிக்கக் கணவனும் மகனும் காட்டும் உதாசீனமும் நிராகரிப்பும், தனி மனுசியாகத் தன்னை நிராகரிப்பாகத் தோன்றவில்லை. இந்தியத் தன்மைகளை - பெருமைகளை ஏற்க மறுக்கும் அமெரிக்க/ மேற்கத்திய மனோபாவம் கொண்டவர்களின் நிராகரிப்பு என்ற ஆதங்கம் கோபமாக வெளிப்படுகிறது. அவளிடம் வெளிப்பட்ட அந்த மனவோட்டம் தனியொரு பெண்ணின் மனவோட்டமாக இல்லாமல் “இந்தியப்பெண்”ணின் மனவோட்டமாக எழுதப் பெற்றுள்ளது . சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப்போல வருமா? என்ற பொதுப்புத்தி மனநிலைக்குப் பக்கத்தில் நின்று ”இந்தியாவை அனைத்துக் குறைபாடுகளோடும் ஏற்றுக்கொள்ளச் சொல்லும் குரலாக வெளிப்படும் கதைசொல்லியின்” மொழிநடையும் முன்வைப்பும் ஒருவிதத்தில் கிழக்கையும் மேற்கையும் முரணிலையாக முன்வைத்து மேற்கைப் பகை முரணாக்கும் பார்வையின் வெளிப்பாடு. இந்தியாவை மேற்குலகோடு ஒப்புவைத்துப் பார்க்கும் பார்வையை ஏற்காமல், இந்தியத்தனத்தோடு, இந்தியப் பாரம்பரிய பெருமைகளோடு ஏற்க வேண்டும் என்பதை முன்வைக்கும் நிலைபாடு.
****
இந்த நிலைபாட்டைக் கொண்ட மனநிலையை ஐந்தாண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு கதையிலும் வாசிக்க நேர்ந்தது. கதையின் தலைப்பு: தொண்டை புடைத்த காகம். தொண்டை புடைத்த காகம் கதையின் கதைசொல்லி, கதைக்குள் ஒரு பாத்திரமாக இல்லை. தந்தைமையை விட்டு விலகமுடியாத மகளை மையப்பாத்திரமாக்கி நகர்த்தப்படும் கதையின் தொடக்கம் இப்படி இருக்கிறது:
“அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டவுடனேயே வந்துவிடும் அது. முதல் தோசை ஊற்ற ஆரம்பிக்கும்போது கரையத்தொடங்கும். ‘கா’ ‘கா’ என்றில்லை. ‘க்ர்ர்க்’ என்று கொஞ்ச நேரம்.’க்ஹக்’ என்று சிறிதுநேரம். சிலசமயம் ‘க்ளைக்’ என்று கொப்பளிப்பதுபோல ஒரு நாள். ‘கங்ங்.. கங்ங்’ என்று மிழற்றும். சிலசமயம் ‘க..ல்..லூ..’ என்று ஒருநாள். அதன் குரல் ஒலித்ததும் தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு. அப்படித்தான் அப்பா அவளைக் கூப்பிடுவார்.”
உயிருடன் இருந்த காலத்தில் பெருந்தீனிக்காரராகவும், காதலர்களாக வந்தவர்களையே நெருங்கவிடாமல் ஆதிக்கம் செலுத்தும் அன்பைத் தன் மகளிடம் பெற்றுக் கொண்டவராகவும் இருந்த அப்பாவின் தந்தை ஆதிக்கம் இறந்தபின்னும் தொடர்வதாக அவள் நினைக்கின்றாள். அந்த நினைப்பே அந்த காகத்தைத் தன் தந்தையாக நினைக்கவைக்கிறது. அது அவளைத் தேடித்தேடி வருவது வெறும் சாப்பாட்டுக்காகத் தான் என நினைக்கிற ஒரு கணத்தில் - “ போய்த் தொலை. உன் தொல்லை தாங்கல” என்று கத்தினாள்; சன்னலை அறைந்து சாத்தினாள் - என்ற வரிகள்கூட எழுதப்பட்டுள்ளன. ஆனால் அதனைத் தொடர்ந்து தந்தையைப் பராமரிக்க வேண்டிய நெருக்கடியால் அந்தப் பெண் இழந்த காதல்களும், தனித்துவ நிலைப்பாடுகளும் எண்ணங்களாக விரிக்கப்படவில்லை. அதற்கு மாறாக அந்தக் காகம் ஒரு வண்டியில் அடிபட்டுச் சரிந்து தலையைப் புதைத்துக்கொண்டபோது அவளின்மனம் கசிகிறது; தவிக்கிறது. அந்தத் தவிப்பு, அவரைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லையோ என்ற குற்றவுணர்வின் நினைப்புகள் என்பதான தொனியைக் கதையின் வாசகர்களுக்குக் கடத்துகிறது.
ஆண்களின் எல்லாவகை ஆதிக்கத்தின் மீது பெண்ணியம் - எல்லாவகைப் பெண்ணியச் செயல்பாட்டாளர்களும், பெண்ணியத்தை உள்வாங்கி எழுதும் எழுத்தாளர்களும் விமரிசனங்களை வைக்கிறார்கள் என்பது அறிந்த ஒன்று. ஆண்களின் ஆதிக்கம் என்பதில் ஒரு பெண்ணோடு நெருங்கிய உறவுகளின் ஆதிக்கமும் அடங்கும். குடும்ப வெளியையே ஆதிக்கம் நிகழும் முதன்மை வெளியாகப் பெண்ணியம் நம்புகிறது. குடும்பத்தை அடுத்தே கல்விச் சாலைகள், பணியிடங்கள், பொழுதுபோக்கு வெளிகள் போன்றன விமரிசிக்கப்படுகின்றன. குடும்ப அமைப்பில் நிகழும் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் உரிமையைத்தான் விவாகரத்து உரிமையாகப் பெண்ணியம் முன்வைத்துப்போராடியது. ஆனால் இந்திய மரபும் அதன் ஆதரவாளர்களும் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பானதென்றும், அதற்குள் நிகழும் ஆதிக்கத்தை அன்பின் பாற்பட்ட மேலதிகப் பற்று என்றும் பேசிவருகின்றனர்.தந்தைப்பாசம், கணவனின் பாதுகாப்பு, சகோதரர்களின் அரவணைப்பு, பிள்ளைகளின் கவனிப்பு என்பதான சொல்லாடல்களை, உரிமையைத் தடைசெய்யும் அதிகாரத்துவச் சொல்லாடல்களாகக் கணிக்காமல், பெண்ணைப் போற்றும்- மதிக்கும்- கொண்டாடும் கணிப்புகளாகப் பார்க்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். அதனை ஏற்காதவர்களை மேற்கத்தியப் பண்பாட்டின் அம்சமெனக் கருதிக்கொள்ளும் பலபுருச/பலதார விருப்பத்தின் மீது விருப்பம் கொண்டவர்கள் எனப்பேசிப் பயமுறுத்துகின்றனர். இந்தியக் குடும்பவெளியை அன்பின் வெளியாகப் பார்க்க வேண்டுமா? ஆதிக்கத்தின் பகுதியாகப் பார்க்கவேண்டுமா? என்பதை அறியாதவரல்ல அம்பை. இந்தக் கதைக்குள் அத்தகையதொரு சொல்லாடலை -விமரிசனத்தை முன்வைக்க முடியும். ஆனால் அதைச் செய்யவில்லை. இந்தியக் குடும்ப அமைப்பையும், ஆணைச் சார்ந்து வாழக் கற்றுத்தரும் கல்வியையும் விமரிசனம் செய்த அம்பையிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆச்சரியமாக இருந்தது. குடும்பத்து ஆண்களைச் சார்ந்து வாழ்தலை விமரிசனப் பார்வையோடு பார்க்காமல், அதனை முழுமனத்தோடு ஏற்றுக்கொண்ட பெண்களை முன்வைத்து நகர்ந்த இந்தக் கதை வந்த ஆண்டு 2015. அந்தக் கதை வந்த இதழ் இந்து தமிழின் சிறப்பு மலர்(பக் 190 -195).
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவையை தொகுப்பாக இன்னும் வாசிக்கவில்லை. அதில் இருக்கும் கதைகள் கடைசி மூன்றாண்டுகளில் வந்த கதைகளாகவே இருக்கும். அவற்றை வாசிக்கவேண்டும். அத்தோடு காலவரிசையில் அம்பையின் கதைகளை வாசிக்க வேண்டும். அந்த வாசிப்பு ஒரு எழுத்தாளரின் பாத்திரத் தேர்வுகளும் கருத்தியல் நகர்வுகளும் குறித்த பார்வையை வெளிப்படுத்தும். அத்தோடு இந்தியப் பெருவெளியில் ஏற்பட்ட அரசியல் பார்வைகளின் தாக்கம் அதற்குள் இருக்கிறதா? என்பதையும் கூட உணர்த்துவதாக அமையலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்