நுழைவும் அலைவும் : சில கவனக் குறிப்புகள்

 கொழும்புவில் முதல் நாள்

இலங்கை இந்தியாவின் நெருங்கிய   நட்பு நாடு. அதனால் இந்தியர்களுக்கு நுழைவு அனுமதி வழங்குவதில் கெடுபிடிகளைக் குறைத்துக் கொண்டுவிட்டது.  இலங்கைக்கான விமானத்தில் ஏறும் விமான நிலையத்தில் இந்திய இருப்பிடச் சான்றுகளைக் காட்டி நுழைவு அனுமதிபெற்றுக் கொள்ளலாம் (On arrival Visa) என்ற நிலை உருவான பின்பு இலங்கைச் சுற்றுலா எளிதாக மாறிவிட்டது என்று பலரும் சொன்னார்கள். அத்தோடு, கடந்த ஆண்டு ஈஸ்டர் நாளில் கொழும்பில் வெடித்த தொடர் வெடிகுண்டுகளுக்குப் பின் வெளிநாட்டார் வருகை குறைந்ததைச் சரிசெய்ய, இலங்கை அரசாங்கம் உள் நுழைவு அனுமதிகளை எளிதாக்கியிருப்பதாகவும் சொல்லப்பட்டது. சுற்றுலாப் பொருளாதாரத்தை நம்பும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கைக்குள் அயல்நாட்டார் வருவதைத் தடுக்கும் விதிகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும்; நம்பிக்கையைத் தகர்த்துவிடும் என்பதால் உள்ளே அனுமதிப்பதில் கெடுபிடிகளைக் காட்டுவதில்லை

 இருபது நாட்கள் (2019 டிசம்பர் 16 -2020 ஜனவரி 5) பயணத்திற்கான தேதிகளை முடிவு செய்து ஸ்பைசிசெட் குழுமத்தின் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டேன். இப்போது. இந்தியர்களுக்கு இலங்கைப் பயணத்திற்கான நுழைவு அனுமதியில் பெரிய அளவில் கேள்விகள் எதுவும் இல்லை. சுற்றுலா அனுமதிக்காக,  ஆதார் உள்ளிட்ட தகவல்களோடு இணையம் வழியாக விண்ணப்பித்தபோது இலங்கையில் எங்கே தங்கப் போகிறீர்கள்   என்ற வினாகூட  கேட்கப் படவில்லை. வழக்கமாக ஒவ்வொரு நாளும் எங்கே தங்குவோம்? என்று சொல்ல வேண்டும். உறவினர்கள்/ நண்பர்கள் வீடுகள் போன்ற முகவரிகள் இல்லையென்றால் தங்கும் விடுதிகள் பெயர்களையும், அதற்குச் செலுத்துவதற்கான வங்கி இருப்பையும் காட்ட வேண்டும். இப்போது அவை எவையும் கேட்கப்படவில்லை.


என்ன காரணத்திற்காகப் போகிறீர்கள் என்ற இடத்தில் சிலவகையான காரணங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. பட்டியலில் ஒன்றாக இருந்த ‘நண்பர்களைப் பார்க்க’ என்பதைக் குறிப்பிட்ட உடனே ஏற்றுக் கொண்டது. ஒருமாதம் தங்கியிருக்கலாம் என்று அனுமதித்துவிட்டு தன்னார்வ நிறுவனங்களின் செயல்பாடுகளில் பங்கேற்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும் குறிப்பிட்டிருந்தது அந்த அனுமதித்தாளில். நான் கலந்து கொள்ள இருந்த அமைப்புகளும் அரங்காற்றுக் கழகங்களும் தன்னார்வ அமைப்புகளின் கீழ் வருமாவராதாஎன்று எனக்குத் தெரியாது. இந்தியாவில் இவையெல்லாம் தன்னார்வ அமைப்புகள் கிடையாது. சமூகப் பண்பாட்டு அமைப்புகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்பதிவு செய்யப்படாமலும் இயங்கக் கூடியன. பயணப் பாதை கொழும்பு, கண்டி, மலையகம், சப்ரகமுவ, திரிகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா திரும்பவும் கொழும்பு எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஊரிலும் தங்குவது கூடுதல் – குறைவாக இருக்கலாம்; அதில் இறுக்கமான திட்டம் இல்லை. இதையெல்லாம் முன்பே சொல்ல வேண்டியதில்லை. 

2016, செப்டம்பர் 14 இல்  சென்று 15 நாட்கள் தங்கியிருந்த  பயணத்தின் போது இந்தச் சிக்கல்கள் எதுவும் தோன்றியதில்லை. அது கல்விப்புலப் பயணம். மட்டக்களப்பு கிழக்கு இலங்கைப்பல்கலைக்கழக,   விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொள்ள வருகிறேன் என்ற காரணத்தை ஏற்று ஒருமாத அனுமதியை வழங்கியது இலங்கைக் குடிவரவு அமைச்சகம். பல்கலைக்கழகப்பேராசிரியர் என்ற கோதா பல நேரங்களில் பயன்படும். இப்போது நான் ஓய்வுநிலைப் பேராசிரியன்அதே நேரத்தில் எழுத்தாளன். இந்த அடையாளங்களும் பயன்படும். ஆனால் அதனை மதிக்கக் கூடிய அரசுகள் இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகள் தங்களின் தாராளவாத நிலைப்பாட்டைக் காட்டிக் கொள்வதற்காகவாவது எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் மதிப்பதாகப் பாவனை செய்யும். இந்தியாஇலங்கைபர்மா போன்ற நாடுகளின் அரசுகள் இப்போதெல்லாம் இறுக்கம் கூடிய அரசுகளாக ஆகிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாக் கூட்டம் வரவேண்டும் என்றும் நினைக்கின்றன.

மதுரை -கொழும்பு விமானம் 12.55 க்குத் தரையிறங்க வேண்டும். அதற்கு முன்னதாகவே தரையிறங்கிவிட்டது. இந்த முறை முதல் மூன்றுநாளும் கொழும்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர் ஷாமிலா முஸ்டீன். சுயாதீனப் பத்திரிகையாளராகவும் ஆசிரியையாகவும் பணியாற்றும் ஷாமிலா பெண்கள் விழிப்புணர்வு சார்ந்த செயற்பாட்டாளர். அவரது கணவர் முஸ்டீன் இலங்கை அரசின் காவல் துறை நுண்பிரிவுப் பணியாளர். முதல் மூன்று நாட்களும் அவர்கள் வீட்டில்தான் தங்க ஏற்பாடு. அவர்களது வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்ல முஸ்டீன் வருவார் என்று செய்தி அனுப்பினார் ஷாமிலா.

கடந்த முறை வந்தபோதே கொழும்புவில் என்னைச் சந்திக்க விரும்பினார். முன் திட்டங்கள் இல்லாததால் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. இடையில் கொழும்புவில் என்னோடு இன்னும் இருவரும் பங்கெடுக்கும் ஒரு நாடகப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்து அழைத்தார். அந்தப் பயிலரங்கிற்கு எனது மாணவர் அனீஸை ஏற்பாடு செய்து தொடர்புபடுத்தி விட்டேன். பல்கலைக் கழகத்தில் கட்டாயம் இருக்கவேண்டும் என்பதால் போகவில்லை. இந்த முறையும் ஒரு நாடகப் பயிலரங்கையும் ஓர் உரையையும் ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் வீட்டில் தனியாக ஒரு விருந்தினர் தங்கும் அறை இருக்கிறது; தங்கிக்கொள்ளலாம் என்று சொல்லியிருந்தனர். சரியென்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் முகவரியை வாங்கிக் கொள்ளவில்லை

குடிவரவுப் பதிவுப் பகுதியில் வந்தவுடன் தான் எனக்கு உறைக்க ஆரம்பித்தது. உள்நுழைவுப் படிவத்தை நிரப்பும்போது கடவுச்சீட்டு எண், அனுமதிக்காலம், தங்குமிடம் போன்ற விவரங்கள் தரப்படவேண்டும். வெளியே காத்திருக்கும் முஸ்டீனைத் தொடர்புகொண்ட வீட்டு முகவரியைப் பெற்று நிரப்பிவிடலாம் என்று அழைத்தால் அழைப்புக்கான ஓசை போய்முடிகிறது; அவர் எடுக்கவே இல்லை. பல தடவை அடித்துவிட்டேன்; கிடைக்கவே இல்லை. வந்திருக்க மாட்டாரோ என்று பதற்றம். எந்த முகவரியைத் தந்து விமான நிலையத்தை விட்டு வெளியேறுவது என்ற இன்னொரு பதற்றம். தரும் முகவரி பொறுப்புடையவர்களின் முகவரியாக இருக்க வேண்டும் என்ற கவலை. யாருடைய முகவரியையாவது தந்து, அவர்களின் பெயர் அரசெதிர்ப்பாளர் பட்டியலில் இருந்தால் பயணமே சிக்கலாகிவிடவும் கூடும் என்ற கவலை. நுழைவு விண்ணப்பம் பெறும் இடத்தில் சிங்களப்பெண் அதிகாரியே இருந்தார். அவரிடம் தொலைபேசி எண்களையும் இணையமுகவரியையும் தந்தால் போதுமா? என்று கேட்டேன். தங்குமிடத்தின் முகவரி துல்லியமாகத் தரப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டார். வேறு யாரையாவது அழைத்து முகவரி பெறலாம் என்று யோசித்தபோது நினைவில் வந்த இரண்டு பெயர்கள் பேரா. எம்.எ. நுஃமான், பேரா. மௌனகுரு. முதலாமவர் இருப்பது கண்டியில்; இரண்டாமவர் இருப்பது மட்டக்களப்புவில்.

பேரா.நுஃமானை புலனத் தொடர்பில் அழைத்தபோது உடனடியாக எடுத்துவிட்டார். நிலையை விளக்கினேன். உடனே முகவரியை அதன் வழியாகவே அனுப்பிவைத்தார். மனுவை நிரப்பித் தந்தவுடன் அவரைப்பற்றி கேட்டார் அந்தப் பெண். பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். நானும் இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். நண்பர் வீட்டில் தங்கிக் கொண்டு இலங்கையைச் சுற்றிப் பார்க்க வந்துள்ளேன் என்றேன். சிரித்துக் கொண்டே அனுமதித்துவிட்டார். வெளியே வந்தவுடன் பொருட்களைச் சோதிக்குமிடத்தில் உள்ளே இருப்பனவற்றை விசாரித்துவிட்டு, பெட்டியைத் திறந்து காட்டச் சொன்னார்கள். அதிகமும் ஆடைகளும் புத்தகங்களும் இருந்தன. நண்பர்களுக்குத் தருவதற்காகத் திருநெல்வேலி அல்வாக் கட்டுகள் பத்து இருந்தன. ஒவ்வொரு கட்டிலும் அரைகிலோ அல்வா. அதைப் பார்த்துவிட்டு அவரும் சிரித்தார். அவருக்கு ஒன்று வேண்டுமென்று கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன். அவர் கேட்கவில்லை

வெளியே வந்தவுடன் உடனடிச் செலவிற்கு இந்தியப் பணத்தை, இலங்கைப் பணமாக மாற்றும் இடத்திற்குச் சென்று ஐந்நூறு இந்திய ரூபாயை மாற்றிக் கொண்டேன். பொதுவாக விமான நிலையத்தில் இருக்கும் பணமாற்றுக் கடைகளில் மாற்றுதல் செய்யக்கூடாது. வெளியே கிடைப்பதைவிடக் குறைவாகவே தருவார்கள்.  இலங்கையில் இருக்கும் சில தமிழ் வியாபாரிகள் இந்தியச் சந்தைப் பொருட்களை வாங்கிப் போய் விற்பார்கள். அவர்களுக்கு இந்தியப் பணம் தேவை. அவர்களைத் தேடிப்பிடித்தால் கூடுதல் மதிப்புடன் பணமாற்றம் செய்யலாம். மட்டக்களப்பில் ஒரு நகைக்கடையில் அப்படி வாங்கிக் கொள்வார்கள் என்று முதல் பயணத்தில் நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். கொழும்புவிலும் அப்படி மாற்றும் கடைகள் இருக்கின்றன என்பது தெரிந்த தகவல்.

முஸ்டீன் வரவில்லையென்றால் என்ன செய்வது என்ற தயக்கத்தோடு விமான நிலையத்திற்கு வெளியே நகரப்பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்தபோது ‘வணக்கம் ப்ரொபசர்’ என்ற குரல் கேட்டபோது நிம்மதிப்பெருமூச்சு. அதற்கு முன் முஸ்டீனை நேரில் சந்தித்ததில்லை. ஷாமிலாவைப் படங்களில் பார்த்து முகம் பதிந்திருந்தது. முஸ்டீனின் படம் அவ்வளவாகப் பதிவாகவில்லை. பின்னர் அவரே அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ச்சியாக அவரை அலைபேசியில் அழைத்ததையும் பதிலே இல்லை என்பதால் ஏற்பட்ட பதற்றத்தையும் அச்சத்தையும் முகவரிக்காகப் பேரா.நுஃமானைத் தொடர்புகொண்டதையும் சொன்னேன். 

மன்னிக்கவும் சார். என்னுடைய பிழைதான் காரணம். என்னுடைய அலைபேசியை விட்டுவிட்டு ஷாமிலாவோட அலைபேசியை எடுத்துவந்துவிட்டேன். அதனால் அவரும் அதை எடுத்திருக்க மாட்டார் என்று சொல்லிச் சமாதானம் செய்தார். விமான நிலையத்தில் பேருந்துக்காகக்காத்திருப்பு, ஏறி அமர்ந்தபின் வண்டி கிளம்பக் காத்திருப்பு என முடிந்து,  சிறப்புச் சேவைப் பேருந்தில் ஏறி கொழும்பு நகரைப் பார்த்தபடியே பயணம் செய்து, முஸ்டீன் வீட்டிற்கு வந்தபோது மணி 6.30.

சரியான பசி மற்றும் களைப்பு. ஷாமிலா மிகப்பரிச்சயமான ஒருவரை உள்வாங்கும் வாஞ்சையோடு அழைத்துக் கொண்டார். அந்நிய ஆடவர்களிடம் முகம் காட்ட அனுமதியில்லாத இசுலாமியப் பெண்ணாக இல்லாமல், அதே நேரத்தில் அதன் அடையாளத்தை முழுமையாக விட்டுவிடாதவராக இருந்தார். அவருக்குப் பின்னால் இரண்டு பிள்ளைகள். மூத்தவன் பையன். ஆறேழு வயதிருக்கலாம்; இளையவள் சிறுமி. இரண்டுக்கும் மூன்றுக்கும் இடையில் இருப்பாள். தனியாக இருந்த அறைக்குள் நுழைந்து கைலியைக் கட்டிக்கொண்டு நானும் இசுலாமிய அடையாளத்திற்கு மாறிக்கொண்டு, பெரிய பெட்டியில் இருந்த அல்வாக் கட்டியில் ஒன்றை எடுத்துத் தந்தேன். திருநெல்வேலி அல்வா உலகத்தமிழர்கள் அறிந்த தின்பண்டம் என்பதால் அதனைப் பார்த்துவிட்டால் பேச்சு வேறுபக்கம் திரும்பப் போவதில்லை. 

ஷாமிலா - முஸ்டீன் வீடு கொழும்பு நகரின் மையமான பகுதியில் ஒரு நாற்சந்தியில் இருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கும் அந்த இடத்திற்குக்கான பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. மகாவித்யாலயா, மாவத்த என்பது அதன் பெயர்.  

  தமிழர்களின் கடைகளும் உணவுவிடுதிகளும் பாதிக்கும் மேல் இருக்கின்றன. இரவு உணவுக்காக ஒரு தமிழர் உணவு விடுதிக்கு நானும் முஸ்டீனும் போனோம். இடியாப்பம், வடை, சுண்டல் கேட்டபோது ஒவ்வொன்றிலும் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனார்கள். வைப்பதில் எத்தனை பண்டங்களை சாப்பிடுகிறோமோ, அதற்கு மட்டுமே தொகையை ரசீதாகத் தருகிறார்கள். சாப்பிடாமல் மீதமிருப்பதைத் திரும்ப எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அதை ஏற்கெனவே இருக்கும் தின்பண்டங்களுடன் கலந்து அடுத்து வருபவர்களுக்குக் கொடுப்பார்களே என்று யோசனை ஓடிக்கொண்டே இருந்தது. நமக்கு முன்னால் வைத்த தின்பண்டங்கள், ஏற்கெனவே வந்து போனவர்கள் சாப்பிடாமல் மீதம் வைத்த பண்டங்களாக இருக்க வாய்ப்புண்டே என்பதும் அந்த யோசனைக்குள் குழப்பமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒரு சாப்பாட்டு மேசையில் வைக்கப்பட்டதனாலேயே, சாப்பிடாமல் ஒதுக்கிய பண்டமாக நினைக்கும் மனநிலையை எழும்பவிடாமல் தட்டிப் போட்டு அடக்கிக் கொண்டேன்.  

==================================================== தொடரும் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்