கையறு: மரணத்தின் தாலாட்டு

தமிழர்களின் அலைந்துழல்வுச்சித்திரங்கள்

சப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அமெரிக்காவின் அணுகுண்டுகள் வீசப்பட்ட நாட்கள்: ஆகஸ்டு- 6/ 9/ 1945. உலகத்தின் பார்வையில் பேரழிவு ஆயுதமாகப் பார்க்கப்பட்ட அணுகுண்டு, சப்பானின் அருகிலிருந்த பழைய பர்மா, மலேசியா, சீனா, தாய்லாந்து, முதலான நாட்டு மக்களால் வேறுவிதமாக உணரப்பட்டது. சிலர் தங்களின் விடுதலையின் கருவியாக அதை நினைத்தனர். இதுதான் வரலாற்றின் சுவைகூடிய நகைமுரண்
வெவ்வேறு காலகட்டங்களில் வல்லாதிக்க நாடுகளை உருவாக்கித் தங்களைப் பேரரசர்களாகவும் மகாப்பெரும் தலைவர்களாகவும் காட்டிக்கொள்ள விரும்பியவர்கள் செய்த போர்ப்பிரகடனங்களும் நாடுபிடிக்கும் ஆசைகளும் வரலாற்றின் பக்கங்களில் நிரம்பியுள்ளன; பாடநூல்களில் பெரும்சாதனை களாகப் பதியப்பட்டுள்ளன. ஆனால் அந்த வரலாற்றுக்குப் பின்னால் அப்பாவியான மக்கள் பட்ட பாடுகளும் சொந்தபந்தம், மதம், மொழி போன்ற அடையாளங்களைக் கைவிட்டுவிட்ட- அறுந்துபோன ஒரு வாழ்க்கைக்குள் தூக்கி எறியப்பட்ட- துயரங்கள் பதிவு செய்யப்பட்டதில்லை; இறந்துபோனவர்களின் எண்ணிக்கைகூட இல்லாமலேயே போயிருக்கின்றன.

வரலாற்றின் மறதியால் பதிவுசெய்யப்படாமல் போனவர்களின் ஆன்மாவைத் தேடும் குற்றமனத்தின் குறுகுறுப்பையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இருப்பைக் கண்டறியும் பாதையின் வழித்தடங்களைப் பதிவுசெய்யும் பொறுப்பையும் வரலாற்றாசிரியர்களிடமிருந்து கைமாற்றிக்கொள்கின்றன கலை இலக்கியப் பனுவல்கள். வரலாற்றின் இடைக்காலம் வரையிலும் உலகமெங்கும் நடந்த போர்க்காலப் பின்னணிகளைக் கொண்ட துயர வாழ்க்கையை விவரிக்கும் ஆகச்சிறந்த இலக்கியவடிவமாக இருந்தவை பெருங்காப்பியங்கள். அப்பெருங்காப்பியங்களின் நிகழ்கால வடிவமே நாவல்கள். காலம், வெளி என்ற இரண்டிலும் காப்பியங்களும் நாவல் இலக்கியமும் கொண்டிருக்கும் விரிவு காரணமாகப் போர்க்காலப் பின்னணிகளைத் தனதாக்கிக் கொள்கின்றன. காப்பியங்களையும் நாவல்களையும் காட்சிப்படுத்தும் திரைப்படங்களும் கடந்த காலத்தின் சாட்சியங்களாக இப்போது மாறிக் கொண்டிருக்கின்றன.

*******

‘ஹிரோஷிமா மாநகரின் வானத்தில் திடீரெனப் பறந்த விமானம் உள்நாட்டுப் போர் விமானம் தான் என எண்ணினர் ஊர் மக்கள்’ எனக் கையறு நாவலின் 42 இயலின் முதல் வாக்கியத்தை எழுதுகிறார் கோ.புண்ணியவான். அதே இயலில் ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்ட நிகழ்வை தேதி குறிப்பிட்டு எழுதிக் காட்டியுள்ளார். ஆண்டும் தேதியும் குறிப்பிட்டு எழுதிக்காட்டியதின் மூலம், அதற்கு முன்னால் 41 இயல்களில் விவரிக்கப்பட்ட நிகழ்வுகளும் அலைவுகளும் கற்பனையான கதையல்ல; உண்மையின் சாயலில் இருக்கும் புனைவுகள் என்பதை மறைமுகமாகச் சொல்கிறார். அதே இயலில் இன்னொரு பத்தி இப்படித் தொடங்குகிறது:

அது (அணுகுண்டு வீசப்பட்ட நிகழ்வு) ஒரு புதுயுகத்தின் தொடக்கநாளாக மலர்ந்திருந்தது தக்கின்முகாம் சனத்துக்கு.மயில்வாகனமும் சந்நாசியும் கொட்டடி சனமும் ஊர் திரும்பும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். கால் விலங்கு அறுபட்ட விடுதலை.

என உற்சாகச் சொற்றொடர்களால் விரிகின்றது அந்தப் பத்தி. மகிழ்ச்சி என்ற சொல்லையும் அந்தச் சொல்லால் உணரப்படும் மனநிலையையும் முதல் இயலிலும் கடைசி இயலிலும் உருவாக்கிக் காட்டும் நாவலாசிரியர், இடையில் எழுதப்பெற்றுள்ள 40 இயல்களிலும் மகிழ்ச்சியின் எதிர்ச்சொல்லான துன்பத்தாலும் துன்பத்தின் நிமித்தங்களாலும் நிறைத்துக் காட்டிக் ‘ கையறு’ எனப்பெயரிட்டுத் தந்துள்ளார்.

வரலாற்றின் நகைமுரண்

அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் இரண்டும், அதற்கு முந்திய உலகின் போர்க்களங்கள் அனைத்தையும் மறக்கடித்த போர்க்காட்சிகள். பல லட்சக்கணக்கான மனிதர்களை மட்டுமல்லாமல், அனைத்துவகையான உயிரினங்களையும் அழித்தொழித்த வரலாற்று நிகழ்வு. உலகமக்களின் பெருந்துயரமான அந்நிகழ்வைத் தங்களின் வாழ்க்கைக்கான விடுதலை நாளாக ஒரு கூட்டம் நினைத்தது என்றால், அக்கூட்டம் சந்தித்த துயரங்கள் அதைவிடக்கூடுதலான துயர வாழ்க்கை என்பதை இவ்வுலகம் புரிந்துகொள்ள வேண்டுமெனக் கோ புண்ணியவான் கருதியதின் விளைவே அவரது நாவல். பர்மா -சயாம் ரயில் பாதை என வரலாற்றில் குறிக்கப்படும் ரயில்பாதைத் திட்டத்திற்காகப் பல லட்சக்கணக்கானோர் கொத்தடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டு பங்கேற்க வைக்கப்பட்டனர்.அத்திட்டத்தில் பங்கேற்ற இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்களைப் பலிக் கொண்டது அத்திட்டம். அதனாலேயே அது மரண ரயில் பாதை என வரலாற்றில் குறிக்கப்பட்டது.

காலனிய காலகட்டம்


ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் குழுமத்தின் தொடர்ச்சியாக உலகத்தின் பல பகுதிகளைத் தனது காலனியாதிக்கத்தின் கீழ்க்கொண்டுவந்த பிரித்தானிய அரசாங்கம், தங்கள் காலனி நாட்டு மக்களைக் கொத்தடிமைகளாகவே நட த்தியது. தங்களின் சொந்த நாட்டு மக்களின் சொகுசு வாழ்க்கைக்காகக் காலனி நாட்டு மக்களை ஏவல் நாய்களிலும் கீழானவர்களாகக் கருதித் துயரங்களை உருவாக்கினர். மரபான வேளாண்மைக்குள் கூலித் தொழிலாளர்களாக இருந்த கிராமத்து மனிதர்களைப் புதுவகைத் தோட்ட விவசாயத்திற்குத் தேவையான தொழிலாளர்களாக மாற்றுவதற்காக வேறு நிலங்களுக்குப் பெயர்த்துக்கொண்டு போனார்கள். அந்தந்த நாட்டு மக்களின் உழைப்பு மட்டும் போதாது என்ற நிலையில் தங்களின் ஆளுகைக்குட்பட்ட நாடுகளிலிருந்து ஆட்களைக் கொண்டுபோய் புதுவகைக் கூலிகளாக மாற்றினார்கள். அப்படிக் கொண்டு போகப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களின் பூர்வீகமக்கள் இப்போதும் இலங்கையின் மலையகப்பகுதித் தேயிலைத் தோட்டங்களில் திரளாக இருக்கிறார்கள். மலாயாவின் ரப்பத்தோட்டங்களிலும் செம்பனைக்காடுகளிலும் லயத்து வாழ்க்கைக்குள் அமுங்கிப் போய்விட்டார்கள். நூறு ஆண்டுகளைத் தாண்டிவிட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களின் புலம்பெயர் வாழ்க்கையில் பூர்வீக மண்ணின் தொடர்புகள் அறுந்துவிட்ட நிலையில் அந்தந்த நாடுகளிலேயே இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற அச்சத்தில் இருப்பதை இன்றும் அங்கிருந்து வரும் கலை இலக்கியப்பனுவல்கள் காட்டுகின்றன.

இடம்பெயர்வு மற்றும் புலம்பெயர்வு வாழ்க்கையினை முன்வைக்கும் இழந்ததை நினைத்தேங்கும் (Nostolgia) படிமங்கள், இலக்கியத்தின் அழிக்கமுடியாத பக்கங்களாக உலக இலக்கியங்கள் முழுவதும் கிடைக்கின்றன. அதிலும் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரினால் இடம்பெயர்க்கப்பட்ட ஐரோப்பியர்களின் படிமங்கள் துயரத்தின் சாயல்களோடும், அதன் மறுதலையாக நாட்டு எல்லைகளைக் கடந்த உலக மனிதர்களின் உருவாக்கமாகவும் ஐரோப்பிய மொழிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றின் பிரதிபிம்பங்களாக இலங்கையின் மலையகப்பின்னணி இலக்கியப் பனுவல்களும் மலேசியத்தமிழ் இலக்கியத்தின் பனுவல்களும் வாசிக்கக் கிடைக்கின்றன. மலேசியாவின் அ.ரெங்கசாமி, ஆர். சண்முகம் போன்றவர்களின் நாவல்களோடு தமிழ்நாட்டு எழுத்தாளர்களான ப.சிங்காரம்(புயலிலே ஒரு தோனி, கடலுக்கு அப்பால்) ஹெப்சிபா ஜேசுதாசன் (மா-னி) போன்றோரின் நாவல்களையும் காலனியகாலப் புலப்பெயர்வு இலக்கிய வகைப்பாட்டிற்குள் வைத்து வாசித்திருக்கிறோம். அந்த வகைப்பாட்டின் இன்னொரு புதுவரவாக வந்துள்ளது கோ.புண்ணியவானின் கையறு. இது பிரிட்டானியர்களின் காலத்துப் புலம்பெயர்வுக்குப் பிந்திய காலகட்டத்து வாழ்க்கையின் இன்னொரு பகுதியை – நீட்சியை வாசகர்களிடம் முன்வைத்துள்ளது.

கையறு: சொல்முறைமை

கோ.புண்ணியவானின் கையறு உலகத்தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலத்தை வெட்டியெடுத்து ரத்தமும் சதையுமாக முன்வைத்துள்ளது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த நாளோடு முடியும் கையறு நாவல், செய்வது இன்னதென்றறியாத கையறு நிலையை விவரிப்பதில் தொடங்கவில்லை. கையறு நிலைக்கு முந்திய உற்சாகமான உண்டாட்டு நாளொன்றை விவரிப்பதின் வழியாகத் தொடங்கித் துயரச் சம்பவங்கள் தொடர்ந்த கதையாக இயல்களை நகர்த்திக்கொண்டே போகிறது. அந்த நகர்த்துதலில் மலாயத் தோட்டக்காட்டுக் குடியிருப்பான பதினெட்டாம் கட்டையில் வாழ்ந்த சில குடும்பங்களின் அல்லாட்டமான- சிதிலமடைந்த- வாழ்வை நேர்க்காட்சியாக வாசிக்கத் தந்துள்ளது. அதற்கு நாவலாசிரியர் உருவாக்கிக் கொள்ளும் பின்னணிகளும் சொல்முறையும் சேர்ந்து, இந்த அல்லாட்டமும் சிதிலங்களும் இந்தக் குடும்பங்களின் வாழ்க்கை மட்டுமல்ல; உலகம் முழுவதும் அதிகாரத்துவ ஆட்சியாளர்களாலும் அவர்களின் எடுபிடிகளாலும் சிதைக்கப்பட்ட அப்பாவிகளின் வாழ்க்கைச் சித்திரத்தின் வகைமாதிரி எனக் காட்டுகின்றன.

பரந்து விரிந்த மலாயாவின் தோட்டக்காட்டில் இருக்கும் பதினெட்டாம் கட்டை, தீமிதி திருவிழாக் காட்சியில் தொடங்கியதற்குக் குறிப்பான காரணங்கள் உள்ளன. சொந்த மண்ணான தமிழ்நாட்டைவிட்டுப் புலம்பெயர்க்கப்பட்டுப் பதியம் போடப்பட்ட வாழ்க்கையில் இருப்பவர்கள் பதினெட்டாம் கட்டையின் குடிகள். அவர்களின் பூர்வீக மண்ணின் அடையாளமாக் கொண்டாடும் விழா தீமிதி விழா என்பதைச் சொல்வதோடு, அந்த விழாவில் ஆங்கிலேயே அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்பதையும் காட்டுகிறது. அத்துரைமார்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தீமிதி விழாவில் தரப்படும் வரவேற்பும் மரியாதைகளும் அவர்களின் முந்திய வாழ்க்கையின் சுவடுகளைச் சொல்லப் பயன்பட்டுள்ளது.

தீமிதி விழாவில் கலந்துகொண்ட ஆங்கிலேயத்துரைமார்கள் விழாவில் முழுமையாகக் கடைசிவரை இல்லாமல் இடையிலேயே சொல்லிக் கொள்ளாமல் கிளம்பும்போது தொடங்கும் பதற்றமும் அச்சமும் நாவல் முழுக்கத் தொடர்காட்சிகளாக எழுதிக் காட்டப்பட்டுள்ளது. நாவல் தொடங்கும் காலம், பிரிக்கப்படாத இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா முதலான பகுதிகளில் அதிகாரம் செலுத்திவந்த ஆங்கிலேயேர்களின் காலனித்துவ ஆட்சிக்காலம் என்பதைப் புலப்படுத்திவிடும் முதல் இயலைத் தொடர்ந்து அமைந்துள்ள இயல் பாச்சொக் கடற்கரையில். அக்கடற்கரையில் பெரும் கப்பலொன்றில் வந்திறங்கும் சப்பானிய மிதிவண்டிப்படையின் போர்த்திறனையும் ஆக்கிரமிப்பு உத்திகளையும் விவரிக்கும் நாவலாசிரியர் தனது நாவலுக்கான காலப்பின்னணியோடு, அக்கால கட்டத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்த உலகுதழுவிய போர்ச்சூழலையும் முதன்மையான முரணையும் உருவாக்கிக் கொள்கிறார்.

இரண்டாம் உலகப்போரின் ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் தலைமையிலான நேசநாடுகள், ஜெர்மனியின் தலைமையிலான அச்சுநாடுகளிடம் தோற்றுப் பணிந்த பின்னணியில் தென்கிழக்காசியாவின் அதிகாரம் சப்பானின் கைக்கு மாறிய பின்னணி என்பதை உணர்த்துகிறார். இந்தப் போர் முரண்பாட்டுப் பின்னணியில் சயாம் – பர்மா வழியாக இந்தியாவை நோக்கிப் போடப்பட்ட ரயில் பாதைத் திட்டமே நாவலின் பருண்மையான நிகழ்வுப்பின்னணி

குறிப்பான கால இடைவெளியில் நிகழ்வுகளை விவரிக்கும் நாவலாசிரியர், அதனைக் கால இடைவெளியாகக் காட்டாமல் நிகழ்வுகள் நடக்கும் இடங்களை இயல்களின் தலைப்பாக்கி விவரிக்கிறார். நடப்பது இன்னதென்று அறியாத அப்பாவிகளான பதினெட்டாம் கட்டையின் மனிதர்கள் ஆசைகாட்டியும் அச்சுறுத்தியும் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். அதனால் ஏற்படும் அல்லாட்டமும் சிதிலங்களும் மரணங்களும் நடந்த இடங்களோடு இணைத்து - ஆர்வார்ட் தோட்டத்தில், காஞ்சனா புரியில், தாத்தா கம்பத்தில், காஞ்சனா புரியிலிருந்து, நடைபயணத்தில், தக்கின் முகாமில், சிம்போங் முகாமில்,மேய்குவாங் முகாமில், பாலோவில் - எனக் குறிப்பிட்டுக் காட்டிச் சொல்லப்படுகின்றன.

அலைவும் இருப்பும்


பதினெட்டாம் கட்டையிலிருந்து லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டதின் தொடர்ச்சியாக மூச்சுமுட்டும் ரயில் பயணம், உழைப்புக்கருவிகளோடு நீண்ட நடைப்பயணம், எந்த ருசியுமில்லாத ஒரே மாதிரியான உணவு, படுப்பதற்குக் கூடப் போதிய இடமில்லாத தங்குமிடம், பூச்சிகளோடும் விலங்குகளோடும் வாழவேண்டிய இரவுகள், நோய் நொடிகளுக்கு மருந்தில்லாத துயரம், காயங்களும் நோய்களும் முற்றிய நோயாளிகளின் மரணங்கள், மரணித்த உடல்களும், மரணத்தை நெருங்கும் மனிதர்களும் அப்படியே கைவிடப்படும் காட்சிகள், எதையும் கேட்கமுடியாத சிக்கல், சொந்த மொழியைப் பயன்படுத்த முடியாத அவலங்கள் என முகாம்களின் வாதைகள் ஒருபக்கம் அடுத்தடுத்து விரிக்கப்பட்டுள்ளன. வாதைகளின் உச்சமாக உயிரோடு எரிக்கப்பட்ட நோயாளிகளின் சாம்பலும் இறந்தவர்களுக்குச் சடங்குகள் செய்து புதைக்கமுடியாத துயரமுமாக நாவலில் ஒரு பயணம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

அலைவுப்பயணத்தில் அல்லாடும் ஆண்களின் துயரப்பயணத்திற்கு இணையாகப் பெண்களின் இருப்பை எழுதிக்காட்ட வேண்டும் எனத் திட்டமிட்ட நாவலாசிரியர் எண்ணம் முக்கியமான ஒன்று. யுத்தம், இடப்பெயர்வு போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் ஆண் -பெண் இருபாலாருக்கும் ஏற்படும் துயரங்கள் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஆண்கள் உயிரிழப்புகளைச் சந்தித்துக் காணாமல் போகிறார்கள். பெண்களோ அவர்களின் உடல் மீது செலுத்தப்படும் பாலியல் வன்முறையால் மானமிழப்பைச் சந்தித்து வாழ்நாளெல்லாம் குற்றவுணர்வில் கழிக்க நேரிடுகிறது. தங்கள் கண் முன்னாலேயே கணவன்மார்கள் இழுத்துச் செல்லப்படுவதைத் தாங்கிக் கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது, பாலியல் ரீதியாக அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளை விரிவாக எழுதிக்காட்டுகிறார் நாவலாசிரியர். இளம்பெண்களைத் தேடி அலையும் சப்பாணியக் கங்காணிகளிடமிருந்து வயதுக்கு வந்த பெண்களைக் காப்பாற்ற ஒரு அம்மாவும் அவரது முதிய உறவினரும் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் ஒரு வகைமாதிரியாக விரிவாக எழுதிக்காட்டப்பட்டுள்ளன. அந்நிகழ்வில் அதிகாரத்திற்குப் பயந்து சப்பானியர்களுக்கு உதவும் தமிழர்களின் அவலத்தையும் விரிக்கிறது நாவல். அப்படி உதவிய ஒருவரைக் கொன்று பழி தீர்க்கும் விதமாக மலேசியாவில் செயல்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாக்கும் மனிதர்களைக் கொன்றொழிக்கும் தீவிரவாதப்போக்கும் காட்சிகளாக நாவலில் இடம்பெறுவது இன்னொரு வரலாற்றுப் பதிவு.

இவ்வரலாற்றுப்பதிவைப் போலவே தம்பியின் மனைவியைக் காப்பாற்றுவதாக ஆசை காட்டிக் காமத்தைத் தணித்துக்கொள்ளும் தனிமனிதர் ஒருவரின் இழிசெயலும் காட்டப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் சம்மதமின்றிக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தம்பி ரயில்பாதைத்திட்டத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட நிலையில், அவன் அங்கே இறந்துவிட்டதாகக் கூறித் தம்பி மனைவியை உடைமையாக்க நினைக்கும் அவலக்காட்சியைப் படிக்கும்போது பெண்களின் இருப்பின் துயரங்கள் விரிகின்றன.

ஆண்களின் அலைவுப்பயணத்தையும் பெண்களின் இருப்பின் துயரத்தையும் சம அளவில் இயல்களாக எழுதிக்காட்டியுள்ள கையறு நாவல், மலாயாத்தோட்டங்களுக்குப் புலம்பெயந்த தமிழர்களின் அவல வாழ்வின் கறுப்புப்பக்கங்கள். கறுப்புப்பக்கங்களை எழுதும் கோ.புண்ணியவான் இந்திய சுதந்திரப்போராட்டத்தின் தாக்கம், மலாயாவின் தோட்டத்தொழிலாளர்களால் எவ்வாறு பார்க்கப்பட்டது என்பதை ஓரிடத்தில் எழுதிக் காட்டவும் தவறவில்லை. பிரிட்டானிய ஆட்சியாளர்களை விரட்ட அச்சுநாடுகளுள் ஒன்றான சப்பானோடு சேர்ந்து ராணுவத்தாக்குதல் நடத்தி இந்திய விடுதலையைச் சாத்தியமாக்க நினைத்த நேதாஜி சுபாஸ் சந்திரபோஸும் அவரது இந்திய தேசிய ராணுவமும் பற்றிய விவாதம் அது.

பிரிட்டானிய ஆட்சியாளர்களைவிடக் குரூரமான வன்முறையையும் சுரண்டலையும் கொண்ட சப்பானியர்களோடு கூட்டுச் சேர்ந்து இந்தியாவுக்கு விடுதலை வாங்க நினைக்கும் சுபாஸ், இங்கிருக்கும் தமிழர்களைத் தனது படையில் சேர்க்க நினைக்கிறார்; ஆனால் அவர்களின் மேல் அதிகாரம் செலுத்தும் சப்பானியர்களோடு விருந்துண்டுவிட்டுப் போகிறார். மலேசியாவில் இருக்கும் இந்தியர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, சப்பானிய அரசாங்கத்திடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளைப் பற்றி அவருக்கு எந்தக் கருத்தும் இல்லையே என அவர்களின் உரையாடல்கள் நிகழ்கின்றன. இந்த உரையாடல்களில் வெளிப்படும் விமரிசனம், மலேசியத்தமிழர்கள் தங்களின் வாழ்க்கை நெருக்கடியின் வழியாகப் பார்த்து முன்வைத்த விமரிசனப் பூர்வப் பார்வையின் பதிவு.

இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் – காலனிய ஆட்சியாளர்களால் மொழி தெரியாத தோட்டக்காட்டுப்பகுதியில் லயத்து வாழ்க்கைக்குள் தள்ளப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களின் அடுத்த தலைமுறை காலனிய ஆட்சியாளர்களைவிடவும் குரூரமான வன்முறையாளர்களான சப்பானியர்களிடம் அனுபவித்த இன்னல்களை சயாம் -பர்மா மரண ரயில் திட்டத்தின் நிகழ்வோடு இணைத்து எழுதிக்காட்டியுள்ள கையறு நாவல் அதன் களம், காலம், எழுப்பியுள்ள உணர்வுகள், அடுக்கப்பட்டுள்ள சொல்முறை, முன்வைக்கும் விவாதங்கள் சார்ந்து உலக நாவல் பரப்பிற்குள் வைத்துப் பேசவேண்டிய ஒரு நாவல். உலகத்தமிழ் இலக்கிய வரைபட த்தை உருவாக்கும் நோக்கில் இந்த நாவலை வாசித்த நான், அதே காரணத்திற்காக அனைவரும் வாசிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

============================

கோ.புண்ணியவான், கையறு, புண்ணியவான் பதிப்பகம், டிசம்பர், 2020/ பக்.337/

விற்பனை உரிமை: யாவரும் பதிப்பகம், சென்னை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்