ராவணனை நினைவில் வைத்திருக்கும் திரிகோணமலை


ராமாயணம் கற்பனை; அதில் வரும் பாத்திரங்களும் இடங்களும் புனையப் பட்டவை. ராவணனின் தலைநகரான லங்காபுரியும் அங்கிருந்த மனிதர்களும் இப்போதிருக்கும் இலங்கையோடு தொடர்புடையன அல்ல என்று முடிவுகளை முன்வைத்த ஆய்வுகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். வட இந்தியாவில் இருக்கும் அயோத்தியிலிருந்த ராம லக்குவனர்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் இருக்கும் இலங்கைத்தீவுக்கு வந்திருக்க முடியுமா? விரைவான வேகத்தில் செல்லும் வாகன வசதிகள் இல்லாத ஒரு காலத்தில் சில ஆயிரம் மைல்கள் தூரப் பயணம் செய்திருக்க வாய்ப்புண்டா? இப்படியான கேள்விகளோடு, கடலைத் தாண்டி ராவணன் இந்தியாவிற்குள் வந்தது எப்படி? எனப் பயண தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எழும் கருதுகோள்களின் மேல் எழுந்த ஆய்வுகள் அவை என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன்.

இந்தப்புரிதலின் மீது பெரும் தாக்குதலைத் தொடுக்கும்விதமாகத் திரிகோணமலையின் வெளிகளும் குறிப்பான இடங்களும் ராமாயணத்தோடு தொடர்புடையனவாக இருக்கின்றன. சிவபக்தன் ராவணன்; அவன் வணங்கிய சிவன் இருந்த இடம் திரிகோணமலையில் இருக்கும் கோணேஸ்வரர் ஆலயம் என்பதை ஏற்று ஒவ்வொரு இடமும் அவனது வாழ்க்கையோடு தொடர்புபடுத்தப்படுகிறது. ராவணனின் தலைநகராக விளங்கிய இலங்காபுரியே இந்தத் திரிகோணமலைதான் என்றே அங்கிருப்பவர்கள் நம்புகிறார்கள். அவன் தமிழ் அரசன்; ஆனால் ராமாயணம் தான் அரக்கனாகச் சித்திரித்தது. அது ஒரு புனைவின் வெற்றி, நம்பத்தகுந்த வெளியில் பாத்திரங்கள் மீது புனைவுத்தன்மையை உருவாக்குவதில் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டால் திரிகோணமலையே ராமாயணத்தில் வரும் லங்காபுரி என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

அங்கிருக்கும் சுடுநீர்த் தீர்த்தங்கள் கூட ராவணனின் வாழ்க்கையோடு இணைக்கப்பட்டே சொல்லப் படுகின்றன; நம்பப் படுகின்றன. திரிகோண மலையிலிருந்து ஒதுங்கியிருக்கும் சீதாஎலியா இன்னொரு உண்மையாக நம்பப்படுகிறது. மலையக மக்கள் ராமனை ஒரு நாட்டார் தெய்வமாக ஏற்றுக் கொண்டு திரிஎடுத்துக் கொண்டாடும் நாட்டார் வழிபாடுகள் இப்போதும் நடக்கின்றன. தேவாரப் பதிகங்கள் ராவணனைச் சிவபக்தனாகச் சித்திரிக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டுச் சிவன் கோவில்களில் ராவணனின் இடம், இலங்கையின் சிவன்கோவில்களில் இருக்கும் இடம் அளவுக்கு இல்லையென்றே தோன்றுகிறது.தொடர்ந்து அங்கு தங்கியிருந்து திரிகோணமலைப் பகுதிக் கிராமங்களில் சேகரிக்கப்படும் வழிபாட்டுக்குறிப்புகளும் அவற்றில் ராவணனின் இடமும் கூடுதல் ஆதாரங்களாக ஆக முடியும். திரிகோணமலை சிவன் கோயிலில் மட்டுமல்லாமல் வவுனியா – மன்னார் இடையில் இருக்கும் திருக்கேதீஸ்வரர் கோவிலிலும் கூட ராவணனின் இடம் கூடுதலாகவே இருக்கின்றன.

திரிகோணமலை கோயில், ஈழம் வென்ற பிற்காலச் சோழர்கள் உருவாக்கிய நகரம் என்பதற்குச் சான்றுகள் அங்கே இருக்கின்றன.பாண்டியர்கள் கோயிலில் சில வேலைகள் செய்திருப்பார்கள் என்றும் நம்பும்படியாக இலச்சினைகள் இருக்கின்றன. ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்ட கோயிலின் பகுதிகள் இப்போதும் கிடைக்கற்களாகவும் கோட்டைச் சுவர்களாகவும் மாறியிருக்கின்றன. கடலோரம் மலையுச்சியில் இருக்கும் கோணேச்வரர் ஆலயம் தமிழ்ப் பெருமைகளில் ஒன்று. அதனை உள்வாங்கியே தனிநாட்டுக் கோரிக்கையின் போது அது தலைநகராக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போதிருக்கும் திரிகோணமலையின் காட்சிகளும் முழுமையாகத் தமிழர்களின் வாழிடமாகவே இருக்கிறது.

கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப்பரப்பும், கடல்நீரின் மெலிதான ஓசையும், வளமான கிராமங்களும் இன்னும் சில நாட்கள் இங்கே இருக்கவேண்டும் என்ற ஆசையைத் தூண்டிக் கொண்டே இருந்தன. கடலுக்குள் தெரியும் துறைமுகமும் கப்பல்களும். கோணேச்வரர் கோயிலிருந்து கடலுக்குள் இருப்பதுபோலத் தெரியும் மூதூருக்கு அடுத்துச்செல்ல வேண்டும். நண்பர் பாலசுகுமாரின் சொந்த ஊர் அதன் அருகில் இருக்கும் சேனையூர். மூதூர்ப்பகுதி இளைஞர்களோடு இன்று நாடகக்காரனாக மாறவேண்டும். கட்டைமறிச்சான் கிராமத்தில் உள்ள விபுலானந்தர் பள்ளியில் நடக்க இருக்கும் நாடகப்பயிலரங்கில் பள்ளி மாணவர்களோடு இருக்கவேண்டும். அத்தோடு அனாமிகாவின் நினைவாக நடக்கும் விழா நிகழ்வுகள் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன.

இலங்கைக்கு வந்து இன்று (26/12/2019) பத்தாவது நாள். நேற்றிரவு கூட்டம் முடிந்து வந்து தங்கியிருந்த சுகுமாரின் உறவினர் திருச்செல்வம் கதிரைவேற்பிள்ளை பெரிய வீட்டில் அவர் மட்டுமே தனியாக இருந்தார். மனைவி உறவினர் வீட்டிற்குப் போயிருப்பதால் கடையிலிருந்தே உணவு வந்தது. நேற்றைய கூட்ட த்திற்கு அவர் தான் உணவு ஏற்பாடு செய்திருந்தார். சமையல் கூடம் ஒன்றை நடத்துவதாகவும் நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாகச் சமைத்து உணவு வழங்கும் -கேட்டரிங் – தொழில் நட த்துவதாகவும் சொன்னார். மாலையில் மூதூர் – கொட்டியாபுரத்தில் நடக்கும் விழாவிற்கும் அவரே சிற்றுண்டு ஏற்பாடு என்றும் சொன்னார். மாலையில் திரும்பவும் சந்திக்கலாம்; இப்போது நீங்கள் நட த்தவேண்டிய நாடகப்பட்டறைக்காக பள்ளி மாணவர்கள் காத்திருப்பார்கள்.உங்களை அங்கு அனுப்பிவைக்கும் பொறுப்பைச் சுகுமார் என்வசம் விட்டுள்ளார் என்று சொல்லிவிட்டுப் போகவேண்டிய தூரம் 25 கிலோமீட்டர் தான்; ஆட்டோவில் சென்றுவிடலாம் என்று சொன்னார்.

எடுத்துச் செல்லும் பெரும் பொதி இல்லையென்றால் இருசக்கர வாகனத்தில்கூடப் போகத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இடியாப்பமும் சொதியும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே ஆட்டோ வந்துவிட்ட து. ஆட்டோ ஓட்டுநரிடம் இடையிடையே நிறுத்திப் பார்க்கக் கூடிய இடங்களைக் காட்டிக்கொண்டே போய் இறக்கிவிடுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

சாலை கடலோரத்திலேயே போனது. இடையிடையே பாலங்கள் வந்தன. பாலங்கள் எல்லாம் புதிய பாலங்கள். ஏற்கெனவே இருந்த பெரும்பாலங்களின் இடிபாடுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. போர்க் காலத்தில் இடிக்கப்பட்ட பாலங்களில் நிறுத்திச் சில சண்டைகளை நினைவுபடுத்திக்கொண்டு போனார் ஓட்டுநர். முழுமையான கடலோரப் பயணம். போகும் பாதையில் இருந்த இலங்கை அரசின் விமானப்படைத்தளம், முதன்மையான துறைமுகம் போன்றவற்றை நிறுத்திப் பார்த்தாலும் படங்கள் எடுப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார். படம் எடுக்க க்கூடாது என்பதால் நானும் வண்டியை விட்டு இறங்காமலேயே பார்த்தபடி நகரச் சொன்னேன்.

கொட்டியாபுரத்தில் நாடகத்துறையின் மிக பெரும் ஆளுமையாளர் போராசிரியர் அ.ராமசாமி அவர்களால் மாணவர்களுக்கான நாடகபயிற்சி பட்டறை இன்றைய தினம் நட க்க இருக்கிறது. லண்டனில் வசிக்கும் திரு பால சுகுமார் அவர்களது ஏற்பாடு மற்றும் அனுசரனையுடன் கட்டைபறிச்சான் விபுலாநந்தர் வித்தியாலயத்தில் இடம்பெறுகிறது என்ற விளம்பரம் இருந்த து. ஆழிப்பேரலையால் அள்ளிச் செல்லப்பட்ட அனாமிகா. பாலசுகுமார் - பிரமிளாவின் அன்புமகள். ஆண்டுதோறும் நடக்கும் நினைவஞ்சலியில் இந்த ஆண்டு 80 மாணாக்கர்களுக்கு நாடகப்பயிலரங்கு. திரிகோணமலை மூதூர்ப் பகுதியின் கட்டைபறிச்சான் விபுலானந்தர் கலை அரங்கில் என்பதும் முன்பே திட்டமிடப்பட்ட ஒன்றுதான்.

ஆட்டோவிலிருந்து இறங்கிய என்னை மாலை, மேளம், வரிசையாக நின்று கைதட்டி வரவேற்பு எனப் பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இறங்கிய சில மணித்துளிகளிலேயே பயிற்சிப் பட்டறையைத் தொடங்கிவிட்டேன். மூன்றுமணி நேரப்பட்டறை தான். பிற்பகலில் அனாமிகா அஞ்சலி நிகழ்ச்சிகள் இருக்கின்றன. ஓவியம், நடனம், உரை, பரிசளிப்பு, நிதியளிப்பு எனப் பலவிதமான நிகழ்ச்சிகள். எல்லாவற்றையும் மாலை 7 மணிக்குள் முடிக்கும்படியாகத் திட்டமிட்டிருந்தனர்.

பள்ளியில் முதல் தளத்தில் இருந்த நீண்ட அரங்கில் 80 மாணவர்களோடு அரங்கியல் விளையாட்டுகளைத் தொடங்கினேன். அரங்கம் எதிரொலிக்கிற அரங்காக இருந்த தால் பெருங்குரலெடுத்துப் பேச வேண்டியிருந்தது. தொடர்ச்சியாக மொத்த மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து நிற்றல், நடத்தல், கவனித்தல், விவரித்தல், கூட்டுப்படங்களை உருவாக்குதல், அசைவும் பேச்சும் எனப் பயிற்சிகள் முடித்துச் சிறுநாடகத்தயாரிப்புக்கு நகர்த்தி முடித்தபோது மணி இரண்டு.

அனாமிகா அஞ்சலி நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் சுகுமாரின் வேண்டுகோளை ஏற்றுச் செய்தவர்கள் ஒவ்வொருவரும் அவரது உறவினர்களே. காலை ஆறுமணிக்கு என்னைப் பேருந்து நிலையத்தில் காத்திருந்து அழைத்துப் போனவர் சிவசங்கரன் சுகுமாரை மாமா என்று சொன்னார். அவர்தான் அன்று முழுவதும் சுற்றிக்காட்டினார். தங்கியிருந்த வீடு திருச்செல்வம் கதிரைவேற்பிள்ளை என்பவரின் வீடு. திருகோணமலை நகரின் முன்னால் நகரசபை உறுப்பினர். அவருக்குச் சுகுமார் சித்தப்பா முறை. அவரது உறவினர் ஒருவர்தான் அடுத்தநாள் காலையில் ஆட்டோவில் மூதூருக்கு அழைத்துப் போனார். மூதூரில் பெட்டியை இறக்கிய வீடு சுகுமாரின் உறவினர் வீடுதான். சகோதர உறவு. அன்று இரவு உணவுக்கு அழைத்த நாடக ஆசிரியை காயத்திரியும் சுகுமாரை மாமா என்றார். காயத்திரி கட்டைமறிச்சான் பள்ளியின் நாடக ஆசிரியர். மூன்றுவிதமான மீன்களும் இராலும் இடியாப்பமும் சாப்பிட்டுவிட்டு நடந்து போவது சிரமம் என்பதால், அவரது கணவரின் ஈருருளை வண்டியில் ஏற்றி அனுப்பினார். லண்டனில் இருந்தாலும் சுகுமாரின் நினைப்பு முழுவதும் சேனையூரிலும் மூதூரிலும் இருப்பதின் காரணங்களை நான் நேரில் பார்த்தே தெரிந்துகொண்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்