வந்த வழி தெரிகிறது; போகும்பாதை... ? மலையகமென்னும் பச்சைய பூமி…

மலையகத்தில் இரண்டு நாட்கள் 
 

வணக்கம் நண்பர்களே...!

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ( 22-12-2019) அன்று ராகலை உயர் நிலைப் பள்ளியில் காலை 10.30 மணிக்கு" மரபுக் கலைகளும் நவீன நாடகங்களும்" என்ற தலைப்பில் பேராசிரியர் அ.ராமசாமி ஐயா அவர்கள் உரையாற்ற உள்ளார்...

வாருங்கள் நண்பர்களே.... !!!

இப்படியொரு அழைப்பை நான் இலங்கைக்குள் நுழைந்த இரண்டாம் நாளிலேயே முகநூலிலும் புலனக்குழுவிலும் (வாட்ஸ் -அப்) தந்துள்ளதாக தெரிவித்து விட்டார் கவி.ராசு. அவரது தகவலைத் தொடர்ந்து, “வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள்(21,22) இலங்கையின் மலையகப்பிரதேசங்களில் ஒன்றான நுவரெலியாவில் நாடகம் விரும்பிகளோடு இருக்கிறேன். மட்டக் களப்பு விபுலானந்தா அழகியல் கற்கையில் நாடகம் கற்றவர் வி. சுதர்சன். சிறு நாடகப்பயிற்சியும் பின்னர் உரையாடலுமாக அமையும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளார்” என்று எனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தேன். கவி.ராசு என்பது சுதர்சனின் முகநூல் பெயர். இப்போது நுவரெலியாவில் இருக்கும் அரசுப் பள்ளியில் நுண்கலை ஆசிரியர். நான்காண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவனத்தின் மாணவர்; பயிற்சியாளர். அதனை முடித்துத் தனது சொந்த இடமான மலையகத்தில் ஆசிரியப் பொறுப்பேற்றுக் கொண்ட திலிருந்தே, எப்போது இலங்கை வருகிறீர்கள்; வரும்போது நாடகப் பயிற்சியும் உரையாடலும் செய்யவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவரது அழைப்பும் இலங்கைக்கு வரும் தூண்டுதலில் ஒன்று. அத்தோடு சென்ற முறை பரதேனியாவுக்கு வந்து அழைத்துச் செல்லக் காத்திருந்த லுனகுலஸ்ரீ யிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் நினைத்திருந்தேன். அதனால் அவருக்குத் தனியாகவும் தகவல் தெரிவித்திருந்தேன்.

20 முற்பகலிலேயே பேராதனை நிகழ்வு முடிந்துவிடும் பிற்பகலில் கிளம்பி வந்துவிடுவேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் சுதர்சன் அவருடைய நண்பர் ரஜீவனைப் பேராதனைக்கே அனுப்பி வைத்துவிட்டார். காலை 11. 30 -க்கெல்லாம் வந்து பார்த்துவிட்டுக் கண்டியில் ஒரு வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு வருகிறேன். தங்கியிருக்கும் அறையிலேயே இருங்கள் வந்து அழைத்துப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போயிருந்தார். சொன்னபடி மாலை நான்கு மணிக்கெல்லாம் வந்துவிட்டார். வரும்போதே ஒரு ஆட்டோவோடு வந்தார். கண்டி மற்றும் பேராதனையைச் சுற்றியிருக்கும் எல்லாக்கட்டிடங்களின் வாசலுக்கும் போகவேண்டுமென்றால் ஆட்டோவில் செல்வதுதான் சரியாக இருக்கும். கையில் சுமை இருந்தால் தூக்கிக் கொண்டு படிகளிலோ, குறுக்குப் பாதைகளிலோ நடந்து ஏற முடியாது. அதனால் எல்லா விடுதிகளும் ஆட்டோக்களின் எண்களை எழுதி வைத்திருப்பார்கள். அழைத்தால் வருவார்கள். ரஜீவ் ஏறிவந்த ஆட்டோவில் ஏறி கண்டி பேருந்து நிலையம் போனபோது மழை பெய்யத்தொடங்கி விட்டது.

ஆட்டோக்காரர் இறக்கிவிட்டுப் போன இடத்தில் மலையகம் போகும் பேருந்துகள் நிற்கவில்லை. முன்பு அங்குதான் நின்றதாம்; நேற்றுமுதல் மலையகப் பேருந்துகளை இடம் மாற்றி விட்டார்கள் என்பது தெரிய வந்தது. ரஜீவ் என்னை அங்கேயே நிறுத்திவிட்டு பேருந்து நிலையத்தை ஒரு சுற்றுச் சுற்று வந்தார். வந்தவர் எனது பெட்டியைத் தலைச் சுமையாகத் தூக்கிக் கொண்டு பின் தொடரச் சொன்னார். பின் தொடர்ந்து போன இட த்தில் ஒரு சொகுசுப் பேருந்து நின்றது. ஆனால் பெரிய பேருந்து அல்ல. அகலம் குறைவான பேருந்து ஒரு வரிசைக்கு மூன்று இருக்கை மட்டுமே. மொத்தமும் 24 பேர் உட்காரலாம். இடையில் பத்துப் பேர் வரை நிற்கலாம். நிற்பவர்களும் நிமிர்ந்து நிற்க முடியாது.  பெட்டியை சுமைப்பகுதியில் வைத்துவிட்டு எனக்கு இடம் பிடித்துக் கொடுத்துவிட்டார். கண்டியிலிருந்து நுவரெலியாவுக்கு 75 கிலோமீட்டர் தான். ஆனால் இரண்டரை மணிநேரம் ஆகும். இப்போது மழை பெய்வதால் இன்னும் கூடுதல் நேரம் ஆகலாம் என்று சொல்லிவிட்டு அவர் நின்றபடி பயணம் செய்தார். வண்டி கிளம்பியது முதலே சிங்களப்பாடல் ஒலிக்கத் தொடங்கியது. கஜல் இசையின் சாயல் கொண்ட அந்தப் பாடல்களில் அதிக ஏற்ற இறக்கமில்லை. ஜல்ஜலக் ஜலக்ஜல் என்பதான பின்னணித் தாளத்தில் ஒலிக்கும் இதுபோன்ற பாடல்களைப் பாடிய சிலோன் மனோகரின் பெயர் நினைவுக்கு வந்த து. அந்த இசையில் தூக்கம் கண்ணைச் சுற்றியது. ஆனாலும் மலையகப்பாதையின் பசுமையும் மழையின் படுதாவுக்குள் மறையும் தேயிலைத் தோட்டங்களும் தூக்கத்தை விரட்டும்படி கேட்டுக் கொண்டன. மூன்று மணி நேரப் பயணத்திற்குப் பின் நுவரெலியாவின் பேருந்து நிலையம் போகும் என்றாலும், அதற்கு முந்திய நிறுத்த த்தில் இறங்கித் தங்குமிட த்திற்குப் போய்விடலாம் என்று ரஜீவ் சொல்லிவிட்டார். 

வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதையில் பெய்து கொண்டிருக்கும் மழையின் நீர் ஓடிக்கொண்டிருந்தது. குளிர் உடம்பிற்குள் ஏறியது. தலைக் குல்லாய், மப்ளர் என ஒவ்வொரு கூடுதல் ஆடையும் சேர்ந்துகொண்டன. அதுவரை போடாமல் வைத்திருந்த ஷாக்ஸையும் மாட்டிக்கொண்டேன். டிசம்பரில் பொதுவாகவே குளிரும். மழையும் சேர்ந்துகொண்ட நடுக்கம் தெரிந்தது. பேருந்து நிறுத்த த்தில் சுதர்சன் நண்பர்களோடு காத்திருந்தார். தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த விடுதியின் அறைக்குள் நுழைந்தவுடன் சூடேற்றும் கருவியை இயக்கிய பின்புதான் நடுக்கம் நின்றது. நுவரெலியாவின் குளிரைக் கொடைக்கானலில் குளிரோடு ஒப்பிடலாம். ஆனால் மழையும் சேர்ந்துகொள்ளும்போது அதையும் விடக்கூடுதல் குளிராக இருந்தது. சுதர்சனும் அவரது நண்பர்களும் அறையில் அமர்ந்து உரையாட நினைத்திருந்தார்கள். ஆனால் சாப்பாடு ஏற்பாடு போன்றவற்றிற்காக வெளியே போவதும் வருவதுமாக இருந்ததால் நேரம் கடந்துவிட்டது. காலையில் பட்டறையில் எத்தனை பேர் பங்கேற்பாளர்களாக இருப்பார்கள் என்று கேட்டேன். முப்பதுக்குக் குறையாது; ஐம்பதுக்கும் கூடாது என்றார் சுதர்சன். நாளை இரவு நேரமிருந்தால் பேசலாம்; காலையில் வருகிறோம்; மலைச்சரிவுகளில் நடக்கும் ஆசையிருந்தால் நடக்கலாம் எனச் சொல்லி என்னைத் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

எப்போதும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் கொண்ட எனக்கு அன்று இன்னும் முன்னதாகவே தூக்கம் போய்விட்ட து. கணினியில் வாசித்துக் கொண்டிருந்த என்னைச் சரியாக ஆறுமணிக்கு வந்து கதவைத் தட்டினார்கள் சுதர்சனும் அவரது நண்பர்களும். பல் விலக்கிவிட்டால் காலை காபியையும் சிற்றுண்டியையும் முடித்து விட்டு வரலாம் என்றார். குளிருக்கான உள்ளாடைகளை அணிந்துகொண்டு நடக்கத் தொடங்கினோம். சூரியன் தூரத்தில் இருப்பதை மலையுச்சிகளில் தெரியும் வெயிலின் பளப்பளப்பும் அதனால் உண்டாகும் நிழலின் நீட்சிகளும் காட்டின. சாலையோரங்களில் பெண்கள் அதிகமாக நின்றிருந்தார்கள். தேயிலை பறிக்கப் போகின்றவர்களை விடக் காய்கறித்தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்பவர்களே முந்திப் போவார்களாம். காரட், பீட்ரூட், நூக்கல், முட்டைக் கோஸ், காலிபிளவர் போன்ற மலைக்காய்கறிகளைப் பறித்தும், தோண்டியெடுத்துச் சுத்தம் செய்து சந்தைக்கு அனுப்பும் நோக்கத்தில் ஆறுமணிக்கெல்லாம் தோட்டங்களில் நின்றார்கள். காய்கறித் தோட்டங்கள் அதிகமும் சாலையோரங்களிலும் வீடுகள் நிரம்பிய ஊரின் ஊடாகவும் இருந்தன. தேயிலைக் கொழுந்துகள் தூரத்தில் பரவிக்கிடந்தன. கிளம்பிச் சாலையில் இறங்கியவுடன் வந்த தேநீர்க்கடையில் ஒரு வருக்கியும் தேநீரும் முடித்துவிட்டு நடந்தோம். சாலையிலும் சாலையை விட்டு விலகிய மலைச் சாலைகளிலுமாக நடந்து திரிய ஆசைதான். ஒன்பது மணிக்குப் பட்டறையை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் அறைக்குத் திரும்பித் தயாராகத் தொடங்கினேன். 

பட்டறை ஏற்பாடுகள்

நாடகப்பயிற்சிப்பட்டறைகள் பலவிதமானவை. இலங்கைப் பயணத்தில் நான் நடத்திய பட்டறைகள் பெரும்பாலும் நடிகர்களுக்குத் தேவையான அடிப்படைப் பயிற்சிகளை மட்டும் வழங்கியவை. ஒருநாள்/ அரைநாள் அளவிலான பட்டறைகளில் நடிப்புக்கான பயிற்சிகள் சிலவற்றையே தரமுடியும். நடிக்க நினைப்பவர்களின் முதலும் முதன்மையானதுமான கருவி அவர்களது உடல்தான். அந்த உடலில் என்னென்ன பாகங்கள் இருக்கிறது என்பதை உணரச்செய்து, அவற்றின் பயன்பாடுகள் எத்தன்மையன எனச் சுட்டிக்காட்டும் விதமாக உடலுக்கான பயிற்சிகளை முதன்மையாகத் தரவேண்டும். தொடர்ந்து குரலுக்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். குரலைக் கூட்டுவதும் குறைப்பதும் மென்மையாக்குவதும் வன்மையாக்குவதுமான வேலை நடிப்பில் இருக்கும் முக்கியமான பணி. அதற்கான பயிற்சிகளோடு, மூச்சுப்பயிற்சியும் அளிக்கலாம். உடல், குரல் பயிற்சிகளுக்குப் பின்னர் மனதைக் கட்டுக்குள் வைப்பது, போலச்செய்ய வைப்பது, கற்பனை செய்யத் தூண்டுவது போன்ற பயிற்சிகளால் நடிக உடலைக் கிளர்ச்சி அடையச் செய்யலாம். இம்மூன்றையும் இணைத்துப் பயன்படுத்தும் விதமாகச் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை உருவாக்கிக் காட்டச் செய்யவேண்டும்.

உடல்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். படிமங்களை உருவாக்கலாம். இசைநாற்காலிப் போட்டியில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் யோசிக்காமல் காட்சிப்படிமங்களை உருவாக்குவது, யோசித்துக் காட்சிப்படிமங்களில் இணைவது எனவும் பயிற்சியை நீட்டிக் கொண்டே போகலாம். காட்சிப்படிமப் பயிற்சியில் அசையாக் காட்சிப்படிமம், அசையும் வெளியின் படிமங்கள், குரல்களின் சேர்க்கையில் அர்த்தங்களை உருவாக்கும் நிகழ்வு என விரியும்போது பங்கேற்பாளர்களின் ஈடுபாடு அதிகமாகும். நேரம் கிடைத்தால் காத்திறமான வசனங்களைக் கொடுத்துப் பங்கேற்பாளக்குழுக்களைக் கொண்டு உருவாக்கப்படும் குறுநிகழ்வு நாடகங்களை நடத்திக் காட்டிவிடலாம்.இவையெல்லாம் மக்கள் நாடக இயக்கம் எனச் சொல்லப்படும் எளிய அரங்கிற்கான பயிற்சிகளாக அறியப்படுகின்றன. பாதல் சர்க்காரின் பயிற்சிகள் இப்படிப்பட்டவை.

இவையல்லாமல் ஒரு நல்திறக்கட்டமைப்பு கொண்ட நாடகத்தைத் தயாரிக்கும் நோக்கத்தோடு செய்யும் பட்டறைகள் வேறுவிதமானவை. அடிப்படைப் பயிற்சிகளோடு தரப்படும் பாத்திரங்களைப் புரிந்துகொண்டு அதற்குள் இருக்கும் பண்புகளை வெளிப்படுத்தும்விதமாகப் பயிற்சிகளைத் தந்து வளர்த்தெடுக்கவேண்டும். ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் நடிக தயாரிப்பு, பாத்திரமாக்கல், பாத்திரமாக இருத்தல் போன்றவற்றை மையமிட்ட முறைநிலை நடிப்புப் பயிற்சிகள் இதற்கு உதவும். நடப்பியல் நடிப்பை உருவாக்கித் தந்த ஸ்டானிஸ்லாவ்ஸ்கியைத் தாண்டிச் செல்ல ப்ரெக்ட், க்ரோட்டோவ்ஸ்கி, மேயர்கோல்டு போன்றோரை வாசிப்பதும் செய்துபார்ப்பதும் உதவும்.

இப்பயணத்தில் நடத்திய பட்டறைகள் எளிய அரங்கிற்கான பயிற்சி களைத் தந்த பட்டறைகளே. பட்டறை நடக்கும் இட த்திற்கு முதல் ஆளாகப் போய்விட வேண்டும் என்று சுதர்சனிடம் சொல்லி விட்டேன். அப்படியே போன போது இரண்டு பெண்கள் அங்கு வந்திருந்தார்கள். அதில் ஒரு பெண் முன்பே மட்டக்களப்பில் படித்த பெண் தான். நினைவில் இருந்த து முகம். அரைமணி நேரத்தில் எண்ணிக்கை சேர்ந்துவிட்டது.

 உடலை அறிதல் என்பதில் பயிற்சி தொடங்கியது. ஒருவித த்தில் பட்டறைக்குத் தயார் படுத்தும்  முதல் பயிற்சி. உடலை அறிவதென்பது அதன் இருப்பையும் அதன் உறுப்புகளையும் அவற்றின் இயக்கச்சாத்தியங்களையும் உணர்வதில் தொடங்கி நீளும். வெளியிலிருந்து வரும் கட்டளைகளுக்கு ஏற்ப அசையும் உடல்கள், மெல்லமெல்ல அகத்தின் கோரிக்கைக்கும் கற்பனைக்குமாக நகரும். அதிகபட்ச இயக்கத்தை உருவாக்கித் தளரச் செய்து முடிக்கும்போது புறநிலைகளை மறந்து பட்டறையின் கூட்டுணர்வுக்குள் பங்கேற்பாளர்கள் வந்துவிடுவார்கள்.

உடலை அறிவதற்குப் பின்னர் குரலைப் பெருக்குதல், கட்டுப்படுத்துதல், நளினப்படுத்துதல் என நகர்ந்து குரலோடு உடலை இணைத்துக் கொள்ளும் லாவகத்திற்கு நகர்த்த வேண்டும். இவ்விரண்டுமே புறக்கட்டளைகளைப் பெற்று நடந்தபின் அகநிலைக்கு நகரும். இந்த நகர்வில் நிலைக்காட்சிகள், அசைவுகள், இசைக்கிணைதல், பேச்சுக்கு உடன்படுதல், குரலோடு நகர்தல், முரண்படுதல், இடங்களைக் கற்பனை செய்து உணர்வு கூட்டுதல் என்று நீட்டிக்கும்போது பங்கேற்பாளர்கள் தங்களை மறந்து புதிய வாழிடம் ஒன்றிற்குள் நுழைந்துவிடுவார்கள். இந்தப் பயிற்சிகளைக் காலை ஒன்பது தொடங்கி நண்பகல் பன்னிரண்டு வரை நீட்டியபின்  இருந்த முப்பத்தாறு பேரையும் நான்கு குழுவாகப் பிரித்து நிலக்காட்சிகளை உருவாக்கி நிலை, நகர்வு, பேச்சுடன் அசைவு என முந்நிலைக்கான தயாரிப்பு நடந்தது. அதனைக் காட்சிப்படுத்தி விவாதித்த பின்னர் வசனக்கோர்வை ஒன்றைக்கொடுத்து ஐந்து நிமிட நிகழ்வைத் தயார் செய்ய அனுப்பும்போது மதிய உணவு.

தரப்படும் கருத்து நிலை, அதன் முன்வைப்புக்கான காரணங்கள், நோக்கம் என விவாதித்து காட்சியில் இடம்பெற வேண்டிய பாத்திரங்கள் எனச் சின்னச் சின்ன ஆலோசனைகளை இடையீடாகத் தந்து நகர்த்தும்போது பெருங்குழுவிலிருந்து சிறுகுழுவின் நெருக்கமும் உறவும் கூடும்.  கால்கள் மண்ணில் உறுதியாகப் பதியும்போதுதான் முகத்தில் பாவனைகள் விரியும் என்ற புகழ்பெற்ற தொடரின் உண்மை புரியும். அதனை உணரும் நிலையில் சாதாரண உடல் நடிக உடலாக மாறும்.  விவாதங்கள் நடக்கும். பால் தயக்கமின்றிப் பங்கேற்புகள் நடக்கும். அன்று இந்தப் போக்கில் எந்தப் பிசிறும் இல்லாமல் பயிலரங்கு நடந்தது. தரப்பட்ட நான்கு சொற்றொடரில் நான்கு குறுநாடகங்களை மேடையேற்றினார்கள் பங்கேற்பாளர்கள். மற்றவைகளை விட ‘வந்தவழி தெரிகிறது; செல்லும் பாதை..?’ என்ற வினாத்தொடர் மலையகத்தின் வாழ்க்கையை விவரிக்கும் சொற்றொடராக உள்வாங்கப்பட்டு விவாதத்தையும் நிகழ்வையும் தந்தது. அந்தக் குறுநாடகத்தை விரிவாக்கி மறுநாள் நடக்க இருக்கும் உரையரங்கில் நிகழ்த்தலாம் என்ற தீர்மானத்தோடு பயிலரங்கை நிறைவு செய்தோம்.

பயிலரங்கு நிறைவுக்குப் பின் உடல் சோர்வு இருந்தபோதிலும் இருக்கும் நேரம் குறைவு என்பதால் மலையகத்தோட்ட த்தொழிலாளர்கள் வீடுகள் சிலவற்றைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டுப் பெருஞ்சாலைகளை விட்டு விலகித் தொட்டங்களுக்குள் சென்று வந்தோம். தேயிலையைப் பறித்துக் காயவைத்துப் பொடியாக்கும் ஆலைகளில் ஒன்றிலிருந்து வரும் வாசனையை நுகர்ந்தபடி நடந்தபோது மனிதர்கள் இயற்கையைத் தன் வசப்படுத்தும் சாகச நினைவுகள் ஓடிக்கொண்டே இருந்தன. எங்கு திரும்பினால் மலைகள். நெடிதுயர்ந்து நின்றாடும் மரங்கள். மண்ணை அரித்துக் கற்சரளையாக்கிப் போயிருக்கும் நீரோட்டம். சரளைப் பரப்பில் செழித்து வளரும் தேயிலைச் செடிகள். அதன் இளங்குருத்துகளைப் பறித்துப் பருகும் ஆசை. இயற்கை மகத்தானது; இயற்கையைத் தனக்கானது என நினைக்கும் மனித மனம் அதனையும் தாண்டி மகத்தானது.

இரண்டாவது நாள்

ஒருவேளைச் சாப்பாட்டை வழங்கும் ஆசையைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் செயல்படும் தோழருக்கு வழங்கியிருப்பதாகச் சுதர்சன் சொன்னபோது ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிடற்கரியது. அடுத்தநாள் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள தேசிய கலை இலக்கியப்பேரவையின் செயல்பாட்டாளர்களும் எங்களோடு உணவுக்கு வந்தார்கள். தொழிலாளர் சங்கமும் கலை இலக்கியப்பேரவையும் இணைந்து நின்று சுதர்சனின் நாடக ஈடுபாட்டிற்கு உதவியிருக்கிறார்கள். காலை உணவில் இலங்கைத் தமிழர்களின் சிறப்பு உணவுகளான ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, இட்லி, எனப் பலகாரங்களோடு சொதி, சட்னி, கோழிக்கறி எனக் காலையிலேயே பெருவிருந்தை முடித்துக் கொண்டு   உரையரங்கம் நடக்கும் பள்ளிக்குப் போனோம்.

தேசியக்கலை இலக்கியப்பேரவை நிகழ்வு

நேற்றைய நாடகப் பயிலரங்கிற்குப் பின்னணியில் இருந்து ஊக்கமும் உதவியும் செய்த கலை இலக்கியப்பேரவையின் நூரலைக்கிளை இன்று (22-12-19) ராகலையில் கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. ராகலை நுவரெலியாவிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஓர் பெரிய ஊர். தார்ச்சாலைகளும் கல்சரளை பரப்பிய சாலைகளுமாக இருக்கும் பெருஞ்சாலைகளை அகலப்படுத்தும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மலையின் சரிவுகள்மேடு- பள்ளங்களைச் சீரான சாலைகளால் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நுவரெலியா விலிருந்து 21 கி.மீ தூரத்திலிருக்கும் ராகலை நகரில் 1500 -க்கும் அதிகமான மாணாக்கர்கள் பயிலும் பள்ளியில் அந்த நிகழ்வு நடந்தது. அந்தப் பள்ளி வளாகமும் ஏற்ற இறக்கங்கள் கொண்ட வெளியைப் பயன்படுத்தி வகுப்பறைகளைக் கொண்டதாக இருந்த சூழல் ரசிக்கத்தக்க வளாகமாக இருந்தது


மரபுக் கலைகளும் நவீன நாடகங்களும் என்னும் பொருண்மையில் நடைபெற்ற அந்த உரை & மற்றும் உரையாடல் அரங்கில் முதன்மைப் பேச்சாளராக இருந்து இந்திய மாநிலங்கள் பலவற்றின் மரபுக் கலைகளைக் குறித்த ஓர் அறிமுகத்தையும் பொதுக்கூறுகளையும் தந்துவிட்டுஅவற்றை உள்வாங்கி நவீன நாடகங்கள் செய்ய முயன்ற போக்குகளையும் விரிவாகப் பேசினேன். இந்தத் தேடலின் ஒரு பகுதியாகப் பாதல் சர்க்காரின் மூன்றாம் அரங்கினை விளக்கிக்காட்டிவிட்டுஇந்திய அரசின் வேர்களைத் தேடிய இயக்குநர்கள் திட்டத்தையும் விரிவாக முன்வைத்தேன். இந்திய மாநிலங்களில் மரபுக்கலை வடிவங்களை உள்வாங்கி இந்திய அரங்கை உருவாக்க முயன்ற அத்திட்டத்தின்படி உருவான நாடகங்களின் உள்ளடக்க வடிவ மாற்றங்களை அறிமுகப்படுத்தினேன்.

விழிப்புணர்வுசமூக மாற்றம் என்பதனை நோக்கிச் செல்லும் கலைஞர்களுக்கு மரபு தரும் நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டிஅதனைத் தாண்டிச்செல்லும் முறைமைகளைச் சிந்திக்க வேண்டியதின் தேவையையும் வலியுறுத்திப் பேசினேன். என் உரையையொட்டியாழ்ப்பாணப் பல்கலைக்கழக நாடகத்துறை ஆசிரியர் ம.கேதீஸ்வரனும்   வி.சுதர்சனும் இலங்கையில் நடந்த நிகழ்வு களையும் மலையகத்தில் செய்யவேண்டிய பணிகளையும் குறிப்பிட்டுப் பேசினார்கள்.


தேசியக் கலை இலக்கியப் பொறுப்பாளர்கள் தலைமையேற்றும்நன்றியுரை கூறியும் பேசினார்கள். மோகன் ராசன் போன்றோர் விவாதங்களிலும் பங்கேற்றார்கள். சிங்கள - தமிழ் வாய்மொழிப்பாடல்களைக் குறிப்பாக ஒப்பாரியையும் தாலாட்டையும் ஆய்வு செய்யும் சிங்கள ஆய்வு மாணவி சில பாடல்களைப் பாடி ஒப்பிட்டுப்பேசினார். 10.45 -க்குத் தொடங்கிய கூட்டம் 2.15 வரை நீண்டது. வெளியே மழை இசைக்கான தாள லயத்தோடு பெய்து கொண்டிருந்தது. வந்த அனைவருக்கும் தேசிய கலை இலக்கியப்பேரவை மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தது.

அடுத்த பயணம் மலையகப் பகுதியிலேயே இருக்கும் சப்ரகமுவ பல்கலைக் கழகத்தை நோக்கிய பயணம். அங்கு என்னை அழைத்துச் செல்லப் பல்கலைக் கழக வாகனம் மாலை 6 மணிக்குப் பிறகே வரும் என்ற தகவல் வந்த தால், திரும்பவும் தோட்ட வீடுகள் சிலவற்றைப் பார்த்துவிட்டு நானும் நண்பர் சுதர்சனும் அந்தப்பகுதி தொழிலாளர் சங்கப் பொறுப்பாளர் ஒருவரின் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டோம். மாலைத் தேநீருடன் உரையாடலும் நீண்ட து. ஹட்டன், நுவரெலியா, ராகலை என விரியும் மலைப்பிரதேசக் கிராமங்களுக்கு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர்களுக்குள் இருக்கும் தேசம் பற்றிய நினைவுகளும் கடவுள்கள் பற்றிய எண்ண ஓட்டங்களும் ஈடுசெய்யப்பட இயலாதவை. இந்தியாவுக்கு வந்து தங்களின் பூர்வீகக் கிராமங்களுக்குப் போனால் தங்களை எப்படிப்பார்ப்பார்கள்; ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு விடைகள் இல்லை. சிரிமா -சாஸ்திரி ஒப்பந்தம், பின்னர் இந்திரா காலத்து ஏற்பாடுகள், ராஜீவ் காந்தியின் வருகையெனப் பலவும் அவர்களுக்கு இந்தியாவின் மீதான கற்பனைகளை உருவாக்கியிருக்கின்றன. அந்தக் கற்பனையை களைத்து நீங்கள் இங்கேயே இருப்பதுதான் உயிர்வாழ்வதற்கான வழிமுறை என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்ல வாய்வரவில்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன கணியன் பூங்குன்றனின் வார்த்தைகளில் பின்பாதி உண்மையாக இல்லை. சென்ற இடங்களில் இருக்கும் மனிதர்கள் கேளிராக இல்லை. பிளவுகளைப் பேசிப் பகை வளர்க்கும் கூட்டங்களாக உலகம் மாறிக் கொண்டிருக்கிறது.

தனிநாடு கோரிய போராட்டங்கள், இனவழிப்புப் போருக்குப் பின்னான புலம்பெயர்வுக்கு முன்னால் காலனிய ஆதிக்கம் ஏற்படுத்தித்தந்த புலம்பெயர்வை எழுதிய புனைகதை களையும் வாய்மொழிப் பாடல் களையும் தொகுத்துப் பார்க்கும்போது மலையகத்தமிழரின்  வந்தவழி தெரியக்கூடும். ஆனால் நிரந்தரத்தை நோக்கிப் போகும் பாதை… ?

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்