பெருமைமிக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில்….

 ஐந்தாவது நாள்

இரண்டு பயணங்களிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரண்டிரண்டு சொற்பொழிவுகள் வழங்குவதற்காக அழைக்கப்பட்டேன். தமிழ்நாட்டிலும் இந்தியாவிலிருக்கும் பல்வேறு மாநிலத் தமிழ்த் துறைகளிலும் எனது விருப்பத்துறைகளாக இலக்கியவியல், அரங்கியல், ஊடகவியல், பண்பாட்டியல் சார்ந்து பல உரைகளை வழங்கியிருந்தாலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரைகள் சிறப்பான உரைகளென நினைத்துக் கொள்கிறேன்.  அந்த வாய்ப்புக் கிடைத்ததற்காக எப்போதும் மகிழ்ச்சி அடைகிறவன் நான். 

முதல் பயணத்தின்போது அந்த வாய்ப்பை உருவாக்கித் தந்தவர்   மட்டக்களப்பு கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் நதிரா மரியசந்தானம். அவர் எமது துறையின் மாணவர். அவரும் அவரது கணவரும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக வந்து முனைவர் பட்டம் செய்தவர்கள். இருவரும் பெண்ணியத்தை மையமிட்ட ஆய்வுகளை மேற்கொண்டார்கள். தமிழ்க் கவிதைகளில் பெண்ணியக் கருத்தாடல்களின் தொடர்ச்சியைத் தலைப்பாகக் கொண்டு ஆய்வு செய்த நதிராவின் நெறியாளர் தொ.பரமசிவன். கென்னடி ஆங்கிலத்துறையில் ஆய்வை மேற்கொண்டு முடித்துவிட்டுத் திரும்பி, ஆப்பிரிக்க நாடொன்றுக்குச் சென்று பணியில் இருந்தார். நதிரா முன்மொழிந்த செய்த அறிமுகத்தின் வழியாகப் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் தறைப் பேராசிரியர் முனைவர் வ.மகேஸ்வரன் தொடர்பு கொண்டு அழைத்தார். நவீனத்திறனாய்வுப் பார்வைகளின் பின்னணியில் தொல்காப்பியத்தை முன்மொழிந்து அந்தச் சொற்பொழிவை நிகழ்த்துவதாக முன்மொழிந்து ஏற்றுக் கொண்டேன். 

மொத்தத் துறையும் அமர்ந்து உரையைக் கேட்டார்கள். திறனாய்வுப் பார்வைகள் ஒவ்வொன்றையும் விளக்கி, அண்மை வரவான பண்பாட்டு நிலவியலையும் அறிமுகப்படுத்தி விட்டுத் தொல்காப்பியம் எவ்வாறு ஒரு கவிதையியல் – இலக்கியவியல் நூலாக விளங்குகிறது என்பதை விளக்கிப் பேசினேன். உரை தொடங்குவதற்கு முன்பே துறையின் முன்னால் தலைவரும் திறனாய்வாளருமான எம். எ. நுஃமான் வந்துவிட்டார். அதனால் அவரே எனது உரைக்குத் தலைமை தாங்கி என்னை அறிமுகம் செய்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. 

எனது மாணவப்பருவத்தில் ஆளுமைமிக்கப் பேராசிரியர்கள் வழியாகவும் அவர்களின் நூல்களின் வழியாகவும் பார்க்கவேண்டுமென்று நினைத்த பல்கலைக்கழகம் பேராதனைப் பல்கலைக்கழகம். ஒரு மொழியின் இலக்கியவரலாற்றை அமைப்புகளின் தோற்றம் அதனால் உண்டாகும் கருத்துகளின் மாற்றம், அம்மாற்றங்களின் வளர்ச்சியால் உருவாகும் இலக்கியவகை மாற்றம் எனப் பார்க்கும் பார்வையைத் தமிழுக்கு அறிமுகம் செய்த முன்னோடி இலக்கிய வரலாற்றாசிரியர் பேரா. ஆ.வேலுப்பிள்ளை. அவரது தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்(1969) என்ற நூலை  வாசித்தபோது அறிமுகமான பெயர் பேராதனைப் பல்கலைக்கழகம்.  பட்டப் படிப்பின் பொதுத்தமிழில் பாடமாக இருந்த இலக்கிய வரலாறு ஆ.வேலுப்பிள்ளையின் நூல் அல்ல.  எம்.ஆர். அடைக்கலசாமி என்பவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு தான். அதில் ஒரு நூலின் ஆசிரியர் பெயர், கிடைத்தால் அவரது பிறப்புத் தகவல்கள், காலம் போன்ற அடிப்படைத் தகவல்களை மட்டும் தந்துவிட்டு, நூலின் ஒரு பகுதியை எடுத்துக்காட்டி அந்நூல், என்னவகையான பனுவல் என்பதை மட்டும் சொல்லியிருக்கும். தமிழ்நாட்டில் எழுதப்பெற்ற இவ்வகை இலக்கிய வரலாறுகளே அதிகமும் பாட த்திட்டங்களில் இடம்பெறுகின்றன.

தமிழ்நாட்டின் கல்வித்திட்டத்தில் பரிந்துரை செய்யப்படும் இவ்வகை இலக்கிய வரலாறுகள் கல்வித்திட்டத்தின் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றுவதில்லை. எந்தத் துறை மாணவராக இருந்தாலும் பொதுத்தமிழ் கற்கவேண்டும் என நினைப்பதும், அதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துவதும் தமிழின் மீது பற்றையும் ஈடுபாட்டையும் உருவாக்கும் நோக்கம் கொண்டது. அதற்காக ஒவ்வொருவரும் தமிழ் இலக்கியத்தின் முதன்மையான இலக்கியப்பனுவல்களில் அறிமுகம் பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பதோடு, தமிழ்மொழியின் சொல், தொடர் அமைப்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. இவ்விரண்டு நோக்கங்களையும் தாண்டி தமிழ் இலக்கியவரலாற்றையும் சமூக வரலாற்றையும் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதும் விரும்பப்படுகிறது.  அதன் மூலம் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்ட பின்னும் தங்கள் தாய்மொழியின் மீது விருப்பமும் ஆர்வமும் தொடரும்; ஓய்வுப்பொழுதுகளில் அம்மொழியின் இலக்கிய ஆக்கங்களை வாசிப்பதிலும், புத்தாக்கம் செய்வதிலும் ஈடுபாடு காட்டுவார்கள் என்பது எதிர்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற விரும்பினால் ஆ.வேலுப்பிள்ளையின் தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் போன்ற நூல்களையே பொதுப்பாடத் திட்டத்தில் வைக்கவேண்டும் என்று நான் பங்கேற்ற பாடத்திட்டக்குழுக்கூட்டங்களில் வலியுறுத்தியிருக்கிறேன். ஆசிரியர்களின் விருப்பமின்மையால் எனது வலியுறுத்தல்கள் நிறைவேறாமல் போயிருக்கின்றன. தேர்வில் விடை எழுதுவதற்காக அடைக்கலசாமியின் இலக்கியவரலாற்றை வாசித்துக்கொள்; உன் அறிவை வளர்ப்பதற்காக ஆ.வேலுப்பிள்ளையை வாசித்துக்கொள் என்று சொல்ல அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியர்கள் இருந்தார்கள். நூலகத்திலும் மூன்று பிரதிகள் இருந்தன. அதனை வாசித்தபின் அவரது சாசனமும் தமிழும், தமிழர் சமய வரலாறு, தமிழின் வரலாற்றிலக்கணம் ஆகிய நூல்களையும் தேடி வாசித்தேன்.

பேரா. ஆ.வேலுப்பிள்ளையின் வழியாக அறிமுகமான பேராதனைப் பல்கலைக் கழகமும் அதன் தமிழ்த் துறையின் பேராசிரியர்களும் தமிழ்க் கல்வியைத் தமிழியல் கல்வியாக மாற்றியவர்கள் என்பதை அறிந்துகொண்டவன் நான். அதன் முதல் துறைத்தலைவரான விபுலானந்தர் தொடங்கிப் பேரா. ஆ. கணபதிப்பிள்ளை. பேரா. எம். எ. நுஃமான் ஆகியோரின் நூல்களை வாசித்ததின் வழியாக அந்தப் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேண்டும்; அதன் மாணாக்கர்களோடு உரையாட வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொண்டிருந்தேன். அங்கு போகும்போது மார்க்சியத் திறனாய்வின் தளங்களை விரிவுபடுத்திய எம்.எ. நுஃமானைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் இன்னொரு காரணம். நேரடியாக அத்துறையின் ஆசிரியர்களோடு பழக்கமும் தொடர்புகளும் குறைவு என்றாலும் எனது இரண்டு இலங்கைப் பயணங்களிலும் அங்கு சென்று மாணாக்கர்களோடு உரையாடும் வாய்ப்புக் கிடைத்ததை எப்போதும் பெருமையாக நினைத்துக்கொள்வேன்.

முதல் பயணத்தில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய ஊர்களுக்குச் சென்றபின் நாடு திரும்பும்வழியில் பேராதனைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு உரைக்கு முந்திய நாள் சென்றுவிட்டேன். சூழவும் மலைக்குன்றுகளால் ஆன வளாகம் பேராதனைப் பல்கலைக்கழக வளாகம். பிரிட்டானியர்கள் காலத்தில் தொடங்கப் பெற்றபோது (1942, ஜுலை,30) அப்போது அதன் பெயர் இலங்கைப் பல்கலைக்கழகம். முகநூல் வழியாக அறிமுகம் கிடைத்திருந்த உதவிப் பேராசிரியர் யாழினி என்னைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றிருந்தார். கண்டி பேருந்து நிலையத்தில் இறங்கிய என்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த விடுதியில் தங்க வைக்கவும்  ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக முதுகலை மாணவர் ஒருவரைப் பணித்திருந்தார். அவரே என்னைப் பல்கலைக்கழக விடுதியில் கொண்டுவந்து விட்டுவிட்டுச் சென்றார். ஆங்கிலேயர் காலத்து விடுதி. ஒவ்வொரு அறையும் பெரியபெரிய அறைகள். மரப்பலகைகளால் ஆன மதில்களும் சாளரங்களும். திறந்து பார்த்தால் உயர்ந்த மரங்களின் அசைவுகளோடு மலைச்சரிவுகள்.

 முதல் நாள் மாலை யாழினியின் குடும்பத்தினரோடு சேர்ந்து நல்விருந்து. அழைத்துப் போன உணவகம் தரமான அசைவ உணகம்.   சாப்பிட்டுவிட்டுப் பல்கலைக்கழகத்திற்குள் இருக்கும்  இருக்கும் தாவரவியல் பூங்காவிற்கு முதலில் சென்று சுற்று வந்தோம். பின்னர் கண்டி நகரில் இருக்கும் நீராவிக் குளத்தையும் ஒரு சுற்றுச் சுற்றி வந்தோம். சுற்றி வந்ததில் உடல் அசதியை உணர்ந்தது.  இரவில் நல்ல ஓய்வும் தூக்கமும் கிடைத்தது.

அன்று மாலை மலையகத்திற்கு அழைத்துச் சென்று பேசுவதற்கு ஏற்பாடு செய்வதாக வந்திருந்த லுனகுலு ஸ்ரீயுடன் போகமுடியவில்லை என்பது பெரிய வருத்தமான ஒன்றாக இப்போதும் இருக்கிறது. கண்டிக்கும் மலையகத்திற்கும் இடையேயுள்ள தூரம் பற்றியும் போக்குவரத்து பற்றியும் தெரியாததால் இந்தக் குழப்பமும் இயலாமையும் ஏற்பட்டது.   முதல் பயணத்தில் தவறவிட்டு மலையகப் பகுதியில் மூன்று நாட்கள் இருக்கப்போகிறேன் என்று செய்தி அனுப்பியபின்னும் ஸ்ரீ வந்து பார்க்கவில்லை என்பதால் அந்த வருத்தம் தொடர்ந்தது. முகநூல் வழியாகத் தொடர்பில் வந்தார் என்றாலும் என் மீது கோபம் இருந்திருக்கும் என்பது புரிந்தது. 

முதல் பயணத்தில் உரையாற்றியது போலவே இரண்டாவது பயணத்திலும் இரண்டு சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  முதல் நாள் மாலையில் தலதா மாளிகையிலிருந்து வந்து சீக்கிரம் படுத்து விட்டேன். அதனால் அடுத்த நாள்  (டிசம்பர்,20) காலையில் 5 மணிக்கு எழுந்துவிட்டேன். கிங்ஸ் லெசர்ஸ் ரெசிடென்சிக்கு வெளியே மழையின் சத்தம் பாட்டம் பாட்டமாக நகர்ந்து கொண்டிருந்தது. சரியாக 7.45க்கு துறை ஆசிரியர் ஜெயசீலன் வந்தார். 08.30 -க்குத் தொடங்கி பகல் மூன்று மணி நேர உரை எனத் தெரிவித்தார். மழை காரணமாக மாணவர்கள் வருகை முழுமையாகவில்லை என்பதால் பத்துநிமிடத் தாமதம். பல்கலைக்கழக வேளாண்திணைக்களபீடம் நடத்தும் உணவகத்தில் இரண்டு தோசைகளே வயிற்றை நிரப்பிவிட்டன. அங்கேயே பயிரிட்டு, அங்கேயே மாவாக்கி, தயாராக்கப்படும் உணவுப் பண்டங்கள் தரும் உணவகம் அது.  8.40 தொடங்கி உரையும் உரையாடலுமாக பேச்சு. 10 மணிக்கு ஒரு இடைவேளை. திரும்பவும் 10.20 -க்குத் தொடங்கி11.30 வரை தொடர்ந்து பேசினேன். இரண்டு உரைகளுமே நாடகவியல் சார்ந்த உரைகள். இந்த முறை உரைகளுக்கான தலைமை உரையை ஆற்றியவர் பேரா. வ.மகேஸ்வரன்.

முதல் உரை தமிழின் பாரம்பரிய அரங்குகள்; இரண்டாவது தமிழின் நவீனத்துவ நாடகப் போக்குகள். முதல் உரைக்குப் பின்னான தேநீர் இடைவேளையின்போது பேரா.நுஃமான் வந்தார். எல்லாம் முடிந்த பின் துறையின் ஆசிரியர்களோடு அறிமுகமும் அளவலாவலும். சென்ற முறை வந்தபோது முழுப்பொறுப்பெடுத்துக் கவனித்துக் கொண்ட யாழினிக்குப் பதிலாக அடுத்த தலைவராகும் நிலையில் இருக்கும் ஜெயசீலன் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டார்.  சாப்பாடு முடிந்தபின் பேரா. நுஃமான் தனது காரில் விடுதிக்கு அழைத்து வந்தார். வந்து ஒரு மணி வரை பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றார். மதிய உணவுக்குப் பின் கொஞ்சம் ஓய்வு .

முதல் நாள் பிற்பகலில் பேராதனை புகையிரத நிலையத்தில் இறங்கித் திரும்பவும் பிற்பகலில் கிளம்பிவிட்ட 24 மணி நேரத் தங்கல் தான் பேராதனையில் இருப்பு.இந்தப் பயணம் போலவே தான் சென்ற முறை பேராதனைக்கு வந்த பயணமும். முதல் நாள் 2016 செப்டம்பர் 27 இல் வந்து ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த நாள் சொற்பொழிவு. சொற்பொழிவுக்குப் பின்னர் கொழும்பு பயணம். ஆனால் இரண்டாவது பயணத்தில் பேராதனையிலிருந்து மலையகத்திற்கான பயணம். மலையகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக ரஜீவ் முற்பகல் 11 மணிக்கே வந்து தலையைக் காட்டிவிட்டு பிற்பகல் வருவதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்