சிங்களப் பகுதிக்குள் ஒரு தமிழ்த்துறை


இலங்கையின் மற்ற பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் பலரும் வந்து போவார்கள்; நான் பணியாற்றும் சப்ரகமுவ பல்கலைக் கழகத்திற்கு இலங்கையின் தமிழறிஞர்களும் எழுத்தாளர்களும் கூட அதிகம் வருவதில்லை. நீங்கள் திரும்பவும் இலங்கை வரும்போது கட்டாயம் சப்ரகமுவ பல்கலைக் கழகத்திற்கு வரவேண்டும். கற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு இருக்கும் எங்கள் மாணவ மாணவிகளோடு உரையாட வேண்டும் எனத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் அப்துல் ஹக் லறீனா.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு என்னை வரவேண்டும் என அழைத்த அப்துல் ஹக் லறீனா அங்கிருக்கும் துறையின் தலைவர் அல்ல. நான்கு முழு நேர/ நிரந்தர ஆசிரியர்களோடு செயல்படும் அத்துறையின் நிரந்தர ஆசிரியர்களில் ஒருவர். முதல் முறை இலங்கைக்குப் போனபோது மட்டக்களப்புக் கருத்தரங்கில் ஒரு கட்டுரையாளராகச் சந்தித்திருந்தேன். அந்தச் சந்திப்பில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் மாணவி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். மணற்கேணி பதிப்பகம் தனது நூலொன்றை வெளியிட்டிருக்கிறது என்பதை நினைவுபடுத்திப் பேசினார். இந்தப் பயணத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வரும் வாய்ப்புண்டா? என்று அப்போதே கேட்டார். ஏனென்றால் அப்போது அங்கே தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது விருப்பத்துறையாக மொழிபெயர்ப்பு இருந்தது. தமிழ்க் கல்வியில் அடிப்படைப்பட்டங்களையும் மொழிபெயர்ப்பில் கூடுதல் தகுதிகளுக்கான சிறப்புப் பட்டயங்களையும் கற்றவர். தமிழுக்குச் சிங்களத்திலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்ப்புகள் செய்திருப்பதாகவும் சொன்னார்.

இதுவரை மட்டக்களப்பும் யாழ்ப் பாணமும் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத் திலிருந்து திரும்பும்போது கிளிநொச்சியில் நண்பர் கவி. கருணாகரனைப் பார்க்கும் விருப்பம் இருக்கிறது. கண்டியோ, பேராதனையோ இப்போதைக்குத் திட்டத்தில் இல்லை என்று சொல்லியிருந்தேன். நான் பேராதனைக்குப் போனதும் அங்கிருக்கும் துறைத்தலைவரோடு பேசிவிட்டுச் சொல்கிறேன்; வர ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார். போனவர் அங்கு துறைத் தலைவராக இருக்கும் முனைவர் வ.மகேஸ்வரனோடு பேசியிருப்பார் என நினைக்கிறேன். அத்தோடு எனது வருகையை மட்டக்களப்புப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் விரிவுரையாளர் முனைவர் ம.நதிராவும் தொடர்பு கொண்டு சொன்னதின் பேரில் ஒரே நாளில் இரண்டு சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

அந்த ஏற்பாட்டில் அங்கு போனபோதும் லறீனாவோடு கூடுதல் அறிமுகம் கிடைத்தது. மணற்கேணி பதிப்பகம் வெளியிட்ட இரண்டு நூல்களையும் தந்தார். அந்த அறிமுகத்தின் நீட்சியாக அவரது கவிதைகள் குறித்தும் கதைகள் குறித்தும் வாசித்து எழுதியிருந்தேன். அவரது கவிதைத் தொகுப்பிற்கு – ஷேக்ஸ்பியரின் காதலி/ புது எழுத்து வெளியீடு – முன்னுரையும் எழுதும்படி கேட்டுக் கொண்டதால் முன்னுரையும் எழுதியிருந்தேன்.

இலங்கையின் ரத்தினபுரி மாவட்டத்தில் பெலிகுலொயா பலாங் கொடை என்னும் இடத்தில் அமைந்திருக்கும் இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம். நான் போனபோது பெரும் விழாவொன்றிற்குத் தயாராகிக் கொண்டிருந்தது என்பதை அதன் நுழைவு வாயில் அலங்காரங்கள் காட்டின. மலைப் பிரதேசங்களில் கிடைக்கும் இலைதழைகளக் கொண்டும் பூச்சரங்களைக் கொண்டும் முகப்பலங்காரம் கவனிக்கத் தக்கதாக இருந்தது. 1991 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்தப் பல்கலைக்கழகம் தனது 30 வது ஆண்டு நிறைவை 2021 பிப்ரவரியில் நிறைவு செய்ய உள்ளதாகவும், அதற்கான ஆரம்ப வேலைகள் இப்போதே தொடங்கி விட்டது என்றும் சொன்னார்கள்.

ஓராண்டுக்கு முன்பே பண்பாட்டுப் போட்டிகளையும் விளையாட்டுப் போட்டிகளையும் திட்டமிட்டு அறிவிப்புச் செய்திருந்தார்கள். அப்பல்கலைக்கழகம் இருக்கும் ரத்தினபுரியும் சரி, அதனைச்சுற்றி இருக்கும் மாவட்டங்களும் சரி அதிகமும் சிங்கள மொழி பேசும் மக்களைக் கொண்ட மாவட்டங்களே. அதனால் அங்கு தங்கிப் படிக்கும் மாணாக்கர்களாகவே தமிழ் மாணாக்கர்கள் இருந்தார்கள். சப்ரகமுவ பல்கலைக்கழகம் ஐந்து புலங்கள் கொண்ட பல்கலைக்கழகம். அதன் கற்கைப் பிரிவில் சமூக அறிவியல் மற்றும் மொழிகள் புலத்திற்குள் தமிழ்ப்பாடம் நான்காண்டுப் பட்டப்படிப்பாகக் கற்பிக்கப்படுகிறது. இலங்கையின் பட்டப்படிப்புகள் எல்லாம் நான்காண்டு ஹானர்ஸ் படிப்புகளாகவே இருக்கின்றன. தமிழ்த்துறை கூடுதல் கவனம் செலுத்தும் பாடமாக மொழிபெயர்ப்பு இருந்தது.

22 டிசம்பர் இரவுத்தங்கலாகப் பல்கலைக்கழக விடுதியில் தங்கினேன். அரசுத் துறைப் பல்கலைக்கழகங்களின் புலத்துறை விருந்தினர் விடுதிகளின் பராமரிப்பு எப்படி இருக்கும் என்பதை நானறிவேன். தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தங்கிய அனுபவம் கொண்டவன் என்பதால், அதன் வசதிகள் பற்றி அதிகம் எதிர்பார்ப்பில்லை. காலையில் குளிக்கச் சுடுதண்ணீர் கிடைக்கும் என்று சொன்னதால் சிறு ஆறுதல். குளிப்பதற்கு முன்னால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காலை நடைப்பயணம். நேற்றிரவு பெய்த மழைக்குப் பின்னால் உதிர்ந்த பூக்கள் சாலைகளெங்கும் நீரில் தங்கி நகரமுடியாமல் கிடந்தன.

லறீனா பேராதனையிலிருந்து சப்ரகமுவ பல்கலைக் கழகத்திற்கு நிரந்தரப் பணியேற்றுச் சென்றது முதல் அடுத்த இலங்கைப் பயணத்தில் சப்ரகமுவ வரும் திட்டம் இருக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டு இரண்டு நாட்கள் அங்கு தங்கி திறனாய்வுப் பார்வைகள், பெண்ணிய எழுத்து, நாடகவியல் மற்றும் ஊடகவியல் குறித்து உரையாற்ற ஒத்துக் கொண்டேன். ஆனால் ஒத்துக்கொண்டபடி இரண்டு நாட்கள் தங்கமுடியாமல் போய்விட்டது. மலையகத்தில் கூடுதலாக ஓரிரவு தங்கியதால் திட்டமிட்டபடி தங்க முடியவில்லை. ஆனால் ஒரேநாளில் காலை 9 மணி தொடங்கி பிற்பகல் 4 மணி வரை மாணாக்கர்களோடு தமிழ் இலக்கியக் கல்வியின் சில கூறுகளை முன்வைத்து உரையாற்றி-உரையாடல் செய்தேன். அரங்கில் கூடுதலாக இருந்தவர்கள் மாணவிகளே. முதல் உரையைத் தொல்காப்பியத்தை அடிப்படை இலக்கியவியலாகக் கொண்டு இலக்கியத்தை வாசிப்பதில் தொடங்கி நீண்ட நெடிய மரபுத்தமிழ் இலக்கணம் நவீனத்துவத்தைத் தொட்டதில் நிறுத்தி, நவீனத்துவம் பல்வேறு கூறுகளாகப் பிரிந்து வளர்ந்துள்ளதை விளக்கியபின் அவற்றை வாசிப்பதற்குத் தேவையான கோட்பாட்டு, இலக்கணக் கருவிகளையெல்லாம் அறிமுகப்படுத்தியபோது பகல் உணவிற்கான இடைவேளை.


பிற்பகல் அமர்வில் பெண்ணியத்தை மையப்படுத்தித் தமிழ்க்கவிதைகளை, கதைகளை வாசிக்கும் செய்ம்முறை வகுப்பொன்றை முன்வைக்க முடிந்தது. ஆறுமணி நேர உரையும் உரையாடலும் மாணாக்கர்களுக்கு பயன் பட்டிருக்கும் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. இலங்கையின் எல்லாப்பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளும் மாணவர்களும் உள்ள துறை அது. அவர்களோடு இருந்து பேசிய இந்த நாள் நினைவில் இருக்கப்போகும் ஒருநாள் என்பதில் கற்பிப்பதில் ஆசைகொண்ட எனக்கு மகிழ்ச்சியானதொரு நாள். உரைக்குப் பின்னான சிற்றுண்டிப் பகிர்விலும் படம் எடுத்துக் கொள்வதில் மாணவிகளும் ஆசிரியர்களும் காட்டிய ஆர்வமும் அன்பும் எனது கற்கை முறைக்கு க்கிடைத்த மரியாதை என்பதாகவே தோன்றியது. அவர்களின் ஆர்வத்தைக் குறித்து, மாணவிகள் தொடர்ந்து வரும் நீண்ட விடுமுறையையும் பொருட்படுத்தாது தங்கியிருந்தார்கள் என லறீனா சொன்னபோது புரிந்தது.

கவி, புனைகதையாளர், ஆய்வாளர் எனப்பன்முக ஆளுமையாக இருக்கும் அப்துல் ஹக் லறீனா அவர்களே இந்நிகழ்வுகளுக்கு முழுப் பொறுப்பானவர். அவரது முன்மொழிவை ஏற்றுச் செயல்பட்ட மொழிகள் துறைத்தலைவர் கலாநிதி சங்கீத் ரத்னாயக்கவும் தமிழ்ப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் திருமதி சு.தேவகுமாரி ஆகியோரும் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டனர். இளம் விரிவுரையாளர்களின் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் ஊக்கமும் ஒத்துழைப்பும் நல்குபவராக சிரேஷ்ட விரிவுரையாளரும் தமிழ்ப் பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான திருமதி சு தேவகுமாரி அவர்கள் இயங்கி வருபவர் என்பதை அவரது அணுகுமுறை உணர்த்தியது. அன்றிலிருந்து அப்பல்கலைக் கழக மாணாக்கர்களும் ஆசிரியர்களும் நண்பர்களாக மாறியதோடு இப்போதும் பாடங்கேட்கும் மாணாக்கர்களாகத் தொடர்கிறார்கள். அவர்களுக்கு எழும் ஐயங்களுக்காகவும் தேவைப்படும் நூல்களுக்காகவும் தொடர்புகொள்ள நவீனத் தொழில்நுட்பமான இணையம் உதவியாக இருக்கிறது. அதன் வழியாகவே எனது ஓய்வுக்குப் பின்னும் பணியில் இருக்கும் ஆசிரியராக உணர்கிறேன்

அன்றைய பகல் உணவுக்கு லறீனாவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் தனது வீட்டைப் பல்கலைக்கழகத்தின் வாசல் அருகேயே வாடகைக்கு எடுத்திருந்தார். இலங்கையின் சிறப்பு உணவான கடல் உணவின் வகைகளும் கோழிக்கறியும் சொதியும் புட்டும் எனத் திளைக்கத் திளைக்கச் சாப்பிட்டபோது காலையில் உரையைக் கேட்ட அனைத்து மாணாக்கர்களும் அங்கே வந்திருந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்தச் சிறப்பு நாளுக்காக மட்டுமில்லாமல் பெரும்பாலான நேரங்களில் மாணவிகளில் ஒருசிலராவது லறீனாவோடு உணவு உண்பார்கள் என்பதை அவர்களின் இயல்பான நடமாட்டமும் சமையலறையையும் பயன்படுத்திய விதமும் உணர்த்தின. அதனைக் குறிப்பிட்டுக் கேட்டபோது "அவர் எங்களின் தாய்" என்று மாணவி ஒருத்தி சொன்னாள். பெற்றோரைப் பிரிந்து விடுதியிலும் வெளியே வாடகைக்கு எடுத்துத் தங்கும் வீடுகளிலும் இருக்கும் இளம் வயதுப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஆதரவாக இருக்கும் ஆசிரியர்கள் எப்போதும் மதிக்கப்படுபவர்களாகவும் நினைக்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள் என்பது எனது சொந்த அனுபவம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்