கவியின் அடையாளத்தைத் தேடுதல்: அ.ரோஸ்லினின் வாலைக்குழைக்கும் பிரபஞ்சம் தொகுப்பை முன்வைத்து


தமிழில் கவிதை வடிவத்திற்கு நீண்ட தொடர்ச்சி உண்டு. அத்தோடு தொடக்க நிலையிலேயே எளிய வடிவமாகவும் சிக்கலான வடிவமாகவும் உணரப்படும் தன்மைகளோடு தமிழ்ச் செவ்வியல் கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. செவ்வியல் கவிதைகளுக்குப் பிறகு செவ்வியல் கவிதைகளுக்கு இணையாகச் சிக்கலாகவும் எளிமையாகவும் வெளிப்பட்டுள்ளவை நவீனத்துவ கவிதைகள்.
நிகழ்காலத்தில் நவீனக் கவிதைக்குள் ஒருவரின் நுழைவு இப்படித்தான் நிகழ்ந்தது என்று அவரே சொல்லாத நிலையில், இன்னொருவரால் கணித்துச் சொல்ல இயலாது. தனக்கு முன்னர் எழுதப் கவிதைகளை வாசிக்காமலேயே நேரடியாகத் தனது கவிதைகளோடு அறிமுகமாகித் தன்னை நிறுவிக்கொண்ட கவிகளும் இருக்கிறார்கள். அதற்கு மாறாகத் தமிழின் மரபான கவிதைகளையும் சமகாலக் கவிதைகளையும் வாசித்து அதன் தொடர்ச்சியாகத் தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் நடப்புச் சூழலில் நிலவும் இலக்கியப் போக்குகளைத் தனது வாசிப்பின் வழியாக அறிந்துகொண்டு எழுத வருபவர்களின் முதல் கவிதைத் தொகுதிக்கும், தன்னியல்பாகக் கவிதை வடிவத்தில் நுழைந்து தனது முதல் தொகுதியை வெளியிடுபவர்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. இதில் கவி. அ.ரோஸ்லின் எந்த வகைப்பாட்டுக்குள் அடையாளப்படுவார் என்பதை இந்த ஒரு தொகுப்பைக் கொண்டு சொல்லமுடியாது.   வாலைக்குழைக்கும் பிரபஞ்சம் (அக்டோபர்,2021), அவரது ஐந்தாவது கவிதைத் தொகுதி. அவரது முதல் கவிதைத் தொகுதி அழகிய முதல் துளி,2011 இல் வந்துள்ளது. தொடர்ந்து மழை என்னும் பெண்(2015), மஞ்சள் முத்தம் (2015), காடறியாது பூக்கும் மலர் (2017) ஆகியன வந்துள்ளன. 

இப்போது வந்துள்ள இந்தத் தொகுதியில் 90 கவிதைகளுக்கும் மேல் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு அவரது கவி அடையாளத்தை முன்வைக்க நினைக்கிறேன். அதற்கு முன் எனது வாசிப்பு முறை குறித்துக் கொஞ்சம் சொல்லத் தோன்றுகிறது. இது தமிழில் இலக்கியவாசிப்பு முறை இல்லையென்றும், எல்லாம் மேற்கிலிருந்து கடன்வாங்கப்பட்டவை என நம்புபவர்களை நோக்கிச் சொல்லப்படும் ஒன்று என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.

கவிதையை அணுகும் விதம்


கல்விப்புலம் சார்ந்த இலக்கியமாணவனாக நினைக்கும் எனது வாசிப்புக்குள் வரும் எந்தப் பனுவலையும் அது என்ன வடிவத்தில் இருக்கிறது என்பதைத் தீர்மானித்துக்கொண்டே வாசிக்கிறேன். அதனைத் தொடர்ந்து, அவ்வடிவத்திற்குள் என்ன வகையான வெளிப்பாட்டோடு என் முன்னால் விரிகின்றது என்பதையும் கவனிக்கிறேன். ஒரு பனுவலை விளங்கிக் கொள்ளவும் திறனாய்வு செய்யவும், அதனை மதிப்பீடு செய்து குறிப்பிட்ட இலக்கிய வடிவத்திலும், வகையிலும் அதற்கான இடத்தை உறுதிசெய்யவும் இப்படியான கவனிப்பும் புரிதலும் தேவை என்பதைக் கல்விப்புலக் கற்கை முறையும் கற்பித்தல் உத்திகளும் புரிய வைத்திருக்கின்றன.

எழுத்துக்கலை, ஒலிப்புக்கலை, காட்சிக்கலை, நிகழ்த்துக்கலை என அனைத்து வகைப் பனுவல்களையும், அந்தந்தப் பனுவலுக்கான அடிப்படைச் சொல் முறைமை வழியாகவே வாசிக்கவேண்டும். எழுத்துப் பனுவல்களான கதை, நாடகம், கவிதை என்ற மூன்றுக்கும் தனித்தனியான சொல் முறைமையும் முன்வைக்க நினைக்கும் பனுவல் நோக்கங்களும் இருக்கும். கவிதை என்னும் எழுத்துப் பனுவல் எப்போதும் ஓர் உணர்வை உருவாக்கிக் கடத்துவதற்கான சொல்முறைமையைக் கொண்டதான வடிவத்தால் ஆனது. அந்த வடிவத்தை உருவாக்காமல் அடுக்கப்படும் சொற்கள் கவிதை ஆகாத சொற்குவியல்கள் தான். அப்படியான சொற்குவியல்களையும் கவிதையெனக் கொண்டாடப் பலர் இருக்கக்கூடும். நான் அதைச் செய்வதில்லை.

எனது விருப்பம் எப்போதும் ஒற்றைப் பனுவலை வாசித்து அதனைக் குறித்துப் பேசிவிட்டுக் கடப்பதாகவே இருக்கிறது. அதிலும் கவிதைகளைத் தனித்தனியாகவே வாசிக்கவேண்டும் என்றே நினைப்பேன். அதையும் தாண்டி மொத்தமாக ஒரு தொகுதியை வாசிக்க நேரும்போது முதல் வாசிப்பை முடித்துவிட்டு அதற்குள் இருக்கும் ஒத்த தன்மையிலான பனுவல்களைத் தனிமைப்படுத்தித் தொகுத்துக் கொள்வேன். தொகுத்துக்கொண்டு அவற்றுக்குள் அலையும் மனித உயிரிகளை – மனித உருவாக்கங்களை – பாத்திரவார்ப்புகளை வாசித்துக் கொண்டு அப்பனுவல்களை உருவாக்கிய எழுத்தாளரின் / ஆசிரியத்துவத்தின் மனநிலையையும் சமூக இருப்பையும் முன்வைப்பேன். இப்போதும் அதையே இங்கு பின்பற்றுகிறேன்.

வாலைக்குழைக்கும் பிரபஞ்சம் என்பது அதன் சொல்முறையின் வழியாகக் கவிதை வடிவத்தின் சில வகைமைகளைத் தனதாக்கிக் கொண்ட பனுவல்களின் தொகை நூல் என்பதை உணர்ந்து கொண்டது எனது எனது முதல் வாசிப்பு. முதல் வாசிப்புக்குப் பின் பகுப்பாய்வு நோக்க வாசிப்பில் அத்தொகுப்புக்குள் மூன்று வகையான கவிதைகள் கலைத்துப் போடப்பட்டுள்ளன என்பதை உணரமுடிகிறது. கவிதைப்பனுவலுக்குள் உருவாக்கப்படும் கவிதை சொல்லியின் இடமும் அதன் முறைப்பாட்டு இடத்தில் இருக்கும் மனிதர்களின் இருப்பும் என்பதைக் கொண்டு இந்த வகைப்பாட்டைச் செய்துகொள்ளலாம். இப்படியான வகைப்பாட்டைச் செய்துகொள்ள மேற்கின் பகுப்புமுறைத் திறனாய்வு உதவும் என வாசித்திருந்தாலும், இந்தப் பகுப்பாய்வு உத்திகளைத் தமிழ்க்கவிதையியல் நூலான தொல்காப்பியத்திலிருந்து கற்றுக்கொண்டவன் நான்.

கூற்று அல்லது மொழிதல்

தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள பொருளதிகாரம், இலக்கியப் பனுவல்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதையும், எவ்வாறு அவற்றின் திறன்களை மதிப்பீடு செய்யலாம் என்பதையும் விரிவாகப் பேசுகின்றது. இந்தப் பகுதியில் தொல்காப்பியம் கூற்று என்னும் சொல்லைத் திரும்பத்திரும்பப் பயன்படுத்துகிறது. குறிப்பாக அக க்கவிதைகளைப் பற்றிய விளக்கங்களில் கூற்று விரிவாகப் பேசப்பட்ட ஒன்று. கூற்று என்பது பெயர்ச்சொல்.பாவியலில் அது ஒரு கலைச்சொல். கூறு என்னும் வினையடி வழியாக உண்டான தொழிற்பெயராக மாறும்போது கூறுதல் என்பதாக மாறும்.இதனையொத்த சொற்களாக உரைத்தல், சொல்லுதல், மொழிதல் என்ற தொழிற் பெயர்ச் சொற்கள் இருக்கின்றன. உரைத்தலின் வேர்ச்சொல் உரை, சொல், மொழி என்பனவும் இலக்கியவியலின் கலைச்சொற்கள் தான்

யார் ஒரு பாவின்/ கவிதையின் கூற்றாளராக இருந்து சொல்கிறார் என்பதை விளக்கிப் பேசுவதில் தொடங்கும் தொல்காப்பியம், அகத்திணைக் கவிதைகளில் யாரெல்லாம் கூற்றாளர்களாக இருக்க முடியும் என்பதையும் வரையறுத்துக் கூறுகிறது. அவ்வளவு விரிவாகவும் கறாராகவும் புறக்கவிதைகளுக்குச் சொல்லவில்லை. ஆனால் ‘புறனே’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துவதன் மூலம் அகத்திற்குரியனவற்றைப் புறத்திற்கும் உரியதாக்கியிருக்கிறது தொல்காப்பியம்.கூற்றாளர் ஒருவர் தொடங்க, கேட்குநராக ஒருவர் இருக்கும்போது கவிதையில் செயல்பாடு ஓரளவு முழுமையடைகிறது. நவீன கவிதைகளைப் பற்றிப்பேசும்போது கூற்று என்பதைப் பயன்படுத்துவதைவிட உரைத்தல், மொழிதல் என்பதை அதிகம் பயன்படுத்துகின்றனர் திறனாய்வாளர்கள். மொழிதல் கோட்பாடு என்ற கலைச்சொல்லைத் தமிழவன் பயன்படுத்தித்தொடங்கி வைத்தார்.

சொல்பவருக்கும் கேட்பவருக்கும் இடையே சொல்லப்படுவது கவிதைப் பொருள். நவீன கவிதையைப் பற்றி எழுதுபவர்களும், பேசுபவர்களும் பெரும்பாலும், ‘என்ன சொல்லப்படுகிறது என்பதைத் தேடுவதை’ மட்டுமே கண்டுபிடித்துச் சொல்கின்றனர். அதைத் தொடர்ந்து சொல்லப்படுவதின் காரணங்களைக் கண்டறிவதும் நடக்கிறது. செவ்வியல் கவிதைகளைப் பதிப்பித்தவர்கள், கூற்றையும் சொல்லி, சில நேரங்களில் கூற்று நிகழும் சூழலையும் சொல்லிப் பதிப்பித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, ‘இரவுக்குறி மறுத்த தோழி கூற்று’ என்கிறபோது சொல்பவர் தோழி, கேட்பவர் தலைவன், சொல்லப்படும் கவிதைப்பொருள் அச்சவுணர்வு என்பது புலனாகிறது. இப்படியான புரிதலை ஒரு நவீன கவிதையில் பெறுவதற்கு வாசிப்பவர் முதலில் யார் கூற்றாளராக - உரைப்பவராக இருக்கிறார் என்ற முதல்வினையைச் செய்ய வேண்டும்.

பெரும்பாலும் நவீன கவிதையில் தன்னை உரைத்தல், முன்னிலையில் இருக்கும் நபரோடு உரையாடுதல், இருவரையும் தாண்டி படர்க்கையிடத்தில் இருக்கும் மூன்றாவது நபரை/ நபர்களை நோக்கி பேசுதல் நடக்கிறது. நபர்களைத்தாண்டி இடத்தை, காலத்தை, கருத்துரைகளை, வினைகளை, விளைவுகளைப் பேசுவன இருக்கின்றன. தன்னை மொழிதலும், முன்னிலையோடு உரையாடுதலும், படர்க்கையிடத்து விவாதித்தலுமான மூவகை மொழிதலையும் கொண்டுள்ள ரோஸ்லினின் வாலைக்குழைக்கும் பிரபஞ்சம் என்னும் தொகுப்பில் மூன்றாவது வகைக் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாகவும், இரண்டாவது வகைக்கவிதைகளும் முதல்வகைக்கவிதைகளும் சம எண்ணிக்கையிலும் இடம்பெற்றுள்ளன.

பொது மனிதர்களை நோக்கி


படர்க்கையிலிருக்கும் மனிதர்களை நோக்கிப் பேசும் கவிதைகளைச் செவ்வியல் மரபில் புறக்கவிதைகள் என அறிகிறோம். அதே சொல்முறையைக் கொண்டனவாக விளங்கும் நவீன கவிதைகளைச் சமூகவிமரிசனக் கவிதைகளாகவும், அரசியல் சொல்லாடல்களை முன்வைக்கும் கவிதைகளாகவும் வகைப்பாடு செய்கின்றனர். இத்தொகுப்பிலும் மூவகைக் கூற்றுமுறையில் அமைந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அம்மூவகைக் கூற்றுமுறையில் புறநிலையில் பொது மனிதர்களை நோக்கிப் பேசும் கவிதைகளை முதலில் பேசலாம். அவ்வகைக் கவிதைகளில் இரண்டு கவிதைகளை வாசித்துக் கொள்ளலாம்:

மகளின் கனவு
சாரமற்ற கொடிகளுக்கு
எப்போதும் தெரியப்போவதில்லை
தன் உயிர் உருக்கி
அவள் வளர்த்த கனவை
அவள் கனவை
ஒரு மலரைப்போலக் கசக்கினீர்கள்
அவள் கனவை
நெருப்புக்குள் வீசினீர்கள்
அவள் கனவை
ஒரு விலங்கைப்போல
துண்டாடினீர்கள்
தடுமாறும் கொள்கை எடுத்து
தலைமுடியில் சூடியிருந்த
உங்களுக்கு அவள் குரல் கேட்கவே இல்லை

எல்லோர் விழிகளின் கண்ணீரையும்
தனது கண்களில் வழியச்செய்து
மழைத்துளியாகக் கரைந்தாளவள்
சாமானிய அனிதாக்கள் என்றால்
கனவை மட்டுமல்லாமல்
கண்களையும் கேட்பாயோ
குருட்டறையில் தள்ளிவிட்டு
உயிரையும் கேட்பாயோ (ப.76)


--------------------


பதுங்கு குழி


இந்த நூற்றாண்டின் மொத்தப் பயத்தை
விழிகளில் பூசியிருந்த பூகோளம்
கைவிட்ட வியாதிக்கு எதிராய்
சரண்டர் ஆகத்துணிந்து நிற்கிறது
ஜனத்திரள் பெருகிப்போன நாட்டில்
ஜீவனைக் காக்க என்ன செய்வது

அறையே இல்லாத வீடு
குடும்பமாய் நிறைந்து வழிகிறது
காலையில் தொட்டியில் நிறைத்த தண்ணீரும்
கையெட்டும்படியாக இப்போது இல்லை
(சமூக விலகலைக் கடைப்பிடித்து எடுத்து வந்தது)

பிள்ளைகள் கம்பளிப்பூச்சியாய்
நெளிகிறார்கள்
கையகல வீட்டுக்குள்
அனல் குடித்த கூரைகளின் வழியே
வீட்டிற்குள் இறங்குகிறது யுகத்தின் வெம்மை
ஆனாலும் உங்களது ஐசொலேஷன் வார்டுகளை விட
எங்களது பதுங்கு குழிகள்
பரிசுத்தமானவை (67)

************************


இவ்வகைக் கவிதைகள் அறியப்பட்டநிகழ்வொன்றைக் குறிப்பாகவோ, பொதுவாகவோ நினைவூட்டுவதின் மூலம் நிகழ்காலத்தைத் தனக்கான காலப் பின்னணியாகக் காட்டிக் கொள்கின்றன. அத்தோடு அந்நிகழ்வின் மீது கவியின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. அந்நிகழ்வையும் கவியின் நிலைப்பாட்டையும் அறியும் வாசகரொருவருக்கு அதே நிலைப்பாடு இருந்தால் தன்னைக் கவியோடு இணைத்துக்கொண்டு பாராட்டக்கூடும். எதிர்நிலைப்பாடு கொண்டவரென்றால் கவிதையை ஏற்காமல் ஒதுங்கிப் போதல் நடக்கும். இவ்விரண்டைத் தாண்டி அந்நிகழ்வு சார்ந்தும் நிலைப்பாடு சார்ந்தும் கூடுதல் அனுபவங்களுக்குள்ளோ விசாரணைக்குள்ளோ நுழைய மாட்டார். அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் சார்ந்த இலக்கியப்பார்வைகள் இதைத்தான் செய்கின்றன.

வாசிக்கப்பட்ட இரண்டில் முதல் கவிதை, நீட் தேர்வு காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட அனிதா என்ற பெயரின் வழியாக வாசிப்பவர்களை நெருங்குகிறது. அந்தப் பெயருக்கு முன்னால் ‘சாமானிய’ என்ற சொல்சேர்க்கை செய்து செய்தித்தன்மையாக மாறுகிறது. ஆனால் “இந்த நூற்றாண்டின் மொத்தப் பயத்தை” எனத்தொடங்கி எழுதப்பட்டுள்ள கவிதையில் இடம்பெறும் விவரிப்புகளும் கடைசியில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்வியும் கவிதையை வாசித்தவரைக் கூடுதலாகச் சிந்திக்கவைப்பதோடு, மனிதர்களின் துயரப்பாடுகளைக் கவனிக்கவும் தூண்டுகிறது. இந்தத்தூண்டுதலைக் கொண்டுவருவதின் வழியாகவே இவ்வகையான பனுவல்கள் கவிதைகளாக நிலைபெறுகின்றன. இதே மாதிரியான வாசிப்பைப் பாரதமாதா, சவலை, பிரிவினை, கலை, உயிர்மரம், அறமின்றி, அகதி சிசு, பௌண்டரி லைன், நீளம் தாண்டுதல், பிணி, பொட்டல், நதியின் பக்கங்கள் முதலான தலைப்புகளில் இருக்கும் கவிதைகளை வாசித்து எவையெல்லாம் கவிதைகளாகியிருக்கின்றன; எவையெல்லாம் கட்டுரையின் சாயலோடும் தகவலை முன்வைக்கும் குறிப்புரையாகவும் இருக்கின்றன என்பதை வாசிப்பவர்களுக்கு விட்டுவிடுகிறேன். இந்தக் காரணங்களாலேயே அவை பரப்புரைக் குறிப்புகள் எனவும், கவிதையாகாத அரசியல் சரி/ தவறுகளை முன்வைக்கும் எழுத்துகள் எனவும் ஒதுக்கும் நிலை ஏற்படுகின்றது. இவ்வகைக் கவிதைகளை எழுதும்போது மிகுந்த எச்சரிக்கை உணர்வு இல்லையென்றால் கவியின் அடையாளம் காணாமல் போய்விடும் என்பதை மட்டும் எனது பார்வையாக முன்வைக்கிறேன்.


பெண் – ஆண் உரையாடல்கள்

ரோஸ்லினின் தொகுப்பில் உள்ள இரண்டாவது வகைக் கவிதைகளுக்குள் அதிகமும் தனது பெண்ணடையாளத்தை உருவாக்கிக் கொண்டு முன்னிலையில் ஆண்களை நிறுத்துவதைத் தனது கவிதை வடிவமாக ஆக்கியிருக்கிறார். கவியாகிய பெண் தன்னிலை, முன்னிலையில் நிறுத்தும் ஆண் முன்னிலையாக்கத்தில் பொதுவான ஆண்களை உருவாக்கி அவர்களை நோக்கிப் பேசுதல் ஒருவகை; குறிப்பான பாத்திரங்களை உருவாக்கிப்பேசுதல் இரண்டாவது வகை. இவ்விருவகை முன்னிலை உருவாக்கத்தில் பெண்ணியச் சிந்தனைகள் வினையாற்றுகின்றன. பெண்ணியம் சார்ந்து தீவிர நிலைப்பாடு எடுப்பவர்களும் பாலியல் சமத்துவம் வேண்டுபவர்களும் குறிப்பான பாத்திரங்களை உருவாக்கி -கணவன், காதலன், தந்தை, பணியிட அதிகாரி, உடன் பணியாளர் போல - ஆண்X பெண் என்பதான எதிர்வுகளை உருவாக்குகிறார்கள். ஆண்களைப் பெண்களை ஒடுக்கும் ஆதிக்க மனப்பாங்கு கொண்டவர்களாக முன்வைத்துக் கோபம் கொள்கிறார்கள். அதற்கு மாறாகப் பெண்ணியத்தில் தாராளவாதம் பேணும் போக்கினர் பொதுவான ஆண்களிடம், பெண்களின் பாடுகளை முன்வைத்து, அவர்களைக் குற்றவுணர்வுக்குள் ஆட்படுத்திப் பெண்களை சகமனுசியாக ஏற்கும் தன்னுணர்வுக்குள் தள்ள நினைக்கின்றனர். குறைவான கவிதைகளில் சமத்துவத்திற்கு ஏங்கும் பெண்களும் அவரது கவிதைக்குள் உலவுகிறார்கள். ரோஸ்லனின் முன்னிலை உரையாடல் கவிதைகளில் இவ்வகைக் கவிதைகளே அதிகம் உள்ளன. ஆண்களை ஒதுக்கிவிட்டுத் தனித்தியங்க நினைக்கும் தீவிரநிலைப்பாட்டுப் பார்வை முழுவதும் இல்லையென்றே சொல்ல லாம். ஆண் – பெண் உருவாக்கமும் உரையாடலுமான வகைப்பாட்டில் 35 க்கும் அதிகமான கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவற்றில் உங்கள் வாசிப்புக்காக இந்த மூன்று கவிதைகளை முன்வைக்கிறேன்.


1.மீண்டெழுந்த காலம்
மீண்டெழுந்த முனகலோடு
மியாவுகிறது ரேணு பூனை
இயல்பாய் மெல்லடி எடுத்து நடந்தாலும்
கருவுற்ற அதன் சரீரம் அதிர்வுறுவது
பிறந்த சிசுவின் இதயத்தாளம்
போலக்கேட்கிறது

அடித்தொண்டையில்
அழுகையுடனான அதன் தொனி
வீடெங்கும் பெரு விம்மலைக் கடத்துகிறது


அதீத பாரமாயுணரும்
தன் ஜீவனை
மூலையில் கிடத்துகிறது
சிறு துணி மூட்டையென
பேரழுகையுடன் குட்டிகளை ஈனும்
பூனையின் குரலில்
இன்னும் அழுத்தமாய்
எழுதப்படுகிறது
எல்லாப்பெண்களுக்குமான
மீண்டெழுந்த காலம் (82)


************************
2 நிர்மாணம்
வீட்டின் சற்றுத் தொலைவாயிருந்த நிலத்தில்
பெரியபெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுக்கிடந்தன
கோட்டை கொத்தளங்களோடு
நகரை நிர்மாணிக்க இருப்பதாய்
அங்கிருந்த பெண் கூறிச் சென்றாள்
உள்ளே பார்த்து மெதுவாய் இறங்கினேன்
மிகப்பெரிய பள்ளங்கள் அடுக்கடுக்காய்
உள்ளே சென்றபடி இருந்தன
குழிகள் சறுக்கு விளையாட்டின் பகுதிகளாக
கழித்துக்கொண்டு இறங்கின
ஒற்றையில் தனித்திருக்க
மேலெல்லாம் மண்ணின் பிசுபிசுப்பு
ஓர் ஆடையைப் போல
சுற்றியிருந்தது.

ஏதோ ஒலியின் அசைவை உணரமுடிந்தது
நிலத்தின் ஆழத்தில் பல முதிர் பெண்கள்
சிறுகுகளைப் போல
கைகளை உயர்த்தி
நிலம் விழாமல் பிடித்திருந்தனர்
என் அம்மம்மாவும் முப்பாட்டியும்
என்னை அடையாளம் கண்டு அழைத்தனர்
யட்சியின் தேவதைகளாய்
தங்களது உலர்ந்த நிலத்தை
அவர்கள் கண்ணீரால் ஈரமாக்கியபோது
மகிழம்பூ வாசனை பரவியிருந்தது.(40)


****************

3. எரி

ஆதரவு வேண்டி
வார்த்தைகளின் இயலாமையில்
இறைஞ்சிய பறவைக்கு
ஒரு சிறு இணக்கத்தின் துளிரையும்
பகிரத்துணியவில்லை வன்மனம்
அவன் தவிர்க்கிறான் என்பதை
அவளுள் அறியாமல்
ஒளிக்க முயல்கிறாள்
ஒரு விருட்சம் கைவிட்ட
பறவையின் முறிந்த கீதத்தின் துயருடன்
ஒதுக்குதலின் குருதி
நிலமெங்கும் படர
கரைந்து உருகிறது அவள் கரை
போகிற போக்கில்
எறிந்து விட்டுப்போகும்
நேசத் துணிக்கைகளின்
இளஞ்சாம்பல் நிறமது
எரிக்கப்பட்ட அவள் மாமிசமன்றி
வேறில்லை (ப.83)
வாசிப்புக்கு முன்வைக்கப்பட்ட மூன்றில் முதலிரண்டு கவிதைகள் உருவாக்கும் உணர்வுகளும் காட்சிப் படிமங்களும் ஆண்களைக் குற்றவுணர்வுக்குள்ளாக்கும் நோக்கம் கொண்டவை. மூன்றாவது கவிதை ஒதுக்கப்படுதலின் வலியை உணர்த்தும் ஏக்கத்தைக் கடத்துவது. தனது கவிதைக்குள் ஆண்களை உருவாக்கி அவர்களோடு உரையாடல் நடத்தும் இரண்டாவது கவிதைகளில் ரோஸ்லின் பெண்களை மென்சொற்களால், மென் உயிர்களால், மென்னிறங்களால் அடையாளப்படுத்திக் காட்டுகிறார். பறவைகளைப் பெண்களாகவும் விலங்குகளை ஆண்களோடும் இயைபுபடுத்திப் பேசும் இடங்களும் பனி, நீலம், கடல் போன்ற குறியீடுகளைப் பெண்களுக்கு வழங்குவதையும் பார்க்கமுடிகிறது.
தனித்தலையும் தன்னிலைகள்
மனிதர்களின் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும் இடத்தில் கடவுளை நிறுத்திப் பேரலகு நிறுவனங்களும் சிற்றலகு நிறுனவங்களும் உருவாக்கப்பட்டு வளர்ச்சி அடைந்த மனித சமூகத்தின் போக்கில் பெரும் உடைப்பை ஏற்படுத்தியவை அறிவியல் கண்டுபிடிப்புகள். பேரலகு அமைப்புகளான அரசு, சமயம், சாதி போன்ற கருத்தியல் நிறுவனங்கள் தந்த பாதுகாப்பும் நம்பிக்கைகளும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, ஒவ்வொரு மனித உயிரியும் தனியர்; அவர்களது இருப்புக்கும் அலைவுக்கும் அவர்கள் மட்டுமே பொறுப்பு; காரணி என்பதை அறிவியலின் வரவுக்குப் பிந்திய மனித சிந்தனைகள் உருவாக்கின. இதன் தொடர்ச்சியாகப் பிறந்த ஊரில் இருந்துகொண்டே அந்த ஊருக்கு அந்நியனாக நினைப்பதும், ஒரு குடும்பம் தரும் பாதுகாப்பை ஏற்றுக்கொண்டே, தனது இருப்பைத் துயரம் மிகுந்த அலைவாக நினைப்பதுமான வாழ்க்கைக்குள் தனிமைப்படுத்திக் கொண்டார்கள் மனிதர்கள். இவையும் இவைபோன்றனவுமான மனநிலையை நவீனத்துவ மனநிலையாக விவரிக்கிறது தத்துவம். நாளையைப்பற்றிய நிச்சயமின்மை, பணிப்பாதுகாப்பின்மை, எதிர்காலத்தின் மீதான அச்சம், சுற்றியிருப்பவர்களின் மீதான அவநம்பிக்கை, நிகழ்ந்த ஒவ்வொன்றின் மீதும் கேள்விகள்; ஐயங்கள் எனத்தொடங்கி அந்நியமாகும்போது உருவாகும் சொற்களைக் கவிதை வடிவமாக்கும்போது நவீனத்துவக் கவிதைகள் உருவாகின்றன.

வாலைக்குழைக்கும் பிரபஞ்சம் என்ற தலைப்புக்கவிதையில்

தனித்த ஒரு மனிதனின் கரமென
ஒளி பிரபஞ்சத்தைத் தொடுகிறது
வாகனங்களில் காய்கறி விற்பவனின் குரலை
அடையாளப்படுத்தி கொண்ட
வளர்ப்புப்பிராணியின் முன்னறிவுபோல
தனது நீண்ட வாலைக் குழைக்கிறது பிரபஞ்சம் (ப.72)
எனச் சொல்வதில் வெளிப்படுவது நவீனத்துவத்தின் குரல். இதேபோல இன்னும் சில கவிதைகளை வாசிக்கலாம்:
1.நுரைக்கும் கடல்
உன்னைக் காணப்போகும்
குறிப்புகளுக்கு உள்ளாக
இந்தத் தினமானது கடந்து செல்கிறது
முத்தங்களின் நிரவலில்
ஒருவேளை இந்நாள் கடந்து செல்லலாம்

மீண்டுமாய் உன்னைக் காணும் வரைக்கும்
நீ பகிர்ந்த குறுஞ்செய்திகள்
உன்னை என்னிடம்
சேர்ப்பித்தபடி இருக்கின்றன

இசைக்கலையின் அதிர்வுகளென
உணரும் உடல்
மெதுவாகத் தாழ இறங்குகிறது
கடலின் சூல் கொண்ட நகரத்தில்
நுரையாக மேலெழும்பும்
கனவுகளுக்கு
பெயர் ஒன்றை இடுகிறாள் மகிமா
நீலத்தின் செறிவுடன் (84)



2 சேறு படர்ந்த கதைகள்

தனது ஜீவனை
மரிக்கும் தருவாயிலுள்ள பறவையைப் போல
சுமந்துகொண்டிருக்கிறாள்
முன்னம் அவளுக்கு
மிகப்பரிச்சயமான சிற்றோடையிடம்
ஒருநாள் காலவோட்டம் அறியாமல்
தொன்மக்கதை பேசியிருக்கிறாள்
ஓடியும் சாடியும்
தெறிக்கும் நீர்த்திவலைகளை
அள்ளியள்ளி மேலே பூசிக்கொண்டபோது
சிற்றோடை பல்வேறு வனக்கதைகளை
அவளிடம் கூற ஆரம்பித்த து

தனது நீண்ட வேள்வியினின்று
முடிவுறாத அவள் தேகத்தின் வேதனையினின்று
கடந்துவந்த பால்யத்தின் சாற்றினின்று
அவற்றை சிரத்தையுடன் கொண்டாடுகிறாள்
ஓடையில் நனைந்த மருதோன்றிச் செடியென
முதல் புணர்ச்சிக் குருதியின் வெஞ்சொட்டென ஒழுகும்
முள்ளின் நெருக்குதலிருந்து
அவளை இப்போதும் விடுத்தபடி
நகர்ந்துகொண்டிருக்கிறது வனம்
அவளொரு பூநாரையாகி
நீண்டு வளைந்த தன் கழுத்தை
ஓடையின் காதுகளை நோக்கி நீட்டுகிறாள்
அவளுக்குப் பிடித்தமான
சேறு படர்ந்த
கதைகளையுள்ளியவாறு. (12)

3. நினைவின் கசடு

கடலின் நீர்மையில்
எப்போதும் கனிந்தேயிருக்கிறாள்
கரையின் பெண்
அடர்ந்து சிரிக்கும்
கூரைப்பூச்சூடி
குனிந்து நாணுகிறான்(ள்)
பூமிப்பெண்

தேடலின் ஒவ்வொரு சுனையிலும்
படிந்தேயிருக்கிறது
காலத்தின் மேல்
துளிர்த்து ஓங்கும்
மீளாத்துளி
உழைப்பின் கனன்ற
சிவந்த சுடர்
ஓயாமல் உயிர்த்தெழும்
நிலம் துளைத்த
செவ்விதையென
மஞ்சளின்
மென் துகள்
மலர்த்தும் தீ வண்ணத்தில்
நுரையாய்
மனதை மிதக்கவிடு
பூரிப்பின் புத்தொளியில்
நினைவின் கசடை
வெளியேற்றிவிடு

ஆகாயத்தின் நீலத்தில்
உயிரின் பச்சையத்தில்
மலர்ந்து உறங்குகிறது
இவ்வுலகை மெய்ப்பிக்கும் ஜோதி.

----------------------------------------------

4 பெருவாழ்வு
முதலை பற்றி அறியாத குட்டிசிங்கங்களைப்போல
இந்த ஆற்றில் நகருகிறது வாழ்வு
கடும் வெயிலில் காய்ந்திடவும்
அடர்குளிரில் அடங்கிடவும்
மழைநீரில் குதூகலிக்கவும் அறிந்தேயிருக்கிறது
என் செடி
மண்ணில் பற்றியிருக்கும்
வாசனை முகர்ந்து
தளிர்களின் பொன்பச்சை கண்டு
பரவியிருக்கும்
வேர்களின் முடி தீண்டி
நாசி கமழும்
இளம் இலைகளின்
செவ்வரித் தடங்களின் இடையில்
காட்டைப் போல புதைகிறேன்
ஒளியை சிநேகிக்கும் இலைகள்
சூரியக்கதிர் நோக்கி
தனது கிளைக்கரங்களை நீட்டும்

யாமத்தினுள் பறந்து செல்லும் நீலப்பட்சிக்கு
முகம் எல்லாம்
இலைகளின் ரூபம்

ஆற்றின் கரைகளில் மிதக்கும் கொடிகள்
பார்வையாளனைப்போல
ஆற்றைப் பார்த்தபடியிருக்கின்றன
புதர்களினுள்ளிருந்து ஏதோ கடந்து செல்கிறது
ஆறு முதலையென நகர்கிறது
குட்டிச்சிங்கமென நீந்திக்களிக்கிறது
பெருவாழ்வு. (56)


==================================

கவிதைக்குத் தலைப்பிடுவது தொடங்கி, அரூபமான படிமங்களை விவரிப்பதின் வழியாக நவீனத்துவ மனநிலையை முன்வைக்கும் ரோஸ்லின், இவ்வகைக்கவிதைகளில் ஒருவிதக் கதைசொல்லும் பாணியைக் கையாள்கிறார். இந்தக் கதைகளுக்குள் நேரடியான காட்சிகளை உருவாக்காமல் காலத்தையும் மனிதர்களையும் அலையவிடுகின்றார். இவ்வகைக் கவிதைகள் எப்போதும் ஒற்றை வாசிப்பில் சட்டென்று புரிந்துபோவதில்லை. இப்படியான மனநிலையோடு அலையும் அந்த மனித உயிரின் அடையாளம் என்னவாக இருக்கும் என்ற ஊகத்திற்கு இட்டுச் சென்று, வாசித்தவர்களே ஓரடையாளத்தைப் பொருத்திக் கொண்டு கவிதைப்பொருளை உருவாக்குவார்கள். அப்படி உருவாக்கும் கவிதைப் பொருள் கவி, உருவாக்கிய கவிப்பொருளாக இல்லாமல், வாசித்தவர்களின் அனுபவம் சார்ந்து உருவாக்கும் கவிப்பொருளாக மாறிவிடும் சாத்தியங்களையும் கொண்டிருக்கும். கவி தனது சொந்த அனுபவம் சார்ந்து உருவாக்கும் ஒரு தன்னிலை, வாசிக்கும் நபர்களின் தன்னிலையாக மாறும் மாயத்தைக் கொண்டிருப்பதின் வழியாக நவீனத்துவ வாழ்வின் மீதான விசாரணைகளாக மாறுகின்றன. எண்ணிக்கையில் அதிகமாகவும் நிதானமான வாசிப்பைக் கோருவனவாகவும் உள்ள இவ்வகைக் கவிதைகளே ரோஸ்லினின் இந்த த்தொகுப்பில் அதிகமும் உள்ளன. இதற்கு முந்திய தொகுதிகளிலும்கூட அவையே தூக்கலாக வெளிப்பட்டவை. மூன்று வகையான கவி அடையாளத்துக்குள் எவ்வகையான அடையாளத்தைத் தனது தனித்துவமாகக் காட்டவேண்டும் என்பதையோ, எல்லாவகைக் கவிதைகளையும் எழுதும் ஒரு பொதுநிலைக் கவியாகத் தொடர்வதையோ கவி.ரோஸ்லின் தான் முடிவு செய்யவேண்டும்.
இந்தத்தொகுப்பின் அச்சாக்கம், சொல்பிரிப்பு, பிழை திருத்தம் தொடர்பாகச் சில வருத்தங்கள் உண்டு. அதைக் களையவேண்டும். அத்தோடு இனிவரும் தொகுப்புகளைப் பதிப்புக்கும்போது தனது கவிதைத் தொகுதியை வாசிப்பவர்களுக்கு உதவும் விதமாகப் பதிப்பிப்பது பற்றி யோசிக்கவேண்டும். முடிந்தவரை ஒருபடித்தான கவிதைகளைத் தனித்தனியாக நிரல்படுத்தி அடுக்குவது வாசிப்பவர்களுக்கு உதவும். இப்போது மூத்த கவிகள் சிலர் அப்படிச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஐந்து தொகுதிகளின் வழியாக அ.ரோஸ்லினும் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அவரும் பதிப்பிலும் வாசக நெருக்கத்திலும் அந்த முதிர்ச்சியைக் காட்டவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
=========================================================================


அ.ரோஸ்லின்

வாலைக்குழைக்கும் பிரபஞ்சம்

வாசகசாலை வெளியீடு,அக். 2021

=========================== 05/12/2021 அன்று மதுரை ஸ்ரீராம் உணவக மாடியில் நடந்த புனைவு இலக்கியச்சந்திப்பு நிகழ்வில் பேசிய உரையின் எழுத்து வடிவம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்