எனக்குள்ளிருந்த இலங்கைத் தீவு


லங்காபுரியைக் கடல்சூழ்ந்த தீவாகவே எனது முதல் வாசிப்பு சொன்னது. ஆகாய மார்க்கமாகத் தூக்கிச் செல்லப்பட்ட சீதா தேவியைத் தேடிச்செல்லும் அனுமன் தனது தாவுதிறனால் கடல் தாண்டிப் போய் இறங்கிய மலையும், அரண்மனையும் பற்றிய வர்ணனையை எனது தாத்தாவுக்கு வாசித்த போது எனக்குள் இலங்கைப் பரப்பு ஓர் அரக்கனின் ஆட்சி நடக்கும் பூமியாக அறிமுகமானது. சீதாதேவையைத் தூக்கிச் சென்ற ராவணனின் இலங்காபுரியாக எனக்குள் நுழைந்த பிரதேசப்பரப்பு ராஜ கோபாலாச்சாரியாரின் சக்கரவர்த்தித் திருமகன் வழியாக அறிமுகமான பிரதேசம். 

ஒன்பதாம் வகுப்பு கோடி விடுமுறையில் உடல் நலமில்லாமல் படுக்கையில் கிடந்த எனது தாத்தா ஒருவருக்காக வாசித்த சக்கரவர்த்தித் திருமகனே ராவணனின் அரண்மனையையும் அசோகவனத்தையும், அனுமன் அதனைத் தீவைத்த அழித்த கதையையும் சொல்லியது. கணையாழியின் துணையோடு சீதையைக் கண்டு திரும்பிய அனுமனின் தூதுக்குப் பின் சுக்கிரீவனின் படையுதவியோடு இலங்கைக்குச் சேதுபந்தனம் கட்டி, ராவணனின் ஒரு தம்பி வீபிடணனின் துணையோடு, இன்னொரு தம்பி கும்பகர்ணனைக் கொன்று, அவனது அன்பு மகன் இந்திரஜித்தைப் போரில் அழித்து, ராவணனையும் கொன்றொழித்துச் சீதையை மீட்ட கதையாக – ராமாயணத்தை வாசித்துக்காட்டி யிருக்கிறேன். தாத்தாவிற்குச் சொர்க்கவாசலைக் காட்டுவதற்காக வாசித்த சக்கரவர்த்தித் திருமகனோடு கம்பனின் ராமாயணத்தின் சாரத்தையும் சில காண்டங்களையும் வாசித்துத் தேர்வு எழுதிய இலக்கிய மாணவன். அந்த வாசிப்பின் வழியாகவும் தேர்வுக்கான படிப்பின் வழியாகவும் அறிந்து வைத்திருந்த இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையெல்லாம் படித்த காலத்தில் எழுந்ததில்லை. அந்த அறிமுகம் மட்டுமே எனக்குள்ளிருக்கும் இலங்கை அல்ல. எனக்குள் பல இலங்கைகள் இருந்தன; இருக்கின்றன. 

இலங்கை என்னும் தீவில் தமிழ் பேசும் மக்கள் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போலவே எல்லாச் சிக்கல்களோடும் வாழ்கிறார்கள் என்ற அறிமுகத்தைத் தந்த புனைகதைகள் சிலவற்றை டொமினிக் ஜீவாவின் மல்லிகையின் வழியாக வாசித்த காலம் எனது பட்டப்படிப்புக் காலம்(1977-80) அவரது தொகுப்பும், நந்தி எழுதிய மலைக்கொழுந்தும் முழுமையாக நான் வாசித்த முதல் இலங்கைத் தமிழ் நூல்கள். அந்தக் காலகட்டத்தில் தான் திறனாய்வுப் பரப்பில் க.கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் தீவிரமாகச் செயல்பட்டு திறனாய்வு நூல்களை வெளியிட்டார்கள். இலக்கியத்துறை மாணவனாக இருந்த என்னைத் தீவிரமான இலக்கியத்திறனாய்வு மாணவனாக மாற்றியன இவ்விருவரது நூல்களுமே. 

பட்டப்படிப்புக்குப் பின் பட்டமேல்படிப்பிற்காகவும் ஆய்வுக்காகவும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்குச் சென்றபோது இலங்கையின் பேராசிரியர்களின் வருகையும் போராட்டக் காலமும் சேர்ந்துகொண்டன. தி.சு.நடராசன், சி.கனகசபாபதி போன்ற ஆசிரியர்களோடு இலங்கை எழுத்தாளர்களுக்குத் தொடர்பு இருந்தது. அவர்கள் மதுரைக்கு வந்தார்கள். ஆறு ஆண்டுக்காலம் அங்கிருந்தபோது டொமினிக் ஜீவா, சிவத்தம்பி, கைலாசபதி, செ.கணேசலிங்கன் ஆகியோரை மட்டுமல்லாமல் சொல்லாத சேதிகள் – பெண்கள் தொகுப்பை வெளியிடுவதற்காக வந்திருந்த சித்ரலேகா மௌனகுருவையும் சந்தித்திருக்கிறேன். அதே கால கட்டத்தில் தமிழ் இலக்கியவரலாற்றை வேறுவிதமாகப் பார்க்கும்படி தூண்டிய தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் என்ற நூலும், எம்.ஏ.நுஃமானின் திறனாய்வுக் கட்டுரைகளும் என எனக்குள் இலங்கையை அறிவாளிகள் நிரம்பிய ஊராகக் காட்டியிருந்தது. 

இவை உருவாக்கிய பார்வைக்கோணங்கள், ஈழத்தமிழ் இலக்கியங்களைப் பற்றிய பார்வையை மட்டும் உருவாக்கவில்லை. ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியத்தையும் சரியான வரலாற்றுப் பார்வையில் – கருத்தியல் ரீதியாகப் புரிந்துகொள்ளும் முறைமையை எனக்குள் உருவாக்கித் தந்தன. இதேபோல மரபுத்தமிழ் இலக்கியங்களில் வேலை செய்த ஆறுமுகநாவலரின் பிடிவாதமான கருத்தியல் சார்புகள், அவரின் சீடரான சி.வை. தாமோதரம்பிள்ளையின் பதிப்பு முயற்சிகள், விபுலானந்தரின் நாடகவியல்/அரங்கியல் ஈடுபாடுகள் என்பனவும் என்னை உருவாக்கியதின் பின்னணியில் இருக்கின்றன. இவர்களின் அறிவுசார் பணிகளின் வழியாக இலங்கைத் தமிழர்களை ஒருவிதமாக அறிவுத்தளத்தில் இயங்கும் கூட்டமாக அறிந்துகொள்ள வைத்தது. இப்படியான இலங்கைகள் எனக்குள் இருந்தன. டொமினிக் ஜீவாவின் மல்லிகையின் வாயிலாகவே கே.டேனியலில் பற்றிய அறிமுகம் ஏற்பட்டது. அவரது பஞ்சமர் தொடங்கிப் பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து வெளியிட்ட கானல், அடிமைகள், தண்ணீர் போன்ற நாவல்களையும் வாசித்து ஈழத்துக் கிராமங்களும் இந்தியக் கிராமங்கள் போன்றே சாதியச் சிக்கல்களையும் தீண்டாமையையும் பின்பற்றும் நிலப்பரப்பு என்ற புரிதல் உருவானது. இந்த புரிதல்களுக்கிடையே தான் வெகுமக்கள் இதழ்களில் ஈழத்தமிழர்களின் மூர்க்கமான போராட்டங்கள் செய்திக் கட்டுரைகளாகவும் நேர்காணல்களாகவும் வெளிவரத் தொடங்கிப் புதுவகை இலங்கையை அறிமுகப்படுத்தின. 

மொழிசார்ந்த பெரும்பான்மை x சிறுபான்மை என்ற அரசியல் கருத்துரு உருவாக்கிய போராட்டம், போரை நோக்கி நகர்த்திய பின்னணியில் சில தொகைக் கவிதை நூல்கள் உருவாக்கிய பார்வைகளும், சில கவிஞர்களின் தனித் தொகுப்புகளின் தொகுப்புகளும் தமிழ்நாட்டில் ஒருவிதமான உணர்வுநிலைகளை உருவாக்கின. அறிவுத்தளத்தில் உணர்வுநிலையைக் கலந்த அந்தத் தொகுதிகளாக, பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், வேற்றாகி நின்ற வெளி, சொல்லாத சேதிகள் எனத் தலைப்பிட்டு தொகைநூல்களாக வந்த கவிதைகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், சு.வில்வரத்தினம் போன்றவர்களின் கவிதைத் தொகுதிகள் தமிழ்நாட்டில் வெளியிடப்பெற்றன. அதே நேரத்தில் ஈழப் போராட்ட ஆதரவு உணர்வுநிலை வெகுமக்கள் பரப்பிலும் பரவியது. பெரும்பாலான வாரப் பத்திரிகைகளும் நாளிதழ்களும் கட்டுரைகளையும் தொடர்களையும் கவிதைகளையும் வெளியிட்டன. இந்தியாவிற்கு ஈழ மக்கள் அகதிகளாக வரத் தொடங்கினார்கள். வேறுபல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தார்கள். ஈழவேந்தன், காசி ஆனந்தன் போன்றவர்கள் அரங்கக் கூட்டங்களில் உணர்ச்சிகரமாகப் பேசித் தமிழ்நாட்டுத் தமிழர்களோடு தொப்புள்கொடி உறவுகொண்டவர்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என்று உணர்த்தினார்கள். போராளி இயக்கங்களுக்கிடையே நடக்கும் மோதல்களின் பின்னணியில் சிங்களப் பேரினவாத அரசும், இந்திய அரசும், அதனால் அனுப்பப்பட்ட இந்திய அமைதி காப்புப் படையின் ஈடுபாடுகளும் அயலகத்துறையின் தந்திரோபயங்களும் இருப்பதும் உணரப்பட்டன. இந்தியா உதவுகிறதாகவும், ஏமாற்றுகிறதாகவும் கருத்துகள் நிலவின. திராவிட இயக்க அரசுகளின் தேர்தல் அரசியலில்- ஈழப்போராட்ட ஆதரவும் விலகலும் முக்கிய பேசுபொருளாக மாறின. இவையெல்லாமே எழுத்துகளாகப் பதிவுசெய்யப்பட்டு வாசிக்கக் கிடைத்தன. இவ்வளவையும் அந்த மக்கள் எப்படித் தாங்குகிறார்கள் என்ற எண்ணம் எப்போதும் எனக்குள் இருந்தது. 

போர்க்காலத்தில் கவிதைகள் தொகைநூல்களாக வந்தது போலப் புலம்பெயர்ந்த தமிழர்கள் லண்டன், கனடா, பாரிஸ் போன்ற நகரங்களிலிருந்து பெருந்தொகை நூல்களை வெளியிட்டார்கள். புனைவு எழுத்துகளும் புனைவல்லாத எழுத்துகளும் படங்களும் ஓவியங்களும் சந்திப்புகள் பற்றிய செய்தித்தொகுப்புகளுமாக வந்துகொண்டே இருந்தன. பத்மநாப அய்யர், சுகன்& ஷோபாசக்தி போன்றோரின் பெயர்களோடும், பதிப்பாசிரியர்களின் பெயரில்லாமலும் வந்த கனடா, பாரிஸ் நகரத்துத் தமிழியல் தொகைகளும் படிக்கக் கிடைத்தன. இத்தொகைநூல்கள் அல்லாமல் போர்க் காலக் கதைகள், புலம்பெயர்கதைகள், மலையகக் கவிதைகள், இலக்கியச் சந்திப்புகள், ஊடறு- பெண்ணியச் சந்திப்புகள் வழியான தொகைகள் எனப்பலப்பலவாய்க் கிடைத்தன. புலம்பெயர்ந்தவர்களின் முயற்சியால் வந்த சிற்றிதழ்கள், இணையப் பதிவுகள் போன்றனவுமாகத் தமிழ் இலக்கியம் பெரும் பரப்பை தமிழில் பதிவுசெய்தன. இவையனைத்துமே கடந்த கால்நூற்றாண்டுக்கான தமிழ் இலக்கிய வரலாற்றுக்கான தரவுகளே.
 
2009 முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் அதிகமும் புனைகதைகள் சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் அச்சேறிக்கொண்டிருக்கின்றன. காலம், காக்கைச் சிறகினிலே போன்ற இதழ்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் நான் வாசிக்கும் இடைநிலை இதழ்களான அம்ருதா, காலச்சுவடு, உயிரெழுத்து, தீராநதி, காலச்சுவடு போன்றவற்றின் பக்கங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பக்கங்களை ஈழத்தமிழ் எழுத்துகளே பிடித்துக்கொண்டன. பெரும்பத்திரிகைகளான ஆனந்த விகடன், இந்துதமிழ், அவற்றின் இலக்கிய இதழ்கள் போன்றவற்றிலும் பலரும் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் நூல்களை வெளியிடும் பதிப்பகங்களில் பலவும் ஈழத்தமிழ் எழுத்துகளை வெளியிடுகின்றன. ஈழத்தமிழ் எழுத்துகளை வெளியிடுவதற்காக மட்டுமே பூவரசி, காந்தளகம், குமரன் போன்ற பதிப்பகங்கள் உருவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டுப் பதிப்பகங்களோடு கூட்டுப் பதிப்பு முயற்சிகளையும் செய்கின்றனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் கலை, இலக்கிய விருதுகள் பலவற்றில் ஈழத்தமிழ்/ புலம்பெயர் எழுத்தாளர்கள் கவனம் பெற்றிருக்கிறார்கள். விருதுபெற்றிருக்கிறார்கள். பலவற்றை வாசித்தவனாகவும் விமரிசனக் குறிப்புகள் எழுதியிருக்கிறேன். உலகம் தழுவிய நிலையில் நட த்தப்பட்ட பல இலக்கியப் போட்டிகளின் நடுவர்களில் ஒருவனாக இருந்திருக்கிறேன். சில நூல்களுக்கு முன்னுரைகள் எழுதியிருக்கிறேன். போரும் போரின் துயரங்களும் ஏற்படுத்திய வடுக்களும் நினைவுகளும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திய நிலையிலும் இன்னொரு பக்கம் தமிழ்மொழியென்னும் செவ்வியல் மொழியை உலகமொழியாக – உலக இலக்கியங்கள் எழுதப்படும் மொழியாக மாற்றி விட்டது என்ற எண்ணங்களை இவை உருவாக்கித் தந்தன. 

இப்படியாக எனக்குள் சில இலங்கைகள் உருவாகியுள்ளன. அது ஒற்றை இலங்கை அல்ல. மலையகப்பரப்பை அறிமுகம் செய்த புனைகதைகள் வழி உருவான இலங்கை அதற்குள் இருக்கிறது. திறனாய்வாளர்கள் உருவாக்கிய யாழ்ப்பாண மையவாத இலங்கையும் இருக்கிறது. உணர்ச்சிகரமான கவிதைகளாலும் இடம்பெயர்ந்து அலைந்தவர்களின் பரிதவிப்புகளாலும் எழுதப்பெற்ற இலங்கையின் ஓலமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. போர்க்கால எழுத்துகளால் உருவான அவலங்களின் ஓலமும் மரணத்தின் துயரப்பாடல்களும் நிரம்பிய துயரப்பரப்பொன்றும் இலங்கைத் தமிழாக எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. போர்க் காலத்திலேயும் போருக்குப் பின்னும் எழுதிக் குவிக்கப்பட்ட புலம்பெயர் எழுத்துகள் தீட்டிய இலங்கைத் தமிழ்ச் சித்திரமொன்றும் எனக்குள் இருக்கிறது. 

எழுத்துகளின் வழியாக எனக்குள் இருந்த இலங்கைகளை -தமிழ்பேசும் மனிதர்கள் வாழும் நிலப்பரப்பை நேரடியாகப் பார்க்கவேண்டும் என்ற ஆசையை எனக்குள் முதன்முதலில் தூண்டியவர் இளைய பத்மநாதன் என்னும் நாடகக்கலைஞரே. நானும் அவரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒரு கோடைகால நாடகப் பயிலரங்கில் (1988 மே- ஜூன்) ஒருமாதம் ஒரே அறையில் தங்கிப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். அதுவரை நான் வாசித்திருந்த பிரதிகளை முன்வைத்து நான் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் தனது நேரடி அனுபவங்களை முன்வைத்து விளக்கிச் சொல்லச் சொல்ல எனது பார்க்கும் ஆசையும் விருப்பங்களும் கூடுதலாகின. குறிப்பாகக் வடமோடி, தென்மோடிக் கூத்து மரபுகளையும். குழந்தை ம.சண்முகலிங்கன், பாலேந்திரா போன்றோரின் நாடகத் தயாரிப்பு முயற்சிகளையும் விரிவாகச் சொல்ல, ஒருமுறை இலங்கை போய்ப்பார்க்கவேண்டும் என்று எண்ணம் உண்டானது. எப்போது போய் இவற்றையெல்லாம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கேட்டபோது, அவர் சொன்னார்: “ராமசாமி.., அநேகமா ஒரு ஆறுமாதத்தில் எல்லாப் பிரச்சினைகளும் முடிந்துவிடும். நாமெ அங்கே போறோம். இதேபோல ஒருமாதம் அங்கெ தங்குறோம்” அவர் சொன்னதுபோல் ஆறுமாதங்களில் முடியவில்லை; ஆறு ஆண்டுகள் முடிந்த பின்னும் நீடித்தது. 

22 ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பெரும் போர்கள் எல்லாம் நடந்து முடிந்து ஒரு தோல்வியோடு-முள்ளிவாய்க்கால் அழிவுகளோடு நின்றது. உடனடியாகப் போய் அந்த அழிவுகளையும் துயரங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் நிலை இல்லை. முதல் வாய்ப்பு 2016 இல் கிடைத்தது. செப்டம்பர் 16 தொடங்கி 29 வரை ஒரு 15 நாட்கள் ஒருமுறையும் இப்போது 2019 டிசம்பர் 16 தொடங்கி 2020 ஜனவரி 5 வரையிலான 20 நாட்களில் இரண்டாவது முறையாகவும் இலங்கைக்குள் போய் வந்திருக்கிறேன். என்னை இலங்கைக்கு அழைத்துப் போவதாகச் சொன்ன இளையபத்மநாதன் இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அவர் இல்லாமலேயே இரண்டுதடவை இலங்கையைப் பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறேன். 
====================================================== தொடரும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்