ஜயரத்ன என்னும் மனிதம்


இரண்டாவது இலங்கைச் செலவில் மறக்க முடியாத பயண அனுபவத்தைத் தந்தவர்கள் சிங்களமொழி பேசும் மனிதர்களாக இருந்தது தற்செயல் நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். கொழும்பு – பேராதனை புகையிரதப் பயணத்தில் சந்தித்தவரும் புத்த குருமார்களும் தந்த அனுபவத்திற்கு மாறான அனுவத்தைச் சபரகமுவ பல்கலைக்கழக வாகன ஓட்டி தந்தார். மலையகத்திலிருந்து சபரகமுவ பல்கலைக்கழகம் போய்த் திரும்பிய பயணம் மறக்கமுடியாத பயணமாக ஆனதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் பல்கலைக்கழக வாகனத்தின் ஓட்டுநரென்றால், இரண்டாவது காரணம் அந்த மலைப்பயணத்தின் வளைவு நெளிவுகளும் அடர்வனப் பகுதிகளும் எனலாம்.

மலையகத்தின் ராகலையில் கூட்டம் முடிந்தபோது பிற்பகல் 3 மணி. அடுத்தநாள் நான் இருக்கவேண்டியது பெகுபலியோவில் இருக்கும் சபரகமுவ பல்கலைக்கழக வளாகம் என்பது முன்பே முடிவானது. அப்பல்கலைக் கழகத்திற்கு என்னை அழைத்துச் செல்லப் பல்கலைக்கழக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை லறீனா முன்பே தெரிவித்திருந்தார். வாகனம் மாலை 4 மணிக்கு நுவரெலியா வந்துவிடும் என்பதும் சொல்லப்பட்டிருந்தது.

எல்லாவற்றையும் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு திட்டமிட்டுச் செய்பவர் லறீனா (அப்துல் ஹக் லறீனா) என்பதை முதல் பயணத்திலேயே காட்டியவர் அவர். இந்தப் பயணத்தில் அவரது திட்டப்படி எல்லாம் நடக்கவில்லை. பயண ஏற்பாட்டில் ஏற்பட்ட சிறிய குழப்பத்தை அவரது தொலைபேசி உரையாடல் சோகத்தோடு முன் வைத்தது. அவரது முதல் திட்டப்படி வரவேண்டிய ஓட்டுநர் - தமிழ் தெரிந்த ஓட்டுநர். அவர் கடைசி நேரத்தில் வரவில்லை. மாற்று ஏற்பாடாக வந்தவருக்குத் தமிழ் தெரியாது என்று சொன்னார். ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓட்டுநர் ஒரு மணி நேரத் தாமதத்திற்குப் பின் ராகலைக்கு 5 மணிக்கு வந்துவிடும் என்று சொன்னார்.

நான் நான்கு மணிக்குக் கிளம்பத் தயாராக இருந்தேன். நான்கு மணிக்கு வந்து கிளம்பியிருந்தால், மலைப்பகுதியைப் பார்த்துக் கொண்டே பயணம் செய்திருக்கலாம். ஆனால் கிளம்பும்போது மணி ஆறு ஆகிவிட்டது. நுவரெலியா வரை நண்பர்கள் சுதர்சனும் கஜீவனும் வந்தார்கள். அதன் பிறகு நானும் சிங்களம் மட்டுமே தெரிந்த ஓட்டுநரும்தான் அந்த வாகனத்தில் பயணிக்க வேண்டும்.

ராகலையிலிருந்து அனுப்பிவைத்த தேசியக்கலைப் பேரவை நண்பர்களுக்குக் கொஞ்சம் கலக்கம். பாதுகாப்பு மற்றும் பேச்சுத்துணை குறித்த கவலையை என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். எனக்கோ எந்தவிதத் தயக்கமும் இல்லை. அவரோடு பயணிப்பதில் ஒரு சிக்கலும் வரப்போவதில்லை என்று தைரியம் சொல்லிக் கிளம்பி விட்டேன். ராகலையிலிருந்து சபரகமுவ போய்ச் சேர மூன்று முதல் நான்குமணி வரை ஆகலாம். மழையும் மேகக் கூட்டங்களும் விலகியிருந்தால் நேரம் குறைய வாய்ப்புண்டு என்று சொல்லி விடை தந்தார்கள்.

ராகலையிலிருந்து நுவரெலியாவரை வந்த நண்பர் சுதர்சனுக்குச் சிங்களம் பேசத் தெரிந்திருந்தது. அவரோடு பேசிக் கொண்டே வந்தார் ஓட்டுநர். அதன் பிறகு தேவைப்பட்டால் அவரோடு அல்லது கவி லறீனாவோடு தொலை பேசியில் அவர் பேசிக்கொள்வார் என்பது ஏற்பாடு. அவர் சிங்களத்தில் பேசட்டும். ஓரளவு புரிந்து கொள்ளமுடியும் என்று நான் சொன்னேன். எந்த மொழி பேசும் மனிதர்களோடும் உடல் மொழியால் பேச முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஒரு நாடகக்காரனாக அதை எப்போதோ உறுதி செய்துகொண்டவன். மாநில மொழியைக் கற்றுக்கொள்வதற்கு முன்பே கேரளத்திற்குள்ளும் கர்நாடகத்திற்குள்ளும் கிராமங்களில் தங்கியிருக்கிறேன். மாணவிகளின் உதவியில்லாமலேயே போல்ஸ்கி மொழிக்காரர்களிடம் தொடர்பு கொண்ட அனுபவத்திலிருந்து இதை உறுதி செய்திருக்கிறேன்.

சுதர்சன் இறங்கிய போது அவரது தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார் ஓட்டுநர். இருவரும் மாறிமாறி எண்களைப் பரிமாறிக் கொண்டனர். நுவரெலியாவைத் தாண்டியும் ஓட்டுநர் பேசிக்கொண்டு வந்தார். நாங்கள் இருவர் மட்டுமே வாகனத்தில் இருந்தோம். கொஞ்சநேரம் தலையை ஆட்டிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்த நான், தொலைபேசியை நோண்டத்தொடங்கினேன். என்ன நினைத்தாரோ சிங்களப் பாடல் பாடிய எப்.எம். வானொலியைத் தமிழ் பாடும் அலைவரிசைக்கு மாற்றி விட்டார். நானும் தொலைபேசியை மூடிவிட்டுப் பாட்டைக் கேட்டுக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன். சாலை ஓரங்களில் ஊர்களாக எதுவும் வரவில்லை. காட்டுக்குள் ஒன்றிரண்டு வீடுகள் இருக்கும் அடையாளங்கள் தெரிந்தன.

நுவரெலியாவிலிருந்து கிளம்பி ஒருமணி நேரம் ஓடியிருக்கும். பேசத் தொடங்கினார். அவர் சொன்ன கதை ராமாயணக்கதை என்று புரிந்தது. அவரது பேச்சில் சீதா, ராவணா, ராமன் என்ற பெயர்கள் வந்தன. முழுமையாக எனக்குப் புரியவில்லை. உடனடியாகத் தொலைபேசியில் யாரையோ தொடர்புகொண்டு பேசினார். அந்தப் பேச்சிலும் சீதை என்ற பெயர் வந்தது. தொலைபேசியை என்னிடம் தந்தார். எதிர்முனையில் சுதர்சன் இருந்தார். அவர். “ சீதை காவல் வைத்த இடமாக அறியப்படும் இடத்தில் இருக்கும் கோயிலைக் உங்களுக்குக் காட்டலாமா? என்று அனுமதி கேட்கிறார் என்றார் சுதர்சன். மகிழ்ச்சியோடு பார்க்கலாம் என்றேன். அனுமதி கிடைத்தபின் அவரது முகத்தில் ஒரு உற்சாகம் வெளிப்பட்டது. விளக்கு வெளிச்சத்தில் பளபளப்பாக ஜொலித்த அந்த இடத்தில் நிறுத்தினார்.

அடர்ந்த காட்டுக்குள் வளைந்து செல்லும் ஒரு திருப்பத்தில் பளபளக்கும் பொன்னிறத்தகடுகளால் ஆன கோயில் பூட்டியிருந்தது. பகலில் திறந்திருக்கும் அந்தக் கோயில் இரவு விளக்குகளால் மின்னியது. மாயமானாக மாறி மருமகன் ராவணனுக்கு உதவிய மாரீசனும் ராவணனும் சீதையைத் தொடவில்லை; தரையோடு பெயர்த்து ஆகாயமார்க்கமாக அவளைக் கொண்டு வந்து சிறை வைத்த இடத்தை அசோகவனம் என்கிறது கம்பரின் ராமாயணம். அங்கிருக்கும் மக்களோ அந்த இடத்தை சீதாஎலியா என்கின்றனர். வாசலில் நின்று சீதையை நினைத்துக்கொண்டபோது படங்கள் எடுத்துத் தந்தார்.

சீதாஎலியாவிலிருந்து கிளம்பி அரைமணி நேரப் பயணத்திற்குப் பின் ஓரிடத்தில் வேகம் குறைந்தது வண்டியின் ஓட்டத்தில். மலை உச்சி போல் தோன்றும் ஓரிடம். அங்கு நிறுத்தினார். கும்மென்று இருட்டு. காரின் முன்புற விளக்குகளை ஒரு கல்வெட்டின் மீது பாய்ச்சினார். மேகத்திரட்சி கல்வெட்டைத் தழுவியபின் நகர்ந்து கொண்டிருந்தது. காத்திருந்தார்; இறங்கிக் கல்வெட்டைக் காட்டினார். கல்வெட்டின் அருகில் சென்று வாசித்துப் பார்க்கும்படி கைகளால் தடவிக்காட்டினார்.அக்கல்வெட்டு இந்திய அரசின் வீடு திட்டம் பற்றிய கல்வெட்டு. போருக்குப் பின் இந்திய அரசு யாழ்ப்பாணப் பகுதியிலும் மலையகத்திலும் வீடுகளைக் கட்டி இலவசமாக வழங்குவது பற்றி அக்கல்வெட்டில் இருந்தது. அதைக் காட்ட என்னிடமும் அனுமதி கேட்கவில்லை; தொலைபேசி வழியாக யாரிடமும் பேசவில்லை. அவரே முடிவு எடுத்து வண்டியை நிறுத்திக் கல்வெட்டைத் தொட்டிக்காட்டிப் பேசினார்; பின்னர் கிளம்பினார்.

நின்று கிளம்பிய பயணம் தமிழ்ப் பாடல்களோடு தொடர்ந்தது. திரும்பவும் தொலைபேசியில் பேசினார். யாரோடு பேசுகிறார் என்று தெரியவில்லை. பிறகு தொலைபேசியைத் துடைத்துவிட்டு என்னிடம் தந்தார். வாங்கிப் பேசியபோது அவர் அழைத்துப் பேசியது பேராசிரியர் லறீனாவோடு என்பது புரிந்தது. லறீனா என்னிடம், “வரும்பாதையில் தான் ஓட்டுநரின் ஊர் இருக்கு. அவரது வீட்டுக்கு உங்களை அழைத்துப் போய் காபி அல்லது தேநீர் தர விரும்புகிறார். உங்கள் விருப்பம் எது என்று கேட்கச் சொன்னார்” என்றார். “நீங்கள் பேராசிரியரென்றும், நாடக க்கலைஞர் என்றும் சொன்னதால் அவர் வீட்டுக்கு வருவதில் மகிழ்ச்சி அடைகிறார்” என்றும் சொன்னார். உடனடியாகச் சம்மதம் சொன்னேன்.

வண்டி போய்க்கொண்டிருந்த பாதையிலிருந்து விலகி ஒரு சிறிய சாலையில் சென்று அவர் வீட்டின் கதவுகளைத் தாண்டி நின்றது. வீடு தோட்டத்தோடு இருந்த து. உள்ளே நுழைந்தவுடன், வீட்டின் பின்புறம் அழைத்துப் போய் கழிப்பறையைக் காட்டி முகம் கழுவச் சொன்னார். பிறகு வீட்டின் முன்னறையில் அமரவைத்துக் குடும்பத்தினரை அழைத்து அறிமுகம் செய்தார். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்தார். அவரது அறிமுகம் சிங்களத்தில் இருந்த து; நான் தமிழில் அறிமுகம் செய்துகொண்டேன்.

வீட்டில் ஓடிக் கொண்டிருந்த சிங்கள அலைவரிசையை மாற்றி இந்திப் பாடல்கள் பாடும் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு மாற்றினார் அவர் மனைவி. அவருக்கு ஆங்கிலச் சொற்கள் தெரிந்திருந்தது. பிள்ளைகளுக்கும் அதே அளவு ஆங்கிலம் தெரிந்திருந்தது. எனது பெயரைக் கேட்டார்; இந்தியாவில் எங்கே என்றார். இலங்கை பிடித்திருக்கிறதா? என்று கேட்டார். ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போது காபியும் பிஸ்கெட்டும் வெல்லம் கலந்த ஒரு இனிப்பும் வந்தது. சாப்பிட்டு முடித்துக் கிளம்பும்போது படம் எடுத்துக் கொள்ள விரும்பினார்கள். எடுத்துக் கொண்டோம். பிறகு பிள்ளைகள் ஒவ்வொன்றும் ஆசிர்வாதம் வேண்டிக் காலைத் தொட்டு வணங்கினார்கள். நெகிழ்ந்து போனேன்.
பல்கலைக்கழகத்தின் விருந்தினர் விடுதியில் லறீனா இரவு உணவோடு காத்திருப்பதாகப் பேசினார். அவரோடு மாணவர்கள் இருவரும் இருந்தார்கள் என்பது அங்குபோனபோது தெரிந்தது. விடுதியை அடைந்து பொதிகளை இறக்கிவிட்டு உணவுண்ணும் இட த்தில் அமர்ந்து சாப்பிடும்போது ஓட்டுநரையும் எங்களோடு அமரச் செய்து உணவு உண்ணச் செய்து அனுப்பி வைத்தோம். மறுநாள் விடுதியிலிருந்தும் துறைக்கும் உள்ளே வளாகத்தில் சுற்றிவரவும் வண்டி ஓட்டினார். எனக்குத் தமிழ் தெரியவில்லை என்று வருத்தம் அடைகிறேன். உங்களோடு இருந்த இந்த 24 மணி நேரத்தில் எவ்வளவோ பேசியிருக்க முடியும் என்று சொன்னார்.

சபரகமுவ வில் நிகழ்ச்சி முடிந்து திரிகோணமலை போகும் பயணம் முழுவதும் பேருந்துப் பயணம் என்றே திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஓட்டுநர் தானே பல்கலைக்கழகம் அனுமதிக்கும் தூரம் வரை போய்விட்டுவிட்டு வருவதாகச் சொல்லியிருப்பதாகவும் அதனால் திரும்பவும் அதே ஓட்டுநருடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. முழுத் தூரத்திற்குமல்லாமல் திரிகோண மலைக்கு நேரடியாகச் செல்லும் இடத்தில் பேருந்தில் ஏற்றி அமரச்செய்து காத்திருந்து ஏற்றிவிட்டுப் போனார் என்னோடு ஒரு மாணவியும் மாணவரும் இருந்தனர்.

கிளம்பும்போது என் பெயரைக் கேட்டார். சொன்னவுடன் “ராமசாமி” என்று மூன்று முறை சொல்லிக் கொண்டார். அவர் பெயரையும் சொல்லி மூன்று தடவை சொல்லிப் பதியவைத்தார். ஜய் ரத்ன என்று அந்தப் பெயர் இந்தப் பயணத்தில் மறக்கமுடியாத பெயராக ஆகிவிட்டது.ஜய்சூர்யாவின் காட்டடி கிரிக்கெட்டைப் பார்த்த ரசித்த எனக்கு இந்த ஜயரத்னவோடு கதைக்க சிங்களம் தெரிந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்