அலையடிக்கும் திரிகோணமலை


திரிகோணமலை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது காலை 6.30.கண்ட காட்சி இந்த மான். காட்டுக்குள்ளும் காட்சிச் சாலையிலும் மான் இணைகள்/கூட்டங்கள் தான் இதுவரையான அனுபவம். கடைகளும் மனிதர்களும் நிரம்பிய இடத்தில் தனியொரு மானாகப் பார்த்தில்லை.

மானும் மிரளவில்லை.

மக்களும் கண்டுகொள்ளவில்லை.

முதல் நாள் மாலையில் மலையகத்தின் ராகலைக்கு வந்து பல்கலைக்கழக வாகனத்தில் அழைத்துப் போன ஜய்ரத்ன, திரும்பும் பயணத்திற்கும் பொறுப்பேற்று வந்தார். ஆனால் இந்த முறை அடுத்து நான் செல்ல இருக்கும் திரிகோணமலை வரை வரமாட்டார். அவ்வளவு தூரத்திற்குப் பல்கலைக்கழக வாகனத்தை அனுப்புவதற்குச் சிறப்பு அனுமதி பெறவேண்டும். அங்கிருந்து பேருந்தில் ஏற்றிவிட்டால், நான் போய் இறங்கிக் கொள்வேன் என்று கவியும் பேராசிரியருமான அப்துல் ஹக் ஹரீனாவிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அவருக்கோ என்னத் தனியாக அனுப்பத் தயக்கம். அத்தோடு அங்கிருந்து நேரடியாகத் திரிகோணமலை போகும் பேருந்தும் இல்லை என்பதால் சில மாற்று ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். சப்ரகமுவவுக்கும் திரிகோண மலைக்கும் 320 கிலோமீட்டர். நான்கில் மூன்று பங்குதூரம் வளைந்து வளைந்து செல்லும் மலைப்பிரதேசப் பாதை. காரில் சென்றால் ஆறரை மணி நேரமாகும். நேரடியாக ஒரே பேருந்தில் திரிகோணமலை செல்லும் விதமாகக் கிளம்பும் பேருந்து நிலையம் ஒன்று ஹெப்பத்தள என்ற சிறுநகரம் வரை பல்கலைக்கழக வாகனம்; பின்னர் பேருந்துப் பயணம் என்று அந்த ஏற்பாட்டைச் செய்ததோடு என்னோடு பயணிக்க ஒரு மாணவரையும் ஏற்பாடு செய்துவிட்டார்.

என்னுடைய உரைகள் இருந்த நாளிலிருந்து தொடங்கிய நீண்ட விடுமுறைக்கு ஒவ்வொருவரும் அவரவர் ஊருக்குச் செல்லத் தயாராகிய நிலையில், திரிகோணமலை தாண்டி யாழ்ப்பாணம் செல்லும் மாணவரை என்னோடு கோர்த்துவிட்டுவிட்டார். அவரோடு சேர்ந்து திரிகோணமலை வரை செல்லத் திட்டமிட்டிருந்த அவரது வகுப்புத்தோழியும் பயண நேரத்தை மாற்றிக்கொண்டார். ஆக பல்கலைக்கழகப் பேருந்தில் குறிப்பிட்ட அந்தச் சிற்றூர்வரை மூவரும் வந்து பேருந்தைப் பிடித்துக் கொள்ளலாம் என்று திட்டம். அதன்படி முன்னிரவு எட்டு மணிக்கெல்லாம் வந்து இறங்கி விட்டோம். எங்களை இறக்கிவிட்டுவிட்டு ஜய்ரத்னா போய்விடுவார் என்றே நினைத்தேன். ஆனால், அவர் கிளம்பவில்லை. இருந்து பேருந்தில் உட்கார வைத்து விட்டே கிளம்புவேன் என்று அடம் பிடித்தார். அவரே அங்கிருந்த சிறிய உணவுச் சாலைக்குள் அழைத்துப்போனார். இடியாப்பமும் கடலைக்கறியும் சாப்பிட்டோம். முடித்து வெளியே வந்தபோது திரிகோணமலைக்குச் செல்லும் அந்தப் பேருந்து நிலையத்திற்குள் வந்தது. அது கிளம்பும் இடம் அந்தப் பேருந்து நிலையம் என்பதால் அவசரம் காட்டவேண்டியதாக இருக்கவில்லை. பயணச்சீட்டைப் பதிவுசெய்து வாங்கிக் கொண்டோம். நின்றிருந்த பேருந்திற்குள் எனது இருக்கையில் அமரவைத்துவிட்டு, என்னுடைய பொருட்கள் அடங்கிய பொதியைக் கீழே இருந்த அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டுக் கிளம்பினார் ஜய்ரத்னா. எங்கள் பல்கலைக்கழகத்து ஓட்டுநர்களின் பழக்கவழக்கம் எனக்குத் தெரியும்; ஓட்டுநர் இருக்கையைவிட்டு இறங்கி வரமாட்டார்கள். ஜயரத்னவின் செயல் எனக்கு ஆச்சர்யமூட்டியது.

என்னோடு பயணம் செய்த மாணவி திரிகோணமலைக்கு முன்னால் இருக்கும் ஒரு ஊர்க்காரர். அவர் இறங்கும்போது, இன்னும் அரைமணிநேரம் பேருந்தில் இருக்க வேண்டியதிருக்கும் என்று சொல்லிவிட்டு இறங்கிவிட்டார். இறங்கிய போது காலை 5 மணி இருக்கும். இறங்குவதற்கு முன்னால், வீட்டிலிருந்து யாராவது வந்து காத்துக் கொண்டிருப்பார்களா? என்று கேட்டேன். ‘இல்லை; நானே காத்திருந்து இன்னொரு பேருந்தில் அல்லது ஆட்டோவில் போய்விடுவேன்’ என்று சொல்லிவிட்டு எந்தவிதத் தயக்கமும் காட்டாமல் இறங்கிவிட்டார். தமிழ்நாட்டுக்கல்லூரி மாணவி இந்த நேரத்தில் இப்படித் தனியாக இறங்கிப் போவாள் என்று சொல்லமுடியாது.

அவள் இறங்கிய பின்னர் அது ஒன்றும் பிரச்சினையில்லை என்றே அவரது வகுப்புத் தோழர் சொன்னார். துப்பாக்கி ஏந்திப் போராடிய ஈழப் பெண்களின் தலைவி தமிழினியோடு உரையாடிய நினைவுகள் வந்ததால், எனது அச்சம் தேவையற்றது என்பதும் புரிந்தது. திரிகோணமலை பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் என்னை வரவேற்றது ஒரு கொம்பு மான். பேருந்திற்காக காத்திருந்த பயணிகளைத் தாண்டியொரு மதில் பக்கத்தில் படுத்திருந்தது. “நான் ஏற வேண்டிய பேருந்து வர இன்னும் சில மணிநேரங்கள் இருக்கின்றன; அதற்குள் நானொரு குட்டித்தூக்கம் போட்டு விட்டுப்பின்னர் எழுந்துகொள்கிறேன்” என்பது போல அரைத்தூக்கத்தில் இருந்தது அந்த மான். நீண்ட கொம்புகள் அசைந்துகொண்டிருந்தன. கொம்புகள் கொண்ட மானைச் சில வனப்பகுதிகளிலும் விலங்குப்பூங்காக்களிலும் தான் பார்த்திருக்கிறேன். பெரும் உறுமலுடன் வந்து போகும் பேருந்துகள் நிற்கும் ஒரு நிலையத்தில் பயணிகள் பெஞ்சுக்குப் பக்கத்தில் ஒரு மானைப் பார்ப்பது இதுதான் முதல் முறை. அதன் முன்பக்கம் போய் நின்று அதனோடு சேர்ந்து ஒரு தற்படம் எடுத்துக்கொள்ளும்படி மனம் சொல்லியது. முழு வெளிச்சம் வராத நிலையில் கொஞ்சம் காத்திருக்கலாம் என்று தோன்றியது.

எனக்கிருந்த ஆச்சர்யம் எதுவுமில்லாமல் என்னோடு வந்த சப்ரகமுவ மாணவர், யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து கிளம்புவதை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவருக்கு அந்தப் பேருந்தை விட்டால் அடுத்த பேருந்துக்கு இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால், என்னிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார். என்னை அழைத்துச் செல்ல வரும் மருத்துவர் சிவசங்கரனின் தொலைபேசி இணைப்பு கிடைத்து விட்டதால், அவரை அனுப்புவதில் எனக்கொன்றும் யோசனை இருக்கவில்லை.

எனது முதல் இலங்கைப் பயணத்திலேயே  திரிகோண மலையைச் சேர்த்துவிடத் துடித்தவர் நண்பர் பாலசிங்கம். சுகுமார். அவரால் நாடு வரமுடியவில்லை என்ற வருத்தம் என்பதோடு, அவரது நண்பரான என்னை அவர் சார்ந்த இடங்களுக்கு அழைத்துப் போக முடியவில்லையே என்ற வருத்தமே அவருக்கு அதிகம். மட்டக்களப்பில் இருந்த நண்பர்கள் குழாத்திடம் எனது வருகையைச் சொல்லித் தனி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அத்தோடு அவரது தங்கை அங்கே இருக்கிறார்; அவரது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் சொல்லி அதற்கும் ஏற்பாடு செய்திருந்தார். பேரா. மௌனகுருவின் வீட்டிற்குப் போகும் பாதையில் இருந்த அந்த வீட்டில் ஒருநேரம் சாப்பிட்டுவிட்டுப் படம் எடுத்து அனுப்பி வைத்தபோது சுகுமார் அதிகம் மகிழ்ச்சி அடைந்தார். அதேபோல அவரது அவரது சொந்த ஊரான சேனையூருக்குச் சென்று அவரது வீடு, உறவினர்களையெல்லாம் பார்த்துவரும்படி செய்தி அனுப்பினார். திரிகோண மலையைப் பார்த்துவிட்டுச் சேனையூரில் தங்கிக் கொள்ளலாம் என்றும் ஏற்பாடு செய்தார்.

2016 பயணத்தில் மட்டக்களப்பும் யாழ்ப்பாணமும் மட்டுமே எனது முதன்மைக் கவனங்களாக இருந்தன. அங்குதான் நாடகப்பயிற்சிகளும் பட்டறையும் ஏற்பாடாகியிருந்தன. அதனால், மற்ற இடங்களை ஒரு சுற்றுலாப்பயணியைப் போலக் கடந்து விடவே நினைத்தேன். ஒரு நண்பகல் உணவுக்கு பெரியவர் எஸ். எல். எம்மொடு சேர்ந்து, கவி அனார் வீட்டிற்குச் சென்றுவிட்டு, அக்கரைப் பற்றில் ஒரு கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். அடுத்தநாள் அதிகாலை நான்கு மணிக்கு யாழ்ப்பாணம் கிளம்பவேண்டும் என்பதால், கூட்டத்தில் முழுமையாக இருக்கவில்லை. அதுவே வருத்தமாக இருந்தது. அதைப்போல அவசர அவசரமாக இன்னொரு பயணத்தைச் செய்ய வேண்டாம் என்று மனசு சொல்லியதால் அந்தமுறை திரிகோணமலைக்குச் செல்லவில்லை. அத்தோடு மட்டக்களப்பிலிருந்து திரிகோணமலை போய்விட்டுத் திரும்பவும் மட்டக்களப்பு வந்தே யாழ்ப்பாணம் போக வேண்டிய நிலை அப்போது இருந்தது. இடையில் இருந்த சாலைகள் எல்லாம் உடைந்திருந்ததால் முறையான போக்குவரத்து இல்லை என்பதுபோலச் சொன்னார்கள். போர்க்காலச் சாலை உடைப்புகளும் பால உடைப்புகளும் திரிகோணமலையைச் சுற்றியே அதிகம்.

முதல் பயணத்தை ஈடுசெய்யும் விதமாக இரண்டாவது பயணத்தில் திரிகோணமலை, சேனையூர், கட்டமறிச்சான் என மூன்று நாட்கள் சுற்றித்திரிந்தேன்.  பால சுகுமார் தனது மகள் அனாமிகாவின் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் மட்டக்களப்பிலும் சேனையூரிலும் ஏற்பாடு செய்து வருகிறார். மட்டக்களப்புக் கடல் தான் சுனாமியாக மாறி அலையெழுப்பிப் பலரையும் சுருட்டிக்கொண்ட கடல். சுருட்டிக்கொண்டு போன பலரில் அந்த இளம்பிஞ்சு அனாமிகாவும் இருந்தாள். சிறுவயதிலேயே நடனம், ஓவியம், கவிதை எனப் பல்திறங்காட்டிய குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரின் துயரம் சொல்லில் வடிக்க இயலாத ஒன்று.

புலம்பெயர்ந்து போனபின்பு திரும்பவும் சொந்த நாடு திரும்ப முடியாத சிக்கலில் இருக்கும் அவரால் மகள் அனாமிகாவின் நினைவிலிருந்து விடுபட முடியாத எல்லைக்குச் சென்றுவிடுவார். ஒவ்வொரு ஆண்டும் அந்த நினைவுநாள் நெருங்கி விட்டாலே அவரின் எழுத்துகளும் செயல்பாடுகளும் துயரம் சுமக்கும் வார்த்தைகளைச் சுமந்துகொண்டே அலையும்.இங்கிருந்த காலத்தில் தொடங்கிய அந்நினைவு அஞ்சலியை இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்து போனபின்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒருமுறை தொடர்ச்சியாகக் கவிதைகளாக எழுதிக்கொண்டே இருந்தார். அதைத் தொகுத்து நூலாக்கினார். அதற்காகச் சென்னை வந்திருந்தபோது அவற்றைக் குறித்தொரு குறிப்பை எழுதிச் சேர்த்து வெளியிட்டார். அந்தக் குறிப்பு இப்படி இருந்தது:

யாதுமாகின்ற அனாமிகா

 




 



 

உலக இலக்கியத்தின் பெரும்தொகையான கவிதைகள் துன்பியல் உணர்வுகளையே விதம்விதமாகப் பேசுகின்றன. பிரிவுகளைப் பேசும் பாலைக்கவிதைகளே தமிழ்ச் செவ்வியல் பரப்பிலும் அதிகம். பிரிவும் பிரிவின் நிமித்தங்களும் விதம்விதமாய் ஒருவரின் எழுத்துகளில் விரிக்கப்படுகின்றன என்றால் அந்த நபரின் வாழ்க்கையில் உண்மையான நிகழ்வுகள் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. 

பேசுமிடத்தில் தந்தையொருவரும் கேட்குமிடத்தில் இருக்கும் நீ என்னும் சுட்டில் ஒரு மகளும் இருக்கிறார்கள். தந்தைக்கும் மகளுக்குமிடையே நடக்கும் உரையாடல்களாகவே இந்தக் கவிதைச் சொல்லாடல் நடக்கிறது. அன்பும் பாசமும் பிரியங்களும் கொண்ட தந்தைக்கும் சுட்டித்தனமும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையும் கொண்ட மகளும் ஒவ்வொரு கவிதையிலும் கைபிடித்து நடக்கிறார்கள். கைபிடித்து நடந்து கொண்டிருந்த அந்தக் குழந்தை சில இடங்களில் அவரது கைவிரல்களை விட்டுவிட்டுத் துள்ளியோடிவிட்டுத் திரும்பவும் வந்து கரங்களைப் பிடித்துக் கொள்கிறாள். கதைகேட்கிறாள்; காட்சிகளை விரித்துச் சொல்லச்சொல்லிக் கண்களை விரிக்கிறாள். தந்தையின் பூர்வீகம் தேடி அவர் வாழ்ந்த கிராமங்களுக்குப் போகிறாள்; உறவுகளைச் சந்திக்கிறாள்; பாரம்பரியம் அறிகிறாள். திரும்பவும் வந்து எல்லாவற்றையும் அகலமான கண்களாலே அப்பாவிடம் சொல்கிறாள்.

கைப்பிடித்துக் கதைத்து வந்த அந்தச் சின்னப்பெண் ஒருநாள் கைவிலக்கிப் போனாள்; திரும்பவே இல்லையென்றால் .. அந்தப் பிரிவும் பிரிவு தரும் துயரங்களும் வார்த்தைகளில் சொல்லமுடியாதவை. என்றாலும் வார்த்தைகளில் சொல்லிவிட வேண்டுமென அன்புடைய அந்தத் தந்தை மனம் துடிக்கின்றது. துடிக்கும் அந்த மனம் அவள் இல்லையென்று சொல்வதைத் தவிர்த்துவிட்டு அவள் இருந்தபோது நிகழ்ந்தனவற்றை -பேசியனவற்றை- செய்தனவற்றைச் சொல்லிச் சொல்லிப் புழுங்கிப் போய்விடுகின்றது.

தன் செல்லமகள் அனாமிகா இப்போது இல்லையென்பதைக் கூடச் சொல்லத் தயங்கும் தந்தை பாலசுகுமார். இப்போதும் இருக்கிறாள்; இப்போதும் தன்னோடு கதைக்கிறாள்; தன்னோடு விளையாடுகிறாள் என்ற நினைப்போடு அலையும் தந்தையின் மனதை இந்த வரிகளில் நான் வாசிக்கிறேன். தங்கள் மகள் அனாமிகாவை எப்படி உருவாக்க வேண்டுமென சுகுமாரும் அவரது மனைவியும் நினைத்தார்கள் என்பதை நானறிவேன். அந்த விருப்பங்களும் ஆசைகளும் இப்போது நீண்டுகொண்டே இருக்கின்றன இந்த வரிகளில். இந்த வரிகளை வாசிக்கும்போது திரும்பவும் துன்பியல் சொல்லாடல்களே ஆகப் பெரும் இலக்கிய ஊற்று என்பது உறுதியாகிறது. அதுவும் சொந்த அனுபவத்தின் வெளிப்பாடான இழப்பு – இழந்துவிடக்கூடாத பிள்ளைப் பிராயத்து மகளின் இழப்புகளைப் பேசும் கவிதைகள் நினைவின் பதிவுகள் மட்டுமல்ல; தந்தைமையின் கண்ணீரும். சுகுமாரின் வாழ்க்கையில் எங்கும் நிறைந்தவளாய்; யாதுமாகி நின்றவளாய் இருக்கும் அனாமிகாவின் பிரிவும் அதன் காரணங்களும் எனக்குத் தெரியும். என்றாலும் அவருக்கு நான் எப்போதும் ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னதில்லை. ஏனென்றால் வார்த்தைகளில் ஆறுதல்படுத்திவிட முடியாத பேரிழப்பு. அந்தப் பேரிழப்பைச் சொல்லும் வரிகளை முன்வைத்துப் பேசும் இந்தச் சொற்கூட்டம் அவருக்குச் சின்ன ஆறுதலைத் தரும் என நம்புகிறேன்.

2018 இல் சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வின்போதே, அடுத்த ஆண்டு என் சார்பில் அனாமிகா அஞ்சலி நிகழ்வுகளில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திரிகோணமலையிலும், அதன் அருகில் இருக்கும் சொந்த ஊரான மூதூர்- கட்டைமறிச்சானிலும், மட்டக்களப்பிலும் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்படி திட்டமிடுங்கள் என்று சொல்லிவிட்டார். அவரது வேண்டுகோளின் பேரில் தான் எனது இரண்டாவது இலங்கைப் பயணம் திட்டமிடப்பட்டது. மூன்று ஊர்களிலும் தொடர்ச்சியாக மூன்று நிகழ்வுகள் என்பதை வைத்துக்கொண்டு முன்னும் பின்னுமாக மற்ற இடங்கள் என முடிவு செய்தேன்.

****

திரிகோணமலையில் சுகுமாரின் உறவினர் திருச்செல்வம் அறியப்பட்ட மனிதர். முந்திய தேர்தலில் தமிழ்த்தேசியக் கட்சியின் சார்பில் தேர்தலில் நின்று வென்றவர். அவரது வீட்டில்தான் தங்க ஏற்பாடு செய்திருந்தார். அதேபோல் என்னைத் தனது காரில் அழைத்துச் சென்று ஊர் சுற்றிக் காட்டும் பொறுப்பை அவரது இன்னொரு உறவினர் மருத்துவர் சிவசங்கரனுக்குப் பொறுப்பாக்கியிருந்தார். அன்று மாலை நடக்கும் திரிகோணமலை நிகழ்வில் அனாமிகா அஞ்சலிக்குப் பின் கலை, இலக்கியம், சமூகப்புரிதல் தொடர்பான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடுத்த நாளில் மூதூரில் அவரது உறவினர் வீடொன்றில் உணவு, இளைப்பாறல் எனவும் ஏற்பாடு. கட்டைமறிச்சான் விபுலானந்தர் பெயரில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு நாடகப்பயிற்சிக்கு ஏற்பாடு. அதன் தொடர்ச்சியில் அனாமிகா அஞ்சலி நிகழ்வு.

 இலண்டனிலிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்திருந்தார் சுகுமார். திரிகோணமலை பேருந்து நிலையத்தில் இறங்கி மான்குட்டியைப் படம் பிடித்துக் கொண்டிருந்த போது மருத்துவர் சிவசங்கரன் காரோடு பேருந்து நிலையத்திற்கு வெளியே காத்திருப்பதாகச் சொன்னார். அவரோடு கிளம்பிப் போகும்போது திரிகோணமலையில் ஓரப்பகுதிகளைக் காட்டிக்கொண்டே போனார். நாடாளுமன்ற உறுப்பினரான திருச்செல்வம் வீட்டில் காலை உணவுக்குப் பின் ஓய்வெடுங்கள். மதிய உணவுக்குப் பின் பார்க்கவேண்டிய இடங்களுக்கு அழைத்துப்போவதாகச் சொல்லிவிட்டு, திருச்செல்வம் வீட்டில் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பினார். சொன்னபடி பிற்பகல் மூன்று மணிக்கெல்லாம் வந்து நகரிலிருந்து விலகியிருக்கும் வெந்நீர் ஊற்றுகள் இருக்கும் கண்ணியா என்னும் இடத்திற்கு அழைத்துப் போனார். சுற்றுலாத் தலமான அந்த இடத்தில் முன்பு விடுதலைப் புலிகளின் முகாம் இருந்தது என்றார். காட்டுப்பகுதி என்பதால் கெரில்லாப் போரில் நம்பிக்கையுடைய விடுதலைப்புலிகள் அந்த இடத்தைத் தேர்வு செய்தது சரியென்றே தோன்றியது. சமதளமான நிலப்பரப்பும் நீர்ப்பரப்பும் கொண்ட கடல் ஓரங்கள். இரண்டையும் பிரிக்கும் மரங்கள். தாண்டிச் சென்றால் மலைப்பகுதி. அடர்ந்த காடு. இப்போது அரசு ராணுவம் தங்கியிருக்கிறது என்று சொல்லிக் கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள இடம் எனச் சொன்னார். அந்தக் கட்டுப்பாடுகளை இப்போதும் பின்பற்றவேண்டும் என்ற அழுத்தம் அவரது சொற்களில் வெளிப்பட்டது.

 -இன்னும் வரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்