புதிய படிப்புகளை நோக்கி ஒரு நிறுவனம்

கொழும்புவில் இரண்டாவது நாள்

இலங்கைக்கு வந்த முதல் பயணத்திற்கும் இரண்டாவது பயணத்திற்கும் பெரிய அளவு வேறுபாடு உண்டு. முதல் பயணம் முழுவதும் கல்விப்புல ஏற்பாட்டுப் பயணம். ஆனால் இரண்டாவது பயணத்தில் எல்லா ஏற்பாடுகளும் சொந்த ஏற்பாடு போல. அதனைச் செய்து தந்தவர்கள் நண்பர்களே. கொழும்புக்கான பொறுப்பை எடுத்துக் கொண்டவர் ஷாமிலா முஸ்டீன். ஏற்பாட்டின்படி முதல் நாள் பயணத்திற்குப் பின்னான ஓய்வெடுப்பு. இரண்டாம் நாள் முழுவதும் மூன்றாம் நாள் முற்பகலும் நாடகப்பயிலரங்கு. அன்றைய பிற்பகலும் இரண்டு மாலை நேரங்களிலும் ஊர் சுற்றிப்பார்த்தல். நான்காம் நாள் காலையில் கொழும்புவிலிருந்து கண்டி- பேராதனை நோக்கிப் பயணம் என்பதுதான் திட்டம்
கொழும்பு நகரில் இந்து மகாவித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பின் கடைசி ஆண்டுகளில் இருக்கும் மாணவர்கள் பங்கெடுக்கும் இரண்டு நாள் நாடகப் பயிலரங்கொன்றிற்கு ஏற்பாடு செய்திருப்பதாகச் செய்தி அனுப்பியிருந்தார் ஷாமிலா. சுமார் 60 பேர்வரை பங்கேற்பார்கள் என்றும் அந்தத் தகவலில் இருந்தது. அடிப்படைப் பயிற்சிகளை முதல் நாளில் அளித்துவிட்டு மறுநாள் குறுநாடகங்கள் தயாரிப்புக்கான பயிற்சிகளை அளிக்கத் திட்டமிட்டிருந்தேன். இலங்கையில் நடந்த முடிந்த தேர்தலும் புதிய அமைச்சரவை பதவியேற்பும் அதனையொட்டி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையும் சேர்ந்து மாணவர்களின் பங்கேற்பை மாற்றிவிட்டன. ஏற்பாடு செய்த பள்ளி பின்வாங்கிவிட்ட து. அந்த நாடகப்பயிற்சிக்காகவே மூன்று நாள் கொழும்புவில் தங்கும் திட்டம். அந்தத் திட்டம் அப்படியே கைவிட்டுப் போய்விட்ட து.
ஜமீயா நளீமியா கல்வி வளாகம்

கைவிடப்பட்ட திட்டத்திற்கு மாற்றுத் திட்டத்தை ஷாமிலாவின் கணவர் முஸ்டீன் உடனடியாக உருவாக்கினார். பிற்பகலில் அவர் பயின்ற ஜாமியா நளீமியா கலாபீடத்தில் விரிவுரைக்கு ஏற்பாடு செய்துவிட்டார். இசுலாமிய வியலை மையமிட்ட மொழிக்கல்வி, பண்பாட்டுக் கல்விக்கான பீடம் அது. அங்கு கற்கும் மாணவர்களோடு அரங்கியலின் பரிமாணங்களை அறிமுகம் செய்து ஒரு திறப்புநிலைச் சொற்பொழிவாற்றுவதும் அங்கிருக்கும் இளம் ஆசிரியர்களோடு புதிய பாடத்திட்டங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பற்றிய உரையாடலை நடத்துவதுமான ஏற்பாடு. அதற்காகப் பிற்பகலில் ஐந்து மணிநேர அளவு செலவழிக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். முற்பகலில் ஓய்வெடுத்துக் கொண்டு பிற்பகலில் ஜமீயா நளிமியா நோக்கிப் பயணித்தோம். அக்கலாபீடம் கொழும்பு நகரின் மையத்தில் இல்லை. கடற்கரைச்சாலை வழியாக ஏறத்தாழ 60 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.

பேருவளை என்னுமிடத்தில் இருக்கும் அவ்வளாகத்திற்குப் போகும் பாதையில் தெகிவளை,பாணந்துறை,களுத்துறை என முக்கியமான இடங்களைக் கடந்து சென்றது வாடகைக்கார். ஒருமணி நாற்பது நிமிட த்தில் போய்விடலாம் என வரைபடப்பாதை காட்டினாலும் போய்ச்சேரும்போது மாலை மூன்று மணி ஆகிவிட்டது. பழைமையும் தூய்மையும் நிரம்பிய வளாகத்தைப் பார்த்துவிட்டு உரையைத் தொடங்கும்போது மணி நான்கு. உரைக்குப் பின் உரையாடல் எல்லாம் அங்கிருந்து கிளம்பும்போது மணி ஆறு.

அரங்கியல் கல்வியை விரிவாக மாணவர்களுக்கு அறிமுகம் செய்து விட்டு, இளம் ஆசிரியர்களிடம், பரப்பியல் படிப்புகளின் பகுதியாக அரங்கியல் கல்வியைக் கற்பிக்கலாம் எனச் சொன்னேன். வளர்ச்சியடைந்த நாடுகள், பரப்பியல் கல்வியைத் தங்களைப் பொருளாதார ரீதியாக நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கத்தில் கற்பிக்கின்றன. அதனால் அயல் நாடுகளின் படிப்பின் பகுதியாகப் பரப்பியல் இருக்கிறது. அதனால் பன்னாட்டு வணிகக் குழுமங்களின் நிதியுதவியும் கிடைக்கின்றன. பொருளாதார வளர்ச்சி, வணிக மேலாண்மை, பண்பாட்டுக் கூறுகள் வழியாகப் பெருந்திரளின் உளவியலைப் படிப்பித்தல், விளிம்புநிலை மனிதர்களின் ஆதங்கம் போன்றவற்றைக் கவனப்படுத்துகின்றன. 

நிலவியல் பரப்பை அதன் அனைத்துப் பின்புலங்களோடும் கற்றுத்தரும் பரப்பியல் கல்வியை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மனிதவளக் கல்வியின் பகுதியாக உருவாக்கவேண்டும். மனிதவளம் இங்கெல்லாம் ஒரேமாதிரியான திறன்களையோ, வெளிப்பாட்டு முறைகளையே கொண்டன அல்ல. நிலத்துக்கடியிலும் நீருக்கடியிலும் பொதிந்து கிடக்கும் வளங்களோடு இணைந்த து மனித வளம். இவ்விரு நாடுகளிலுமே மலைசார்படிப்பு, கடல்சார்படிப்பு, சமவெளிப்படிப்பு, நகர்சார் படிப்பு போன்ற பரப்பியல் படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பரப்பிலும் சமயம், மொழி வழியாக உருவாகும் பண்பாட்டு வேறுபாடுகளை மிகைப்படுத்தாமல் ஒத்திசைந்தும் விட்டுக்கொடுத்தும் வாழும் வாழ்க்கை முறையை உருவாக்கும் அறிவை அதன் மூலம் உருவாக்க முடியும். அதனை முறைசார் கல்வியாகவும் முறைசாராக் கல்வியாகவும் கற்றுத்தரும் வகையில் பாடத்திட்டத்தை அமைக்கவேண்டும் என எடுத்துக்கூறினேன். விரைவில் அதற்கான முன்னெடுப்புகள் அங்கே நடக்கும் என்றார்கள்.


ஜமீயா நளிமியாவிற்கு முஸ்டீன் அழைத்துச் சென்றதில் இன்னொரு காரணமும் இருந்தது. அவர் அந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவர். அங்கு கற்றுத்தந்த கல்வியை முழுமையாகப் படித்து முடிக்கவில்லை; ஆனால் அங்கு கற்றுக் கொண்டவை ஏராளம் என்று சொன்னார். இதுபோன்ற நிறுவனங்களின் மீது அடிப்படைவாதப் பார்வை விழுந்து கொண்டிருக்கும் நிலையில் அதனை மாற்றிப் புதிய உலகத்திற்கான – பன்முக அடையாளம் கொண்ட தேசத்தில் தங்கள் அடையாளத்தை இழக்காத நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது.

திரும்பும்போது முஸ்டீன் தனது முன்னிரவு தொழுகைக்காக ஒரு பழைமையான மசூதிக்கு அழைத்துப் போனார். அதுநாள் வரையிலும் ஒரு மசூதியைத் தொழுகையின்போது பார்த்ததில்லை. வெளியே இருக்கும் நீரோட்டத்தில் கால்கழுவிவிட்டு, உள்ளே நுழைந்து முழுமையாகத் தொழுகையை வேடிக்கை பார்த்துவிட்டுச் சில படங்களை எடுத்துக் கொண்டேன். மதம் ஒருவரின் அந்தரங்க விருப்பம் என்பதைப் பெருமதங்கள் அடிப்படைக் கருத்தியலாகப் பின்பற்றுகின்றன. பெருந்தெய்வக் கோயில்களில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானையோ, விஷ்ணுவையோ, பிரம்மனையோ, அவர்களது துணைவிகளையோ மட்டும் வணங்கும் மனிதர்களுக்கும், பரமபிதாவை ஆவியாக வணங்கும் கிறித்தவர்களுக்கும், இறைத்தூதர் வழியாக அல்லாவை நெருங்கும் இசுலாமியருக்கும், போதனைகளின் சாரத்தைப் பின்பற்றிப் புத்தரும் வர்த்தமானரும் சொன்ன ஞானக்கடவுளை நாடும் பக்திமான்களுக்கும் கடவுளும் சமய நடவடிக்கைகளும் அந்தரங்கமே. ஆனால் நாட்டார் தெய்வங்களை முதன்மையாகவும், பெருந்தெய்வக் கோயில்களில் இருக்கும் மூர்த்திகளைத் தற்காலிகமாகவும் வணங்கும் மக்களுக்கு சமயநடவடிக்கைகளும் வழிபாடுகளும் அந்தரங்கமல்ல; அவை சமூக வாழ்க்கையின் தற்செயல் வெளிப்பாடுகள். அத்தற்செயல்கள் தற்காலிகமாகக்கூட ஒருவர் வந்துவிட்டுத் திரும்பிப்போய்க்கொள்ளலாம். வருபவரை ஏன் வந்தாய்? என்றும் கேட்பதில்லை; வந்துவிட்டுப் போனவரை ஏன் திரும்பவரவில்லை என்றும் கேட்பதில்லை.

திரும்பி வரும்போது முஸ்டீன் ஒரு தகவலைச் சொன்னார். இன்றிரவு ஒரு கல்யாண வரவேற்புக்கும் அதனைத் தொடர்ந்து அளிக்கும் விருந்துக்கும் செல்ல வேண்டும். ஷாமிலாவும் பிள்ளைகளும் அங்கு வந்து விடுவார்கள்; உங்களுக்கு விருப்பமென்றால் நீங்களும் வரலாம்; இல்லையென்றால் காரிலேயே ஓட்டுநருடன் அமர்ந்திருக்கலாம்.  திருமண வரவேற்பு நடக்கும் மண்டபம் கடற்கரைச் சாலையில் தான் இருக்கிறது. காலாற நடந்து காற்று வாங்குங்கள். பசிக்கும்போது ஓட்டுநரோடு சென்று உணவு விடுதியொன்றில் இரவு உணவை எடுத்துக்கொள்ளலாம். ஓட்டுநரிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன் என்றார். என்னுடைய இசுலாமிய மாணவிகள் சிலரின் திருமண வரவேற்பையும் விருந்தையும் பார்த்திருக்கிறேன்; விருப்பமான உணவான பிரியாணி இருக்கும்; நான் வருகிறேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். 8.30 -க்குப்போனபோது ஷாமிலா வந்திருக்கவில்லை. விருந்து மண்டபத்தில் என்னை உட்காரவைத்துவிட்டு மணமக்கள் இருக்குமிட த்திற்குச் சென்று பரிசுப்பொருளைக் கொடுத்துவிட்டு வந்தார் முஸ்டீன். அவர் வரும்வரை நான் தனியனாக இருந்தேன். 

என்னிடமிருக்கும் தாடி என்னை அடையாளம் காட்டவில்லை. ஏனென்றால் வந்திருந்தவர்களின் ஆடையும் இசுலாமிய அடையாளம் கொண்ட தாக இருந்த து. அத்தோடு பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே அங்கே காத்திருந்தார்கள். மாடிகளுக்கு ஆட்களைத் தூக்கிவரும் எந்திரத்தின் வாயிலில் இருபாலரும் பிரிக்கப்பட்டுத் தனித்தனி அறைகளில் காத்திருக்கப் போய்விட்டார்கள். அந்தப் பிரிவினை உணவு உண்ணும்போதும் பின்பற்றப்பட்டது. சில நூறு இருக்கைகள் கொண்ட இரண்டு பெரிய அறைகளில் விருந்துணவு பரிமாறப்படக் காத்திருந்த து. ஆண்களும் பெண்களும் தனித்தனியே அமர்ந்து உணவுண்டார்கள். கணவன் -மனைவியாக வந்திருந்தாலும் பிரிக்கப்பட்டார்கள். குழந்தைப் பருவத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே பால்பேதம் இல்லை. ஷாமிலாவின் பெண் அவளது அப்பாவோடு இருந்தாள். அவளைவிட மூத்தவனான பையன் அம்மாவோடு இருந்தான். இருவரும் பருவ வயதினராக ஆகும்போது அவரவர் பாலினரோடு மட்டும் கலந்து நிற்க வேண்டும் என்று சொல்லும் மதத்தின் மீது கொஞ்சம் எரிச்சலடையவே செய்வார்கள்.

அந்தக் கல்யாண மண்டபம் கொழும்பு நகரில் கடற்கரைச்சாலையில் தான் இருந்தது. கடலுக்குள் அமையும் நகரம் இரவு – பகலாக வேலை நடந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. காரை மெதுவாக ஓட்டும்படி சொன்னார் முஸ்டீன். அந்தக் கடற்கரைக்கு நாளைக்காலை உங்களை அழைத்து வருவேன் எனச் சொன்னார் ஷாமிலா. அத்தோடு நாளை முழுவதும் வேலையெதுவுமில்லை. முடிந்தால் கொழும்பு நகருக்குள் சில இடங்களைப் பார்க்கலாம்; அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன் என்றும் சொன்னார். அல்லது வீட்டிலேயே நண்பர்கள் சந்திப்பொன்றிற்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் பேசிக்கொண்டோம். கல்யாண விருந்திற்குப் போய்த்திரும்பும்போது பிள்ளைகளோடு நெருக்கம் கூடிவிட்ட து. இருவரும் பெயரைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஷாமிலாவின் பிள்ளைகளோடு இரவு 11.30 வரை பேசிக்கொண்டிருந்துவிட்டுத் தூங்கப்போனோம்.

கடந்த முறை வந்தபோது கொழும்பு நகருக்குள் நுழையவே இல்லை. கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஸ்ரீவித்தியானந்தன் அழகியல் கற்கை நிறுவனம், தான் நட த்திய உலகமயமாக்கள் சூழலில் பாரம்பரிய கலைகள் என்னும் பன்னாட்டுக் கல்விப்புல மாநாட்டுப் பேராளர்களின் வருகையைக் கவனித்துக்கொண்டது. மாநாட்டு நிர்வாகமே பொறுப்பேற்று வாங்கித்தந்த உள்நுழைவு அனுமதியில் தான் போயிருந்தேன். அதன் வரவேற்புக்குழு உறுப்பினர்கள் கொழும்பு விமான நிலையத்தில் வாகனத்தோடு காத்திருந்தார்கள். 14 ஆம் தேதி காலை முதல் இரவுவரை வரக்கூடிய வெளிநாட்டு விமானங்களின் பேராளர்களை அழைத்துக் கொண்டுபோய் ஓரிடத்தில் தங்க வைத்தார்கள்; உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மொத்தமாகப் பல்கலைக்கழக வாகனத்தில் கொழும்புவிலிருந்து மட்டக்களப்புவில் தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கென மாநாட்டுக் கட்டணமாக அமெரிக்கப் பணத்தில் பேராளர் கட்டணம் செலுத்தியிருந்தோம். இது பொதுவான கல்விப்புல மாநாட்டுப் பயணங்களின் நடைமுறை. அதன்படி வேறெங்கும் போகும் வாய்ப்பில்லை. அந்தப்பயணத்தில் எழுத்தாளர் இமையமும் என்னோடு சேர்ந்தே பயணம் செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்