நின்று பார்த்த மாலையும் கடந்து வந்த காலையும்

 எத்தனை கோயில்கள்.. எத்தனை கடவுள்கள்

 இன்றைய மாலை /13-12-21

இந்தியப் பரப்பெங்கும் பல்வேறு கோயில்களில் இருக்கும் எல்லாத் தெய்வங்களையும் ஓரிடத்திற்குக் கொண்டு வந்து குவித்து வைத்திருக்கிறார்கள் அந்த வெளியில். ஏழெட்டு ஏக்கர் நிலப்பரப்பில் உயர்ந்த சுற்றுச் சுவர்களுக்குள் 108 கோயில்களும் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
முப்பெரும் கடவுளர்கள், அவர்களின் தேவிகள், பெருங்கடவுளர்களின் அவதார உருவங்கள், அவர்களின் குடும்ப உறுப்பினரும் என விரியும் வரிசைகள் வழியாகப் புராணக்கதைகளும் அவதாரக்கதைகளும் மட்டுமல்லாமல் வேதங்களும் உபநிஷத்துகளும் நினைவூட்டப்பட்டுள்ளன. தெய்வாம்சப் பாத்திரங்கள், முனிவர்கள், ரிஷிகள் அவர்களோடு தொடர்புடைய குடும்ப உறுப்பினர்களும் தேடித் தொகுக்கப்பட்டுப் பிரதிமைகளாக்கப்பட்டுள்ளனர்.

புத்தரும் வர்த்தமானரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். புத்தஜாதகக் கதைகளின் பாத்திரங்களும் கூட. இந்தத் தொகுதிக்கு வெளியே ஒரு இயேசுநாதரும் சிலுவைக்கோயிலும்கூட இருக்கின்றன. ஆனால் அல்லாவை மட்டும் காணவில்லை
ஒவ்வொன்றாகப் பார்த்துவரவும் நின்று கதைகளை அறிந்துகொள்ளவும் நினைத்தால் சில மணி நேரங்களுக்கு மேலாகும். மெல்லிய ஓசையோடு பஜனைப் பாடல்கள் அல்லது இசைக்கோர்வைகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. எந்த வரிசையில் அவற்றைப் பார்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகக் காலடித்தடங்கள் போடப்பட்டு வழிகாட்டப்பட்டுள்ளன. முழுவதும் வழவழப்பாக்கப்பட்ட கற்கள் பாவிக்கப்பட்ட தரைத்தளம். ஓரங்களில் பூஞ்செடிகளும், மூலிகைத் தாவரங்களும் வரிசையாக நிற்கின்றன. சுத்தமும் அமைதியும் பேணப்படுகின்றன.

உள்ளே சிறியதும் நடுத்தரநிலையிலுமான அரங்குகள் இருக்கின்றன. யோகாசனங்கள், தியான மண்டபங்கள், வாசிப்புக்கூடங்கள் வழிபாட்டுக்கூடங்களாகவும் விளக்கவுரை மண்டபங்களாகவும் நடனம், கலைநிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகளாக அவற்றைப் பயன்படுத்தமுடியும்; பயன்படுத்துகிறார்கள். பண்பாட்டு நாட்காட்டியைப் பின்பற்றி நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்பதை அங்கேயுள்ள தகவல் பலகைகளும் அறிவிப்புகளும் காட்டுகின்றன.
குலதெய்வக்கோவில்களுக்கும் ஊர்த்தெய்வக் கோவில்களுக்கும்

பழக்கப்பட்டவர்கள் நகரங்களுக்கு இடம்பெயரும்போது வேறுவகையான வழிபாட்டு முறைகளைத் தேடுவது அந்நியமாதல் விளைவுகளில் ஒன்று. பெயரிடல் தொடங்கி, பொழுதுபோக்கு வரை மேல்நிலையாக்கத்திற்குள் நுழையும் நடுத்தர வர்க்கத்திற்குப் பெருங்கோயில்களின் இறுக்கமும் பூஜை முறைகளும் விலகலாகவே தோன்றின. அந்த இடத்தை நிரப்ப இஸ்கான், சாய்பாபா வழிபாடு, ஆதிபராசக்தி வார வழிபாடு போன்றன கிடைத்தன. இப்போது அதன் நீட்சியாகப் பல்வேறு முறைகளையும் உள்ளடக்கிய ஈஷா மையங்கள் தோன்றுகின்றன. அதன் கிராமப்புற வடிவமாக இந்த சத்யயுக சிருஷ்டிகோவில் தோன்றியுள்ளது என்று சொல்லலாம்.
இந்தியாவின் பொருளாதார வருவாய்களில் முக்கியமானதாக இருப்பது

க்ஷேத்திராடனம் என்னும் சமயச் சுற்றுலா. இந்தியாவின் சுற்றுலாப் பொருளாதாரத்தில் முக்கியமான பங்களிப்பு கொண்ட ஒன்று. இந்தப் பங்களிப்பும் பயணங்களும் அரசுகளுக்குள் மோதல்களும் வேறுபாடுகளும் இருந்த காலத்திலும் கோயில்கள் வழியாக நடந்த தொடர்ச்சிகொண்ட ஒன்று. ஒருவிதத்தில் இந்தியாவின் நிலவியல் பண்பாட்டை உருவாக்கிய முதன்மையாக கூறுகளில் ஒன்று என்றுகூடச் சொல்லலாம். இந்தியப் பரப்பிற்குள் குறுக்கும் நெடுக்குமாகப் போடப்பட்ட சாலைகள் இந்தச் சுற்றுலாப்பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டவைகளாக இருந்தன. காசியையும் ராமேஸ்வரத்தையும் இணைத்தும், மதுராவையும் மதுரையையும் இணைத்துப் பாதைகள் போடப்பட்டுள்ளன. சோமனையும் கந்தனையும் இணைத்த தொன்மங்களும் விநாயகனையும் முருகனையும் இணைத்த தொன்மங்களையும் காளியைப்பரமேஸ்வரியாக்கிய கதைகளும் முன்பு நடந்தவை.

நமது காலம் சிற்றங்காடிகளுக்குப் பதிலாகப் பேரங்காடிகளும் பல்லங்காடிகளும் தோன்று வளரும் காலம். எல்லாவற்றையும் ஒரே கூரைக்குள் கிடைக்கச் செய்யும் குழுமச் செயல்பாடு( ) தழைத்தோங்கும் காலம். அதன் சமய வெளிப்பாடாக இந்தச் சத்யயுக சிருஷ்டி கோவிலை -முக்திநிலையத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
****************
15 - 20 கிலோ மீட்டர் தூரம் ஓட்டும் எனது மிதிவண்டி ஓட்டத்தில் இந்தச் சுற்றுப் பாதையும் ஒன்று. பல தடவை அதன் வழியாகச் செல்வதுண்டு. செல்லும்போது நின்று பார்த்திருக்கிறேன். உள்ளே சென்று பார்க்க வேண்டுமென்றால் மாலையில் வரவேண்டும் எனச் சொல்லி விட்டார்கள். இரண்டு தடவை இதற்காகச் சென்று பார்த்திருக்கிறேன். கரோனாக் காலம் குறுக்கிடாமல் இருந்தால் இந்தக் கோவிலும் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் வழிபாட்டு நிலையமாக மாறியிருக்கும்.

****************
உங்களுக்கும் பார்க்கத் தோன்றலாம். கன்யாகுமரி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் தாண்டி 7 கிலோமீட்டர் தூரத்தில் அந்தத் தகவல் பலகை உங்கள் கண்ணில் படும். அதில், ” நூதன 108 திருக்கோவில்கள் /சத்யயுக சிருஷ்டிகோவில்/ ’அனைத்துத் தெய்வங்களும் உள்ள க்ஷேத்திரம்/ முக்தி நிலையம்” என்று தமிழில் எழுதியதோடு, அதனை மொழிபெயர்த்து ஆங்கிலத்திலும் தந்திருப்பார்கள். கூடுதலாக முகவரியை - RAYAPALAYAM VILLAGE, TIRUMANGALAM,MADURAI, 625706- என ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும் . இந்தப் பலகை இல்லாமல் இன்னும் சில பலகைகளும் உண்டு. விருதுநகரிலிருந்து வரும்போது தமிழில் மட்டும் இதே விவரங்களை வண்ணப்பலகையில் வாசிக்கலாம். இந்தத் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யாமல்
திருமங்கலம் - தென்காசி சாலை மாநில நெடுஞ்சாலையில் போனால் ஆலம்பட்டியைத் தாண்டியதும் விலகிச் செல்லும் ராயபாளையம் கிராமத்துச் சாலையில் சென்றால் இந்த முக்தி நிலையம் வரும். அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை அரைகிலோமீட்டர் தான். - விருதுநகர் செல்லும் குறுக்குச் சாலை ஆலம்பட்டி விலக்குச் சாலையில் இருக்கிறது.

கடந்துவிட முடியவில்லை

காலை(12/12/2021)
------------------------ ---------------
மதுரைக்குப் போகும் விமானம் காலை 6.15 -க்குக் கிளம்பும். ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு விமான நிலையத்தை அடைந்துவிட்டால் நல்லது என்று திட்டமிட்டு 3.30 -க்கு தொலைபேசியில் அறிவிப்புச் செய்யும்படி செய்திருந்தேன். 6 நிமிடத்திற்கு முன்னால் 3.24 க்கு விழிப்பு வந்து விட்டது. பல்லை மட்டும் துலக்கிவிட்டு அறையில் ஓடிய குளிரூட்டியை நிறுத்திய போது வெளியே மழைபெய்யும் சத்தம் கேட்டது. சாளரத்தை எளிதாகத் திறக்க முடியாது. மழை பெய்தால் பெருஞ்சாலைக்குப் போய் ஆட்டோ பிடிப்பதில் சிரமம் ஏற்படும் என்று நினைத்துக் கொண்டே பொருட்களை எடுத்து வைத்தேன். இரவே ஓரளவு பெட்டிக்குள் பொருட்களை அடுக்கும் வேலை முடிந்திருந்ததால் 10 நிமிடத்தில் முடிந்து முதுகில் ஒரு 7 கிலோ நிறையுடன் ஒரு பையும், இழுவைப் பெட்டியில் 15 கிலோ எடையுடனுமாகத் தரைத்தளம் வந்தபோது சாரல் கூட இல்லை. தூசுபோலப் புனுப்புனுவெனத் தூறல். அறையைக் காலி செய்கிறேன் என்பதற்கான அடையாளமாக ஒப்பமிட்டு விட்டு வெளியே வந்து திருவான்மியூர் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் சாலையில் நின்றேன்.
நாலுமுக்கில் நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர் வந்தார். 500 ரூபாயில் ஆரம்பித்தார். நான் 300 என ஆரம்பித்தேன். அடுத்து அவர் 400 என்றார். நான் 350 என்றேன். திரும்பவும் அதே அதை வலியுறுத்த 350 க்கு ஒத்துக்கொண்டார். வேளச்சேரியைத் தாண்டி ஒரு எரியெண்ணைக் கிட்டங்கியில் நுழைந்து எரிவாயு நிரப்பினார். அப்போது தான் அந்த ஆட்டோ எண்ணெய்க்குப் பதிலாக எரிவாயுவில் ஓடுகிறது என்று புரிந்தது. 200 ரூபாய்க்கு எரிவாயு நிரப்பினார். எனது இருசக்கர வாகனம் பெட்ரோலென்னும் எரி எண்ணெயிலும், நான்கு சக்கர வாகனம் டீசலென்னும் எரியெண்ணெயிலும் ஓடுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 100 தாண்டி விட்ட து. டீசலுக்கும் பெட்ரோலுக்கும் இடையேயிருந்த விலை வேறு எனக்குத் தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளில் விலையேற்ற விகிதம் கேள்விகளற்றதாக மாறிக்கொண்டிருப்பதும் தெரியும்.
ஒரு கிலோ எரிவாயு 38 ரூபாய் என்று இருந்தபோது எண்ணெயில் ஓடிய ஆட்டோவை எரிவாயுவுக்கு மாற்றியிருக்கிறார். இப்போது ஒருகிலோ 68. ஏறத்தாழ இருமடங்காகிவிட்ட து. திரும்பவும் எண்ணெய்க்கு மாறிவிடலாம் என்றால் இயந்திரப்பகுதியில் -எஞ்சினில் மாற்றம் செய்யவேண்டும். அதற்கொரு தொகை வேண்டும். அதற்காகவே இரவு ஓட்டங்களுக்குக் காத்திருந்து ஓட்டுகிறேன் என்றார். விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி இறக்கிவிட்ட போது 500 ரூபாய்த் தாளைக் கொடுத்தேன். 100 திரும்பக் கொடுத்தார். 50 ரூபாய்த் தாள் அவரிடம் இல்லை. என்னிடமும் இல்லை. இருந்தால் பேசியதொகையில் முடிந்திருக்கும். சரி பரவாயில்லை என்று சொல்லிவிட்டு 100 ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது வேறு ஒன்றில் திருப்தியைத் தேடிக்கொள்கிறது மனம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்