நகர்வலம் : அடுக்குமாடிகளும் ராஜபாட்டைகளும்

உலகமயப் பொருளாதாரத்தையும் அதுசார்ந்த வர்த்தகத்தையும் உள்வாங்கிக் கொண்ட நிலையில் எல்லா நாட்டின் தலைநகரங்களும் மாற்றத்தைப் பெருமளவு சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சில நாடுகளில் அலுவல் ரீதியான தலைநகர் ஒன்றாகவும் வணிகத் தலைநகர் இன்னொன்றாகவும் பண்பாட்டுத்தலைநகர் மற்றொன்றாகவும் இருக்கும். பன்னெடுங்கால வரலாறு கொண்ட நாடுகளில் ஒவ்வொரு நகரங்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கவே செய்யும்.
 
மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் நிர்வாகத் தலைநகராக விளங்கும் கொழும்பு பல நூறு ஆண்டுகளாக உலக க்கடல் வணிகத்தின் மையமாக இருக்கும் துறைமுக நகரம். இலங்கையின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள அந்நகரமே இப்போது வணிகத் தலைநகரமாகவும் இருக்கிறது. புத்தருக்கான பெருங்கோயிலைக் கொண்டிருக்கும் கண்டியும் அநுராதபுரமும் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தலைநகர்களாக இருந்துள்ளன. ஐரோப்பியர்களின் மனம் எப்போதும் வணிகத்தை முதன்மையாக நினைக்கும் நோக்கம் கொண்டது. வான்வழிப் பயண வசதிகள் இல்லாத 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் நீர்வழிப்பயணங்களே சாத்தியம் என்பதால் ஐரோப்பியர்கள் துறைமுக நகரங்களையே விரிவு படுத்தினார்கள்; தலைநகரங்களாக மாற்றினார்கள். இந்தியாவிற்கு வந்த பிரிட்டானியர்கள் கல்கத்தாவுக்கும் சென்னைக்கும் மும்பைக்கும் கள்ளிக் கோட்டைக்கும் தந்த முக்கியத்துவத்தை நினைத்துக் கொண்டால் இது புரியும். 16 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த போர்த்துகீசியர்கள் தொடங்கி ஒல்லாந்தர்கள், பிரிட்டானியர்கள் என ஒவ்வொருவரும் இந்நகரத்தை அவர்களின் கட்டடக்கலை அடையாளங்களோடு வளர்த்தெடுத்திருக்கிறார்கள். விடுதலைக்குப் பின்னான அரசுகள் அவற்றில் சிலவற்றை மாற்றியும் சிலவற்றைப் புதிதாக உருவாக்கியும் புதிய நகரத்தைக் கட்டமைத்திருக்கிறார். இவற்றையெல்லாம் பார்த்து முடிக்க நினைத்தால் நல்ல வாகனத்தோடும் வழிகாட்டியோடு ஒருவாரமாவது தங்கியிருக்க வேண்டும்.

முதல் மூன்று நாட்களில் குறுக்கும் நெடுக்குமாகப் பேருந்திலும் வாடகைக்கார்களிலும் பயணித்த போது அதன் பழைமையையும் புதிய பகுதிகளையும் அடுத்தடுத்துப் பார்க்க முடிந்தது. கடல்காற்றின் ஈரமும் நகரின் மையத்தில் இருக்கும் ஏரிக்காற்றின் வாசமும் கலந்த கொழும்பு நகரில் மீன் வாசம் கலந்திருப்பது தவிர்க்கமுடியாதது. நான்கு ஆண்டுகளில் கொழும்பு நகரம் பெரிதளவு மாறிவிட்டது என்பதைப் பேருவிளைக்குப் போய்த் திரும்பிய பயணமே உணர்த்தியது. திட்டப்படி மூன்றாவது நாள் கொழும்பு நகரைச் சுற்றிப்பார்ப்பதுதான் வேலை. நடந்த உள்நாட்டுப் போரில் உறுப்பினர்களையும் சொத்துகளையும் இழந்த குடும்பத்தைச் சேர்ந்த ஷகிலாவின் ஈடுபாடுகள் ஆன்மீக உரைகள், செயல்பாடுகள் போன்றன. அவர் தனது வாகனத்தில் வந்து ஊர் சுற்றிக் காட்டுகிறேன் என்று சொல்லியிருந்தார். அத்திட்டத்தை முஸ்டீனிடமும் ஷாமிலாவிடமும் சொன்னபோது அவர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் காலை நடையாகக் கடற்கரைச் சாலையில் நடக்கவும் ராஜபாட்டைகள் இருக்கும் பெருஞ்சாலைகளில் பயணிக்கவும் தயாராக இருங்கள் என்று முதல் நாள் இரவு விருந்து முடித்து வரும்போதே சொல்லிவிட்டார்கள்.

இரவு போட்ட திட்டப்படி அதிகாலையில் எழுந்து ஒரு தேநீரைக் குடித்துவிட்டுக் கிளம்பத் தயாரானபோது முஸ்டீன் முடித்து அனுப்ப வேண்டிய வேலை கண்னி கடிதப் பெட்டியில் காத்திருந்தது. அவர் கணினி முன்னால் உட்கார்ந்துவிட்டார். நானும் ஷாமிலாவும் கிளம்பினோம். மிகவும் பழைமையான மசூதி வழியாகப் பயணித்துக் கடற்கரையில் இருக்கும் அரசுத்துறைக் கட்டடங்கள், ஜனாதிபதி மாளிகை, வெவ்வேறு நாடுகள் கட்டியிருக்கும் வணிக மையங்கள் என ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டும் படம் எடுத்துக் கொண்டும் திரிந்தோம். போகும் இடங்களில் எல்லாம் ராணுவ உடை அணிந்த காவலர்களின் இருப்பும் பார்வையும் கூடவே வந்தது.

இலங்கையின் காவல் பொறுப்பை ஏற்றிருக்கும் ராணுவம், கொழும்பில் இருந்த இரண்டாவது நாளில் அதன் இருப்பை என்னிடம் உணர்த்தியது. முதல் இரண்டு நாட்களில் எழுத்தாளர் முஸ்டீன் கடைவீதிக்கும் ஜாமியா நளீமியாவுக்கும் அழைத்துச் சென்றார். அவரது உடலில் இசுலாமிய அடையாளத்தைப் பார்க்க முடியாது. உடையிலும் அவர் அதனைக் கொண்டிருப்பதில்லை. அத்தோடு அவரிடம் அரசுத்துறை ஊழியர் என்ற அடையாள அட்டை இருக்கும். எனது தாடியும் அதை வடிவமைத்த முறையும் இசுலாமிய அடையாளத்தோடு பொருத்திப் பார்க்கக் கூடியது. அப்படிப் பொருத்திப் பார்த்து விசாரிக்கவும் செய்தது காவல் படை. இசுலாமியப் பெண்ணின் ஆடை அடையாளம் கொண்டது அவரது உடல். இலங்கையின் பெரும் அதிகாரிகளும், அமைச்சர்களும் குடியிருக்கும் அந்தச் சாலையில் நிறுத்தப்பெற்ற நாங்கள் அடையாள அட்டை கோரப்பெற்றோம். எப்போதும் கடவுச்சீட்டை எடுத்துக் கொண்டுதான் அயல்நாடுகளின் தெருக்களில் இறங்கவேண்டும் என்பதை எனது முதல் பயணத்திலேயே அறிந்தவன்தான். ஆனால் இது காலை நடைதானே; நீண்ட தூரம் போகப் போவதில்லை என்று எடுத்துப் போகவில்லை. ஷாமிலாவிடமும் அவரது அடையாள அட்டை இல்லை

நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர் என்றேன். அதற்கான பழைய அடையாள அட்டையைக் காட்டினேன். அதோடு சேர்ந்து இந்திய அரசு வழங்கிய ஆதார் அட்டையும் எனது பணப்பொதியில் இருந்தது.இந்திய அரசின் உயர்ந்த மதிப்புடைய பணத்தாள்களும் இருந்தன. அவற்றைப் பார்த்த ராணுவ வீரரின் இதழ்கள் விரிந்தன. பெயரை வாசித்தார். ராமசாமி என்று சத்தமாக உச்சரித்தார். உடனே பக்கத்தில் நிற்கும் ஷாமிலாவின் பக்கம் கண்கள் திரும்பின. நான் எனது மாணவி என்றேன். அந்தக்காலை நடையில் ஒரு மாணவியைப் போலவே பலவற்றையும் கேட்டுக்கொண்டே வந்தார் ஷாமிலா. நானும் சொல்லிக்கொண்டே நடந்தேன்.

கொஞ்சம் தயக்கத்துடன் அனுமதித்து விட்டார். ராணுவ வீரரைத் தாண்டியதும், ‘ அவர் குழம்பிப் போயிருப்பார் ‘ என்றார் ஷாமிலா. உங்கள் பெயர் ராமசாமி. நானோ முழுவதும் இசுலாமிய அடையாளத்தோடு இருக்கும் பெண். குழப்பம் வரத்தானே செய்யும் என்று சொல்லிச் சிரித்தார். எனது தாடிக்கு இசுலாமிய அடையாளம் உண்டு என்பதை திருநெல்வேலியிலும் உணர்ந்துள்ளேன். டிசம்பர் 6, பாப்ரி மஜ்ஜித் இடிப்பு நினைவு நாட்களின் போது பாளையங் கோட்டையில் இரண்டு தடவை எனது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டது. எனக்கு முன்னால் வழுவழுப்பான தாடையுடன் நண்பர் நிறுத்தப்படாமல் அனுப்பப்பட்டார். எனது வடிவமைக்கப்பட்ட தாடிக்காக நிறுத்தப்பட்டேன். கையில் அடையாள அட்டை -பல்கலைக்கழகம் வழங்கிய பணியாளர் அடையாள அட்டையே காப்பாற்றியது.

கொழும்பில் 2019, ஈஸ்டர் நாள் தேவாலய வெடிப்பின்போது என் காதில் படவேண்டுமெனச் சத்தமாக ‘பாய்மார்’கள் மீது கோபப்பட்ட சொற்களைச் சொல்லிவிட்டு வேளாங்கண்ணி ஆலயத்திற்குள் நுழைந்த கிறித்தவரின் பெயர் ராபர்ட்டாகவோ, சேவியராகவோ இருக்கலாம். இணைந்து வாழலாம்; உலகமனிதர்களாக வாழ்வோம் என்று தாராளவாதச் சட்டங்களும் நடவடிக்கைகளும் போதித்தாலும் மதம், இனம், மொழி போன்ற அடையாளங்களால் ஏற்படுத்திக் கொள்ளும் பிளவுகளையும் வேறுபாடுகளையும் திரும்பத் திரும்ப நினைவூட்டுவதை உலகம் கைவிடப்போவதில்லை. அரசுகள் இவற்றின் பால் காட்டும் அச்சங்களால் தான் தங்கள் இருப்பைக் கட்டமைக்கின்றன.

ஆறுமணிக்குத் தொடங்கிய காலைநடை நான்கு மணி நேரம் நீண்டபோது கால்கள் வலியை உணரத் தொடங்கின. இனி நடக்க முடியாது என்ற நிலையில் ஆட்டோ ஒன்றைப் பிடித்து வீடுபோய்ச் சேர்ந்தோம். எங்கள் ஆட்டோவிற்கு முன்னால் இன்னொரு ஆட்டோவும் நின்றது. தனது காரில் அழைத்துப் போய் ஊர் சுற்றிக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்த ஷகிலாவும் ஒரு வாடகை ஆட்டோவில் தான் வந்திருந்தார். காரில் பழுது ஏற்பட்டிருப்பதால் இன்று பயன்பாட்டுக்கு உதவாத நிலை என்றார். ஆட்டோவிலேயே போகலாம். ஆனால் நாம் போட்ட திட்டப்படியான இடங்களுக்கு போக இயலாது என்றார்.

கார் இல்லாத நிலையில் அந்த இடங்களுக்குப் போய்த் திரும்ப இயலாது என்ற நிலையில் அந்த ஊர் சுற்றலும் நின்றுபோனது. மதியம்வரை ஷகிலாவின் ஆன்மீக ஈடுபாடு, களப்பணிகள், செயல்பாடுகள் எனக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு மதிய உணவுக்குப் பின் அனுப்பிவைத்தோம். முஸ்டீனும் ஷகிலாவும் விவாதித்த ஆன்மீக வாதங்களை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். எல்லா ஆன்மீக விவாதங்களும் பெரும்பாலும் இன்மையில் தொடங்கி, உலக வாழ்க்கையின் மீதான அதிருப்தியில் முடிகின்றன என்பது எனது புரிதல்.

மாலையில் திரும்பவும் ஒரு சிற்றுலா. முஸ்டீனுடன் ஆட்டோவில் ஏறிப் பயணித்தபோது சாரல் மழையும் கூடவே வந்தது. மழையின் வேகம் தாண்டிப் போய் இறங்கினோம். இரவின் இருட்டில் வெளிச்சம் போட்டுக்கொண்ட கட்ட டங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் முஸ்டீன் சொல்லிக் கொண்டே வந்தார். சீனா, ஜப்பான், கொரியா என த் தென்கிழக்காசிய நாடுகளோடு இந்தியாவும் போட்டிபோட்டுத் தலைநகரில் கட்டும் அடுக்குமாடிக் கட்டடங்களின் நோக்கங்கள் பற்றித் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பவர் முஸ்டீன். உள்நாட்டுப் போரின்போது புலிகளின் பிடிவாதமான போக்கால் இடம்பெயர்ந்த இசுலாமியர்களின் இழைப்பை யாழ்ப்பாணத்தமிழர்களின் கருணையின்மையின் அடையாளமாகக் கருதுபவர் அவர். சிங்களப்பேரினவாத அரசைவிடவும் - யாழ்ப்பாண இந்துக்களின் இசுலாமிய விரோதம் கூடுதல் வன்மம் கொண்டது என்பது அவரது நிலைபாடு. அந்நிலைபாட்டின் காரணமாக ராஜபக்‌ஷே குடும்பத்தினரின் ஆட்சியை ஏற்றுக்கொள்வதோடு, இந்த அரசிடம் பேச்சு வார்த்தை நட த்த முடியும் என நம்புகிறவர் என்பதும் இந்த மூன்று நாளில் அவரைப் பற்றிய எனது புரிதல். அத்தோடு இந்தியாவும் இலங்கையின் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பும் முயற்சியில் இருப்பதைப் புரிந்து வைத்திருப்பவர். அவரது வாதங்கள் இலங்கையில் தமிழ் பேசும் மனிதர்களில் தனித்துவமான தரப்பு என்பதை அவரோடு பேசும்போது புரிந்துகொள்ளமுடியும். இந்தப் புரிதலோடு அவரது ஹராங்குட்டி கதைத் தொகுதியை வாசிக்க நினைத்து நாடு திரும்பியபின் வாசித்தேன்.

அவரும் நானும் பேசிக்கொண்டே நடைநடையாய் நடந்து சில மணி நேரங்கள்; நாலைந்து கிலோமீட்டர்கள். ஓடிஓடி நின்று நகரும்வாகனங்களில் சில மணி நேரங்கள்; நாற்பது ஐம்பது கிலோமீட்டர்கள் பார்த்தபின் தோன்றியது, கொழும்பு நகரம் பெரிதாக மாறிவிட்டது என்று. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த இடங்களும் புதிதாகப் பார்க்கும் இடங்களும் மாற்றத்தைச் சொல்கின்றன. நடந்துள்ள மாற்றங்கள் ஆச்சரியமூட்டுகின்றன. சுத்தம் கூடியிருக்கிறது. வாகனங்கள் அதிகரித்திருக்கின்றன. கட்டடங்கள் நிமிர்ந்து எழுந்து உயர்ந்துள்ளன. உறுத்தாத வண்ணங்களில் ஆடைகள் அடைந்து ஆண்களும் பெண்களும் வேகமாகவே நகர்கிறார்கள்.

உலகமயத்தை ருசித்துப் பருகும் இன்பத்தை நகரங்கள் பெரும்போதையாக்கிப் பரப்புகின்றன. ஊற்றித்தரும் மதுக்கிண்ணங்களைப் புறங்கையால் மறுப்பவர்கள் வெளியேறிக் கொள்ளலாம். நகரங்கள் வேண்டாம் என்று சொல்வதில்லை. காலையில் தொடங்கும் பரபரப்பு அடங்கும் நேரங்களில் தொடங்குகின்றன சிந்தனைகள். கொழும்பு நகரில் அதுவரை பார்க்காத பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல நினைத்தார் முஸ்டீன். மழையின் வருகை அதனையும் குலைத்துவிட்டது. திரும்பவும் ஆட்டோவில் ஏறி ஒரு சுற்றுச் சுற்றுவிட்டு இரவு 9 மணிவாக்கில் வீடு திரும்பி அடுத்தநாள் பேராதனைக்குப் பேருந்தில் போகலாமா? ரயிலில் போகலாமா? என்று பேசிக்கொண்டிருந்தபோது பேராசிரியர் எம்.எ. நுஃமானிடமிருந்து தொலைபேசி. எங்கே தங்கியிருக்கிறேன்; மூன்றுநாட்கள் எப்படிக் கழிந்தன என்றெல்லாம் விசாரித்துவிட்டு, ‘மனைவியின் மருத்துவம் தொடர்பாகக் கொழும்பு வந்திருக்கிறேன். காலையில் கண்டிக்குத் திரும்புவேன். எனது காரிலேயே போவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதைத் திரும்பவும் காலையில் உறுதி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வைத்தார். அடுத்த நாள் பேரா. நுஃமானோடு காரில் போகலாம் என்ற நினைப்பிலேயே கொழும்புவில் இருந்த மூன்றாம் நாளும் முடிந்துவிட்ட து.

சென்ற முறை வந்த போது கொழும்பு நகரம் எனது பயணத்திட்டத்தில் முதன்மையாக இல்லை. இறங்குவதற்காகவும் ஏறுவதற்காகவுமான விமான நிலையம் இருக்கும் நகரம் என்ற அளவில்தான் திட்டமிட்டிருந்தேன். அத்தோடு அப்போது கொழும்புவில் நண்பர்களாகப் பெரிய எண்ணிக்கையில் ஒருவரும் இல்லை. ஜெயப்பிரகாச ஷர்மா என்றொரு மாணவ நண்பர் இருந்தார். புதுவைப் பல்கலைக்கழகத்தில் நாடகத்தில் முனைவர் பட்டம் செய்துவிட்டுச் சென்றவர். அவர் தான் திரும்பும்போது கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

15 நாட்கள் பயணக்களைப்போடு திரும்பி ஒரு மாலை நேரம் மட்டுமே கொழும்பில் இருந்ததால் பெரிதாக ஒன்றும் பார்க்கவில்லை. என்றாலும் ஷர்மா கொழும்புவில் தினக்குரலின் ஆசிரியர் பாரதி இராஜநாயகம் அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அவரைச் சந்திக்கும் முன்பு கேள்விப்பட்டதில்லை. ஒரு கையை இழந்திருந்த அவரோடு இரவு உணவுக்கு ஏற்பாடு செய்திருந்த சர்மா, அவரைப்பற்றிய முழு விவரங்களைச் சொல்வதற்குத் தயங்கினார் என்பது புரிந்தது. அந்தப் பயணத்தின் போது பலரும் பேசுவதில் தயக்கமும், வெளிப்படுத்திக்கொள்ளலாமா? வேண்டாமா? என்ற தடைகளும் இருந்தன. அதனைத் தாண்டித்தான் அந்தப் பயணம்   முடிந்தது.
அடுத்த நாள் காலையில் விமானம் ஏறுவதற்கு முன்பே அத்தியா என்னும் புல்புல் இசபெல்லா விமான நிலையம் வந்து நினைவுப்பரிசொன்றை அளித்துவிட்டுத் திரும்பினாள் என்பது பசுமையாக நினைவில் இருந்தது. இந்த முறை நான் போனபோது அவள் கொழும்புவில் இல்லை. ஷர்மா திரும்பவும் கொழும்புவிற்கு வரும்போது வந்து பார்ப்பேன் எனச் சொல்லியிருந்ததால் இப்போது வரவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்