இணைய இதழ்களின் வருகைக்குப் பின்பு பெண்களின் உலகத்தைப் பெண்களே எழுதும் போக்கு அதிகமாகியுள்ளது. பலநேரங்களில் ஆண்களின் எழுத்துகளைவிடப் பெண்களின் பனுவல்களை அதிகம் தாங்கியதாக இணைய இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று காலை பதாகை இணைய இதழில் வந்த சுஜா செல்லப்பனின் காத்திருப்பு வாசிக்க முடிந்தது.சிறுகதையின் இலக்கணமாகச் சொன்னவர்கள் குறைந்தது இரண்டு நிகழ்வுகளாக இருக்கும் நிலையில் வாசகர்களுக்கு ஒன்றை உணர்த்திவிட முடியும் என நினைத்தார்கள். அந்த இலக்கணமெல்லாம் சொல்லப்பட்ட அந்தக் காலகட்டத்திலேயே காணாமல் போய்விட்டது. நிகழ்வுகளை எழுதாமல் உணர்வுகளை மட்டுமே வாசிப்பவர்களுக்குக் கடத்திய கதைகளைப் புதுமைப்பித்தனே எழுதித்தந்துள்ளார். உணர்வுகளைக் கூட எழுதாமல் ஒரு கேள்வியை மட்டுமே எழுப்பிவிட்டு ஒதுங்கிய கதைகள்கூடத் தமிழில் எழுதப்பட்டுள்ளன.
முல்லையின் உரிப்பொருளான இருத்தலின் நிமித்தங்களில் ஒன்று காத்திருப்பு. வந்துவிடுவான் என்று உணர்ந்துகொண்ட நிலையில் வரும்வரை ஆற்றாதிருக்கும் மனதின் ஊசலாட்டங்களாகச் செவ்வியல் கவிதைகளில் வாசிக்கக் கிடைக்கும் ஒன்று. அதன் நிகழ்கால வடிவமாகக் காத்திருப்பைப் பலரும் எழுதியிருக்கின்றனர். சுஜா செல்லப்பனின் காத்திருப்பு என்ற கதை குறிப்பிட்ட இடத்தால் ஒருத்தியின் காத்திருப்பில் உருவாகும் - சந்திக்கும் ஒருகேள்வியின் தொடர்ச்சியாக உருவாகும் மனவோட்டத்தை எழுதிக்காட்டியிருக்கிறது. ஒரு மெட்ரோ ஸ்டேசனின் அண்மையில் இருக்கும் ஒரு ஒதுக்குப்புறத்தில் தனித்து நிற்கும் பெண்ணொருத்தியிடம் எந்தவிதத் தயக்கமுமின்றி இப்படியொரு கேள்வியைக் கேட்பானா? என்ற ஐயம் தோன்றியபோதும், கேட்டபின் உருவாகும் மனவோட்டங்களும் உடல் மாற்றங்களும் மட்டுமே முதன்மையாகச் சொல்லவேண்டியவை என்று முடிவுசெய்துவிட்டு எழுதிய கதையாக அமைந்துள்ளது.
அந்தக் கேள்வியைக் கேட்கும் சூழலை இப்படி எழுதிக்காட்டுகிறார்:
இந்த ஊரில் பெரும்பாலும் அந்நியர்களின் முதல் வாசகம் இதுவாகத்தான் இருக்கும் என்பதால் ‘ஆமா’ என்றபடியே யாரென்று பார்த்தாள். அவன் ஒருவிதத் தயக்கத்துடன் நெளிந்துகொண்டே ‘ரேட் எவ்வளவு?’ என்றான். எதன் ரேட் கேட்கிறான், அவன் கேட்பது என்னவென்று அவளுக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. எதைக் கேட்கிறான் என்றபடி யோசிக்கத் தொடங்கி, அந்தச் சிந்தனைப் பயணத்தின் பாதையிலேயே குபுக்கென்று வியர்க்கத் தொடங்கியிருந்தது. மின்னலோ, இடியோ, வாடைக்காற்றோ எந்த முகாந்திரமும் இன்றி அடைமழை பொழிந்தாற்போல் வியர்வை பெருகியிருந்தது. ஒருவாறு அவன் கேட்டதன் பொருள் விளங்கிக் கொள்வதற்குள் முகம் முழுதும் நனைந்துவிட்டது. வெள்ளை குர்தா முதுகோடு ஒட்டிக் கொண்டது. பெருகி வழியும் வியர்வையைத் துடைக்க முயலும்போதுதான் உடல் நடுக்கத்தை உணர்ந்தாள். கேட்கப்பட்டது கேள்வி என்றும் அதன் பதிலுக்கான காத்திருப்பும் உறைத்தது. என்ன பதில் சொல்வது? கோபமும் எரிச்சலுமாக வசைகளை வாய்க்குள் அரைத்துக்கொண்டே, அவன் நின்ற திசைக்கு எதிர்த்திசையில் திரும்பி நின்றுகொண்டாள்.
எதிர்பார்க்காத அந்தக் கேள்வியை எதிர்கொண்ட நிலையில் ஒரு பெண்ணின் உடலும் மனமும் படும் அவஸ்தையை - கோபத்தை அடக்கிய தகிப்பைத் தாங்கிய வெம்மையை முழுக்கதையாக்கித் தந்திருக்கிறார். அந்த வெம்மையும் தகிப்பும் சொல்லப்படுவதே முக்கியம் என நினைத்ததால், காத்திருக்கும் தியாவுக்கும் வரப்போகும் ரகுவுக்கும் என்னவகையான உறவு என்பதைக் கூடச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் இந்தக்கதை எழுப்ப நினைத்த உணர்வலைகள் வடிந்துபோகவும் வாய்ப்புண்டு. அதைத் தவிர்த்த நிலைகூட நுட்பமான வடிவச் செம்மைதான்.
இதுபோன்ற கேள்விகள் கேட்டநிலையில் தன்னிலை குழைந்து போகும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டால் அதிலிருந்து மீண்டு தன்னைத் தக்க வைக்கும் மனத்தைரியமும் உருவாகிவிடும். அந்தத் தைரியம் முதல் நிகழ்விலிருந்து விடுபட்டுச் சூழலுக்குள் நுழையும்போது நிகழும். அதையும் கதைக்குள் நிகழ்த்தியுள்ளார் சுஜா செல்லப்பன்.
திடீரென்று தனக்கான ரேட் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. எதை வைத்து முடிவு செய்யப்படும்? 35 வயது, ஐந்து வயது குழந்தைக்குத் தாய். இதெல்லாம் பார்த்துதான் ரேட் பேசுவார்களோ! தக்காளி கிலோ இரண்டு வெள்ளியில் இருந்து நான்கு வெள்ளிக்குள் என்பதுபோல் பொதுவான ஒரு ரேட் தெரிந்தால்தானே கூடுதல் குறைவு பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு. யார் ரேட் முடிவு செய்வார்கள்? தன்னைத் தொலைவில் இருந்து பார்க்கும் யாருக்கும் தானும் அந்தப் பெண்களில் ஒருத்தியாகத்தானே தெரிவாள்? எத்தனை பேர் தனக்கான ரேட்டை மனதிற்குள் மதிப்பிட்டிருப்பார்கள்? சிந்தனை எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டிருக்க, போனை உள்ளே வைக்க கைப்பையைத் திறக்கிறாள். பக்கச் சிறு அறையில் இருந்த லிப்ஸ்டிக் கண்ணில் படுகிறது. அந்த அடர்நிற லிப்ஸ்டிக்கை எடுத்து உதட்டில் பூசிவிட்டுக் கைப்பையை மூடுகிறாள். அக்கம்பக்கம் பார்த்தபடிக் காத்திருக்கத் தொடங்குகிறாள். போன் அடிக்கிறது. ரகுவாகத்தான் இருக்கும். வரட்டும், இந்தப் பக்கம்தானே வந்தாக வேண்டும். அதுவரைக்கும் காத்திருக்கலாமே.
கதையின் பின்பகுதியில் அந்த நிலையை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
[https://padhaakai.com/2020/10/12/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/]
---------------------------------------------------------------------------------------
நடப்பை எழுதும் எழுத்துகள்
===========================
தினசரிகளில் செய்திகளாக அறியப்பட்ட நிகழ்வுகளைப் புனைவுகளாக மாற்றுவதில் செலுத்தவேண்டிய கவனம் என்பதில் ஆசிரியரின் பார்வைக்கோணம் முதன்மையானது. புனைவாக்கப்படும் நிகழ்வுக்கு எழுத்தாளரின் சார்பு அந்தப் பார்வைக்கோணத்தை உருவாக்கும். அந்தச் சார்பு நடக்கக் கூடிய சாத்தியங்கள் அற்றதாகக் கூட இருக்கலாம். ஆனால் எழுதப்படும் முறையில் - எடுத்துரைப்பு முறையில் வாசகர்களுக்கு நம்பகத்தன்மையை உருவாக்கவேண்டும்.
பத்திரிகைச் செய்திகளை - நிகழ்கால நடப்புகளைப் புனைவாக மாற்றும் முயற்சிகள் என்ற வகையில் யாவரும்.காமில் வந்த இந்த இரண்டு கதைகளும் வாசிக்கப்படவேண்டிய கதைகள்:
1. சலனம் - நாச்சியாள்சுகந்தி
2. பிரார்த்தனை -நசீமா /யாவரும் ஜூன்.30
இவ்விரண்டு கதைகளில் நாச்சியாள் சுகந்தியின் பார்வைக்கோணம் அரசியல் சரித்தன்மையின் அடிப்படையில் வெளிப்படுகிறது. அந்த வகையில் முக்கியத்துவம் கொண்ட கதை என்றாலும் திருமண மேடை நிகழ்வுகளை எழுதும்போது நம்பகத் தன்மையை விட்டு விலகிச் செல்லும் விதமாக மாறிவிடுகிறது. குற்றவாளியைத் தண்டித்தல் என்ற நோக்கத்தைக் கதையின் போக்கில் நிகழ்த்தாமல், வலிந்து உருவாக்கிய முடிவால் ஏற்படுத்துகிறார். இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது
சட்டத்தின் பாதுகாப்பும் நம்பியிருந்த மனிதர்களின் அரவணப்பும் கிடைக்காது; கேள்விக்குள்ளாகிவிட்டது என்ற நிலையில் சாதாரண மனிதர்கள் தங்களின் இருப்பை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டுக் காத்திருப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? என்ற கேள்வியை வாசிப்பவர்களிடம் எழுப்பும் நசீமாவின் கதை நம்பகத்தன்மையை உருவாக்க முனைகிறது. அதே நேரத்தில் இந்தக் கதைக்கும் கூட அரசியல் சரித்தன்மையை உருவாக்கும் நோக்கத்தில் வேறொரு பார்வைக் கோணத்தைத் தரமுடியும். அதைச் செய்யாமல் தவிர்த்ததின் மூலம் நல்லதொரு கதையாக மாற்றியிருக்கிறார். கதையின் வெளி மற்றும் பாத்திரங்களின் இயங்குநிலையை விவரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய பகுதிகள் இருக்கின்றன. அதைச் செய்திருக்கும் நிலையில் கவனிக்கத்தக்க கதையாக மாறியிருக்கும்.
கருத்துகள்