தரம் உயர்த்துதலும் திறன்மிகு கல்விநிறுவனமாதலும்
நான் பணியாற்றிய திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் தேசிய தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) மதிப்பீட்டின்படி நான்கிற்கு 3.13 புள்ளிகள் பெற்று A - தரநிலையை அடைந்துது. இதற்கு முன்பு அதன் தரம் 'B'. இந்தத் தர உயர்வு ஒற்றைப்புள்ளி உயர்வு அல்ல. ஒரு தாவல். B என்ற தரநிலைக்கு அடுத்து B+, B++ என்று இரண்டு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் தாண்டி A -என்ற தரநிலைக்குத் தாவியுள்ளது.
முயற்சி திருவினை ஆக்கும் என்னும் அறவுரை தனிமனிதர்களின் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கான தூண்டுகோல். கடின உழைப்பு, தோல்வியில் துவளாமை, விடாப்பிடியான பயிற்சிகள் போன்றன தனிமனிதர்களின் வாழ்க்கைக்கான திறன்கள். அவைகளுக்குப் பின்னணியில் முயற்சி இருக்கிறது என்று நம்புவது மனித இயல்பு. இத்தகைய நம்பிக்கையை ஒரு நிறுவனம் கைக்கொள்ள முடியாது. குறிப்பாகச் சொல்வதானால், தனிமனிதர்களின் தர உயர்வுக்கும் நிறுவனங்களின் தர உயர்வுக்கும் பின்னணியில் ஒரேவிதமான இயங்கியல் இருப்பதில்லை என்றாலும் இரண்டுக்கும் பின்னணியில் தரமானது எனக் காட்டிக்கொள்ளும் உத்தி இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. எமது பல்கலைக்கழகம் தன்னைத் தரமானது எனக் காட்டிக்கொள்ளக் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் உழைப்பைச் செய்தது. அங்கே பணியாற்றும் ஆசிரியர்களும், நிர்வாகப் பணியாளர்களும், அவர்களை வழிநடத்திய துணைவேந்தர் அவர்களும் கூட்டாக இணைந்து விடாப்பிடியாக வேலைகளைச் செய்தார்கள்.
பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் அதனதன் அளவில் தன்னைத் தரப்படுத்திக்கொள்வதன் மூலம் பொதுத்தரநிலைக்கு உதவ முடியும் என்பதை உணர்ந்துகொள்ளும்படி பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஓராண்டுக்கு முன்பே தரப்படுத்துதலை அளவிடும் ஏழு வகைப்பாடுகளுக்கேற்ப முன்வைப்புகளும் சான்றுகளும் அனுப்பப்பட்டன. அதனை ஏற்றுக்கொண்டு தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழு வருகையை உறுதிசெய்தது. ஜூலை 18- 21 இல் வந்தது. இடையில் அளிக்கப்பட்ட தரவுகளின் உண்மைத்தன்மையை உறுதிசெய்யும் விதமாக மாணாக்கர்களிடம் இணையவழிச் சோதனைகளைச் செய்தது அந்தக் குழு.
தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் வருகைக்கு முன்பு இரண்டு மாதிரிக் குழுவின் பார்வைக்கு ஏற்பாடு செய்தார் துணைவேந்தர்.அக்குழுவின் பரிந்துரைப்படி மேலும் செய்யவேண்டிய பணிகள் கவனம் பெற்றன.அதிகம் கவனம் பெறவேண்டிய துறைகள், வேலைகள் கண்டறியப்பெற்றன. சிறப்பான துறைகளை மேலும் சிறப்பாக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. பொதுநிலைப்பணிகளான சாலைகள், வளாகப் பாதுகாப்பு, மாணவர்கள் நலன் சார்ந்த மருத்துவம், விடுதிகள், சுற்றுச்சூழல் கவனம், உதவித்தொகைகள், தகவல் தொடர்பில் தடையின்மை, விழிப்புணர்வூட்டல் போன்றன கூடுதல் கவனம் பெற்றன. இப்போது பல்கலைக்கழக வளாகம் தேர்ந்த கல்வி வளாகமாக - முழுமையை நோக்கி நகர்ந்துவிட்டது.
முதன்முதலில் வந்த குழுவின் அறிக்கை மற்றும் ஆலோசனையில் எங்கள் தமிழியல் துறையின் செயல்பாடுகளும் இருப்பும் அறிக்கை அளிப்பும் சிறந்ததாகக் கொண்டாடப்பட்டது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு நினைத்துக் கொள்கிறேன். அதன் தொடர்ச்சியாகத் துணைவேந்தரின் கவனம் தமிழியல் துறையின் பக்கம் திரும்பியது. மேலும் நிதி ஒதுக்கி நாங்கள் ஆவணப்படுத்தியிருந்த பண்பாட்டுக் காட்சியகத்தை விரிவாக்க உதவினார். நவீனக் கருவிகளை வாங்கும்படி வேண்டிக்கொண்டார். உள்ளரங்கக் காட்சியகமாக இருந்த பண்பாட்டு ஆவணக்காப்பகம் திறந்தவெளி காட்சியகமாக விரிக்கப்பட்டது. குழுவினரும் வந்து பார்வையிட்டுப் பாராட்டினர்.
தரப்படுத்துதல், தரத்தைத் தேர்வுசெய்தல், தரம் உயர்த்துதல், தரமானவற்றை விரும்புதல் என்ற சொல்லாடல்கள் ஒருவிதத்தில் உள்வாங்கும் சமூகப்போக்குக்கு எதிரானது. தரமானவை X தரமற்றவை என்ற இரட்டை எதிர்வில் தரமற்றவை கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்படும் என்பதும், காலப்போக்கில் காணாமல் போகும் என்பதும் அதன் இயங்கியல். நிகழ்கால அரசியல் பொருளியல் அடிப்படைகள் இதனையே விரும்புகின்றன; ஏற்றுக்கொண்டுவிட்டன. அதனைப் புரிந்து கொள்ளாத பொதுப்புத்தியும் அதனை நம்புகிறது; ஏற்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் தான் ஒவ்வொருவரின் இருப்பும் உறுதியாகிறது. ஒவ்வொரு நிறுவனமும் நிலைபெறுகிறது.
தேசிய அளவுப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முன்னேறும்போது அதன் பலனைத் துணைவேந்தரும் நிர்வாகமும் மட்டும் அனுபவிக்கப்போவதில்லை. துணைவேந்தருக்குப் பெருமையும் பாராட்டும் கிடைக்கும் என்பது உண்மைதான். அது அவரது அடுத்த தாவலுக்கு உதவும் என்பதும் உண்மை. ஆனால் அதையெல்லாம் தாண்டி பல்கலைக் கழகத்தின் இந்தத் தாவல் இங்கே பயின்று பட்டம் பெறுபவர்களுக்கு முதன்மையாகப் பயனளிக்கக் கூடியது. அவர்களது சான்றிதழில் இந்தக் குறியீடு இடம்பெறும். அதனாலேயே அவர்கள் பெறும் பட்டம் மதிப்புப்பெறும். அதன் வழியாக அவர்களின் வேலைவாய்ப்பும் பணி உயர்வும் சாத்தியமாகும். இங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஆய்வு வாய்ப்புகள் கிடைக்கும். அனுப்பப்படும் ஆய்வுத்திட்டங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யும், தொடங்கவும் தொடரவும் நிதி ஒதுக்கீடுகள் நடக்கும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை செய்யப்பட்ட நிதி முதலீட்டின் மூலமும் தொலைநோக்குப் பார்வையின் வழியாகவும் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளின் வழியாகவும் இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனமாகவும் தொழில் மற்றும் நுட்பவியல் ஆராய்ச்சிக்கான மையமாகவும் உருவாகியுள்ளது. இப்போதிருக்கும் கட்டமைப்புகளோடும் உலகத்தொடர்பு நிலையோடும் அண்ணா பல்கலைக்கழகம் உயராய்வு மற்றும் சிறப்புநிலை நிறுவனம் (Institute of Excellance ) தான். நாற்பது ஆண்டுகாலத் திராவிட இயக்க அரசியலின் அடையாளம் அது.
திராவிட இயக்க அரசியல் என்பது சமூகத்தின் பலதரப்பட்ட பொருளாதார அடுக்கில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பளிக்க இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றும் நடைமுறையைக் கொண்டது. தன்மையான வழிமுறை பிறப்பு அடிப்படையில் ஒதுக்கலும் விலக்குதலும் கொண்ட சமூக அமைப்பில் சமநிலையை உருவாக்க இடஒதுக்கீட்டைக் கருவியாகப் பயன்படுத்துவது. இரண்டாவது வழிமுறை போதிய வசதிகள் இல்லாத கிராமப்புற மனிதர்களின் வாரிசுகளை மையநீரோட்டக் கல்விக்குள் கொண்டுவந்து திறனும் தகுதியும் கொண்டவர்களாக மாற்றுவது. இவ்விரு வழிமுறையின் வழியாகச் சாதனைகள் நிகழ்ந்துள்ளன என்பதின் தனித்த அடையாளமுமாக இருப்பது அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். பிற மாநிலங்களை ஒப்பிடத் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் அதனை உறுதி செய்துள்ளது. நடைமுறைகளில் தவறுகள் நடக்கின்றன என்றபோதிலும் சாதனை செய்துள்ளது தமிழகம்.
இவ்விரு வழிமுறைகளைப் பின்பற்றாமல் - வாய்ப்புகளை ஏற்படுத்தித்தராமல் திறன் அடிப்படை, தரமதிப்பீடு போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் தேசியம் பேசுபவர்கள். தரமான - உயர் சிறப்பு நிறுவனங்களை உருவாக்கி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களை உள்ளடக்கும் வாய்ப்புகளை மறுதலிக்கும் தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் இந்திய மக்களை ஒரே தொகுதியாகப் பார்த்து வாய்ப்பு வழங்கிட நினைக்கிறார்கள். மக்களை மட்டுமல்ல கல்வி நிறுவனங்களைப் பட்டியலிடுவதிலும் அதே நடைமுறையைத்தான் பின்பற்றுகின்றன மைய அரசாங்கத்தின் கல்விக்கொள்கை அமைப்புகளான தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழுமம் (NCERT) பல்கலைக்கழக மானியக்குழு(UGC), அகில இந்திய தொழில் நுட்பக் குழுமம்(AICTE ), தேசியத் தரமதிப்பீட்டுக் குழுமம்( NACC) போன்றன.
உள்கட்டமைப்பை உருவாக்கவும் தரத்தை உயர்த்தவும் போதிய உதவிகளைச் செய்யாமல் தரப்படுத்துங்கள் என உத்தரவுகளை மட்டும் அனுப்புகின்றன. இந்த உத்தரவுகள் மூலம் தனியார் முதலாளியமும் மற்றும் பங்கு முதலாளியமும் வலுப்பெற்றுக் கல்விச் சாலைகளைக் கைப்பற்றும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அந்தப் போட்டியில் இறங்கித் தங்களைத் தக்கவைத்துக்கொள்ளமுடியாத கல்வி நிறுவனங்கள் காணாமல் போய்விடும். இப்போது பொறியியல் கல்லூரிகளில் குறைந்ததுபோல இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின்னால் கிராமப்புறக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறையும். கல்லூரிகள் கல்யாண மண்டபங்களாகவோ, கொண்டாட்ட விடுதிகளாகவோ மாறலாம்.
வாய்ப்புகளை உருவாக்கித் தராமல் அமைப்புகளையும் நிறுவனங்களையும் தனிமனிதர்களையும் தரவரிசைப்படுத்திப் பட்டியலிடுவது உள்வாங்கும் பொருளியல் நடவடிக்கைகள் ஆகாது. வரலாறு நெடுகிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மனிதர்களும் அமைப்புகளும் நிறுவனங்களும் மேலும் வாய்ப்புகள் வழங்காமல் ஒதுக்கப்படுவதற்கான ஓர் உத்தி. தமிழக அரசியலில் மையமாக இருக்கும் அரசியல் கட்சிகள் இந்த உத்தியை விரும்புவதில்லை. ஆனால் தேசியம் பேசும் கட்சிகளும் கொள்கை வகுப்பாளர்களும் அதையே தேசிய வளர்ச்சிக்கு முதன்மையான வழிமுறையாக நினைக்கிறார்கள்.
இந்தியா என்பது சாதிப்பிரிவுகள் அடிப்படையிலும் நிலவியல் பாகுபாடுகள் அடிப்படையிலும் பெருத்த வேறுபாடுகள் கொண்ட தேசம் என்பதைப் புரிந்துகொண்டு கொள்கைகள் வகுக்கப்படவேண்டும்; செயல்பாடுகள் அமையவேண்டும். இதைப் புரிந்துகொண்டாலும் தேசியம் பேசுகிறவர்கள் பின்பற்றப் போவதில்லை. ஏனென்றால் இருக்கும் வேறுபாடுகளைப் பெரிதாக்கி வளர்த்தெடுப்பதின் வழியாகவே உற்பத்தியும் வளர்ச்சியும் நடக்கும் என நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையாளர்கள் தோற்கடிக்கப்படும் நிலையில் தான் மாற்றுகள் உருவாகும்.
கருத்துகள்