பஸ்வான்: பங்கேற்பு அரசியலின் வகைமாதிரி

 

பங்கேற்பு அரசியலின் அதிகப்படியான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்

கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக இந்தியாவின் ஒன்றிய அரசில் பங்கேற்றுக் கொண்டிருந்தவர் திரு. ராம்விலாஸ் பஸ்வான். ஜனதா அரசு, வி.பி.சிங்கின் கூட்டணி அரசு, வாஜ்பாயியின் அரசு, தேவ கௌடாவின் அரசு, மன்மோகன் சிங்கின் அரசு, நரேந்திரமோடியின் அரசு என எல்லா அரசுகளிலும் அதிகாரத்துவம் கொண்ட அமைச்சராகவே இருந்தார்.
இந்திய ஒன்றியத்தில் எந்தவொரு நிகழ்விலும் முரணிலும் பாதிக்கப்படும் வாய்ப்புகளையே கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்குப் பங்கேற்பு அரசியல் வழியாகவே உரிமைகளையும் சலுகைகளையும் பெறமுடியும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாக அவரது 50 ஆண்டு கால அரசியலைக் குறித்து ஒரு குறிப்பைத் தரலாம். இந்த நம்பிக்கையின் அடையாளமாகவே அவர் இருந்தார். இந்த நேர்மறைக்குறிப்புக்கு மாற்றாக, அதிகாரப் பதவிகளில் இருக்கவேண்டும் என்பதற்காக நேரெதிரான கொள்கைகொண்ட கட்சிகளுடனும் ஆளுமைகளுடனும் அமைப்புகளுடனும் சமரசம் செய்துகொண்டவர்; அதிகாரத்தின் ருசியைக் கைவிடத் தயாரில்லாதவர் என்றும் எதிர்மறையாகவும் அவரை விமரிசிக்கலாம். புனிதம் - தீட்டு என்ற கருத்தியல் அடிப்படையில் வெளியேற்றும் அரசியலில் அதன் கதவுகளைத் தட்டித்தட்டித் திறந்து உள்ளே வசிக்கும் திறமையைக் கைக்கொண்டவர்.
விடுதலைப் போரில் ஈடுபட்ட பெயர்களையும் அரச அமைப்பின் பதவிகளில் இருப்பவர்களின் பெயர்களையும் தாண்டி வட இந்தியப் பெயர்களைத் தென்னிந்தியாவிற்கு அறிமுகம் செய்த பெரும் நிகழ்வாக அமைந்தது அவசரநிலை அறிமுகம். கல்லூரிப் படிப்பின் நுழைவில் இருந்த என்னைப் போன்ற மாணவர்களுக்கு அவசரநிலை அறிமுகமும் அதனை எதிர்த்துக் கைதான ஆளுமைகளும் இந்திய அரசியலின் மாற்று முகங்களாக வலம் வந்தார்கள். இந்திராவின் அவசரநிலையை எதிர்த்துக்குரல் எழுப்பி இரண்டாவது விடுதலைப்போர் என்ற முழக்கத்தோடு ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கம் கண்டபோது மற்ற மாநிலங்களைவிடக் கூடுதலான ஆதரவை வழங்கிய மாநிலம் பீகார். ஜெ.பி.க்கான ஆதரவுத்தளத்தைத் திரட்டியவர்களில் பலரும் அப்போது மாணவர்களாக இருந்தார்கள்.
இருபதுகளின் கடைசியிலும் முப்பதுகளின் மத்தியிலும் இருந்த இளையோர்கள் அவர்கள். அவசரநிலையின் விளைவுகளில் பேசப்பட்ட பெயர்களாக மாறியவர்கள் மூன்றுபேர். அந்த மூன்று பெயர்களைத் தவிர்த்து விட்டுக் கடந்த 50 ஆண்டுக்கால பீகார் அரசியலைப் பேசமுடியாது. பீகார் அரசியல் என்பது இந்திய ஒன்றிய அரசியலிலின் இன்னொரு முக்கிய மையம் என்பதால் இந்திய அரசியலிலும் அவர்களைத் தவிர்க்கமுடியாது. மக்கள் நலன் சார்ந்த அரசியலில் ஈடுபட்டுத் தலைவர்களாக மாறும் தனிநபர்கள் அதிகாரத்தை நோக்கி நகரும்போது என்னென்ன வீழ்ச்சிகளைச் சந்திக்கிறார்கள் என்பதற்கும் இந்த மூவரும் சாட்சிகள். அந்த மூன்று சாட்சிகளில் ஒருவராக இருந்த ராம்விலாஷ் பஸ்வான் மறைந்துவிட்டார். மற்ற இரண்டு சாட்சிகளான லல்லுவும் நிதிஷும் இன்னும் தங்கள் ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில்கூட இருவரின் ஆட்டங்களே எதிரெதிர் ஆட்டங்கள்.
திரு பஸ்வானோடு ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பொன்று 1990 களின் ஆரம்பத்தில் கிடைத்தது என்பது நினைத்துக் கொள்ளவேண்டிய ஒன்று. எழுத்தாளர் சிவகாமி தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புதிய கோடாங்கி என்ற மாத இதழைத் தொடங்கியபோது அதன் வெளியீட்டுவிழாவைச் சென்னை அண்ணாசாலையிலிருந்த ஒரு நட்சத்திர விடுதியில் நடத்தினார். அண்ணா அறிவாலய்த்திற்கு எதிரே இருந்த அந்த விடுதியின் பெயர் இப்போது மறந்துவிட்டது. முதல் இதழ் வெளிவந்து இரண்டாவது இதழ் தயாராகி இருந்த நேரம். திரு ராம்விலாஷ் பஸ்வானின் வருகையையொட்டி ஓர் அறிமுகக் கூட்டத்தை - வெளியீட்டு விழாவாக நடத்தலாம் எனத் திட்டமிட்டு முதல் நாள் தொலைபேசியில் பாண்டிச்சேரி நண்பர்களுக்குத் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருந்த ஒரு மழைநாளில் அதிகாலைப் பேருந்தைப் பிடித்துச் சென்னைக்குச் சென்று நனைந்த ஆடைகளோடு போனதும், போன இடத்தில் நீங்கள் தான் இன்றைய கூட்டத்திற்குத் தலைமைதாங்க வேண்டும் என்று சிவகாமி சொன்னதும் நினைவில் இருக்கிறது. என்னோடு நண்பர்கள் பிரதிபா ஜெயச்சந்திரன், மதியழகன் ஆகியோரும் வந்திருந்தார்கள். பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் என்று அறிமுகம் செய்தவுடன் அவர் எனது கரத்தைப் பற்றிக்கொண்டு பேசிய பேச்சுகளும் நினைவில் இருக்கின்றன. உயர்ந்து நினைவில் இருக்கும் பஸ்வானின் உருவம் எப்போதும் மறையப்போவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்