திரும்பத்திரும்ப சந்திரமுகி

 

 ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி – ஒரு சித்திரை முதல் நாளில் அரங்கிற்கு வந்தது.அதற்கிணையான விளம்பரங் களோடும் நடிக முக்கியத்துவத்தோடும்  கமல்ஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸும் விஜய் நடித்த சச்சினும் அதே நாளில் திரையரங்குகளுக்கு வந்தன. நடிகர்களை மையமிட்டுத் தெரிவுசெய்யும் எனது மனம் கமல், ரஜினி, விஜய் என்றே வரிசைப்படுத்தி முதலில் மும்பை எக்ஸ்பிரஸையும் இரண்டாவதாகச் சந்திரமுகியையும் கடைசியாகச் சச்சினையும் பார்த்தேன்.  மொழி, இனம், சமயம் என ஏதாவது ஒன்றால் தம்மையொரு தனித்த குழுவாகக் கருதும் கூட்டம், பண்பாட்டு அடையாளங்களை விழா நாட்களிலும் அந்நாட்களின் சிறப்பு  நிகழ்வுகளிலும்தான் தேடுகிறது. தமிழா்களின் முக்கிய விழா நிகழ்வுகளாகப் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்றன விளங்குகின்றன என்றாலும்   பொங்கல் திருநாளை மட்டுமே தமிழா்களின் விழா நாளாகக் கருதுகின்றனர். தமிழ் சினிமாக்காரா்களுக்கு இந்த வேறுபாடுகளெல்லாம் முக்கியமல்ல. அவா்களுக்குப் புதுப்படங்கள் வெளியிட விழா நாட்கள் வேண்டும் அவ்வளவுதான். ந்த ஆண்டு சித்திரை முதல் நாள் இந்த மூன்று படங்கள் வெளிவந்தன.  மூன்று படங்களில் திரும்பத்திரும்பப் பார்க்கும் படமாக சந்திரமுகி மட்டுமே இருந்துகொண்டே இருக்கிறது. இந்தக் கரோனோ காலத்திலேயே இரண்டு தடவை பார்த்துவிட்டேன். இதன் காரணங்கள் என்னவாக இருக்கும்?

மூன்றும் முக்கியமான படங்கள் எனத் தயாரிக்கத் தொடங்கியபோது நினைத்திருப்பார்களா? என்பது சந்தேகமே. ஆனால் அவை வெளியிடப்பட்ட போது அவ்வாறு முன்னிறுத்தப்பட்டன  . காரணம் மூன்றும் ஒரே நாளில் வெளியாகின என்பது தான். தமிழ் சினிமா உலகமும் சரி, அதனைப் பார்வையாளா்களிடம் கொண்டு போய்ச் சோ்க்கும் பொறுப்பைத் தங்களுடையதாகக் கருதும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களும் சரி, முக்கியமான படங்கள் எனக் கருதுவதற்கு வைத்திருக்கும் வரையறைகள் எப்பொழுதும் சினிமா சார்ந்ததாக இருப்பதில்லை. ஒரு படம், பார்வையாளனிடம் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தின் நோ்மறை அம்சங்களும் கலை மற்றும் தொழில் நுட்பங்கள் சார்ந்து இயக்குநா் மேற்கொள்ளும் சோதனை முயற்சிகளும் வரையறைகளை உருவாக்குவதில் பங்காற்றுவதேயில்லை. பல நேரங்களில் பட்ஜெட்டும் ஈட்டப்போகும் லாபமும் மட்டுமே வரையறைகளை உருவாக்குகின்றன. சில நேரங்களில் இயக்குநா்களின் முன் அனுபவம் மற்றும் தோ்ச்சி போன்றன மையப்படுத்தப்படுவதுண்டு. ஆனால்   நடிகா்களின் நட்சத்திரத் தகுதி எப்போதும் முதன்மையாக இருக்கின்றது.   சினிமா சார்ந்த எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நட்சத்திர நடிகர்களை மையப்படுத்தியே வரையறைகளும் படங்களைப் பற்றிய கருத்துக்களும் உருவாக்கப்படுகின்றன. அந்த மூன்று படங்கள் வந்தபோதும் அதுதான் நடந்தது.

நாக்கு என்னும் விளம்பரம்

மூன்று படங்களையும் பார்ப்பதற்கு முன்னால் தற்செயலாக அந்த உரையாடல் என் காதில் விழுந்தது. காலை நடைக்குப்பின் அருந்தும் காபியினூடாக விழும் அரசியல் பல்வகைக்கருத்துத் தெறிப்புப்போலக் காதில் விழுந்தது.“மும்பை எக்ஸ்பிரஸ் வழக்கமான கமல் படம் இல்லை; அதனால் ஓடாது. சந்திரமுகியும் வழக்கமான ரஜினி படம் அல்ல; அதனால் அதுவும் ஓடாது. ஆனால் சச்சின் வழக்கமான விஜய் படம். அதனால் நிச்சயம் நூறுநாள் தான். இப்படிச் சொன்னவா் விஜய் ரசிகராகக்கூட இருக்கலாம். தான் ரசிக்கும் நடிகனின் படம் நூறுநாள் ஓட வேண்டும் என்ற விருப்பத்தில் அவா் சொல்லியிருக்கலாம். இந்த மனோபாவம் ஒரு நடிகனின் பரம ரசிகனுக்கு மட்டுமே இருக்கிறது என்று நினைக்க வேண்டியதில்லை. கமல் படத்திற்கும், ரஜினி படத்திற்கும் விமரிசனக் குறிப்புக்கள் எழுதிய பெரும் பத்திரிகைகள் வழக்கமான படங்கள் அல்ல என்ற தொனியை உருவாக்க நினைப்பவைதான்.  நட்சத்திர நடிகர்களின் எல்லாப் படங்களும் நூறு நாட்கள் ஓட வேண்டும். அதைத் தயாரித்த தயாரிப்பாளா் அதிகம் லாபம் ஈட்ட வேண்டும் என்ற விருப்பம் ஊடகங்களுக்கு மட்டுமல்ல; ஊடகங்களில் பணியாற்றும் நபா்களுக்குங்கூட இருக்கின்றன. அந்தப் படங்களைக் காசு கொடுத்துப் பார்க்கும் பார்வையாளனுக்கு அதனால் என்ன கிடைக்கும் என்கிற அக்கறைகள் எதுவுமே இங்கு இல்லை. மையநீரோட்டப் பாதை என்பது இவ்வாறு தான் இருக்கிறது.   நுகர்வோரை மையமிடாது உற்பத்தியாளர்களை மையமிட்ட பார்வை. வணிக நோக்கமே முதன்மையானது என நினைக்கும் இந்தப் பார்வையின் அமைவுக்குள் தான் ஒவ்வொருவரும் இயங்குகிறார்கள்.

 விஜயின் சச்சின்

விஜய் நடித்த ’சச்சின்’ வழக்கமான படம் என்று அந்த ரசிகா் சொன்னதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று சொல்வதற்குத் தீவிரமான ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. குறைந்தது ஐந்து பாடல்கள்; மூன்று சண்டைக் காட்சிகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். எல்லாப் படங்களிலும் நண்பா்கள் பட்டாளங்களுடன் இருப்பதாக அமையும் அவரது படங்களின் கதையாக ஏதாவது இருக்கிறதா? என்று தேடினால் சில சூத்திரங்கள் உள்ளன. முன்பாதி ரகசியத்தைக் கடைசியில் உடைத்துக் காதலித்தவளின் இரக்கத்தை அல்லது அனுதாபத்தைப் பெறுவது ஒரு சூத்திரம். பெரிய/ பணக்கார வீட்டு இளைஞனாக இருப்பார்; ஆனால் முதலில் அது வெளிப்படாது. எந்தவிதப் பொறுப்பும் இல்லாத, ஆனால் எல்லாருக்கும் உதவக்கூடிய பாத்திரமாக அறிமுகமாகி நாயகியுடன் மோதல் அல்லது சந்திப்பு நடக்கும். பிறகு காதல் தோல்வி அடையப்போகிறது என்ற நிலையில் அவரது உண்மையான குடும்பப் பின்னணி தெரியவரும். உதாசீனப்படுத்திய நாயகி திரும்பவும் நாயகனைத் தேடி வருவார்; நாடி வருவார். ’சச்சின்’ படத்தில் போடப்பட்டுள்ள இதே சூத்திரம் இதற்கு முன்னும் பல படங்களின் கதைப் பின்னலாக இருந்த ஒன்றுதான்.

இதைப் போல இன்னொரு சூத்திரம் ’கோபம் கொண்ட இளைஞனின் விளையாட்டுத்தனங்களும் பொறுப்புணா்வும்’ என்பதாக அந்தச் சூத்திரத்தைச் சொல்லலாம். ’பகவதி’, ’யூத்’, ’திருமலை’, ’கில்லி’, ’திருப்பாச்சி’ எனத் தொடா்ந்த அவரது படங்களின் சூத்திரம் இதுதான். நாயகனுக்கு நண்பா்கள் பட்டாளம் உண்டு; பெரிய அளவு பொறுப்புகள் கிடையாது; விளையாட்டுத்தனமாக எதையும் செய்வான்; ஆனால் சவால் என்று வந்து விட்டால் அதன் கடைசி வரைக்கும் மோதிப் பார்த்துவிடுவான். இந்தக்கதைப் பின்னலில் அம்மா அல்லது தங்கை செண்டிமெண்டும் சோ்ந்துகொள்ள வெற்றிப்படச் சூத்திரம் தயாராகிவிடுகிறது. கதைக்கு அவரது இயக்குநர்கள் யோசிக்கிறார்கள் என்பது கூட உண்மையாக இருக்கலாம். ஆனால் பாடல் காட்சிகளுக்கு எதுவும் புதிதாக யோசிப்பதே இல்லை என்றே சொல்ல வேண்டும். எந்தப் படத்திலும் இடம்பெறத்தக்கதாகவே பாடல்களும் அவற்றிற்கான காட்சிகளும் நடனக் கோர்வைகளும் அமைக்கப்படுகின்றன.

அவரது படத்தில் மொத்தப் பாடல்கள் ஐந்து இடம் பெறுகிறதென்றால், அவற்றில் நான்கு பாடல்கள் கூட்டமாகத் தெருவில் அல்லது பொது இடம் ஒன்றில் ஆடும் கானா அல்லது குத்துப் பாடல்கள். அந்த நான்கில் ஒன்றுக்கு கதாநாயகியாய நடிக்கும் நடிகையுடன் அல்லாமல் தனியாக அழைக்கப்படும் நடிகையுடன் போடும் ஆட்டம். மற்ற பாடல்களில் அதே மாதிரி நாயகியாக நடிக்கும் நடிகையுடன் ஆட்டம். தாளம், தாளத்திற்கேற்ப கால், கைகள் திருப்புதல் என எல்லாவற்றிலும் வழக்கமான பாணியையே கடைப்பிடிக்கும் விஜய், வசனம் பேசி நடிக்கும்போதுகூடப் பெரிதாக முகபாவங்கள் காட்ட மெனக்கிடுவதில்லை. அப்பாவியாக முகத்தை வைத்துக் கொள்வது அல்லது ஆக்ரோசமாகச் சீறுவது என்பதே அவரது அதிகபட்ச நடிப்பு. அதையும்கூடக் காமிராவின் கோணங்களே அவருக்கு உருவாக்கித் தருகின்றன. அப்பாவியாகக் காட்ட நடுத்தரத் தூரமும் (Middle Shot), ஆக்ரோசத்திற்கு மிக அருகாமை (Close Up)யும் (கண்கள் மட்டும்) பயன்படுத்தப்படுகின்றன. எல்லாப் படங்களிலுமே இருபதுகளில் இருக்கின்ற இளைஞனாக வழக்கமான பாணிகளையே பின்பற்றும் விஜய்யின் படங்களைத் தமிழ் ரசிகா்கள் பார்ப்பதற்குச் சிறப்பான காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சந்தைக்கு வரும் புதிய பொருள் ஒன்றை வாங்கிப் பரிசோதனை செய்து பார்ப்பதற்குப் பதிலாக ஏற்கெனவே பயன்படுத்திய பொருட்களையே பயன்படுத்திப் பார்க்கும் மனோபாவத்தைத்தான் விஜய் படம் பார்க்கிறவர்கள் வெளிப்படுத்தும் காரணமாகச் சொல்ல வேண்டும். அவரது படம் என்றால் இதெல்லாம் உத்தரவாதம் என்று உருவாக்கிவிடும் நிலையில், தீவிர எதிர்பார்ப்பின்றி மூன்று மணி நேரத்தைக் கழிக்கலாம் என்ற நோக்கத்துடன் படம் பார்ப்பவா்களுக்கு அது குந்தகம் ஏற்படுத்துவதில்லை. இதே மாதிரியான மனநிலையுடன் வரும் பார்வையாளா்களுக்கு அத்தகைய உத்தரவாதத்தை விஜய்க்கு முன்பு தந்தவா் ரஜினிகாந்த். அவரது பாணியில் சிற்சில மாற்றங்களுடன் இப்பொழுது வெற்றி நடைபோடுபவா் விஜய்.

தடுமாறிய மாற்றுகள்

கமல்ஹாசனின் ’மும்பை எக்ஸ்பிரஸ்’ அவரது நகைச்சுவைப் படச் சட்டகம்தான் என்றாலும் சில வித்தியாசங்களைக் கொண்ட படம். எல்லாப் பாத்திரங்களுமே நடைமுறையில் நம்பப்படும் ஒழுக்க விதிகளின்படி மோசமானவா்கள். அசலான நல்ல கதாபாத்திரம் என்று ஒரு பாத்திரத்தையும் படத்தில் இடம்பெறச் செய்யவில்லை என்பது ஒரு வித்தியாசம். இன்னொருவனை ஏறெடுத்துப் பார்த்திராத நாயகியாக ஒரு கதாபாத்திரம் இல்லை என்பது மற்றொரு வித்தியாசம். கமல்ஹாசனுடன் கடைசியில் சேரும் அந்தப் பெண்கூட ஒரு பாரில் நடனக்காரி; தன் மகனுக்கீடாகப் பணத்தையம் விரும்புபவள். பொருளாதார நிலையில் அடித்தளத்தில் இருக்கும் உதிரிகளும் திருடா்களும் மட்டுமே கெட்டவா்கள்; மற்றவா்கள் நல்லவர்கள் என்பதாகப் படம் அமைக்கப்படவில்லை. போலீஸ்காரா்கள், அதிகாரிகள், பணக்காரா்கள் என அனைவருமே அவரவா் அளவில் தெரிந்தே தவறுகளைச் செய்துவிட்டுச் சமாளிக்கும் வேலையிலும் ஈடுபடுகிறார்கள் என்பதைப் படம் சொல்ல முயல்கிறது. செயற்கையான கதைப் பின்னலின் வழியே இன்றைய உலகம் பணத்தின் பின்னாலும் அதிகார அடையாளங்களின் பின்னாலும் தனது மனித அடையாளங்களை – உழைத்து வாழ வேண்டும் என்ற அறம்சார்ந்த மனித அடையாளத்தைத் தொலைத்துக்கொண்டெ வருகிறது என்பதைச் சொல்ல விரும்பிய படம். ஆனால் சொல்லும் முறைமையைச் சரியாகச் செய்யத் தவறியதால் பார்வையாளர்களால் ஒதுக்கப்பட்ட படம்.

சொல்ல விரும்பிய கருத்துநிலை தீவிரமான மாற்றுக்கருத்துநிலை. அதனால் எளிதாகச் சொல்லக்கூடிய நகைச்சுவை பாணியைக் கைக்கொண்டு சொல்லலாம் என எடுத்த முடிவு கைகூடவில்லை.   இந்தச் செய்தியைத் தெளிவான கதைப் பின்னலுடன், பலவித உணா்வுகள் நிரம்பிய காத்திரமான படமாக எடுத்தால் பார்வையாளா்கள் நிராகரித்து விடுார்கள் எனக் கமல்ஹாசன் நினைத்திருக்கக்கூடும். அவா் அப்படி நினைத்திருந்தால் முழுமையும் தவறு எனச் சொல்லவும் முடியாது.   இதற்கு உதாரணங்களாக அவரது படங்களே இருந்துள்ளன.குருதிப்புன’லும்  ஹேராமும் ஏற்கப்படாத படங்களுக்கு உதாரணங்கள் என்றால், நீரோட்டமான கதை சொல்லல் வழியாகப் பார்வையாளர்களைச் சென்று சேர்ந்த படங்களாகத்  தேவா் மக’ னும்  மகாநதி’யும் இருக்கின்றன. இந்த வரிசையில் பேசப்பட்டிருக்க வேண்டிய படமாக மும்பை எக்ஸ்பிரஸும் அமைந்திருக்க க்கூடும். ஆனால் கையாண்ட சொல்முறையால் மட்டுமல்லாமல் பின்பற்றிய தொழில்நுட்பப் புதுமையாலும் - அந்தப் பட த்தில் தான் டிஜிட்டல் காமிராவை முதன் முறையாகப் பயன்படுத்தினார் - பார்க்கப்படாத படமாக நின்றுபோனது.

ரஜினியாக மாறிய ஜோதிகா

விஜய், ரஜினியின் சூத்திரத்தை எடுத்துக்கொண்டுவிட்டார் என்று சொல்வதால் ரஜினி அவருடைய சூத்திரங்களைக் கைவிட்டுவிட்டார் என்று நினைத்துவிட வேண்டியதில்லை. ’பாட்ஷா’ தொடங்கி ’பாபா’ வரை பின்பற்றிய ரகசியம் – ரகசியம் வெளிப்பாடு அல்லது சாது x முரடன் என்ற சூத்திரம் ’பாபா’ வில் எடுபடாமல் போனதில் கொஞ்சம் ஆடிப்போனார் ரஜினி. அதனால் ’சந்திரமுகி’ யில் ஏற்கெனவே கைவசம் இருந்த மற்றொரு சூத்திரத்திற்குள் நுழைந்து விட்டார். தனது கதாபாத்திரத்துக்குச் சமமாக ஒரு பெண் பாத்திரத்தை உருவாக்கி, அப்பாத்திரம் தன்னை விரும்ப, தான் வேறொரு பெண்ணை விரும்புவதான கட்டமைப்புச் சூத்திரம் இது.

 படையப்பா’வில் வெற்றிக்கனியைத் தந்த அந்தச் சூத்திரத்தில் ரஜினிக்கீடாகக் கலக்கியவா் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன். ’சந்திரமுகி’ யில் ரஜினிகாந்தின் இடத்தையே கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் நடித்துள்ளவா் நடிகை ஜோதிகா. ’படையப்பா’ விலும் சரி, ’சந்திரமுகி’ யிலும் சரி ரஜினிக்குச் சமமான இடத்தைக் கதாபாத்திர உருவாக்கத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பிலும் அந்தப் பாத்திரத்தை ஏற்ற நடிகைகளுக்கு வழங்கியுள்ளனா் என்றே கூறலாம். தொடா்ந்து தனது படங்களில் ஆணாதிக்க மனநிலை வெளிப்படும் வசனங்களைப் பேசி, ஒழுக்கமான பெண்களுக்கான வரையறைகளைத் தந்து கொண்டிருப்பவா் ரஜினிகாந்த். அவருக்கீடாக – அவரையே துச்சமாகப் பார்த்துப் பேசக் கூடிய கதாபாத்திரங்களைக் கொண்ட ’படையப்பா’ வும் ’சந்திரமுகி’ யும் பெண்களுக்குப் பிடித்தமான படங்களாக இருக்கின்றன என்பது விநோத முரண்தான். ஒருவேளை ரஜினியின் உபதேசங்களுக்கெதிரான மனநிலையை வெளிப்படுத்தும் விதமாகப் பெண்மையப் படங்களையும் பார்த்து வைக்கிறார்களே என்னவோ……? உறுதியாக எதையும் சொல்வதற்கில்லை.

சந்திரமுகி’ படத்தின் கடைசி அரைமணி நேரக்கதைப் பின்னலும், சந்திரமுகியின் கதாபாத்திரமும் அதை ஏற்று நடித்த ஜோதிகாவின் நடிப்பும் மட்டுமே வழக்கமா ரஜினி படம் அல்ல என்று சொல்ல வைப்பவை. ஆனால் அதுவரை பார்வையாளா்களுக்கு நகைச்சுவைக் கோர்வைகளை வடிவேலுவுடன் வழங்குவது, ஆட்டம், பாட்டு, அதன் வழியே தரப்படும் களியாட்டம், வாழ்க்கை பற்றிய கோட்பாடு, குழந்தைகளுக்கான வேடிக்கை அம்சங்கள் என எல்லாமும் அசல் ரஜினி படம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பேய் பிடித்த பெண், அவளைப் பிடித்த பேயை விரட்டும் உளவியல் மருத்துவன் என்ற எதிர்வுடன், உருவாக்கப்பட்ட வகையில் தான் ரஜினிகாந்தின் பாத்திரம் படத்தின் மையப்பாத்திரம். படத்தில் இடம்பெறும் நடிப்புக்காட்சிகளின் அளவு என்று பார்க்கும்போது ரஜினிக்கு இணையாக உருவாக்கப்பெற்ற பாத்திரமாகவே நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாத்திரம் உருவாக்கப்பெற்றிருக்கிறது. திரையில் வடிவேலு தோன்றும் ஒவ்வொரு காட்சித்துணுக்கும் சிரிப்பலைகளை உருவாக்கியிருந்தன. அவரே தனியாகவும் நாசர், பிரபு, நயன்தாரா என அதில் நடித்திருக்கும் ஒவ்வொருவரோடும் இணைந்தும் வரும் காட்சிகளைக் கணக்கிட்டால் வடிவேலுவே அதிக இடங்களிலும் அதிக நேரத்திலும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார்.

சந்திரமுகியில் வெளிப்பட்ட ஜோதிகாவின் நடிப்பும் அதன் தனித்திறன்களும் இன்று வரை நீள்கின்றன. அவருக்கான கதாபாத்திரத்தை உருவாக்கி அவரது தோளில் மொத்தப் படத்தையும் வைத்துவிட்டால், ஏற்றுத் தாங்கும் நடிகையாக உருமாறிய தொடக்கம் சந்திரமுகி. அதன் பலன்கள் அவருக்கு பொம்பளை ரஜினி என்ற அடையாளத்தைக்கூட உருவாக்கித் தந்துவிட்டது. சமூகத்திற்குத் தேவையான கருத்து என நினைக்கும் இயக்குநர்கள், சமூக விரோதக் கருத்துகளைக் கூட அவரைக் கொண்டு பேசவைக்கிறார்கள். காவல் துறை பற்றி, கல்வித்துறை பற்றியெல்லாம் ரஜினிகாந்தைவிடவும் கூடுதலாக ஜோதிகா ஏற்ற பாத்திரங்கள் பேசியிருக்கின்றன. அந்தப் பேச்சுகள் உருவாக்கும் பிம்பச் சிறையிலிருந்து நடிகையாக மட்டுமல்லாமல் தனி மனுசியாகவும் ஜோதிகா வெளியேற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படக்கூடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

பிக்பாஸ் -8. ஐம்பது நாட்களுக்குப் பின் ஒரு குறிப்பு

தங்கா்பச்சான்: சொல்ல விரும்பாத கதைகள்