சல்காவின் கதையைச் சொல்லும் ரைனா

 

பெயரையே தலைப்பாக வைத்து எழுதப்படும் இலக்கியப்பனுவல்கள், அந்தப் பெயருக்குரியவரின் பெருமைகளை அல்லது துயரங்களை விவரித்து நிலைப்படுத்தும் நோக்கம் கொண்டனவாக விரியும். தமிழின் இராமவதாரம் என்னும் இராமாயணம் நல்ல உதாரணம். உலகப்புகழ்பெற்ற நாடகாசிரியர் சேக்ஸ்பியரின் லியர் அரசன், மேக்பத்,ஹாம்லட் போன்றனவும் பெயர்களைத் தலைப்பாக்கிய நாடகங்களே . அவையும் அந்தப் பெயர்களுக்குரியவரைக் குறித்த சொல்லாடல்களையே முதன்மைப்படுத்துவன . இதற்கு மாறானவைப் பெயரைத் தலைப்பாக்காது பெயருக்குரியவர்களின் குணத்தையோ இருப்பையோ தலைப்பாக்குபவை. இப்சனின் பொம்மைவீடு, மக்கள் பகைவன் போன்ற நாடகத்தலைப்புகள் இதற்கு உதாரணங்கள். தமிழின் ஆகக்கூடிய சிறப்புகளைக் கொண்ட சிலப்பதிகாரமும் அதற்கான உதாரணம்தான். இவை தனிமனிதர்களின் பாடுகளைப் பொதுநிலையில் விவாதிக்க விரும்புவன.

பெயர்த்தலைப்புகள் தொடக்கநிலை எழுத்துகளின் அடையாளம். எழுதியெழுதிப் பழகும் மனம் பெயர்களைத் தவிர்த்துவிட்டுப் பாத்திரவார்ப்புகளை -இருப்புகளைக் குறியீடாக்கும் தலைப்புகளை நோக்கி நகர்வதை வளர்ச்சியின் கட்டம் எனலாம். கவிதையில் பல கட்டங்களைத் தாண்டிய அனார் எப்போதாவது கதைகள் எழுதுகிறார். இந்த மாதக் காலச்சுவடுவில் அவர் எழுதிய கதை - ரைனா வந்துள்ளது. இக்கதை நான் சொன்னதற்கு மாறாகக் கதையின் தலைப்பாக இருக்கும் ரைனாவின் வாழ்க்கையை - இருப்பை - பாடுகளை விவரிக்காமல், அவளைக் கதைசொல்லியாக நிறுத்தி, அவளைவிட வயதில் மூத்த தோழி அல்லது உறவுக்காரியான சல்காவின் கதையைச் சொல்கிறது.
நோய்மையில் இருக்கும் சல்காவோடு ரைனா கொள்ளும் அந்நியோன்யத்தின் அடுக்குகளை விவரிக்கும் கதை, சல்காவின் நோய்க்கான காரணங்களை குறிப்பாகக் கூடச் சொல்லாமல் விலகிப்போவதன் காரணங்கள் ஏனென்று தெரியவில்லை. வெளியே சொல்ல முடியாத காரணமொன்று இருக்கிறது; அதைத் தனது நாட்குறிப்பேட்டில் எழுதியெழுதித் தாண்டுகிறாள் என்பதுபோன்ற குறிப்பொன்றைக் கதை கொண்டிருக்கிறது. அந்த நாட்குறிப்பை அவள் இல்லாதபோது வாசிக்கும் வாய்ப்புப்பெற்ற கதைசொல்லி ரைனா, அந்த ரகசியத்தைக் கதையின் வாசகர்களுக்குக் கடத்தியிருக்க வேண்டும். அப்படிக் கடத்தும் நிலையில் வாழ்தலில் விருப்பமற்ற சல்காவின் இருப்புக்கான காரணங்கள் வெளிப்பட்டிருக்கக்கூடும். அதைத் தவறவிடும் ரைனா, கொழும்புவுக்கு மருத்துவத்திற்காகக் கொண்டு செல்லப்பட்ட சல்கா எப்படி வருவாள் என்ற எதிர்பார்ப்பாகவாவது சில குறிப்புகளை நினைவுகளாகச் சொல்லியிருக்கலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பெரிய மனுசியான பிறகு வரக்கூடிய இனிய அனுபவங்கள் அல்லது அச்ச உணர்வுகளை ரகசியமாக்கியுள்ள இந்தக் கதையை இன்னும் கச்சிதமாகவும் சொல்லவேண்டியவற்றைத் தவிர்க்காமலும் சொல்லியிருக்க முடியும்.
ஒரு கவி, கதைக்காரராக மாறும்போது கவிதையின் சாயல் கொண்ட வரிகளை எழுதுவதிலிருந்து தப்பிக்க முடியாது. நிகழ்வொன்றை முன்வைத்துத் தொடங்காமல், கதையின் தொடக்கப்பத்திகல் விவரிப்பில் நீள்கிறது. அது மட்டுமல்லாமல்,
”காலம் அவ்விருவரின் நடுவே அணைவதும் பிரிவதுமாக ஆடிக்கொண்டிருந்தது. ஒரு கணம் நித்தியமாயும் மறுகணமே நிலையற்றதாயும் காலம் ஊசலாடியது”
”எப்போதும்போல வானம் மழைக்கான ஆயத்தங்களோடு ஆரவாரமாக இருக்க ஒரேயொரு மேகத்துண்டு மட்டும் ரைனாவுக்கு மேலே டயரியை வாசிக்கக் காத்திருந்தது”
“நான் வாழ்வதையே அருவருப்பாக உணர்கிறேன். அது ஒரு சொல்தான் சாகப்போதுமானது. ஆனால் அப்படி நேர்வதில்லை என்பதுதான் அவமானம்.”
”பிறந்ததிலிருந்து இரவில அடிப்பதும் பகலில சிரிப்பதுமென நரகம்போன்ற வீடு”
போன்ற கவித்துவ வரிகளால் கதை நிரப்பப்பட்டிருக்கிறது. கதை எழுதுவதென்று தீர்மானித்துவிட்டால், கவிதைமொழியைக் கைவிடத்தான் வேண்டும். அனாருக்கு அது முடியும் என்றே நினைக்கிறேன். இதற்கு முன்பு எழுதிய கதையிலிருந்து இக்கதை முன்னோக்கி நகர்ந்திருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்