இலக்கியவரலாற்றை எழுதும் முயற்சிகள்

பதிற்றாண்டுத்தடங்கள் (2010 -2020) என்றொரு சிறப்புப்பகுதிக்காக நான்கு கட்டுரைகளை வெளியிட்டுள்ளது காலச்சுவடு. அதன் 250 வது இதழ் என்பதும் சிறப்புப்பகுதிக்கு ஒரு காரணம்.

தமிழினி- 2000 கருத்தரங்கத் தொகுதிக்குப் பின்னான காலகட்டத்து இலக்கிய வரலாற்றைத் தொகுத்துக்கொள்ளும் நோக்கம் கொண்ட இதுபோன்ற கட்டுரைகளைப் பத்தாண்டுகளுக்கு முன்பும் வெளியிட்டது நினைவில் இருக்கிறது. 2000 க்குப் பிந்திய பத்தாண்டுகளின் போக்குகளையும் ஒவ்வொரு இலக்கிய வடிவத்திலும் புதிய வரவுகளை அடையாளப்படுத்தும் தொகுப்புத்தன்மைகள் அக்கட்டுரைகளில் வெளிப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கட்டுரைகளும் அமைந்திருக்கின்றன என்றாலும் எழுதிய நான்குபேரும் ஒன்றுபோல அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை.
பதிற்றாண்டுத் தமிழ்ச்சிறுகதைத்தடங்களைக் கவனப்படுத்தியிருக்கும் எம்.கோபாலகிருஷ்ணன் புதியவரவுகளை அடையாளப்படுத்தித் தந்திருக்கிறார். தமிழ்ச் சிறுகதைப்பரப்பை மொழிசார் பரப்பாக அவர் கணக்கில் கொண்டுள்ளது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.

தமிழ்க் கதைகளின் நிலம்சார்ந்த எல்லைகளை இன்றைய கதைகள் உலகளாவிய அளவில் விரிவடையச் செய்துள்ளன. இந்த எல்லைகள் வெறும் பிரதேசம் கடந்த ஒன்றாக மட்டுமல்லாது மதிப்பீடுகளிலும் அணுகுமுறைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களாகவும் அமைந்துள்ளன. உலகெங்கிலும் மனித வாழ்வுக்கெனப் பொதுவான அம்சங்கள் சில உள்ளன. அவையல்லாமல் நிலம், மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம் போன்ற எல்லைகளுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளும் பொருட்டு உருவாகும் தனித்துவமான சில அம்சங்களே அயல்நில வாழ்வை உற்று நோக்கச் செய்கின்றன. தமிழ்ச் சிறுகதைகளில் எளிதில் காணமுடியாத சில காட்சிகளை அவை நமக்குக் காட்டுகின்றன. அயலகத் தமிழ்ப் படைப்பு ஈழத் தமிழர்களால் எழுதப்படுபவை என்ற நிலை மாறி மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் எழுதுவதை உள்ளடக்கியது என்ற நிலையை இன்றைய கணினி உலகம் நமக்குச் சாத்தியமாக்கியுள்ளது. தமிழகத்திலிருந்து பணியின் பொருட்டு உலக நாடுகளெங்கும் பயணம் செய்யும், வசிக்கும் இளைஞர்கள் புனைவுலகுக்கு வந்ததன் பலனாக நிகழ்ந்தது இது. இக்கதைகள் தமிழ்ப் புனைவுலகுக்குப் புதியதொரு பரிமாணத்தைச் சேர்த்துள்ளன. தனித்துவமான சில அம்சங்களே அயல்நில வாழ்வை உற்று நோக்கச் செய்கின்றன. தமிழ்ச் சிறுகதைகளில் எளிதில் காணமுடியாத சில காட்சிகளை அவை நமக்குக் காட்டுகின்றன. அயலகத் தமிழ்ப் படைப்பு ஈழத் தமிழர்களால் எழுதப்படுபவை என்ற நிலை மாறி மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் எழுதுவதை உள்ளடக்கியது என்ற நிலையை இன்றைய கணினி உலகம் நமக்குச் சாத்தியமாக்கியுள்ளது. தமிழகத்திலிருந்து பணியின் பொருட்டு உலக நாடுகளெங்கும் பயணம் செய்யும் உள்ளடக்கியது என்ற நிலையை இன்றைய கணினி உலகம் நமக்குச் சாத்தியமாக்கியுள்ளது. தமிழகத்திலிருந்து பணியின் பொருட்டு உலக நாடுகளெங்கும் பயணம் செய்யும், வசிக்கும் இளைஞர்கள் புனைவுலகுக்கு வந்ததன் பலனாக நிகழ்ந்தது இது. இக்கதைகள் தமிழ்ப் புனைவுலகுக்குப் புதியதொரு பரிமாணத்தைச் சேர்த்துள்ளன. இக்கதைகள் தமிழ்ப் புனைவுலகுக்குப் புதியதொரு பரிமாணத்தைச் சேர்த்துள்ளன.

நிலப்பரப்பு சார்ந்த விரிவைப்பேசிய கட்டுரைய் எழுதும் பொருண்மைசார்ந்த புத்தாக்கங்கள் எவையெனப் பேசவில்லை.

கவிதைகளின் தடங்களைப் பற்றிய மோகனரங்கனின் கட்டுரை பத்தாண்டு எல்லை என்பதை அவ்வளவாகக் கணக்கில் கொள்ளாமல் அதற்கு முந்திய வரலாற்றையும் பெயர்களையும் பட்டியலிட்டுவிட நினைத்துப் பெயர்களாக நிரப்பப்பட்டிருக்கிறது. தொடக்ககாலப்புதுக்கவிதைகள், இப்போது எழுதுபவர்களின் மூத்தகவிகள், பெண்கவிகள், தலித் கவிகள், ஈழப் போர்க்காலக் கவிகள் எனப் பல பட்டியல்களைக் கொண்ட அக்கட்டுரைப் பின்வருமாறு முடிக்கிறார்:

இக்கட்டுரைக்காக வேண்டி, எனது வாசிப்பு, நினைவு இவற்றை மட்டுமே முழுமையாக நம்பாமல் தேடிப் படிக்கும் பழக்கமுடைய என் நண்பர்கள் சிலரிடமும் தகவல்களைக் கேட்டுப் பெற்றேன். அவ்வகையில் நண்பர் ஒருவர் நீண்ட பட்டியலை அனுப்பியிருந்தார். அது விருது வழங்கும் ஓர் அமைப்பின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்ட, கடந்த இரண்டு வருடங்களில் வெளிவந்த கவிதை நூல்களின் பட்டியல்; அதில் 54 நூல்களின் பெயர்கள் அடங்கியிருந்தன. விருதின் பரிசீலனைக்கு வராத நூல்கள் இன்னும் ஐம்பது இருக்குமென யூகித்துக்கொள்வோமாயின், இரு வருடங்களுக்குத் தோராயமாக நூறு கவிதை நூல்கள் வெளியாகின்றன.  கடந்த இருபது வருடங்களில் உத்தேசமாக ஆயிரத்துக்கும் குறையாத தொகுப்புகள் வந்திருக்கக் கூடும். இவையனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒருவர் எழுதுவது அசாத்தியமான காரியம். மாறாகப் பரந்துபட்ட பார்வையுடைய மூன்றோ நான்கோ பேர், தனித்தனியாக எழுதும் கட்டுரைகளைத் தொகுத்துப் பார்ப்போமாயின் அப்போது ஓரளவிற்கு முழுமையானதொரு சித்திரம் நமக்குக் கிடைக்கும்.

நாவல்களைப் பற்றிய கட்டுரையை எழுதிய சுரேஷ் ப்ரதீப் இலக்கியவரலாற்று நோக்கம் என்பது முற்றிலும் தவிர்த்துவிட்டு வேறொன்றைப் பேசும் கட்டுரையை எழுதியுள்ளார். தமிழ் நாவல்கள் உள்ளீடில்லாமல் எழுதப்படுகின்றன; அதனை வெல்வதெப்படி என்ற கேள்விகளுக்கான பதிலாக எழுதியுள்ள அந்தக் கட்டுரையில் எந்தவொரு நாவலின் பெயரும் நாவலாசிரியரின் பெயரும் வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை வெளிப்பட்டுள்ளது. தனித்தனி நாவல்களைப் பேசினால் கட்டுரை நீண்டுவிடும்; அதற்காகத் தற்போது வெளியான நாவல்கள் பலவற்றையும் வாசித்து உருவாக்கிக் கொண்ட அவதானிப்புகளை முன்வைத்துள்ளேன் என்று தனது நிலைபாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அனோஜன் பாலகிருஷ்ணனின் கட்டுரை மட்டுமே காலச்சுவடுவின் இலக்கிய வரலாற்றுப் பங்களிப்பு என்ற நோக்கத்தை நிறைவேற்றிய கட்டுரையாக அமைந்துள்ளது. ஈழத்துப் போர்க்கால நாவல் கதையாடல்களும் முயற்சிகளும் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் முதன்மையான நாவல்களைக் குறிப்பிடாமல் விட்டுவிடக்கூடாது என்ற அக்கறை வெளிப்பட்டுள்ளது.

போர்க்காலத்திலும் அதன் பின்னைய காலத்திலும் எழுதப்பட்ட பல நாவல்கள் அரசியலைச் சொல்லவே எழுதப்பட்டன. நாவல் எழுதுவதற்கு அரசியல் காரணமும் சில சம்பவங்களும் இருந்தால் போதாது. தன்னுடைய பற்றுதல்களை மீறிப் பார்ப்பதுடன், உள்ளத்தைத் தன்னை மீறிக் கடந்து கற்பனையில் செல்லவும் அனுமதிக்க வேண்டும். இதற்கு அகன்ற பார்வை தேவையானது. பலர் தன் வரலாறுகளைச் சில இடங்களில் கற்பனையை நிரப்பி நாவல் என்று வெளியிடுகிறார்கள். அவை நாவல் கலையின் தாற்பரியம் தெரியாதவர்களால் முன்வைக்கப்படுபவை. இவற்றையெல்லாம் நாவல் என்று விதந்து ஓதுவதால் ஏற்பட்ட பலனைத்தான் நாம் இன்று அதிகம் வாசிப்புச் சூழலில் எதிர்நோக்க வேண்டியுள்ளது. தன்னை மீறிக் கடந்து கற்பனையில் செல்லவும் அனுமதிக்க வேண்டும். இதற்கு அகன்ற பார்வை தேவையானது. பலர் தன் வரலாறுகளைச் சில இடங்களில் கற்பனையை நிரப்பி நாவல் என்று வெளியிடுகிறார்கள். அவை நாவல் கலையின் தாற்பரியம் தெரியாதவர்களால் முன்வைக்கப்படுபவை. இவற்றையெல்லாம் நாவல் என்று விதந்து ஓதுவதால் ஏற்பட்ட பலனைத்தான் நாம் இன்று அதிகம் வாசிப்புச் சூழலில் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

என்பதான விமரிசனக்குறிப்போடு கூடிய அனோஜனின் கட்டுரை ஈழப்போர்க்கால இலக்கியம் எனப் பேசும்போது காணப்படும் பேரினவாத அரசெதிர்ப்பு, போராளிகளுக்கிடையேயான முரண், இந்தியப்படை நுழைவை எதிர்கொண்ட நிலை, புலிகள் ஆதரவு, புலிகள் எதிர்ப்பு, முள்ளிவாய்க்கால் பேரழிவும் அதன் பிந்திய காலகட்டமும் என யாழ்ப்பாண மைய எழுத்துகளை மட்டுமல்லாமல் இசுலாமியத் தரப்பை முன்வைக்கும் புனைவுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. காய்தல் உவத்தலற்ற இலக்கிய வரலாற்றுப் பார்வை என்பதைக் கவனத்தில் கொண்டதின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. 2010 -க்கு முன் முடிந்துபோன ஈழத்துப் போர்க்காலத்தை எழுதிய - 2010 க்குப் பின் வந்த நாவல்களைப் பற்றிய இலக்கியவரலாற்றுப் பார்வையைக் கச்சிதமாக எழுதித்தந்துள்ளார். இலக்கியவரலாற்றை எழுத நினைப்பவர்களுக்கும் தேடி வாசிக்க நினைப்பவர்களுக்கும் உதவியாக அமையக்கூடிய கட்டுரையாக உள்ளது.

இந்நான்கு கட்டுரையோடு நாடகவியல்/ அரங்கியல்(தமிழில் நாடகத்தை இலக்கிய வடிவமாகவே நினைப்பதில்லை) , தமிழ்ச்சினிமா, தமிழ்த் திறனாய்வுப்போக்குகள், தலித் இலக்கியப் போக்குகள், பெண் எழுத்துகள், வெகுமக்கள் அரசியலும் நுண்அரசியலும் போன்றனவற்றிலும் கூட தொகுத்துப் பார்க்கும் கட்டுரைகளை வெளியிட்டிருக்கலாம். முன்பு அப்படியான கட்டுரைகள் வந்த ஞாபகம் இருக்கிறது. இவற்றிலெல்லாம் குறிப்பிடத்தக்க வரவுகளோ, புதிய போக்குகளோ இல்லை என்று நினைத்திருக்கலாம். எழுதுவதற்கான ஆட்கள் இல்லாமல் இருப்பதும்கூடக் காரணமாக இருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்