புதிய உரையாசிரியர்கள்

 

அரசியல் விமரிசகர் துரைசாமி ரவீந்திரனின் முந்தையை விவாதங்களுக்கும் இப்போதைய விவாதங்களுக்கும் நேர்காணல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. முன்பெல்லாம் பூடகமாகச் சொன்ன கருத்துகளை இப்போது வெளிப்படையாகப் பேசுகிறார். மாநில அரசியலில் நடக்கும் நகர்வுகளைக் குறிப்பாகத் தமிழக பா.ஜ;க.வின் அரசியல் நகர்வுகள் பலவற்றை வெளிப்படையாகப் பேசுகிறது அண்மைய பேச்சுகள்.

அவரது பேச்சின் மொழியும் பேசும்போது வெளிப்படும் உடல்மொழியும்கூட மாற்றம் அடைந்திருக்கிறது. ஒரு கருத்தின் - நிகழ்வின் சார்பாகவே ஒருவர் பேசினாலும்கூட அதன் வெளியிலிருந்து பேசும் மொழிக்கும்், உள்ளேயிருந்து பேசும் மொழிக்கும் வேறுபாடுகள் இருக்கும் என்பதை உடல்மொழியை அறிந்தவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். அண்மைக்கால மொழிகள் அவரது ஆலோசனைகளும் கணக்கீடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் வெளிப்படும் பெருமிதத்தையும் உறுதித் தன்மையையும் கொண்டதாக வெளிப்படுகின்றன.

எல்லாவற்றையும் சாதிக்கணக்கு அடிப்படையில் முடிவுகளாக முன்வைக்கும் அவரது சொல்லாடல்களும் கணிப்புகளும் அப்படியே நடக்காமல் போகலாம். போக வேண்டும் என்பது மக்களாட்சி முறையை விரும்புகிறவர்களின் ஆசையாக இருக்கலாம். அந்த ஆசையில் ஆரம்பித்த அரசியலும் இயக்கங்களும் தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. மொழி, பண்பாடு போன்றவற்றில் பன்முகத்தன்மை, அடித்தள மக்களையும் உள்வாங்கி வளர்ச்சிபெறுதல், அனைத்துத் தரப்பினருக்கும் எல்லாவித வாய்ப்புகளையும் வழங்கும் பொருளியல் நடவடிக்கை என்ற அரசியல் பின் தள்ளப்பட்டு, நிலைநிறுத்தப்பட்ட வாழ்க்கை முறையை வாழப் பழக்குதல் என்ற அரசியல் நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்நடைமுறைக்கும் அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் இருப்பதாகக் காட்டுவதற்காகத் தேர்தல் அரசியல் பயன்படுத்தப்படுகிறது. இத்தேர்தல் அரசியலுக்குப் பகுப்பாய்வு அடிப்படையிலான தெரிவுகள் மறைக்கப்பட்டு, சாதித்திரட்சி அடிப்படையிலான தெரிவுகள் முன்வைக்கப் படுகின்றன. இதற்கு முந்திய பல தேர்தல்களிலும் சாதித்திரட்சி ஒரு மறைமுகமான உத்தியாக இருந்தது என்றாலும் இப்போது எல்லாம் வெளிப்படையாக மாறிவிட்டது. மறைமுக உத்தியை வெளிப்படையான உத்தியாக்கும் அரசியலைக் கடந்த இரண்டு நாடாளுமன்றத்தேர்தலிலும் செய்து வெற்றி பெற்ற கட்சி ஆட்சியில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் அந்தக் கணக்கு முறையாகச் செய்யப்படவில்லை; காரணம் தமிழ்நாட்டுத் தலைமையைக் கையில் வைத்திருந்த பிராமணர்கள் கோட்பாட்டு அரசியலில் நம்பிக்கை கொண்டு அதனையே பேசிக்கொண்டிருந்தனர் எனக் குற்றம் சாட்டும் துரைசாமி ரவீந்திரன், அதன் போதாமையைப் பா.ஜ.க.வின் மையத்தலைமை உணர்ந்துவிட்டது என்கிறார். அதன் காரணமாகவே கோட்பாட்டு அரசியல் -சித்தாந்த அரசியலின் அடையாளமாக இருந்த பிராமணத்தலைமைகள் பின்வாங்கப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டு பயன்பாட்டு அரசியல் முன்னுக்கு வந்துள்ளது என்கிறார். அதன் பருண்மையான வெளிப்பாடுகளாக இல.கணேசன், எச். ராஜா போன்ற பிராமணர்களுக்குப் பொறுப்புகள் அளிக்கப்படாமல் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் சார்பாளர் ஒருவர்- திரு. எல்.முருகன் - மாநிலத்தலைவர் ஆக்கப்பட்டிருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் திரு அண்ணாமலை புதிய துணைத்தலைவராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இன்னும் பல துணைத் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் பலதரப்பட்ட சாதிகளின் பிரதிநிதிகள். இன்னும் பல சாதிகளுக்கும் ஆளுமைகளுக்கும் மாநில, மாவட்ட அளவிலான பதவிகள் வழங்கப்படலாம். பதவிகளுக்குக் கிடைக்கும் வாசனையும் ருசியும் உணர்த்தப்படும். நடைமுறையில் இருக்கும் முகவாண்மை முதலாளியமும் அதற்கு உதவும்.

அரசியல் அதிகாரம் மற்றும் அரசதிகாரம் அதன் வழியான பங்கும் லாபமும் போன்றன சாதி அடுக்கின் மேலே இருப்பவர்களுக்கு மட்டும் உரியதல்ல; அதன் கீழடுக்குகளுக்கும் கிடைக்கக்கூடியது என்பதைக் காட்டும்விதமாகச் சொல்லாடல்கள் மாறுகின்றன. அப்படி மாறவேண்டும் எனப் பேசிய ஆளுமைகளை எதிர்த்தரப்பாக நிறுத்துவதைவிட ஆதரவுத்தரப்பாக மாற்றுவதன் மூலம் வாக்கரசியலில் பலன் கிடைக்கும் என்றால் ஏற்பதில் சிக்கல் இல்லை என்பதை உணர்த்தத் தொடங்கியுள்ளது. இந்துத்துவ அம்பேத்கர் என்ற சொல்லாடலை உருவாக்கி உருட்ட முடிந்தது என்றால், இந்துத்துவப் பெரியார் என்ற சொல்லாடலை ஏன் உருவாக்கக்கூடாது; உருட்டிவிடக் கூடாது என்பதை உணர்ந்திருக்கிறது. சமூகநீதியும், பெண்ணுரிமையும் தமிழக அரசியலின் சமகாலத்தேவைகள். அதனை ஏற்கும் அமைப்பாக - அரசியல் கட்சியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும்போது அதனை முன்மொழிந்த ஈ.வெ.ராவை அதே பெயரில் அழைப்பதைக் கைவிட்டுவிட்டு “பெரியார்” என்று அழைத்தால் பலன் கிடைக்கும் என்பதையும் உணர்ந்திருக்கிறது. அப்படி அழைப்பதற்கான ஆளுமையாக அண்மையில் கட்சியில் சேர்ந்த திருமதி குஷ்பு சுந்தர் பயன்படுவார் என்பதை உணர்ந்தே சேர்த்திருக்கிறது.

இந்திய சமூகத்தையும் அதன் நகர்வுகளையும் மேலிருந்து -பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர்- என விளக்கியதற்கு மாற்றாக அதிகாரத்தின் ருசியையும் வாசனையையும் கீழிருந்து நகர்த்தினால் கூடுதல் பலன்களும் லாபமும் கிடைக்கும் என்றால் விளக்கவுரைகளையும் வரையறைகளையும் தலைகீழாக்கிப் பேசிப்பார்க்கலாம் என்று முடிவுசெய்தது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தத் தலைகீழாக்கம் அமைப்பைச் சிதைத்து உருவாக்கிய மாற்றம் அல்ல. அமைப்பைத் தக்கவைப்பதற்கும் இறுக்கமாக்குவதற்கும் செய்யப்படும் விளக்கவுரைகளும் பொழிப்புரைகளும் மட்டுமே. இப்போதைக்கு அரும்பத உரைகாரர்களான பிராமண ஆச்சார்யர்கள் மௌனமாக்கப்பட்டிருக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்