சாதி அடையாளம் நோக்கி

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘ ஆதிதிராவிடர்களாக ஒன்றிணைவோம்’ என்ற அடையாள அரசியலை முன்வைத்துப் புதிய நகர்வைச் செய்யவேண்டும் என்று அதன் பொதுச்செயலாளர் திரு. ரவிக்குமார் (விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்) பேசியதை மேற்கோளாகக் காட்டிச் சில நாட்களுக்கு முன்பு இந்து தமிழ் திசை ஒரு செய்திக்கட்டுரை வெளியிட்டிருந்தது. அதனை விரித்து ஆங்கில இந்துவும் செய்திக்கட்டுரையை இன்று வெளியிட்டுள்ளது. ‘ஆதிதிராவிடர்களாக ஒன்றிணைவோம்’ என்பது காலத்தின் தேவையாக இருக்கலாம். உள்சாதி அடையாளங்களை முன்னெடுக்காமல் பெருஞ்சாதிகளாகக் காட்டுவதின் மூலம் தேர்தல் அரசியலில் கூடுதல் பங்கைப் பெறமுடியும் என்பது நடைமுறையில் ஏற்கத்தக்கதும்கூட.
திரு. ரவிக்குமார் முன்வைக்கும் இந்தப் பார்வையை தமிழ்நாட்டின் பல சாதிகள் முன்பே உணர்ந்துள்ளன. அந்நிலையிலேயே பல சாதிகள் உள்சாதி அடையாளங்களை முன்னிலைப்படுத்தாமல் திரட்சியாகக் காட்டி அரசிலும் இட ஒதுக்கீட்டிலும் கூடுதல் வாய்ப்புகளைக் கோரிப்பெற்றுள்ளன. 2011- இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தத் தொடங்கும்போது பிராமண சங்கம் முதற்கொண்டு உள்சாதி அடையாளத்தை முன்னிலைப்படுத்த வேண்டாம் என்று சுற்றறிக்கைவிட்டதும்கூட வரலாறுதான். இப்போது வெளியில் அறியப்படும் சாதிப்பெயர்கள் பலவும் வாக்குவங்கி அரசியலுக்காகச் சொல்லப்படும் பேரடையாளங்கள் தான். ஆனால் அவை ஒவ்வொன்றுக்குள்ளும் உட்சாதிச் சிற்றடையாளங்களும் விலகல்களும் இருக்கவே செய்கின்றன. அகமண முறைகளை அவை ஏற்றுக்கொள்வதில்லை.
விசிக.வின் இப்போதைய நிலைப்பாடு ”தலித்துகளாக ஒன்றிணைவோம் ” என்பது. அச்சொல்லாடல் விடுதலை அரசியலின் வெளிப்பாடு என்பதை நோக்க, ‘ ஆதிதிராவிடர்களாக ஒன்றிணைவோம் ‘ என்பது சாதியடையாளமாக ஒன்றிணைவதே ஆகும். நிகழ்கால அரசியல் போக்கு தரும் நெருக்கடியின் விளைவு எனக் காரணங்களை முன்வைத்து ஆதிதிராவிடர்களாக ஒன்றிணைவோம் என மாற்றுத்திட்டத்தை முன்வைப்பது சாதிகளாகத் திரள்வதின் மூலம் அவரவர்களுக்கான பங்கைப் பெறமுடியும் என்னும் இந்துத்துவத் திட்டத்தை ஏற்பதாகக் கூட மாறிவிட வாய்ப்புண்டு. இது கடந்த 30 ஆண்டுக்கால தலித் அரசியலில் முன்வைத்த காலைப் பின் இழுப்பதாகத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்